Advertisement

குளியலறைக்குள் இருந்த மதியழகனுக்கு அவள் சிரிக்கும் சத்தம் நன்றாகவே கேட்டது.
“ஏலே…. இப்படி மானத்த பறக்க வுட்டுட்டியே மதி…. எப்படிலே அவ மூஞ்சில முழிப்பே…..” எனத் தலையில் தட்டிக் கொண்டவன், குளியலை முடித்த பின் தான் டவலை எடுக்கவில்லை என நினைவு வந்தது.
“அச்சோ… இப்போ எப்படி டவலை எடுக்குறது…… அவ இருப்பாளே….” எனத் தயக்கத்துடன் சிறிது நேரம் தலையில் நீர் வடிய நின்று கொண்டிருந்தான்.
அழகாய் சின்ன சரிகை வைத்த ரோஜா வண்ணப் பட்டு சேலையைக் கட்டி முடித்து, நீண்ட கூந்தலை தளர்வாய்ப் பின்னி, கண்ணுக்கு மெலிதாய் கண்மை இட்டு புறப்பட்ட கயல்விழி, வெகு நேரமாய் குளியலறையில் சத்தம் கேட்காததால் குளியலறைக் கதவின் அருகில் வந்து மதியழகனை அழைத்தாள்.
“அத்தான்….. அத்தான்….. என்ன பண்ணுறிய… இன்னுமா குளிச்சு முடியல…..”
“இவ ஒருத்தி…. பொத்தான்… பொத்தான்னு….. கூப்பிட்டு உயிரை வாங்குதா….”
“அத்தான்…. என்ன ஒண்ணும் பேச மாட்டுதிய…..” மீண்டும் அவள் கேட்கவே,
“வ…. வந்து….. டவல் எடுக்க மறந்துட்டேன்…. கொஞ்சம் எடுத்துக் குடுக்கியா….” என்றான் தயக்கத்துடன்.
“இம்புட்டு தானா…. என்னமோ முதுகுல கொஞ்சம் சோப்பு தேச்சு விடுதியானு கேக்குற போலத் தயங்குதிய….” என்று முனங்கிக் கொண்டே, “இந்தாக…. டவலு……” என்றாள் கதவைத் தட்டி.
அவள் பேசியது அரைகுறையாய் அவன் காதிலும் விழ அவன் ஆச்சர்யமாய் புருவத்தை சுளித்துக் கொண்டே கையை வெளியே நீட்டி டவலை வாங்கிக் கொண்டான்.
தலை துவட்டி வேஷ்டியைக் கட்டிக் கொண்டு வெளியே வந்தவன் அழகாய் சிறு ரோஜாக் குவியலாய் நின்று கொண்டிருந்த கயல்விழியை கண்டு கொள்ளாமல் அவனது உடையை எடுத்து அணிந்து கொண்டான்.
ஆளுயரக் கண்ணாடியில் தலை சீவும்போது பின்னில் வந்து நின்றாள் கயல்விழி.
நிலைக்கண்ணாடியில் தெரிந்த தேவதையை ஒரு நிமிடம் தன்னையறியாமல் நோக்கிப் போனவன், “என்ன….” என்றான் சற்று கடினமாக.
“அ… அத்தான்….. ஒரு உதவி செய்வியளா……” என்று நிறுத்தியவள், “இந்த நெக்லஸ் எனக்குப் போட முடியல…. கொஞ்சம் போட்டுத் தரிகளா……” என்று சிறுபிள்ளையாய் கேட்டவளிடம் என்ன சொல்லுவது என்று முழித்தான் அவன்.
“எனக்கு அதெல்லாம் தெரியாது…. அம்மாகிட்ட குடுத்து போட்டுக்கோ….” என்றுவிட்டு மீண்டும் தலை சீவத் தொடங்கினான்.
அவள் முகம் சுருங்கிப் போக மீண்டும் அவளே முயற்சித்துப் பார்த்தாள். முந்தின நாள் நடந்ததைப் பற்றி எதுவுமே கேட்டுக் கொள்ளாமல் அவள் இயல்பாய் அவனோடு பேசியது அவனுக்கே ஆச்சர்யமாய் இருந்தது. அவள் ஏதாவது கேப்பாள் என்றுதான் அவன் எதிர்பார்த்திருந்தான்.
அவள் நெக்லசை கழுத்தில் வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டிருக்க, அவள் கையில் இருந்த நெக்லசை வெடுக்கென்று பறித்தவன், “திரும்பு…..” என்றான் குரலை உயர்த்தி.
