Advertisement

————————————————————————————————————————————————————
மதியழகனுக்கு, கயலை திருமணம் செய்து கொடுக்க சம்மதம் என்று சுந்தரேசனிடம் இருந்து வந்த வார்த்தையைக் கேட்டதும் அடுத்து மதியழகனின் சம்மதத்திற்கு வேண்டி காத்திருந்தார் லச்சுமி.
முத்துப்பாண்டி சுந்தரேசனுடன் டவுனுக்கு சென்றிருந்தார். போதையில் வெகுநேரம் உறங்கிக் கொண்டிருந்த மதியழகன் உறக்கம் தெளியவே எழுந்து அமர்ந்தான். அவன் எழுந்துவிட்டதை அறிந்து காப்பியை எடுத்துக் கொண்டு அவனிடம் வந்த லச்சுமி அவனது கல்யாண விஷயத்தைக் கூறியதும் அதிர்ச்சியோடு நெற்றியை சுருக்கினான்.
“என்னம்மா சொல்லுதிய…. எனக்கு…. கண்ணாலமா……”
“ஆமாந்தம்பி…. உனக்குதேன்…… நீயும் ஒரு கண்ணாலத்தப் பண்ணிட்டு குடும்பம், குழந்தைன்னு இருக்கணும்னு இந்த அம்மைக்கு ஆசையா இருக்காதா ராசா…..” என்றார் லச்சுமி.
“அம்மா….. எனக்கு கண்ணாலமும் வேண்டாம்…. எந்தக் கருமாதியும் வேணாம்…… இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன்….” லேசான குழறலோடு வந்தது அவனது வார்த்தைகள்.
“ஏன்லே…. இப்படிக் குடிச்சுக் குட்டிச்சுவராப் போவுதே….. உன்னப் பழைய போல பாக்கணும்னு என்ற மனசு கெடந்து தவிக்குறது எனக்குதாம்லே தெரியும்….. தயவு செய்து இந்த அம்மைக்கு வேண்டி ஒத்துக்க தம்பி….” மகனிடம் கெஞ்சினார் அன்னை.
“என்ன வெளையாடுதியளா…… என்னால எந்தப் பொண்ணு கூடவும் நிம்மதியா குடும்பம் நடத்த முடியாது….. அந்தப் பொண்ணு வாழ்க்கைய எதுக்குக் கெடுக்க நினைக்கறிய…… நான் இதுக்கு சம்மதிக்கவே மாட்டேன்….” என்றவனின் வார்த்தைகள் அந்தத் தாயின் மனதை வருத்தியாலும் அவன் வார்த்தையின் அர்த்தம் அவர் மனதுக்கு சற்று ஆறுதலைத் தந்தது.
“நான் கெட்டாலும், என்னால இன்னொரு பொண்ணு வாழ்க்க கெடக் கூடாதுன்னு நினைக்கறியே தம்பி…. உன்ற மனசு யாருக்குலே வரும்….. நீ இந்தக் கண்ணாலத்துக்கு சம்மதிக்கலேன்னா, அப்புறம் உன்ற அம்மய உசுரோட பாக்க முடியாது ஆமா…..” என்று மிரட்டலை ஆயுதமாய் எடுத்தார் லச்சுமி.
“அம்மா….. சும்மா இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம்…. பாவம்மா….. அந்தப் பொண்ணு…. எனக்கு வாழ்க்க மேல எந்த ஆசையும் இல்ல….. உன்ற புருஷன் என்னப் பாத்துப் பாத்து மனசுக்குள்ளே புழுங்கி வெந்து போகணும்….. அதுக்கு வேண்டி மட்டுந்தேன் இந்த உசிர உடம்புல வச்சிட்டு இருக்கேன்…….” வேதனையுடன் வந்தது அவனது வார்த்தைகள். அவன் வாயைப் பொத்தியவர்,
“தம்பி….. அப்படில்லாம் சொல்லாதவே…. உன்னோட வேதனை எனக்குப் புரியாம இல்ல….. உன்ற அப்பன் பண்ணின தப்புக்கு நீ எதுக்குலே தண்டனை அனுபவிக்கோணும்…. அவரு முன்னாடி அந்தஸ்தா வாழ்ந்து காமிக்கணும்னு நெனப்பியா….. அத வுட்டுட்டு இப்படி உன்ற வாழ்க்கைய நாசம் பண்ணிட்டுத் திரியற….. காலம் ஆத்தாத வலின்னு ஒண்ணு இருக்கா என்ன….. உம்மனசுல இருக்குற வலிக்கும் காலந்தேன் மருந்து.. அந்த மருந்தா என்ற மருமக இருப்பா….”
