Advertisement

அத்தியாயம் – 7
அங்கங்கே கட்டிலில் தொங்கிக் கொண்டிருந்த பூச்சரங்களின் மணமும், அழகான மெத்தை விரிப்பில் தூவி விடப்பட்டிருந்த மல்லிகை, ரோஜா மொட்டுகளின் மணமும் மேசையில் வைக்கப்படிருந்த பழம், பலகாரங்களுடன் புகைந்து மணத்துக் கொண்டிருந்த ஊதுபத்தியின் மணமும் அந்த அறையை ஒருவித மோன நிலையில் வைத்திருக்க அதையெல்லாம் ரசிக்க வேண்டிய மதியழகனோ ஏதோ தீவிர யோசனையில் ஜன்னலருகில் நின்றிருந்தான்.
சற்று நேரத்தில் அறைக்கதவு திறக்கப்பட்டு, பட்டுச் சேலை சரசரக்க, புத்தம் புதிய தாலி கழுத்தில் மினுமினுக்க அழகான அலங்காரத்துடன் பால் சொம்பை எடுத்துக் கொண்டு தேவதையாய் அறைக்குள் நுழைந்தாள் கயல்விழி.
அறைக்கதவைத் தாளிட்டு விட்டு அறையை ஏறிட்டவள் மதியழகன் அங்கிருந்த ஜன்னலின் அருகே நின்று கொண்டிருப்பதைக் கண்டு மெல்ல தொண்டையைக் கனைத்தாள். அவன் திரும்பாமல் நிற்கவே, பால் சொம்பை மேசையின் மீது வைத்துவிட்டு அவன் அருகே சென்றவள் சட்டென்று அவன் காலில் விழுந்தாள்.
“எ… என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க அத்தான்…….”
சட்டென்று நீங்கிக் கொண்ட மதியழகன், “எ… எழுந்திருலே….. என்ன இது… காலில் எல்லாம் விழுந்திட்டு….” என்றான்.
“வூட்டுக்காரரு காலில் விழுந்து வணங்கிக்கனும்னு சம்பிரதாயமாம்….. அத்தை சொன்னாக…. அதான்…. என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க….. அத்தான்….” என்றாள் அவள் எழுந்து கொள்ளாமலே.
“சரி… சரி…. எழுந்திருலே….” என்று அவன் அங்கிருந்து நீங்கவே, வேறு வழியில்லாமல் அவள் எழுந்து கொண்டாள்.
அவன் ஒன்றும் பேசாமல் கட்டிலில் போய் அமர்ந்திருக்க, என்ன செய்வதென்று தெரியாமல் அவளும் கட்டிலின் அருகில் சென்று நின்றாள். அங்கே தொங்கிக் கொண்டிருந்த பூச்சரத்தை அவள் நோண்டிக் கொண்டே அடிக்கண்ணால் அவன் என்ன செய்யப் போகிறான் என கவனித்துக் கொண்டிருந்தாள்.
சில நிமிடம் அமைதியாய் அமர்ந்திருந்தவன், “இங்க…. வாலே…. உங்கிட்ட கொஞ்சம் பேசணும்….” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.
அவனுக்கு அருகில் வந்து அவள் குனிந்த தலையுடன் நிற்க,
“உக்காருலே….. இந்த பார்மாலிடீஸ் எல்லாம் தேவை இல்லை……”
“ம்ம்… சரி அத்தான்…..” என்றவள் கட்டிலில் வந்து அமர்ந்தாள்.
“இங்க பாரு…. நான் நேரடியாவே பேசிடுதேன்….. உனக்கு ஒரு நல்ல புருஷனா என்னால இருக்க முடியாது….. நான் ஒரு குடிகாரன்….. என்னால தெனம் தண்ணி போடாம இருக்க முடியாது…. எங்க அம்மாவுக்காக தான் இந்தக் கண்ணாலத்துக்கு நான் ஒத்துகிட்டேன்….. நீயும் உன் அக்காவோட கண்ணாலம் நல்லபடியா நடக்கணும்னுதேன் இந்தக் கண்ணாலத்துக்கு சம்மதிச்சிருக்கேன்னு கேள்விப்பட்டேன்….. அதுனால எங்கிட்டே புருஷன்கிற எந்த உரிமையையும் நீனு எதிர்பார்க்காத….. மத்தவங்களுக்கு மட்டும்தேன் நாம புருஷன் பொஞ்சாதி….. நான் சொல்லுறது வெளங்குதாலே…..” ஒரே மூச்சாக சுவரைப் பார்த்து பேசி முடித்தவனை ஏறிட்டாள் கயல்விழி.
