Advertisement

“இந்த சின்னவ, கருவாச்சி இருக்காளே……. அவ அப்படியே அவ அம்ம குடும்பத்த போல….. எதுக்கெடுத்தாலும் என்னா பேச்சு பேசுதா…… நாளைக்கு கண்ணாலம் கட்டிப் போற எடத்துல அவள எப்படி சமாளிக்கப் போறாகளோ….. நல்ல சண்டிவீரன் கணக்கா ஒருத்தன் வந்துதேன் அவள அடக்கணும் பார்த்திகிடுங்க……” என்று சொல்லிக் கொண்டே போனவர் அவர்களின் வித்தியாசமான பார்வையை உணர்ந்து,
“இந்தக் கெழவி எதுக்கு இதெல்லாம் நம்மகிட்டே சொல்லுதான்னு யோசிக்கறியளா……. நீங்களும் இந்த வீட்டு ஆளுக தான….. உங்ககிட்ட சொன்னா என்ன தப்பு……” என்றார்.
“அது சரித்தான் ஆத்தா….. கயலு கொஞ்சம் துடுக்கு…. மத்தபடி ரொம்பத் தங்கமான பொண்ணுதேன்…… அவளும் போகுற எடத்துல அனுசரணையா நல்லாத்தான் நடந்துப்பா…… நீங்க வருத்தப்படாதீக……” என்று பேச்சியம்மாவின் பேச்சை நிறுத்திய சம்மந்தியை நன்றியோடு பார்த்தார் ராசாத்தி.
தன் தங்கையை விட்டுக் கொடுக்காமல் பேசிய அத்தையின் மீது மலர்விழிக்கும் மரியாதை கூடியது. அதற்கு மேல் பேச்சிப்பாட்டி வாயை மூடிக் கொண்டார். கயலுக்கு ஆதரவாய் பேசியதால் அவர்கள் மீது சிறு விருப்பமின்மை வந்துவிட்டது. மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் வேலை இருப்பதாய்க் கூறி விடைபெற்றனர்.
————————————————————————————————————————
காப்பிக் கோப்பையுடன் மதியழகனின் அறைக்குள் நுழைந்த லச்சுமி, அவனிடம் எப்படியாவது தன் மனதில் உள்ளதைப் பேச எண்ணினார். அவன் உடை மாற்றி புறப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு கவலையுடன் நோக்கியவர்,
“என்ன தம்பி….. நேரமா எங்க கெளம்பிட்டவன்……” என்றார்.
“நான் என் பிரண்டு ஒருத்தனப் பாக்கப் டவுனுக்குப் போவுதேன்….. இங்கிருக்கவே எனக்குப் பிடிக்கலை…..” வெறுப்புடன் வந்தது மதியழகனின் வார்த்தைகள்.
“நேத்து மாதிரி காலைலயே தண்ணி அடிக்கப் போறியா தம்பி…..” கலக்கத்துடன் பேசிய தாயின் முகத்தைக் கண்டவன் அமைதியாய் நோக்கினான்.
“அம்மா…. உங்க வேதனை எனக்குப் புரியுது….. ஆனா… இங்கிருக்குற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு நரகமா தோணுது……. அதான் வெளிய கெளம்புதேன்…..”
“என்ன தம்பி…… இப்படி சொல்லுதே….. இதான நீனு பொறந்து வளந்த ஊரு…… இங்கிருக்குற ஒவ்வொரு எடத்தையும் ரசிச்சு ரசிச்சு நம்ம ஊரப் பத்தி பெருமையாப் பேசுவியே….. இப்ப இங்க இருக்கப் பிடிக்கலன்னு சொல்லுதே…..”
“ஊரெல்லாம் நல்லாத்தான் இருக்கு…. எனக்கு ஒன்ற ஊட்டுக்காரர் இருக்கற எடத்துல இருக்கத்தான் பிடிக்கல…… இப்படியே இங்க இருந்தேன்னா….. என்னையே எனக்குப் பிடிக்காமப் போயிடும்……” முந்தினநாள் அவன் குடித்து வந்த வருத்தத்துடன் வந்தது வார்த்தைகள்.
“என்னலே… சொல்லுதே….. இன்னுமா உனக்கு அப்பாரு மேல உள்ள கோபம் அடங்கல……”
“அது அடங்குற கோபம் இல்லம்மா….. நான் உன்னை நெனச்சு அடக்கி வச்சிட்டிருக்குற கோபம்…… அதை அடக்கிக்க வேண்டி நான் என்னை மறந்து குடிக்கத் தோணுது…… குடிக்கறவங்களைக் கண்டாலே பிடிக்காம இருந்தவன் நான்…… நானே இப்படி மாறினது எனக்குப் பிடிக்கல தான்….. இருந்தாலும் என் வலியை மறந்திருக்க வேற வழி தெரியலை…..” கசப்பாய் வந்தது அவனது வார்த்தைகள்.
