Advertisement

அத்தியாயம் 11

கண்ணசைவில் கட்டிப்

போடுகின்றான் எந்தன்

மனம் தொட்ட நாயகன்!!!

“என்ன தப்பா பேசாதீங்க? இப்ப அவமானப் பட்டுப் போனது நான் தானே? சொக்கலிங்கம் மக ஓடிப் போய்ட்டானு தானே எல்லாரும் சொல்லுவாங்க? என் மானம் போகப் போகுது”, என்று எரிச்சலுடன் சொன்னார் சொக்கலிங்கம். மீனாட்சியும் சொக்கலிங்கமும் மோதிக் கொள்வது மஞ்சுளா மற்றும் அஞ்சலிக்கு கொண்டாட்டமாக இருந்தது.

“ஓஹோ என் மகளால தான் உங்களுக்கு அவமானம் வந்துருச்சா? காதலிச்சு கல்யாணம் பண்ணி ஒரு பொம்பளைப் பிள்ளையைக் கொடுத்துட்டு ஆஃபிஸ்ல இன்னொரு பொண்ணு கூட தவறான உறவை ஏற்படுத்தி அவளுக்கும் ஒரு பிள்ளையைக் கொடுத்துட்டு அவளைக் கல்யாணம் பண்ணிக்கிடட்டான்னு கேட்டப்ப உங்களுக்கு அவமானமா தெரியலை? என் கழுத்துல கட்டின மாதிரியே அவளுக்கும் தாலி காட்டின போது உங்களுக்கு அவமானமா தெரியலை. உங்க இனிஷியலை ரெண்டு பொண்டாட்டிக்கும் ரெண்டு பிள்ளைங்களுக்கும் பங்கு போடும் போது உங்களுக்கு அவமானமா தெரியலை? ஆனா என் பொண்ணால உங்களுக்கு அவமானம் வந்துருச்சு தானே?”, என்று ஆக்ரோஷமாக கேட்டாள் மீனாட்சி.

மீனாட்சியின் அப்படி ஒரு கோபத்தை யாருமே எதிர் பார்க்க வில்லை. மஞ்சுளாவை திருமணம் செய்து கொள்ளக் கேட்கும் போது கூட மீனாட்சி இந்த அளவுக்கு கோபப் பட வில்லை என்பதை நினைவு கூர்ந்த சொக்கலிங்கம் “மீனாட்சி”, என்று அதிர்வாக அழைத்தார்.

“ஹிம்… என் பேரைச் சொல்ல கூட உங்களுக்கு அருகதை இல்லை. என் பொண்ணை அடுத்தவங்க தான் தப்பா பேசுறாங்கன்னா நீங்களும் பேசுவீங்களா? இவ்வளவு நாள் அவளுக்காக தான் நீங்க வேணும்னு நினைச்சேன். இனி என் பொண்ணுக்காக கூட நீங்க தேவை இல்லை. இப்ப இந்த நிமிஷம் நான் விவகாரத்துக்கு சம்மதிக்கிறேன். இனி நீங்க யாரோ நாங்க யாரோ?”, என்று சொல்ல சொக்கலிங்கம் ஆடி விட்டார்.

“மீனாட்சி… நான்”, என்று அவர் ஆரம்பிக்க ஒரு கை நீட்டி அவரை பேச விடாமல் தடுத்தவள் “முதல்ல என்னோட நம்பிக்கையை உடைச்சீங்க. இப்ப என் பொண்ணு மரியாதையையும் கலங்கப் படுத்திட்டீங்க? என் பொண்ணைப் பத்தி எல்லாரும் தப்பா பேசினப்ப அவங்க கிட்ட ஒரு வார்த்தை என் பொண்ணு அர்ச்சனா அப்படிக் கிடையாதுன்னு சொல்லிருந்தீங்கன்னா நீங்க எனக்கு செஞ்ச துரோகத்தை கூட மறந்து மன்னிச்சிருப்பேன். ஆனா நீங்க…. எனக்கு நல்ல புருசனாவும் இல்லை. என் பிள்ளைக்கு நல்ல அப்பாவாவும் இல்லை. இனி எனக்கும் அவளுக்கும் நீங்க தேவை இல்லை. வந்து டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து வாங்கிட்டு போய்கிட்டே இருங்க”, என்று சொன்ன மீனாட்சி பிரபாகரன் புறம் திரும்பினாள்.

