Advertisement

அத்தியாயம் – 8
“அத்தான்….. இந்நேரத்துல எங்க கெளம்பிட்டிய…..” இரவு உணவு முடிந்து பாலை எடுத்துக் கொண்டு அறைக்கு வந்த கயல்விழி, ராத்திரி பத்து மணிக்கு பேண்ட் ஷர்ட்டுடன் புறப்பட்டு நின்றிருந்த மதியழகனிடம் கேட்டாள்.
பதில் பேசாமல் சட்டையின் பட்டனைப் போட்டுக் கொண்டிருந்தவனை மீண்டும் கேட்டாள்.
“என்ன அத்தான்…. பதில் பேச மாட்டியளா…. எங்க போறீகன்னு எங்கிட்ட சொல்லக் கூடாதா…..” என்றாள் அவள்.
அவளை திரும்பிப் பார்த்தவன், “நான் எங்க போவுதேன்…. என்ன பண்ணுதேன்னு எல்லாம் ஒங்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது….. அதெல்லாம் நீனு எதிர்பார்க்கவும் செய்யாதன்னு முதல்லயே சொல்லிட்டேன்…… உம்ம வீட்டுல நான் நடந்துகிட்டதை வச்சு ஒன்னப் பொஞ்சாதியா ஏத்துகிட்டதா அர்த்தம் இல்ல…… அவுக மனசு வெசனப் படக் கூடாதுன்னுதேன் அம்மா சொன்ன போல நடந்துகிட்டேன்….. அதுக்கு மேல எதையும் எதிர்பார்க்காத…” என்றான்.
“அதுக்கில்ல அத்தான்…. நீங்க எதுக்கு வெளிய போறியன்னு எனக்குத் தெரியும்……. ஆனா…..” என்று இழுத்தாள் அவள்.
“அதான் உனக்குத் தெரியும்ல….. பின்ன எதுக்குலே கேக்குறவ….” என்றான் அவன் கடுப்புடன்.
“இல்ல….. அது வந்து…. நேத்தே எல்லாம் மாத்தறதுக்குள்ள கொஞ்சம் கஷ்டமாப் போயிருச்சு…… அதேன்… வெளிய போயி பண்ணப் போறத இங்கனயே பண்ணக் கூடாதான்னு கேக்கேன்……” என்று அவள் இழுக்க, அவளைப் புரியாமல் பார்த்தான் அவன்.
“என்னலே சொல்லுதே….. எது மாத்துறதப் பத்தி சொல்லுதே…. எனக்கு ஒண்ணும் வெளங்கல…..”
“நேத்து நீங்க தண்ணி அடிச்சிட்டு வேஷ்டி சட்டை எல்லாம் சேறாக்கிட்டு வந்தியளா….. நாந்தேன் டிரஸ் எல்லாம் சகதியா இருக்கேன்னு மாத்தி விட்டேன்…..” என்றவளை நோக்கி திருதிருவென்று விழித்தான் அவன்.
“இவளா நேற்று என் உடையை மாற்றி விட்டாள்….. அய்யய்யோ…. இது என்ன புது சங்கடம்…..” அவனது முகம் யோசனையாய் சுளிந்தது.
“அப்ப நேத்து எனக்கு நீயா டிரஸ் மாத்திவுட்ட….. எப்பவும் அம்மா தான எல்லாம் பண்ணுவாக…..” என்றான் வாய்க்குள்ளேயே.
“ம்ம்… கண்ணாலத்துக்கு முன்னால அத்த பண்ணி விட்டாக சரி…….. இப்ப கண்ணாலம் முடிஞ்சு உங்களுக்கு பொஞ்சாதி வந்த பொறவும் அவுகளே பண்ணி விடுவாகளா…. நாந்தான உங்களப் பாத்துக்கணும்….” என்றவளிடம் என்ன சொல்லுவதென்று தெரியாமல் அவஸ்தையோடு பார்த்தான் அவன்.
“அத்தான்….. நான் உங்கள குடிக்க வேண்டாம்னு சொல்லல…. அதுக்கான உரிமைய நீங்க எனக்கு குடுக்கவும் இல்ல…. ஆனா வெளில போயிக் குடிச்சு எங்கனயாவது விழுந்து கெடக்காம இங்கயே குடிக்கலாமேனுதான் கேக்குதேன்….” என்றவளின் முகத்தில் இருந்த வேதனை அவன் மனதை வருத்தியது.
ஒன்றும் சொல்லாமல் அறையில் இருந்து வெளியேறியவனை வேதனையுடன் தொடர்ந்தது அவளது கண்கள். சிறிது நேரத்தில் ஒரு கவருடன் திரும்பி வந்தான் மதியழகன்.
அவனைத் திகைப்புடன் பார்த்தவளிடம், “எனக்காக ஒண்ணும் யாரும் கஷ்டப்படவேண்டாம்….. நான் எங்கயும் போவல…. நீ போயி படுத்துத் தூங்குலே…..” என்றவன் அறையை ஒட்டி இருந்த உடை மாற்றும் அறைக்கு சென்றான்.
