Advertisement

அத்தியாயம் – 9
அவசர அவசரமாய் அலுவலகத்திற்குள் நுழைந்தாள் சிந்துஜா. குங்கும நிற சல்வாரில் கருப்பு நிற துப்பட்டாவுடன் தளர்வாய் விரித்து விட்ட கூந்தல் காற்றில் பறக்க அதை ஒரு கையால் ஒதுக்கிக் கொண்டே  புகைப்படத்தைக் காட்டிலும் தேவதையாய் முன்னில் நின்று ஜொலித்தவளை எரித்து விடுவது போலப் பார்த்துக் கொண்டிருந்தாள் சௌமியா. 
“குட் மார்னிங்…..” என்று சிநேகமாய் சிரித்த சிந்துஜாவிடம் செயற்கையாய் ஒரு புன்னகையை சிந்திவிட்டு அவள் நீட்டிய அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை வாங்கி பர்மாலிடீசை முடித்தவள் அவளது கையொப்பத்திற்காய் ரெஜிஸ்டரை அவளிடம் நீட்டினாள்.
அதே மாறாத புன்னகையுடன் பேனாவைக் கையில் வாங்கிய சிந்துஜா ஒரு நிமிடம் கண்ணை மூடித் தியானித்து விட்டு கையெழுத்துப் போட்டாள்.
“அபர்ணா….. இவங்களுக்கு கேபினைக் காட்டிட்டு, அவுங்களோட வேலை என்னன்னு சொல்லிடு….. அப்படியே எல்லாருக்கும் அறிமுகப் படுத்திடு……” என்று அவளை அனுப்பி வைத்தாள். அபர்ணா சிந்துவிடம் சிநேகமாய்ப் பேசிக் கொண்டே செல்ல அதை ஒருவித எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சௌமியா.
“என்ன சேமியா….. சாரி சௌமியா…… காதுல புகையா போவுற மாதிரி இருக்கு……” புன்னகையுடன் கேட்டுக் கொண்டே அங்கு வந்தான் பரத்.
அவனை முறைத்தவள், “என்ன நக்கலா…..” என்றாள்.
“இல்ல….. அந்த அய்யங்காரு வீட்டு அழகை வச்ச கண் எடுக்காம பொறாமையா பார்த்த மாதிரி இருந்துச்சு….. அதான் கேட்டேன்……” என்றான் அவன் கிண்டலுடன்.
அவனை எரித்து விடுவது போலப் பார்த்தவள், “வேண்டாம் பரத்….. ஒழுங்கா போயிடு…..” என்றாள் முகம் சுருங்க.
“சரி… சரி…. என்னைப் பார்வையாலயே எரிச்சுடாத தாயே…… நானே போயிடறேன்…..” என்றவன் அங்கிருந்து நகர்ந்தான். பரத்தும் சௌமியாவும் ஒரே கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள்….. எனவே அவ்வப்போது அவர்களுக்குள் இப்படி வாரிக் கொள்வது சகஜமான ஒன்று.
சற்று நேரத்தில் மதியழகன் வந்துவிடவே பரபரப்புடன் வேலையைத் தொடங்கினர்.
“பரத்….. இயர் எண்டிங் வந்திருச்சு….. ஒர்க் எல்லாம் இன்னும் ரெண்டு நாளுக்குள்ள முடிச்சாகணும்….. பெண்டிங் ஒர்க்ஸ் எல்லாம் சௌமியாகிட்ட லிஸ்ட் எடுத்து வைக்க சொல்லி இருந்தேன்….. அவங்களை அதை எடுத்துட்டு வர சொல்லு…… நீ போயி பேமென்ட் கலக்சன் வொர்க்கை முடிச்சிடு……” என்றான் மதியழகன்.
“எஸ் பாஸ்……” என்ற பரத் சௌமியாவிடம் சென்று கூறிவிட்டு அவன் வெளியே கிளம்பினான்.
ஒரு பைலை எடுத்துக் கொண்ட சௌமியா, காலைக் கவ்விப் பிடித்த டைட் லெக்கினும், முன்னில் அபாயகரமான ஆழத்துடன் இறங்கியிருந்த டாப்சுடனும் மதியழகனின் அறையை நோக்கி ஹீல்ஸ் சப்திக்க ஸ்டைலாய் நடந்து சென்றாள்.
