Advertisement

அர்ச்சனா பஸ் சீட்டில் சாய்ந்து அமர்ந்து கண்களைத் துடைத்துக் கொள்வதை மீனாட்சி கண்ணீருடன் பார்த்தாள் என்றால் பிரபாகரன் தன்னவளின் கண்ணீரை வேதனையுடன் பார்த்தான். பஸ் கிளம்பிச் சென்றதும் மீனாட்சியை அழைத்துக் கொண்டு அவளுடைய வீட்டுக்குச் சென்றான் பிரபாகரன்.

“உள்ள வாங்க மாப்பிள்ளை”, என்று அழைத்தாள் மீனாட்சி.

“பரவால்ல அத்தை. இன்னொரு டைம் வரேன். அப்ப அப்ப வந்து உங்களைப் பாத்துக்குறேன். உங்களுக்கு யாரும் இல்லைன்னு நினைக்காதீங்க. உங்களுக்கு உங்க மகளும் அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போற மாப்பிள்ளையான நானும் இருக்கேன்’

“மாப்பிள்ளை”

“நீங்க நம்பலைன்னாலும் அது தான் உண்மை. அவ என்னைத் தான் கல்யாணம் பண்ணனும் அத்தை; அப்ப தான் அவளும் நல்லா இருப்பா, நானும் நல்லா இருப்பேன். என்ன எங்களுக்கு நேரம் கூடி வரலை போல?”

“உங்க வீட்ல…”

“அதை சமாளிக்க வேண்டியது என்னோட பொறுப்பு. அப்புறம் எங்க வீட்ல அர்ச்சனா எப்படி வாழ்வான்னு எல்லாம் நீங்க யோசிக்காதீங்க. அவளை பூ மாதிரி வச்சிக்க வேண்டியது என்னோட பொறுப்பு. அப்புறம் ஒரு விஷயம்”

“என்ன மாப்பிள்ளை?”

“இப்ப நீங்க கூப்பிட்ட வார்த்தை உண்மைன்னா இந்த மாப்பிள்ளையோட கண்டிசனை நீங்க ஏத்துக்கு கிட்டு தான் ஆகணும்”

“கண்டிசனா? என்ன கண்டிஷன் மாப்பிள்ளை?”

“ஆமா, கண்டிஷன் தான். நீங்க மாமாவுக்கு டைவர்ஸ் கொடுக்க கூடாது”

“மாப்பிள்ளை”

“ஆமா அத்தை. உங்களை தோக்கடிக்கனும்னு உங்களை தூண்டி விட தான் அந்த பேச்சு பேசினாங்க. அதைக் கேட்டு நீங்க தோத்துறக் கூடாது. நீங்க எப்பவும் கம்பீரமா தான் இருக்கணும். எனக்கும் அர்ச்சனாவுக்கும் கல்யாணம் நடக்கும் போது நீங்களும் மாமாவும் ஜோடியா நிக்கணும். நீங்க அவர் கூட சேந்து வாழணும்னு நான் சொல்ல வரலை. அவரை விட்டு பிரியக் கூடாதுன்னு சொல்றேன். உங்க வாழ்க்கையை விட்டுக் கொடுத்த மாதிரி உங்க உரிமையை விட்டுக் கொடுக்க கூடாது. இதை தான் அர்ச்சனாவும் விரும்புவா”

“நான் எப்படி? நான் டைவர்ஸ் தரேன்னு சொல்லிட்டேனே? இப்ப எப்படி தர முடியாதுன்னு சொல்ல முடியும்?”

“நீங்க என்ன சத்தியவானுக்கா சத்தியம் பண்ணிக் கொடுத்தீங்க? மாமா உங்க கிட்ட வந்து கண்டிப்பா டைவர்ஸ் கேக்க மாட்டார். அவர் கேட்டா தானே நீங்க பதில் சொல்லணும்? உங்களுக்கு அப்படி ஒரு நிலைமை வராது”

“அது எப்படி உறுதியா சொல்றீங்க?”

