Advertisement

அத்தியாயம் – 4
வீட்டுக்கு முன்னால் ஆட்கள் பந்தல் போட்டுக் கொண்டிருக்க வாசலில் நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்த ராசாத்தி, அண்ணனும் அண்ணியும் வருவதைக் கண்டு முகம் மலர்ந்தார். “அண்ணே….. வாங்கண்ணே…. வாங்க……. மதனி……” முகமெல்லாம் புன்னகைக்க வரவேற்றார்.
“ராசாத்தி….. எப்படி இருக்கவ….. மருமகளுக எங்க…..” விசாரித்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தனர் மணிமாறனின் தந்தை மாணிக்கமும் அன்னை பார்வதியும்.
“நல்லாருக்கேன் அண்ணே….. உக்காருங்க…… பிள்ளைக இங்க தான் தோட்டத்துல இருக்காக….. கூப்பிடுதேன்…..” என்றவர், “ஏலே கயலு….. மாமாவும் அத்தையும் வந்திருக்காக…. இங்க வாங்கலே…..” என்று தோட்டத்தை நோக்கிக் குரல் கொடுத்தார்.
தோட்டத்தில் கல்யாண மண்டபத்துக்குக் கொண்டு போவதற்காக காய்கறிகளைப் பறித்துக் கொண்டிருந்த கயலும், மலரும் ராசாத்தியின் குரலைக் கேட்டு, “மருதண்ணே….. பிஞ்சு வெண்டையை மட்டும் பறிச்சிட்டு முத்தினதை வெதைக்கு விட்டிருங்க….. நாங்க போவுதோம்…..” என்று கூறிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தனர்.
“வாங்க மாமா…. வாங்கத்தை…..” என்று மலர் அவர்களை வரவேற்க, பின்னால் நுழைந்த கயல்,
“மாமா…. எம்புட்டு நாளாச்சு….. நீங்க இங்க வந்து…..” என்றவள், மூக்கை உறிஞ்சிக் கொண்டே, “அத்த….. எனக்கு என்னமோ கொண்டு வந்திருக்கிய போல….. நல்லெண்ணை, கருப்பட்டி வாசன தூக்குது…..” என்றாள் மாமனுக்கு அருகில் சென்று சோபாவில் அமர்ந்து கொண்டு.
“ஏலே….. எழுந்திருவே…… போயி காப்பியப் போடு….. இப்பவும் சின்னப் புள்ள கணக்கா அவர் பக்கத்துல ஒக்காந்து பேசிட்டு இருக்கவ…..” என்று அதட்டிய அன்னையைக் கண்டு முகம் சுருங்கினாள்.
அதைக் கண்ட மாணிக்கம், “நீ என்னட்டி… புள்ளைய அதட்டுறவ…… அவ எவ்ளோ வளந்தாலும் என் செல்ல மருமகதேன்…..” தங்கையை அதட்டியவர்,
“கயலு….. உன் அத்த உனக்குன்னே கருப்பட்டி போட்ட உளுந்துக்களி செய்து எடுத்திட்டு வந்திருக்கா….. ஏலே…. அதை எடுத்து கயலு கிட்டே குடு….” என்றார் பார்வதியிடம்.
பார்வதி புன்னகையுடன் பைக்குள் இருந்து பாத்திரத்தை எடுத்து நீட்ட அதை ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டு உடனே திறந்து பார்த்தாள் கயல்விழி.
“அய்…… உளுந்துக் களி என்னமா மணக்குது…… என் அத்த கையால எது செஞ்சாலும் ருசிதேன்….. மாமா….. இங்க உங்க தங்கச்சியும் தான் ஒரு களி செய்வாக….. அய்யே….. வாயில வக்க முடியாதுல்ல….” என்றாள் அன்னையின் மீது கடுப்புடன்.
“அடிப்பாவி… போன வாரம் கூட நாஞ்செஞ்ச உளுந்துக் களிய வழிச்சு வழிச்சு தின்னுட்டு இருந்தவ… இப்ப மாத்திப் பேசுதியா…..” என்றார் ராசாத்தி மூக்கில் விரலை வைத்து.
“ம்ம்ம்ம்…. அது அப்ப….. இது இப்ப…. வெவ்வெவ்வே…….” என்று அன்னையை நோக்கி பழித்துக் காட்டினாள் கயல்விழி.
அதைக் கண்ட பார்வதி சிரிக்க,
“மாமா…. நெசமாலுமே அயித்த கைக்கு தங்கத்துல வளவி வாங்கிதேன் போடணும்…… சரி…. நான் போயி ஒங்களுக்கு சூப்பரா ஒரு காப்பி போட்டுட்டு வருதேன்…..” என்றவள் தூக்குடன் அடுக்களைக்கு சென்றாள்.
