Advertisement

அங்கே போனதும் தனிமை அவளை விட்டு ஓடியது. விக்ரம் பத்மா இருவரும் அவளிடம் சந்தோஷமாக பேச அர்ச்சனாவும் நிம்மதியானாள். அர்ச்சனா பத்மா இருவரும் சேர்ந்து சமைத்து மூவரும் சாபிட்டார்கள்.

அவள் தூங்குவதற்காக அவளுடைய வீட்டுக்கு கிளம்பும் போது “நான் வந்து உன் கூட துணைக்கு படுத்துக்கவா மா?”, என்று கேட்டாள் பத்மா.

“இல்லை மா வேண்டாம். அதெல்லாம் தனியா இருந்துப்பேன்”, என்றாள் அர்ச்சனா.

“எதுனாலும் கால் பண்ணுங்க அர்ச்சனா”, என்று சொல்லி அனுப்பினான் விக்ரம்.

அவளை இங்கேயே தூங்க வைக்க பத்மாவுக்கு ஆசை தான். ஆனால் ஒரு வயது பையன் இருக்கும் வீட்டில் அவளை தங்க வைப்பது சரி கிடையாது என்பதால் தான் விட்டு விட்டாள்.

“டேய் விக்ரம், பொண்ணு ரொம்ப அழகா இருக்கு டா. இவ உனக்கு வெறும் ஃபிரண்ட் மட்டும் தானா?”, என்று கேட்டாள் பத்மா.

“ஐயோ அம்மா, அவ நம்ம பிரபாகரனுக்கு நிச்சயம் பண்ணின பொண்ணு”, என்று ஆரம்பித்து எல்லாம் சொன்னான் .

“அவ எனக்கு தங்கச்சி மாதிரி மா. எனக்குன்னு இருக்குற பொண்ணு கண்டிப்பா என்னைத் தேடி வருவா. நீங்க அவ கிட்ட எதையும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க. பிரபாகரன் யாருன்னே உங்களுக்கு தெரியாது சரியா?”, என்று சொல்ல மண்டையை உருட்டினாள் பத்மா. அதுவே அவனுக்கு சந்தேகத்தைக் கிளப்பியது. அவனுக்கு தெரியும் பத்மா ஒரு ஓட்டைவாய் என்று.

“என் செல்ல அம்மால்ல? நான் பிரபாவோட பிரண்டுன்னு தெரிஞ்சா அர்ச்சனா இங்க இருந்து போயிருவா மா. இங்க இருந்து போனா அவளுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்?”, என்று கேட்டான்.

“ஆமா ஆமா. நான் சொல்ல மாட்டேன். அந்த பிள்ளை இங்கயே இருக்கட்டும். அப்புறம் அவளுக்கு சமையல் பாத்திரம் எல்லாம் வாங்கிக் கொடுக்க கூடாது. அவ நம்ம வீட்ல தான் சாப்பிடணும் சரியா?”

”சரி மா, அவ கொஞ்ச நாள்ல ஊருக்கு போயிருவா. பிரபா ரொம்ப நாள் எல்லாம் அவளை தனியா விட மாட்டான். அதுக்கு எதுக்கு புது அடுப்பு பாத்திரம் எல்லாம்? என் தங்கச்சி நம்ம வீட்ல சாப்பிடட்டும்”, என்று சொல்ல பத்மாவும் அதை ஏற்றுக் கொண்டாள்.

நாட்கள் வேகமாக உருண்டோடிக் கொண்டிருந்தது. தினமும் பிரபாகரன் விக்ரமிடம் அவளைப் பற்றி கேட்டுக் கொள்வான். தான் கேட்டதை மீனாட்சியிடமும் சொல்வான். மகள் அங்கே பாதுகாப்பாக இருக்கிறாள் என்பதே அந்த தாய்க்கு போதுமானதாக இருந்தது.

அதே போல அர்ச்சனாவும் ஒரு நாளும் பிரபாகரன் மற்றும் மீனாட்சியை மறந்ததே கிடையாது. தினமும் காயத்ரி மற்றும் கிருஷ்ணனிடம் பேசுவாள். அவர்களும் வாய்த் தவறி கூட பிரபாகரன் திட்டத்தை சொல்ல வில்லை.

அதைப் போல பிரபாகரன் திருமணம் நின்றதையும், அகிலன் அஞ்சலி திருமணம் நடந்ததும் அர்ச்சனாவுக்கு தெரியாது. அவளுக்கு தெரிய விடக் கூடாது என்று பிரபாகரன் உறுதியாக இருந்தான்.

