Advertisement

அத்தியாயம் – 19
ஒரு மாதத்திற்குப் பிறகு.
கோலா குளிர்பான ஆலைக்குத் தடை: தொடர்ந்து விரட்டப்படும் கோலா ஆலை!
திருநெல்வேலி மாவட்டம் சுந்தரபாண்டிய புரத்தில் கோலா நிறுவனத் தொழிற்சாலை அமைக்க வழங்கிய அனுமதியை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவில் மாவட்ட ஆட்சியாளர் ஆர்.செல்வராஜ் கையொப்பமிட்டார்.
சுந்தரபாண்டியபுரத்தில், கோலா நிறுவனம் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. அங்கு ரூ.500 கோடி செலவில் குளிர்பானங்கள், பழச்சாறுகள், குடிநீர் போன்றவற்றைத் தயாரிக்கும் ஆலையை நிறுவ அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த இடத்தில் தொழிற்சாலை அமைத்தால் ஏராளமான நிலத்தடி நீரை அந்நிறுவனம் உறிஞ்சும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். அது மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளும், சில கட்சிகளும், விவசாய நிலத்தில் கோலா நிறுவனம் தொடங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
ஆனால், அதற்கு கடந்த மார்ச் மாதத்தில் விளக்கம் அளித்த அந்நிறுவனத்தினர், தாங்கள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றும், பயன்படுத்தப்பட்ட நீரை சுத்திகரித்த பிறகே வெளியேற்றுவோம் எனவும் உறுதியளித்தனர்.
இதற்கிடையே, விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள சுந்தரபாண்டியபுரத்தில் கோலா நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையிலும் சமீபத்தில் பிரச்னை எழுப்பப்பட்டது.
இதனிடையே, கோலா நிறுவனத்துக்கு சுந்தரபாண்டியபுரம் விவசாயிகள் சார்பில் நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தாங்கள் விற்ற இடத்தில் தொழிற்சாலை கட்டுவதற்கு விருப்பம் இல்லாததால் நிலத்தைத் திருப்பித் தருமாறு  கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில்,  கோலா நிறுவனம் தொழிற்சாலை அமைக்க வழங்கிய அனுமதியை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர் ஆர்.செல்வராஜ் கையெழுத்திட்டுள்ளார்.
இதுகுறித்து மக்கள் அணி கட்சித் தலைவர் திரு. நடேசன் கூறியதாவது:  “ஏற்கெனவே கெயில் திட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது, அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அப்போதைய முதல்வர் ————  கெயில் திட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார். அதேபோல, தற்போது விவசாயிகள், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு சுந்தரபாண்டியபுரம் விவசாய நிலத்தில் குளிர்பான ஆலை அமைக்கத் தடை விதித்துள்ளது…
விவசாய நிலத்தில் தொழிற்சாலை அமைப்பதால் ஏற்படும் விளைவுகளை ஊர் மக்களிடம் எடுத்துக் கூறி அனைவரையும் ஒருங்கிணைத்து அமைதியான முறையில் போராடிய மதியழகனுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்…..”
ஏற்கனவே, தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியிலும், ஈரோடு பெருந்துறையிலும் ஆலை தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு மக்கள் எதிர்ப்பால் திட்டம் கைவிடப்பட்டது. பிறகு உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியில் ஆலை தொடங்கப்பட்டது. ஆனால், அந்த ஊர் மக்களின் ஒற்றுமையாலும் கடும் எதிர்ப்பாலும் திட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இப்படி இந்தியாவின் பல்வேறு பகுதியிலும் கோலா ஆலை நிர்வாகம் ஓட ஓட விரட்டப்பட்டு வருகிறது.
தினசரியில் செய்தி வந்த நாள் முதலாய் எத்தனையோ முறை வாசித்திருந்தும் இன்றும் அதை புதியது போல் வாசித்துக் கொண்டிருந்த சுந்தரேசனை ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்த ராசாத்தியிடம் திரும்பினார் சுந்தரேசன்.
“என்னட்டி….. அப்படியே மலச்சுப் போயி நின்னு வேடிக்க பார்த்துட்டு இருக்கவ…..”
