Advertisement

அவள் மீது அவளுக்கே கோபம் வந்தது. அவளது விரல்கள் அவளை அறியாமலே சிந்து, மதி….. என இருவரின் பெயரையும் சேர்த்து பேப்பரில் இதயம் வரைந்து எழுதிக் கொண்டிருந்தது.
வீட்டுக்குக் கிளம்பும் நேரம் ஆகியதும் அன்று முழுதும் அவனைக் காண முடியாத சங்கடத்துடன் எழுந்தவள் அவனது பார்வைக்காய் வைக்க வேண்டிய பேப்பர்களை ஒரு பைலில் வைத்து அவன் அறையில் மேசையின் மீது வைத்து விட்டு வந்தாள்.
அவளது பார்வை நொடிக்கொரு முறை வாசலைத் தழுவி ஏமாற்றத்துடன் திரும்புவதை சௌமியா கவனித்துக் கொண்டிருந்தாள்.
“ஓ….. கடைசில இவ எனக்குப் போட்டியா வந்துடுவா போலிருக்கே…. மதியைக் காணாம கண்ணு தவிக்குதோ…… இவளை ஏதாவது பண்ணியே ஆகணுமே….. இல்லன்னா சரிவராது…..” என நினைத்துக் கொண்டே அவளிடம் சென்றாள்.
“என்ன சிந்து….. யார் வரணும்னு வாசலையே பார்த்துட்டு இருக்கே….. வீட்டுக்கு கிளம்பலையா……” என்றாள் விஷத்தை ஒளித்து வைத்த புன்னகையுடன்.
“இ…. இல்ல…. நம்ம சார் இன்னும் காணோமே….. அவர் ஒரு மெயில் ரெடி பண்ணி வைக்க சொல்லிண்டு போனார்….. அதான் அடுத்து என்ன பண்ணறதுன்னு தெரியாம வராரோன்னு பார்த்திண்டு இருக்கேன்….” என்றாள் சிந்து அவள் கண்டு கொண்டாளே என்ற தவிப்புடன்.
“அவரா….. அவர் ஒரு மீட்டிங் போயிருக்கார்……. வரதுக்கு லேட் ஆவும்….. நீ கிளம்பு….. மெயில் நாளைக்கு அனுப்பிக்கலாம்……” என்றாள் சௌமியா.
“ம்ம்…. சரி……” என்றவள், எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க மனசு ஏனோ அவனைக் காணாமல் வாடிக் கிடந்தது. வீட்டுக்குக் கிளம்பியவள் தளர்வுடன் பேருந்து நிறுத்தம் நோக்கி சென்றாள்.
அவளது பேருந்துக்காய் காத்துக் கொண்டிருந்தவள் எதிர்ப்பக்கத்தில் வந்து கொண்டிருந்த மதியழகனின் காரைக் கண்டதும் அவள் பக்கத்தில் வந்து கொண்டிருந்த காரைக் கவனிக்காமல் உற்சாகத்துடன் முன்னில் வந்துவிட “L” போர்டை சுமந்து கொண்டிருந்த கார் அவளை மெதுவாய்த் தட்டிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
காரை வளைவில் திருப்பிக் கொண்டு இந்தப் பக்கம் வந்து கொண்டிருந்த மதியழகன் அங்கு கூடிய கூட்டத்தைக் கண்டு காரை ஓரமாய் நிறுத்தி எட்டிப்பார்த்தான். கீழே விழுந்து எழுந்திருக்க முடியாமல் வேதனையோடு முகத்தை சுளித்த சிந்துஜாவும் அவள் கை காலில் இருந்து வழிந்து கொண்டிருந்த ரத்தமும் அங்கு நடந்ததைக் கூற பதறியவன், அவசரமாய் அவளிடம் சென்று அவளை எழுப்பி விட்டான்.
“என்ன சிந்து…. இது… இப்படி தான் கவனமில்லாமல் வருவதா…..” என்று கேட்டுக் கொண்டே அவளை கைத்தாங்கலாக காரில் ஏற்றினான்.
அதுவரை வேதனையில் எழுந்திருக்கக் கூட முடியாமல் முகத்தை சுளித்துக் கொண்டிருந்தவள் அவனைக் கண்டதும் எல்லா வேதனைகளும் மறந்து போக சந்தோஷமாக அருகில் அமர்ந்திருந்தாள்.
கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் புன்னகையுடன் பிரம்மை பிடித்தவளைப் போல அமர்ந்திருந்தவளைப் புரியாமல் பார்த்தவன், அமைதியாய் ஹாஸ்பிட்டலை நோக்கி வண்டியை விட்டான்.
