“ம்ம்…. சின்னப் புள்ளையா இருக்கையில பாத்தது…. இப்பவும் கவுனு போட்டு மூக்கொழுக நிக்குற கயலு தான் என்ற கண்ணுல நிக்குது…. என்ன தாயி…. நல்லாருக்கியா….” என்றார் கயல்விழியிடம்.
“ம்ம்… நல்லாருக்கேன்…. மாமா…. நீங்க நல்லாருக்கியளா…..” என்றாள் கயல்.
“ம்ம்…. நல்லாருக்கேன் தாயி….” என்றார் முத்துப் பாண்டி.
“புள்ளைக வளர்றது நமக்கு எங்க தெரியுது…. நமக்கு எப்பவும் அவுக சின்னப் புள்ளைங்கதேன்…. நம்ம கயலைப் பாருங்களேன்… அப்படியே அசப்புல நெற்றிக்கண் சினிமாவுல நடிச்ச நடிகை மேனகா போலயே இருக்குல்ல….” என்றார் லச்சுமி சந்தோஷத்துடன்.
அவருக்கு வெகு நாட்களுக்குப் பிறகு கயல்விழியையும் சுந்தரேசனையும் சந்தித்த சந்தோசம் முகத்தில் தெரிந்தது. மனைவியின் சந்தோஷமான முகம் முத்துப் பாண்டிக்கும் உற்சாகத்தை தந்தது.
“ம்ம்…. ஆமாம்… ஒனக்கு கயலை சின்ன வயசுல பாக்கும்போது பேபி சுமதி போல இருக்குன்னு சொல்லுவே… இப்ப மேனகாவா….” என்று கலாய்க்க அவர்கள் பேச்சை ரசிக்க முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர் சுந்தரேசனும், கயல்விழியும்.
“அப்புறம்… சுந்தரு… இப்பதான் தோட்டத்துல முத்து சொல்லிட்டு இருந்தான்…. டவுன்ல ஒன்ற கையில இருந்து எவனோ பணத்தைப் புடுங்கிட்டு ஓடிட்டான்னு…. என்னாச்சுலே… யாரு… எவருன்னு எதுவும் தெரிஞ்சுதா…..” என்றார் முத்துப் பாண்டி.
“அய்யய்யோ… என்ன…. சொல்லுதிய…. பணத்தைப் பறிச்சிட்டுப் போயிட்டானா….” என்று அதிர்ச்சியோடு கேட்டார் லச்சுமி.
“ஆமாந்தாயி….. பாங்குல இருந்து பத்து லட்ச ரூபா பணத்த எடுத்திட்டு நகைக்கடைக்கு போறதுக்கு வேண்டி ஆட்டோவுல ஏறினேன்…. எந்தப் படுபாவியோ நான் பாங்குல பணத்தை எடுத்திட்டு வரதைப் பாத்து வச்சிருப்பான் போலிருக்கு….. அப்படியே என்னைத் தள்ளி வுட்டுட்டு பணத்த புடுங்கிட்டு போயிட்டான்….” என்ற சுந்தரேசன்,
“கண்ணாலத்துக்குன்னு வச்சிருந்த மொத்தப் பணமும் போயிருச்சுலே…. இப்ப என் மவளோட கண்ணாலம் நடக்குமா இல்லியான்னு கேள்விக்குறியா ஆயிருச்சு…… எனக்கு என்ன பண்ணறதுன்னே தெரியல……. கண்ணாலம் வரைக்கும் வந்து நடக்காம நின்னுபோனா அப்புறம் என் பொண்ணு நிலைமை…. வீட்டுலயே கெடக்க வேண்டியது தான்….. அதான் உங்களைப் பாத்து உதவி கேக்கலாம்னு வந்தேன்….” என்றவர் வேதனையில் கண் கலங்கினார்.
“அய்யய்யோ…. என்னண்ணே….. உங்க நல்ல மனசுக்கு இப்படில்லாமா நடக்கணும்… கேக்கவே கஷ்டமா இருக்கே…. அந்தப் பாவி நல்லாவே இருக்க மாட்டான்….” என்றார் லச்சுமி.
“சரி கலங்காத சுந்தரு…… போலீசுல சொல்லிருக்கில்ல…. பிடிச்சிடுவாங்க…..” என்று சமாதானம் செய்த முத்துப் பாண்டியின் கையைப் பிடித்துக் கொண்டவர்,
“பாண்டி….. உன்னத்தான் மல போல நம்பி வந்திருக்கேன்…. நீதான் எனக்கு உதவி செய்யணும்….. என் நிலத்தை அடமானம் வச்சிட்டு நீதான் பணம் குடுத்து உதவணும்… இல்லன்னா இந்தக் கண்ணாலம் நடக்காதுலே….” என்று கெஞ்சுதலாய் கேட்டார்.
