Advertisement

அத்தியாயம் – 2
“ஏட்டி லச்சுமி…. எதுக்குவே….. நீ இப்படி ஒப்பாரி வைக்கவ…. உம்புள்ள என்ன மொத தடவையா குடிச்சிட்டு வந்திருக்கான்…… தெனம் இப்படித்தாம்லே எங்கனாச்சும் குடிச்சிட்டு விழுந்து கெடக்கான்….” எரிச்சல் நிறைந்திருந்தது முத்துப்பாண்டியின் குரலில்.
அவரை முறைத்த லட்சுமி, “ஏன் சொல்ல மாட்டிய….. ஒண்ணே ஒண்ணு….. கண்ணே கண்ணுன்னு ஒரே ஒரு புள்ளைய பெத்து வச்சிருக்கேன்…. அதுவும்  இப்படி குடிச்சிட்டு மரமாட்டமா கெடக்குது….. எல்லாம் உம்மால தான்வே……” மீண்டும் அழத் தொடங்கினார் லட்சுமி.
“போதும்…. நிறுத்துலே….. இன்னும் எம்புட்டு நாளைக்குத்தேன் நீனு என்னையே குத்தம் சொல்லிட்டு இருக்கப் போறவ….. பையனைப் புத்தி சொல்லித் திருத்த வக்கில்ல….. எம்மகிட்டப் பாயுதியா…..” கோபமாய் கேட்டார்.
“ம்ம்…. எம்புள்ள புத்தி சொல்லித் திருத்த வேண்டிய புள்ளையா…. புத்தி சொல்ல வேண்டியது உமக்குத்தான்யா….. எப்படி ராசாவாட்டம் இருந்த புள்ள….. எல்லாம் நீரு பண்ணின கூத்துல தானே இப்படியாகிப் போனான்….. பணத்தாச புடிச்சு அலைஞ்சிட்டு எம்புள்ள வாழ்க்கைய அநியாயமா கெடுத்துப்புட்டீரு……” கணவரை வார்த்தையால் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தார் லட்சுமி.
“சும்மா இதையே இன்னும் எத்தன காலந்தேன் சொல்லிட்டு இருக்கப்போவுத…..”
“பின்ன சொல்லாம….. இவன் இப்படிக் குடிச்சு சீரழியறதப் பாத்தே நான் வெரசா போயி சேர்ந்துடுவேன் போலிருக்கு…. அதுக்கு முன்னாடி அவனப் பழையபடி பாக்கோணும்னு எம் பெத்த வயிறு துடிக்கறது எமக்குள்ளய்யா தெரியும்…… அவன் வாழ்க்கைய கெடுத்து இந்தக் குடும்பத்தோட சந்தோஷத்தையில்ல நீரு இல்லாமப் பண்ணிட்டீரு……” என்றவரின் கண்களில் இருந்து கண்ணீர் தாரையாக ஒழுகிக் கொண்டிருந்தது.
அதைக் கண்டு மனமிரங்கிய முத்துப் பாண்டி லச்சுமியின் அருகில் வந்து அமர்ந்தார்.
“ஏட்டி…… இங்க பாரு….. நான் ஏதோ பண்ணப் போயி வேற என்னவோ நடந்து போச்சு…. இப்படில்லாம் இவன் பண்ணுவான்னு நான் நினைக்கல தாயி….. பணந்தேன் முக்கியம்னு நெனச்சது தப்புதேன்….. இதை எப்படி சரி பண்ணறதுன்னு எனக்கும் வெளங்கல….. மதி என்னோட பேசியே எம்புட்டு நாளாச்சு….. எனக்கு மட்டும் எம்புள்ள இப்படி கெட்டு சீரழியுதேன்னு வெசனம் இருக்காதா…….”
“அப்படி வெசனம் இருக்கவக தான் இப்படி சொன்னியளாக்கும்….” என்றவர் போதையில் மதியிழந்து கிடந்த மதியழகனின் தலையை அன்போடு தடவிக் கொடுத்தார்.
“ஊரு மெச்சுற போல இருந்த புள்ள….. இப்ப ஊரே ஏசுற அளவுக்கு ஆயிட்டான்…. எல்லாம் உங்களாலதேன்…..” மீண்டும் கணவரையே குற்றப்படுத்தினார் லச்சுமி.
“இங்க பாருலே…. சும்மா நடந்து முடிஞ்சதையே பேசிட்டு இருந்தா நான் என் சோலிய பாத்திட்டுப் போயிடுவேன்…. இனி என்ன பண்ணலாம்னு யோசிப்பியா…. அத விட்டுப்புட்டு சும்மா என்னையே நொள்ள சொல்லிகிட்டு…..”
