இருவரும் சிரித்துக் கொண்டே கீழே இறங்கி வருவதைக் கண்டு பெற்றோரின் மனம் நிறைந்தது.
அவளிடம் பேசிவிட்டு அடுத்த நாளே டவுனில் நகை ஆர்டர் கொடுக்க செல்ல முடிவு செய்தனர்.
அப்படியே யார் யாருக்கெல்லாம் ஜவுளி எடுக்க வேண்டும் என்ற லிஸ்டும் தயாரானது. கல்யாண வேலைகள் ஜரூராய் நடக்கத் தொடங்க, கல்யாணக் கனவுகளில் மிதக்கத் தொடங்கினாள் மலர்விழி.
தந்தை கல்யாண வேலைகளில் பிசியாக இருக்கவே, கயல்விழி மட்டுமே ஆயில் மில்லை கவனித்துக் கொண்டாள். கல்யாணத்துக்கு இரு வாரங்களே இருந்தன.
“கயலு……. இங்க வா தாயி….”
“என்னப்பா…… கூப்பிட்டியளா….” தந்தையின் குரலுக்கு ஓடி வந்தாள் மகள்.
“நான் இன்னைக்கு டவுனுக்குப் போயி அந்த சீட்டுக் கம்பெனில செக்கு வாங்கிட்டு வந்திடறேன் பிள்ள….. இன்னைக்கு எண்ண லோடு எடுக்க தென்காசில இருந்து வண்டி வருதுன்னு சொல்லிருந்தாக….. நீனு கூட இருந்து பாத்துக்கறியா தாயி….. இந்த லோடு போனா தான் நாளைக்கு ஒரு பேமண்டு வரும்…… கண்ணாலத்துக்கு இதையும் சேர்த்துதேன் கணக்குல வச்சிருக்கேன்……”
“சரிப்பா…… நான் பாத்துக்குதேன்….. நீங்க அந்த சோலிய முடிச்சிட்டு வாங்க…..” என்றாள் அவள்.
“ஹூக்கும்….. அதேன் பொட்டப்பிள்ளைய ஆம்பள கணக்கா வளத்து வச்சிருக்கேள்ள….. எல்லாம் அவ பார்த்துப்பா….. நீனு போயி கல்யாண சோலிய பாரு ராசா…..” என்றார் அதைக் கேட்டுக் கொண்டே வந்த பேச்சியம்மா.
“ஏய்….. கெழவி….. சும்மா என் வாயப் புடுங்காதே…. சொல்லிப்புட்டேன்….”
“ம்ம்… நீ சொன்னியே…. அதத்தேன் பண்ணோணும்…. உம்பட வாயத் தைக்கற ஊசி இந்த ஊருல இல்லேன்னு வெளிநாட்டுக்கு ஆர்டர் கொடுத்திருக்கேன்….. வரட்டும்….தச்சுக்காட்டுதேன்…..”
“ம்ம்…. நீ பண்ணாலும் பண்ணுவட்டி……. நான் தூங்கும்போது எம்மூஞ்சில மீச வரஞ்சு வச்சவல்ல நீனு…….”
அவர்கள் பேசத் தொடங்கியதும் ஓரமாய் ஒதுங்கி நின்ற சுந்தரேசன், “அய்யோ…. ஆத்தா…… அவதான் சின்னப் பிள்ளன்னா நீயும் சரிக்கு சமமா அவகூட பேசிட்டு நிக்குத…. ஒரு நல்ல காரியத்துக்குக் கிளம்பும்போது இப்படிதான் சண்ட போட்டுட்டு இருப்பியளா……” என்று சடைந்து கொண்டவர், “கயலு…. நீ உன் அம்மைய வர சொல்லு….. போ…..” என்றார்.
“ம்ம்…. உன் கருவாச்சி மவள நீ விட்டுக் குடுப்பியா….. என்னல்லா அடக்க வாறே…… சரி…. சரி…. நீனு கெளம்பு…. நான் ஒண்ணும் பேசல……” என்று அமைதியானார் பேச்சி.