அமைதியைத் திரும்பி நின்றவளின் அருகில் வந்து நின்றான் அவன். அவளிடமிருந்து வந்த கஸ்தூரி மஞ்சளும் பவுடரும் கலந்த ரம்மியமான மணம் அவன் நாசியைத் தடவ நெக்லசை அவள் கழுத்தில் போட்டு விடும்போது சரியாகக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார் லச்சுமி.
மகனும், மருமகளும் அந்த நெருக்கத்தில் நிற்பார்கள் என்று எதிர்பார்க்காதவர் முகத்தில் அப்படியொரு சந்தோசம். அதற்குள் மதியழகன் நெக்லஸைப் போட்டு முடித்து அவளிடமிருந்து விலகி விட்டான்.
“கயலு…. இந்தா கண்ணு…. நம்ம வூட்டுத் தோட்டத்துல பூத்த அடுக்கு மல்லி…. வாசம் ஆளையே தூக்கும்ல….. வச்சுக்க….” என்றவர் மகனிடம் திரும்பி,
“ஏன் தம்பி…. இன்னைக்காவது அந்த சட்டைய பேண்ட் உள்ள போட்டு பழைய மாதிரி வரலாம்ல…. எம்புட்டு நாளாச்சு…. உன்னய அப்புடிப் பார்த்து…..” என்றார்.
“ம்ம்… போதும்…. போதும்…. ரொம்பத்தேன் எதிர்பார்க்காதிய…..” என்றான் அவன்.
“ம்ம்… சரி… வெரசா வந்து சேருங்க… நல்ல நேரத்துக்கு அங்க போயாவணும்….” என்றவர் வெளியேற,
பூவைத் தலையில் வைத்துக் கொண்ட கயல், “அத்தான்…… சரியா இருக்கா…..” என்றாள் மதியழகனிடம்.
அவளது செய்கைகள் ஒவ்வொன்றும் அவனது வியப்பை மேலும் கூட்ட அவளைப் பார்க்காமலே, “ம்ம்….” என்றான் அவன்.
“அதைப் பாத்துட்டுதேன் சொல்லறது….” என்று முனங்கிக் கொண்டே அவள் கைக்குட்டையை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல, அப்போது தான் அவளது முகத்தைப் பார்த்தவன்,
“ஏய் கயலு….. கொஞ்சம் நில்லு….” என்றான். பல வருடங்களுக்குப் பிறகு அவனிடம் இருந்து கேட்ட அந்த அழைப்பில் அப்படியே நின்றாள் அவள்.
அதுவரை அவனை ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்த அந்த வாயாடித்தனம் காணாமல் போக அமைதியாய் குனிந்து நின்றிருந்தவளிடம் வந்தவன், “பொட்டப் புள்ள வெளிய கெளம்பும்போது பொட்டு வைக்காமப் போறவ….. நெத்தில போட்டு வச்சிட்டுப் போலே….” என்றான்.
அவனை ஏறிட்டு நோக்கியவளின் கண்ணில் தெரிந்த ஏக்கமான, அடிபட்ட பார்வையில் ஆயிரம் வலி நிறைந்திருந்தது. அதைக் கண்டவன் மனதில் சட்டென்று பழைய நினைவு மின்னிவிட்டுப் போக, அதற்கு மேல் பேசாமல் அமைதியாய் அங்கிருந்து நகர்ந்தான் அவன்.
அமைதியாய் உள்ளே சென்ற கயல், குங்குமத்தை எடுத்து நெற்றியிலும் வகிட்டிலும் வைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
இரு பெண்களின் மாப்பிள்ளை வீட்டினருமாய் ஒரு ஊரே வந்திருக்க சுந்தரேசனின் வீட்டில் அசைவ விருந்து பிரமாதமாய் நடந்து கொண்டிருந்தது.
இரு மகள்களையும் கவனித்துக் கொண்டிருந்த ராசாத்திக்கு மலர்விழியின் மலர்ந்த முகமே அவளது மனதை சொல்ல கயல்விழியின் முகத்தில் இருந்து எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை.
பேத்திகள் இருவரும் பேசிக் கொண்டிருக்க அங்கே வந்த பேச்சிப் பாட்டி, “என்னலே…… ரெண்டு பேரும் என்ன பேசுதிய….. புகுந்த வீட்டுல சந்தோசமா இருக்கியளா…..” என்றார்.
“ம்ம்… இருக்கோம்…. அப்பத்தா…..” என்ற மலர்விழியின் சிவந்த வெட்கமான முகம் அவளது மனதை உணர்த்த, சாதாரணமாய் இருந்த கயல்விழியின் முகத்தில் அவள் மனத்தைக் கண்டு கொண்டார் பேச்சியம்மா.
