Advertisement

அத்தியாயம் – 3
ஒரு ஆளுயரத்தில் நிமிர்ந்து கிழக்கில் சூரியனின் முகம் நோக்கி தலை திரிந்து நின்ற சூரியகாந்தி மொட்டுகளை ரசித்துக் கொண்டே செடிகளுக்கு நடுவில் இருந்த வழியில் நடந்தாள் கயல்விழி. அவளது உயரத்துக்கு நீண்டிருந்த செடிகள் அவளோடு நடப்பது போலவே இருந்தது.
ஆடவனைக் கண்டதும் நாணத்துடன் முகம் திருப்பிக் கொள்ளும் குமரிப்பெண்ணாய் சூரியகாந்தி மொட்டுக்கள் மலரத் தொடங்கியதும் சூரியனுக்கு முகம் கொடுக்காமல் தலை திருப்பிக் கொள்ளும். இந்த அதிசயத்தை எப்போதும் நினைத்து சிரித்துக் கொள்வாள் கயல்விழி.
மனிதனின் முகத்தைப் போல் வட்டமாய் மலர்ந்து நின்ற சூரியகாந்திப் பூக்கள்….. மனதை மயக்கும் அழகான ஆழ்ந்த மஞ்சள் நிறம் மனதைப் பரவசப் படுத்தியது. காற்றடித்ததில் பூக்கள் தலையசைத்து வரவேற்பது போலத் தோன்றியது.
“ம்ம்… உங்க ஹீரோ கிழக்கால உதிச்சுட்டாருக்கும்….. எல்லாம் தலையைத் தூக்கி நின்னுட்டு வேடிக்கை பாக்கறிய…..” சிரித்துக் கொண்டே அவற்றுடன் பேசிக் கொண்டு நடந்தாள்.
“ஏட்டி…. செவ்வந்தி……. என்னவே வெதையப் போட சொன்னா வேடிக்க  பார்த்திட்டு நிக்கவ…… சீக்கிரம் சோலிய முடிக்கற வழியப் பாருலே…..
“நான் சோலியத் தான் பாக்கேன்….. நீனு எங்கே தோட்டத்துக்கு வந்திருக்க….. அய்யா வரலியா….”
“அய்யா டவுனுக்குப் போயிருக்காக….. என்னோட பிரண்ட்சுகளோடப் பேசுறதுக்கு எனக்கு நேரமே கெடைக்க மாட்டுது….. அதான் எல்லாரையும் ஒரு எட்டு நலம் விசாரிச்சிட்டுப் போவலாம்னு வந்தேன்…..”
“ம்ம்….. இந்தப் பூவும், செடியும் தானே ஒம்பிரண்டு…… நல்லா வெசாரிச்சிட்டுப் போலே….. நீனு வரலேன்னாலும் நாங்களும் உம்ம பிரண்ட நல்லா பாத்துக்கிருவம்ல…..” என்று கூறிக் கொண்டே சரியான இடைவெளியில் மூன்று செண்டி மீட்டர் ஆழத்தில் சூரிய காந்தி விதைகளை ஊன்றிக் கொண்டு வந்தாள்.
“என்ன சண்முகண்ணே….. அரிசிக் கஞ்சில பூஞ்சானக் கொல்லி மருந்து, பாஸ்போ பாக்டீரியா உரம், கலந்து வெதைய நேர்த்தி செய்து அர மணி நேரம் நிழல்ல வச்சு உலர்த்திட்டு அப்பறம் தானே வெதைய விதைக்க கொடுத்திருக்கீய…… எதையும் மறந்திடலியே…..”
“அதெப்படி தாயி….. எப்பவும் நாம அப்படி செய்யுறது தானே வழக்கம்….. எல்லாம் சரியா செய்து தான் கொடுத்திருக்கேன்…..”
“ம்ம்…. சரிண்ணே….. நீங்க சோலியப் பாருங்க….. நான் ஆபீசுல இருக்கேன்…..” என்றவள் ஆயில் மில்லை நோக்கி நடந்தாள்.