“தம்பி…. இப்படில்லாம் சொல்லாதய்யா…… ஒரே ஒரு புள்ளையப் பெத்து வச்சிருக்கேன்….. நீனு இப்படி வேதனையோட இருக்கறது எனக்குத் தாங்க முடியல… பழசெல்லாம் மறந்திட்டு நீயும் சந்தோஷமா இருக்கோணும்னு எம்மனசு கெடந்து தவிக்குது….. இந்த அம்மைக்கு வேண்டி நீ அத செய்ய மாட்டியா ராசா…..” கண்கள் கலங்க அவன் கையைப் பற்றிக் கொண்ட அன்னையைப் பரிதாபமாய்ப் பார்த்தான் மதியழகன்.
ஆறடியில் வாட்ட சாட்டமாய் இருப்பவன். இப்போது களையிழந்து தாடியுடனும், தலையில் வெட்டாமல் நிறைந்த முடியுடனும் நிற்பதைப் காணக் காண அந்த அன்னையின் மனம் துடித்தது.
“அம்மா…. உனக்கு வேண்டி மட்டும் தான் நான் உன் வீட்டுக்காரரை ஏதும் செய்யாமல் விட்டு வச்சிருக்கேன்…… இல்லேன்னா அவர் பண்ணின கூத்துக்கு ஏதாவது பண்ணிட்டு அப்பவே ஜெயிலுக்குப் போயிருப்பேன்……” காரமாய் வந்த அவனது வார்த்தைகளைக் கேட்டு காதை மூடிக் கொண்டவர்,
“தம்பி… இப்படில்லாம் சொல்லாதையா…… உன் அப்பாரு செய்தது மன்னிக்க முடியாத குத்தம்தேன்….. அந்த மனுஷன் இப்ப அதை உணர்ந்து தவிக்குறாரு….. எனக்கு வேண்டி அவர மன்னிச்சுடுலே…… நீயும் பழசெல்லாம் மறந்திட்டு புதுசா ஒரு வாழ்க்கையத் தொடங்கணும்…. அதைப் பார்த்திட்டு தான் நான் கண்ணு மூடணும்….. என்னோட இந்த ஆசை நடக்கலேன்னா இந்தக் கட்டை வேகாதுலே…. ஒன்ன நெனச்சு வேதனையிலேயே வேகாமக் கெடக்கும்…..”
“அம்மா…. இப்ப எதுக்கு இதெல்லாம் பேசிட்டிருக்கிய…… எனக்கு மட்டும் நான் கெட்டு சீரழியனும்னு என்ன ஆசையா…. நான் இங்கே இருந்தா இப்படித்தேன் இருப்பேன்…… அதான் வெளிநாடு போலாம்னு யோசிக்கறேன்….. என் பிரண்டு ஒருத்தன் கனடாவுல வேலை செய்யுதான்….. அவனும் என்னோடதேன் MBA முடிச்சான்…. அவனைப் பார்த்து பேசிட்டு வரேன்……”
“என்ன தம்பி சொல்லுதே…. இங்கே இத்தன சொத்து, வயல் வரப்பை எல்லாம் வச்சுட்டு வெளிநாட்டுக்கு வேலைக்குப் போவுதியா…… இதெல்லாம் யாரு பாத்துக்குறது……” அதிர்ச்சியுடன் வந்தது லச்சுமியின் வார்த்தைகள்.
“இந்த சொத்தெல்லாம் யாருக்கு வேணும்….. எல்லாத்தையும் உம்ம புருஷனே கட்டிட்டு அழட்டும்…..” சீற்றத்துடன் வந்தது அவனது வார்த்தைகள்.
“தம்பி…..” கண்கள் கலங்கத் தொடங்கியது அவருக்கு.
“அம்மா….. ப்ளீஸ் அழுவாதிங்க….. இங்கிருந்து போயிடணும்னு ஒவ்வொரு வாட்டி நான் நெனைக்கும்போதும் உங்க கண்ணீர் தான் என்னக் கட்டிப்போடுது…… தயவுசெய்து எம்முன்னாடி அழுவாதீங்க……”
“மதி…… என் ராசா….. நான் சாகற வரைக்கும் என்ன வுட்டு எங்கேயும் போயிடாதையா…… உன்ற நெனப்புலயே நான் வெரசா போயி சேர்ந்திடுவேன்…..”
