Advertisement

அத்தியாயம் – 20
அடுத்த நாள் காலையில் குளியலை முடித்து காலை உணவுக்காய் ரெஸ்டாரண்டை நோக்கி நடந்தனர் மதியழகனும் கயல்விழியும். மனசுக்குள் ஏதோ சஞ்சலத்துடன் ஊருக்கு கிளம்பப் பிடிவாதம் பிடித்தவளை மதியழகன் எப்படியோ சமாதானப் படுத்தி இருந்தான்.  
பனியில் பூத்த புத்தம் புது மலராய் அருகில் நடந்து வருபவளை அடிக்கண்ணால் ரசித்துக் கொண்டே நடந்தான் மதியழகன். நீல நிற டெனிம் ஜீன்சும், டீஷர்ட்டும் கண்ணை மறைத்த கருப்பு ரேபானும் அவனை அழகனாய்க் காட்ட அடிக்கண்ணால் அவனை ரசித்துக் கொண்டே புன்னகையுடன் நடந்தாள் கயல்விழி.
இருவரும் ரெஸ்டாரண்டை அடைந்து எதிரெதிர் இருக்கையில் அமர்ந்தனர். அவளையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்த அவனைக் கண்டு கூச்சத்துடன் நெளிந்தாள் அவள்.
“அத்தான்….. என்ன இது….. என்னப் பாக்காத போல பாத்திட்டு இருக்கிய… யாராவது நம்மள கவனிக்கப் போறாக……”
“அது சரி…. எம்பொண்டாட்டிய நான் ரசிக்குதேன்….. இதுல யாருக்கு வருத்தம்…..” என்றவன்,
“மீனுக்குட்டி…… இந்தப் பனியில நீனு எப்படி இருக்கே தெரியுமா……”
“எப்படி இருக்கேன்…..” ஆவலோடு அவனை எதிர்கொண்டது அவள் விழிகள்.
“இப்பதான் செடியில மலர்ந்த ரோசாப்பூ போல… சும்மா தளதளன்னு இருக்கே……” காதலோடு அவளை வருடிய அவன் பார்வையில் ரோஜாவாய் சிவந்தாள் அவள்.
“சரி…. என்ன சாப்பிடறே…..” என்று கேட்டுக்கொண்டே மெனு கார்டை நோக்கி இருவருக்கும் பிடித்ததை ஆர்டர் செய்தான்.
பேரர் அவர்களுக்கான உணவை எடுத்து வரும் வரை கொஞ்சலும் சிணுங்கலுமாய் நகர அவனது காதலான வார்த்தைகளில் நாணத்துடன் சிரித்துக் கொண்டிருந்தவளை ரசித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தான் அவன்.
பேரர் உணவைக் கொண்டு வந்து வைத்து நகர்ந்ததும், சாப்பிடத் தொடங்கினர்.
காலை உணவை இட்லி, வடையுடன் முடித்துக் கொண்டு முதலில் கை கழுகி வந்த கயல்விழி, சூடான தேநீரைப் பருகிக் கொண்டிருக்க, பேரரின் பில்லுக்கு பணத்தை வைத்துவிட்டு கை கழுக எழுந்து சென்றான் மதியழகன்.
வேடிக்கை பார்த்துக் கொண்டே தேநீரைப் பருகிக் கொண்டிருந்தவள், எதிரில் அமர்ந்து ஒருவன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் சட்டென்று முகம் மாறினாள்.
ஒரு அடியாளின் தோற்றத்துடன் இருந்த அவனைக் கண்டதும் அந்தக் குளிரிலும் அவளது முகத்தில் வேர்வை துளிர்க்கத் தொடங்கியது.
கணவன் வருகிறானா எனப் பதட்டத்துடன் திரும்பிப் பார்த்தாள்.
அப்போது அந்த ஆஜானுபாகுவான தோற்றத்துடன் வாட்டசாட்டமாய் இருந்த அந்த ஆள் அவளை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டதும் அதிர்ந்தாள்.
“அ… அய்யோ….. யாரு இவன்…. இவன் எதுக்கு என்னை உத்துப் பார்க்குதான்…..  இப்ப எதுக்கு எங்கிட்ட வருதான்….. அத்தான வேற இன்னும் காணல…..” என்று நினைத்துக் கொண்டே பதட்டத்துடன் திரும்பிப் பார்த்தவள் முன்பு அவன் வந்து நின்றதைக் கண்டதும் பதட்டத்துடன் எழுந்தவள், அப்படியே மயங்கி சரிந்தாள்.
