மாணிக்கத்திடம் வந்த ஊர்ப்பெரியவர் ஒருவர், “ஏன் தம்பி…. எல்லாரும் இப்படி இடிஞ்சு போயி உக்கார்ந்திருந்தா கண்ணாலம் எப்படி நடக்கும்…. ஏதாவது சட்டுபுட்டுன்னு யோசிச்சு ஒரு முடிவு பண்ணி அடுத்து என்ன பண்ணறதுன்னு பாக்க வேணாமா….. மாப்பிள்ள வூட்டுல விஷயத்தை சொல்லிப் பேசிப் பாக்கலாம்ல…..” என்றார்.
“ம்ம்…. சரிங்கையா….. ஏதாவது பண்ணித்தான் ஆவணும்… நான் மாப்பிள்ள கிட்ட பேசுதேன்…..” என்றவர், உள்ளே இருந்த சுந்தரேசனிடம் வந்தார்.
“மாப்பிள….. நடந்தது நடந்து போச்சு…… இப்படியே ஒக்காந்திருந்தா என்ன ஆகப் போவுது…. அடுத்து என்ன பண்ணனும்னு யோசிக்கணுமில்ல…… நாளன்னிக்கு கண்ணாலத்த வச்சுட்டு….. நாம ஒண்ணும் பண்ணாம இருந்தா சரிவராது….. ஏதாவது பண்ணியாகணும்…. மொதல்ல சம்மந்தி வூட்டுல போயி பேசிப் பாப்பம்….. பொறவு எதுனா பணம் புரட்டி இருக்கறத வச்சு கண்ணாலத்த முடிப்பம்…..” என்றார் அவர் தோளில் ஆதரவாய் கை வைத்து.
அதைக் கேட்டதும் சட்டென்று திரும்பிய சுந்தரேசன், “எம்மவ கண்ணாலத்த எம்புட்டு நல்லாப் பண்ணோனும்னு இருந்தேன்…. இப்படி ஆயிப் போச்சே….” என்று கண் கலங்கினார்.
“மச்சான்….. எனக்கு என்ன பண்ணறதுன்னே வெளங்கல…. எதையும் யோசிக்கற நெலமைல நான் இல்ல…. என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க…. செய்யுதேன்…..” என்றார் சோர்வுடன்.
“சரி…. கெளம்பி வாங்க…. போயி மாப்பிள்ள வூட்டுல பேசிட்டு வருவம்…. இருக்கற நகைய வச்சு கண்ணாலத்த முடிப்பம்…. பொறவு, செய்ய வேண்டிய சீர்வரிசை எல்லாம் நல்லா செய்வோம்….” என்றார்.
அதைக் கேட்டதும் சட்டென்று ராசாத்தி நிமிர்ந்து பார்த்தார்.
“அன்னைக்கு நாம இருந்த நெலம வேற புள்ள…. இப்ப இப்படின்னு சொன்னா புரிஞ்சுக்க மாட்டாகளா…. பேசிப் பாக்குதோம்….. பொறவு என்ன பண்ணலாம்னு யோசிப்பம்….” என்றார் மாணிக்கம்.
“சரி அண்ணே…. நீங்க பொதுவா பேசிப் பாருங்க….. அவங்களுக்கு மனசுக்கு திருப்தி இல்லாத போல இருந்தா வற்புறுத்தி சொல்ல வேணாம்…… நமக்கு வேற எங்கனாச்சும் பணம் சரி பண்ண முடிஞ்சா நாம சொன்னபடியே கண்ணாலத்த கொறை இல்லாம முடிச்சிடலாம்….. அதுக்கு எதுன்னா பண்ண முடியுமா….” என்றார்.
“இவ்வளவு பெரிய தொகை உடனே ரெடி பண்ண கொஞ்சம் கஷ்டம் தாயி…. நாம மொதல்ல மாப்பிள்ள வூட்ல பேசிப் பாத்திட்டு அடுத்தத யோசிப்பம்….” என்றார்.
“சரிண்ணே….. பேசிட்டு வாங்க…..” என்றார் ராசாத்தி மனசில்லா மனதுடன். மகளின் கல்யாணத்திற்கு சீர்வரிசை எதிலும் குறை வைத்து பின்னர் அது அவளது வாழ்க்கையை பாதிக்குமோ என்று அவரது மனம் அங்கலாய்த்தது.
உறவில் சில பெரியவர்களையும் அழைத்துக் கொண்டு சுந்தரேசனும் மாணிக்கமும் மலரின் மாப்பிள்ளை வீட்டில் பேசுவதற்காகக் கிளம்பினர்.
பார்வதி உறவினர்களை கவனித்துக் கொள்ள ராசாத்தி கயலிடம் வந்தார். “கயலு…. அக்கா நேத்திருந்து ஒண்ணுமே சாப்பிடாமக் கெடக்கா….. மனசொடிஞ்சு போயிடப் போவுதா….. அவகிட்டே போயி கொஞ்சம் சமாதானமா பேசு புள்ள……” என்றார்.
