Advertisement

“இனி மறைக்கிறதுக்கு என்ன? எனக்கு அர்ச்சனாவைப் பிடிக்கலை பிரபா. என்னால அவளை உன் பொண்டாட்டியா பாக்க முடியலை. இப்ப அது நடக்கலைனு ரொம்ப சந்தோஷமா இருக்கு. உனக்கு பொண்டாட்டியா வர அவளுக்கு தகுதி இல்லை பிரபா”

“இந்த கல்யாணம் நிக்கணும்னு வேண்டிக்கிட்டீங்க? நின்னுருச்சு. அர்ச்சனா மருமகளா வரக் கூடாதுன்னு நினைச்சீங்க. அதுவும் நடந்துருச்சு. அது தான் உங்க சந்தோசத்துக்கு காரணம்? அப்படி தானே?”

“ஆமா”

“அப்படின்னா ஒண்ணு கேட்டுக்கொங்க. என்னைக்கா இருந்தாலும் இந்த வீட்டுக்கு மூத்த மருமக அர்ச்சனா தான். அவளைத் தவிர எனக்கு பொண்டாட்டியா வர வேற யாருக்கும் தகுதி இல்லை”, என்று சொல்ல அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.

“உங்க சந்தோஷம் எனக்கு உறுத்துச்சு மா. இப்ப இந்த எக்ஸ்பிரசன் நல்லா இருக்கு. உலகத்துலே மகன் கல்யாணம் நின்னதுக்கு சந்தோஷப் படுற முதல் அம்மா நீங்க தான் இல்ல?”, என்று சொல்லி விட்டுச் சென்றான். இது வரை இருந்த சந்தோஷம் மறைந்தது போல உணர்ந்தாள் யசோதா. ஐயர் ஏதோ கேட்க அதை எடுத்துக் கொடுக்கச் சென்றாலும் அவள் மனம் முழுக்க பிரபாகரன் பேசியதிலே நின்றது.

அர்ச்சனாவைத் தவிர வேறு யாரையும் மகன் திருமணம் செய்ய மாட்டானோ என்ற பயமா? இல்லை மீண்டும் அர்ச்சனாவே இந்த வீட்டுக்கு மருமகளாக வந்து விடுவாளா என்ற பயமா ஏதோ ஒன்று அவளை அச்சுறுத்தியது. அப்போது அவள் மனதில் அஞ்சலியும் அந்த வீட்டுப் பெண் தானே? அவளை மட்டும் தன்னால் எப்படி மருமகளாக ஏற்க முடிகிறது என்ற கேள்வி எழவே இல்லை. அப்படி எழுந்திருந்தால் அவள் யோசித்திருப்பாளோ என்னவோ?

திருமணத்துக்கு வந்த உறவினர்கள் மணமக்கள் மாறியதில் திகைத்து விழிக்க அர்ச்சனாவுக்கு உடல் நிலை சரி இல்லை என்றும் பிரபாகரன் அர்ச்சனா திருமணம் சில நாட்களுக்கு பிறகு நடத்தப்படும் என்றும் அனைவருக்கும் சொல்லப் பட்டது.

அர்ச்சனா ஓடிப் போய் விட்டாள் என்ற பெயர் எங்கேயும் அடிபடாதது சக்கரவர்த்தி மற்றும் சொக்கலிங்கத்துக்கு நிம்மதியாக இருந்தது. பிரபாகரன் தன்னவளுக்கு எந்த கெட்ட பெயரும் வர விடாமல் செய்து விட்டான்.

அனைவரின் ஆசியோடு அஞ்சலி கழுத்தில் தாலியைக் கட்டினான் அகிலன். அங்கே எல்லாம் சடங்குகள் முடிந்து மணமக்கள் மறுவீட்டுக்கு சென்றார்கள். வெளியே தோட்டத்தில் வந்து அமர்ந்தான் பிரபாகரன். அவனுக்கு எங்கேயும் போகப் பிடிக்க வில்லை. அவன் மனம் முழுக்க குழப்பமும் வேதனையுமே நிறைந்து இருந்தது.