கதவைத் தட்டி பர்மிஷன் வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தாள். அவன் லாப்டாப்பில் தலையைக் கொடுத்து குனிந்து அமர்ந்திருக்க அவனது மேசையில் கையில் இருந்த பைலை வைத்துவிட்டு அவன் நிமிர்ந்து நோக்கும் வரை அவனையே ரசனையுடன் நோக்கிக் கொண்டிருந்தாள்.
“அப்புறம்….. சொல்லுங்க சௌமியா….. என்னெல்லாம் பெண்டிங் வொர்க் இருக்கு……” என்று அவன் கேட்டது தான் தாமதம்.
அந்த பைலைத் திறந்து அவன் அருகில் வந்து நின்றவள் மிகத் தீவிரமாய் முடிக்க வேண்டிய வேலைகளைப் பற்றி பட்டியல் இடத் தொடங்கினாள்.
தூக்கலான அவளது பாடி ஸ்ப்ரே மணம் அந்த அறையை நிறைக்க, வேண்டுமென்றே வளைந்து நெளிந்து குனிந்து அவன் முன்னில் பேசிக் கொண்டிருந்தாள். அவள் பேசுவதை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தான் மதியழகன்.
“வெரி குட் சௌமியா….. எல்லா லிஸ்டும் பக்காவா ரெடி பண்ணிருக்கீங்க…… நீங்க உங்க சைடு வொர்க் எல்லாம் சீக்கிரம் கிளியர் பண்ணிடுங்க….. அப்படியே அந்த புதுசா வந்திருக்குற பொண்ணைக் கொஞ்சம் வர சொல்லுங்க…..” என்றான்.
அதைக் கேட்டதும் உள்ளுக்குள் புகைய தலையாட்டிவிட்டு வெளியேறினாள் அவள்.
“சிந்து…… உங்கள GM வர சொன்னார்……” என்று தகவலை சொல்லிவிட்டு அவள் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள்.
தயக்கத்துடன் மதியழகனின் அறைக்குள் நுழைந்தாள் சிந்துஜா. ரோஜாப்பூவின் நிறத்தோடு மானின் விழிகளைப் போல சிறு அச்சத்துடன் அலைபாய்ந்து கொண்டிருந்தது அவளது விழிகள். அவளது பதட்டமான முகத்தைக் கண்டவனின் முகம் சிறு புன்னகையை சூடிக் கொண்டது.
“வாங்க….. சிந்துஜா….. ஆபீஸ்ல எல்லாரையும் அறிமுகம் பண்ணினாங்களா….”
“ம்ம்…….”
“உங்க வொர்க் என்னன்னு சொல்லிட்டாங்களா…..”
“ம்ம்………..” பலமாய்த் தலையாட்டியவளின் காதிலிருந்த ஜிமிக்கியும் சேர்ந்து  இடவலமாய் ஆடியது.
“சரி….  எதுக்கு இப்படி பதட்டமா இருக்கீங்க….. இங்க இருக்கவங்களும் உங்கள மாதிரி மனுஷங்க தான்….. சந்தோஷமா உங்க வேலையை செய்யலாம்…..” என்றவன் அவளை சகஜமாக்க நினைத்து, “உங்க அப்பா என்ன பண்ணுறார்….. வீட்டுல யாரெல்லாம் இருக்கா….. நீங்க படிச்சு முடிச்சு ரெண்டு வருஷமா எங்கயும் வேலைக்கு முயற்சி பண்ணலையா…..” என்று கேள்விகளாய் கேட்டான்.