“நீங்க டைவர்ஸ் கொடுக்காம இருக்குறது மட்டும் தான் அவருக்கு இருக்குற ஒரே ஆறுதல். அதை அவர் எப்படி இழப்பார். அவர் வாழ்க்கைல சறுக்கிருந்தாலும் அவர் மனசுல உங்க மேல வச்ச காதல் குறையாம இருக்குறது உண்மை”

“இல்லை உங்களுக்கு தெரியாது. அவர் பல முறை டைவர்ஸ் கேட்டுருக்கார். இப்பவும் மஞ்சுளாவுக்காக கேப்பார்”

“நல்லா யோசிச்சுப் பாருங்க, மாமா வந்து உங்க கிட்ட உனக்கு தான் என்னைப் பிடிக்கலைள்ள? நாம பிரிஞ்சிறலாம் விவாகரத்து கொடுன்னு கேட்டுருக்காரா? கண்டிப்பா இருக்காது. மஞ்சுளா விவாகரத்து கேக்க சொல்றான்னு வேணா சொல்லிறுப்பார். கண்டிப்பா நீங்க விவாகரத்து கொடுத்தா கம்பீரமா இருக்குற மனுஷன் உருக்குலைஞ்சு போயிருவார். நீங்க இன்னும் அவரோட மனைவின்னு இருக்குற ஒரு ஆறுதல்ல தான் அவர் வண்டி ஓடிட்டு இருக்கு?”, என்று அவன் சொல்ல அவள் முகத்தில் புன்னகையின் சாரல்.

“இது எப்படி உங்களுக்கு தெரியும்? அவர் மனசுல புகுந்து பாத்தீங்களா மாப்பிள்ளை?”, என்று சிரிப்புடன் கேட்டாள்.

“மனசுல புகுந்து பாக்கலை. ஆனா நானும் லவ் பண்ணுறேன்ல? அதனால என்னால அவரை புரிஞ்சிக்க முடியுது. ஆனா நான் அவரை மாதிரி திசை மாற மாட்டேன். எனக்கு அர்ச்சனா மட்டும் தான். சரி நான் கிளம்புறேன் அத்தை. உங்க மகளுக்கு ஒரு நாள் இருக்கு. அது வரைக்கும் நான் பேச மாட்டேன். நீங்களும் அவ கிட்ட பேசாதீங்க”

“அவ நல்லா இருக்குறதுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன். நம்ம ரெண்டு பேரையும் அழ வச்சிட்டு போனால்ல? நாம ரெண்டு பேரும் அவ கிட்ட பேசவே கூடாது”, என்று வெகுளியாக சொல்ல அந்த தாயின் வெகுளிச் சிரிப்பை பார்த்த படி கிளம்பியவனுக்கு கஷ்டமாக இருந்தது.

“மாமா, அத்தையோட பாதி வாழ்க்கையை வலியோட மாத்திருக்கார்னா, இப்ப இவ வேற இவங்களை கஷ்டப் படுத்துறாளே?”, என்று எரிச்சலுடன் எண்ணினான். அவள் கழுத்தை நெரித்துக் கொல்லும் அளவுக்கு ஆத்திரம் வந்தது அவனுக்கு. அதே ஆத்திரத்துடன் வீட்டுக்குச் சென்றவன் யாரிடமும் பேசாமல் அறைக்குச் சென்று விட்டான்.

பேருந்தில் பழைய விஷயங்களை எண்ணி அழுது கொண்டிருந்த அர்ச்சனா விடியலின் அருகாமையில் நன்கு உறங்கி விட்டாள். அவள் காலையில் பஸ் ஸ்டாண்ட் வரும் போது அவளை வரவேற்க காத்திருந்தான் விக்ரம்.

“ஹாய் அர்ச்சனா, அயம் விக்ரம்”, என்று அவன் கை நீட்ட அவன் கரம் பற்றி குலுக்கியவள் “ஹாய் விக்ரம். சாரி உங்களைக் கஷ்டப் படுத்துறேன்”, என்றாள்.

“இதுல என்ன இருக்கு? வாங்க போகலாம்”, என்று சொல்லி அவளைக் காரில் அழைத்துச் சென்றான். அவளுக்கு தெரியாமல் “சிஸ்டர் வந்துட்டாங்க”, என்ற மெஸ்ஸேஜை பிரபாகரனுக்கு அனுப்பி வைத்தான்.

ஒரு பெரிய மருத்துவமனை வளாகத்துக்குள் அந்த கார் நுழைந்தது. “இது தான் நாம வேலை பாக்கப் போற ஹாஸ்பிட்டல் அர்ச்சனா”, என்று சொல்லி மருத்துவமனையைக் காண்பித்தவன் காரை நேராக இன்னும் உள்ளே செலுத்தினான்.

முன் பக்கம் மருத்துவமனை வளாகம் இருக்க பின் பக்கம் மருத்துவர் மற்றும் நர்ஸ்களுக்கான குவாட்ரஸ் இருந்தது.

