Advertisement

“அத்தான்…. எங்களப் பாத்து உங்க நொள்ளக் கண்ண வைக்காதிய…….. அத்த…. வந்ததும் நமக்கு சுத்திப் போடோணும்…. சொல்லிட்டேன்….” புன்னகையுடன் கூறிய  மருமகளின் தலையில் மல்லிகைப் பூவை வைத்து விட்ட லச்சுமி,
“போயி உங்கப்பாவக் கூப்பிடு தம்பி…. கெளம்புவோம்….” என்றார் சிரித்துக் கொண்டே.
அனைவரும் வந்து காரில் ஏறிக் கொள்ள மதியழகன் காரை எடுத்தான். ஊருக்கு நடுவில் கோவிலுக்கு அருகில் இருந்த அந்தப் புதிய சின்ன கட்டிடத்தின் முன்பு காரை நிறுத்தினான். அங்கே ஊர்ப் பெரியவர்களும் பொதுமக்களும் கூடியிருந்தனர்.
“வாங்க தலைவரே…. வாங்க தம்பி….” என்று ஒருவருக்கொருவர் வணக்கத்தைப் பரிமாறிக் கொண்டனர்.
அங்கிருந்த ராசாத்தி, குழந்தை உண்டாகிய பூரிப்புடன் இருந்த மகளைக் கண்டதும் கண் நிறையப் பார்த்துக் கொண்டே அவர்கள் அருகில் வந்தார்.
“என்ன மாப்புள…. பூஜையைத் தொடங்கிடலாமா…..” என்றார் சுந்தரேசன்.
“ம்ம்… தொடங்கலாம் மாமா….” என்றவன், அங்கே பூஜைக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்த அய்யரிடம், பூஜையைத் தொடங்குமாறு கூறினான்.
அவர் சாமி படத்துக்கு விளக்கை ஏற்றிவைத்து சில மந்திரங்களை முடித்து தீபாராதனையை காட்டினார்.
அங்கிருந்த அழகான திரைசீலையை விலக்க, கருப்பு நிற பளிங்குக் கல்லில் ஏர்க்கலப்பையின் உருவத்துடன் உழவர் மேம்பாட்டுக் கழகம் என்ற எழுத்துக்கள் பொன் நிறத்தில் மின்னியது.
அதைக் கண்டதும் அனைவரும் சந்தோஷத்துடன் கை தட்டினர்.
முன்னில் வந்த முத்துப்பாண்டி, “எல்லாரும் சந்தோஷமா கூடியிருக்குற இந்த வேளையில நம்ம சங்கத்தோட வைப்பு நிதித் தொகையா என் சார்பா ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கறேன்னு சொல்லிக்குதேன்…. அதுக்கான காசோலையை நம்ம கழகத்தின் செயலாளரும், இந்தக் கழகத்தை உருவாக்கறதுக்காக ரொம்பவும் பாடுபட்ட எம்மவன் மதியழகன் கிட்ட வழங்குதேன்….. கூடவே எல்லாத்துக்கும் ஒத்தாசையா இருந்த நம்ம ஊரு இளைஞர்களுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவிச்சிக்கிறேன்…..” என்றவர் மதியழகனிடம் காசோலையை நீட்டினார். 
அதைக் கேட்டதும் அனைவரும் கை தட்ட, லச்சுமியின் கண்கள் ஆனந்தத்தில் கலங்கின. அதைக் கண்ட கயல் அவரது தோளில் ஆதரவாய் கையை வைக்க அவள் கையை கண்ணீருடன் பற்றிக் கொண்டார் லச்சுமி.
அடுத்து சுந்தரேசன், மணிமாறன், ஊர்ப் பெரியவர்கள் என்று ஒவ்வொருத்தராய் அவர்களால் முடிந்த தொகையை செலுத்தி ரசீதைப் பெற்றுக் கொண்டனர்.
அப்போது ஒரு பெரியவர், “தம்பி…. நம்ம கழகம் மூலமா நம்ம ஊருக்கு என்னெல்லாம் செய்யப் போறோம்னு கொஞ்சம் விளக்கமா சொல்லுறியளா…..” என்றார்.
