Advertisement

“இல்ல அத்த….. அத்தான் இப்படிக் குடிச்சிட்டு சீரழிஞ்சு போறதுக்கும் அதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா….. எதுவா இருந்தாலும் சொல்லுங்க…. அப்பதானே அவரை நாம மாத்தி மாமாவோட பேச வைக்க முடியும்…..” என்றாள் அவள்.
“ம்ம்… நான் செய்யாத முயற்சியா….. ரெண்டு வருஷம் ஆச்சு…. இப்பவும் மதிக்கு அவுக மேல உள்ள கோபம் கொறையாம தான கெடக்கு…..”
“என்னதேன் நடந்துச்சுன்னு சொல்லுங்க அத்த….. என்னால முடியுமான்னு நானும் முயற்சி செய்து பாக்குதேன்…. அத்தான் குடிக்காம இருந்தா எம்புட்டு நல்லாருக்கும்….” என்றவளின் கண்ணில் தெரிந்த ஆர்வத்தைக் கண்ட லச்சுமி,
“கயலு…. ஒன்ன என் குடிகாரப் பையனுக்கு கண்ணாலம் பண்ணி வச்சுட்டன்னு எம்மேல கோவமா வருதா தாயி…..” என்றவர் அவள் தலையை ஆதரவுடன் தடவிக் கொடுக்க, அவள் அவசரமாய் தலையாட்டி மறுத்தாள்.
“அ… அதெல்லாம்… இல்ல அத்த….. நானும் அப்பாவும் பணத்தைக் கேட்டு வந்தப்ப, அதுக்கு இதுன்னு மாமா பேசுறாகளேன்னு வெசனமா இருந்துச்சு….. எனக்கு குடிக்குறவகளக் கண்டாலே கோபம் வரும்…. அதுனால அப்ப நான் உங்க மனசு நோகப் பேசிட்டேன்…. அதும் இல்லாம குடிச்சிட்டு சுத்திட்டு இருந்தாலும் அவுககிட்டே சம்மதம் வாங்காம என்னோட கண்ணாலம்னு பேசுனது எனக்கு வருத்தமா இருந்துச்சு…..” என்று நிறுத்தியவள்,
“அதும் இல்லாம சின்ன வயசுல இருந்து எம்மேல அன்பா இருக்குற நீங்க உங்க பிள்ளைன்னு வந்ததும் என்னப்பத்தி யோசிக்காம கண்ணாலம் பண்ணக் கேக்குறீகளேன்னு கோபம் வந்தது உண்மைதான்…… பொறவு நீங்க சொன்னதை யோசிச்சுப் பார்த்தேன்…. அத்தான் இப்பதானே இப்படிக் குடிச்சிட்டு இருக்காக…. சரி பண்ணிட முடியும்னு தோணுச்சு…… அந்த நம்பிக்கைல நானும் சம்மதிச்சேன்….. கண்ணாலத்துக்குப் பின்னால அத்தான் எப்படி நடந்துக்குவாகளோன்னு ஒரு பயம் இருந்துச்சு….. ஆனா நான் நினைச்ச மாதிரி அத்தான் இல்ல….” என்றவளின் முகம் மென்மையைக் காட்ட, 
“அத்தான் அவரை வருத்திக்கவும், மாமாவுக்கு வருத்தம் வரணும்னும் தான் நினைக்குறாகளே ஒழிய மத்த யாரையும் கஷ்டப் படுத்தலை….. இந்த மூணு நாள்ல அதை நான் நல்லா புரிஞ்சுகிட்டேன்…. அவர் மனசுக்குள்ளே மாமா மேல ஏதோ ஆறாத கோபம் இருக்குன்னு தோணுச்சு…. ஒங்ககிட்ட கேட்டு அதைச் சரி பண்ணலாம்னுதேன் இப்பக் கேக்குதேன்…. மத்தபடி எனக்கு ஒங்க மேல எந்த கோபமும் இல்ல அத்த….” என்று மனதில் உள்ளது முழுதும் பேசி முடித்தாள்.
“எங்கண்ணு…. வந்த மூணு நாள்ல இந்தக் குடும்பத்தைப் பத்தி நல்லா புரிஞ்சுகிட்ட கயலு…. இதுக்குதேன் உன்னக் கண்ணாலம் கட்டி வைக்கணும்னு நானும் நினைச்சேன்…. மதி எப்பவும் மத்தவங்க மனசை நோகடிக்கனும்னு நெனைக்க மாட்டான்….. அவனால மத்தவங்களுக்கு ஒரு வருத்தம் வரக் கூடாதுன்னு நெனைக்கறவன்…..”
“அந்த குணமே அவன் மனசை மாத்தி உன்னோட வாழ வைக்கும்னுதேன் நம்பிக்கையோட உன்னக் கட்டி வச்சேன்…. ஒரு அம்மாவா நான் வேற என்ன பண்ணமுடியும் தாயி…. அவன் வாழ்க்கையை இப்படியே தொலைச்சுப் போடுவானோன்னு எனக்கும் பயம் இருந்துச்சு… இந்த அத்தய நீனு தப்பா நினைக்கலயே….. அதுவே எனக்கு சந்தோஷமா இருக்கு…..” என்றவர் கலங்கியிருந்த கண்ணைத் துடைத்துக் கொண்டார்.