————————————————————————————————————————————————————
மூணாரில் இருந்து நெல்லையை நோக்கி காரை செலுத்திக் கொண்டிருந்தான் மதியழகன். வளைவுகள் முடிந்து வண்டி சீரான பாதையில் சென்று கொண்டிருக்க தன் தோளில் சாய்ந்து சோர்வுடன் உறங்கிக் கொண்டிருந்த மனைவியைப் புன்னகையுடன் நோக்கினான்.
“மீனுக்குட்டி…..” என்றவன் அவள் நெற்றியில் மெதுவாய் இதழ்களை ஒற்றி எடுக்க, அவள் சிணுங்கினாள். அவளை ஒரு கையால் தட்டிக் கொடுத்தவன், வண்டியை கவனத்தோடு செலுத்தத் தொடங்கினான். அவன் மனது கயல்விழி மயங்கி விழுந்த சம்பவத்தை  அசை போட்டுக் கொண்டிருந்தது.
கயல்விழி மயங்கி சரிந்ததும் அந்தப் புதியவன் அவளைத் தாங்கிக் கொண்டான். கை கழுகித் திரும்பி வந்த மதியழகன் அதைக் கண்டு பதட்டத்துடன் அவளிடம் ஓடி வந்தான்.
“என்னாச்சு….. மீனும்மா…… மீனு…..” என்று கலக்கத்துடன் அவளைத் தன் மடியில் சாய்த்துக் கொண்டே, அந்தப் புதியவனை ஒரு புரியாத பார்வை பார்த்தான் மதியழகன். அதற்குள் புதியவன் வேகமாய் சென்று மேசையில் ஜக்கில் உள்ள தண்ணீரை எடுத்து வந்து மதியிடம் நீட்டினான்.
அதை வாங்கி அவள் முகத்தில் தெளித்ததும் மெல்ல அவளது கருவிழிகள் அசைந்து கரிய விழித்திரையை அகற்றி திறந்து கொண்டன. கணவனின் முகத்தைக் கண்டதும் அவள் விழிகள் அமைதியாக, அருகில் நின்ற புதியவனைக் கண்டதும் புள்ளி மானாய் மருண்டது.
“அ…… அத்தான்….. இவரு….” என்று கோழிக்குஞ்சாய் அவன் நெஞ்சில் ஒட்டிக் கொண்டவளை தண்ணீர் பருக வைத்தான்.
“மீனும்மா…. இங்கே பாரு…. ஒண்ணுமில்ல…. உனக்கு என்னாச்சு… எதுக்கு மயக்கம் போட்டு விழுந்தே…. எதுக்கு நீனு இவரப் பார்த்து பயப்படுதே…. அவர் உன்னை எதுமே பண்ணலையே…. அப்புறம் எதுக்கு இந்த பதட்டம்….” அவளை சமாதானப் படுத்தி நாற்காலியில் அமர வைத்தவன், புதியவனிடம் கேள்வியாய் ஏறிட்டான்.
“நீங்க…. யாருன்னு எனக்குப் புரியலையே……”
“ச… சாரி தம்பி….. என்னைப் பார்த்து அவங்க பயப்படுறதுலயும் ஒரு அர்த்தம் இருக்கு….. என்னை மன்னிச்சிடுங்க மா….. நான் மூர்த்தி….. அந்த கோலா கம்பெனிக்கு இடத்தை வாங்கிக் கொடுக்க முயற்சி பண்ணின இட புரோக்கர்…..”
“ஓ….. நீங்கதானா…. அது…” என்றவன் அவனை மேலும் கீழுமாய்ப் பார்த்தான்.
“ம்ம்… நேத்தே உங்களைப் பார்த்தேன்….. வந்து மன்னிப்புக் கேக்கனும்னு தான் நினைச்சேன்…. கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு….. அதான் கேக்கலை….. இப்பவும் உங்களைப் பார்த்துட்டு மன்னிப்பு கேக்காம இருக்குறது ரொம்ப தப்புன்னு மனசுக்கு உறுத்துச்சு….. அதான் வந்தேன்…. நான் பண்ணின தப்பை மன்னிச்சு எனக்கு தண்டனை வாங்கிக் குடுக்காம விட்டிருக்கிங்க…. உங்களுக்கு எப்படி நன்றி சொல்லறதுன்னே தெரியலை…. நீங்களும் என்னை மன்னிச்சுக்குங்கமா….”