அவர்களது மூன்று ஏக்கர் நிலத்தில் ஒரு ஓரத்தில் ஆயில் மில் இருந்தது. சிறிது நேரத்தில் தென்காசியில் இருந்து ஆயில் லோடு எடுக்க வண்டி வரவே அதற்கான பில்லைப் போட்டு அங்கிருந்த பணியாட்களை வைத்து சரிபார்த்து வண்டியில் லோடு ஏற்றி அனுப்பி விட்டாள்.
அங்கிருந்த சின்ன சின்ன வேலைகளையும் முடித்தவள் வேறு வேலை இல்லாததால் சிறிது நேரம் எண்ணெய் ஆட்டுமிடத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு தோட்டத்துக்கு வந்தவளைப் பார்த்து மலர்ச்சியுடன் தலையாட்டிய சூரியகாந்திகளைக் காதலுடன் வருடிக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள்.
ஒரு ஏக்கரில் பூக்கள் தலையாட்டிப் பறிப்பதற்கு தயாரென்று அழைக்க, ஒரு ஏக்கரில் விதையை விதைத்துக் கொண்டிருந்தனர். இன்னொரு ஏக்கரில் செடிகள் பாதி வளர்ச்சியை எட்டி இருந்தன. விதை விதைத்து 90 நாட்களில் விளைச்சலுக்கு வந்துவிடும் சூரியகாந்திச் செடிகள். அப்போது அங்கே அவளது தோழி வள்ளி வந்து கொண்டிருக்க அவளைக் கண்டு கையசைத்தாள்.
“என்னட்டி வள்ளி…. எங்க…. இங்க வந்திருக்கவ…..”
“ஏலே.. கயலு…. நீனு இங்க என்னலே பண்ணுதே… ஒன்னையத் தேடி நானு உங்க வூட்டுக்குப் போயி உன்னோட தேளுப் பாட்டிகிட்டே கொட்டு வாங்கினது தாம்லே மிச்சம்….”
“நீ எதுக்குலே என்னத் தேடி வூட்டுக்குப் போன….”
“நம்ம அக்ரகாரத்துல எதோ டிவி ஆளுக வந்து ஷூட்டிங்  எடுக்கறாகளாம்……  வூட்ல இருந்தா ஒன்னக் கூட்டிட்டு போவலாம்னு பாத்தேன்….. நீனு என்னடான்னா இங்க வந்து நிக்கறவ…….”
“அப்படியாலே….. டிவில இருந்து என்னலே படம் பிடிக்குறாக….. வெளம்பரமா…. சீரியலா……” ஆர்வத்துடன் கேட்டாள் கயல்விழி.
“இல்லட்டி….. நம்ம ஊரு கோயில், கொளம், வயல், வரப்பப் பத்தி சொல்லப் போறாகளாம்…… ரோஜாப்பாற, அக்ரகாரம், ஏரியில எல்லாம் ஷூட்டிங் எடுத்திட்டு இருக்காக……”
“ம்ம்…. அவங்களுக்காவது நம்ம ஊரு பெரும தெரிஞ்சுதே…. இங்க இருக்கறவக எல்லாம் படிச்சுப்புட்டு பட்டணத்துல சோலி தேடிப் போயிருதாக….. என்னதேன் இருந்தாலும் இங்கத்த சுத்தமான காத்தும் தண்ணியும் போல வருமா…. இங்க நாம வெவசாயம் பாத்தா தான் பட்டணத்துக்காரகளுக்கு சோறு….. அதை எங்க புரிஞ்சுக்குறாக….” என்றவளின் மனம் பொருமியது.
“சரிலே…. நீனு எதுக்கு இப்பப் பொங்குதே….. ஷூட்டிங் பாக்கப் போவலாமாலே…. நீயும் வரியா….” என்றாள் வள்ளி.
“இல்லட்டி….. அக்காவோட கண்ணால சோலி நெறையக் கெடக்கு….. இங்க சோலி முடிஞ்சது…. மருதண்ணன் வந்ததும் நான் வூட்டுக்குக் கெளம்புதேன்…..”
“ஓ… சரிலே….. அப்ப நானும் வூட்டுக்குக் போவுதேன்……” என்றவள் நடையைக் கட்ட மீண்டும் சூரியகாந்திகளுடன் பேச்சைத் தொடர்ந்தாள் கயல்விழி.