அவனது வார்த்தைகளே அவள் காதில் மீண்டும் ஒலிக்க, அவளது முகம் தாமரையாய் மலர்ந்தது. என் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கும் என் அத்தான் என் வாழ்க்கைக்கும் மதிப்பு கொடுக்கும் நாள் வரும்…. என்று எண்ணிக் கொண்டவள், சந்தோஷத்துடன் அவன் சென்ற அறைக்கு சென்று எட்டிப் பார்த்தாள்.
மதுக்குப்பியை கவருக்குள் இருந்து எடுத்தவன், அவளைக் கண்டதும் சிடுசிடுத்தான்.
“என்னலே….. உன்னப் போயி படுக்க சொன்னன்ல…..” அதட்டலாய் வந்தது அவனது குரல்.
“வ… வந்து… உங்களுக்கு இது கூட சாப்பிட எதுனா கொண்டு வரணுமானு கேக்கதேன் வந்தேன்…..” என்றாள் திணறிக் கொண்டே.
“ஓ…… உனக்கு அம்புட்டு வெசயம் தெரியுமோ…. எனக்குக் சாப்பிட ஏதும் வேணாம்….. தண்ணி அடிக்கதேன் கூடத் தொணைக்கு ஆளில்ல…. நீ வேணும்னா ஒரு பெக் போடுதியா….. இல்ல… உம்மாமன தொணைக்கு வர சொல்லுதியா…. ” என்றான் கிண்டலுடன்.
“அச்சோ….. என்ன அத்தான்….. இப்படிப் பேசுதிய…… ச்சீ…..” என்றவள் முகத்தை சுளித்துக் கொண்டு சென்று கட்டிலில் வந்து அமர்ந்தாள்.
“இந்த அத்தானுக்கு ரொம்பத்தேன் கொழுப்பு….. விட்டா என்னயும் சேத்துக் குடிகாரி ஆக்கிப் புடுவாரு……” என்று மனதுக்குள் அவனை வைதவள்,
“இவுக ஏன் இப்படி ஆயிட்டாக…. மாமாக்கும் அத்தானுக்கும் அப்படி என்னதேன் பிரச்சன….. இதத் தெரிஞ்சுக்கணுமே……” என நினைத்துக் கொண்டே ஒரு பெருமூச்சை வெளியேற்றி விட்டு கட்டிலில் சாய்ந்தாள்.
“உறக்கம் தான் வருவேனா…..” என்று அவளை ஏதேதோ நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது. வெகு நேரம் உறங்காமல் புரண்டு கொண்டே படுத்திருந்தவள் மெதுவாய் உறங்கிப் போனாள்.
காலையில் எழுந்தவள் மதியழகனை அறையில் காணாமல் தேடிக்கொண்டு அந்த சின்ன அறைக்கு செல்ல அங்கே காற்றில்லாத அறையில் வியர்த்து வழிய, காலைக் குறுக்கிக் கொண்டு சுவரில் சாய்ந்து அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் அவன்.
அதைக் கண்டதும் மனது வருந்த மெல்ல எழுப்பி அவன் தோளில் கைவைத்து கூட்டி வந்து கட்டிலில் கிடத்தினாள். கட்டிலில் கிடந்தவன் சிறுபிள்ளையாய் உறங்க வியர்த்துக் கலைந்து கிடந்த அவனது சிகையை அன்போடு ஒதுக்கி விட்டு மின்விசிறியை சுழலவிட்டவள் குளியலறைக்குள் நுழைந்தாள்.
பதினொரு மணிக்கு மேல் எழுந்த மதியழகன், காலை உணவிற்காய் உணவு மேசையில் வந்து அமர்ந்தான்.
“அம்மா….. எனக்குப் பசிக்குது…. சாப்பிட எடுத்துட்டு வாங்க…..”
அடுக்களையில் ஊறுக்காய்க்கான வேலையில் இருந்த லச்சுமி, மகனின் குரலைக் கேட்டதும் பாத்திரத்தை கழுகி அடுக்கிக் கொண்டிருந்த கயல்விழியிடம், “எம்மா கயலு….. மதி சாப்பிட உக்காந்திருக்கான்….. அவனுக்கு மெலிசா தோசை ஊத்திக் குடுத்திரு தாயி…..” என்றார்.
“சரி அத்த…..” என்றவள் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மாவை எடுத்து ஊற்றினாள். அதற்குள் மீண்டும் குரல் கொடுத்தான் மதியழகன்.
“அம்மா…. சீக்கிரம் சாப்பிட கொண்டு வரியளா….. நான் போவட்டுமா…..”
“இரு தம்பி….. ஒரே நிமிஷம்….” என்று அடுக்களையில் இருந்து கூறியவர்,
“கயலு…. அவன் பசி பொறுக்க மாட்டான்….. நீ ஆன தோசையை கொண்டு போயி குடுத்திட்டு வா….” என்றார்.