அவரை முறைத்துக் கொண்டே அடுக்களைக்கு சென்ற கயல்விழி, “அம்மா….. அப்பா உங்கள கூப்பிடுதாக…” என்றாள். “கயலு….. ஆச்சிக்கு சத்துமாவுக்கஞ்சி அடுப்புல வச்சிருக்கேன்…. கொஞ்சம் பார்த்துக்க…… உப்பு போட்டிருக்கேன்…. நீயும் போட்டுறாதலே…..” என்று சொல்லி விட்டு ராசாத்தி வெளியே செல்ல சட்டென்று அவள் தலையில் பல்பு எரிந்தது.
“ஆஹா….. கெழவிக்கு சத்துமாவு கஞ்சியா…. இதைக் குடிச்சிபுட்டு தானே சத்தா என்னய வம்புக்கு இழுக்கறவ…. உமக்கு இருக்குலே…. நீனு இன்னிக்கு வாயவே தெறக்கப்படாது……..” மனதுக்குள் கருவிக் கொண்டவள், அவர் எப்போதும் கஞ்சி குடிக்கும் பாத்திரத்தில் பெவி க்விக்கினைத் சிறிது எடுத்துத் தடவிவிட்டு, “நாம ஏதும் செய்துவச்சா அம்மால்ல அந்தக் கெழவிட்ட ஏச்சு வாங்கும்….. வேண்டாம்…. விட்டுத் தொலைப்போம்…..” என்று அதைக் கழுகி வைத்தாள்.
அப்போது வாசலில் மணிமாறனின் குரல் கேட்கவே அங்கே ஒரு காதை வைத்துக் கொண்டே கஞ்சியை இளக்கிக் கொண்டிருந்தாள் கயல்விழி. ஒரு அடுப்பில் அவனுக்கு காப்பியை வைத்தாள்.
“வாடா மருமகனே…… என்ன அதிசயமா இந்த நேரத்துல உன் அயித்த வீட்டுக்கு வந்திருக்க….. கையில நெறையா வச்சிருக்க போலருக்கு….. ஊட்ல எல்லாரும் சுகமா இருக்காகளா…..” என்று மருமகனை வரவேற்றார் சுந்தரேசன். பக்கத்தில் நின்று கொண்டிருந்த பேச்சியம்மாளின் முகத்தில் அப்பட்டமாய் விருப்பமின்மை தெரிந்தது. அதைப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்தான் மணிமாறன்.
“எல்லாருக்கும் சுகம்தான் மாமா…. நீங்க எப்படி இருக்கீக… நம்ம வாழத் தோப்புல நேத்து வாழக்குலை அறுத்தோம் மாமா…. ஆச்சிக்கு ரஸ்தாளிப் பழம் பிடிக்குமேன்னு அப்பா கொடுத்துட்டு வர சொன்னாக……” அதைக் கேட்டதும் சற்று மலர்ந்த பேச்சியின் முகம் அடுத்து அவன் சொன்ன வார்த்தையில் மீண்டும் சுருங்கியது.
“அப்புறம், அம்மா காலைல பால் கொழுக்கட்டை செய்திருந்தாக….. கயலுக்கு பிடிக்குமேன்னு கொஞ்சம் எடுத்திட்டு வந்தேன்….” என்று கையில் உள்ள தூக்கினை அத்தையின் கையில் கொடுத்தான் மணிமாறன்.
“ஹூம்…. உங்க வீட்டுப் பால் கொழுக்கட்டைக்கு வேண்டித்தான் இந்த வீட்டு மகராசி திங்காமக் கெடக்காளாக்கும்….. அதெல்லாம் அவ நேரமே கொட்டிக்கிட்டா…..” என்று சிடுசிடுத்தவரை, பரிதாபமாய் பார்த்தார் ராசாத்தி.
