அப்போதும் அவன் தயங்க “உங்க கூட இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கணும்னு ஆசைப் படுறேன். இன்னும் நாலு நாள் கழிச்சு நிச்சயதார்த்தம். அப்ப தான் உங்களைப் பாக்க முடியும். அதான் சொல்றேன் வாங்க”, என்று அவள் சொல்லியதும் அவன் உருகிப் போனான்.
இருவரும் காம்பவுண்ட் கேட் திறந்து உள்ளே போக அப்போது கோவிலுக்கு செல்ல வெளியே கிளம்பி வந்தாள் மீனாட்சி.
அவனைக் கண்டதும் “வாங்க மாப்பிள்ளை”, என்று அழைத்தாள்.
“அம்மா கோவிலுக்கு போறியா?”, என்று அர்ச்சனா கேட்டதும் “ஆமா டி, உங்க ரெண்டு பேர் பேர்லயும் அர்ச்சனைக்கு கொடுத்துருந்தேன். அதான். நீங்களும் வறீங்களா?”, என்று கேட்க அர்ச்சனா அவனைப் பார்த்தாள்.
“போகலாம் அத்தை, வாங்க”, என்று சொல்லி அவனே அவர்களை அழைத்துச் சென்றான்.
சாமி கும்பிட்டு விட்டு இருவரும் அமர்ந்தார்கள். ஆனால் கோவிலில் பூஜை இன்னும் ஆரம்பிக்க வில்லை. “பூஜை ஆரம்பிக்க நேரம் ஆகுமா மா? பிரபா அப்பவே கிளம்பணும்னு சொன்னாங்க?”, என்று கேட்டாள் அர்ச்சனா.
“சரி மா”, என்று சொல்லி எழுந்து கொண்டவள் “வாங்க போகலாம்”, என்று சொல்லி அவனை அழைத்துக் கொண்டு சென்றாள்.
அவளுடைய வீட்டின் முன் காரை நிறுத்தியவன் “நான் கிளம்பட்டா?”, என்று கேட்டான்.
“காபி மட்டும் குடிச்சிட்டு போங்க, பிளீஸ்”, என்று அவள் கேட்க அவளுடன் சென்றான். மணி இப்போது ஏழு ஆகி இருந்தது.
உள்ளே வந்ததும் அவனுக்கு காபி கொடுத்து விட்டு அவளும் எடுத்துக் கொண்டாள். அவனுக்கு தான் தனிமையில் இருப்பது ஒரு மாதிரி அவஸ்தையான சூழ்நிலையைக் கொடுத்தது.
மனதளவில் இருவரும் நெருங்கி விட்டார்கள் தான். ஆனாலும் அவன் மனதில் எழும் உணர்வுகளை அவனால் வரையறுக்க முடியவில்லை. அதுவும் ஒரு டாக்டராக இருந்து கொண்டு தன்னை புரிந்து கொள்ள மறுக்கிறாளே என்று அவள் மேல் கோபம் கூட வந்தது.
சில நொடிகள் கழித்து தான் அவன் மௌனத்தைக் கவனித்தாள் அர்ச்சனா. “இப்பவாது சொல்லுங்க. உங்களுக்கு என்ன தான் ஆச்சு?”, என்று கேட்டாள்.
“ஒண்ணும் இல்லை, நான் கிளம்பட்டா?”, என்று கேட்கும் போதே அவன் குரல் ஒரு மாதிரி இருந்தது.
இதற்கு மேலும் அவனை கட்டாயப் படுத்த மனதில்லாமல் “சரி பிரபா”, என்றாள். சிணுங்கிய மனதுடன் எழுந்து கொண்டான். இருவரும் எழுந்து வாசலுக்கு வரும் போது மழை பெய்ய ஆரம்பித்தது.
“ஐயோ மழை பேயுதே. இருங்க குடை எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி அவள் திரும்ப “ஏய் நில்லு, அதெல்லாம் வேண்டாம். இங்க இருக்குற காருக்கு போக எதுக்கு குடை?”, என்று கேட்ட படி அவள் கையைப் பற்றி விட்டான்.
அவள் திகைப்புடன் அவனைத் திரும்பிப் பார்க்க அவள் கையை விட்டு விட்டான். ஆனால் அவன் கண்கள் அவள் மீதே இருந்தது. அவன் பார்வையில் உடல் முழுவதும் சிலிர்க்க எச்சில் விழுங்கிக் கொண்டாள். இப்போது அவனது உணர்வுகள் லேசாக புரிய ஆரம்பித்தது. ஆனால் என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியாக நின்றாள்.
“பிளீஸ், டி இதுக்கு மேல என்னால நடிக்க முடியாது”, என்று சொன்னவன் அவள் கையைப் பற்றி இழுக்க அவன் அருகே வந்தாள். ஆனால் அவனை நிமிர்ந்து பார்க்க வெட்கமாக இருந்தது.
