Advertisement

அத்தியாயம் – 6
“என்ன சொல்லுதிய…. அந்தக் குடிகாரப்பையன் நம்ம கயலுக்கு மாப்பிள்ளையா… பூவாட்டமா இருக்குற பொண்ணை அந்தப் பையனுக்கு எப்படிங்க கட்டி வைக்க முடியும்….. அதும் இல்லாம அவனைக் கண்டாலே இவளுக்கு ஆகாதே… அப்புறம் எப்படி கண்ணாலம் கட்டிக்க ஒத்துக்கறேன்னு சொல்லுதா…..” என்றார் ராசாத்தி அதிர்ச்சியுடன்.
“மாப்பிள்ள….. மலரு கண்ணாலம் முடிஞ்சதும் கயலை நம்ம மணிமாறனுக்கு கேக்கலாம்னு இருந்தோம்…. நீங்க இப்ப இப்படி சொல்லுதிய…. அவனுக்கும் கயலு மேல விருப்பம் இருக்குற போல இருக்கு….. அந்த முத்துப் பாண்டி இதான் சமயம்னு அவனோட குடிகாரப் புள்ளைய நம்ம பொண்ணு தலையில கட்டப் பாக்குதானா…. மலரு கண்ணாலம் நின்னாலும் பரவால்ல…. நீங்க இதுக்கு ஒத்துக்காதிய மாப்பிள்ள….” என்றார் மாணிக்கம் கோபத்துடன்.
“ஆமாண்ணே….. எனக்கு கயலுதேன் மருமகளா வருவான்னு நான் கனவு கண்டுட்டு இருக்கேன்…. எம்மருமகள வெளில இன்னொரு வீட்டுக்கு சம்மந்தம் பேசாதிங்கண்ணே…. அவள என்ற மவளப் போல நான் பாத்துக்குவேன்…. என் மவனுக்கும் அவளை ரொம்பப் பிடிக்கும்…. அவனுக்குத் தெரிஞ்சா மனசு வாடிப் போயிருவாண்ணே……” என்றார் பார்வதி வேதனையுடன்.
“ஏலே சுந்தரு….. குருவி தலையில பனங்காய வச்ச கணக்கா அந்த சின்னப் புள்ள தலையில இத்தன பெரிய சுமைய வக்கணுமாவே…… என்னதேன் அவ என்கிட்டே துடுக்காப் பேசிட்டு திரிஞ்சாலும் என்ற பேத்தி மனசு தங்கம்லே… அவள ஒரு குடிகாரனுக்கு கட்டி வக்கலாம்னு நினைக்காதவே….. நான் அதுக்கு ஒத்துக்கிற மாட்டன்……” படபடவென்று தன் ஆதங்கத்தை கொட்டினார் பேச்சிப் பாட்டி.
முத்துப்பாண்டியின் வீட்டில் இருந்து வந்ததும் பெரியவர்கள் மட்டும் ஒரு அறையில் பேசிக் கொண்டிருக்க கயல்விழி அமைதியாக மலரின் அறைக்கு சென்றுவிட்டாள். கயலை மதியழகனுக்கு கண்ணாலம் பேசிய விவரத்தை சுந்தரேசன் சொல்லியதற்கு தான் அவரவர் அபிப்ராயத்தை சொல்லிக் கொண்டிருந்தனர். அதுவரை அமைதியாய் அவர்களைப் பேசவிட்டுக் கேட்ட சுந்தரேசன் வாயைத் திறந்தார்.
“ஏட்டி….. இந்தக் கண்ணாலம் நடக்காம நின்னு போனா மலரு மனசு விட்டுப் போயிரும்லே….. எனக்கு வேற வழி தெரியல…. கயலு சொன்ன முடிவை நானும் ஏத்துக்க வேண்டிய நிர்பந்தத்துல இருக்கேன்…. நீங்களும் இதுக்கு சம்மதிச்சு தான் ஆகணும்…. அவ ரொம்பத் தெளிவான பொண்ணுலே…. அவ வாழ்க்கையை அவ சரியா அமைச்சுப்பேன்னு நம்பிக்கையா சொல்லுதா….. எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு……”
“அதுக்காக….. இது என்ன உஸ்கூல் பரிச்சையா…. ஒரு தடவை தோத்துப் போயிட்டா இன்னொரு தடவ எழுதிப் பாஸ் பண்ணிக்கலாம்னு நெனைக்கறதுக்கு….. வாழ்க்கங்க…. மலருக்காக கயலு வாழ்க்கையை எப்படிங்க நாசம் பண்ணுறது…..” என்றார் ராசாத்தி கண்ணீருடன்.