“என்னம்மா சொல்லுதிய….. நீங்களும் அந்தாளு போல சுயநலமா யோசிக்கறிய…. ஒரு பொண்ணு வாழ்க்கைய நாசம் பண்ண நினைக்குறியளே…… என்னால முடியாது மா…. எனக்கு இந்தக் கண்ணாலம் வேணாம்…..”
“தம்பி….. நீ உன் வாழ்க்கையை நாசம் பண்ண நெனச்சாலும் என்ற மருமக கயலு அவ வாழ்க்கைய சரி பண்ணிடுவான்னு நான் நம்புதேன்….. கண்ணாலத்துக்கு ஒத்துக்க மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதப்பு…..” என்றார் கெஞ்சலுடன்.
“என்னது கயலா….. நம்ம சுந்தரு மாமா மவ கயலையா சொல்லுதிய…..” என்றவனின் மனதில் பத்து வயதுக் கயல் பாவாடை சட்டையுடன் அவனைப் பார்த்து சிரித்தாள்.
“ம்ம்…. நம்ம அதே கயலுதேன்….. சின்ன வயசுல அவளைத் தூக்கித் தோளுல வச்சுட்டு நடப்பியே…… அவளை உனக்கும் பிடிக்கும் தானே…..” என்றார் ஆசையுடன்.
“அம்மா….. அவங்க வீட்டுல எப்படி கயலுக்கு என்னைக் கட்டி வைக்க சம்மதிச்சாக…. அவளுக்கு இந்த விஷயம் தெரியுமா….. அவ வாழ்க்கையயும் சேர்த்து எதுக்குமா கெடுக்கறிய…….”
“இங்க பாரு தம்பி…. அவளும், அவ வீட்டு ஆளுகளும் சம்மதிச்ச பின்னாலதேன் உங்கிட்டப் பேசுதேன்…… அவ உன்ற வாழ்க்கைல வந்தா உன்னோட வருத்தம் எல்லாம் வெலகி நல்லாருப்பேன்னு நான் நம்புதேன்…. நிசமாலுமே நீ இந்தக் கண்ணாலத்துக்கு ஒத்துக்கலேன்னா என்ன உசுரோட பாக்க முடியாது தம்பி….. சரின்னு சொல்லுலே…..” என்றார் கண்ணீருடன்.
“அம்மா….. கயலுக்கு என்மேல……” என்று எதோ சொல்ல வருவதற்குள் சட்டென்று அவன் வாயைப் பொத்திய லச்சுமி, 
“மாட்டேன்னு மட்டும் சொல்லிடாத தம்பி…… இந்தக் கண்ணாலம் நடக்கணும்…. இது என்ற மேல சத்தியம்…..” என்று அவர் தலையில் கை வைத்து சத்தியம் செய்யவே, திகைப்புடன் நோக்கி நின்றான் மதியழகன்.
அடுத்த நாள் பரிசம் போடுதல் சடங்கிற்காய் சொந்தங்களும், பந்தங்களும் மண்டபத்தில் நிறைந்திருந்தனர். மாப்பிள்ளை அழைப்பு முடிந்து மணமகன் அறையில் அவர்களைக் கொண்டு வந்து விட்டுவிட்டு பெரியவர்கள் முன்னிலையில் திருமணத்தை உறுதிப் படுத்தும் விதமாய் மணவோலை வாசித்தனர்.
பிறகு மணமகளுக்கு தாய்மாமன் சடங்கு தொடங்க ராஜன் அவனது அறையில் இருந்து ஜன்னல் வழியாய் மலர்விழிக்கு நலங்கு வைப்பதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். மதியழகனை அறைக்குள் கொண்டு வந்து விட்டதும் அவன் எதிலும் கலந்து கொள்ளாமல் கையோடு கொண்டு வந்திருந்த பாட்டிலை எடுத்துக் கொண்டு குடிக்க அமர்ந்தான்.
அடுத்து மணமகன் சார்பாக அவர்கள் வீட்டில் இருந்து பரிச சேலையையும், நகையையும் மணப்பெண்ணுக்கு வழங்க, நாத்தனார் ஸ்தானத்தில் இருந்தவர்கள் வளையல் போட்டுவிட அந்த சடங்கு அழகாய் நிறைவு பெற்றது.
மலர்விழியின் முகம் மலர்ந்திருந்தாலும் அவ்வப்போது தங்கையின் முகத்தை தவிப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள். கயல்விழியின் முகத்தில் மிதமான ஒரு புன்னகையைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.
லச்சுமியும், முத்துப் பாண்டியும் முகமெல்லாம் புன்னகையோடு நிற்க, மலர்விழியின் மாப்பிள்ளை வீட்டினரும் சந்தோஷமாகவே இருந்தனர். பார்வதி, மணிமாறனின் வாடிய முகத்தைக் கண்டு அவனைத் தங்கள் அருகிலேயே வைத்துக் கொண்டார். அவனது ஏக்கமான பார்வை கயல்விழியை அவ்வப்போது தழுவி மீள்வதைக் கவலையுடன் நோக்கிக் கொண்டிருந்தனர்.
