Advertisement

அத்தியாயம் – 5
“அய்யய்யோ…. சம்மந்தி வூட்டுல அப்படியா சொல்லிட்டாக…. இப்போ என்னங்க பண்ணுவோம்……” கையைப் பிசைந்தார் ராசாத்தி.
“எனக்கும் ஒண்ணும் புரியல …. கல்யாணத்துக்கு முதநாளு கண்ணாலம் நின்னு போச்சுன்னு சொன்னா நம்ம பொண்ணை யாரு கட்டுவாங்க……” என்று கலக்கத்துடன் கூறினார் சுந்தரேசன்.
“மாப்பிள்ள…. கலங்காதீய…. ஏதாவது பண்ணுவோம்….” என்றார் மாணிக்கம்.
“அண்ணே….. சம்மந்திம்மா என்னதேன் சொன்னாக….. கொஞ்சம் தெளிவாத்தேன் சொல்லுங்களேன்…..” என்றார் ராசாத்தி பதைபதைப்புடன்.
“ராசாத்தி, இருக்கறதைப் போட்டு கண்ணாலத்த முடிப்பம்னு சொன்னா அந்த சம்மந்திம்மா ஒத்துக்க மாட்டேங்குது….. சரி…. தள்ளிப் போடலாம்னு கேட்டதுக்கு இந்த மாசத்துல கண்ணாலம் வைக்கலேன்னா அப்புறம் ரெண்டு வருஷத்துக்கு மாப்பிள்ளைக்கு கண்ணால யோகமே இல்லன்னு ஜோசியர் சொல்லி இருக்காராம்….. நம்ம வேண்டாம்னு சொன்னா அந்த முகூர்த்தத்துலயே அவுங்க அண்ணன் பொண்ணைக் கண்ணாலம் பண்ணி வச்சிடுவோம்னு வேற சொல்லுதாக….. எங்களுக்கு என்ன பண்ணறதுன்னே தெரியல…..”
“ஓ…. இப்படியா சொன்னாக…. கடவுளே…. என்ற பொண்ணு காதுல விழுந்திறப் போவுது….” என்று திரும்பிப் பார்த்தவர் புலம்பத் தொடங்கினார்.
“நல்ல சம்மந்தம்… நல்லபடியா முடிச்சுக்கொடுத்தா எம்பொண்ணு சந்தோஷமா இருப்பான்னு நெனச்சேன்…… திருப்தி இல்லாம கண்ணாலம் பண்ணி வச்சு அப்புறம் நம்ம பொண்ணு கண்ணக் கசக்கிட்டு நிக்குறாப்புல ஆயிடக் கூடாதுல்ல…. இப்ப நாம என்னண்ணே பண்ணறது….” என்றார் ராசாத்தி.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஓரமாய் நின்று கேட்டுக் கொண்டிருந்த கயல்விழி இடிந்து போய் அமர்ந்திருந்த சுந்தரேசனின் அருகில் வந்து அமர்ந்தாள்.
“அப்பா….. நான் ஒண்ணு சொன்னா கேப்பியளா…..”
“நீ என்ன தாயி சொல்லப் போவுத…. சொல்லு….” என்றார் சுந்தரேசன்.
“அப்பா….. நம்மகிட்ட அக்காவோடது, என்னோடது, அம்மா, ஆத்தா நகை எல்லாம் சேத்து இருபது பவுன் இருக்கும்….. மாமா போடறேன்னு சொன்ன அஞ்சு பவுனையும் சேத்தா இருபத்தஞ்சு பவுன் ஆயிரும்….. நம்ம நெலத்தை அடமானம் வச்சு பாக்கி பணத்துக்கு ஏற்பாடு பண்ணினா பிரச்சனையில்லாம கண்ணாலத்த முடிச்சிடலாம் பா…..” என்றாள்.
அவளைப் பாவமாய்ப் பார்த்த சுந்தரேசன், “நானும் இதை யோசிக்காம இல்ல தாயி….. ஆனா, இந்தக் கடைசி நேரத்துல பணத்துக்கு எங்கேன்னு போயி கேப்பேன்….”
“மாமா… உங்களுக்கு ஏதும் பைனான்ஸ்காரவுகள தெரியாதா…..” என்றாள் கயல்.