“சொல்லுங்க அத்தை”

“நான் வரேன் தம்பி. என் பொண்ணு இங்க வந்து வாழ்ந்தாலும் அவ நல்லா இருப்பான்னு எனக்கு நம்பிக்கை இல்லை. அவ ஒரு தேவதை. அவளுக்கு எல்லாருக்கும் கொடுக்க தான் தெரியும்., எதையும் பறிக்க தெரியாது. அப்படிப் பட்டவளை மதிக்காத இந்த வீட்டுக்கு அவ மருமகளா வந்திருந்தா அவ மரியாதை காத்தோட போயிருக்கும். இப்ப என் மக நல்ல முடிவா எடுத்துருக்கான்னு நான் சந்தோஷப் படுறேன். நீங்களும் உங்க வீட்ல உள்ளவங்க விருப்ப படி வேற ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஸமா இருங்க. நான் வரேன்”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள். இடிந்து போய் அமர்ந்தார் சொக்கலிங்கம்.

மஞ்சுளாவுகோ பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது போல இருந்தது. அவளுக்கு அர்ச்சனா திருமணம் நின்றது ஒரு சந்தோஷம், மீனாட்சி அசிங்கப் பட்டது சந்தோஷம். இவ்வளவு பெரிய வீட்டில் தன்னுடைய மகள் மருமகளாக ஆவப் போவது ஒரு சந்தோஷம். அதை விட பெரிய சந்தோஷம் கணவனுக்கு அவள் டைவர்ஸ் தரப் போறேன் என்று சொன்னது.

“அவ போனா போறா பிரபா. இன்னைக்கு உனக்கும் வினோதினிக்கும் கல்யாணம் செய்யத் தான் போறேன். வா வந்து கிளம்பு”, என்றாள் யசோதா.

“தேவையில்லாம பேசி என்னை டென்ஷன் பண்ணாதீங்க மா. முதல்ல எல்லாரும் அகில் கல்யாணத்துக்கு கிளம்புங்க. இதுக்கு மேல என்னை வற்புறுத்தினா இந்த வீட்ல நான் இருக்குறது இன்னைக்கு தான் கடைசி நாளா இருக்கும்”, என்று பிரபாகரன் சொல்ல அனைவரும் கிளம்பச் சென்றார்கள்.

பிரபாகரன் தன்னை மறுத்ததால் முகம் கூம்பிப் போய் நின்ற வினோதினி அருகில் வந்த வேணு “கவலைப் படாதே வினோ. அதான் அத்தான் கல்யாணம் நின்னுருச்சே? நான் எப்படியாவது அத்தை அம்மா கிட்ட சொல்லி உன்னை அத்தானுக்கு கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்றேன். நீ உன் மனசுல உள்ளதை யார்க் கிட்டயும் சொல்லாத”, என்றான்.

“சரிண்ணா. எனக்கு இப்படி எல்லாம் நடக்கும்னு நான் எதிர் பார்க்கவே இல்லை? அந்த அக்கா அத்தான் மேல விருப்பம் இல்லைன்னா எதுக்கு சம்மதம் சொன்னாங்க? எனக்கு புரியவே இல்லைண்ணா”

“அதைப் பத்தி நமக்கு என்ன வினோ? சரி அஞ்சலிக்கு அலங்காரம் பண்ணனும்ல? கிளம்பு போ”, என்று சொல்ல அவளும் சந்தோஷமாக சென்றாள்.

கல்யாண வீட்டில் பரபரப்பு ஆரம்பிக்க சந்தோசமாக மகளை அலங்காரம் செய்ய ஆரம்பித்தாள் மஞ்சுளா. அர்ச்சனாவுக்காக வந்திருந்த பியூட்டி பார்லர் பெண் அஞ்சலிக்கு அலங்காரம் செய்ய ஆரம்பித்தாள்.