“எங்க ஆத்துல நானும் தோப்பனாரும் மட்டும் தான்…. அவர் மைலாப்பூர்ல ஆத்துக்குப் பக்கத்துல இருக்க பிள்ளையார் கோவில்ல அர்ச்சகரா இருக்கார்….. அவருக்கும் அப்பப்போ இப்போ முடியாமப் போயிடறது…… மருந்து செலவும் ஜாஸ்தியாகிடுத்து….. அதான்…. இவ்ளோ நாளா சும்மா இருந்த நான் இப்ப வேலைக்குப் போகலாம்னு முயற்சி செய்தேன்……”
“எனக்கு அதிகம் வெளி மனுஷாளோட பழக்கம் கிடையாது….. காலேஜ் முடிஞ்சதும் வீட்டுல தான் இருந்தேன்….. புதுசா இப்ப வேலைக்குன்னு வெளிய வந்ததும் கொஞ்சம் டென்ஷனா இருக்கு…..” அவன் சாதாரணமாய் பேசத் தொடங்கியதும் அவளும் பதட்டமில்லாமல் பேசத் தொடங்கினாள்.
“ம்ம்… நீங்க எந்தப் பதட்டமும் இல்லாம சுதந்திரமா இங்க வொர்க் பண்ணலாம்….. இங்க எல்லாரும் ரொம்ப பிரண்ட்லியா பழகுவாங்க……” என்றவன்,
“சரி….. உங்களுக்கான முதல் வொர்க்…… நான் சொல்லுற விஷயத்தை டிராப்ட் பண்ணி எடுத்திட்டு வாங்க……. சரியா இருந்தா லெட்டர்ஹெட்ல பிரின்ட் எடுத்து என் சைன் வாங்கி நான் சொல்லுற மெயில் ஐடிக்கு ஸ்கேன் பண்ணி அனுப்பிடுங்க……” என்றான்.
“எஸ்…. சார்…..” என்றவள் அவன் சொன்ன விஷயங்களைக் குறிப்பெடுத்துக் கொண்டாள். எத்தனையோ நாள் பழகியது போல இருந்த அவனது பேச்சு அவளுக்கு மிகவும் ஆறுதலாய் இருந்தது.
அய்யர் வீட்டுப் பெண்ணான அவளை மிகவும் கட்டுப்பாடோடு வளர்த்து இருந்தனர். ஒரே துணையான அப்பாவின் கோவில் வருமானம் மட்டுமே அவர்களை இத்தனை நாள் காப்பாற்றி வந்தது. இப்போது அவருக்கும் ஆஸ்துமா தொந்தரவு அதிகமாகவே சரியாக கோவிலுக்கும் செல்ல முடியாமல் மருத்துவ செலவிற்கும் கஷ்டப்படத் தொடங்கினர்.
கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்த சிந்துஜாவுக்கு அவர்கள் வீடே உலகம்…. அதிகம் யாரோடும் பேசவும் மாட்டாள்…. அவளுக்கும் வேலைக்கு செல்லத் தயக்கமாகவே இருந்தது…. தந்தைக்கு வேண்டி யோசித்தவள் வேலைக்கு போவதாக சொல்லவே, விருப்பமில்லா விட்டாலும் வேறு வழியில்லாமல் மகளை அனுப்ப சம்மதித்தார் அவள் தந்தை.
நாட்கள் அதன் பாட்டில் செல்ல சிந்துஜா அங்கு சேர்ந்து ஒரு மாதம் முடிந்திருந்தது. சற்று உரக்கப் பேசினால் கூட பயப்படும் அவளிடம் மதியழகன், மிகவும் பொறுமையாக ஒவ்வொரு வேலைகளையும் சொல்லிக் கொடுத்தான்.
எதற்கெடுத்தாலும் அவனிடமே சென்று சந்தேகம் கேட்கும் அவள் மீது கோபமாய் வந்தது சௌமியாவிற்கு.
அன்றும் ஏதோ கொட்டேஷன் தயார் பண்ணும்போது சிந்துஜாவிற்கு சந்தேகம் வர எழுந்து மதியழகனின் அறையை நோக்கி சென்றவளைத் தடுத்தாள் சௌமியா.
“என்ன சிந்து….. சாரைப் பார்க்கணுமா….. அவர் கொஞ்சம் பிசியா இருக்கார்…… யாரையும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு சொன்னாரே……”
“அச்சச்சோ…… நேக்கு இந்த கொட்டேஷன் கால்குலேஷன்ல ஒரு டவுட் இருக்கே….. அவர்கிட்ட கேட்டு சரி பண்ணினா தானே இதை முடிக்க முடியும்….” என்றாள் சிந்து.