“பின்ன…. நீங்க பண்ணுறதப் பாத்து மலைச்சுப் போயி நிக்காம என்ன பண்ணச் சொல்லுறிய…… இந்தப் பேப்பரையே எம்புட்டு நாளா வச்சுப் படிச்சுட்டு இருக்கிய….” என்று மூக்கில் விரலை வைத்தார் அவர்.
அதைக் கண்டு சிரித்தவர், “பின்ன…. இது என்ன சின்ன விஷயமாலே….. எத்தன பெரிய விஷயத்த நம்ம மாப்புள்ள சாதாரணமா செய்து முடிச்சிருக்காரு…… அவர நினைக்க நினைக்க எனக்கு மனசுக்குள்ள எம்புட்டு சந்தோஷமா இருக்கு தெரியுமா…… எம்பொண்ணு சரியான ஒரு துணையத்தான் கண்ணாலம் கட்டிக்கிட சம்மதிருக்கா……” அவரது கண்கள் ஆனந்தத்தில் கலங்கின.
“ம்ம்….. நெசந்தாங்க….. ஆனா நம்ம பொண்ணுதேன் செல்லாக் காசா வீணாகப் பார்த்தவர சரி செஞ்சு கோபுரத்துல உக்கார வச்சிருக்கா….. அவளோட நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதுதேன் வரும்…..”
“ம்ம்…. இந்தப் பிரச்சனைய முடிச்ச கையோட, உழவர் சங்கம், மாதர் சங்கம்னு புதுசா தொடங்கவும் ஏற்பாடு செய்துட்டாகள்ள….. பாங்குல என்ன பண்ணணுமோ பண்ணி அரசாங்கத்துல பேசி, முன் தொகையா தன் கையில இருந்து ஒரு தொகையும் போட்டு நம்ம ஊருக்குன்னு எவ்ளோ யோசிக்குறாக…..”
“ம்ம்…. எனக்கு கயலப் பாக்கணும் போல இருக்குங்க…. நாளைக்கு டூரு கெளம்பறதா சொன்னால்ல…… ஒரு எட்டு போயி பாத்திட்டு வருவமா….” என்றார் ராசாத்தி.
“ம்ம்… சரி கெளம்புலே…. போயிட்டு வருவம்……”
“சரிங்க…..” என்றவர், சந்தோஷத்துடன் புறப்பட சென்றார்.
பேப்பரை மடக்கி வைத்துவிட்டு வெளியே வந்த சுந்தரேசனிடம், “மில்லுக்கு கிளம்பலையா ராசா……” என்றார் பேச்சிப் பாட்டி.
“இல்ல ஆத்தா….. கயலப் பாக்கப் போலாம்னு ராசாத்தி சொல்லுச்சு…. அதேன்… போயி பார்த்திட்டு வந்திட்டு மில்லுக்குப் போவலாம்னு….” என்றார் அவர்.
அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க வெளியே எட்டிப் பார்த்தவர் முகம் மலர்ந்தார்.
“அடடே….. வா கயலு…. வாங்க மாப்புள…. இப்பதேன்…. உங்களப் பத்தி பேசிட்டு இருந்தோம்….. இவ அம்மைக்கு மவளப் பாக்கணும்னு சொன்னா….. சரி…. வீட்டுக்கு வந்து பார்த்திட்டு வரலாம்னு நினைச்சோம்….. நீங்களே வந்து நிக்குறிய…. புது காரு எடுத்தாச்சா…..” என்றார் சுந்தரேசன் சிரிப்புடன்.
“ஆமாம் மாமா…… அப்பாதேன் கார் எடுத்தே ஆவோணும்னு ஒரே பிடிவாதமா புக் பண்ணிட்டார்…. இன்னைக்கு தான் எடுத்திட்டு கோவிலுக்கு போயிட்டு அப்படியே உங்க எல்லாரு கிட்டயும் சொல்லிட்டுப் போவலாம்னு வந்தோம் மாமா….” என்றவன்,
“அப்பத்தா நல்லாருக்கிகளா…….” என்றான் பேச்சிப் பாட்டியிடம்.