“இப்ப நான் என்ன பண்ணனும்னு சொல்லுறிய….”
“ம்ம்… இப்ப கேட்டியே….. இது கேள்வி…. நமக்கிருக்குறது ஒரு புள்ள….. இந்த சொத்து, சுகம் எல்லாம் அவன் அனுபவிக்கதேன் நான் பாடுபட்டு சேர்த்து வக்கேன்…… அவன் நல்லா இருக்கற சமயத்துல நீதேன் எடுத்து சொல்லிப் புரிய வெக்கோணும்….. அவனுக்கு நல்லவொரு பொண்ணாப் பார்த்து கண்ணாலம் பண்ணி வச்சுட்டா பழசெல்லாம் மறந்து நல்லாயிடுவான்…. நீனு சும்மா வெசனப்படாதலே…..”
“எப்படி வெசனப்படாம இருக்க….. இவனப் பத்தி தெரிஞ்சு நம்ம சொந்த சாதிசனத்துலயே பொண்ணு கொடுக்க மாட்டேங்குறாக….. இந்த ஊருலயே பெரிய பணக்காரன்னு சொல்லி என்ன பிரயோசனம்…. நம்ம பையன் வாழ்க்க இப்படி ஒண்ணும் இல்லாமல்லா ஆகிப் போச்சு…..”
“நீ சும்மா பொலம்பிட்டே இருக்காதவே….. நேரமாச்சு…. நான் தோப்புக்கு கெளம்புதேன்…. இன்னைக்கு தேங்கா போடறதுக்கு ஆள வரச்சொல்லிருக்கேன்…… அவனை எழுப்பி ஏதும் சாப்பிடக் குடு…… வந்து பேசிக்கலாம்….” சொல்லிவிட்டு அவர் தோப்புக்கு கிளம்ப, மகனை எழுப்ப முயற்சி செய்தார் லட்சுமி.
வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஆட்கள் வரப்பில் விழுந்து கிடந்த மதியழகனை வீட்டில் கொண்டு வந்து சேர்த்திருந்தனர். வாசலில் உக்கார வைத்து வாளியில் தண்ணியை வாரி அவன் மீது ஊற்றியும் அவன் தெளியாமல் அப்படியே அமர்ந்திருந்தான். உடையை மாற்றி தலை துவட்டி அவனை படுக்கையில் கொண்டு வந்து கிடத்தி இருந்தனர்.
சுய நினைவின்றி என்னவோ உளறிக் கொண்டு கிடந்தவனை வருத்தத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது அந்த அன்னையின் கண்கள். கலைந்த தலையும், தாடியுமாய் சோர்வுடன் கிடந்தவனைக் காணுகையில் அவரது மனம் துடித்தது.
“மதி…… அய்யா….. எழுந்திருய்யா…..”
அவன் “ம்ம்…..” என்று முனங்கிக் கொண்டே மீண்டும் உறக்கத்தைத் தொடர அவர் மீண்டும் அழைத்தார்.
“எதுக்குய்யா… இப்படிக் குடிச்சு நாசமாப் போறிய….. என்னதேன் அப்பாரு மேல கோபம்னாலும் இந்த அம்மாவையும் நெனக்க மாட்டியா ராசா….” அவரது வார்த்தைகள் தழுதழுக்க மீண்டும் அவனை உலுக்கினார்.
“ஏட்டி….. அலமு…… சாப்பிட எதுனா கொண்டு வா புள்ள…..” என்று அடுக்களையை நோக்கிப் பணிப்பெண்ணிடம் குரல் கொடுத்துவிட்டு மீண்டும் மகனை எழுப்பி கஷ்டப்பட்டு உட்கார வைத்தார். அவன் தலை கழுத்தில் நிற்காமல் தொய்ந்து சரிய அவரது கண்கள் கலங்கியது.
“மதி…… ராசா….. எதுனா கொஞ்சம் சாப்பிடுய்யா……”
“வே…. வேணாம்…… எ…னக்குப் பசிக்கலை…..” தடுமாற்றமாய் வந்தது அவனது வார்த்தைகள்.
“உனக்குப் பசிக்காதுன்னு எனக்குத் தெரியும்ல…. அதான் விடியறதுக்கு முன்ன வயித்த ரொப்பி வச்சிருக்கியே….. எனக்காக கொஞ்சம் சாப்பிடுய்யா……” என்றவரின் வருத்தம் நிறைந்த குரல் அவனை வாய் திறக்க வைக்க, கண்களில் நிறைந்த கண்ணீருடனும் மனதில் நிறைந்த கவலையுடனும் அலமு கொண்டுவந்து தந்த உணவினை மெதுவாய் ஊட்டி விட்டார் லட்சுமி.