“ஆத்தா….. செத்த சும்மா இருக்க மாட்டியளா….. வராத பிள்ளை வந்திருக்கு…. சும்மா எதுனா சொல்லி அத நோகடிச்சிட்டு….. நீங்க உள்ளாற போங்க…..” என்றார் சுந்தரேசன்.
“ம்ம்… எது சொன்னாலும், என்னைய மட்டும் அடக்கிரு….. ஏலே… ராசாத்தி…. எனக்குக் கஞ்சி எடுத்திட்டு வாலே…. பசிக்குது…..” என்று மருமகளிடம் பாய்ந்தார்.
“இதா…. கொண்டு வரேன் அத்த….. மணி… நீனு உக்காரு ராசா…. வந்திடறேன்….” என்றவர் உள்ளே செல்ல, அத்தையை பாவமாய் பார்த்தான் அவன்.
“அப்புறம் மாமா…. கண்ணால வேலை எல்லாம் எப்படிப் போவுது…..”
“எல்லாம் நல்லா போயிட்டிருக்கு மருமகனே… இப்பக்கூட அந்த விஷயமாதேன் டவுனுக்கு கெளம்புதேன்…..”
“எல்லாம் உள்ளாறதேன் இருக்காக….. நீ போயி பாருலே….. நான் அப்படியே கெளம்புதேன்…..” என்றவர் ராசாத்தியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
ராசாத்தி கஞ்சியை எடுத்துக் கொண்டு பேச்சியம்மாவின் அறைக்கு செல்ல, காப்பியை எடுத்துக் கொண்டு மணிமாறனிடம் வந்தாள் கயல்விழி.
அப்போதுதான் குளித்திருந்தவள் கூந்தலை டவலில் சுற்றிகட்டி வைத்திருந்தாள். வெள்ளத்தில் குளித்த செந்தாமரையாய்….. மஞ்சளில் குளித்து மின்னிய அவளது மாசு மருவற்ற முகமும், நெற்றியில் சின்னதாய் ஒரு பொட்டு வைத்து அதற்கு மேல் வைத்திருந்த சந்தனமுமாய் வந்து நின்றவளின் இயற்கையான அழகு அவன் கண்களை நிறைத்தது.
அவளை ரசனையோடு வருடிய அவனது கண்களைக் கண்டவள், “என்ன பொத்தான்…. காலையில இங்க வந்து உக்கார்ந்துட்டு இருக்கிய….. சோலி எதுவும் கெடையாதா……” கேட்டுக் கொண்டே அவனிடம் காப்பியை நீட்ட, அதை வாங்கிக் கொண்டவன், ரசித்துக் குடித்தான்.
“நீ போட்ட காப்பின்னாலே தனியா தெரியுது புள்ள……”
“ம்ம்… தெரியும்… தெரியும்…. சட்டுபுட்டுன்னு குடிச்சுப்புட்டு சோலியப் பாக்கக் கெளம்புங்க….” என்று கூறிக் கொண்டே தூக்கில் இருந்த பால் கொழுக்கட்டையை நுகர்ந்து பார்த்தாள்.
“ஆஹா….. என்ன இருந்தாலும் அத்தையோட கை ருசியே தனிதேன்….. என்ன மணம்….” என்று கூறிக் கொண்டே அதில் இருந்து ஒரு கொழுக்கட்டையை கை விட்டு எடுக்கப் போனவளைப் பின்னிலிருந்து தோளில் அடித்தாள் மலர்.
“என்னலே இது…. கைவிட்டு எடுக்கற பழக்கம்….. ஸ்பூனை எடுத்திட்டு வந்து சாப்பிடுலே……” என்றவள், “என்ன அத்தான்…. எப்படி இருக்கிய….” என்றாள்.