அந்த வீட்டில் மற்ற அனைவருமே சந்தோஷமாக இருந்தார்கள். வர்ஷினி வேணு கூட அதிக சந்தோசத்தில் இருந்தார்கள். வர்ஷினி அஞ்சலியுடனே இருந்தாள். ஆனால் அவள் அர்ச்சனாவிடம் இது வரை ஒரு வார்த்தை கூட பேச வில்லை என்பது நினைவில் வந்து பிரபாகரனை உறுத்தியது. அகிலனாவது அவனுடைய திருமணத்தில் சந்தோசமாக இருக்கிறான் என்று வைத்துக் கொண்டாலும் அவனது ஆருயிர் தங்கைக்கு தன்னுடைய திருமணம் நின்றது வருத்தத்தை தர வில்லையா என்ற குழப்பம் வந்தது. அவன் அனைவரையும் அவனுடைய குடும்பமாக எண்ண அனைவரும் அவனை மட்டும் ஒதுக்கி வைத்தது போல உணர்ந்தான். அனைவரும் தன்னை முக்கியமாக எண்ணியிருந்தால் அனைவரும் அர்ச்சனாவிடமும் இதைப் போல பேசியிருப்பார்கள் தானே என்ற எண்ணம் அவன் மனதில் வந்தது.

இப்படி எல்லாம் தன்னை எண்ணும் நிலைக்கு ஆளாக்கின அர்ச்சனா மீது அவனுக்கு கொலைவெறியே வந்தது. “ஏன் டி இப்படி பண்ணின?”, என்று ஆயிரமாவது முறையாக மனதுக்குள் அவளிடம் கேட்டுக் கொண்டான்.

அவள் கடிதத்தில் எழுதி இருந்த அனைத்தும் அவனுக்கு குழப்பத்தை தான் தந்தது. அப்போது “அத்தான்”, என்ற படி வந்தாள் வினோதினி.

தன்னுடைய முகத்தை மாற்றிக் கொண்டு “என்ன வினோ?”, என்று கேட்டான்.

“ஏன் அத்தான் இப்படி பண்ணினீங்க?”

“என்ன மா? நான் என்ன பண்ணினேன்?”

“எதுக்கு என்னை வேண்டாம்னு சொன்னீங்க? அத்தை என்னை கல்யாணம் பண்ண சொன்னப்ப என்னைக் கல்யாணம் பண்ணிருக்க வேண்டியது தானே? உங்களை இப்படி என்னால பாக்க முடியலை அத்தான்”

“என்ன உளறுற வினோ?”

“ஆமா அத்தான், நாம கல்யாணம் பண்ணிக்கலாம்”

“உன்னைக் கல்யாணம் பண்ணுறதா? இன்னொரு தரம் அப்படி பேசக் கூடாது வினோ. நீ சின்ன பொண்ணு டா. எனக்கு நீயும் வர்ஷினியும் ஒண்ணு தான். உன்னைப் போய் நான்…. இன்னொரு தடவை இப்படி பேசக் கூடாது. ஒழுங்கா நல்ல படிச்சு நல்ல நிலைமைக்கு வரணும். அத்தைக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுக்கணும். நல்ல இடத்துல நான் உனக்கு வேலை வாங்கித் தரேன். அப்புறம் உனக்கு நான் ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி வைப்பேன். இப்ப படிக்கிறதை மட்டும் நினைக்கணும் சரியா?”, என்று அவன் தெளிவாக சொல்ல அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனாள்.

“அத்தான்”, என்று அவள் அதிர்ச்சியாக அழைத்தாள். அவளை தங்கை என்று சொல்லாமல் சொல்லி விட்டானே? ஏதோ மனமே விட்டுப் போனது போல இருந்தது.

“ஆமா வினோ. நீயும் வர்ஷினியும் எனக்கு ஒண்ணு தான். அது மட்டும் இல்லை. என்னால அர்ச்சனாவைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண மட்டும் இல்லை, நினைக்க கூட முடியாது. அவ தான் எனக்கு எல்லாமும். இந்த ஜென்மத்துல என்னோட மனைவி, என்னோட காதலி, என்னோட ஆத்மா எல்லாமே அவ தான்

“ஆனா அவங்க வேற ஆளை லவ் பண்ணுறாங்களாமே?”