“ம்ம்…. புருஷனை நல்லா கவனிச்சு முந்தானைல முடிஞ்சு வச்சுகிட்டா, பொறவு எந்தக் கொறையும் வராது…… எல்லாத்துக்கும் புருஷன் துணைக்கு இருந்தா எந்தப் பிரச்சனையும் தூசு போலதேன்….. கொண்டவன் துணை இருந்தா கூரை ஏறிக் கூவலாம்னு என்ற ஆத்தா சொல்லும்….. எம்பட வூட்டுக்காரரும்  அப்படித்தேன்…. நான் எது செஞ்சாலும் எங்கூடவே எல்லாத்துலயும் இருப்பாக….. உசுர விட்டுப் போவும்போது மட்டும் என்னக் கூட்டிட்டுப் போக மறந்துட்டாக…..” என்ற அவரது தழுதழுத்த வார்த்தை அவருக்கு கணவன் மீது இருந்த பிரியத்தை சொல்லாமல் சொல்லியது.
“என்ன அப்பத்தா….. இதுக்குப் போயி கலங்கிட்டு….. தாத்தா ஒன்ன அப்பயே கூட்டிட்டுப் போயிருந்தா பொறவு நான் யாரோட சண்ட போட…. எனக்கு நீதான இங்க கம்பெனி……” என்று அவரை சமாதானப் படுத்திய கயலின் கையைப் பற்றிக் கொண்டவர்,
“இங்க பாருலே…… ஒரு பொண்டாட்டின்னு சொல்லுறவ, புருஷனுக்கு எல்லாமுமா இருக்கோணும்….. அப்பதேன் புருஷனை முந்தானைக்குள்ள முடிஞ்சு வச்சுக்க முடியும்….. நாஞ்சொல்லறது ஒனக்கு வெளங்குதா….. எந்த ஒரு ஆணையும் ஒரு பொண்ணு நினைச்சா அவ பொறுமையாலும், அன்பாலும் அடக்கி கொழந்த மாதிரி வச்சுக்க முடியும்….. அப்பதேன் அந்த வாழ்க்க இனிக்கும்….. இத மனசுல வச்சுக்கங்கலே….” என்றார்.
“ம்ம்…. சரி அப்பத்தா…..” என்று மலர் வார்த்தையில் கூற, அவர் சொன்னதை மனதில் பதித்துக் கொண்டிருந்தாள் கயல்விழி.
அப்போது அங்கே வந்த ராசாத்தி அவர்களை சாப்பிட அழைக்கவே, இருவரும் கீழே விருந்து நடக்கும் இடத்திற்கு வந்தனர். மாப்பிள்ளைகளுடன் ஜோடியாய் அவர்களை உக்காரவைத்து விருந்து பரிமாற, தம்பதியர்களை ஒருவருக்கொருவர் இனிப்பை ஊட்டி விட சொல்லி விளையாடிக் கொண்டிருந்தனர் இளவட்டங்கள்.
“ஏட்டி…… கண்ணாலம் ஆயிருச்சுன்னு எங்கள எல்லாம் மறந்திடாதலே….. எங்காவது ஷூட்டிங் நடந்துச்சுன்னா எம்ம கூட பாக்கறதுக்கு வருவ தானே….” என்றாள் வள்ளி.
“ஏலே… கண்ணாலம் ஆயிருச்சுன்னா அவளுக்கு ரெண்டு கொம்பா மொளச்சிருக்கு…. அதெல்லாம் ஷூட்டிங் நடக்குதுன்னு சொன்னா மொத ஆளா வந்து நிப்பா…..” என்றாள் செண்பகம்.
“ம்ம்…. என் மருமகளுக்கு துணையா நானும் வாரேன்… ஷூட்டிங் பாக்க….. என்னயும்  சேத்துக்குவிய தானே…..” என்றார் லச்சுமி கிண்டலாக.
அதற்குள் மதியழகனுக்கு பரிமாறிக் கொண்டிருந்த மருது, “என்ன மாப்பிள்ள…. இப்படி சாப்பாட்டக் கொறிச்சிட்டு இருக்கிய…. நல்லா சாப்பிடுங்க…. அப்பதானே எங்க கயல உங்களால சமாளிக்க முடியும்….” என்றான்.
அவன் ஏதாவது பேசினால் எப்போதும் முறைக்கின்ற பேச்சிப் பாட்டியும் கூட அதைக் கேட்டு சிரிக்க,
எல்லாவற்றையும் ஒரு மௌனப் புன்னகையுடன் கேட்டுக் கொண்டே அரைகுறையாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் கயல்விழி.