“கண்டிப்பா சொல்லுதேன்….. இந்தக் கழகத்தோட எதிர்பார்ப்பே நம்ம விவசாய குடும்பங்கள் கஷ்டப்படக் கூடாதுன்னு தான்….. நமக்கே தெரியும்… எத்தனையோ குடும்பம் மழையில்லாம, விளைச்சல் சரியா கிடைக்காம பிழைப்பு நடத்த வழியில்லாம  தற்கொலை பண்ணிக்கிறாங்க….. அப்படி ஒரு நிலைமை நம்ம கிராமத்துக்கு வரக் கூடாது…. நம்ம விளைச்சலுக்கு நியாயமான விலை கிடைக்கணும்…. விளைச்சலுக்குத் தகுந்த ஊதியத்தை நம்ம சங்கம் மூலமா வாங்கிக்கலாம்…. வட்டியில்லாக் கடனும், விவசாயத்துக்குத் தேவையான பூச்சி மருந்து, உரம், அறுவடைக்கான ஆளுகள் எல்லாமே நம்ம சங்கத்துல ஏற்பாடு பண்ணிக்கலாம்….. நம்ம கடை மூலமா விக்கறதுக்கு நான் ஏற்பாடு பண்ணறேன்…..”
“ஓ… நல்லதுதேன் தம்பி… மாதர் சங்கம் மூலமா என்ன பண்ணப் போறீய…..”
“அவங்க தினம் விளையுற காய்கறிகளை சந்தைக்கு அனுப்புறது, வத்தல், வடாம், காய்கறி, கீரை பாக்கெட் போட்டு கடைக்கு அனுப்புறது எல்லாம் பார்த்துக்குவாங்க….”
“ஓ…. அதிக வருமானத்துக்கும் வழி பண்ணப் போறீய…. ரொம்ப நெறவா இருக்கு தம்பி… நம்ம சங்கம் நல்லபடியா சிறக்கனும்னு கடவுள வேண்டிக்கேன்…..” என்றார் அவர்.
அதற்குள் இடையிட்ட அய்யர், “தம்பி…. நாழியாறது….. கண்ணாலம் முடிச்சிட்டு அப்புறம் இதப் பேசலாமே….” என்றார்.
“சரி சாமி…..” என்ற மதியழகன், “கண்ணால ஜோடிகளை அழைச்சிட்டு வாங்க…..”  என்றான் அங்கிருந்த செண்பகத்திடம்.
முதல் ஜோடியாக மருதுவும், வள்ளியும் சிறு கூச்சத்துடன் வர, அடுத்து வேறு இரு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ஜோடிகள் வந்து நின்றனர்.
அய்யர் மந்திரத்தை சொல்லி தாலியை எடுத்துக் கொடுக்க வள்ளியின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிந்து மாலை மாற்றி மெட்டி அணிவித்து அவளைத் தன் வாழ்க்கைப் பாதியாய் ஏற்றுக் கொண்டான் மருது. மற்றவர்களும் தாலி கட்டி முடிக்க, இனிதாய் எளிமையாய் அங்கு மூன்று ஜோடிகளின் திருமணம் நடந்து முடிந்தது.
பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டவர்கள், கண்கள் கலங்க நின்றனர். அவர்களுக்கு கல்யாண சீராக சங்கத்தின் சார்பாய் கையில் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தனர். ஒவ்வொருத்தரும் அவர்களால் முடிந்த தொகையை செலுத்தி சங்கத்தில் உறுப்பினராகிக் கொண்டிருக்க மணிமாறன் ரசீது எழுதிக் கொண்டிருந்தான்.
“ஊர்ப் பெரியவங்க எல்லார்க்கும் இன்னொரு விஷயம் தெரிவிச்சுக்கிறேன்…..”
“நம்ம ஆரம்பிக்கப் போற மாதர் சங்கம் குழுவைப் பார்த்து நடத்தற பொறுப்பை திருமதி. காயத்திரி ஏத்துக்கப் போறாக…. அவங்களுக்கு உங்க ஒத்துழைப்பை கொடுக்கணும்னு கேட்டுகிட்டு வாழ்த்தையும் தெரிவிச்சுக்கிறேன்….” என்றான்.
அதைக் கேட்டதும் கூட்டத்தில் ஒருத்தியாய் நின்று கொண்டிருந்த காயத்திரியை கை பிடித்து முன்னே கொண்டு வந்து நிறுத்தினாள் கயல்விழி. கூச்சத்துடன் வந்தவள், அனைவருக்கும் வணக்கத்தை சொல்லிவிட்டு பேசத் தொடங்கினாள்.