“எனக்கு மட்டும் கயலை அந்தப் பையனுக்கு கண்ணாலம் கட்டிக் குடுக்கனும்னு ஆசையாலே….. அவதேன் கட்டிக்க சம்மதம்னு சொல்லுதா….. அவளால அந்தப் பையனை சரி பண்ண முடியும்னு நம்பிக்கையா பேசுதா…. அவளுக்கு மலரு கண்ணாலம் நிக்காம நடக்கணும்…. அதுக்காக இந்த வாழ்க்கையை ஏத்துக்கவும் தயாரா இருக்காலே…. நான் அவகிட்டே எத்தனையோ சொல்லிப் பார்த்துட்டேன்….”
“என்ன மாப்பிள்ள…… இந்தக் கண்ணாலம் நின்னா மலருக்கு வேற கண்ணாலம் பண்ணி வைக்க மாட்டோமா என்ன…. அதுக்கு கயலு வாழ்க்கைய எதுக்கு நாசம் பண்ணனும்…..” என்றார் மாணிக்கம்.
“மலரும் மாப்பிள்ளையும் மனசு விட்டுப் பழக ஆரம்பிச்சுட்டாங்க….. மனசுக்குள்ளே அவுங்க வாழ்க்கையைப் பத்தி பல கனவுகளோட இருப்பாங்க…. அதை சிதைக்க வேண்டாம்னு இவ சொல்லுதா…. இதுக்கு மேல நான் என்ன தான் பேசுறது….. நீங்களே அவகிட்ட பேசி உங்க முடிவை சொல்லுங்க….. நான் முத்துப் பாண்டிக்கு விஷயத்தை சொல்லணும்….. அப்ப தான் அடுத்த காரியத்தைப் பார்க்க முடியும்…. இல்லன்னா இதை இத்தோட நிறுத்திட்டு எல்லாரும் மூலைல உக்கார்ந்து அழுதிட்டு இருக்க வேண்டியதுதேன்………” என்ற சுந்தரேசன் அறைக்கதவைத் திறந்துவிட்டு வெளியே செல்ல, அனைவரும் அதிர்ச்சியோடு நின்று கொண்டிருந்தனர்.
“ராசாத்தி…. மாப்பிள்ள இத்தன உறுதியா சொல்லிட்டுப் போறார்னா அவர் இது நடக்கணும்னு விரும்புற மாதிரிதான் தோணுது…… நீ கயலு கிட்டப் பேசிப் பாரு தாயி…. அவ சம்மதம் சொன்னா, கடவுள் மேல பாரத்தப் போட்டுட்டு கண்ணால சோலியப் பாக்க தொடங்கிடலாம்…..” என்று மாணிக்கமும் வெளியே சென்றார்.
“போலே…. போயி அந்த சின்னவ கிட்ட நல்லா எடுத்து சொல்லு…. அவ ஒண்ண நெனச்சுட்டா அப்புறம் யாரு சொன்னாலும் முடிவ மாத்திக்க மாட்டா…. சரியான ராங்கிக்காரி…. நீனு நிதானமா எடுத்துச் சொல்லிப் பேசிப் பாருலே….” என்றார் பேச்சியம்மா.
மாமியாரின் அக்கறையான பேச்சு அவர் மீதிருந்த கசப்பைப் போக்கினாலும் மகளின் முடிவு அவரைக் கவலைப் பட வைத்தது.
ராசாத்தியும் பார்வதியும் கயலைக் கண்டு பலவிதத்தில் எடுத்துக் கூறியும் அத்தனையும் கேட்டுவிட்டு ஒரே பதிலில் அவள் தன் முடிவைச் சொல்லி விட்டாள்.