அவளுக்கு முழங்கையிலும், காலிலும் லேசான காயம் மட்டுமே இருந்தது. அதற்கு மருந்து போட்டால் போதுமென்று டாக்டர் கூறினாலும் எதற்கும் எக்ஸ்ரேவும் ஸ்கேனும் எடுத்துப் பார்த்துவிடலாம்…. என்று அவளுடனே இருந்து எல்லாவற்றையும் செய்து ரிப்போர்ட் வந்தபின் எந்தப் பிரச்சனையும் இல்லையென்று தெரிந்த பின்னரே சமாதானமானான்.
அவனது அக்கறையும் பதட்டமும் அவளுக்கு அவன் மீதிருந்த அன்பை மேலும் அதிகமாக்கியது. அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் திரும்பக் காரில் ஏறும் போதுதான் மிகவும் இருட்டி விட்டதை உணர்ந்தாள்.
“அச்சச்சோ….. ரொம்பவும் இருட்டிடுத்தே……. அப்பா என்னத் தேடிண்டு இருப்பாரே…..” என்றாள் கவலையுடன்.
“என்ன சிந்து…. ஹாஸ்பிடலில் இருக்கும்போது உன் அப்பாவுக்கு கூப்பிட்டு சொல்லி இருக்கலாம்ல….. நீ சொல்லிருப்பேன்னு நான் நினைச்சேன்…..”
“ச… சாரி…. நான் மறந்தே போயிட்டேன்….” என்றவள் கைப்பையில் இருந்து மொபைலை எடுக்க, “என்னதான் மறதியோ….. சூழ்நிலையை மறந்து அப்படி என்னதான் யோசிப்பிங்களோ…..” என்று அவன் வெடுக்கென்று கூறிவிட, அவள் கண்ணில் முணுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது.
அவனுக்கும் அவளது பார்வை மாற்றங்கள் புரியாமல் இல்லை… இருந்தாலும் அவளாகப் பேசாமல் தான் எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என நினைத்து அமைதியாக இருந்தான். அவள் முகம் வாடியதைக் கண்டதும் அவன் அமைதியாகிவிட, அவள் அலைபேசியை எடுத்துப் பார்க்க அது அணைந்து கிடந்தது. அதனால் அழைக்காமல் அப்படியே விட்டாள்.
அவளிடம் வீட்டுக்கு செல்லும் வழியைக் கேட்டு வண்டியை வேகமாய் செலுத்தியவன், வீட்டு வாசலில் காரை நிறுத்தி இறங்கும்போது இரவு மணி பத்தைக் கடந்திருந்தது. சிந்துவின் வீட்டுக்கு முன்னால் கொஞ்சம் பேர் நின்று பேசிக் கொண்டிருக்க கார் வந்து நின்றதும் பேச்சை நிறுத்திவிட்டு அவர்களை கவனித்தனர்.
காரிலிருந்து இறங்கிய சிந்து தடுமாறி விழப் போக ஓடிவந்து அவளைத் தாங்கிக் கொண்டான் மதியழகன். கையிலும் காலிலும் கட்டுடன் அவள் சற்று நொண்டிக் கொண்டே நடப்பதைக் கண்ட பக்கத்து வீட்டு பத்மா மாமி, அவளிடம் வந்தார்.
“ஏண்டிம்மா…… இவ்ளோ நேரம் எங்கடி போயிருந்தே….. உன்னக் காணாம உன்னுட தோப்பனார் புலம்பிப் புலம்பி மூச்சுத் திணறல் அதிகமாகி டாக்டர் வந்து பார்த்த பின்னால தான் கொஞ்சம் சமாதானம் ஆனார்….. நீ என்னடான்னா இந்த நேரத்துல எதோ ஒரு ஆம்படையான் கூட கார்ல வந்து எறங்கறே….” என்று அடிக்கண்ணால் மதியழகனை எடை போட்டுக் கொண்டே பேசினார்.
“அச்சச்சோ….. என்ன சொல்லறேள் மாமி….. அப்பாக்கு முடியலையா…..” என்ற சிந்துஜா காலை நொண்டிக் கொண்டே வேகமாய் உள்ளே செல்ல அவளுக்குப் பின்னால் எதையோ பேசிக் கொண்டிருந்தனர் அங்கு நின்றிருந்த மாமிகள். அவர்கள் பேசுவது காதில் விழாவிட்டாலும் பேசுவது அவளைப் பற்றிதான் என்பது மதியழகனுக்குப் புரிந்தது. அவன் தயக்கத்துடன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.