“சரியான தின்னிப்பண்டாரம்….. வாயாடி…..” என்று ராசாத்தி சிரித்துக் கொள்ள,
“வளர்ற புள்ளைய அப்படி சொல்லாத ராசாத்தி….. பொறந்த வூட்டுல இருக்க வரைக்குமாச்சும் அதுகளுக்குப் பிடிச்ச போல இருந்துட்டுப் போவட்டும்….. நான் செய்யுறதை ரசிச்சு விரும்பி சாப்பிடறவ கயலு மட்டுந்தேன்…. உன் அண்ணாரும், மணிமாறனும் ஒண்ணுமே சொல்ல மாட்டாக…. அவ சொல்லுக்கு வேண்டியே நான் பார்த்துப் பார்த்து செய்து குடுத்து விடுதேன்….” என்றார் பார்வதி.
“ம்ம்… இப்படியே அவளுக்குப் பிடிச்சதா செய்து குடுத்து மயக்கி வச்சிருக்கீக அத்த….” என்று சிரித்தாள் மலர்விழி.
“ஹஹா…. என்ற மருமகளுக்குத்தான செய்யுதேன்….. அப்புறம் கண்ணாலப் பொண்ணே….. உனக்கு வேண்டி மருதாணி அரைச்சுக் கொண்டு வந்திருக்கேன்…. இந்தா புள்ள…..” என்றவர் ஒரு சின்னப் பாத்திரத்தை எடுத்துக் கொடுக்க அதைத் திறந்ததும் பச்சைப் பசேலென்று இருந்த மருதாணியின் மனம் வீடே மணத்தது.
“எங்க…. உங்க ஆச்சிய, சத்தத்தையே காணம்….. அண்ணனும் கண்ணால வேலையா வெளிய போயிருக்காகளா….” என்றார் பார்வதி.
“அத்தை, அவுக தங்கச்சி வூட்டுக்கு ஒரு சோலியா போயிருக்காக மதனி….. அவுக டவுனுக்குப் போயிருக்காக…..” என்றார் ராசாத்தி.
“கண்ணால சோலி எல்லாம் எப்படிப் போவுது…. மணி, மாப்பிள்ள கூட ஒத்தாசையா எல்லா சோலியும் பார்த்துக்குறானா….” என்றார் மாணிக்கம்.
“வெளி வேலை எல்லாம் மருது தான் பாக்கான்…. மண்டபத்துல சாப்பாட்டு வேலை, அலங்காரம் பண்ணுறதுன்னு எல்லாத்தையும் மணி கிட்ட தான் சொல்லியிருக்காக…. எல்லாம் நம்ம தம்பி பார்த்துக்கும்… அண்ணே….”
“ம்ம்… அந்த பைனான்ஸ் பணம் வந்திருச்சா…. புள்ள ” என்றார் மாணிக்கம்.
“ம்ம்…. வந்திருச்சு அண்ணே….. அது கெடைக்கக் கொஞ்சம் லேட்டாகிடுச்சு….. நேத்து தான் செக்கு பாஸ் ஆச்சுன்னு சொல்லிட்டு இருந்தாக….. இன்னைக்கு பாங்குல பணத்தை எடுத்திட்டு ஆர்டர் குடுத்த நகைய வாங்கிட்டு வரேன்னு போயிருக்காக….” என்ற ராசாத்தி, கயல் கொண்டு வந்த காப்பியை எடுத்து அவர்களிடம் கொடுத்தாள்.
அதைக் குடித்துக் கொண்டே, அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது மருது உள்ளே வந்தான்.
“பந்தக்காரக சோலிய முடிச்சிட்டாக…… பணத்தைக் கொடுத்து அனுப்பிடலாமா ஆத்தா……”
“ம்ம்…. அவுக சொல்லிட்டுப் போன போல சரியா இருக்கான்னு பார்த்துக்கலே….. அப்புறம் நம்மள வந்து வைவாக…..” என்றவர், பணத்தை எடுத்துக் கொடுத்தார்.
“அதெல்லாம் நான் பாத்துக்கிடுதேன் ஆத்தா…..” என்றவன் வெளியே சென்று அவர்களிடம் எதோ விசாரித்துவிட்டு பணத்தைக் கொடுத்தனுப்பினான்.