கல்யாணப் பெண்ணுக்கு என வாங்கி இருந்த லட்ச ரூபாய் புடவை கவரை மஞ்சுளா கையில் எடுத்தாள். “ரொம்ப அழகா இருக்கு அஞ்சலி சேலை. உன் மாமியார் சூப்பரா செலக்ட் பண்ணிருக்காங்க. அதை நீ தான் கட்டணும்னு இருக்கு பாரேன். இந்த சட்டை மட்டும் வேண்டாம். உனக்கு வேற கோல்டன் சட்டை இருக்கே. அதைப் போட்டுக்கோ”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

அப்போது அவர்களின் அறைக் கதவு தட்டப் பட்டது. மஞ்சுளா கதவைத் திறக்கும் போது பிரபாகரன் தான் நின்றிருந்தான்.

“என்ன பெரிய மாப்பிள்ளை?”, என்று வரவழைத்த புன்னகையுடன் கேட்டாள் மஞ்சுளா.

“அர்ச்சனாவுக்கு வாங்கின சேலையை அஞ்சலிக்கு கட்ட வேண்டாம். அம்மா இந்த புடவையை உங்க கிட்ட கொடுக்கச் சொன்னாங்க”, என்று சொல்லி மற்றொரு கவரை நீட்டியவன் மஞ்சுளா கையில் இருந்த கவரை வாங்கிக் கொண்டு சென்றான்.

“என்ன டி இதைக் கொடுத்துட்டு போறான்? இது விலை கம்மியா இருக்கும் போல?”

“பரவால்ல மா. அது அந்த அர்ச்சனாவுக்கு வாங்கியது. அதைக் கட்டுறதுக்கு இதுவே மேல்”, என்று அஞ்சலி சொல்ல மஞ்சுளாவுக்கும் அது சரி என்று பட்டது. சந்தோஷமாக மகளை அலங்கரிக்க ஆரம்பித்தாள்.

ஆனால் தன்னுடைய அறைக்குள் சென்ற பிரபா அர்ச்சனாவுக்கு என வாங்கிய அந்த திருமணப் புடவையை அப்படியே அவனுடைய பீரோவுக்குள் பத்திரப் படுத்தினான். அவளுக்கு என்று வாங்கிய புடவையை மற்றவர் அணிவதை அவன் விரும்ப வில்லை. அதனால் தான் அவனுடைய தங்கை வர்ஷினியிடம் வேறு ஒரு புடவை கேட்டு அதை வாங்கிக் கொண்டு வந்தான். அவள் காரணம் கேட்டதற்கு கூட எதையோ சொல்லி சமாளித்தான்.

யசோதா திருமண வேலைகளை சந்தோஷமாக செய்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் இருந்த சந்தோசத்தைக் கண்ட பிரபாகரன் “அம்மா”, என்று அழைத்தான்.

“என்ன பிரபா? ஏதாவது வேணுமா?”

“ரொம்ப சந்தோஸமா இருக்கீங்க போல?”, என்று அவன் குத்தலாக கேட்க அந்த குத்தல் பேச்சு அவளுக்கு புரிய வில்லை. பிரபா அப்படி எல்லாம் பேச மாட்டான் என்பதால் அதை அவளால் அனுமானிக்க வில்லை.

“ஆமா டா, அகில் கல்யாணம்ல? அதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா உன் கல்யாணம் நடக்கலையேன்னு கஷ்டமா தான் இருக்கு”

“அந்த கஷ்டம் இருக்கும் தான். நான் இல்லைன்னு சொல்லலை., ஆனா இத்தனை நாளும் உங்க முகத்துல இவ்வளவு சந்தோசத்தைப் பாக்கலையே? அது ஏன்?”

“அது அது… வந்து…”, என்று அவள் தடுமாற “என்ன மா? சின்ன மகன் கல்யாணத்துல இருக்குற சந்தோஷம் பெரிய மகன் கல்யாணத்துல இல்லையேன்னு கேட்டேன்”, என்று சொன்னான்.

Advertisement