“போ….போதும்மா…… நா… நான்… கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்…..” என்று தடுமாற்றத்துடன் எழுந்தவனைப் பிடித்து படுக்கையில் அமர்த்தினார் லட்சுமி.
“நீ போன வரைக்கும் போதும்யா…. கொஞ்ச நேரம் அமைதியா படுத்து உறங்கு….” அன்னையின் சோர்ந்த கவலையான முகத்தைக் கண்டு என்ன தோன்றியதோ பேசாமல் படுத்துக் கொண்டான் மதியழகன்.
————————————————————————————————————————————————————
“ராசாத்தி… நாளைக்குப் மாப்பிள வீட்டுல பத்திரிகை வச்சிட்டு உங்க அண்ணன் வூட்லயும் அழைச்சிட்டு வந்திடலாம்….. தாய் மாமன் ஆச்சே…… என்னட்டி சொல்லுதே……”
“சரிங்க…..” என்ற ராசாத்தியின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது. பிறகு இப்படி எதாவது விசேஷத்திற்கு தானே அவரது அண்ணன் வீட்டுக்கு செல்ல அவரால் முடியும்…. மருமகளின் வீட்டினரைக் கண்டாலே அவர் மாமியாரின் முகம் கடுகடுவென்று மாறி விடுவதால் அவர்கள் அதிகமாய் ராசாத்தியின் வீட்டுக்கு வந்து செல்வதில்லை.
“ஏ புள்ள கயலு…… நான் சொன்ன பேரை எல்லாம் லிஸ்ட்ல எழுதிட்டல்ல….. ஒண்ணும் விட்டுப் போகலயே….”
“இல்லப்பா….. அம்புட்டும் விடாம எழுதிட்டேன்…..”
“ம்ம்…. அந்த முத்துப் பாண்டி பேரையும் எழுதிக்கோ தாயி….”
“அந்தாளு பேரு எதுக்குப்பா….. உங்களுக்குள்ளே இருந்த சிநேகிதம் தான் முடிஞ்சு போச்சுல்ல….. அப்புறம் எதுக்கு அவர அழைக்குறிய….”
“என்ன இருந்தாலும் மனசு கேக்கல தாயி…. சின்ன வயசுல இருந்து ஒண்ணா சுத்திட்டு இருந்து…. இப்ப பணம், காசு வந்திருச்சுன்னு அவன் மாறினாலும் எம்ம மனசுல அந்த பழைய சிநேகிதம் கொஞ்சம் ஒட்டிட்டுத்தேன் கெடக்கு……”
“ம்ம்….. என்னமோ…. நீங்க சொல்லுதிய…. எழுதிக்கேன்….” என்றவள் அவர் பெயரையும் லிஸ்டில் எழுதிக் கொண்டாள்.
“வெரசா பத்திரிகை கொடுக்குற சோலிய முடிச்சாகணும்….. இன்னும் கண்ணாலத்துக்கு இருபது நாளு தான கெடக்கு…..” என்ற பேச்சி,
“ஏய்யா சுந்தரு……. நம்ம புள்ளைக்கு அம்பது பவுன்ல நகையும், மாப்பிள்ளைக்கு பைக்கு ஒண்ணும் குடுக்கறதா சொல்லி இருக்கோம்….. அப்புறம் மண்டபம், ஜவுளின்னு எல்லாம் சேர்த்து பன்னெண்டு லட்சத்துக்கு மேல வரும்ல….. அந்த சீட்டு கம்பெனில போட்டு வச்ச பணம் எப்பக் கெடைக்கும்ல…… அது போதுமாவே…..”
“ஆத்தா…… அது ரெண்டு வாரத்துல கெடச்சிடும்னு சொல்லியிருக்காக….. கையில ஒரு ரெண்டு லட்சம் பணம் இருக்கு….. அதை எல்லாத்துக்கும் முன்தொகையா கொடுத்து கண்ணால வேலைய ஆரம்பிச்சிடுலாம்….. மண்டபத்துக்கு முன்தொகை கொடுத்துட்டேன்…. சாப்பாட்டுக்கும் சொல்லிட்டேன்…. இனி ஜவுளி, நகை, பைக் செலவு இருக்கு….. அப்புறம் அவளுக்கு சேர்த்து வச்ச நகை பத்து பவுனு இருக்கு….. சமாளிச்சுடலாம் ஆத்தா….”
