Advertisement

அதிர்ந்து போனவன், “இ… இங்க பாரு….. எதுவா இருந்தாலும் எ…ன்கிட்டப் பேசு…. வீட்டுக்கு எதுக்கு கூப்பிட்டு பொம்பளைங்களை பயமுறுத்தறே…….” தந்தியடித்த அவனது குரலே அவனது பதட்டத்தை எதிர்முனைக்குத் தெரிவித்தது.
“ம்….. உன்கிட்ட கூட பேச வேண்டாம்னு தான் நான் நினைக்கறேன்…. நீதான் பேச வைக்கறே….. உனக்கு முழுசா ஒரு நாள் டைம் குடுத்துட்டேன்….. இன்னும் ஒரு நாள் டைம் தரேன்….. நாளைக்கு சாயந்திரத்துக்குள்ள நீ பெட்டிஷன வாபஸ் வாங்கி இருக்கணும்….. இல்லன்னா உன் அப்பாவுக்குப் பக்கத்துல இன்னொரு படுக்கைய ஆஸ்பத்திரில ரெடி பண்ணி வச்சுக்க……” என்றுவிட்டு பேச்சை முடித்துக் கொண்டது.
எதிர்முனை மௌனமாகியும் வெகு நேரம் அலைபேசியை காதிலேயே வைத்துக் கொண்டிருந்தான் மதியழகன். கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது அவனுக்கு. வெகுநேரம் தலையைப் பிடித்து யோசித்துக் கொண்டிருந்தவன் ஒரு முடிவுடன் அலைபேசியை எடுத்து ஒரு நம்பருக்கு அழைத்தான்.
————————————————————————————————————————————————————
அடுத்த நாள் காலையிலேயே முத்துப் பாண்டியை டாக்டரின் அனுமதியுடன் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டனர். உதவிக்கு ஹோம் நர்ஸ் ஒருவரை தினமும் வீட்டுக்கு வந்து செல்லுமாறு டாக்டரிடம் சொல்லி மதியழகன் ஏற்பாடு செய்திருந்தான்.
சுந்தரேசன் மூலம் விஷயத்தை அறிந்த சில ஊர்த்தலைவர்கள் மதியழகனையும் முத்துப் பாண்டியையும் காண வீட்டுக்கு வந்திருந்தனர். அவர்களிடம் தனக்கு வந்த மிரட்டலைப் பற்றிக் கூறியவன், அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதையும் அவர்களுடன் ஆலோசித்தான்.
கலெக்டர் அலுவலகம் முன்பு அனைவரும் ஒன்று கூடி போராட்டம் நடத்த முடிவு செய்தனர். மதியின் வீட்டை சுற்றி காவலுக்கு சில இளைஞர்களை ஊர்ப் பெரியவர்களின் யோசனையில் ஏற்பாடு செய்துவிட்டு அவர்கள் கிளம்பினர்.
“சரி தம்பி….. அப்பாவ கவனமாப் பார்த்துக்கங்க…… நாளைக்கே நாம நீங்க சொன்ன போல போராட்டத்தை தொடங்கிருவோம்…… இன்னமும் இதை இழுத்துட்டு இருந்தா வேற என்ன பிரச்சனை வரும்னு சொல்ல முடியாது….”
“ம்ம்… நான் சொன்னதைப் புரிஞ்சுகிட்டு இந்த விஷயத்துல ஒத்துழைப்பு குடுக்க சம்மதிச்சதுக்கு ரொம்ப சந்தோசம் மாமா…..” என்றான் மணிமாறனின் தந்தையிடம்.
“என்ன தம்பி…. இப்படி சொல்லறிய….. இது என்ன உங்க தனிப்பட்ட விஷயமா…… ஊருக்கு வேண்டி தான பண்ணறிய…… கண்டிப்பா எங்க ஒத்துழைப்பு எப்பவும் இருக்கும்……”
“ம்ம்… அப்புறம் இன்னொரு விஷயம் மாமா…. நம்ம விவசாய குடும்பங்கள் முன்னேற்றத்துக்கு வேண்டி சில யோசனைகள் பண்ணி வச்சிருக்கேன்…. இந்தப் பிரச்னை முடிஞ்சதும் அதைப் பத்தி தெளிவாப் பேசிடலாம்….”