கூப்பிய கையுடன் தலை குனிந்து நின்ற ஆஜானுபாகுவான, முரட்டுத்தனமான அவனை ஒன்றும் புரியாமல் வியப்புடன் நோக்கினாள் கயல்விழி.
“அப்போ நீங்க எங்களை எதுவும் செய்ய வரலையா….. மன்னிப்புக் கேக்க தான் வந்தியளா…… நான் பயந்தே போயிட்டேன்…..” என்றாள் அவள்.
“ம்ம்…. ஆமாம் மா…. என் மேல கேசு போட்டிருந்தா என் குடும்பத்த அம்போன்னு விட்டுட்டு நான் ஜெயிலுக்கு தான் போயிருக்கனும்…. எதோ பெரிய மனசு பண்ணி எனக்கு தண்டனை வாங்கிக் குடுக்காம விட்டிருக்கிங்க…. ரொம்ப நன்றி தம்பி….” என்றான் மதியழகனிடம்.
“ம்ம்… இனியாவது பணத்துக்காக இப்படில்லாம் பண்ணாம நம்ம நாட்டுக்கும், வீட்டுக்கும் எது நன்மையோ அதை மட்டும் யோசிங்க…. உங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்குறது எங்க எண்ணம் இல்லை…. கோலா கம்பெனி எங்க கிராமத்துக்கு வரக் கூடாது…. அதான் எங்களுக்கு வேணும்….”
“ம்ம்…. பணத்துக்கு ஆசைப்பட்டு இந்தத் தப்பைப் பண்ணிட்டேன்….. இனி இப்படில்லாம் பண்ண மாட்டேன் தம்பி….. உங்ககிட்டே மன்னிப்பு கேட்ட பின்னால தான் மனசுக்கு நிறைவா இருக்கு…… நான் வரேன் தம்பி….. வரேன்மா….” என்றவன் மீண்டும் கை கூப்பிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். அதைக் கண்ட கயல் ஒன்றும் புரியாமல் செல்லுகின்ற அவனையே பார்த்து நின்றாள்.
“அத்தான்….. இங்க என்னதான் நடக்குது…. எனக்கு ஒண்ணுமே வெளங்கல….. யாரு இவுக…. எதுக்கு மன்னிப்பு கேட்டுப் போறாக…..”
“மீனுக்குட்டி…. இவர் தான் அப்பாவை வண்டில தட்டிவிட்டு ஆக்சிடண்ட் பண்ணவரு…. உன்னைக் கொலை பண்ணிருவேன்னு போன்ல மிரட்டினதும் இவரு தான்…..”
“என்னது…… மாமாவை வண்டில இடிச்சுத் தள்ளிட்டுப் போனவன்னு தெரிஞ்சுமா அவனப் போலீசுல புடிச்சுக் குடுக்காம இருந்திய…. இவன் எதுக்கு அப்படிப் பண்ணினான்…..” என்றாள் அவள்.
“இவன் தான், அந்த கோலா தொழிற்சாலைக்கு இடம் வாங்கிக் கொடுக்க இந்த ஊர்ப் பெரிய புள்ளி ஒருத்தர் ஏற்பாடு பண்ணி இருந்த புரோக்கர்…. இடத்தை முடிச்சுக் கொடுத்திருந்தா அவனுக்கு கிடைக்கப் போற லாபம் எவ்வளவு தெரியுமா…..”
“எவ்வளவு அத்தான்….”
“எழுபத்தஞ்சு லட்சம்….. அதுக்காக தான் நம்மள பயமுறுத்தி அந்த பெட்டிஷனை திரும்ப வாங்க வைக்க முயற்சி பண்ணி இருக்கான்…..” அவள் ஆவென்று வாயைப் பிளந்து கொண்டு நின்றாள்.
“இம்புட்டு பணமா…. பணத்துக்காக இவனா இப்படில்லாம் பண்ணான்…. நான் கூட அந்த கோலா கம்பெனி ஆளுங்க தான் இதெல்லாம் பண்ணிருப்பாகன்னு நினைச்சேன்…. சரி… இதெல்லாம் நீங்க எப்படிக் கண்டு பிடிச்சிய அத்தான்…..”