“பேசி முடிச்சுட்டிங்களா அத்தான்……. தூங்கலாமா…..” அமைதியாய் கேட்டவளை முதன் முறையாய் நிமிர்ந்து பார்த்தான் மதியழகன்.
அழகான அமைதியான களையான முகம்…… அந்த முகம் அவனுக்குப் சிறுவயது கயலை நினைவு படுத்தியது. அவன் சொன்னது அனைத்தையும் கேட்டும் முகத்தில் எதையும் பிரதிபலிக்காமல் சாதாரணமாய் இருந்தாள்.
“என்ன…. இத்தனை சொல்லுதேன்….. அவ்ளோதானாங்கற போல சாதாரணமா கேக்குதே….” வியப்பாய் கேட்டான் அவன்.
“அத்தான்….. நீங்க குடிகாரன்னு சொன்னியளே….. பொறந்ததில் இருந்தே குடிக்குறியளா……”
“இல்ல…… அதுக்காக…. நான் குடிகாரன் இல்லன்னு ஆயிடுமாவே……”
“இந்தப் பழக்கம் உங்களுக்கு இப்ப வந்தது தானே…. அது போல போகவும் செய்திடும்…. நீங்க மாறுவீங்கன்னு நான் நம்புதேன்…. அத்தான்…..” என்றாள்.
“இங்க பாரு…. மொதல்ல இந்த அத்தான்னு கூப்பிடறத நிறுத்து……”
“அது முடியாது அத்தான்….. அது என்னோட உரிமை….. அதை நான் விட்டுத் தர மாட்டேன்….. எனக்கு உரிமையான எந்த விஷயத்தையும் எதுக்காகவும் நான் விட்டுத் தர மாட்டேன்…..” என்றாள் உறுதியாக.
அவளது உறுதியான பேச்சைக் கேட்டவன், “ஓ…… சின்னப் பொண்ணாச்சே….. நான் செய்யுறதைப் பாத்து பயந்திடுவியோன்னு முதல்லயே சொல்லலாம்னு நெனச்சா நீ எல்லாத்துக்கும் தயாரா தான் வந்திருப்ப போலிருக்கு….. சரி…. நீனு படுத்துக்க….. நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வருதேன்…..” என்றவன் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினான்.
செல்லுகின்ற அவனையே பார்த்தவள், “இன்னும் எத்தன நாள்தேன் நீங்க இப்படிக் குடிப்பீகன்னு நானும் பாத்திடுதேன்…..” என்று மனதுக்குள் நினைத்துகொண்டு கட்டிலில் வந்து படுத்தாள்.
கல்யாண அசதியும், மனதுக்குள் இருந்த நிறைவும் அவள் கண்களை மூட வைக்க அமைதியாய் உறங்கத் தொடங்கினாள்.
விடிந்தும் விடியாத நேரத்தில் உறக்கம் வராமல் எழுந்து வாசலுக்கு வந்த லச்சுமி, உறங்காத கண்ணுடன் தள்ளாட்டமாய் வீட்டுக்குள் நுழைந்த மகனைப் பார்த்து திடுக்கிட்டார்.
“தம்பி….. என்னலே இது…. ராத்திரி தூங்காம எங்கவே போன…..”
“நா… நான் தோப்புக்குப் போயிரு…ந்தேன்…..”
“என்னலே சொல்லுதே…. சாந்தி முகூர்த்தம் அன்னைக்கும் இப்படி வெளியே போயிக் குடிச்சிட்டு வந்திருக்கே…. அந்தப் புள்ள பாத்தா அது மனசு எம்புட்டு வெசனப்படும்……”
“வெசனப்…படட்டும்….. நல்லா வெசனப்படட்டும்….. எல்லாம் தெரிஞ்சு தான என்னக் கட்டிகிட்டா…. நானா அவளக் கட்டிக்குதேன்னு சொன்னேன்…. நீங்கதான நிர்பந்தமா கட்டிவச்சீக….. இப்ப உங்கக்கு சந்தோஷமா….” என்றான் குழறலோடு.
“தம்பி…. ஏலே இப்படிப் பண்ணுதே….. நீனு நல்லாருக்கனும்னு தானே நானும் உன் அப்பாரும் நினைக்குதோம்… அதானலே வம்படியா கயலை உனக்குக் கட்டி வச்சோம்….”
“யாரு உம்ம புருஷனா….. நான் நல்லாருக்கணும்னு நினைக்குற ஆளா…. ம்ம்ம்….. அப்படியே எல்லாருக்கும் உதவி செய்யுற பரமாத்மா….. எல்லாருக்கும் நல்லது மட்டுமே செய்யுற புண்ணிய ஜீவன்….. கயலு அப்பாகிட்ட பணத்தைக் குடுத்து என்னை வித்துட்ட அந்தாளைப் பத்தி எங்கிட்டப் பேசாதிய….” என்று கோபத்துடன் கூறியவன், அங்கேயே சுவரோடு சேர்ந்து அமர்ந்து கொண்டான்.