“எனக்கென்ன தம்பி…. கல்லு கணக்கா இருக்கேன்…… நாளைக்கு காருலதேன் டூரு போகப் போறியளா…..” என்றார்.
“ம்ம்… ஆமாம் அப்பத்தா……. கார் நல்லாருக்கா….”
“ம்ம்… காருக்கென்ன….. நல்லாதேன் இருக்கு….. பாத்து பத்திரமாப் போயிட்டு வாங்க…..” என்றார் அவர்.
“அப்புறம் பாக்காம….. கண்ண மூடி வச்சுட்டா கார ஓட்டுவாக…… ஹையோ அப்பத்தா…….” என்று கிண்டலடித்த கயல், “அம்மா எங்கப்பா….” என்று கேட்கையிலே வெளியே வந்தார் ராசாத்தி.
“கயலு….. வாங்க மாப்புள…. காரு சூப்பரா இருக்கு…. இது இருந்தா ஒரு வசதிதேன்…. அண்ணன் சரியாதேன் சொல்லியிருக்காக……. நீங்க உக்காருங்க……” என்று அவர்கள் மதியிடம் பேசிக் கொண்டிருக்க, பேச்சிப் பாட்டியின் அருகில் வந்து அமர்ந்தாள் கயல்விழி.
“என்ன கெழவி…. நல்லாருக்கியா…..” என்றாள் அவரது காதில் தொங்கிக் கொண்டிருந்த பம்படத்தை ஆட்டிக் கொண்டே.
“அடிக் குப்பி….. எடுலே…… அந்த வாரியல… யாரப் பார்த்துலே, கெழவின்னு சொல்லுதே…..” என்று அவள் காதைப் பிடித்து திருகினார் பேச்சிப் பாட்டி.
“ஆ….. கெழவி…. கைய எடு….. வலிக்குது…..” என்று அவள் கத்த, அதைப் பார்த்த மதியழகன் அவளுக்கு உதவிக்கு வந்தான்.
“ஆத்தா…… பாவம்… வலிக்குதுன்னு சொல்லுதா…. விட்டிருங்க…..” என்றான் அவரைக் கெஞ்சிக் கொண்டே. சுந்தரேசன் தலையில் கையை வைத்துக் கொண்டு நிற்க, ராசாத்தி தலையை ஆட்டிக் கொண்டார்.
“ஹூம்….. கொண்டவன் துணையிருந்தா கூரை ஏறிக் கூவுமாம் கோழி….. அது போல உன்புருஷன் துணைக்கு வருவான்னு துள்ளுறியா….. யாரப் பார்த்து கெழவின்னு சொல்லுதே….” என்றார் காதை இன்னும் அழுத்திக் கொண்டே.
“ஆ…. சரி…. கொமரி….. இனி கெழவின்னு ஒன்ன சொல்ல மாட்டேன்…. கைய எடு…..” என்று அவள் துள்ள, “ம்ம்…. அப்படி வாலே வழிக்கு….” என்று காதை விடுவித்தார்.
“உனக்கு பேச்சின்னு பேரு வச்சதுக்குப் பதிலா பேயுன்னு பேரு வச்சிருக்கலாம்….. என்ன புடி புடிக்குதே….” என்றவள் அவர் காதில் ஆடிக் கொண்டிருந்த பம்படத்தைப் பிடித்து இழுத்துவிட்டு வெளியே ஓடிவிட்டாள்.
“ஆ….. இருடி மவளே…. உனக்கிருக்கு…..” என்றவர், “டேய் மருது…… அவளப் புடிலே…..” என்று அவள் பின்னாலேயே சென்றார் பேச்சிப் பாட்டி.
அவர்களைப் பார்த்து மதியழகன் சிரித்துக் கொண்டிருக்க சுந்தரேசன் முகத்திலும் புன்னகை வந்தது.
“அவுங்க அப்படித்தேன் மாப்புள….. என் அம்மைக்கு பேத்தியப் பார்த்தா வயசு கொறஞ்சு கொமரியாகிடும்…… எப்பப் பார்த்தாலும் ரெண்டும் கீரியும் பாம்பும் மாதிரித்தேன்….. ஆனா மனசுக்குள்ள அம்புட்டுப் பாசம்….” என்றார்.
