Advertisement

“எப்படி இருக்கு மீனுக்குட்டி…….
“ஒரு படத்துல மக்கள் திலகமும் சரோஜா தேவி அம்மாவும் உக்கார்ந்துகிட்டு, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்னு பாடிகிட்டு போவாகளே….. அதுபோல நாமும் போற போலத் தோணுது……” என்றவள் கலகலவென்று சிரித்தாள்.
“அடிக் கழுத…. இப்பவும் உனக்கு சினிமா தான் தோணுதா……” என்றவன் அவளது தோளில் கையை வைத்து அருகில் இழுத்துக் கொண்டான்.
“அச்சோ…. விடுங்க அத்தான்…… யாராவது பாக்கப் போறாக…..” என்றவள் அவன் கையை அவஸ்தையுடன் தட்டிவிட்டாள்.
“ஹூம்…. இதுக்கு பைக்கே பரவால்ல போலிருக்கு….” என்று புலம்பிக்கொண்டே அவளை விடுவித்தான் அவன்.
முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு பேசாமல் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவனைக் கண்டு அவளுக்கு சிரிப்பு வந்தது.
“அத்தான்…..”
“ம்ம்…….”
“என்ன அத்தான் இது….. சின்னப் புள்ளைங்க மாறி மூஞ்ச தூக்கி வச்சிட்டு உக்கார்ந்திருக்கிய….” என்றாள் அவள் சிரிப்புடன்.
அவளைத் திரும்பிப் பார்த்தவன், “இப்படி சிரிச்சு சிரிச்சே என்ன கவுத்துப்புட்டு, கை காலையும் கட்டிப் போட்டு சும்மா இருன்னா எப்படி மீனுக்குட்டி…..”
“என்ன அத்தான்….. ஒழுங்கா ரோட்டப் பாத்து வண்டிய ஓட்டுங்க….. உங்களுக்கு என்ன வேணுமோ எல்லாத்தையும் வட்டியும் மொதலுமா பொறவு தாரேன்…..” என்றாள் முகம் சிவக்க.
“அப்படி வாடி என் சீனிக்கட்டி….. இப்ப சொன்னியே இது ஓகே….. சரி…. நான் ஒண்ணு கேட்டா உண்மைய சொல்லுவியா……”
“என்ன அத்தான்…… என்ன கேக்கணுமோ கேளுங்க…. நான் எப்போ உங்ககிட்டே பொய் சொல்லியிருக்கேன்……”
“அது…… அப்பத்தா உன்கிட்ட ஏதோ ரகசியமா சொல்லிட்டு இருந்தாகள்ள…. அதக் கேட்டு உம்முகமெல்லாம் கூட சிவந்து போயிருச்சு… அப்படி என்ன சொன்னாக……” என்றான் அவள் முகத்தை திரும்பிப் பார்த்துக் கொண்டே.
அதைக் கேட்டதும் அவள் முகம் மீண்டும் செந்தூரத்தைப் பூசிக் கொள்ள கண்களில் சிறு மயக்கத்தோடு உதடுகளிலும் சிறு புன்னகை மலர்ந்தது. அதைக் கண்டும் காணாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் மதியழகன்.
“அது வந்து…… அதை நான் நாளைக்கு சொல்லுதேன் அத்தான்…..” என்றாள் அவள்.
“ஏன்…. இப்ப சொன்னா என்ன… சொல்லு மீனுக்குட்டி…” என்றான் அவன் கெஞ்சலுடன்.
“நாந்தேன் நாளைக்கு சொல்லுதேன்னு சொல்லுறன்ல…. பொறவு என்ன இப்பவே சொல்லு….. முடியாது….. போங்க அத்தான்…..” என்றாள் அவள் சிணுங்கலுடன்.
“சரி…. நாளைக்கு கண்டிப்பா சொல்லணும்…..” என்றவன் அமைதியாய் வண்டியை ஓட்ட அவளது மனதுக்குள் அடுத்த நாள் புறப்படலுக்கான கற்பனைகள் விரியத் தொடங்கியது.
————————————————————————————————————————————————————
மூணார்…… மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடமாதலால் மூணார் என்ற பெயர் வந்ததாகக் காரணம் கூறுவர். மலை வாசஸ்தலங்களில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அழகான இடம்.
பச்சைப் பசேலென்று எங்கு நோக்கினும் பசுமை…. குளிர்மையான காற்றும், இதமாய் நாசியை வருடிச் செல்லும் தேயிலை மணமும், எப்போதும் பொழியத் தயாராக இருக்கிறேன் எனக் கூறும் கரும் மேகங்களும் வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண்களை நிறைக்க, அங்கங்கே மலையிலிருந்து வெள்ளிக் கம்பியாய் இறங்கி ஓடிக்கொண்டிருந்த சிறு சிறு நீர்வீழ்ச்சிகளும் கருத்தைக் கவர்ந்தன.