ராசாத்தி, சுந்தரேசன் தம்பதியரோ உற்சாகமே இல்லாமல் கடமைக்கு எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தனர். முத்துப் பாண்டி, அவர் சொன்னது போல கல்யாணத்திற்கான எல்லா தேவைகளையும் அவரே முன்னின்று எந்தக் குறையும் இல்லாமல் நன்றாக கவனித்துக் கொண்டார்.
ஒவ்வொருவர் மனநிலையும் ஒவ்வொரு விதத்தில் இருக்க அந்த நாளும் முடிந்து அடுத்த நாள் பல கேள்விகளை சுமந்து கொண்டு அழகாய் விடிந்தது.
இரண்டு ஹோமக் குண்டங்களுடன் இரு கல்யாணத்திற்காய் இரு அய்யர்கள் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தனர். மணமக்கள் அவர்கள் அறையில் புறப்பட்டுக் கொண்டிருக்க முந்தின நாள் எத்தனை சொல்லியும் கேட்காமல் மதியழகன் குடித்திருந்ததால் அவனைத் தனியே விடாமல் உடன் இருந்து முகூர்த்தம் வரை குடிக்க விடாமல் பார்த்துக் கொண்டார் பார்வதி.
சிறு குழந்தையாய் அன்னை அவனைத் தலை சீவி சட்டை அணிவிக்க அவனது மனமும் சற்று இளகியது.
“அம்மா…. என்ன இது…. இதெல்லாம் நான் பண்ணிக்க மாட்டேனா…. நீங்க கொஞ்சம் வெளியே இருங்க…. நான் புறப்பட்டுக்கிறேன்….”
“நீனு ஒண்ணும் செய்ய வேண்டாம்…. என்ற புள்ளைய நானே புறப்பட வக்குதேன்… இந்தா…. இந்தப் பட்டு வேஷ்டியைக் கட்டு….” என்று எடுத்துக் கொடுத்தார். சின்னப் பெண்ணைப் போல் அவர் முகத்தில் இருந்த உற்சாகம் மதியழகனை மறு பேச்சில்லாமல் புறப்பட வைத்தது.
எப்போதும் ஒழுங்கில்லாத தாடியுடனும், கலைந்து கிடக்கும் தலையுடனும் தன்னைப் பற்றி கவனம் இல்லாமல் இருப்பவன் இப்போது அன்னையின் வற்புறுத்தலுக்காய் தாடியை டிரிம் செய்து தலை முடியை ஒதுக்கி அழகாய் இருந்தான்.
அவன் பட்டு வேஷ்டியைக் கட்டியதும் அவனை நிறுத்தி அழகு பார்த்த லச்சுமி, கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்து, “இப்ப எத்தன அழகா இருக்கே தம்பி….. என்ற கண்ணே பட்டுரும் போலிருக்கு….” என்றார்.
அதைக் கேட்டதும் அவன் முகமும் மெல்ல மலர்ந்தது. மாப்பிள்ளையை அழைத்து வருமாறு அய்யர் கூறவே,
“தம்பி…. அப்பாவை வர சொல்லுதேன்…. அவரு கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு மேடைக்கு போ கண்ணு….” என்றார் லச்சுமி.
அதைக் கேட்டதும் அவனது முகம் இறுகியது.
“அம்ம்மா…. இந்தக் கண்ணாலம் நடக்கணுமா வேண்டாமா…..” அழுத்தமாய் வந்தது அவனது குரல்.
“எ…. என்ன தம்பி சொல்லுதே…. நல்லபடியா உன்ற கண்ணாலம் நடக்கணும்னு தானே என்ற மனசுக்குள்ளே ஒவ்வொரு நொடியும் வேண்டிகிட்டு கிடக்குதேன்….. இப்படில்லாம் பேசாத ராசா…..” என்றார் கலக்கத்துடன்.
“ம்ம்…. அப்ப இந்தக் கண்ணாலம் முடியுற வரைக்கும் உன்ற புருஷனை என் கண்ணு முன்னால வரவேண்டாம்னு சொல்லு….”
“ச… சரி…. நீ கோபப்படாதலே…. கண்ணாலம் நல்ல படியா முடிஞ்சா போதும்….” என்றார் லச்சுமி.