ஒரு தோசையைத் தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு மேசைக்கு வந்தவள் அவன் முன்னில் வைத்து அங்கிருந்த சட்னியையும் சாம்பாரையும் தட்டில் ஊற்றினாள்.
“எதுக்குலே நீ எடுத்திட்டு வருதே….. அம்மா என்ன பண்ணறாக…..” என்றான் அவன் முறைப்புடன்.
“அத்த கை வேலையா இருக்காக அத்தான்….. அதேன்…. நான் எடுத்திட்டு வந்தேன்…. பசிக்குதுன்னு சொன்னியளே….. சாப்பிடுங்க அத்தான்…..” என்றாள் அவள் கெஞ்சலாக. அதற்கு மேல் அவளை எதுவும் சொல்லத் தோன்றாமல் மெலிசாக அவள் வார்த்திருந்த தோசையைப் பிய்த்து வாயில் வைத்தான்.
காரச்சட்னியுடன் தோசை வெகுவேக சுவையாய் இருக்க வேகமாய் சாப்பிடத் தொடங்கினான். அடுப்பில் இருந்து அடுத்த தோசையை எடுத்து வருவதற்குள் வேகமாய் சாப்பிட்டதில் அவனுக்குப் புரையேற கயல்விழி ஓடி வந்து அவன் தலையில் தட்டிக் கொடுத்தாள். முறைத்துக் கொண்டே அவளது கையைத் தட்டி விட்டவன் தண்ணீரை எடுத்துக் குடித்தான்.
விடியற்காலையிலேயே வயலுக்கு சென்றிருந்த முத்துப்பாண்டி அப்போது வீட்டுக்குள் நுழைய, அவரைக் கண்டதும் மதியழகனின் முகம் இறுகியது. 
“என்ன மருமவளே….. தோசை சுடுதியா….. எனக்கும் ரெண்டு தோசை சுட்டுப்போடு தாயி…..” என்றவர்,
மருமகளின் முன்னில் மகன் எதுவும் சொல்ல மாட்டான் என நினைத்து அவனை அடிக்கண்ணால் நோக்கிக் கொண்டே முன்னில் இருந்த நாற்காலியில் அமர, ஒரு தோசையை முடித்து அடுத்த தோசையைத் தொடங்கி இருந்த மதியழகன், அப்படியே அதில் கை கழுகி விட்டு கோபத்துடன் நாற்காலியை நீக்கிவிட்டு சாப்பிடாமல் வெளியேறினான்.
அந்த சத்தத்தைக் கேட்டு அடுக்களையில் இருந்து கரண்டியுடன் ஓடிவந்த லச்சுமி, “உம்ம யாருய்யா அவன் சாப்பிட்டு இருக்கும்போது முன்னால வந்து உக்காற சொன்னது….. புள்ள அதிசயமா பசிக்குதுன்னு வந்தான்….. இப்ப சாப்பிடாமப் போவுதானே…..” என்று புலம்பினார்.
கயல்விழியோ ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தாள். முத்துப் பாண்டியும் மருமகளின் முன்பு மகன் அவமதித்ததில் சுருங்கிப் போன முகத்துடன் எழுந்து சென்று விட்டார்.
“கயலு….. அடுப்புல தோசை கருகுது…. அதை அணைச்சிடு தாயி….” என்றவர்,
“இந்த அப்பனுக்கும் புள்ளைக்கும் நடுவுல மாட்டிகிட்டு எனக்குள்ள கண்ணாமுழி தள்ளிப் போவுது…… ஆளுக்கு ஒரு திசையில முறுக்கிட்டு திரியுறாக…. எப்பத்தான் இந்த வீட்டுலயும் சந்தோசம் வரப் போவுதோ…..” எனப் புலம்பிக் கொண்டே அடுக்களைக்கு சென்றார்.
லச்சுமி சொன்னது போல அடுப்பை அணைத்துவிட்டு வந்த கயல், அவரிடம் வந்து அமர்ந்தாள்.
“அத்த…. நான் ஒண்ணு கேட்டா சொல்லுவியளா….”
கை பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருக்க எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தவர் கயலின் அழைப்பில் திரும்பினார்.
“என்ன தாயி….. என்ன கேக்கப் போவுதே……..” என்றார் ஒரு பெருமூச்சுடன்.
“மாமாவும் அவுகளும் ஏன் எப்பவும் இப்படி எலியும் பூனையுமா அடிச்சுக்குறாக……. மாமா மேல எதுக்கு அத்தான் இம்புட்டு கோவமா இருக்காக….. என்ன காரணம்…… சொல்லுங்க அத்தே…..” என்றாள் அவள் வருத்தத்துடன்.
ஊறுகாய் செய்து முடித்து கை கழுகியவர், “அது ஒரு பெரிய கத கயலு…. கேட்டா உம்மனசு தாங்காது….. வேண்டாம் விடு…..” என்றார்.

Advertisement