இயற்கை அன்னை வஞ்சகமில்லாமல் வாரிக் கொடுத்த ரம்மியமான அந்த சூழ்நிலையை கண்கள் மலரப் பார்த்துக் கொண்டிருந்தாள் கயல்விழி. சிறு குழந்தையாய் அவள் இயற்கையை ரசிக்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தான் மதியழகன்.
“மீனும்மா…. அங்க பார்த்தியா…. ஒரு நீர்வீழ்ச்சி…..” என்று அவளை அழைத்துக் காண்பிக்க அவன் தோளில் சரிந்து கொண்டு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். அழகாய் ஸ்டீயரிங்கை ஒடித்து வளைவுகளில் கவனமாய் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான் மதியழகன். அங்கங்கே தென்பட்ட வரையாடுகளை அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
காலையில் மூணாரை அடைந்தவர்கள் உணவை முடித்துவிட்டு சற்று ஓய்வுக்குப் பின் மாடுப்பெட்டி அணையைக் கண்டுவிட்டு குண்டாடா அணையில் படகு சவாரியை முடித்துவிட்டு டாப் ஸ்டேஷனை நோக்கிப் போய்க் கொண்டிருந்தனர். சில்லென்ற காற்று அணிந்திருந்த ஸ்வெட்டரையும் தாண்டி உடம்பை ஊசியாய் துளைத்துக் கொண்டிருந்தது.
அவர்கள் டாப் ஸ்டேஷனை நண்பகல் நேரத்தில் அடைந்தாலும் வெயிலே இல்லாமல் இதமான சூழலே அந்த இடத்தை அழகாக்கிக் கொண்டிருந்தது. மூணாரின் உயரமான அந்த இடத்திற்கு அரை கிலோமீட்டர் நடந்து மேலே சென்றனர். கேரளா, தமிழக எல்லையான அந்த இடத்திலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகையும் தேனீ மாவட்டத்தின் பெரும் பரப்பையும் ரசித்தனர். இப்போதே பொழிந்து விடுவேன் என்பது போல கறுத்து நின்ற மேகத்தைக் கண்டதும் கீழே இறங்கினர். மதிய உணவை ஒரு ஹோட்டலில் முடித்துக் கொண்டு அறைக்குத் திரும்பினர்.
லேசாய் தூறல் போடத் தொடங்கியிருக்க மனம் கவர்ந்தவளின் அருகே மனம் நிறைந்த காதலுடன் பயணித்துக் கொண்டிருந்தான் மதியழகன். அவனது தோளில் இதமாய் சாய்ந்திருந்தவள் மனதுக்குள் இன்னவென்று புரியாத ஒரு பரவசம் நிறைந்திருந்தது.
என்ன தான் பசுமையான கிராமத்தில் வளர்ந்திருந்தாலும் இதமான குளிருடன் காதலான கணவனுடன் அமைந்த அந்தப் பயணம் பசுமையாய் அவள் மனதை நிறைத்தது. சின்ன சின்ன சீண்டலும் சிணுங்கலுமாய் ஒருவித கிறக்கத்துடனே இருப்பிடத்தை வந்து அடைந்தனர். இருவருக்குள்ளும் ஒருவித மௌனம் நிறைந்திருக்க அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தான் மதியழகன்.
தனிமையும் குளிரும், மனதில் நிறைந்து நின்ற காதல் உணர்வுகளும் ஒருவித அவஸ்தையைக் கொடுக்க அவளையே பார்த்துக்கொண்டு நின்றான் அவன்.
ஸ்வெட்டரை அவிழ்த்து வைத்து திரும்பியவள், அவனது பார்வையில் மனதுக்குள் ஒருவித அலையடிக்க உடலெங்கும் ஒரு வித உணர்வு அலையாகப் பரவுவதை உணர்ந்தாள். அவளது சிவந்த முகமும் கவிழ்ந்த தலையும் மயக்கத்தோடு அவனைத் தழுவித் தாழ்ந்த கண்களும் அவள் மனதை சொல்லாமல் சொல்ல, அவளை நோக்கி இரு கையையும் நீட்டி, “வா……” என்று தலையசைத்து அழைத்தான் மதியழகன்.
அவனது நீட்டிய கரத்துக்குள் பூனைக்குட்டியாய் அடங்கிக் கொண்டாள் அவள்.