————————————————————————————————————————
“மலரு….. இங்க வாலே…. மாப்பிள்ள வூட்ல இருந்து வந்திருக்காக பாரு…..” குரல் கொடுத்தார் பேச்சியம்மா.
அலமாரியில் துணியை மடக்கி வைத்துக் கொண்டே தன் மனம் கவர்ந்தவனைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த மலர்விழி, கீழிருந்து வந்த பாட்டியின் குரலில் மனதுக்குள் இனிதாய் துள்ளினாள். கீழே வந்தவள் அவளது வருங்கால மாமியாரும், மாமனாரும் அங்கே அமர்ந்திருப்பதைக் கண்டு நாணத்துடன் அவர்கள் அருகில் சென்றாள்.
“வாங்க அத்த…… வாங்க மாமா…..” என்று வரவேற்றாள்.
“என்னம்மா மருமகளே….. எப்படி இருக்கவ….” விசாரித்தார் அத்தை தமிழரசி.
“நல்லாருக்கேன் அத்த…. நீங்க எல்லாரும் சுகமா இருக்கியளா….”
“ம்ம்…. இங்க பக்கத்துல ஒருத்தருக்கு கண்ணாலப் பத்திரிக வைக்க வந்தோம்…. அப்படியே உன்னயும் ஒரு எட்டுப் பாத்துட்டுப் போலாம்னு வந்தோம்…..”
அத்தையின் பேச்சில் மனம் உருகினாள் மலர்விழி.
அதற்குள் அவளது அன்னை ராசாத்தி காப்பிக் கோப்பையுடன் வந்தார்.
“காப்பி எடுத்துக்கங்க அண்ணே…. மதனி…. நீங்களும் எடுத்துக்குங்க….. மாப்பிள்ள எப்படி இருக்காக…..” என்றவர், ஒரு தட்டில் முறுக்கை வைத்து அவர்கள் முன்னில் இருந்த டீப்பாயில் வைத்தார்.
“உங்க மாப்பிள்ள நல்லா இருக்கான்…. அவனோட பிரண்ட்சுகளை கண்ணாலத்துக்கு அழைக்கப் போயிருக்கான்…..” என்றார் சம்மந்தி முருகேசன்.
“எங்க சின்னவளையும், சம்மந்தியையும் காணம்….” என்றார் தமிழரசி.
“அவுக டவுனுக்குப் போயிருக்காக மதனி….. கயலு ஆயில் மில்லுக்குப் போயிருக்கு……” என்றார் ராசாத்தி. அதைக் கேட்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டார் பேச்சியம்மா.
“பரவால்ல….. பையன் இல்லாத கொறைய உங்க சின்னவதேன் தீர்க்கறான்னு சொல்லுங்க…..”
“ஆமாம் மதனி….. அவதேன் இதெல்லாம் பாத்துக்குறா….” என்றார் பெருமையுடன் ராசாத்தி.
“கண்ணால சோலி எல்லாம் எப்படிப் போவுது…… விசாரித்தார் தமிழரசி.
“பத்திரிகை எல்லாம் கொடுத்து முடிக்கப் போவுதோம்….. எல்லாம் நல்லபடியாப் போவுது மதனி…. நாளன்னிக்குப் போயி ஆர்டர் குடுத்த நகைய வாங்கிட்டு அப்படியே புது பைக்கும் எடுத்திட்டு வரணும்…. இன்னும் நாலஞ்சு நாள்ல எல்லாம் முடிச்சாகணும்ல…..” என்றார் சிரிப்புடன் ராசாத்தி.
அவர்கள் பேச்சை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தாள் மலர்விழி.
“எம்பேத்தி கண்ணாலத்த ஊரே மூக்குல வெரலு வச்சுப் பாக்கணும்ல…. கண்ணால சோடியப் பாத்து எல்லாம் அசந்து போயிடுவாக…. அம்புட்டு அழகால்ல இருக்காக என் பேரப் புள்ளைங்க….” என்றார் பேச்சியம்மா வாயெல்லாம் பல்லாக.