“அம்மா…. இந்தக் கண்ணாலம் நடக்கட்டும்….. என் மேல எனக்கு நம்பிக்க இருக்கு…. என் வாழ்க்கையை நான் சந்தோஷமா மாத்திக்குவேன்….. நீங்க பயப்படாம கண்ணாலதுக்கான சோலியப் பாருங்க…..” என்றாள் அவள்.
அவள் அருகில் கண்ணீருடன் நின்று கொண்டிருந்த மலர், “கயலு…. இது விளையாட்டு இல்ல புள்ள…. உன்ற வாழ்க்க…. எனக்காக அவசரப்பட்டு நீ எந்த முடிவுக்கும் வந்திடாத…..” என்றாள்.
“இல்லட்டி….. நான் நல்லா நிதானமா யோசிச்சுதேன் இந்த முடிவுக்கு வந்தேன்….. லச்சுமி அத்த சொன்ன போல அந்தாளு ஒண்ணும் எப்பவுமே குடிகாரன் இல்லயே…. இப்ப ரெண்டு வருஷமா தானே இப்படி இருக்காப்புல….. அவரை சரி பண்ண முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்குலே…..” என்றாள் உறுதியாக.
“என்னலே….. அந்தப் பையன் நல்லாப் படிச்சவன்…. பணக்காரன்….. அதுனால குடிகாரனா இருந்தாலும் பரவால்லன்னு இந்த சம்மந்தத்துக்கு சம்மதம் சொல்லிட்டியா புள்ள…..” என்று ராசாத்தி கண்ணீரோடு கேட்க, கயல்விழி அவரை அதிர்ச்சியோடு பார்த்தாள்.
கயலின் அதிர்ந்த முகம் கண்ட மலர்விழி, “அம்மா….. யாரப் பாத்து என்ன வார்த்த சொல்லுதிய….. நம்ம கயலைப் போயி இப்படிக் கேக்குதிய….. எல்லாம் இந்தப் பாவியால தான்….. கயலு எனக்கு வேண்டித்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கா…..” என்றவள் தலையில் அடித்துக் கொண்டாள்.
“அட….. நீ கொஞ்சம் சும்மா இரு புள்ள….” மலரை அடக்கினாள் கயல்விழி.
“இல்ல புள்ள….. எனக்காக உன் வாழ்க்கைய பணயம் வைக்க நீ முடிவு பண்ணிட்டே…. அதுல உனக்கு இப்படி ஒரு பழிவேற…. அதுவும் நம்ம அம்மாவே உன்னை தப்பா நினைக்குறதுக்கு கண்டிப்பா நான் விட மாட்டன்லே…..”
“மலரு…. நீ கொஞ்சம் வாய மூடுதியா…. அம்மாகிட்ட நான் பேசிக்குதேன்…..”
“என்ன பேசுவே…. நான் பண்ணின தப்பை மறைச்சு வச்சுப் பேசுவே….. வேண்டாம்லே…. எனக்காக நீ சிலுவ சொமக்கறது என்னால ஏத்துக்க முடியாது…..”
“என்னலே…. ரெண்டு பெரும் மாத்தி மாத்திப் பேசிட்டு இருக்கிய….. எங்களுக்கு தெரியாம என்னத்த மறச்சு வச்சிருக்கிய…..” என்றார் ராசாத்தி கோபத்துடன்.
“அம்மா….. எல்லாத் தப்பும் என்ற மேலதேன்….. எனக்காக கயலு அந்தக் குடிகாரப் பயலைக் கண்ணாலம் கட்டிக்க சம்மதிச்சிருக்கா….. நான் எல்லாத்தையும் சொல்லிடுதேன்….” என்றவள், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சொல்லத் தொடங்க,
“ஏட்டி… நீனு கொஞ்சம் அடங்குதியா….. நானே சொல்லிக்குறேன்….” என்ற கயல்,
“அம்மா….. அத்தானோட அம்மாவுக்கு அவுக அண்ணன் பொண்ண அவருக்கு கட்டி வக்கணும்னு ஆச….. இப்ப இந்தக் கண்ணாலம் நடக்கலேன்னா இன்னும் ரெண்டு வருஷத்துக்கு அத்தானுக்கு கண்ணால யோகம் இல்லன்னுன்னு அவுக ஜோசியர் வேற சொல்லி இருக்காக….. அதுனால அந்த கேப்புல அத்த நெனச்ச மாதிரி அந்தப் பொண்ணக் கண்ணாலம் பண்ணி வச்சிடுவாகளோன்னு இவளுக்கு பயம்…..” என்று அவள் நிறுத்த,
“ஏலே….. அவுக அண்ணன் மவளக் கட்டி வைக்கனும்னு இருக்குறவக எதுக்கு இங்க வந்து சம்மந்தம் பேசணும்…. எனக்கு நீங்க பேசுறதே வெளங்கல….” என்றார் ராசாத்தி.