சிறிய அந்த ஓட்டு வீட்டுக்குள் ஹாலில் இருந்த கட்டிலில் சோர்வாய்ப் படுத்திருந்தார் சிந்துஜாவின் தந்தை ஸ்ரீதரன். மகள் வந்துவிட்டாள் என்றதும் கண்கள் அவளைக் கேள்வியுடன் நோக்க,
“அப்பா….. உங்களுக்கு என்னாச்சுப்பா…..” என்றவள் அவர் அருகில் அமர்ந்து கண்கலங்க,
“நேக்கு ஒண்ணும் இல்லமா…. நீ இவ்ளோ நேரம் எங்கே போனே…. அச்சோ…. உன்னுடைய கையில் என்ன கட்டு…..” என்றார் பதட்டத்துடன்.
“ஆபீஸ் விட்டு வரச்ச வழியில் ஒரு ஆக்சிடண்ட் ஆயிடுத்து…. கார் இடிச்சிட்டுப் போனதில் கீழ விழுந்து கையிலயும் கால்லயும் அடி பட்டுடுத்து….. அந்த நேரத்துல சரியா எங்க GM அந்தப் பக்கம் கார்ல வந்தார்…. அவர்தான் ஹாஸ்பிடல் கூட்டிண்டு போயி ட்ரீட்மென்ட் எல்லாம் பண்ணார்….. அதான் லேட் ஆயிடுத்து… என்னை மன்னிச்சிடுங்கோ அப்பா……” என்றாள் வருத்தத்துடன் சிந்து.
“அச்சச்சோ…. என்னம்மா சொல்லறே…. அடி ஒண்ணும் பலமா இல்லியே….” என்றவர் அவளைப் பார்வையால் ஆராய்ந்துகொண்டிருக்க அருகில் இருந்த ஒரு மாமா அவளிடம் பேசினார்.
“ஏம்மா… உன் தோப்பனார்க்கு ஒரு போன் பண்ணி சொல்லிருக்கப் படாதா….. உன்னக் காணலேன்னதும் அவர்க்கு பயம் வந்திடுத்து…… உன் ஆபீஸ் நம்பர், மொபைல் நம்பர்லையும் யாரும் எடுக்கவே இல்லை….. இன்னும் கொஞ்ச நேரம் நீ வரத் தாமதம் ஆயிருந்தா போலீஸ்ல புகார் கொடுக்கலாம்னு இருந்தோம்…….” என்றார்.
அதைக் கேட்டு குற்றவுணர்ச்சியோடு தலை குனிந்து அவள் நிற்க, “சரிம்மா… நோக்கு இப்போ எப்படி இருக்கு…. காயம் ஒண்ணும் பலமா இல்லையே…. எதுவா இருந்தாலும் நேக்கு தெரியப்படுத்திடும்மா….. வயசுப் பொண்ணை வெளியே அனுப்பிண்டு நெருப்பைக் கட்டிண்டு இருக்காப் போலன்னா இருக்கு…… யாரையாவது துணைக்காவது அழைச்சிருக்கலாமே…… இந்த ராத்திரி நேரத்துல நீ எப்படி வந்தே….” என்றார் ஸ்ரீதரன்.
“என்னை சார் தான் கூட்டிண்டு வந்தார்…. அவர் வெளியே நிக்குறார்….”
      
“ஓ….. ஒன்னோட வந்திருக்காரா….. அவரை உள்ளே அழைச்சிண்டு வாம்மா….” என்றார்.
அவள் வெளியே நின்று கொண்டிருந்த மதியழகனை சென்று அழைக்க, உள்ளே நுழைந்தவனை வியப்புடன் நோக்கியவர், “அம்பி….. நீங்களா…. வாங்கோ…. வாங்கோ…….” என்றவர் மெதுவே எழுந்து கொள்ள முயற்சி செய்தார்.
“இல்ல….. சாமி…. நீங்க படுங்க…..” என்றவன்,
“என்னை உங்களுக்கு நினைவிருக்கா…..” என்றான்.
“அதென்ன அப்படிக் கேட்டுட்டேள்….. பேஷா நினைவிருக்கு……. மாசாமாசம் நம்ம கோவில்ல வந்து ஸ்பெஷல் பூஜ பண்ணிண்டு போவேளோன்னோ…… எப்படி மறப்பேன்…. ஷேமமா இருக்கேளா….. சிந்துமா…. அம்பிக்கு ஒரு சேரை எடுத்துப் போடு…..” என்றார்.