“ம்ம்… என்னை நீ மட்டும் ஆசிர்வாதம் பண்ணினா போதும்….” என்றவன் அவரது காலில் விழுந்து வணங்க, மனதார வாழ்த்திவிட்டு அவனது நண்பர்களுடன் கல்யாண மேடைக்கு அனுப்பி வைத்தார். மணமகன் சொல்ல வேண்டிய மந்திரங்களை சொல்லி முடிக்க மணமகளை அழைத்து வருமாறு கூறினார் அய்யர். பட்டுச் சேலை சரசரக்க குனிந்த தலையும் மனம் நிறைய ஆசைகளும் கண்களில் வழிந்த காதலோடும் ராஜனுக்கு அருகில் வந்து அமர்ந்தாள் மலர்விழி.
அவளையே விழுங்கி விடுவது போலப் பார்த்துக் கொண்டிருந்த ராஜன், அவளை நோக்கி மென்மையாய்ப் புன்னகைத்து யாருக்கும் தெரியாமல் கண்ணைச் சிமிட்டினான். அதில் குங்குமமாய் சிவந்தவள் நாணத்துடன் தலை குனிந்து கொண்டாள்.
அடுத்து கயல்விழியை அழைத்து வருமாறு அய்யர் கூறவே, அவளை அழைத்துக் கொண்டு வந்தாள் வள்ளி. முகத்தில் தெளிவான சிறு புன்னகையுடன் தேவதையாய் நடந்து வந்தவள், தலை நிமிர்ந்து அமர்ந்திருந்தாலும் அவளைத் திரும்பிக் கூடப் பார்த்திடாத மதியழகனிடம் வந்து அமர்ந்தாள்.
அவளையும் அறியாமல் அவளது பார்வை அவனிடம் செல்ல, அவளது விழிகள் வியப்பில் விரிந்தன. எப்போதும் அழுக்கு உடுப்பும் பரட்டைத் தலையுடனுமே அவள் மதியழகனைப் பார்த்திருக்கிறாள். ஆண்மையின் வடிவாக லேசான தாடியும் அழுத்தமாய் வாரியிருந்தாலும் மின் விசிறியின் காற்றில் படபடத்த தலை முடியுமாய் அமர்ந்திருந்தவனை அவள் எதிர்பார்க்கவே இல்லை.
மீண்டும் அவனை நோக்கத் துடித்த கண்களை அடக்கிக் கொண்டு தலையைக் குனிந்து கொண்டவளின் மனதுக்குள் அவனது ஆண்மையான உருவம் அழுத்தமாய்ப் பதிந்தது.
அடுத்து கெட்டி மேளம் முழங்க, ராஜன் மலர்விழியின் கழுத்தில் மங்கள நாணைப் பூட்டினான். அடுத்து மதியழகனின் விரல்கள் கயல்விழியின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்தது. தாலி கட்டுவது ஒன்றே தனது குறிக்கோள் என்பது போல அவளைக் கவனிக்காமல் மூன்று முடிச்சை சிரத்தையுடன் போட்டு முடித்தான் மதியழகன்.
அவனது விரல்களும் கழுத்தில் விழுந்த மாங்கல்யமும் கயல்விழியின் உடலை சிலிர்க்க வைக்க அந்த நிமிடத்தை கண்ணை மூடி அனுபவித்து நெஞ்சில் தேக்கி வைத்துக் கொண்டாள் அவள். அவளது நெஞ்சத்தில் மதியழகனின் மாங்கல்யம் அழகாய் தேஜசுடன் ஜொலித்தது.
அனைவரின் ஆசிர்வாதத்துடனும் இரு திருமணமும் இனிதே நடந்தேறியது.
நட்டு வச்ச நாத்தாக – என்
நெஞ்சல்லாம் வெளஞ்சிருக்க…
பூத்திருக்கும் மல்லிகையாய்
மனசெல்லாம் மணத்திருக்க…
கனிஞ்சிருக்கும் அடிக்கரும்பாய்
நெஞ்சமெல்லாம் இனிச்சிருக்க….
ஊழிகாத்தாக உள்ளுக்குள்
சுழன்றிருக்க – மார்கழி மாசக்
கோலத்தில் பூத்திட்ட பூசணிப்பூவாக….
என் மனதில் மலர்ந்திருக்க…..
உன் விழிகளைப் பகடையாக்கி
என் இதயத்தை உருட்டி வச்ச….
உருட்டி வச்ச சப்பாத்திக் கள்ளியாக
என் காதல் கனிஞ்சிருக்கு……
தொண்டைக் குழியில் சிக்கிய முள்ளாக
உன் நெனப்பு குத்துதையா….
உலையிலிட்ட நெல்லாக
எம்மனசு வேகுதையா…
உன்னக் காணாத நொடிப் பொழுதில்
என் உசுரு ஆவியாப் போகுதையா….
கருவறைக் குழந்தையாக என்
நெஞ்சுக்குள் நான் வளர்த்த காதல்
எனக்குள் வளரும்
இன்னொரு உசுருதானே….

Advertisement