“பந்தல் போட்டவுடனேயே வீட்டுக்குக் கல்யாணக் களை வந்திடுச்சு…..” என்ற மாணிக்கம்,
“சரி…… புள்ள…. நானும் மதனியும் டவுனுக்குக் கெளம்புதோம்….. கண்ணாலத்துக்குக் குடுக்க வேண்டிய சீரெல்லாம் பாத்து வாங்கிட்டு வரணும்…… அப்புறம் இந்த மாமன் வகையா மலருக்கு அஞ்சு சவரன்ல நகை போடலாம்னு இருக்குதேன்….. மலருக்கு என்ன வேணும்னு கேட்டுட்டுப் போவலாம்னுதேன் வந்தோம்…..”
அதைக் கேட்டதும் மலர் நாணத்துடன் தலை குனிந்து கொள்ள, கயல் பேசினாள்.
“என்ன மாமா….. அவளுக்கு மட்டுந்தேன் நகையா….. எனக்கு இல்லியா…..”
“ஒனக்கு இல்லாமயா… ஒன்ற கண்ணாலத்துக்கு ஒனக்கு போடுதேன் தாயி…..” என்றார் சிரிப்புடன் மாணிக்கம்.
“பொட்டப் பிள்ளன்னாலே நகை, பொடவைக்கு ஆசதேன்…..” என்ற பார்வதி, “சரி…. மலரு… உனக்கு அதுல பதக்கம் வச்ச செயினை எடுத்திடவா….” என்றார்.
“சரி….. அத்த….. உங்க இஷ்டம்…..” என்று மலர் கூற, “சரிலே…. அப்ப… நாங்க கெளம்புதோம்….” என்றார் பார்வதி.
“என்ன மதனி….. சாப்பிட்டுப் போறது தானே…. என்ன அவசரம்….” என்று ராசாத்தி கேட்க அதற்குள் அங்கிருந்த தொலைபேசி, அவர்கள் பேசுவதற்கு நடுவே தொல்லைப் பேசியாய் மாறி கனைக்கத் தொடங்கியது. அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்தாள் கயல்.
“ஹலோ……”
“ஹ… ஹலோ….. ரா…சாத்திட்ட போனக் குடு புள்ள…..” என்று எதிர்ப்புறம் இருந்து வந்த தந்தையின் குரலில் எதோ பதட்டத்தை உணர்ந்தவள்,
“அ…. அப்பா….. நான் கயலு பேசுதேன்பா….. என்னாச்சுப்பா….. ஏன்… ஒங்க கொரலு ஒரு மாதிரி இருக்கு….” என்றவளின் பதட்டம் அங்கிருந்தவர்களையும் தொற்றிக் கொள்ள, கயலிடம் போனைப் பறித்தார் ராசாத்தி.
“எ…… என்னங்க….. நான் ராசாத்தி பேசுதேன்…. என்னாச்சுங்க….” பதறிய ராசாத்தியிடம் எதிர்ப்புறத்தில் அவர் என்ன கூறினாரோ, அவரது கையில் இருந்த ரிசீவர் நழுவியது.
“அய்யோ….. என்ன சொல்லுதிய….. எம்மவளோட கண்ணாலம்….. எப்படி நடக்கும்…..” என்று அவர் கதறத் தொடங்க, வேகமாய் வந்து ரிசீவரை எடுத்தார் மாணிக்கம்.
“மாப்பிள…. நான் மாணிக்கம் பேசுதேன்….. என்னாச்சு….. ஏன் ராசாத்தி அழுகுது……”
“மச்சான்….. பாங்குல இருந்து பத்து லட்சம் பணத்த எடுத்திட்டு நகைக்கடைக்கு ஆட்டோல போனேன்….. எறங்கயில எந்தப் படுபாவியோ என்னக் கீழ தள்ளி விட்டுட்டு பையப் புடுங்கிட்டு வண்டில ஏறிப் போயிட்டான்….. எனக்கு என்ன பண்ணறதுன்னே தெரியாம ரோட்டுல நின்னு கதறுதேன்…. எம்மவ கண்ணாலம்…. அய்யோ…. நான் என்ன பண்ணுவேன்….” என்று போனிலேயே சுந்தரேசன் கதற, அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனார் மாணிக்கம்.
“மா… மாப்பிள்ள…. என்ன சொல்லுதிய… பத்து லட்சமா…. சரி… சரி…. நீங்க அழுவாதீய….. வண்டி நம்பர் ஏதாவது பார்த்து வச்சிருக்கீகளா….. போலீஸ்ல ஒரு கம்ப்ளெயின்ட் கொடுத்திருவம்…..” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க, எதிர்ப்புறத்தில் சுந்தரேசன் மயங்கி விழுந்திருந்தார். 