“அம்மா….. அக்காவும், அத்தானும் மூணு வருஷமா ஒருத்தரை ஒருத்தர் விரும்பியிருக்காக…. இதை சொல்லாமலே அவுக நம்மகிட்ட வந்து சம்மந்தம் பேசி இருக்காக….. அத்தானோட இந்தக் கண்ணாலம் மட்டும் நடக்கலேன்னா அப்புறம் இவ வேற யாரையுமே கண்ணாலம் கட்டிக்க மாட்டேன்னு சொல்லுதா…..”
ராசாத்தி அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருக்க, “நீ என்னட்டி சொல்லுதே….. மலரு மாப்பிள்ளைய காதலிச்சாளா….” என்றார், அதே மாறாத அதிர்ச்சியுடன் பார்வதி. அவர்களுக்கு இந்தக் காதல் என்பதெல்லாம் மிகவும் பெரிய வார்த்தை.
“ம்ம்…. ஆமா அத்த….. இந்த விஷயத்த இங்க சொன்னா இவளப் பத்தி தப்பா  எதுவும் நினைப்போமோன்னு தான் அத்தான் எதுவும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாக…..”
“அடிப்பாவி….. ஊமச்சி மாதிரி இருந்துட்டு நீ இந்த வேல எல்லாம் பண்ணிருக்கியா…..” என்று மலரின் முதுகில் ஒன்று வைத்தார் ராசாத்தி.
அடுத்த அடி அவர் அடிக்குமுன் அவரைத் தடுத்த கயல்விழி, “அம்மா…. நம்ம ஊருப் பொண்ணுக ஒருத்தனை மனசுல நினைச்சுட்டா மண்ணுக்குள்ளே போகுற வரைக்கும் அவன மறக்க மாட்டாக…. அக்கா நினைச்சுட்டா….. மூணு வருஷம் அவரை மனசுல சுமந்திருக்கா, அவர் இருந்த மனசுல வேற யாருக்கும் இடமில்லேன்னு சொல்லுதா….. அவளைப் புரிஞ்சுகிட்டு அவ ஆசைப்பட்ட வாழ்க்கைய அமைச்சுக் கொடுத்திருவோம்மா….” என்றவளை கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டாள் மலர்விழி.
“கயலு….. எனக்காக நீ…..” என்று அழத் தொடங்கிய மலரை சமாதானப் படுத்திய கயலை ஆச்சர்யமாய்ப் பார்த்தனர் பெரியவர்கள். நிதானமான அவள் பேச்சும் நம்பிக்கையும் அவர்களுக்கும் ஒரு தைரியத்தைக் கொடுத்தது. மூத்தவளுக்காக தன் வாழ்க்கையையே பணயமாக்கிய அவளது அன்பை எண்ணி ராசாத்தியும், பார்வதியும் திகைப்புடன் நோக்கினர்.
“கயலு…… நீ சொல்லுறதெல்லாம் சரி…. அதுக்காக உன்ற வாழ்க்கை……” என்று ராசாத்தி மீண்டும் தொடங்க,
“அம்மா…. நீங்கல்லாம் பயப்படுற போல ஒண்ணும் இல்லை….. என்னைக் கண்ணாலம் கட்டிகிட்டா என்னப் பாத்து உங்க மாப்பிள்ளைதேன் பயப்படோணும்….. அதுனால நம்பிக்கையோட போயி கண்ணால வேலையப் பாருங்கம்மா…..” என்றாள் அவள் சிரிப்புடன்.
“மாப்பிள்ளை….” என்ற அவளது வார்த்தை அவளது தீர்மானத்தை உணர்த்த அதற்கு மேல் பேசாமல் மௌனமாய் சுந்தரேசனிடம் சென்றார் ராசாத்தி.

Advertisement