“அப்படியா…… என்ன டவுட்…… எங்கிட்ட கேளு…. நான் சொல்லித்தரேன்….” என்றவள் அவளிடம் வேண்டுமென்றே தப்பும் தவறுதலுமாய் சொல்லிக் கொடுத்தாள். 
சற்று நேரத்தில் அவள் சொல்லிக் கொடுத்தது போல கொட்டேஷனை தயார் செய்து எடுத்துக் கொண்டு மதியழகனிடம் கையெழுத்து வாங்குவதற்காய் சென்ற சிந்துவைக் கண்டு வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டாள் சௌமியா.
“என்ன சௌமி…… உன் முகத்துல சந்தோசம் தாண்டவமாடுது…… சிந்துவுக்கு எதுவும் ஆப்பு ரெடி பண்ணிட்டியா…..” என்றாள் அபர்ணா.
“ம்ம்….. ஒரு கணக்கை மாத்திப் போட வச்சு கொட்டேஷன் எடுக்க வச்சிருக்கேன்…. இன்னைக்கு இவ மாட்டினா…..” என்றாள் சிரிப்புடன்.
பிசியாய் எதோ மெயிலைப் பார்த்துக் கொண்டிருந்தவன், “என்ன சிந்து… நான் சொன்ன மாதிரி கொட்டேஷன் ரெடி பண்ணிட்டிங்களா…..” என்றான்.
“பண்ணிட்டேன் சார்…..” என்றவள் அதை அவனது மேசையின் மீது வைத்தாள். 
முதலில் சாதாரணமாய்ப் பார்த்தவனின் பார்வை மெதுவாய் மாற, “பரத்…..” என்று கோபமாய் கத்தினான்.
வெளியே இருந்த பரத் வேகமாய் உள்ளே செல்ல, உள்ளே நின்று கொண்டிருந்த சிந்துஜா அவனது கத்தலைக் கண்டு பயந்து கோழிக்குஞ்சாய் நடுங்கிக் கொண்டிருந்தாள்.
“இந்தக் கொட்டேஷனைப் பாரு……. இப்படிக் கோட் பண்ணினா யார் ஆர்டர் கொடுப்பா….. நான் இப்படி தான் ரெடி பண்ண சொன்னேனா……” என்றவன் அதை சிந்துஜாவிடம் சொல்லாமல் பரத்திடம் கூறி, கிழித்துப் போட அதைப் பார்த்த சிந்துவிற்கு கண்ணில் கண்ணீரே வந்துவிட்டது.
அவளைப் பரிதாபமாய்ப் பார்த்த பரத், “என்னாச்சு சிந்து….. ஏன் இப்படித் தப்பா எடுத்திருக்கீங்க…..” என்றான் மெதுவாக.
“ச… சாரி சார்…. நேக்கு ஒரு டவுட்னு சார்கிட்டே கேட்கத்தான் வந்தேன்….. அப்ப சௌமி மேடம் தான் இப்படி பண்ண சொல்லி சொன்னாங்க…… நானும் அதே போல பண்ணிண்டு வந்துட்டேன்……” என்றாள் அவள் கண்ணில் நீர் வழிய.
“வ்வாட்……. சௌமி இப்படி பண்ண சொன்னாங்களா….. உங்களை எந்த சந்தேகம் வந்தாலும் நான் என்கிட்டே தானே கேட்க சொன்னேன்….. அப்புறம் எதுக்கு அவங்களைக் கேட்டிங்க…..” என்றவன், சௌமியாவை அழைத்து விசாரிக்க அவளோ, “நான் இப்படி சொல்லவே இல்லை….. வேறு மாதிரி தான் சொன்னேன்…..” என்று விட்டாள்.
சிந்துவிற்கு இந்த நிகழ்வுகள் எல்லாம் புதிது….. சௌமியாவின் கள்ளத்தனம் அவளுக்குப் புரியவில்லை….. அவள் சொன்னதை தான் தான் தப்பாகப் போட்டுவிட்டோமோ என்று இப்போதும் நினைத்துக் கொண்டிருந்தாள்.