“எல்லாருக்கும் வணக்கம்….. என்னை நம்பி இந்தப் பொறுப்பை ஒப்படைச்சதுக்கு நான் ரொம்பப் பெருமைப்படறேன்….. உங்களோட நம்பிக்கையை காப்பாத்துற வகையில் நல்லபடியா இதை செயல்படுத்துவேன்னு எல்லாருக்கும் சொல்லிக்கறேன்… வீட்டுப் பெண்களும் அவங்களால முடிஞ்ச சிறு சிறு வேலைகளை செய்து வருமானத்தை பெருக்கினா நம்ம குடும்பத்துக்கும் உதவியா இருக்கும்…. வசதி வாய்ப்பும் பெருகும்…. இதுல உங்க எல்லோருடைய ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்….”  என்றவள் கை கூப்பினாள்.
“வாழ்த்துக்கள் அக்கா….” என்று கயல்விழி கை தட்ட எல்லாரும் கை தட்டினர்.
அதற்குப் பிறகு அனைவரும் கல்யாண விருந்தில் கலந்து கொண்டு மனம் நிறைய சந்தோஷத்துடனும் ஒரு வித நிம்மதியுடனும் வீட்டுக்கு கிளம்பினர்.
அவர்களிடம் வந்த மதியின் கையைப் பிடித்துக் கொண்ட லச்சுமி, “மதி…. என் ராசா…. உங்கள நினைச்சா எனக்கு எம்புட்டு பெருமையா இருக்கு தெரியுமா….. செல்லாக்காசா தொலைஞ்சு போகக் கெடந்தவன, எம்மருமவ கோபுரக் கலசத்துல கொண்டு போயி உக்கார வச்சுட்டா…. இப்போ ரெண்டு பேரும் ஊருக்கே நல்லது பண்ணக் கெளம்பிட்டிய…. நீங்க நல்லாருக்கணும்……” என்றவர் மகனையும் மருமகளையும் சந்தோஷத்துடன் அணைத்துக் கொண்டார்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த முத்துப் பாண்டிக்கும், ராசாத்தி, சுந்தரேசனுக்கும் கண் கலங்கியது. பெருமையுடன் மனைவியைப் பார்த்த மதியழகனை கண்ணடித்து சிரித்த கயல்விழி,
“அய்யே…. என்ன அத்த… இது…. நாங்க இன்னும் என்னெல்லாம் இந்த ஊருக்குப் பண்ண வேண்டி இருக்கு…. இதுக்கே நீங்க இப்படில்லாம் உணர்ச்சி வசப்பட்டா எப்புடி….. தமிழ் நாட்டுலயே சிறந்த கிராமமா நம்ம கிராமத்தை மாத்தணும்…. அதுக்கான எல்லா முயற்சிகளையும் பண்ணனும்னு இருக்கோம்….” என்றாள்  சிரித்துக் கொண்டே.
“ம்ம்… சந்தோஷமா பண்ணுங்க தாயி… உங்களால அது முடியும்…. எங்களுக்கும் அந்த  நம்பிக்கை இருக்கு…. சரி… நாம வீட்டுக்குக் கிளம்புவோமா…..”
“அத்த….. மலரு குழந்தையைப் பார்த்துட்டு வீட்டுக்குப் போலாமா….. குட்டிப்பையன் நினைப்பாவே இருக்கு….” என்றாள் அவள்.
“ம்ம்… சரி தாயி…. அதுக்கென்ன…. உம்ம வூட்டுக்குப் போயி மலரு குழந்தையைக் கொஞ்சிட்டு சாயங்காலமே வீட்டுக்குப் போவோம்……” என்று உடனே சம்மதித்தார் அவளுடைய பாசக்கார மாமியார். மலருக்குக் ஆண் குழந்தை பிறந்து இரண்டு மாதங்களாய் வீட்டில் தான் இருக்கிறாள்.
“தங்கச்சி…. நீ கார்ல ஏறிக்க தாயி…. நானும் சுந்தரும் பைக்ல வந்திடறோம்…..” என்றார் முத்துப்பாண்டி.
ராசாத்தி அவர்கள் காரில் ஏறிக் கொள்ள சுந்தரேசனின் பைக்கில் முத்துப் பாண்டி ஏறிக் கொண்டார்.