“ஹலோ….. ஹலோ….” என்று மாணிக்கம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்க யாரோ ஒருவர் சுந்தரேசனின் அலைபேசியை எடுத்துப் பேசினார்.
“சார்…. அந்தப் பெரியவர் மயக்கம் போட்டு விழுந்துட்டார்…..” என்றார் அந்த ஆட்டோ டிரைவர்.
அவரிடம் எந்த இடம் என விசாரித்துக் கொண்டு மயக்கம் தெளிவிக்க உதவுமாறு கூறி சிறிது நேரத்தில் அங்கே வருவதாக சொல்லி போனை வைத்தவர், உடனே மணிமாறனை அழைத்து விஷயத்தை சொன்னார்.
அவனும் கல்யாண மேடை அலங்கார விஷயமாக டவுனுக்கு தான் சென்றிருந்தான். அவன் உடனே சென்று சுந்தரேசனைப் பார்த்துக் கொள்வதாகக் கூறவே போனை வைத்துவிட்டு அங்கே கதறி அழுது கொண்டிருந்த ராசாத்தியிடம் வந்தார்.
கயலும் அழுது கொண்டிருக்க மலர் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள். பார்வதி என்ன சமாதானம் செய்தும் ராசாத்தியின் அழுகை நிற்கவே இல்லை…. கதறிக் கொண்டிருந்தார்.
“அய்யோ….. கண்ணாலத்துக்கு இன்னும் ரெண்டு நாள் தான இருக்கு….. எம்புள்ள கண்ணாலம் எப்படி நடக்கும்….. கடவுளே…. இந்த நேரத்துல இப்படிப் பண்ணிட்டியே….. உனக்குக் கண்ணில்லையா…..” என்று ஏதேதோ சொல்லி அழுது புலம்பிக் கொண்டிருக்க, அவர்களின் அழுகைக் குரலைக் கேட்டு உள்ளே ஓடி வந்தான் மருது.
“அய்யோ…… ஆத்தா….. என்னாச்சு……” என்றவன், அவர் பேச்சில் இருந்து ஒன்றும் புரிந்து கொள்ள முடியாமல் மாணிக்கத்திடம் கேட்க, மாணிக்கம் விஷயத்தைக் கூறினார். அதைக் கேட்டு அவனும் அதிர்ந்து போனான்.
“அய்யய்யோ….. கண்ணால நேரத்துல இப்படியாகிப் போச்சுதே….. இனி அய்யா பணத்துக்கு என்ன பண்ணுவாக…..” என்று அவனும் கவலையுடன் யோசித்துக் கொண்டிருந்தான்.
————————————————————————————————————————————————————
அந்த நாள் முழுதும் போலீஸ் ஸ்டேஷன், புகார், விசாரணை என்று கழிய கல்யாண வீட்டின் நிலையே தலைகீழாய் மாறிவிட்டது. எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு சுந்தரேசனும் மணிமாறனும் மாணிக்கத்துடன் வீட்டிற்கு வருவதற்கு இரவாகி விட்டது.
அடுத்த நாள் விஷயம் தெரிந்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் வந்து விசாரித்துக் கொண்டிருந்தனர். காலையில் விஷயத்தைக் கேள்விப்பட்டு பதறியடித்து வீட்டுக்கு வந்தார் பேச்சியம்மா.
“ஏலே….. சுந்தரு….. என்னலே இப்படி ஆகிப் போச்சு…… அய்யோ… என்ற பேத்தியோட கண்ணாலம் ஊரு மெச்ச நடக்கும்னு நெனச்சனே…. எந்தப் பாவி கண்ணு பட்டுச்சோ… இப்படி ஆயிடுச்சே…..” என்று புலம்பிக் கொண்டிருந்தார் அவர்.
இடிந்து போய் அமர்ந்திருந்தார் சுந்தரேசன். ராசாத்தியும் அழுது களைத்துப் போயிருந்தார். கயல் தான் அவர்களிடம் அமர்ந்து தேற்றிக் கொண்டிருந்தாள். மலரோ யாரிடமும் ஒன்றும் பேசாமல் அவள் அறையிலேயே கிடந்தாள்.
பேச்சிப் பாட்டி புலம்பிக் கொண்டிருக்க பதில் பேசாமல் சிலையாய் அமர்ந்திருந்தார் சுந்தரேசன். வீட்டுக்கு விருந்தினர்கள் வேறு வரத் தொடங்கி இருந்தனர். எல்லாருக்கும் விஷயம் தெரிந்து, “கல்யாணம் நடக்குமா…. வீட்டுக்குத் திரும்பி விடலாமா…” என்று குழப்பத்துடன் இருந்தனர்.

Advertisement