“எப்பப் பார்த்தாலும் இப்படியே பேசாதிய….. பொறவு என்ன என்னதான் பண்ணச் சொல்லுதிய….. இங்கனயே இருந்து குடிச்சு நாசமாப் போவணுமா……” அவனது வாயைத் தன் கரத்தால் பொத்தியவர்,
“எதுக்குலே…. நீனு அப்படி ஆவோனும்….. பழசெல்லாம் மறந்திட்டு ஒரு கண்ணாலத்தப் பண்ணிட்டு குடும்பம் குட்டின்னு சந்தோஷமா இங்கயே வாழக் கூடாதா……”
“என்னது கண்ணாலமா……. என்ன பேசுதிய……” என்று அதற்கு மேல் பேச விரும்பாமல் மௌனமான மதியழகன்,
“சரி…. நேரமாச்சு…. நான் இப்பக் கெளம்புதேன்… இதப் பத்தி பொறவு பேசுவோம்…. வரேன்….” என்று பைக்கினை எடுத்துக் கொண்டு கிளம்பினான். என்ன செய்வதென்று புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்றார் லச்சுமி.
சாலையின் இரு புறமும் இருந்த வயல்களில் சோளம் பயிரடப்பட்டிருக்க, அந்தக் காலை வேளையிலும் பலமாக வீசிய காற்றில் அவை தலையசைத்து அழைப்பது போலத் தோன்றியது மதியழகனுக்கு.
வெகு நாட்களுக்குப் பிறகு இன்று சுய உணர்வோடு அதைக் கருத்தில் பதிய வைத்தவன், சட்டென்று கண்ணுக்குள் பூச்சி எதுவோ விழுகவே அவனது கையில் வண்டி லேசாய்த் தள்ளாடியது.
சோளத் தோட்டத்தின் ஓரமாக நடந்து வந்து கொண்டிருந்த கயல்விழி, சட்டென்று பின்னில் வண்டியின் சத்தம் கேட்கவே திரும்பிப் பார்த்தாள். நிதானமில்லாமல் பைக் ஒன்று அவளை நோக்கி வருவதைக் கண்டவள், அதிர்ந்து விலகினாள். அதில் அமர்ந்திருந்த மதியழகனைக் கண்டதும் அவள் முகம் சுருங்கியது.
“குடிகாரப் பய…… காலங்கார்த்தால தண்ணியப் போட்டுட்டு கண்ணு மண்ணில்லாம வண்டிய ஓட்டிட்டுப் போகுது பாரு….. இவனையெல்லாம் நம்பி எப்படித்தான் இவுக வீட்டுல வண்டியக் குடுத்தாகளோ…… ச்ச்சே…. இவன்லாம் ஒரு சென்மம்……” எனத் திட்டிக் கொண்டே நகர்ந்தாள்.
வண்டி அவளைக் கடந்து விட்டதால் அவளது வார்த்தைகள் காற்றில் கரைந்து செல்ல மதியழகனை வந்து சேரவில்லை. அவன் கண்ணில் ஒரு கையை வைத்துக் கொண்டே பைக்கை ஒரு கையால் பாலன்ஸ் செய்து போய்க் கொண்டிருந்தான். மதியழகனை மனதுக்குள் வறுத்துக் கொண்டே அக்ரகாரத்தை வந்து அடைந்தாள் கயல்விழி.
அந்தப் பிரதேசமே மிகவும் அமைதியாய் இருந்தது. சுந்தரபாண்டியர் என்ற மன்னரின் கைவண்ணத்தில் உருவாயிருந்த அந்த கிராமத்தின் அக்ரகாரத்தில் இருநூறு ஆண்டுகள் பழமையான வீடுகளும் இருந்தன. பழங்கால முறைப்படி வரிசையாகக் கட்டப்பட்ட அழகான வீடுகள்.
வீட்டின் முன்னில் இருந்த பெரிய பெரிய தூண்களும், விசாலமான திண்ணையும், சுத்தமான வீதியும் அந்த இடத்தை மிகவும் ரம்மியமாய் வைத்திருந்தன. இதைப் போலவே அங்கு ஐந்து அக்ரகாரங்கள் இருந்தன.
ஒரு வீட்டின் முன்பு வந்து நின்றவள், “காயுக்கா……. எக்கா…..” வாசலில் நின்று குரல் கொடுக்க வெளியே வந்தாள் சற்றுப் மெலிந்த ஒரு பெண்மணி.