நண்பனின் தோளில் கை வைக்கும்போது நட்போடு ஒன்று சேர்த்து சுற்றிக் கொண்டிருந்த பழைய மலரும் நினைவுகள் இருவரின் மனதிலும் அலையடித்தன. அனைவரின் மனதும் ஒருவித சந்தோஷத்தில் நிறைந்திருந்தது.
————————————————————————————————————————————————————
“அத்தான்…… அத்தான்…..” கண்ணை மூடி கட்டிலில் சாய்ந்திருந்த மதியழகனின் மார்பில் சாய்ந்திருந்தாள் கயல்விழி.
“ம்ம்….. சொல்லு மீனுக்குட்டி…..”
“என்ன அத்தான்…. ஏதோ யோசனையா இருக்காப்புல இருக்கு…. என்ன யோசிக்கறிய……” கண்ணைத் திறந்தவன் அவள் முகத்தைக் கையில் ஏந்தி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஹூம்…. அத்தான்….. என்ன யோசிக்கறியன்னு கேட்டா, என்னையே பாத்துட்டு இருக்கிய……” சிணுங்கினாள் அவள்.
“உன்னத்தான் யோசிக்குதேன் மீனுக்குட்டி……” என்றான் அவளையே பார்த்துக் கொண்டு.
“ஹஹா…. என்னப்பத்தி யோசிக்க என்ன இருக்கு…..” என்றாள் அவள் சிரித்துக் கொண்டே.
அவள் கண்களோடு தன் கண்களைக் கலக்க விட்டவன், “தொலைஞ்சு போன என்னை எனக்கே மீட்டுத் தந்தவ நீனு தானே மீனும்மா….. குப்பையோடு குப்பையா போயிருக்க வேண்டியவனை மனுஷனாக்கி, பெத்தவங்களுக்கு நல்ல மகனாக்கி, உனக்கு நல்ல புருஷனாவும் மாற வச்சு இந்த நாட்டுக்கும் நல்லவொரு குடிமகனா மாத்தி இருக்கியே….. உன்னைப் பத்தி நினைக்க எம்புட்டு இருக்கு…..” என்றான் அவள் நெற்றியில் மெல்ல முத்தமிட்டுக் கொண்டே.
“எனக்கு உங்களை நினைச்சா ரொம்பப் பெருமையா இருக்கு அத்தான்…. நிறையப் படிச்சிருந்தும் நம்ம கிராமத்துல இருந்து விவசாயத்தை கவனிச்சுக்கப் போறேன்னு முடிவெடுத்திருக்கீகளே…. இந்த மனசு யாருக்கு வரும்……”
“எவ்ளோ படிச்சவனா இருந்தாலும் பசிக்கு சாப்பாட்டை தானே சாப்பிட முடியும்….. பணத்தையா சாப்பிட முடியும்….. இதை நானே இப்போ தான் புரிஞ்சு கிட்டேன்….. எனக்கு எல்லாத்தையும் புரிய வச்சு என்னை இப்படி யோசிக்க வச்சதே நீனு தானே…..”
“இதெல்லாம் நான் பண்ணினேன்னு நினைக்கறியளா அத்தான்…… கிடையவே கிடையாது……” என்றாள் அவள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டே.
“பின்னே….. நீனு இல்லாம எனக்கு போதி மரத்தடியில் ஞானோதயம் வந்து நானே மாறிட்டேன்னு சொல்லுதியா…..”
“அதில்லை அத்தான்…… உங்க மனசுல நிறைஞ்சிருந்த அன்பும், காதலும் தான் உங்களை எனக்கு மீட்டுக் குடுத்துச்சு……”
“எப்படி சொல்லுதே மீனும்மா….. நான் உனக்கு எவ்ளோ பெரிய கொடுமையை பண்ணினேன்…… அதான் அன்பா…. அதான் காதலா…..” கண்கள் கலங்க கேட்டவனை காதலுடன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டாள் கயல்விழி.
அவனது சிகையை மெல்லக் கலைத்து வருடிக் கொடுத்தவள், “அத்தான்…… உங்க மனசுல எப்போதோ என் மேல நீங்க விதைச்சு வச்ச அன்புதான், விருட்சமா வளர்ந்து அன்னைக்கு நீங்க என்கிட்டே அப்படி நடந்துக்க காரணம்….. அது உங்களோட தப்புன்னு எனக்கு தோணலை…. என் மேல நீங்க வச்சிருக்கிற அன்பும், உரிமையும் தான் உங்களை அப்படி செய்ய வச்சிருக்குன்னு நான் நினைக்கறேன்….. இதைப் பத்தி பேசாதிங்கன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்…….” என்றாள் அவன் கன்னத்தில் செல்லமாய் கிள்ளிக் கொண்டே.