“என் பிரண்டு அண்ணன் அரசியல்வாதியாச்சே…. அவர் செல்வாக்கை வச்சு தான் எல்லாம் கண்டு பிடிச்சோம்….. அப்பாவை இடிச்சுத் தள்ளிட்டுப் போன வண்டி நம்பரை CCTV வீடியோ பார்த்து பிடிச்சுட்டோம்……. அதை வச்சு அந்த வண்டியோட உரிமையாளரைக் கண்டு பிடிச்சோம்…. இவன்தான் அந்த இடத்தோட புரோக்கர்னு தெரிஞ்சது….. அரசியல்வாதி மூலமா எச்சரிக்கை வந்ததும் இவன் பயந்துட்டான்….. அதுக்குப் பின்னால தான் நம்ம போராட்டத்துக்கே ஏற்பாடு பண்ணோம்…..”
“ஓ…… இத்தனை நடந்திருக்கா…. என் அத்தான், நெசமாலுமே ஹீரோதேன்….” என்றாள் அவள் புன்னகையுடன்.
அதைக் கேட்டு சிரித்தவன், “சரி…. மீனுக்குட்டி…. வா…. நாம ஒரு டூயட் பாடிட்டு வரலாம்….” என்று அவளையும் இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான். ரம்மியமான காட்சிகளுடன் காதலையும் சேர்ந்து அனுபவித்தவர்கள் மனம் சந்தோஷத்தில் நிறைந்தாலும் உடல் சோர்வுடன் அவர்கள் அறைக்கு வந்தனர். 
அவளது மனதில் உள்ள சஞ்சலங்கள் நீங்கியதும் அவர்களுக்கு மாத்திரமான அங்கிருந்த ஒவ்வொரு நொடியையும் சந்தோஷத்துடன் அனுபவித்தனர். காலையில் பார்க்குக்கு சென்று விட்டு அறைக்குத் திரும்பினர்.
கட்டிலில் தொப்பென்று அமர்ந்தவன், “மீனுக்குட்டி…. இப்போதே கிளம்பணுமா….  இன்னும் ரெண்டு நாள் இங்கயே இருந்துட்டுப் போகலாமே…..” என்று அவளையும் பிடித்து அருகில் அமர்த்தியவன் அவளது கூந்தலில் வாசம் பிடித்தான்.
கழுத்தில் நகர்ந்து குறுகுறுத்த அவனது மீசையின் உரசலின் ஒரு மின்னல் பூ உடம்பெங்கும் சிலிர்க்க வைக்க கூச்சத்துடன் நெளிந்தாள் அவள்.
அவனை விட்டு எழுந்தவள், “என்ன அத்தான்…. நாம நேத்தே கிளம்ப வேண்டியது…. வீட்டுல சொல்லிட்டு வந்ததை விட ஒரு நாள் அதிகமாவே இருந்துட்டோம்….. இன்னைக்கும் கிளம்பலேன்னா எப்படி….” என்றாள் அவனது மூக்கைப் பிடித்து ஆட்டிக் கொண்டே.
“பத்தலையே மீனும்மா…..” என்றான் விஷமப் புன்னகையுடன் அவளைத் தன்னிடம் இழுத்துக் கொண்டே.
“ம்ம்…. அதுசரி….. பத்தின வரைக்கும் போதும்…. பாக்கி ஊருல போயி வச்சுக்கலாம்….” என்றாள் அவள்.
“ம்ம்….. அப்படியா சொல்லுதே…. சரி…. ஒண்ணே ஒண்ணு…. ப்ளீஸ் மீனும்மா….” என்றவன் அவள் சம்மதம் சொல்லு முன்னரே தன் இதழால் அவள் இதழை மென்மையாய் சுவைக்கத் தொடங்கினான்.
ஒரு நீண்ட முத்தக் குளியலுக்குப் பின் முத்தெடுத்து அவளை விடுவித்தவன், “நீ எல்லாத்தையும் எடுத்து வை…. நான் ஒரு குளியல் போட்டுட்டு வந்திடறேன்…..” என்று அவளை விடுவித்தான். முத்தத் தீண்டலில் சிலிர்த்துப் போய் தன் நெஞ்சில் கிடந்தவளை மென்மையாய் விலக்கிவிட்டு எழுந்தான்.
அவளும் எழுந்திருக்க, சட்டென்று தலை சுற்றியவள், “அ… அத்தான்…. தல சுத்துது…..” என்று கூறிக் கொண்டே தலையைப் பிடித்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.