“ம்ம்…. சரிம்மா…. நான் அக்காக்கிட பேசுதேன்……” என்ற கயலு மலரைத் தேடி மாடிக்குச் சென்றாள்.
ராசாத்தி பேச்சியம்மாவின் அறைக்கு கஞ்சியை எடுத்துக் கொண்டு செல்ல, “ஏலே ராசாத்தி….. ஒன்ற குடும்பத்துல யாரும் கண்ணாலத்துக்கு பணம் குடுத்து உதவ மாட்டாகளோ….” என்றார் அவர் வேண்டுமென்றே.
“அண்ணாரு மலருக்கு அஞ்சு பவுன்ல நகயும், முறையா செய்ய வேண்டிய மாமன் சீரும் செய்யுதேன்னு சொன்னாக…. அந்தப் பணம்தேன் வச்சிருப்பாக…. அவுக கிட்ட இம்புட்டு பணம் எப்படி இருக்கும் அத்த…..” என்றார் வருத்தத்துடன்.
“உக்கும்…. அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்து ரெண்டு அருவாவாம்…. அந்தக் கணக்கால இருக்கு….. ஆத்திர அவசரத்துக்கு ஒதவலன்னா அப்புறம் என்ன சொந்தம்…. பெருசா தலையில தூக்கி வச்சு ஆட வேண்டியது….” என்று கொடுக்காய் கொட்டியவரின் வார்த்தைகள் அவர் மனதில் ரணமாய் வலித்தது.
அதற்கு மேல் அங்கே நின்று பேசினால் அவர்கள் பேசுவதைக் கேட்டு அண்ணி பார்வதி வருத்தப் படுவாரோ என நினைத்த ராசாத்தி மாமியாரின் அறைக் கதவை சாத்திவிட்டு வெளியே நடந்தார்.
ராசாத்தியின் கல்யாணம் முடிந்து வந்ததில் இருந்து இந்த மாதிரியான பேச்சைத்தான் அவர் மாமியாரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். ராசாத்தியின் தந்தை சொன்னது போல கல்யாணத்துக்கு சீர்வரிசை சரியாக செய்யவில்லை என்று பேச்சியம்மாவிற்கு கோபம்.
அறுவடை முடிந்து அந்தப் பணத்தில் மகளின் கல்யாணத்தை செய்ய நினைத்திருந்தார் ராசாத்தியின் தந்தை. தவறிப் பெய்த பருவமழையில் வயல்கள் தண்ணீரில் மிதக்க தானியங்கள் எல்லாம் நாசமாகி ராசாத்தியின் தந்தைக்கு பெருத்த நஷ்டத்தைக் கொடுத்தன.
ராசாத்தியைப் பெண் பார்த்து பிடித்துப் போன சுந்தரேசன் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, “கல்யாணத்தை மட்டும் செய்தால் போதும்…. நகை, சீர் வரிசை எதுவும் வேண்டாம்……” என்று கூறிவிட்டார்.
தனது பேச்சைக் கேக்காமல் மகன் ஒன்றுமில்லாத மருமகளைக் கொண்டு வந்து விட்டானே என்று அன்று முதலே ராசாத்தியின் மீது பேச்சியம்மாவிற்கு கடுப்பு கூடிவிட்டது. மகனுக்காக சிறிது அடக்கி வாசித்தாலும் மருமகளின் குடும்பத்தை ஏசுவதை நிறுத்தவில்லை.
ராசாத்தியின் அண்ணன் மாணிக்கமும் அப்போது தந்தையோடு தான் விவசாயம் செய்து வந்தார். முடிந்தவரை முயற்சி செய்து சிறிது நகையோடு தங்கையின் கல்யாணத்தைப் பண்ணி வைத்தாலும் அன்று முதல் ராசாத்தியின் குடும்பத்தை கண்டாலே அவள் மாமியாருக்குப் பிடிக்காமல் போனது.
தனக்கு நேர்ந்தது போல தன் மகளின் கல்யாணத்திலும் வந்திடக்கூடாது என்றுதான் இப்போது ராசாத்தியின் மனம் தவித்தது. எப்படியாவது யாரிடமாவது கடன் வாங்கியாவது மகளுக்கு சொன்னது போல சீர்வரிசையும் நகையும் கொடுத்து கல்யாணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்று அவர் மனம் துடித்தது. மலரின் மாப்பிள்ளை வீட்டில் இருந்து கணவர் வந்து சொல்லப் போகும் சேதிக்காக கவலையோடு காத்திருக்கத் தொடங்கினார்.
“கருப்பசாமி அய்யா…. என் மகளுக்கு எந்தக் கொறையுமில்லாம கண்ணாலம் நல்லபடியா நடந்தா உங்கோவில்ல கெடா வெட்டி பொங்க வெக்குதேன்…..” என்று அவசரமாய் வேண்டுதல் ஒன்றை வைத்துவிட்டு பிரார்த்தனையோடு காத்திருக்கத் தொடங்கினார் ராசாத்தி.