“என்னண்ணே இது…. இப்படியெல்லாம் சொல்லுறிய…… எங்களுக்கு நீங்க எவ்வளவோ பண்ணி இருக்கீங்க…. உங்களுக்கு ஒரு உதவின்னா செய்ய மாட்டோமா…” என்றார் லச்சுமி.
அவரை முறைத்துக் கொண்டே யோசனையாய் அமர்ந்திருந்தார் முத்துப் பாண்டி. தந்தை, நண்பனின் பதிலை எதிர்பார்த்து நோக்கியிருக்க யோசனையாய் அமர்ந்திருந்த முத்துப் பாண்டியை அழைத்தாள் கயல்விழி.
“மாமா….. உங்களை நம்பிதான் வந்திருக்கோம்…. நெலத்த அடமானமா வச்சு வெளியே பணம் கேட்டா கெடைக்கறதுக்கு நாள் ஆகுமாம்…. நீங்கன்னா, உங்களுக்கு நம்ம வயல் வரப்பைப் பத்தி தெரியும்…. அதைப் பணயமா வச்சிட்டு பணத்தைக் குடுத்தா ரொம்ப உதவியா இருக்கும்….. நாளன்னிக்கு கண்ணாலம் நடக்குறதே உங்க கையிலதேன் இருக்கு….” என்றாள் அவள்.
அவள் நிதானமாய்ப் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தவர் மனதில் ஏதேதோ கணக்குகள் ஓட, “ஒரு நிமிஷம்….. நான் வந்திடறேன்….” என்றவர் அங்கிருந்த அறைக்கு சென்று,
“லச்சுமி….. இங்க வாலே….” என்று மனைவியையும் உள்ளே அழைத்து எதையோ பேசினார். முதலில் லச்சுமி எதோ மறுத்துப் பேசுவது போலத் தோன்றினாலும் பிறகு சம்மதமாய் தலையாட்டுவது தெரிந்தது.
வெளியே வந்தவர் சோபாவில் நிமிர்ந்து அமர, தயக்கத்துடன் வெளியே வந்தார் லச்சுமி. அவர்கள் சொல்லப் போகும் பதிலுக்காய் அந்த இரு ஜீவன்களும் காத்துக் கிடந்தது.
“சுந்தரு…. கண்ணாலத்துக்கு உனக்கு என்ன தொகை வேணுமோ, உதவி வேணுமோ….. அதை நான் செய்யுதேன்…. ஆனா ஒரு நிபந்தனை…..” என்று அவர் நிறுத்த, அவர் சொன்னதைக் கேட்டு முகம் மலர்ந்தவர்கள் யோசனையோடு நோக்கினர்.
“என்ன பாண்டி… என்ன நிபந்தனை…. நீ பணம் தரேன்னு சொன்னதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குலே…. எதுன்னாலும் சொல்லுவே…. இப்ப எம்மவ கண்ணாலம் நடக்கணும்…. எனக்கு அது போதும்லே….” என்றார் சுந்தரேசன்.
“ம்ம்…. நிபந்தனை என்னன்னா, எம்மவன் மதியழகன் உன்ற வீட்டு மாப்பிள்ளையா வரணும்….. மலரு பிறந்த போதே மதிக்கு தான்னு நாம பேசிகிட்டது உனக்கு மறந்திருக்காதுன்னு நினைக்குதேன்….. நடுவுல நம்ம குடும்பத்துல கொஞ்சம் விரிசல் வந்திருச்சு…. புள்ளைங்களும் வளரும்போது எல்லாம் மாறிப் போச்சு…. ஆனா எங்களுக்கு இப்பவும் உன் மக, எங்க மருமகளா வரணும்னுதேன் ஆசையா இருக்கு…..” அவர்களின் அதிர்ந்த முகத்தைப் பார்த்து நிறுத்தியவர்,
“இதுக்கு நீ சம்மதிக்கறதா இருந்தா கடனா இல்லாம இந்தக் கண்ணாலத்துக்கான எல்லா செலவையும் நானே ஏத்துகிட்டு ஜாம் ஜாம்னு நடத்தி வக்குதேன்…. நீ யோசிச்சு சொல்லு………” என்றார்.
அதைக் கேட்டு சுந்தரேசன் அதிர்ச்சியோடு நோக்க, “மாமா…. மலருக்கு தான் மாப்பிள்ளை முடிவாகி கண்ணாலம் வரைக்கும் வந்திருச்சே….. இப்ப எப்படி மாத்த முடியும்…..” என்றாள் கயல்விழி.