“அப்படில்ல கயலு…. நாம பைனான்சுக்கு போனாலும் நம்ம எடத்த வந்து அவுக பாத்துட்டு அதுக்கான பேப்பர் எல்லாம் சரி பார்ப்பாக…. நிறைய சோலி இருக்குலே… ஒடனே பணத்தக் குடுத்துற மாட்டாக…..” என்றார் மாணிக்கம்.
“மாமா….. நான் ஒரு ரெண்டு லட்சம் என் பிரண்டு கிட்ட சரி பண்ணித் தாரேன்…. நம்ம எடத்த வச்சு வாங்குறதுன்னா அப்பா சொன்ன போல கொஞ்சம் நேரம் எடுக்கும்…. நம்மளுக்குத் தெரிஞ்சவுங்க யாருகிட்டயாவது கேட்டுப் பாக்கலாம் மாமா…..” என்றான் மணிமாறன்.
கயல் அவனை மெச்சுதலாய் பார்க்க, மணிமாறன் சொன்னது சரியாக இருந்தாலும் யாரிடம் கேப்பது என்று குழம்பினார் சுந்தரேசன்.
“நீங்க சொல்லுறது சரிதான் மாப்பிள்ள…. இன்னும் எட்டு லட்சத்துக்கு மேல வேணும்…. யாரு உடனே குடுப்பாக……”
“ஏன்…. நம்ம பண்ணை முத்துப் பாண்டி ஒங்க பழைய நண்பராச்சே….. அவரு கிட்ட இல்லாத பணமா…. அங்க கேட்டுப் பாக்கலாமே…..” என்றான் மணிமாறன்.
“அவங்கிட்டயா…..” என்று சுந்தரேசன் தயக்கத்துடன் கேட்க,
“ஏன்…. மாப்பிள்ள…. எதுக்கு தயக்கம்…. நம்ம எடத்தை பணயம் வச்சு கடனாதானே கேக்குதோம்…. நம்ம ஊருக்காரருங்குறதால எடத்தைப் பத்தி ஏதும் அவருக்கு ஆராய வேண்டி இருக்காது…. பணமும் சீக்கிரம் கிடைக்க வாய்ப்பிருக்கில்ல….” என்றார் மாணிக்கம்.
“ஆமாங்க….. என்னதான் இப்ப பேச்சு வார்த்தை இல்லைனாலும் நமக்கு ஒரு கஷ்டம்னா அவரு செய்யாம இருப்பாரா….. அதும் எடத்த வச்சிட்டு தானே பணத்த கேக்கப் போறீய…. போயிப் பார்த்திட்டு வாங்க….” என்றார் ராசாத்தி.
“ம்ம்…. சரி…. நீங்கள்ளாம் சொல்லுதிய… நான் போயிப் பாக்கேன்….” என்றவர்  கிளம்பினார்.
“மச்சான்…. நீங்களும் கூட வரியளா….” என்றார் மாணிக்கத்திடம்.
“இல்ல மாப்பிள்ள…. அந்தாளுக்கும் எனக்கும் வரப்பு விஷயத்துல பேச்சு வார்த்தை நடந்து அதுல கொஞ்சம் மனஸ்தாபம் ஆயிருச்சு….. இப்பப் பேசிக்கறதில்ல…. நீங்க நம்ம பெரியவங்க யாரையும் கூட்டிட்டுப் போங்களேன்….” என்றார் மாணிக்கம்.
“ஆமாம் மாமா….. எனக்கும் அந்தப் பிரச்சனைல அவரு ஆளுகளோட கைகலப்பு வரைக்கும் வந்திருச்சு…. இல்லன்னா நானே உங்களோட வந்திருப்பேன்…..” என்று மணிமாறனும் தயங்கினான். பேச்சியம்மா மலரின் அருகில் இருந்ததால் அவர்களால் பிரச்சனையில்லாமல் பேச முடிந்தது.
“ஏலே கயலு…. நீ அப்பா கூட போயிட்டு வாயேன்…. லச்சுமி அக்காக்கு ஒன்னக் கண்டாலே ரொம்பப் பிரியம்…. நீ போனின்னா அவுககிட்ட பேசுறதுக்கும் வசதியா இருக்கும்ல…..” என்றார் ராசாத்தி.