பிரபாகரன் மற்றும் வினோதினி திருமணம் நடந்திருக்கும் என்பதில் அர்ச்சனா உறுதியாக இருந்தாள். பத்மா மற்றும் விக்ரம் இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனதில் இருப்பதை வாங்க முயல அர்ச்சனா கடைசி வரை எதையுமே சொல்ல வில்லை.

இதற்கிடையில் ஒரு நாள் மஞ்சுளா சொக்கலிங்கத்தை அழைத்துக் கொண்டு மீனாட்சியைக் காண வந்திருந்தாள். எப்போதும் சொக்கலிங்கம் வந்தால் உள்ளே வாங்க என்று அழைக்கும் மீனாட்சி ஒருநாளும் மஞ்சுளாவை வீட்டுக்குள் அழைத்ததில்லை.

இன்றும் அதே போல இருவரும் வாசலில் நிற்க வெளியே வந்து நின்ற மீனாட்சி கண்ணைச் சுருக்கி கணவனைக் கேள்வியாக பார்த்தாள்.

“இந்தா, இதுல கையெழுத்துப் போடு. அன்னைக்கு சொன்னல்ல? டைவர்ஸ் கொடுக்குறேன்னு. சீக்கிரம் கையெழுத்து போடு”, என்று பேப்பரை நீட்டினாள் மஞ்சுளா.

அதை மீனாட்சி வாங்கியதும் சொக்கலிங்கம் அவளை தவிப்பாக பார்க்க அவர் பார்வையில் இருந்த தவிப்பைக் கண்ட மீனாட்சிக்கு பிரபாகரன் அன்று சொன்னது தான் நினைவில் வந்தது. அந்த நேரம் அவன் சொன்னதை எண்ணி, கணவனை எண்ணி சிரிப்பு கூட வந்தது.

அவர் கண்கள் போடாதே என்னும் விதமாய் அவளிடம் பேச மஞ்சுளாவோ கண்கள் மின்ன அவளைப் பார்த்தாள்.

மீனாட்சி கையெழுத்துப் போடாமல் இருக்கவும் “என்னங்க பேனா கொடுங்க, அவங்க கையெழுத்துப் போடட்டும்”, என்று சொன்னாள் மஞ்சுளா.

சட்டைப் பையில் இருந்து பேனாவை எடுத்து மீனாட்சியிடம் நீட்டினார் சொக்கலிங்கம். அதை வாங்கிய மீனாட்சி “நான் கையெழுத்து போடவா?”, என்று அவருடைய கண்ணைப் பார்த்துக் கேட்டாள்.

அவர் வாய்த் திறந்து எதுவும் சொல்ல வில்லை என்றாலும் அவர் கண்கள் வேண்டாம் என்னும் விதமாய் அசைந்தது.

அதைக் கண்ட மீனாட்சி “எனக்கு இந்த பேனா வேண்டாம். இந்தாங்க உங்க பேனா”, என்று சொல்லி அதை அவரிடம் நீட்டினாள்.

மஞ்சுளா குழப்பமாக அவளைப் பார்க்க தன்னுடைய கையில் இருந்த டைவர்ஸ் பேப்பரை அப்படியே கிழித்து தூரப் போட்டாள் மீனாட்சி. சொக்கலிங்கம் கண்களில் ஒளி வந்தது.

“ஏய்… ஏய்…, என்ன கையெழுத்து போடாம கிழிச்சு போட்டுட்ட?”, என்று அதிர்வாக மஞ்சுளா கேட்க “நான் எதுக்கு கையெழுத்து போடணும்?”, என்று கேட்டாள் மீனாட்சி.

“என்ன விளையாடுறியா? அன்னைக்கு நீ தானே சொன்ன டைவர்ஸ் தறேன்னு”

“என் புருஷன் என் பொண்ணைத் திட்டினார். நான் பதிலுக்கு டைவர்ஸ் தரேன்னு மிரட்டினேன். இது புருஷன் பொண்டாட்டி பிரச்சனை. சும்மா பேச்சு வாக்குல சொன்னதுக்கு எல்லாம் டைவர்ஸ் பேப்பரை தூக்கிட்டு வந்துருவியா?”, என்று மீனாட்சி கேட்க அவளை காதலாக பார்த்தார் சொக்கலிங்கம்.