“இப்படியே போனா நைட் என்னால தூங்கவே முடியாது”, என்று அவன் குரல் கெஞ்சிற்று. அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவன் பார்வை அவள் உதட்டில் நிலைக்க அவள் உடல் நடுங்கியது. அவளுக்கு புரிகிறதா என்பது போல கூர்மையாக பார்த்தான். ஒரு நொடிக்கு மேல் அவன் பார்வையைக் காண முடியாமல் அவள் தலை குனிய அதற்கு மேல் அவள் அனுமதி அவனுக்கு தேவைப் பட வில்லை.
சட்டென்று உள்ளே நகர்ந்தவன் கதவுக்கு பின்னே அவளை இழுத்து நிறுத்தினான். கதவு தன்னால் மூடிக் கொண்டது. சுவரில் சாய்ந்து கண்களை மூடி அவள் நிற்க அவனோ அவளை நெருங்கி நின்றான். அவனது மூச்சுக் காற்று அவள் முகத்தில் வந்து மோத கண்களை இன்னும் இறுக மூடிக் கொண்டாள்.
அவன் கைகள் அவளுடைய வெற்றிடையில் பதிய அவள் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இப்படி தனிமையில் அவனுடன் இருப்பது தவறு என்று புத்திக்கு உரைத்தாலும் அவன் கைகளுக்குள் இருந்து விலகும் எண்ணமே வரவில்லை.
அவன் தொடுகையில் அடி வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வு வந்தது. அவன் இதழ்கள் தயக்கம் உதறி அவள் நெற்றியில் பதிந்தது. அவன் முத்தத்தில் கரைந்து கொண்டிருந்தவள் கண்களைத் திறக்கவே இல்லை.
“தயவு செஞ்சு கண்ணை மட்டும் திறந்துறாத டி”, என்று அவள் காதில் உதடு படும் படி முணுமுணுத்தவன் அவளது கன்னத்தில் தன்னுடைய இதழைப் பதித்தான்.
அவன் இதழ்கள் அவளுடைய கன்னம், காது என்று பயணிக்க தன்னுடைய கைகளை அவன் முதுகில் படர விட்டு அவனுடன் இன்னும் நெருங்கி நின்றாள். அவனும் அவளை இறுக அணைத்துக் கொண்டான். இதற்கு மேல் அவனுக்கு எந்த தயக்கமும் பயமும் இல்லை. அவன் இதழ்கள் உரிமையுடன் காதலுடன் அவள் இதழ்களை முத்தமிட்டது.
முதல் முத்தத்தில் இருவரும் மயங்கிப் போயினர். ஒரு நொடி தொட்டு விட்டு விலகி விட வேண்டும் என்று தான் எண்ணினான். ஆனால் முடிய வில்லை. இதழ்களுக்குள் கதகதப்பாய் ஏதோ இறங்கும் உணர்வு எழுந்து இம்சித்தது. முத்தத்தில் தேகம் மொத்தமும் சிலிர்க்கும் என்பதை அப்போது தான் உணர்ந்தான்.
அவள் நிலை அதற்கு மேல் இருந்தது. அவன் முதுகில் இருந்த அவளது கரம் தாமாக உயர்ந்து அவனது பின்னந்தலையை வருட அவளது ஒத்துழைப்பில் இன்னும் மயங்கிப் போனான்.
சிறிது நேரம் கழித்து விலகியவன் அவள் தோள் வளைவில் முகம் புதைக்க “பிரபா”, என்று மெல்லியதாக முணங்கினாள். அவளை விட்டு விலகியவன் “தேங்க்ஸ் டி”, என்றான். அவன் முத்தத்தில் சிவந்திருந்த அவள் முகம் அவன் சொன்ன தேங்க்ஸில் மேலும் சிவந்தது.
“கதவை பூட்டிக்கோ. நிச்சயதார்த்தத்தில் பாக்கலாம்”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.
அவன் சென்ற பின்னர் கதவை அடைத்து விட்டு சோபாவில் அமர்ந்தாள். ஒரு மாதிரி மயக்க நிலை அவளை ஆட்கொண்டது. மனதுக்கு பிடித்த ஆணின் தொடுகைக்கு இவ்வளவு சக்தியா என்று அவள் உள்மனம் கேள்வி கேட்டது. அவளால் அந்த உணர்வை தாங்கவே முடிய வில்லை.
மீனாட்சி வந்து கதவை தட்டும் வரைக்குமே அதே நிலையில் தான் இருந்தாள். “என்ன நீ அப்படியே உக்காந்துருக்க? மாப்பிள்ளை எப்ப கிளம்பினார்?”, என்று கேட்க எதையோ சொல்லி சமாளித்து விட்டு அறைக்கு வந்தாள்.
காரை ஓட்டிக் கொண்டிருந்த பிரபாவோ இந்த உலகத்திலே இல்லை. தான் தொட்டதும் உருகிய அவள் தேகமும் தன் கைகளுக்குள் மறுப்பில்லாமல் அவள் சரண்புகுந்த அந்த நிமிடமும் மீண்டும் மீண்டும் நினைவில் வந்து அவனை ஒரு வழி ஆக்கியது.