அங்கே காரை நிறுத்தியவன் “இது தான் நீங்க தங்கப் போற இடம். இது உங்க வீடு. அதோ அங்க இருக்கு பாருங்க. அது தான் நான் தங்கி இருக்குற வீடு. முதல்ல நம்ம வீட்டுக்கு போகலாம்”, என்று சொல்லி அங்கே அழைத்துச் சென்றான்.

கதவைத் தட்டியதும் விக்ரமின் அம்மா பத்மா வந்து கதவைத் திறந்தார். கிட்டத்தட்ட எண்பது வயதிருக்கும் பாட்டி வந்து கதவைத் திறந்ததும் இது இவனோட பாட்டியோ என்று எண்ணி அவள் கரம் குவிக்க “உள்ள வா மா, நீ விக்ரமோட பிரண்டாமே? இனி இங்க தான் வேலை பாக்க போறியா?”, என்று கேட்ட படி அவளை உள்ளே அழைத்துச் சென்றாள்.

“இவங்க என்னோட அம்மா. பேர் பத்மா”, என்று விக்ரம் சொல்ல “அம்மாவா?”, என்று வியந்து பார்த்தாள்.

பத்மா உள்ளே செல்ல “அவங்களுக்கு இருபது வருஷம் கழிச்சு தான் நான் போறந்தேன். அவங்களுக்கு இப்ப வயசு எண்பது. அப்பா போன வருஷம் இறந்துட்டார். அப்பா இருக்கும் போது அம்மாவும் அப்பாவும் சென்னைல தான் இருந்தாங்க. நான் படிச்சதும் அங்க தான். அப்பா இறந்ததும் அம்மாவை இங்க கூட்டிட்டு வந்துட்டேன். பக்கத்துல இருக்குற எல்லாரும் நல்லா பழகுவாங்க. எல்லார் கூடவும் பேசுங்க. பயம் இல்லை”, என்று நண்பனாக அறிவுரை சொன்னான்.

அனைத்தையும் கேட்டுக் கொண்டவள் பத்மா கொடுத்த காபியை குடித்து விட்டு அவன் வீட்டிலே குளித்து ஹாஸ்பிட்டல் கிளம்பினாள்.

சில கேள்விகள் அவளுடைய துறையைப் பற்றி கேட்டு உடனே அவளுக்கு வேலை கொடுக்கப் பட அவளை அவளுடைய பிரிவில் விட்டுவிட்டு அவன் வேலைக்குச் சென்றான்.

மொழிப் பிரச்சனை கொஞ்சம் இருந்தாலும் அங்கே வேலை பார்த்த சுகந்தி என்ற சிஸ்டர் அவளுக்கு உதவியாக இருந்தாள்.

மாலை வேலை முடியும் போது விக்ரம் அவளுக்காக காத்திருந்தான். இருவரும் பேசிய படியே வீட்டுக்குச் செல்ல பத்மா கொடுத்த டீயைக் குடித்த அர்ச்சனா தன்னுடைய வீட்டுக்குச் சென்றாள். இரண்டு அறை ஒரு கிட்சன், பாத்ரூம் என்று இருந்த அந்த சின்ன வீடு அழகானதாக தான் இருந்தது. ஆனால் அங்கிருந்த தனிமை அவளை பாதித்தது.

அவள் வாழ்க்கையில் தனிமையை அதிகம் உணர்ந்ததில்லை. ஏனென்றால் வீட்டுக்கு வந்து விட்டால் மீனாட்சி அவளிடம் பேசிக் கொண்டே இருப்பாள். இப்போது அன்னையை தேடியது அவளுக்கு. போனை உயிர்பித்து அன்னையை அழைத்து மன்னிப்பு கேட்க எண்ணினாள். அழைக்கவும் செய்தாள். ஆனால் மீனாட்சி அவள் அழைப்பதைப் பார்த்தும் போனை எடுக்க வில்லை. கவலையாக இருந்தாலும் அம்மாவின் கோபம் ஒரு நாள் குறையும் என்று எண்ணிக் கொண்டாள்.

லகுவான உடையை மாற்றி விட்டு இந்த தனிமையில் சாவதை விட பத்மாவிடம் பேசிக் கொண்டிருப்பது சாலச் சிறந்தது என்று புரிந்து அங்கே கிளம்பி விட்டாள்.

Advertisement