“நான் நல்லாருக்குதேன் மலரு…. கண்ணாலப் பொண்ணு நீனு எப்படி இருக்க….. மாப்பிள்ளையோட பேசுதியா……” அதைக் கேட்டதும் அவளது முகம் செவ்வானமாய் மலர்ந்தது.
“ஹூக்கும்…. அதை மட்டுந்தானே அவ சோலியா பண்ணிட்டு கெடக்கா… இதுல பேசுதியான்னு கேள்வி வேற…..” என்று முனங்கிக் கொண்டே ஸ்பூனுடன் வெளியே வந்தாள் கயல்விழி.
அதைக் கேட்ட மலர் அவளை முறைக்க, அறியாதது போல அமைதியாய் கொழுக்கட்டையை சாப்பிடத் தொடங்கினாள். ராசாத்தியும் பேச்சியம்மாவின் அறையில் கஞ்சியை வைத்துவிட்டு வெளியே வந்து மணிமாறனுடன் பேசிக் கொண்டிருந்தார்.
“சரி… நீங்க பேசிட்டு இருங்க… நான் கிளம்புதேன்…….” என்ற கயல் அவளது அறைக்கு செல்ல, “கயலு எங்கே போகுது அத்தை….” என்றான் மணிமாறன்.
“இல்லவே…. அவுகளுக்குப் போக ஏலாத போது மட்டும் போவா….”
“ம்ம்…. சரி அத்தை….. அப்பாவும், அம்மாவும் நாளைக்கு இங்க வாரேன்னு சொன்னாக….. நான் அப்படியே கெளம்புதேன்….. இன்னிக்கு தோட்டத்தில பூச்செடிக்கு எல்லாம் உரம் போடுற சோலி இருக்கு…… ஆளுக வந்திருப்பாக…..”
“சரி கண்ணு….. ஒரு நிமிஷம் இரு…..” என்று உள்ளே சென்றவர், வீட்டில் செய்து வைத்திருந்த கை முறுக்கையும், தேன் குழலையும் அந்தத் தூக்கில் போட்டு எடுத்துக் கொண்டு வந்தார்.
“இந்தா ராசா…. அண்ணனுக்கு முறுக்குன்னா ரொம்பப் பிரியம்…… நேத்து தான் நான் செய்து வச்சேன்….. இனி வீட்டுக்கு விருந்தாளிக வர ஆரம்பிச்சிருவாகல்ல….. சும்மா கடைல வாங்குறதுக்கு நாம செய்து வச்சா விரும்பி சாப்பிடுவாக…..” என்றவர் அதை ஒரு கவரில் போட்டுக் கொடுக்க, அவரது பிறந்த வீட்டோடு உள்ள அன்பு அதில் அழகாய் வெளிப்பட்டது.
புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டான் மணிமாறன். அப்போது கயலும் புறப்பட்டு வந்திருக்க, அவளைக் கண்ணில் நிறைத்துக் கொண்டே மணிமாறன் விடை பெற்றான்.
“சரிம்மா…… நானும் கெளம்புதேன்…..” என்று கயலும் கூற,
“நீயேன் புள்ள… வெயில்ல நடந்து போவுதே….. அத்தான் கூடயே போயி எறங்கிக்க வேண்டியது தானே….. தம்பி….. கயலையும் அப்படியே பைக்கில கூட்டிட்டு போயி ஆயில் மில்லுல எறக்கி விட்டுடறியா ராசா…..” என்றார் மருமகனிடம். மனதுக்குள் ஆயிரம் தாமரை மொட்டுக்கள் சடசடவென்று விரிந்து கொண்டு ஆனந்தக் கும்மியைக் கொட்ட அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல்,
இருவரும் ஜோடியாகப் போவதைக் கண்டு ராசாத்தியின் மனது அவசரமாய் கணக்குகளைப் போடத் தொடங்கியது. மலர்விழிக்கும், மணிமாறன் கயலைக் காணும்போது அவனது முகத்தில் தோன்றும் மென்மை யோசிக்க வைத்தது.