“ஏட்டி… மலரு…. எழுந்திருவே…. சும்மா படுத்துட்டே இருந்தா எல்லாம் சரியா போயிடுமா….” அழுதழுது கன்னங்களில் கண்ணீரின் கோடுகள் வரியாய்த் தெரிய கட்டிலில் படுத்திருந்த மலரை எழுப்பினாள் கயல்விழி. மௌனமாய் எழுந்து சுவரோடு சாய்ந்து அமர்ந்தவளின் கண்கள் அப்போதும் கண்ணீர் சொறிவதை நிறுத்தவில்லை.
“எதுக்குலே…. நீ இப்படிக் கலங்குதே….. இப்ப என்ன ஆயிருச்சு….. பெரியவங்க இருக்காகல்ல….. எல்லாம் அவுக பாத்து சரி பண்ணிடுவாக…. நீ சும்மா அழுகாதலே….” என்றாள் கயல்.
“இ… இல்ல கயலு…. எ… எனக்கு ரொம்ப பயமாருக்கு…….”
“எதுக்கு நீனு தேவையில்லாம பயப்படுத…. அத்தான் வூட்டுல பேசிட்டு வரத்தேன் அப்பாவும் மாமாவும் போயிருக்காகல்ல…. நடந்தத சொன்னா அவுக புரிஞ்சுக்கப் போறாக…. இல்லன்னா கொஞ்ச நாள் கண்ணாலத்த தள்ளி வக்க வேண்டியது தான்….” என்று பெரிய மனுஷியாய் கயல் மலரைத் தேற்ற கட்டிலில் அமர்ந்திருந்த கயலின் கையைப் பற்றிக் கொண்டாள் மலர்.
“அ… அப்படியில்ல புள்ள…. ஒனக்குத் தெரியாது…. இதுல சில சிக்கல் எல்லாம் இருக்கு…..”
“என்னவே பெரிய சிக்கல்…. கண்ணாலத்துக்கு பணம் சரியாகலன்னா தள்ளிப் போட வேண்டியது தான…. இல்லன்னா, கண்ணாலத்த முடிச்சிட்டு பொறவு சீர் செனத்தி எல்லாம் குடுத்துக்க வேண்டியது தான்… அப்படியும் உன்ற மாப்பிள்ள வூட்டுல சம்மதிக்கலன்னா ஒரு கும்பிடப் போட்டு வேற மாப்பிள்ள பாத்துக்க வேண்டியது தான்…… உன் அழகுக்கு மாப்பிள்ள கெடைக்காமலா போயிடும்….”
“போதும்… நிறுத்துலே….. காரியம் புரியாமப் பேசாத…. ஒனக்குத் தெரியாத சில விஷயமெல்லாம் இதுல இருக்கு….”
“என்னவே…. சொல்லுதே…. என்ன விஷயம்….” என்றாள் கயல் ஆச்சர்யத்துடன்.
“அவுக அம்மா… அதேன் என்னட அயித்த, இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டாக….. அவுக குடும்பத்துலயே ஒரு பணக்கார வூட்டு சம்மந்தம் பேசறதுக்கு இருந்தாக….. நடுவுல என்னைத்தேன் பண்ணிக்குவேன்னு இவரு புடிவாதம் புடிக்கப் போயிதேன் இந்தக் கண்ணாலத்துக்கு சம்மதிச்சாக…. அதுவும் நாம சீர் செனத்தி, நகை எல்லாம் ஓரளவுக்கு செய்யுதோம்னு சொன்னதால பெருசா கண்டுக்கல…..”
“நான் உன்கிட்ட கூட சிலதெல்லாம் சொல்லல புள்ள….” என்று குனிந்து கொண்டு சேலையின் முந்தானையை திருகிக் கொண்டிருந்த மலர், “நீ இத யாருகிட்டயும் சொல்லிடாதவே…. நானும் அவரும் மூணு வருஷமா காதலிக்குதோம்…… நம்ம ஊருல காதல்னு சொன்னாலே ஒரு மாதிரிப் பாப்பாக….. அதேன்….. அவுகளா பொண்ணு கேட்டு வர மாதிரி வந்தாக…..” என்று சொல்லி முடித்ததும்,
“அடிப் பாவி…. ஊமச்சி மாதிரி இருந்துட்டு இதெல்லாம் பண்ணிருக்கியா நீனு…. எங்கிட்ட கூட இம்புட்டு நாளா சொல்லாம இருந்திருக்கே…..” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் கயல்.
“ம்ம்… இந்தப் பூனையும் பால் குடிக்குமாங்குற கணக்கா இருந்துட்டு என்ன வேல பண்ணிருக்கவ….. சரி… நான் யாருகிட்டயும் சொல்ல மாட்டன்…. நீனு பயப்படாத….. சரி…. அத்தான்கிட்ட சொல்லி கண்ணாலத்தக் கொஞ்சம் தள்ளிப் போட சொல்லுவோம்…. அதுக்கு உன்ற அத்த ஒத்துக்குவாகள்ள…..” என்றாள் கயல்.
“வந்து…. அது முடியாதுவே……” என்ற மலர், அதற்கு மேல் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தாள் கயல்.