“இருக்கட்டும் சாமி…. உங்க பொண்ணுக்கு கைலயும் கால்லயும் அடி பட்டிருக்கு…. எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்துப் பார்த்திட்டு வர நேரம் ஆயிடுச்சு…. ஒண்ணும் பயப்படறதுக்கு இல்லை…. கொஞ்ச நாள் வீட்ல ரெஸ்ட் எடுக்கட்டும்…. அப்புறம் ஆபீஸ் வந்தாப் போதும்…. அப்ப நான் கிளம்பட்டுமா….” என்றான்.
“இருங்கோ….. எங்களுக்கு இவ்ளோ உபகாரம் பண்ணிருக்கேள்…… ஆத்துல சாப்பிட்டுப் போனேள்னா ரொம்ப சந்தோஷப்படுவோம்…… சிந்து எப்பவும் உங்களப் பத்தி தான் பெருமையா  பேசிண்டு  இருப்பா…… உங்களை நேக்கு முன்னமே தெரிஞ்சிருந்தாலும் அவ சொல்லறது உங்களைத்தான்னு இப்பன்னா தெரியறது…….” என்றார் சந்தோசத்துடன்.
“ஏன் மாமா…. இவ்ளோ நேரம் மூச்சு விட முடியாம கஷ்டப்பட்டிண்டு இருந்தேள்…. இப்ப உங்க பொண்ணைப் பார்த்ததும் எல்லாம் சரியாப் போகிடுத்தா……. சரி….. சிந்து… உன் தோப்பனாரைப் பார்த்துக்கோ….. நாங்க வரோம்…..” என்று பத்து மாமி கூறவும் எல்லாரும் சிரிக்க, அவர்கள் வீட்டுக்குக் கிளம்பினர்.
சிந்து ஓடிச்சென்று தண்ணியை எடுத்துக் கொண்டு வந்து நீட்ட, அதை வாங்கிக் குடித்தவன், அவருடன் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தான்.
அதற்குள் தோசை வார்த்து சட்னி இட்லிப் பொடியுடன் உணவைத் தயார் செய்துவிட்டாள் சிந்து.
ஆசையோடு அவனுக்காய் அவள் செய்த தோசையில் நெய்யோடு சேர்ந்து அவள் அன்பும் மணத்தது. சாப்பிட்டு முடித்து அவன் வீட்டுக்குக் கிளம்ப, அத்தனை நேரம் அவன் அருகில் இருந்ததில் தோன்றிய சொர்க்கம், அவனே திரும்ப எடுத்துச் சென்றது போலத் தோன்றியது அவளுக்கு.
————————————————————————————————————————————————————
அடுத்த நாள் காலையில் அலுவலகத்திற்கு வந்தவன் மேசை மீது இருந்த பைலில் இருந்த பேப்பர்களைப் பார்த்துக் கொண்டிருக்க அதில் இருந்து சில பேப்பர் நழுவிக் கீழே விழவே அதை எடுத்தான்.
அதில் சிந்து அவன் பெயரோடு சேர்த்து அவள் பெயரைக் கிறுக்கிக் கொண்டிருந்த பேப்பரும் இருந்தது. கீழே விழுந்த பேப்பர்களை ஒன்றாக எடுத்தவன் அப்போது அவனது அலைபேசி ஒலிக்கவே, அதை அங்கிருந்த டிரேயில் வைத்துவிட்டு அலைபேசியை எடுத்துப் பேசிக் கொண்டிருந்தான்.
நெஞ்சுக்குள் பொத்தி வச்சேன்…
நினைவுக்குள் உன்ன வச்சேன்…..
நெளிந்தோடும் மீனைப்போல
நிதம் என்னுள் ஓடுகிறாயே……
விண்ணை அலங்கரிக்கும்
விண்மீனாய் – என் நினைவை
அலங்கரிக்க வந்தவனே – நீ என்
வானில் உதித்த துருவ நட்சத்திரமோ….
கனவினிலும் நினைவினிலும்
கருவாக நிறைந்தவனே…..
கண்கள் உனை உரசுகையில்
கருத்தரிக்கிறேன் கற்பனையில்…..
உன்னோடு ஒரு நிமிடம்
உயிர் வாழ்ந்தால் அது போதும்….
உயிர் கொண்ட என் ஜீவன்
ஒளி பெற்று விளங்கிடுமே…..
கனவுகளின் நாயகனே……
நினைவுகளாய் நிறைந்தவனே……
என் வாழ்வில் நீ வந்து
எனை உன்னில் சேர்ப்பாயோ….

Advertisement