அதற்குள் கயல் சத்தம் கேட்டு எழுந்து வந்திருக்க அவளைப் பார்த்த லச்சுமி, கவலையுடன் கையைப் பிசைந்தார்.
“க….. கயலு….. நீனு போ தாயி…. போயிப் படு….. இவன நான் பாத்துக்குதேன்….” என்றார்.
“இல்ல அத்த….. என்ன பண்ணனும்னு சொல்லுங்க….. நானே அத்தானுக்கு செய்யுதேன்….” என்றாள் அவள்.
“டிரஸ் பூரா சேரும் சகதியுமா கெடக்கு…. எங்க போயி விழுந்து எந்திரிச்சு வந்தானோ….. ரூமுக்குக் கூட்டிப் போயி படுக்க வைக்கணும் தாயி….. தூங்கி எழுந்தா தெளிஞ்சிடுவான்….” என்றார் வேதனையுடன்.
“ம்ம்…. சரி அத்த…. நான் கூட்டிப் போவுதேன்…..” என்றவள் அவனது கையைப் பிடித்து எழுப்ப ஒரு பக்கம் லச்சுமியும் அவனது கையைப் பிடித்து எழுப்பி விட்டார்.
அவனைத் தோள் கொடுத்து தாங்கிக் கொண்டு இருவருமாய் அறைக்கு அழைத்துச் சென்று கட்டிலில் படுக்க வைத்தனர்.
“லச்சுமி….. ஏட்டி… லச்சுமி……. தண்ணி கேட்டா எடுக்காம எங்கல போனவ….” உறக்கம் தெளிந்த முத்துப் பாண்டியின் குரல் கேட்கவே,
“கயலு….. மாமா கூப்பிடுதாக…. நான் போறேன்…. நீ பாத்துக்க தாயி… செத்தப் படுத்து தூங்கு… நாலரைக்கெல்லாம் எழுந்திரிக்கணும்….” என்றுவிட்டு லச்சுமி கணவனைத் தேடி சென்றார்.
அழுக்கான உடையுடன் கட்டிலில் அலங்கரித்த பூக்களை நசுக்கிக் கொண்டு  அலங்கோலமாய்க் கிடந்தவனைக் காண நெஞ்சம் கனத்துப் போனது கயல்விழிக்கு.
“எதுக்கு அத்தான்…. இப்படிக் குடிச்சு சீரழியுறிக….. என்னைப் பத்தி உங்களுக்கு யோசிக்கத் தோணலயா…… உங்க பொண்டாட்டியா இல்லன்னாலும் பழைய கயலா கூட நினைச்சுப் பார்க்கத் தோணலியா….” என்று கலங்கத் தொடங்கிய மனதையும் கண்ணீரை உற்பத்தி செய்த கண்ணையும் அடக்கி நிதானத்துக்கு வந்தவள், அவனது அழுக்கு சட்டையை அவிழ்த்து வேறு சட்டை மாற்றினாள்.
கணவனாய் இருந்தாலும் ஒரு ஆண்மகனைத் தொடுவதற்கு மனம் கூச வேஷ்டியை உறுவுவதற்கு தயங்கிய மனதை சமாதானப் படுத்தி, கடமை மட்டுமே கண்ணாக ஒரு தாதியாய் தன்னை நினைத்துக் கொண்டு அவன் உடையை மாற்றிக் கொடுத்து போர்வையைப் போத்தி விட்டாள்.
குழந்தையாய் ஒன்றும் அறியாமல் கண்ணை மூடிக் கொண்டு உறங்குபவனை எப்படி அவள் கணவனாய் மாற்றுவது என்ற கேள்வி அவளது மனத்தை வண்டாய்க் குடைந்து கொண்டிருந்தது.
————————————————————————————————————————————————————
“கயலு….. என்ன தாயி… குளிக்காம உக்காந்திருக்கவ…..” என்றபடியே ஒரு பிளாஸ்கில் காப்பியுடன் இரண்டு கப்பையும் டிரேயில் வைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தார் லச்சுமி. எதோ யோசனையாய் அமர்ந்திருந்த கயல் லச்சுமியின் வரவில் எழுந்து நின்றாள்.
“நீங்க எதுக்கு அத்த காப்பி கொண்டு வந்திய…. நானே வந்திருப்பன்ல…..”