அவனது சூடான இதழ்கள், அவள் காதுகளை உரசத் தொடங்க, மெதுவாய் குளிர் நீங்கி வெம்மை சூழத் தொடங்கியது. சூடான மூச்சுக் காற்று அவள் கழுத்தை உரச கொடியாய்த் துவண்டவளைப் பூவாய்த் தாங்கிக் கொண்டவன் கட்டிலுக்கு அழைத்துச் சென்றான். அவனது இதமான தேடல் அவளில் முன்னேறிக் கொண்டிருக்க, கண்ணை மூடி மயங்கிக் கொண்டிருந்தாள் அவள்.
“மீனுக்குட்டி…….” கிசுகிசுப்பாய் ஒலித்தது அவனது குரல்.
“ம்ம்…..” முனங்கலாய் வந்தது அவளது குரல். 
“என்னை உனக்கு ரொம்பப் பிடிக்குமா…….”
கண்ணைத் திறந்தவள் தன் முகத்துக்கு வெகு அருகில் இருந்த அவன் முகத்தையே ஒரு நிமிடம் சிமிட்டாமல் பார்த்துவிட்டு, அவன் இதழில் அழுத்தமாய் முத்தமிட்டாள்.
“எனக்கு, என்னை விட உங்களை ரொம்பப் பிடிக்கும்…. அத்தான்…..”
“பூ போல இருக்குற உன்னை நானே கசக்கிப் போட்டேனே…. அப்போ கூட நீனு என்னை வெறுக்கலியா…….”
“ம்ச்… இப்ப எதுக்கு அத்தான்… பழசெல்லாம் கேட்டுட்டு இருக்கிய…..”
“ப்ளீஸ்….. சொல்லு… மீனும்மா….. உனக்கு எம்மேல வெறுப்பு தோணலையா……” அவனது குரல் தவிப்பாய் வந்தது.
“இல்ல அத்தான்….. அப்படியாவது நீங்க என்னோட அன்பைப் புரிஞ்சு கிட்டாப் போதும்னுதேன் தோணுச்சு….. எ…. என்னால உங்கள எப்பவும் வெறுக்க முடியல….. வெறுப்பு இருக்குற போல திட்டிட்டு, மத்தவங்களோட என்னையும் சேர்த்து ஏமாத்திட்டு இருந்தேன்….. நீங்க…. என் உசுரு அத்தான்….. என்னால எப்படி வெறுக்க முடியும்….” என்றவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் அவன்.
அதற்குப் பிறகு பேசுவதற்கு இருவருமே தயாராய் இருக்கவில்லை…. அன்பையும் காதலையும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு தாம்பத்யத்தில் காட்டிக் கொண்டிருந்தனர். கொடுப்பதும் எடுப்பதுமாய் காதல் அரங்கேற்றம் முடிந்து ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு அப்படியே உறங்கி விட்டிருந்தனர். 
சட்டென்று கண்விழித்த மதியழகன், தன் நெஞ்சத்தில் முகம் புதைத்து சிறு குழந்தையாய் முகம் மலர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவளின் முகத்தையே புன்னகையுடன் நோக்கிக் கொண்டிருந்தான். அவளது நெற்றியில் முத்தமிட்டு மீண்டும் மெல்ல அணைத்து அவளை விலக்கி விட்டு எழுந்தான்.
நேரம் இரவு ஏழை நெருங்கியிருக்க, மனைவியை மெல்ல உணர்த்தினான்.
“மீனும்மா…… மீனுக்குட்டி…… எழுந்திருடா…….”
மெல்லக் கண் விழித்தவள், “அச்சச்சோ… அத்தான்…. விடிஞ்சிருச்சா….. இருங்க…. காப்பி எடுத்திட்டு வரேன்….” என்று பதறிக் கொண்டு எழுந்தாள்.
அதைக் கண்டவன், “ஹஹஹா…..” என்று சிரித்தான்.
அவன் சிரித்ததும் தான் தாங்கள் இருக்கும் இடத்தையே உணர்ந்தாள், நாணத்துடன் கசங்கிக் கிடந்த புடவையை சரி செய்து கொண்டு எழுந்தாள்.
“மீனும்மா…. ஒரு குளியல் போட்டுட்டு அப்படியே கொஞ்சம் நடந்திட்டு வருவோமா……”
“என்னது இந்தக் குளிர்ல குளிச்சிட்டு பனியில நடக்கறதா…. போங்க அத்தான்…. விளையாடறீங்களா……” என்று சிணுங்கினாள்.
“இல்லம்மா… சுடுதண்ணில குளிச்சிட்டு சின்னதா ஒரு வாக்…. அப்படியே டின்னர் முடிச்சிட்டு வந்திடுவோம்….. வா…. வா….” என்று அவள் புடவையைப் பிடித்து இழுக்க,
“அச்சோ…. என்ன அத்தான்….. இது….” என்று ஓடிச்சென்று குளியலறைக்குள் நுழைந்து கொண்டவள் கதவைத் தாளிடும் முன் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான் அவன். அவள் தயங்க, அவன் நெருங்க…. இருவருமாய் ஒரு வழியாய் குளித்து முடிந்து உடை மாற்றி விட்டுப் புறப்பட்டனர்.