அதைக் கேட்டு அவளது மார்பில் முகம் புதைத்தவன், அவளை மென்மையாய் அணைத்துக் கொண்டான்.
“நீனு எனக்குக் கிடைச்சது என் வரம் மீனும்மா…..” என்றவன் சட்டென்று துள்ளி எழுந்தான்.
“எ…. என்னாச்சு அத்தான்…..” என்றாள் அவள்.
“என் பொக்கிஷம் என்னை எட்டி உதைக்குதுலே…..” என்றான் அவளது ஏழு மாதம் மேடிட்ட வயிற்றில் மென்மையாய் முத்தமிட்டுக் கொண்டே.
“ம்ம்… என்னை மட்டும் கொஞ்சினிக இல்ல….. அதான்…. உம்ம புள்ளைக்கு கோபம் வந்திருச்சு போல…..” என்று சிரித்தாள் அவள்.
அவளது வயிற்றில் மீண்டும் முத்தமிட்டு நிமிர்ந்தவன், மார்பில் புன்னகையுடன் சாய்ந்து கொண்டாள் அவள்.
“அத்தான்……”
“ம்ம்… சொல்லு மீனுக்குட்டி…..” என்றான் அவளது முதுகில் வருடிக் கொண்டே.
“எனக்கு எத்தன சந்தோஷமா இருக்கு தெரியுமா……. வேற எந்த நினைப்பும் இல்ல…. எந்தக் கவலையும் இல்ல…. என் அத்தான்….. அத்தான் மட்டும் தான் எம்மனசு பூராவும் நிறஞ்சிருக்கிய…… என் நெஞ்சமெல்லாம் உங்க மேல வச்சிருக்குற காதல் தான் நெறஞ்சிருக்கு……” உணர்ச்சி பூர்வமாய் பேசிக் கொண்டிருந்தவளின் நெற்றியில் முத்தமிட்டவன்,
“என் இதயமே நீதானடி மீனுக்குட்டி…… அது துடிக்குற ஒவ்வொரு துடிப்பும் உனக்கானது…… உனக்காக நான் காத்திருந்த கணங்கள் எல்லாம் காதலாகவே என் நெஞ்சில் நிறைந்து விட்டாய்…… என் நெஞ்சமெல்லாம் காதலாய் மாறி என்னையே எனக்கு அறிமுகம் செய்து விட்டாய்…..” சொல்லிக் கொண்டே சென்றவனின் அன்பில் திக்கு முக்காடித்தான் போனாள் அவன் மனையாள்.
மாறி மாறி காதலைக் கொண்டாடிக் கொண்டிருந்தவர்களை தொந்தரவு செய்யாமல் நாம் வாழ்த்தி விடை பெறுவோம்…….
பூக்களின் மென்மையெல்லாம்
பூவை உனக்குள் நிறைந்திருக்க
பூவாசம் தேடி அலையும்
பூவண்டாகிறேன் நான்…..
பூங்கதவின் தாள் திறவாயோ…
பூவே…. நானும் பூபாளம் இசைத்திட….
என் வாழ்வை வண்ணமயமாக்க
வானத்து வானவில் வேண்டாம்….
என் மனம் நிறைந்தவளின்
முகம் ஜொலிக்க வைக்கும்
நாணச் சிவப்பு போதும்….
நித்தம் ஒரு வானவில் – என்
நெஞ்சோரம் தொன்றிடுமே….
உன் கால் சலங்கை நிலத்தில்
உரசிச் செல்லும் போதெல்லாம்
உதிர்க்கின்ற சிணுங்களில்
உள்ளம் தொலைத்து – உனக்குள்
என்னைத் தொலைக்கிறேன் நானடி….
என் தவிப்பைப் போக்கும் புன்னகையை
உனக்குள் ஒளித்து வைத்து – என்னைப்
பரிதவிக்க விடலாமோ பனி மலரே….
உன் புன்னகையை சிந்தி விடு….. அதில்
சிதறிப் போகக் காத்திருக்கிறேன் நான்……
————–சுபம்—————-

Advertisement