அதைக் கேட்டு மலர்விழியின் முகம் குங்குமமாய் சிவக்க காலின் பெருவிரலால் நிலத்தில் கோலமிட்டுக் கொண்டிருந்தாள்.
“மாப்பிள்ளயப் பத்திப் பேசினதும் எம்பேத்திக்கு வெக்கத்தப் பாரு….” என்று பேச்சியம்மா அவளைக் கிண்டல் செய்யவும், “போங்க ஆச்சி….” என்று அன்னையின் பின் ஒளிந்து கொண்டாள் மலர்விழி.
தமிழரசி, முருகேசன் தம்பதியருக்கு ஒரே பிள்ளை ராஜன்….. ராஜாவைப் போலவே செல்லமாய் வளர்த்தி இருந்தனர். பார்க்கவும் ராஜா போல இருப்பான். திருநெல்வேலி டவுனில் ஒரு பெரிய ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்திருந்தார் முருகேசன். ராஜனும் கடையையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ராஜனும் மலர்விழியும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். மலர்விழி முதல் வருடம் படிக்கையில் இறுதி ஆண்டில் இருந்தான் ராஜன். ஒரு வருடம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் பார்வையாலேயே காதலைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். சின்ன சின்ன நலம் விசாரிப்புகளும், பார்வைப் பரிமாற்றங்கள் மட்டுமே அவர்கள் காதலை வளர்த்தி இருந்தன. பட்டப் படிப்பை முடித்து ராஜன் கல்லூரியை விட்டு செல்லும் தினம் அவளிடம் காதலை சொல்ல அவளும் சம்மதித்தாள்.
அதற்குப் பிறகு எங்காவது நின்று பார்த்துக் கொள்வதும், போனில் பேசிக் கொள்வதுமாய் யாருக்கும் தெரியாமல் தொடர்ந்து கொண்டிருந்தது அவர்களின் காதல். மலர்விழி படிப்பை முடிக்கக் காத்திருந்த ராஜன், அவன் வீட்டில் சொல்லி மலரின் வீட்டில் பெண் கேட்டு வந்தனர்.
டவுனில் இருந்து படித்த, அழகான, வசதியான குடும்பத்தில் இருந்து மலரைப் பெண் கேட்டு வரவும், மலர் வீட்டினர் மகிழ்ந்து போயினர். அந்த சம்மந்தத்தை விடக் கூடாது என நினைத்து அம்பது பவுன் நகையும், பைக்கும், கல்யாண செலவையும் ஏற்றுக் கொள்வதாய் சுந்தரேசன் வாக்களிக்கவே மறு பேச்சுப் பேசாமல் ராஜன் வீட்டில் சம்மதித்தனர்.
அவர்கள் நிலைக்கு சற்றுக் குறைவாக இருந்தாலும், மலரும் அழகானவள், படித்தவள் என்பதால் அவர்கள் எதுவும் குறையாகக் கூறவில்லை. இரு வீட்டினரும் சம்மதித்ததால் மலரின் காதலைப் பற்றி வீட்டில் தெரியாமலே கல்யாணம் வரை வந்திருந்தது. கயலுக்குக் கூட தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்தியதில்லை மலர்விழி.
தமிழரசியும் முருகேசனும் மேலும் சிறிது நேரம் இருந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் மலரின் பெருமைகளையும் கயலின் குறும்புத் தனங்களையும் விலாவாரியாய் விவரித்துக் கொண்டிருந்த மாமியாரை கடுப்புடன் நோக்கிக் கொண்டிருந்தார் ராசாத்தி.
“மலரு இருக்குதே…… அப்படியே எம்மவன மாதிரி….. நெறத்துல மட்டுமில்ல….. குணத்துலயும் அப்படித்தேன்….. இருக்கற எடம் தெரியாம அமைதியா இருப்பா…. எதுத்து ஒரு வார்த்த பேச வராது…. உங்க வீட்டுக்கு நல்ல மருமகளா இருந்துக்குவா……” என்று மூத்த பேத்தியை பெருமையாய் பேசிய பேச்சியம்மா, அடுத்து கயலைக் குற்றம் சொல்லத் தொடங்கினார்.

Advertisement