“ஓ… ரொம்ப சந்தோசம் தம்பி…. நீங்க சொன்ன போலவே பண்ணிடலாம்…. என்னவே…. எல்லாருக்கும் சம்மதம் தானே…. நாளைக்கு எல்லாரும் கலெக்டர் ஆபீசுக்கு போராட்டத்துக்கு வந்திருவியல்ல……”
“என்னவே இப்படிக் கேக்குத…. இது ஒருத்தரோட பிரச்சனை இல்லலே…. நம்ம ஊரோட பிரச்சனை… எல்லாரும் இதுல ஒத்துமையா இருந்து போராட்டம் பண்ணுவோம்…..” என்றார் பெரியவர் ஒருவர்.
“சரி தம்பி…. அப்ப நாங்க கிளம்புதோம்…..” என்று அவர்கள் விடைபெற்றனர். அறைக்கு வந்து லாப்டாப்பை எடுத்துக் கொண்டு அமர்ந்தவனின் அருகில் வந்து அமர்ந்தாள் கயல்.
“அத்தான்…. நாம அந்த மிரட்டல்காரன் சொன்னதக் கேக்காம இப்படில்லாம் பண்ணினா அவன் கோபத்துல ஏதாவது பண்ணிடுவானா…….”
அவளது முகத்திலும் குரலிலும் தெரிந்த பதட்டம் அவளது பயத்தை அவனுக்கு உணர்த்த, அவளை மென்மையாய் அணைத்துக் கொண்டான்.
“என் மீனுக்குட்டிக்கு உயிர் மேல இம்புட்டு ஆசையா…… என் செல்லத்துக்கு ஏதும் நடக்க உன் அத்தான் விட்டிருவேனா….. ஒண்ணும் நடக்காது மா…… பயப்படாதே….” என்றவன் அவள் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டான்.
“என் உயிர் மேல எனக்கு ஆசையெல்லாம் இல்ல அத்தான்…. நான் பயப்படறது அதுக்கில்லை…..”
“ஓ…… உயிர் மேல ஆசை இல்லாத ஜான்சி ராணியா நீனு…… பின்ன எதுக்குலே பயப்படுதே…..” என்றான் அவளைத் தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டே.
அவனது நெஞ்சில் முகம் புதைத்தவள்,
“என் அத்தானோட சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை எனக்குப் பத்தலை….. ரொம்ப வருஷம் அந்த அன்பையும், காதலையும் அனுபவிக்கணும்…. அது நடக்காமப் போயிடக்கூடாதுன்னு தான் என் பயம்…….” என்றவளை காதலோடு இறுக்கிக் கொண்டான் மதியழகன்.
அந்த அணைப்பில் சுகமாய் கரைந்து கொண்டிருந்தாள் அவள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அவளை விட்டு விலகியவன், “மீனும்மா….. நமக்கு எதுவும் ஆகாது…. நான் இருக்கேன்ல…. நம்பு…. நம்ம காதல் ஒரு வட்டத்துக்குள்ள அடங்கிடாது….. வானம் தாண்டியும் வாழ்ந்து நிற்கும்….. நீ தூங்குடா…. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு….” என்றவன் அவளை விட்டு லாப்டாப்பை எடுத்துக் கொண்டு சோபாவில் சென்று அமர்ந்து எதையோ செய்யத் தொடங்கினான்.
அடுத்த நாள் காலையில் சீக்கிரமே கடைக்கு சென்று அன்றைய தினசரியை வாங்கி வந்தான். பேப்பரை விரித்து வைத்து அமர்ந்தவன், உள்ளூர் செய்திகளில் அவன் கொடுத்த செய்தி வந்திருக்கிறதா….. எனப் பார்த்தான்.
அவனுக்கு காப்பியை எடுத்துக் கொண்டு வந்த கயல், “என்ன அத்தான்….. காலங்கார்த்தால பேப்பரை வாங்கி வந்து விரிச்சு வச்சிருக்கிய….. ஏதாவது முக்கியமான செய்தி வந்திருக்கா…..” என்று கேட்டுக் கொண்டே காப்பிக் கோப்பையை நீட்டினாள். அதை வாங்கி பருகிக் கொண்டே பேப்பரில் எதையோ தேடினான் மதியழகன்.
“ம்ம்…. ஒரு முக்கிய செய்தி…. அது வந்திருக்கான்னு தேன் தேடுதேன்…….” என்றவன், உள்ளூர் செய்திகள் பகுதியில் வலது பக்க கட்டத்துக்குள் இருந்த செய்தியைப் படித்துவிட்டு திருப்தியுடன் அவளிடம் காட்டினான்.
“மீனுக்குட்டி…. இதைப் படிச்சுப் பாரு…” என்று அதை அவளிடம் நீட்டினான்.