“அச்சோ… என்னாச்சு மீனும்மா….. எதுக்கு தல சுத்துது….” என்று பதறியவன், தண்ணீரை எடுத்து நீட்டினான்.
“இந்தா கொஞ்சம் தண்ணி குடி…. அமைதியா அப்படியே உக்காரு…. இந்த வாரம் பூரா சுத்திட்டே இருந்தோம்ல… உடம்பு அசதியா இருக்கும்….” என்றான்.
தண்ணீரை வாங்கிக் குடித்தவளுக்கு வயிற்றைக் குமட்டிக் கொண்டு வர, குளியலறைக்கு எழுந்து ஓடினாள். அதைக் கண்ட மதியழகன் பதறிப் போனான். வாந்தி எடுத்தவளின் முதுகை நீவிக் கொடுத்து முகம் கழுக வைத்து அவளைக் கூட்டி வந்து கட்டிலில் படுக்க வைத்தான்.
“நீ கொஞ்சம் படுத்துக்கோ… மீனும்மா……. சட்டுனு என்னாச்சு உனக்கு…. ஒ… ஒருவேளை… இது…. அந்த வாந்தியா….” என்றவனின் முகம் சட்டென்று மலர்ச்சியைக் காட்ட, அவன் சொன்னதைக் கேட்டதும் மனதுக்குள் கணக்குப் போட்ட கயல்விழியின் முகமும் சூரியகாந்தியாய் மலர்ந்தது.
அவர்களின் முக மலர்ச்சிக்குக் காரணமான அந்த ஊகத்தை அங்கிருந்த டாக்டர் ஒருவரும் உறுதிபடுத்தவே, ஊருக்கு அழைத்து அவர்கள் வம்சம் உருவாகிய சேதியை லச்சுமியிடம் அறிவித்தனர்.
அதைக் கேட்டதும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தவர், அவர்களை உடனே கிளம்பி, கவனமாய் வீடு வந்து சேருமாறு கூறினார்.
தேனிலவை முடித்துக் கொண்டு மனம் நிறைந்த சந்தோஷத்துடன் இருவராய் வந்து மூவராய் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
————————————————————————————————————————————————————
சில மாதத்திற்குப் பிறகு.
“என்னம்மா…… எல்லாரும் புறப்பட்டாச்சா…. கிளம்பலாமா….” என்றான் வாசலில் காரை எடுத்து நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்த மதியழகன்.
வேட்டி சட்டையில் அழகாய் இருந்தான்.
“ம்ம்… நாங்கல்லாம் புறப்பட்டாச்சு….. உன் பொண்டாட்டி தான் இன்னும் வெளிய வரக் காணோம்….” என்றார் சாத்திய கதவுக்கு முன்னால் மல்லிகைப் பூவுடன் நின்று கொண்டிருந்த லச்சுமி.
“மீனுக்குட்டி….. கதவைத் திற….. இன்னும் உள்ள என்ன பண்ணிட்டிருக்கவ…. அங்க எல்லாரும் நமக்காகக் காத்திருப்பாக….. சீக்கிரம் வாம்மா…..” என்றான் மதியழகன்.
மெதுவாய்க் கதவைத் திறந்தவள் அழகாய் பட்டு சேலையில் ஜொலித்தாள்.
“அத்தை…. எப்படி கட்டினாலும் ஒண்ணா வயிறு தெரியுது…. இல்லன்னா குதிகாலு தெரியுது…. சேலையை சரி பண்ணவே முடியல….” என்றாள் சிணுங்கலுடன் வெளியே வந்த கயல்விழி.
“புள்ளத்தாச்சியா இருக்கும்போது அப்படி தான் தாயி இருக்கும்….. வயிறு பெருசாகுதுல்ல….. அதான்….. இரு… நான் சரி பண்ணி விடுதேன்….” என்றவர், குனிந்து அவளது சேலையை சரியாக்கினார்.
“அட…. அட……. என்னா பாசம்…. என்னா பாசம்…. மாமியாரும் மருமகளும் கொஞ்சிக்கறதப் பார்த்தா எனக்கே செத்தப் பொறாமையா தான் இருக்கு….” என்றான் மதியழகன். அதைக் கேட்டு புன்னகையுடன் அவன் முதுகில் செல்லமாய் குத்தினாள் கயல்விழி.

Advertisement