“அத்த… உங்க புள்ளைக்கு அம்மாவா நீங்க செய்தது சரிதேன்….. அதைப் பத்தி யோசிச்சு வருத்தப்படாம அத்தானுக்கும் மாமாவுக்கும் என்ன பிரச்சனன்னு சொல்லுங்கத்தே….” என்றாள் மீண்டும்.
“ம்ம்… நீ இம்புட்டு கேக்குத….. அதனால சொல்லுதேன்….” என்றவர் சொல்லத் தொடங்கினார்.
“இங்க பத்தாப்பு படிச்சு முடிச்சு மேல படிக்க சென்னைக்குப் போனவன் அங்கனயே ஹாஸ்டல்ல தங்கி MBA வரைக்கும் படிச்சு முடிச்சான்….. என்னவோ அவனுக்கு நம்ம ஊருக்கு வரதுக்கு கூட நேரம் இல்லன்னு சொல்லிடுவான்….. நாங்கதேன் அவனப் போயி பாத்திட்டு வருவோம்…… எப்பவாவது வந்தாலும் ஒடனே கெளம்பிடுவான்….. டவுனுல வளந்த புள்ள…. அவனுக்கு இங்க இருக்கப் பிடிக்கலியோ…. என்னவோ……”
லச்சுமி சொல்லிக் கொண்டிருக்க கயல் இறுதியாய் பத்தாம் வகுப்பு படிக்கும்போது பார்த்த மதியழகன், அவள் கண்ணுக்குள் மின்னி மறைந்தான்.
“மதி, MBA படிச்சு முடிச்சு சென்னைலயே ஒரு பெரிய கம்பெனில மேனேஜரா வேலைக்கு சேர்ந்தான்…… அப்ப எம்புள்ளையப் பாக்க எப்புடி இருப்பான் தெரியுமா…… எப்பவும் முகத்துல ஒரு நிதானமான புன்னகை……. கம்பீரமா அவன் நடந்து வரும்போது தெருவுல நிக்குற கொமரிங்க எல்லாம் அவன ரசிச்சு வேடிக்க பாப்பாக….. அம்புட்டு அழகா ராசாவாட்டமா இருப்பான்……..” அவரது கண்கள் மகனை பழைய கோலத்தில் ரசிக்க நினைவுகள் பின்னோக்கி நகரத் தொடங்கின.
உதட்டில் உறைந்த சிறு புன்னகையும், கண்ணை மறைக்கும் அழகான கூலருமாய் கால் ஷூ சப்திக்க கம்பீரமாய் அலுவலகத்துக்குள் நுழைந்த மதியழகனைக் கண்டதும் ஊழியர்கள் எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்க சிறு தலையாட்டலுடன் அதை ஏற்றுக் கொண்டே அவனது அறைக்குள் நுழைந்தான் மதியழகன். உள்ளே வந்ததும் கூலரைக் கழற்றி பாக்கெட்டில் வைத்துவிட்டு அமர்ந்தவனின் முன்னால் வந்து நின்றான் அவனது உதவியாளர் பரத்.
“என்ன பரத்…… நம்ம பேப்பர்ல கொடுத்த விளம்பரத்துக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு……”
“நிறைய பேர் வந்து வெயிட் பண்ணிட்டு இருக்காங்க சார்…. இன்னும் கால்ஸ் வந்திட்டு இருக்கு….. பதினொரு மணியில் இருந்து இண்டர்வியூ ஸ்டார்ட் பண்ணிடலாம் சார்……”
“ஓ….. சரி….. இது வரைக்கும் கலெக்ட் பண்ண பயோ-டேட்டா எல்லாம் குடு….. பார்த்துட்டு இருக்கேன்……”
“இதோ சார்…..” என்றவன் கையில் இருந்த பைலை மேசையின் மீது வைத்தான். அவன் எப்போதுமே அப்படித்தான். மதியழகன் சொல்லுவதற்கு முன்னமாகவே அவன் கேட்கப் போகும் விஷயங்களைப் புரிந்து கொண்டு தயார் செய்து வைத்து விடுவான். அதனாலேயே அவனை மதிக்கு மிகவும் பிடிக்கும்.
“சரி…. நீ போயி அந்த ஹாலை ரெடி பண்ணிடு……” என்றதும் அவன் அங்கிருந்து வெளியேறினான்.
பரத் கொடுத்த பைலில் இருந்த விண்ணப்பங்களில் பார்வையை ஓட்டியவனின் முன்னில் இருந்த பெயர்ப்பலகை, மதியழகன் – MBA ஜெனரல் மேனேஜர், என்ற தங்க நிற எழுத்துக்களைத் தாங்கிக் கொண்டிருந்தது.