“சுந்தரபாண்டியபுரம்; நிலத்தடி நீரையும், விவசாயம் மற்றும் குடிநீருக்கான ஆற்று நீரையும் உறிஞ்சி குளிர்பானம் தயாரிக்கும் கோலா நிறுவனத்திற்கு, தங்கள் ஊரில் தொழிற்சாலை அமைப்பதற்காக அரசாங்கம் வழங்கிய உரிமையை ரத்து செய்து தடை விதிக்க வேண்டும் என சுந்தரபாண்டியபுரம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் தங்களின் வாழ்வாதாரமும், விளை நிலங்களும் பாதிக்கப்படும் என வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இது சம்மந்தமாக உடனடியாய் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணாவிட்டால் நடைபெறப் போகும் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஓட்டளிக்காமல் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் ஊர்ப் பெரியவர்கள் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் நடத்தும் இந்தப் போராட்டத்திற்கு தங்கள் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக மக்கள் அணி கட்சித் தலைவர் திரு.நடேசன் அறிவித்துள்ளார்……”
செய்தியை வாசித்த கயல்விழி சந்தோஷத்துடன் நிமிர்ந்தாள்.
“அத்தான்… இந்த மக்கள் அணித் தலைவர் நடேசன் நம்ம பக்கத்துக்கு ஊர்க்காரரு ஆச்சே….. அவுகளும் நமக்கு ஆதரவா இருக்கப் போறாகளா…… அப்போ இந்தப் பிரச்சனை சீக்கிரமே முடிவுக்கு வந்திடும்னு சொல்லுங்க…..”
“ம்ம்…. ஆமாம் மீனும்மா….. இந்த நடேசனோட தம்பி நடராஜன் என்னோட நண்பன் தான்…. அவன்கிட்ட விஷயத்தை சொன்னேன்…. அவன்தான் அண்ணன் கிட்ட சொல்லறேன்னு சொன்னான்…… இப்போ நமக்கு கொஞ்சம் பலம் அதிகமாயிருச்சு…. இனி நம்மளை மிரட்டிப் பார்க்க யோசிப்பாங்கல்ல…. அது மட்டும் இல்ல…. என்னோட சம்மந்தப்பட்ட ஆளுங்களுக்கு வர்ற எல்லா போன் கால்சையும் ட்ரேஸ் பண்ண சொல்லி போலீஸ்லயும் சொல்லிட்டார்…..”
“ஓ…. பரவால்லையே….. நல்ல யோசனைதான் பண்ணிருக்கிய….. நீங்க செய்தது ரொம்ப சரி அத்தான்……”
“அந்த கண்ணுக்குத் தெரியாத யாரோ இனி நம்மளை ஒண்ணும் பண்ண முடியாதுல்ல…. எனக்கோ…. என்னை சேர்ந்தவங்களுக்கோ எந்த ஆபத்து வந்தாலும் அதுக்கு அந்த கோலா நிறுவன உரிமையாளர் தான் காரணம்னு கமிஷனருக்கு ஒரு லெட்டரும் அனுப்பி இருக்கேன்….. அந்த நகலை அந்த கோலா கம்பெனிக்கும் மெயில் பண்ணி இருக்கேன்……”
“ஓ…. எப்பப் பார்த்தாலும் அந்த கம்ப்யூட்டரை வச்சு உக்கார்ந்துட்டு இதெல்லாம் தான் பண்ணிட்டு இருப்பியளா…… நீங்க நிசமாலுமே ஹீரோ தான் அத்தான்…..” என்றவள் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“ஹஹா…. இதெல்லாம் அந்த போன் பண்ணுறவனுக்குத் தெரிஞ்சிருச்சோ என்னவோ…..அவன் அதுக்குப் பொறவு என்னக் கூப்பிடவே இல்லை…..”
“ஓ…. இத்தன பண்ணின உங்களுக்கு கூப்பிட்டது யாருன்னும் ஒரு அனுமானம் இருக்குமே அத்தான்…. அது யாரு….” என்றாள் அவள் ஆவலுடன்.
அவளை நோக்கிப் புன்னகைத்தவன், “அதெல்லாம் உனக்கு வேண்டாம் மீனுக்குட்டி…. இந்தப் பிரச்சனையை நல்லபடியா முடிக்க வேண்டியது என் பொறுப்பு…. நீ நிம்மதியா இரு….. இன்னைக்கு இந்தப் போராட்டம் மட்டும் நடத்திட்டோம்னா நம்ம பிரச்சனை மீடியாவுக்கும் போயிடும்…. அதில்லாம வாட்ஸ்அப், பேஸ்புக் லயும் இந்தப் பிரச்சனையப் பத்தி சொல்லிருக்கேன்…..”