“ம்ம்… தெரியும் மாமா….. எங்கிட்ட அப்பத்தாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டுதேன் நாளைக்கு டூரு போவணும்னு சொல்லித்தேன் கயலு கூட்டி வந்தா…. இங்க வந்து ஆத்தாவ வெறுப்பேத்திட்டு இருக்கா…..” என்று சிரித்தான் மதியழகன்.
“ம்ம்….. பேசிட்டு இருங்க மாப்பிள்ள…. நான் வந்திடறேன்….” என்ற ராசாத்தி அடுக்களைக்கு செல்ல மாமனும் மருமகனும் பேசிக் கொண்டிருந்தனர்.
கயலைத் துரத்திக் கொண்டு பின்னேயே வந்த பேச்சிப் பாட்டி திண்ணையிலேயே நின்றுவிட வாசலுக்கு இறங்கி ஓடியவள் நின்று அவரிடம், “ஈஈஈ……” என்று பழிப்பு காட்டிவிட்டு சென்றாள்.
அதைக் கண்டதும் சிரித்துவிட்டவர், “ஹூம்….. விளையாட்டுக் கழுத….. இப்பவும் சின்ன வயசுப் பழக்கம் மாறவே இல்லலே……” என்று உள்ளே சென்று விட்டார்.
தோட்டத்தில் இளநீர் வெட்டிக் கொண்டிருந்த மருதுவிடம் வந்தாள் கயல்விழி.
“அப்புறம் மருதண்ணே…. இப்படியே ஒண்டியா பொழப்ப ஓட்டிடலாம்னு பாக்குறியா….. ஒரு கண்ணாலத்த பண்ணிட்டு செட்டில் ஆகுற எண்ணம் எதுவும் இல்லியா….” என்றாள் மருதுவிடம்.
“அதெல்லாம் ஆத்தா பார்த்துக்குவாக தாயி….. நான் எதுவும் யோசிக்கல….” என்றான் மருது.
“அண்ணே…. நான் வேணும்னா உனக்கு ஒரு பொண்ணு சொல்லட்டுமா…. கட்டிக்கறியா….” மருது வெட்டிக் கொடுத்த இளநீரைக் குடித்துக் கொண்டிருந்தவள் நிறுத்திவிட்டு, அவனிடம் கேட்கவும் ஆச்சர்யமாய் நிமிர்ந்தான் அவன்.
“என்ன தாயி சொல்லுதே…. நீனு எனக்கு பொண்ணு பாத்திருக்கியா….”
“ம்ம்… என்கூடவே சுத்திட்டு இருப்பாளே வள்ளிக்கண்ணு….. அவதேன்…. பாவம்ணே…. அவளும் உன்னப் போலதேன்….. அவளுக்குன்னு அவ பெத்தவங்க வச்சுட்டுப் போனது ஒரு சின்ன வீடும் கொஞ்சம் நெலமும் தானே….. எத்தனையோ விவசாயக் குடும்பங்க கடனை அடைக்க முடியாம தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துப் போயிருந்தாலும் நம்ம கிராமத்துல அவளப் பெத்தவுங்க மட்டுந்தான இப்படிப் பண்ணிட்டாக…. நீனு அவளக் கட்டிக்கிட்டு சந்தோஷமாப் பார்த்துக்க…. அவளும் உன்ன நல்லாப் பார்த்துக்குவா….” என்றவள் இளநீரைக் குடிக்கத் தொடங்க மருது யோசித்துக் கொண்டிருந்தான்.
“அந்தப் புள்ள…. என்னக் கட்டிக்க சம்மதிக்கணுமே தாயி…..” என்றவனின் முகத்தில் இருந்த யோசனையைக் கண்டவள்,
“அப்ப… உனக்கு அவளக் கட்டிக்க சம்மதம்னு சொல்லுதே….. நான் உடனே அம்மாகிட்டப் பேசுதேன்…..” என்று கணவனுக்கான இளநீரையும் வாங்கிக் கொண்டு உள்ளே செல்ல, அவனது முகத்தில் ஒரு நாணப் புன்னகை மலர்ந்தது.