வீட்டுக்குச் சென்றதும் அவசரமாக அவன் அறைக்கு ஓட அவனை வியப்பாக பார்த்தார்கள் வீட்டில் உள்ளவர்கள். ஏதோ வேலை டென்ஷன் போல என்று அவர்கள் எண்ண அறைக்குள் வந்தவனோ முதல் வேலையாக அவளை அழைத்தான்.
அவன் போனை எடுத்த அர்ச்சனா அமைதியாக இருக்க அந்த நிமிடம் அவள் அமைதி அவனை பாதித்தது.
“அர்ச்சனா”, என்று ஆழ்ந்த குரலில் அழைக்க “ம்ம்”, என்றாள்.
“எல்லாம் ஓகே தானே? ஒண்ணும் பிரச்சனை இல்லையே?”
“அப்படி எல்லாம் இல்லை”
“அப்ப நடந்தது புடிச்சிருந்தது தானே?”
“ஐயோ பிரபா பிளீஸ்… ஏற்கனவே ஒரு வழி ஆகிட்டேன். மறுபடி ஆரம்பிக்காதீங்க”
“ஹா ஹா.. இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே. ஆனா இப்ப தான் நிம்மதியா இருக்கு. ஏதாவது நினைச்சிப்பியோன்னு டென்சனா இருந்தது”
“இதுக்கு தான் அவ்வளவு டென்ஷன் ஆனீங்களா?”
“என்ன பண்ணச் சொல்ற? நீ ஏதாவது நினைச்சிக்குவியோன்னு கொஞ்சம் பயம்”
“ஹஸ்பண்ட் அண்ட் வைப் குள்ள இது எல்லாம் சகஜம் தான்”
“ஆமா இப்ப சொல்லு டி. அப்ப கொஞ்சம் கூட உனக்கு புரியலையா? நீயெல்லாம் டாக்டர்னு வெளிய சொல்லிறாத”
“டாக்டர்ன்னா மத்தவங்களைத் தான் பாக்க முடியும். எனக்கே புது உணர்வுகளை நீங்க அறிமுகப் படுத்தினா நான் என்ன செய்ய முடியும்?”, என்று அவள் கேட்க அவன் அதற்கு பதில் சொல்ல என்று அந்த இரவு தூங்கா இரவாக போனது. அவள் போன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட மீனாட்சி வெளியேவே படுத்து விட்டாள்.
அதற்கு பின் இருவரும் சந்திக்க வில்லை. எந்த தடையும் இல்லாமல் போனில் காதலை வளர்த்தார்கள்.
ஒரு வழியாக நிச்சயதார்த்த நாளும் வந்தது. இன்று மாலை நிச்சயதார்த்தம் என்பதால் காலையிலே அனைவரும் பிரபாகரன் வீட்டுக்கு வந்து விட்டார்கள். அப்போது பிரபாகரன் இல்லை. அவள் வரும் நேரம் வீட்டில் இருக்க வேண்டும் என்று தான் நினைத்தான். ஆனால் வேணு அலுவலகத்தில் ஒரு குளறுபடி பண்ணி வைத்திருக்க அதைச் சரி செய்யவே நேரம் ஆனது.
மீனாட்சி, அர்ச்சனா, சொக்கலிங்கம் மூவரும் முதலில் காரில் வர மற்றொரு காரில் மஞ்சுவும் அஞ்சலியும் வந்தார்கள். சொக்கலிங்கம் தங்களுடன் வராமல் அவர்களுடன் வந்ததால் அவரை முறைத்தார்கள் அஞ்சலியும் மஞ்சுளாவும். அவரோ நண்பனிடம் பேசுவது போல அவர்களை கண்டு கண்டு கொள்ளாமல் கழண்டு கொண்டார்.
அதைப் போல அஞ்சலி மற்றும் மஞ்சுளாவைக் கண்டதும் மீனாட்சி மற்றும் அர்ச்சனா முகம் கூம்பி போனது. “என்னோட கல்யாணத்துக்கு இவங்களை வர வைக்கணுமா மா?”, என்று எரிச்சலுடன் கேட்டாள் அர்ச்சனா.
“உங்க அப்பா கிட்ட கேட்டேன் பாப்பா. ஆனா அவர் சக்கரவர்த்தி அண்ணன் தான் அவங்களையும் வரச் சொன்னதா சொல்லிட்டார். என்னை என்ன பண்ணச் சொல்ற? கல்யாண வீட்ல யார் வந்தா போனா நமக்கு என்ன? நீ டென்ஷன் ஆகாம இரு”, என்று சொல்லி மகள் மனதை மாற்ற முயற்சி செய்தாள் மீனாட்சி.
அதையே சற்று மாற்றி “இவ கல்யாணத்துக்கு நாம வரலைன்னா என்ன மா?”, என்று கேட்டாள் அஞ்சலி.
“உங்க அப்பா தான் கண்டிப்பா வரணும்னு சொல்லிட்டார் அஞ்சலி. வந்ததும் நல்லது தான். ஏதாவது சந்தர்ப்பத்துல இந்த கல்யாணம் நின்னா நேர்ல பாத்து சந்தோஷப் படலாம்ல?”, என்று சொன்னாள் மஞ்சுளா.