சற்று நேரத்திற்குப் பிறகு நிமிர்ந்தவனின் முன்னில் இருந்த கடிகாரம் மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருப்பதை சொல்ல அந்த பைலை எடுத்துக் கொண்டு இண்டவியூ நடக்கும் அறையை நோக்கி நடந்தான். கம்பீரமாய் அவன் செல்வதையே அடிக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த சௌமியாவின் விலாவில் இடித்தாள் அபர்ணா.
“ஏய்…. போதும்டி….. விட்டா பார்வைலயே அவரைக் கற்பழிச்சிருவே போலிருக்கு……”
“அடப் போடி…… நானும் அவர் முன்னாடி விதவிதமா மேனகை போல வேஷம் போட்டுப் பார்த்துட்டேன்….. எங்கே…. விஸ்வாமித்திரரையே இவரு தோற்கடிச்சிடுவார் போலிருக்கு……. எதையுமே கண்டுக்காம எப்படிதான் இவரால இருக்க முடியுதோ….. நான், திரும்பிப் பார்க்க மாட்டேனான்னு ஒவ்வொருத்தனும் எவ்ளோ அலையறான்…… ஆனா நான் இவரோட ஒரு பார்வைக்காகக் காத்திருக்கேன்….. மனுஷன் மசியுவேனாங்கிறான்……”
“ம்ம்…. அதுக்கெல்லாம் ஒரு ராசி வேணும்….. யாருக்குக் குடுத்து வச்சிருக்கோ…..” என்று ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றினாள் அபர்ணா.
“ஏய்….. இங்க பாருடி…… என்ன இருந்தாலும் நான் இங்க சீனியர்…… அதை மனசுல வச்சுக்கோ…… நீ பாட்டுக்கு அவருக்கு ரூட் போட்டுடாதே…….” என்றாள் சௌமியா.
“ம்ம்…. என்னை விட அழகுலயும் நெறத்துலயும், மத்த எல்லாத்துலயும் தூக்கலா இருக்குற உனக்கே அவர் மசிய மாட்டேங்கிறாரு…… நானெல்லாம் எம்மாத்திரம்……” என்றாள் அவள் வருத்தத்துடன்.
“ம்ம்…. அது சரிதான்…… எப்படியாவது அவரை நான் என் கைக்குள்ள கொண்டு வரேனா இல்லியான்னு பாரு…… சரி… நாம அந்த புரோஜக்டை முடிச்சு வைப்போம்…. இல்லன்னா அந்த முசுடு பரத் வந்து கத்தும்…..” என்றவள் வேலையை கவனிக்கத் தொடங்கினாள்.
சற்று நேரத்திற்குப் பிறகு அபர்ணாவிடம் வந்தான் பரத்.
“அபர்ணா….. இந்த ரெண்டு பேருக்கும் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் அடிச்சுக் குடு……” என்று இரண்டு விண்ணப்பங்களை நீட்டினான். அதில் சிந்துஜா என்றிருந்த விண்ணப்பத்தில் அழகான பெண்ணின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்க அடுத்து இருந்த சௌமியாவை அழைத்தாள்.
“ஏய்…. சௌமி….. இங்க பார்த்தியா….. உனக்குப் போட்டியா உன்னை விட அழகான ஒருத்தி வந்துட்டா…..” என்றாள் அவளிடம் விண்ணப்பத்தைக் காட்டி. அதை வாங்கிப் பார்த்தவளின் முகத்தில் பொறாமை தாண்டவமாடியது.
“சிந்துஜா…..” பேரைப் போலவே புகைப்படத்தில் மிக அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள். அவளை ஸ்டெனோ போஸ்ட்டுக்கு தேர்வு செய்திருப்பதாய் அதில் இருந்த மதியழகனின் கையெழுத்து கூறியது.
உன் விழியில் எனக்கு
விலங்கிட்டாயே….
உன் இதயத்தில் எனை
சிறை வைத்தாயா….
உன் விழிகள் எனைத்
தேடி அலைந்தபோதே
நான் வென்று விட்டேன் உன்னை….
பறிச்சு வச்ச மருதாணி – எனை
சிவக்க வைக்க நினைக்கலயா….
தொடுத்து வச்ச பூமாலை – எனை
சூடிக் கொள்ள மறுக்கறியா…..
கண்ணுக்குள்ள நீ இருந்தும்
கரை சேராம தவிக்கிறேனே…..
வலது கால எடுத்து வச்சு நான்
வாக்கப்பட்டு வந்த பின்னும்
ரெண்டு மனம் உனக்கெதுக்கு…..
என் விரல் பிடித்து நீ போட்ட
மெட்டிசத்தம் – உன் காதில்
ரகசியம் தான் பேசலையா…..
என் நெஞ்சோடு உரசி நிக்கும்
மஞ்சத்தாலி என் மனசோடு
மல்லுக்கட்டிப் பார்க்குதையா….
மாமன் உனைப் பார்த்துப்புட்டா
மனசெல்லாம் ரயிலாகுதையா….
சத்தமின்றி நெஞ்சுக்குள்ள
சடுகுடுதான் ஆடுதய்யா……

Advertisement