“சரி ராசா…… எல்லாம் நல்லபடியா நடந்தா சரிதேன்….. ஏலே கயலு…. மலர கூப்பிடுலே….. அவளுக்கு எந்த மாதிரி நக வேணும்னு கேட்டு நாளைக்கு நாள் நல்லா இருக்கு…. போயி செய்ய குடுத்துடலாம்…..”
“ஹூக்கும்….. உம்ம பேத்திய ஒரு ஆளு போயி அழைச்சிட்டு வரணுமாக்கும்…….” என்ற கயல்விழி மாடியில் இருந்த மலரின் அறையை நோக்கி சென்றாள்.
கட்டிலில் அமர்ந்து அவள் கரம் பிடிக்கப் போகும் கணவனின் புகைப்படத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் மலர்விழி. அறைக்குள் பூனையைப் போல மெதுவாய் நுழைந்த கயல், அவள் கையில் இருந்த புகைப்படத்தை பின்னிலிருந்து பறித்தாள்.
“என்னலே…… எங்க அத்தான, போட்டோல பார்த்தே குடும்பம் நடத்திட்டு இருக்கியாவே…… போட்டோவே தேஞ்சு போனாப்பல இருக்கு……”
“அடச்சீ….. புள்ளைக்குப் பேச்சப் பாரு…. அதெல்லாம் ஒண்ணும் இல்ல….. போட்டோவக் குடு கயலு……” என்று அதைப் பறிக்க வந்தாள் மலர். அதை முதுகுக்குப் பின்னால் மறைத்துக் கொண்ட கயல்,
“இத நாந்தரணும்னா….. நீனு ஒண்ணு செய்யணுமே……”
“என்னலே செய்யணும்……”
“நகை எந்த மாதிரி வேணும்னு கேக்க அப்பா, ஒன்ன கூப்பிடுதாக….. அன்னைக்கு வள்ளி கழுத்துல ஒரு புது ஒரு நெக்லஸ் பார்த்தோமே….. நீ கூட எனக்கு அது நல்லா இருக்குன்னு சொன்னியே….. அது போல ஒரு நெக்லஸ் எனக்கும் சேர்த்து சொல்லணும்….. சொல்லுதியா……” என்றாள்.
அதைக் கேட்டு சிரித்த மலர், “ஏட்டி….. இப்படிக் கேக்குறவ….. அப்பாகிட்டே நீயே கேக்க வேண்டியது தாம்லே….” என்றாள்.
“நான் கேப்பேன்….. ஆனா உன்னோட ஆச்சி எனக்குன்னு சொன்னாலே வேண்டாம்னுலா சொல்லும்….. அதேன்….. எப்படி என் ஐடியா….” என்று புருவத்தை தூக்கியவளைக் கண்டு மலரின் மனம் நிறைந்தது.
“என் தங்கச்சி, அறிவுக் கொழுந்துலே…. நான் அப்பாகிட்டே சொல்லுதேன்…. உன்னோட இந்த குறும்பும் கலகலப்பும் எல்லாம் விட்டுட்டு உன்னப் பிரிஞ்சு போகணும்னு நெனைக்கும்போதே எனக்கு வருத்தமா இருக்குலே…..” என்று கண்கலங்கிய தமக்கையைக் கண்டு கயலின் மனமும் உருகியது.
“அப்படியா சொல்லுதே….. அப்ப இங்கனயே இருந்திடுவே…. கண்ணாலம் கட்டிப்  போகாதே……” என்றாள் கயல்.
“அது முடியாது பிள்ள…… பொண்ணுன்னு பொறந்தாலே பொறந்த வீடு நெரந்தரம் இல்லையே….. உனக்கும் அப்படித்தான்லே….. நீயும் வேற ஒரு வூட்டுக்குப் போயி தானே ஆகோணும்…..”
“ம்ம்…. சரி…. உம் மனசுக்குப் பிடிச்ச மாப்பிள்ளைய தானே கண்ணாலம் கட்டிக்கப் போறே….. அப்புறம் என்ன… சும்மா கலங்கிட்டு கெடக்கே…. விடு…. என்னய பாக்கணும்னு சொன்னா, அத்தான் உன்னக் கூட்டியாற மாட்டாகளா…… சும்மா வெசனப்பட்டு கெடக்கவ……” என்று அவளை சகஜமாக்கி விட்டு,
“சரி…. இந்தா… அத்தான் போட்டோ….. ஓவரா சைட் அடிக்காதவே… அவரு கலரு கொறஞ்சு கருப்பாகிடப் போறாக….. சரி… வாலே…. கீழ போவோம்…..” என்றாள் கயல்.

Advertisement