“ஆமாங்கண்ணு…. நீனு அப்பாவோட வரியா…. தாயி……” என்றார் சுந்தரேசனும் கயல்விழியிடம்.
“சரிப்பா…. நான் டிரெஸ்ஸை மாத்திட்டு வந்திடுதேன்….” என்றவள் வேகமாய் அவளது அறைக்குள் சென்று ஒரு சுரிதாரைப் போட்டுக் கொண்டு வந்தாள்.
“என்னலே…. புடவை கட்டாம இதையப் போட்டுட்டு வந்திருக்கவ….” என்றார் ராசாத்தி.
“போதும்மா…. சீக்கிரம் போயிட்டு வந்திடுதோம்…” என்றவள் தந்தையுடன் கிளம்ப, இருவரும் அவரது வண்டியில் முத்துப் பாண்டியின் வீட்டை நோக்கி கிளம்பினர்.
————————————————————————————————————————
கேட்டுக்குள் வீட்டுக்கு முன்னால் இருந்த பெரிய வாசலில் சில பெண்கள் மிளகாயை உலர்த்திக் கொண்டிருக்க பழுத்து சிவந்த மிளகாய் இளம் வெயில் பட்டு பவளமாய் மின்னிக் கொண்டிருந்தது. காரமான நெடி காற்றில் கலந்திருக்க மூக்கில் ஏறாமல் இருப்பதற்காய் முந்தானையால் மூக்கை சுற்றிக் கட்டி இருந்தனர்.
“ஏட்டி அலமு….. மிளகாய்த் தோட்டத்துல இருந்து மோர் மிளகாய் போட கொஞ்சம் பச்சமிளகாய கொண்டு வர சொல்லி இருந்தேனே….. முத்து கொண்டு வந்து குடுத்தானாலே…..”
“ம்ம்… கொண்டு வந்து குடுத்தாகம்மா…. அதத்தேன் தயிர்ல கீறிப் போட்டுகிட்டு இருக்குதேன்…. இன்னைக்கு கொஞ்சம் வெயில் சுள்ளுன்னு அடிக்குது…. காய வச்சி எடுத்திடலாம்….” என்றாள் அலமு.
“ம்ம்… சீக்கிரம் செய் புள்ள…. நீ செஞ்சு முடிக்கறதுக்குள்ள வெயிலு போயிரப் போவுது….. அந்தப் புள்ள வாசலக் கூட்டிப் போட்டு வாரியல முன்னாடி போட்டுட்டு போயிருக்கா பாருலே….. அத எடுத்து வந்து ஓரமா போடுவே…….” என்று முன்னில் நின்று வேலை வாங்கிக் கொண்டிருந்தார் லச்சுமி.
அப்போது கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்த சுந்தரேசனையும் கயல் விழியையும் கண்டு அவரது முகம் மலர்ந்தது.
“வாங்கண்ணே…. வா கயலு…. நல்லாருக்கியளா….. என்ன அதிசயம்….. வராதவுக வந்திருக்கிய….. உக்காருங்க….. தாயி….. எம்புட்டு அழகா வளந்து நிக்கறவ…. என் கண்ணே பட்டிரும் போல் இருக்கே…. ஒன்னப் பாத்து எம்புட்டு நாளாச்சு…..” என்று அவளது கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தவர், “எங்கள எல்லாம் மறந்துட்டிகளா அண்ணே…..” என்று அவர்களை வரவேற்றுவிட்டு,
“ஏலே… அலமு…. நீ போயி சம்பாரம் எடுத்திட்டு வா புள்ள……” என்று அலமுவை அடுக்களைக்கு அனுப்பிவிட்டார்.
“அப்படில்லாம் இல்ல தாயி…. ஒன்னைய மறக்க முடியுமா….. கூடப் பொறந்தவ இல்லாத கொறைய நீதானே தீர்த்து வச்ச….. காலம் மாறும்போது எல்லாரும் அதோட போக்குல ஓடிட்டு இருக்கோம்…. நான் வேற என்னன்னு சொல்லறது….” என்றார் சுந்தரேசன்.