“அப்படி எல்லாம் இல்லை வினோ. அர்ச்சனா என்னைத் தான் விரும்புறா”

“எனக்கும் அது தோணுச்சு அத்தான். அப்புறம் ஏன் அவங்க போனாங்க”

“அது எங்க ரெண்டு பேர்க்குள்ள ஒரு சின்ன சண்டை. அதான். எல்லாம் கூடிய சீக்கிரம் சரியாகிரும். ஆனா அவ தான் என்னோட மனைவி. நீ போ”, என்று சொல்ல இதற்கு மேல் அவனை வற்புறுத்துவது அசிங்கம் என்று அவளுக்கே புரிந்தது.

“சாரி அத்தான்“, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

அவனுடைய அறைக்குச் சென்றான் பிரபாகரன். அப்போது மறுவீடு முடிந்து அங்கே வந்த சக்கரவர்த்தி “என்ன பிரபா இதெல்லாம்? அர்ச்சனா எங்க தான் போனா?”, என்று கேட்டார்.

“அவ ஃபிரண்ட் வீட்ல இருக்கா பா?”

“ஏன் போனாளாம்?”

“இன்னும் தெரியலைப்பா”

“வேணு ஏதாவது செஞ்சிருப்பானா?”

“அப்படி இருக்க வாய்ப்பில்லை பா. ஏன்னா நேத்து நைட் என் கிட்ட நல்லா தான் பேசினா?”, என்று சொல்லும் போதே அவனுக்கு உறுத்தியது.

“சரி பாத்துக்கோ பா. சீக்கிரம் அவளை நேர்ல பாத்து பிரச்சனையை சரி பண்ண பாரு. இந்த சொக்கு வேற ரொம்ப உடைஞ்சு போய்ட்டான். மீனாட்சி பேசினது அவனை ரொம்ப பாதிச்சிருச்சு. அவனைப் போய் சமாதானப் படுத்துறேன்”, என்று அவர் சொல்லிக் செல்ல அவன் காதில் அது விழவே இல்லை.

“அவ நேத்து என் கிட்ட நல்லா பேசினாளா? இல்லையே? அவ பேசவே இல்லையே? என் கிட்ட ஒட்டிக்கிட்டே நின்னா. நான் என்ன செஞ்சாலும் மறுப்பே சொல்லலை. அப்படினா அவ இந்த பிரிவை வலியோட ஏத்துகிட்டு இருந்துருக்கா? ஆனா என்ன காரணமா இருக்கும்?”, என்று எண்ணி மண்டை காய்ந்தான். அவனால் ஒரு முடிவுக்கு வர முடிய வில்லை.

அதே நேரம் அர்ச்சனா அழுது கரைய தன்னுடையை குழந்தையை அவள் கையில் கொடுத்து அவள் மனதை மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தாள் காயத்ரி.

அதுவும் ஓரளவுக்கு மேல் முடியாமல் போக அவளை எப்படித் தேற்ற என்று தெரிய வில்லை. அன்று மாலை பிரபாகரனின் பிளான் படி “இந்தா அர்ச்சனா. இது விக்ரமோட நம்பர். என்னோட பிரண்டோட ஃபிரண்ட் தான் இந்த விக்ரம். அவர் உனக்கு வேலைக்கு ஏற்பாடு பண்ணிட்டார். நீ இன்னைக்கு நைட் பெங்க்ளூர் கிளம்பு. காலைல உன்னைப் பிக்கப் பண்ண விக்ரம் பஸ் ஸ்டாண்ட்க்கு வருவார். அங்க உனக்கு வேலை, தங்க இடம் எல்லாம் ரெடியா இருக்கும்”, என்று சொல்லிக் கொடுத்தான்.

அன்று இரவு அவள் பஸ் ஸ்டாண்ட்க்கு வரும் போது அவளைப் பார்த்த நான்கு விழிகள் பிரபாகரன் மற்றும் மீனாட்சியுடையது. அர்ச்சனாவின் வலியையும் வேதனையையும் இருவரும் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்தார்கள். அவள் எதைத் தேடிப் போகிறாளோ போகட்டும். அவளே ஒரு நாள் வருவாள் என்று இருவரும் எண்ணிக் கொண்டார்கள்.

Advertisement