“அதுனால என்ன…. கண்ணாலம் நடக்க வேண்டிய நாள்ல…. கடைசி நிமிஷத்துல எத்தனையோ குடும்பத்துல மாப்பிள்ளை, பொண்ணு மாறிப் போனதில்லையா…..” என்றார் முத்துப் பாண்டி…
“அத்த…… நீங்க ஏன் ஒண்ணுமே பேச மாட்டேங்கறீங்க….. மாமா சொன்னதைக் கேட்டு அமைதியா இருக்கிய…. உம்ம மவனைப் பத்தி உங்களுக்கு தெரியாதா…. மலர் மாதிரி ஒரு அப்பாவியான பொண்ணை எப்படி அவருக்கு கட்டி வைக்கறது…..”
“கயலு…. நீ சொல்லறது போல என் பையன் என்ன பொறக்கும் போதே குடிகாரனாவா பொறந்தான்…. சில சந்தர்ப்பம், சூழ்நிலை அவனை அப்படி மாத்திருச்சு…. மத்தபடி…. அவனுக்கு என்ன குறைச்சல்… படிப்பில்லையா…. அழகில்லையா…. கண்ணாலமானா அவனும் மாறிடுவான் தாயி…. எனக்கு நம்பிக்கை இருக்கு…..” என்றார் லச்சுமி மதியழகனின் தாயாக.
“அத்த…. அக்கா இதுக்கு ஒத்துக்கவே மாட்டா….. நீங்க மொதல்லயே சம்மந்தம் பேசியிருக்க வேண்டியது தான…. அதும் இல்லாம நீங்க நினைக்கற போல இது நாங்க பேசி முடிச்ச சம்மந்தம் இல்ல…. அவளும் அத்தானும் மூணு வருஷம் ஒருத்தரை ஒருத்தர் விரும்பி இருக்காங்க…… அவரை மனசுல வச்சிட்டு எப்படி இப்ப வேறொருத்தரை கட்டிக்க சம்மதிப்பா…..” என்று அக்காவின் நிலையை மனதில் கொண்டு கேள்வி கேட்டாள் கயல்விழி.
அதைக் கேட்டு அதிர்ச்சியோடு நோக்கினார் சுந்தரேசன்.
“ஏட்டி…. நீ என்னலே சொல்லுதே….. அக்கா காதலிச்சாளா….”
“ஆமாப்பா….. அவுகளே வந்து பொண்ணு கேட்டதால அவளுக்கு அதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமப் போயிருச்சு…..” என்றாள் கயல்விழி.
அமைதியே உருவான மலர்விழி ஒருத்தனை மூன்று வருடம் காதலித்து, யாருக்கும் தெரியாமல் கல்யாணம் வரைக்கும் வந்திருக்கிறாள் என்ற அதிர்ச்சியில் இருந்த சுந்தரேசன், அடுத்து முத்துப் பாண்டி சொன்ன வார்த்தையில் மேலும் கலங்கிப் போனார்.
“ஓ…. இத்தன நடந்திருக்கா….. சரி…. அப்ப என் மகன நீ கண்ணாலம் கட்டிக்க புள்ள…..” என்றார் முத்துப் பாண்டி.
“மாமா….. என்ன சொல்லுதிய…..” அதிர்ந்து கேட்டாள் கயல்விழி. லச்சுமியின் முகமும் அவர் சொன்னதைக் கேட்டு மலர்ந்தது. அவருக்கு அமைதியே உருவான மலர்விழியைக் காட்டிலும் கலகலப்பான கயல்விழியைத்தான் அதிகம் பிடிக்கும்.
“உன் அக்கா கண்ணாலத்தோட உன் கண்ணாலமும் நடக்கட்டும்….. எல்லா செலவையும் நானே ஏத்துக்கிடுதேன்….. உன்ற அக்காவுக்கும் நல்லபடியா கண்ணாலம் நடக்கும்….. நீ இந்த கண்ணாலத்துக்கு ஒத்துக்க…..” என்றார் அவர்.
“பாண்டி…. நீ என்னலே பேசுதே…. அவ சின்னப் புள்ளலே…. உம்மவன் நல்லா இருந்தா சந்தோஷமா இதுக்கு நான் சம்மதிப்பேன்…. அவனே குடிச்சிட்டு வீடு தங்காம அலையுதான்…. அவனுக்கு எப்படி எம் பொண்ணைக் கொடுப்பேன்….” என்றார் சுந்தரேசன் கலக்கத்துடன்.
“இங்க பாரு சுந்தரு…. எங்க விருப்பத்த சொல்லிட்டோம்… இனி நீதான் உன்ற குடும்பத்துல பேசி ஒரு நல்ல முடிவா சொல்லோணும்…..”