“கயலா… உள்ள வாம்மா….. என்ன காலம்பரமே வந்து நிக்கறே….. பிளவுஸ் வாங்கிண்டு போக வந்தியா….”
“ஆமாக்கா….. ரெடி பண்ணிட்டிகளா….. போட்டுப் பார்த்துட்டு சரியாவலேன்னா மறுபடியும் கொண்டு வரணும்ல…. அதேன்….. இப்பவே வந்தேன்…..”
“அப்படியா….. சரி…. உக்காரு…… காப்பி கலந்திண்டு இருந்தேன்….. நோக்கும் எடுத்திட்டு வரேன்…..”
“ஓ….. அதான் காப்பி வாசன தெரு முனை வரைக்கும் வந்துச்சா….. குடுங்க… குடுங்க….” என்றாள் ஆர்வத்துடன்.
காயத்ரி இருவருக்குமாய் காப்பியை எடுத்துக் கொண்டு வந்து ஒன்றை கயல்விழியின் கையில் கொடுத்துவிட்டு அவளும் அருகில் அமர்ந்தாள்.
அதைக் குடித்த கயல், “அட அட…… காப்பின்னா… காயுக்கா காப்பி தான்…. பேஷ்…. பேஷ்…. ரொம்ப நன்னார்க்கு……” என்றாள் விளம்பர பாணியில்.
அதைக் கேட்டு மென்மையாய் புன்னகைத்தாள் காயத்ரி.
“அக்கா….. கண்ணாலத்துக்கு நீங்களும் கண்டிப்பா வருவியல்ல…..”
“நான் எதுக்கும்மா….. நல்ல காரியம் நடக்குற எடத்துல…. அமங்கலமா….. அதெல்லாம் வேண்டாம்….”
“அப்படில்லாம் சொல்லாதீக….. வாழ்த்தறதுக்கு நல்ல மனசு தான் வேணும்…. அது ஒங்ககிட்டே இருக்கு…… நீங்களும் கண்டிப்பா கண்ணாலத்துக்கு வரீக…… சரியா……”
“சரிம்மா…. உனக்காகவாவது வந்திடறேன்…… இரு…. உங்க துணியை எடுத்திண்டு வரேன்…..” என்ற காயத்ரி உள்ளே செல்ல, அவளையே பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தாள் கயல்.
காயத்ரி சிறு வயதிலேயே கணவனை இழந்தவள். வயதான தாய் தந்தையரும் இறந்துவிட, வீட்டில் இருந்து துணிகளை தைத்துக் கொடுத்தும் வடகம், ஊறுகாய் போன்றவைகளை தயார் செய்து கடைகளில் விற்றும் ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தாள். இரு பெண்களை உதவிக்கு வைத்துக் கொண்டு வியாபாரத்தை சற்றுப் பெரிய அளவில் செய்ய முயற்சி செய்து வந்தாள். கயலுக்கு அவளது நம்பிக்கையான குணம் மிகவும் பிடிக்கும்.
சிறுவயதில் கணவனை இழந்து, உதவியாய் இருந்த பெற்றோர்களை இழந்தாலும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும் இழக்காமல் வாழ்க்கையை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த காயத்ரியை ஒரு முன்மாதிரியாய் நினைத்துக் கொண்டிருந்தாள். காயத்ரி கொடுத்த துணிகளை வாங்கிக் கொண்டு விடைபெற்றவள், வீட்டுக்குக் கிளம்பினாள்.
————————————————————————————————————————
மஞ்சள் பூசும் வண்ண முகம்
மங்கலமாய் மலர்ந்திருக்க……
காற்று வந்தால் தலையசைக்கும்
கண் கவரும் சூர்யகாந்தி…..
சூரியனைக் காண்பதற்கே
காத்துத் தான் நின்றிடுவாய்….
கிழக்கில் தான் அவன் வந்தால்
தலை தூக்கிப் பார்த்திடுவாய்…..
மொட்டாக இருக்கையிலே
முகம் நிமிர்ந்து பார்ப்பவளே…….
பூவாக மலர்ந்த பின்னே
முகம் திருப்பி நிற்பதென்ன…….
காதலனைக் காண வேண்டி
மொட்டாக மலர்ந்தவளே….
நாணம் கொண்டு காணாமல்
முகம் திருப்பி நின்றாயோ…..
நெஞ்சமெல்லாம் காதல் வர
கொஞ்சம் மெல்ல ஊடல் வரும்…
ஊடல் வரக் காதல் வரும்….
காதலிலே ஊடல் வரும்….
காதலுமே காத்திருக்கும்
கண்ணான காதலுக்காய்…..

Advertisement