“ச… சாரி சார்…. என்ன மன்னிச்சிடுங்கோ….. இனி நான் கவனமா கேட்டுப் பண்ணிடறேன்….” என்றாள் கண்ணீருடன்.
அதைக் கண்டதும் அவனது மனம் வருந்த கோபத்தை அடக்கிக் கொண்டவன், “சரி… இனி எந்த சந்தேகமா இருந்தாலும் என்கிட்டே கேளுங்க…. அப்படி நான் பிசியா இருந்தா இன்டர்காம்ல கேளுங்க….. ஓகே வா….. இதை சரி பண்ணி மாத்தி எடுத்திட்டு வாங்க….” என்றான்.
“சார்…..” என்று அவள் மீண்டும் அங்கேயே நிற்க, “இப்போது என்ன……” என்பது போலப் பார்த்தான்…
“இதுல நேக்கு ஒரு சந்தேகம்…..” என்று அவள் கேட்கத் தொடங்க அவன் முகம் புன்னகையை சூடிக் கொண்டது. அந்தப் புன்னகை அத்தனை நேரம் அவள் மனதை வருத்திக் கொண்டிருந்த வேதனைகளைத் துடைக்கும் மருந்தாக இருந்ததை அதிசயமாய் உணர்ந்தாள் அவள். அவன் அருகாமை எங்கும் கிடைக்காத ஒரு நிம்மதியை அவள் மனதுக்குத் தருவது போலத் தோன்றியது. 
அதற்குப் பிறகு எந்த சந்தேகம் வந்தாலும் அவள் மதியழகனிடம் ஓடுவதும் அவனது அறையில் இருந்து வெளியே வரும்போது அவள் முகத்தில் தெரியும் பிரகாசமும் எல்லாம் காணும் போது சௌமிக்கு மனது எரிந்தது. சௌமியோடு எப்போதும் எட்டி நின்றே பேசும் மதியழகன் சிந்துஜாவிடம் சிரித்துக் கொண்டே பேசுவதைக் கண்களில் பொறாமையுடன் நோக்கிக் கொண்டிருந்தாள் அவள்.
நாட்கள் அதன் பாட்டில் நகர்ந்து கொண்டிருக்க சௌமிக்கு சிந்துஜாவின் மீதுள்ள கடுப்பும் பொறாமையும் கூடிக் கொண்டே வந்தது.
மதியின் அருகாமையில் மெல்ல மெல்ல அவள் மனதைத் தொலைத்துக் கொண்டிருந்தாள் சிந்துஜா. நினைவிலும் கனவிலும் நித்தமும் அவன் நினைவே அவளைத் தொடர மகளின் வித்தியாசமான செயல்களை வியப்புடன் நோக்கிக் கொண்டிருந்தார் அவளது தந்தை.
அவளது மனதில் உள்ளதை மதியிடம் சொல்ல முடியாமல் துடித்துக் கொண்டிருந்தாள். சாதாரண ஒரு ஏழை பிராமணர் பெண்ணுக்கு மதியைப் போல பதவியும் பணமும் உள்ள ஆணிடம் தோன்றும் அன்பு எந்த விதத்தில் சரியாகும் எனத் தயக்கம் இருந்தாலும் அவள் மனது அவனைத் தேடுவதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
அவனே அவளிடம் வந்து காதல் சொல்லி பூச்செண்டு நீட்டுவது போல இரவில் கண்ட கனவு வேறு அவள் மனதில் ஆசையை இன்னும் தூண்ட, அவன் காணாத போது கண்டு கண்ணிலும் நெஞ்சிலும் நிறைத்துக் கொண்டிருந்தாள்.
காலையில் உற்சாகத்தோடு அலுவலகத்திற்கு வந்தவள் மனது மதியழகனைக் காண்பதற்காய் துடித்துக் கொண்டிருக்க அவன் ஏனோ அன்று அலுவலகத்திற்கு வரவே இல்லை. நொடிக்கொரு முறை தானாகவே வாசலை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கண்கள் கலங்கியது.

Advertisement