“என் மருமவளுக்கு நான் காப்பி எடுத்திட்டு வந்ததுல என்ன கொறஞ்சிடப் போவுதேன்……” என்று அவளுக்கு காப்பியை கப்பில் ஊற்றிக் கொடுத்தவர்,
“மதி இன்னும் எழுந்திரிக்கலையா தாயி…..”
“இல்ல அத்த….. எழுப்பிப் பாத்தேன்…. அவுக எந்திரிக்கலை….” என்றாள் சோர்வுடன்.
“ம்ம்…. இங்க பாரு கயலு…. நீனு எதையும் நினைச்சு வெசனப்படாத….. உன்னோட நல்ல மனசுக்கு எல்லாம் சரியாயிடும்…. பார்த்துகிடு….. நேரமாச்சு…. போயி குளிச்சிட்டு கெளம்பப் பாரு…… விருந்துக்கு போக நேரமாவுதுல்ல…..”
“ம்ம்…. அத்தான் இன்னும் எழுந்துக்கலையே….”
“நீனு குளிச்சிட்டு வரதுக்குள்ள அவன நான் எழுப்பி உக்கார வக்குதேன்…. போயி குளிச்சு பொறப்படு தாயி….” என்றார் அன்புடன்.
“ம்ம்… சரி அத்த…….” என்றவளின் யோசனை படிந்த முகத்தைக் கண்டு அவரது மனம் வருந்தியது.
அவள் காப்பியைக் குடித்துவிட்டு குளியலறைக்கு செல்லவும், ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து வந்து மதியழகனின் முகத்தில் தெளித்து விட்டார். அவன் முனங்கிக் கொண்டே கண்ணைக் கஷ்டப்பட்டுத் திறக்க,
“ஏலே….. எழுந்திருலே….. உம்மாமனார் வீட்டுக்கு விருந்துக்கு போவனும்ல…. இப்படி ஒறங்கிட்டு கெடக்குத……”
மெதுவாய்க் கண்ணைத் திறந்தவன், “நான் எங்கயும் வரல…. நீங்க போயிட்டு வாங்க…..” என்றான்.
“தம்பி…. என்னலே இப்படி பேசுதே… உன்னோட கண்ணாலம் முடிஞ்சு உங்களுக்கு தானலே விருந்து குடுக்காக… இப்படி வரலேன்னு சொல்லுதே… கயலு என்னவே நெனைக்கும்… அவ வீட்டு மனுஷங்க என்ன நினைப்பாக….. உம்ம மாமனுக்கும் அத்தைக்கும் வேண்டியாவது நீனு இதுக்கு வந்துதேன் ஆவோனும்…. சும்மா சாக்கு சொல்லாம எழுந்து குளிக்குற சோலியப் பாரு…..” என்றார்.
“எதுக்குதான் என் உசுர வாங்குதியளோ….” என்று சடைந்து கொண்டே எழுந்து அமர்ந்தான் அவன்.
“ம்ம்…. என்  ராசா…. இந்தா…… சூடா இந்தக் காப்பிய குடிச்சிட்டு….. கயலு குளிச்சு வந்ததும் நீனு குளிச்சு பொறப்படுவே……” என்றவர் பிளாஸ்கில் இருந்த காப்பியை ஒரு கப்பில் ஊற்றி அவன் கையில் கொடுத்துவிட்டு அறைக் கதவை சாத்திவிட்டு வெளியேறினார்.
அவன் காப்பியைக் குடித்து முடித்து போர்வையை விலக்கிவிட்டு கட்டிலில் இருந்து இறங்கப் போக, சட்டையும் இடுப்பில் இருந்த வேஷ்டியும் அழுக்கில்லாமல் பளிச்சென்று இருப்பதை யோசனையோடு பார்த்தான்.
“நான் நேத்து பட்டு வேஷ்டி தானே கட்டி இருந்தேன்….. சட்டையும் மாறியிருக்கு….. நைட்டு அம்மா மாத்தி விட்டிருப்பாகளோ…..” என நினைத்துக் கொண்டே எழுந்தவனின் இடுப்பில் நிக்காமல் வெறுமனே சுத்தி வைக்கப்பட்டிருந்த வேஷ்டி நழுவி தரையில் விழ உள்ளாடையுடன் நின்று கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில் சரியாக குளியலறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த கயல்விழியை அப்போது எதிர்பார்க்காதவன் அரக்கப் பறக்க கீழே விழுந்த வேஷ்டியை மேலேற்றி விட்டு அவளைத் தள்ளிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான்.
ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் விழித்தவள், நடந்த விஷயத்தை மறுபடியும் நினைத்துப் பார்க்க அவனது ஓட்டத்தைக் கண்டு வாய் விட்டு சிரித்தாள்.

Advertisement