“என்னது புருஷன் பொண்டாட்டியா?”, என்று மஞ்சுளா அதிர்ந்து விழிக்க “ஆமா அவர் என்னோட புருஷன் தானே? இன்னும் சொல்லப் போனா இப்ப வரைக்கும் இந்த ஊர் உலகத்துக்கு நான் தான் அவர் பொண்டாட்டி. நான் முன்னாடி சொன்னதைத் தான் இப்பவும் சொல்றேன். நான் அவருக்கு டைவர்ஸ் தர மாட்டேன். நீங்க ரெண்டு பேரும் கிளம்பலாம்”, என்றாள் மீனாட்சி.

“சீ, என்ன பொம்பளை டி நீ? மானங்கெட்ட ஜென்மம். மனுசனுக்கு சொல் ஒண்ணு செயல் ஒண்ணுன்னு இருக்கணும். மாத்தி மாத்தி பேசக் கூடாது”, என்று மஞ்சுளா கோபத்தில் பொரிய “வாயை மூடு மஞ்சு. கிளம்பு போகலாம்”, என்றார் சொக்கலிங்கம்.

“என்னங்க டைவர்ஸ்…”

“அதான் மீனாட்சி தெளிவா பதில் சொல்லிட்டால்ல? அப்புறம் என்ன? வா போகலாம்”

“என்னங்க இது அநியாயம்”

“நியாயம் அநியாயம் பத்தி நீ பேசக் கூடாது மஞ்சு. இப்ப வா போகலாம்”, என்று சொல்லி அவர் வெளியே சென்று காரில் ஏற மீனாட்சியை ஒன்றும் செய்ய முடியாத கடுப்பில் சென்றாள் மஞ்சுளா. காரில் போகும் போது மஞ்சுளா மீனாட்சியை திட்டிக் கொண்டே வர “கொஞ்சம் வாயை மூடிட்டு வரியா?”, என்று கத்தினார் சொக்கலிங்கம்.

“என்ன என்னை அடக்குறீங்க? அவளை ஏதாவது சொல்றீங்களா?”

“இங்க பாரு என்னோட பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு. மீனாட்சி ஒதுங்கி தானே இருக்கா. அப்புறம் என்ன?”

“அப்புறம் என்னவா? என்னோட பேர் எதுலயும் இல்லை. நான் உங்க பொண்டாட்டியா இல்லையான்னு எனக்கே சந்தேகம் வருது. நான் அதுக்கு போராடிட்டு இருக்கேன். இது உங்களுக்கு பெருசா தெரியலையா?”

“கல்யாணத்துக்கு முன்னாடி நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவன்னு உனக்கு தெரியும் தானே? அப்ப என் கிட்ட என்ன சொன்ன? என்னால உங்களை மறக்க முடியலை. உங்க காலடில ஒரு இடம் கொடுத்தாப் போதும். மீனாட்சி அக்கா என்னைத் தங்கச்சியா நினைக்கலைன்னாலும் பரவால்ல, அவங்க என்னை ஒரு வேலைக்காரியா நினைச்சா போதும். உங்க கையால ஒரு தாலியைத் தவிர எனக்கு வேற ஒண்ணும் வேண்டாம்னு தானே பேசின? இப்ப எல்லாம் அப்படியே உல்டாவா இருக்கு?”

“அது….”

“என்ன மஞ்சு வாயடைச்சுப் போய் இருக்க? நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியலையா? இல்லை பதிலே இல்லையா? அப்ப அப்படிப் பேசினவ இப்ப அப்படியே மாறிட்ட? எனக்கு இப்ப தான் சந்தேகமே வருது. அப்ப வேணும்னு நடிச்சு என்னை ஏமாத்திருக்க. என் மேல மேல விழுந்து பழகி என்னை மயக்கிருக்க. நமக்குள்ள அந்த தப்பு நடந்தது கூட நான் நம்ம ரெண்டு பேரையும் அறியாமன்னு நினைச்சேன். ஆனா இப்ப தான் தெரியுது நீ வேணும்னு என்னை மயக்கிருக்கேன்னு”

“என்னங்க?”

“வாயை மூடு. இவ்வளவு நாள் நீ பண்ணினது எல்லாம் பொறுத்துப் போனதுக்கு காரணம் எல்லாரும் சந்தோஷமா இல்லாம போனாலும் அமைதியா வாழணும்னு தான். அன்னைக்கு அர்ச்சனாவை பொண்ணு பாக்க வந்த அன்னைக்கு யசோதாவுக்கு கால் பண்ணி பேசினது நீ தானே?”

“நான்… நானா? என்ன சொல்றீங்க? நான் எதுக்கு அவங்களுக்கு பேசணும்? என் கிட்ட அவங்க நம்பரே கிடையாது”, என்றாள்.

காதல் தொடரும்…..

Advertisement