“அண்ணே…. உங்க சூழ்நிலைய எங்களுக்கு சாதகமாக்கிட்டு பொண்ணு கேக்குதோம்னு தப்பா நினைக்காதிய…. கயலு மாதிரி ஒரு பொண்ணு அவனுக்குப் பொஞ்சாதியா வந்தா கண்டிப்பா அவனும் சரியாகிடுவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு…. அவனோட ஜாதகத்தைப் பாத்த ஜோசியரும் அப்படித்தேன் சொன்னாக…. நீங்க வீட்டுல பேசி ஒரு நல்ல முடிவா இன்னைக்கே சொல்லுங்கண்ணே….” என்றார் லச்சுமி.
அதைக் கேட்டு ஒன்றும் பதில் சொல்லாமல் அவரை கையெடுத்துக் கும்பிட்டவர், சிலையாய் நின்று கொண்டிருந்த கயலை கைப் பிடித்து அழைத்துக் கொண்டு வெளியே சென்றார்.
வண்டியை வழியில் ஒரு மரத்தடியில் நிறுத்தியவர், கயலை இறங்குமாறு கூறினார்.
“கயலு…… இங்க பாரு புள்ள…. அப்பா, ஒன்ன அப்படில்லாம் அந்தக் குடிகாரப் பயலுக்கு கட்டிக்கொடுத்துட மாட்டேன்…… நீ பயப்படாத புள்ள…. மலரு கண்ணாலம் நின்னாலும் பரவால்ல….. இவுக கேட்டது நடக்காது….. நீ இங்க பேசினதை வீட்டுல சொல்ல வேணாம் தாயி…. பணம் கெடைக்கலன்னு மட்டும் சொல்லிடுவோம்….” என்றார் சுந்தரேசன்.
“இல்லப்பா…. அவுகளுக்கு சம்மதம்னு சொல்லிடுங்க……”
“நீனு என்னலே சொல்லுதே……”
“ஆமாப்பா….. இந்தக் கண்ணாலம் நின்னு போனா அக்கா உசுரோட இருக்க மாட்டா…..”
“படுபாவி….. ஊமச்சி மாதிரி இருந்திட்டு அவ என்ன வேல பண்ணி இருக்கா….. அவளுக்காக ஒன்னோட வாழ்க்கைய எப்படி தாயி நாசமாக்க விடுவேன்….”
“அப்பா… இந்த விஷயத்த வீட்டுல யாருகிட்டயும் சொல்லாதிய….. அக்கா காதலிச்சது தெரிஞ்சா ஆத்தா சாமியாடிடும்…. அம்மா மனசு தாங்காது….. அதும் இல்லாம இந்தக் கண்ணாலம் நடந்தே ஆவணும்…..” என்றாள் அவள்.
“நீ…. என்னலே இப்படி சொல்லுதே….. அப்ப உன் வாழ்க்கை…..”
“அதை நான் சரி பண்ணிக்குவேன்பா….. எனக்கு அந்த நம்பிக்க இருக்கு…. இப்ப அக்காவோட வாழ்க்கதேன் முக்கியம்…. அத்தானுக்கு அவுக குடும்பத்துல கண்ணாலம் கட்டி வைக்க சந்தர்ப்பம் பாத்துட்டு இருக்காக…… நாம அதுக்கு இடம் கொடுக்கக் கூடாது….” என்றவள் மலர் அவளிடம் சொன்னதை எல்லாம் தந்தையிடம் சொல்லிவிட்டு,
“இந்த விஷயம் எல்லாம் நமக்குள்ளே இருக்கட்டும் பா…. நம்ம வூட்டுல கூட யாருகிட்டயும் சொல்ல வேணாம்….. நீங்களா கண்ணாலத்துக்கு சம்மதிச்ச போல சொல்லிடுங்க…..” என்ற சின்ன மகளை கண்ணீரோடு பார்த்தார் சுந்தரேசன்.
விடை தெரியா வினாக்களுமாய்
விடியலை நான் தேடுகின்றேன்….
விம்மி நிற்கும் மனதை நான்
விண்மீனால் மறைக்கின்றேன்……
நிறைந்து நிற்கும் வெண்மேகம்
நிறைவை வாழ்வில் தந்திடுமோ…..
நிழல் போல எந்தன் வாழ்வில்
நிஜமாகத் தொடர்ந்திடுமோ…..
கனவுகளை மூட்டை கட்டி – உன்
நினைவில் நான் தொலைகின்றேன்….
கரம் பிடித்துக் கொள்பவனே…..
என் சிரம் நீயும் கொய்வாயோ….
கவலை எல்லாம் நெஞ்சுக்குள்ளே
கலக்கமில்ல முகத்தினிலே….
கடவுள் மேலப் பழியப் போட்டு
கரத்தை நானும் நீட்டப் போறேன்……
மனமிருந்தால் மார்கமுண்டு….
மனசில் நானும் நினைச்சுப்புட்டேன்….
மனமில்லா மணத்தையும் நான்
மணம் கமழச் செய்திடுவேன்…..