“ஓ…. அதுலயும் எல்லாரும் பார்ப்பாகளா……”
“ம்ம்…. நமக்கு ஆதரவு தெரிவிக்க நிறையப் பேர் வருவாங்க……”
“ம்ம்…. என்னென்னமோ சொல்லுறிய….. எல்லாம் நல்லபடியா நடந்தா சரிதேன்….. சரி அத்தான்….. நான் மாமாக்கு சாப்பாட்டுக்கு முன்ன உள்ள மாத்திர குடுத்திட்டு வாறன்….” என்றவள் எழுந்து உள்ளே போனாள்.
மதியழகனின் மனம் முழுக்க அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்க, காலையில் கோவிலுக்கு போய்விட்டு சோர்வுடன் திரும்பி வந்தார் லச்சுமி.
“என்னம்மா…… பூஜை எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா……”
“ம்ம்… முடிஞ்சுது தம்பி….. இந்தா விபூதி எடுத்துக்க….. வந்த பிரச்சனை எல்லாம் சரியாப் போவணும்னு சாமிகிட்ட வேண்டுதல் வச்சிட்டு வந்தேன்….. கயலு எங்க….” என்றவர் அவன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
“அவ மாத்திர குடுக்கப் போனாம்மா…..”
ஒரு நிமிடம் அவனையே யோசனையுடன் பார்த்தவர், “ம்ம்… இப்பக்கூட உனக்கு அவுகள அப்பான்னு சொல்ல மனசு வரலியா ராசா……” என்றவரின் கண்கள் கலங்கத் தொடங்க அவன் மனது ஏனோ எப்பவும் போல இல்லாமல் துடித்தது.
“அம்மா….. விபூதியக் குடுங்க…… நானே அப்பாக்கு வச்சு விடறேன்….” என்றவன் கை நீட்டினான்.
கோவிலில் கடவுளின் முன்பு கிட்டாத நிம்மதியை அவன் வார்த்தையில் உணர்ந்தார் லச்சுமி. கண்கள் கலங்க நிறைந்த மனதுடன் விபூதிப் பொட்டலத்தை நீட்டினார்.
அதை வாங்கிக் கொண்டவன், “வாங்கம்மா….” என்று அன்னையை அழைத்துக் கொண்டு தந்தையின் அறைக்கு நடந்தான்.
கயல் கொடுத்த மாத்திரையை வாயில் போட்டுக் கொண்டு இடது கையில் தண்ணி பாட்டிலைப் பிடித்திருந்த தந்தையின் கையில் பாட்டிலை வாங்கியவன், “நான் குடுக்கறேன் பா…..” என்று வாங்கிக் கொண்டான்.
அதிசயமாய் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தவரின் வாய்க்குள் புன்னகையுடன் தண்ணீர் ஊற்ற மாத்திரையை விழுங்கிவிட்டு நிமிர்ந்தார் அவர்.
“மதி…. தம்பி…. இந்த அப்பாவ நீ மன்னிச்சுட்டியாப்பா……”
“அப்பா….. எந்த தப்புக்குமே, இந்த தண்டனைன்னு ஒரு அளவு இருக்கு…. இல்லியா மீனும்மா…. உங்களுக்கு நான் கொடுத்த தண்டனை போதும்னு நினைக்கறேன்பா…” என்றவன், அவர் நெற்றியில் விபூதியை வைத்துவிட கயல் மன நிறைவுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
————————————————————————————————————————————————————
உயிர் மேல் விருப்பமில்லை எனக்கு…
உயிர் இல்லாவிட்டால் உன் உயிர்
எனைப் பிரிய வேண்டுமே
என்ற பயம் தான் எனக்கு…..
எனக்குள் துடிப்பது உன் உயிரல்லவா…..
கண்கள் வழியாய் இதயத்துள் நுழைந்தாய்….
காற்றாய் எந்தன் சுவாசத்தில் கலந்தாய்…..
காணாத பொழுதுகளில்
கண்களால் தேடவைத்தாய்…..
கண்ட பின்போ நாணத்தில்
கரைந்திடவா…. மறைந்திடவா…..
என தவிக்க வைத்தாய்….
கண்களால் களவாடிய கள்வனே…
என் இதயத்தை மட்டும்
இடமாறச் செய்தது ஏன்….
ஓயாமல் உன் நினைவில் துடிக்கிறது
எனக்குள் உன் இதயம்…..
வட்டத்துக்குள் புள்ளியாய் துடங்கி
வானமாய் பரந்து விரிந்து
மீண்டும் மீண்டும் நிறைகிறாய்…
காதலாய் என் நெஞ்சமெல்லாம்…..

Advertisement