மருதுவின் கல்யாணப் பேச்சை தாயின் தலையில் சுமத்திவிட்டு, மதிய உணவை அங்கேயே முடித்துக் கொண்டு விடைபெற்றனர்.
“அப்பத்தா…… ஒரு வாரம் என்னோட தொல்லை இல்லாம இருக்கலாம்….. நான் போயிட்டு வரேன்….” என்றவளின் கன்னத்தை வழித்த பேச்சிப் பாட்டி,
“இங்க பாருலே…… புருஷன முந்தானைல முடிஞ்சு வச்சுகிட்டா மட்டும் போதாது….. அவன் அந்த முந்தானைலயே கட்டுண்டு கெடக்கோணும்னா அடுத்து அடுத்து சோலியப் பாக்கணும்…..” என்றார் அவள் காதருகில் கிசுகிசுப்புடன்.
“என்ன சோலி அப்பத்தா…..” என்றாள் அவள் புரியாமல்.
“இப்படி ஒரு வெவரமும் தெரியாம இருக்கியே புள்ள…. அடுத்த சோலி புள்ளையப் பெத்துக்குறதுதேன்….. அதுக்கான வழியப் பாரு…..” என்றார் அவள் காதருகில்.
அதைக் கேட்டதும் அவளது முகம் செந்தூரமாய் சிவந்துவிட அங்கே வந்த மதியழகன், “என்ன அப்பத்தா…. வந்ததும் எம்பொஞ்சாதி காதப் புடிச்சு திருகிட்டு இருந்திய….. இப்ப காதுல என்னவோ ரகசியம் சொல்லிட்டு இருக்கிய…. அவ முகமெல்லாம் செவந்து கெடக்கு…. என்ன சேதி….” என்றான் சிரிப்புடன்.
“அதெல்லாம் பொம்பளைக சமாசாரம் பேராண்டி…. நீங்க கண்டுக்காதிய…. எம்பேத்திய பத்திரமா பார்த்துக்கிட்டு சந்தோசமா போயிட்டு வாங்க…..” என்றார்.
“சரி அப்பத்தா….. அப்ப நாங்க போயிட்டு வரோம்……” என்றவன் சுந்தரேசன், ராசாத்தியிடமும் கூறிவிட்டு விடை பெற்றான்.
வீட்டை நோக்கி காரை ஓட்டிக் கொண்டிருந்தவனின் அருகில் குதூகலத்துடன் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் கயல்விழி.
“மீனுக்குட்டி……”
“ம்ம்… சொல்லுங்க அத்தான்……”
“என்ன… ஒண்ணும் பேசாம வெளியே பார்த்துட்டு உக்கார்ந்திருக்கவ…… அத்தான் எப்படிக் கார் ஓட்டுறேன்னு சொல்லவே இல்ல….”
“ஹஹா….. என்னையவே சமாளிக்குறீங்க…… இந்தக் காரெல்லாம் உமக்கு எம்மாத்திரம்….. அதெல்லாம் சூப்பராத்தேன் ஓட்டுறிக….. இதுக்கு என் சர்டிபிகட்டு வேணுமாக்கும்…..” என்று சிரித்தாள் அவள்.
“ம்ம்…. அதுக்கில்ல மீனும்மா…. நீ ஒண்ணும் பேசாம இருந்தியா…. அதான் நான் கார் ஓட்டுறதுல பயமா உக்கார்ந்திருக்கியோனு கேட்டேன்…..”
“ஹஹா…. அதெல்லாம் ஒண்ணும் இல்ல அத்தான்…… உங்க பக்கத்துல இப்படி சோடியாக் கார்ல உக்கார்ந்துகிட்டு, நாம ஓடியாடின வயல் வரப்பு வழியா வரும்போது எனக்கு எப்படி இருக்கு தெரியுமா……” கண்களை மலர்த்திக் கொண்டு கேட்டவளை அப்படியே அணைத்துக் கொள்ளத் துடித்த மனதை அடக்கிக் கொண்டு ஆசையுடன் பார்த்தான் மதியழகன்.

Advertisement