சில்லென்ற குளிர் ஊசியாய் உடலைத் துளைக்க மதியழகன் ஸ்வட்டர் அணிந்தும் குளிர் தாங்காமல் கையை மார்புக்கு குறுக்காய் கட்டிக் கொண்டு நடந்தான்.
ஒரு சால்வையைப் போர்த்திக் கொண்டு நடந்த கயல்விழி, அதையும் மீறி நடுங்கியதால் கணவனின் முழங்கையைப் பிடித்துக் கொண்டு  ஒட்டிக் கொண்டு நடந்தாள்.
பனி விழும் இரவும், நிலவை மறைத்த மேகமும், சில்லென்ற காற்றும் இரவு நேரக் காற்றில் மிதந்து வந்த மூலிகை வாசமும் ஒருவித பரவசமாய் இருந்தது. அந்தப் பிரதேசத்தில் அவர்கள் மட்டுமே நடந்து கொண்டிருந்தனர். எங்கேனும் ஒருவர் தட்டுப்பட்டால் உண்டு.
ரோட்டில் கணவனுடன் சிரித்துப் பேசிக் கொண்டு நடந்து கொண்டிருந்தவள், யாரோ தங்களையே பார்ப்பது போன்று உள்ளுணர்வுக்குத் தோன்ற சட்டென்று நின்று திரும்பிப் பார்த்தாள்.
“என்ன மீனுக்குட்டி…. என்னாச்சு…. யாரைப் பாக்குதே…..” என்றான் மதியழகன்.
“அ… அத்தான்…… யா… யாரோ நம்மளையே பாக்குற போலத் தோணுது…..”
“என்னம்மா சொல்லுதே….” என்றவன் சுற்றிலும் பார்வையை ஓட்டினான்.
அங்கு ஒரு சின்ன டீக்கடையில் இரண்டு பேர் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். அதைத் தவிர அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை.
“யாரும் இல்லைம்மா…. உனக்கு சும்மா தோணியிருக்கும்…. சரி டீ குடிக்கறியா….”
“இ… இல்ல…. வேணாம் அத்தான்….. நாம ரூமுக்கே போயிடலாம்….” என்றாள் சுற்றிலும் கண்ணை ஓட்டிக் கொண்டே. அவளது பயத்தைப் புரிந்து கொண்டவன், “மீனும்மா…. பயப்படாதே….. இங்க யாரும் இல்ல….. சரி….. வா…. ரூமுக்குப் போகலாம்……” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு திரும்பி நடந்தான். இரவு உணவை அறைக்கு கொண்டு வரச் சொல்லிவிட்டு அமைதியாய் இருந்தவளின் அருகில் அமர்ந்தான்.
“அ…. அத்தான்…. நாம நாளைக்கே ஊருக்குப் போயிடலாமா…. எனக்கு பயமாருக்கு….” என்றவளை ஆதரவாய் அணைத்துக் கொண்டவன் எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.
காற்றில் கரைந்து போகுமா
சுவாசமாய் கலந்திட்ட நினைவுகள்….
வானத்தில் மிதக்கின்ற மேகமாய்
எப்போதும் மனதுக்குள் நீங்காமல்
நிலைத்து நிற்கும் உன் நினைவுகள்……
அசைகின்ற மரமெல்லாம் – உன்
தலையசைவை ஒத்திருக்க…..
இனிக்கின்ற மதுரமெல்லாம்
உன் குரலைத்தான் சொல்லுதடா…..
காதோரம் செல்லமாய் குறுகுறுத்து
தீண்டிச் செல்லும் தென்றல் கூட – உன்
மீசையின் குறுகுறுப்பாய்
நெஞ்சை சிலிர்க்க வைக்குதடா…..
பட்டாம் பூச்சியாய்த் துள்ளித் திரிந்த
மனது – உனைக் கண்டவுடன்
இடம் மாறி கண்ணெல்லாம் படபடத்து
ஒளிந்து கொள்ள இடம் தேடுதடா……
தொலைத்த இடத்திலேயே தேடித்தேடி
உனக்குள் நான் தொலைந்து போகிறேனடா…
தொலைந்தாலும் கண்டு கொண்டேன்….
உனக்குள் ஒளிந்திருக்கும் என்னை…..
எனை மீட்டுச் செல்ல அல்ல….
மீண்டும் உனக்குள் ஒளிந்து கொள்ள…..

Advertisement