மருது தான் பந்தியை கவனித்துக் கொண்டான். சிரிப்பும் கும்மாளமுமாய் விருந்து நடந்து கொண்டிருக்க ஓரமாய் நின்று கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்த மணிமாறனின் ஏக்கமான பார்வை கயலின் கண்ணில் இருந்து தப்பவில்லை.
மதியழகனை இப்படிப் பார்த்ததிலேயே மனம் மகிழ்ந்து போயினர் சுந்தரேசனும், ராசாத்தியும். தந்தை விருந்துக்கு வந்தால் நான் வரமாட்டேன்… என்று மதியழகன் கூறிவிடவே, அவர் எதோ வேலை இருப்பதாகக் கூறிவிட்டு வராமல் இருந்துவிட்டார்.
சுந்தரேசனையும், ராசாத்தியையும் சிறு வயதில் இருந்தே மதியழகனுக்கு மிகவும் பிடிக்கும்…. அவர்கள் மனம் வருத்தப்படக் கூடாதென்று நல்ல மாப்பிள்ளையாய் அவர்களுக்குப் பிடிக்குமாறு நடந்து கொண்டான். கயல்விழிக்கும் லச்சுமிக்கும் கூட ஆச்சர்யம்.
கணவன், தண்ணியைப் போட்டு வந்து அசிங்கப் படுத்தி விடுவானோ என்று பயந்து கொண்டிருந்தாள் கயல். முத்துப்பாண்டி இல்லாததால் மதியழகன் தண்ணி அடித்து அசிங்கப் படுத்த மாட்டான் என லச்சுமிக்கு நம்பிக்கை இருந்தது. விருந்து முடிந்து அனைவரும் கிளம்பத் தொடங்கினர்.
இரு மகள்களையும் கண்கலங்க புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார் ராசாத்தி. எல்லோரிடமும் தனித்தனியே விடை பெற்ற கயல், மணிமாறனிடம் வந்தாள்.
“அத்தான்….. எதையும் நினைச்சு நீங்க விசனப் படாதீய…. நாம ஒண்ணும் காதலிக்கவோ கை கோர்த்து நடக்கவோ இல்ல…. உங்களுக்கு எம்மேல ஒரு விருப்பம் இருந்துச்சு…. அம்புட்டுதான….. அது நடக்காம போயிருச்சுன்னு அதையே நினைச்சு கலங்கிட்டு இருக்காதிய…. உங்களுக்குன்னு ஒருத்தி பொறக்காமலா இருக்கப் போவுதா….. அது நான் இல்லன்னு நினைச்சு சமாதானப் பட்டுக்கங்க…. உங்க மனசுக்கு உங்களுக்கு ஏத்த மாதிரி ஒருத்தி வருவா…. நான் கெளம்புதேன்….” என்றாள்.
“ம்ம்…. நீ பாத்து பத்திரமா இரு… கயலு….. மதியழகனை மட்டும் மாத்திட்டேன்னா நீனு ரொம்ப அதிர்ஷ்டசாலிதேன்….. உன்னால நிச்சயமா அது முடியும்…..” என்றவனின் வார்த்தைகள் அவளுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுத்தது.
முதலில் மலர் வீட்டினர் கிளம்ப, அடுத்து கயல் வீட்டினர் கிளம்பினர். இருவருக்கும் தாய் வீட்டில் இருந்து இரண்டு பெரிய அண்டா நிறைய இனிப்பும் காரமுமாய் பலகாரம் கொடுத்து மனமார வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
மலருக்குள் மறைந்திருக்கும்
மணத்துக்கு நிறமென்ன…..
நெஞ்சுக்குள் நிறைந்திருக்கும்
நேசத்தின் குணமென்ன…..
தாய்மைக்குள் ஒளிந்திருக்கும்
தூய்மைக்கு பெயரென்ன….
நிஜத்துக்குள் களித்திருக்கும்
நிறைவுக்கு மொழியென்ன……
காற்றுக்கும் மொழியுண்டோ….
கவிதைக்கும் கரையுண்டோ….
கட்டவிழ்ந்த காதலுக்கு
கட்டிப்போடும் விலங்குண்டோ….
பூவென்றால் தேனுண்டு
பெண்ணென்றால் குணமுண்டு….
பொங்கி வரும் நேசத்துக்கு
பைந்தமிழின் சுவையுண்டு….
வளமான காவிரியாய்…..
சுகமான தாலாட்டாய்…..
பழங்கால கல்வெட்டாய்
நிலைக்கட்டும் உண்மைக் காதல்….

Advertisement