“ம்ம்…. அதும் சரிதேன் அண்ணே….. நீங்கதான் என்னய அவுகளுக்குப் பொண்ணு பாத்துக் கட்டி வச்சீக…. ரெண்டு பேரும் எவ்வளவு சினேகிதமா இருந்தவுக…. எல்லாம் மாறிப் போச்சு….. எல்லாம் இந்த பணம் பண்ணின மாயம்….. புது ஆளுக சகவாசம் அவரை அப்படியே மாத்திப் போடுச்சு…..” என்று சலித்துக் கொண்டவர் அலமு கொண்டு வந்த சம்பாரத்தை எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார்.
“அப்புறம் கயலு….. நீயும் இந்த அத்தைய மறந்து போட்டியல்ல….. இந்த வூட்டுப் பக்கமே வாரதில்ல….. மலரோட கண்ணாலப் பத்திரிகைய கூட அவுகள ரைஸ் மில்லுல பாத்து குடுத்துட்டு போயிருக்கிய…..” என்றவரின் வருத்தமான முகம் கயலின் மனதை உருக்க அவர் அருகில் வந்தாள்.
“அப்படில்லாம் ஒண்ணும் இல்ல அத்த….. நீங்க விசனப் படாதீக……” என்றவளின் கண்கள் வெகு நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டுக்கு வந்ததில் வீடெங்கும் பாய்ந்து கொண்டிருந்தது.
“அந்தக் குடிகாரனைக் கண்ணுல பாக்கக் கூடாது சாமி……” என்று எண்ணிக் கொண்டே அவன் எங்காவது தென்படுகிறானா என்று கண்ணை சுழல விட்டுக் கொண்டிருந்தாள்.
“அவுக மேல மச்சுலதான் இருக்காக…. இப்ப வரச் சொல்லுதேன்….” என்றவர்,
“அலமு…. அய்யாவை கீழ வரச் சொன்னேன்னு போயி சொல்லு புள்ள….” என்று அவளை அனுப்பி வைத்தார்.
“மலரு கண்ணால சோலி எல்லாம் எப்படிப் போவுதுண்ணே…… ராசாத்தியும் ஆத்தாவும் நல்லாருக்காகளா……”
“எல்லாரும் சௌக்கியம்தேன்….. கண்ணால சோலியெல்லாம் நடந்திட்டு இருக்கு தாயி…. அது விஷயமா உங்ககிட்ட பேசணும்னுதேன் வந்தேன்….” என்று மேலே சொல்லத் தயங்கினார் சுந்தரேசன்.
“என்னண்ணே… என்னவோ சொல்லறதுக்கு தயங்கற போல இருக்கு…. என்னன்னு சொல்லுங்கண்ணே….. என்ற வீட்டுல தான் கண்ணாலம்னு ஒண்ணு நடக்கறது சந்தேகமாப் போயிருச்சு….. என்ற மகனுக்கு உங்க பொண்ணைத் தாங்கன்னு தைரியமா பழைய போல என்னால இப்பக் கேக்க முடியல…..” என்று அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே அதைக் கேட்டுக்கொண்டு அங்கு வந்தார் முத்துப்பாண்டி.
“வாய்யா சுந்தரு…. என்ற வூட்டுக்கு வர்ற வழியெல்லாம் ஒனக்கு நியாபகம் இருக்காலே…..” என்றவர், சுந்தரேசனிடம் அமர அவரைக் கண்டதும் மரியாதைக்காய் சட்டென்று சோபாவில் இருந்து எழுந்து நின்றாள் கயல்விழி.
“இது நம்ம கயலு தானே…..” கேள்வியாய் புருவத்தைத் தூக்கினார்.              
“ஏங்க…. உங்களுக்கு அடையாளம் தெரியலையா….. அவளேதேன்…..” என்றார் லச்சுமி வாயெல்லாம் பல்லாக.
“அப்படியா…..” என்று அவளை மெச்சுதலோடு அவர் பார்க்க,
“புள்ள அடையாளம் தெரியாம எப்படிப் பெருசா வளந்துட்டா…. இல்லங்க…..” என்று கயலின் தலையை அன்போடு தடவிக் கொடுத்தார் லச்சுமி.

Advertisement