Advertisement

அத்தியாயம் – 18
டாக்டர் முத்துப் பாண்டியை பரிசோதித்துக் கொண்டிருக்க லச்சுமி கணவனை நினைத்து அழுது கொண்டிருந்தார். கயல்விழி தன் வருத்தத்தை மறைத்துக் கொண்டு அவரை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள். மதியழகனோ ஏதோ தீவிர யோசனையுடன் அமர்ந்திருந்தான்.
முத்துப்பாண்டியின் தலையில் அடிபட்டு ரத்தம் நிறையப் போயிருந்தது. அவரது வலது கையிலும் எலும்பு முறிவு இருந்தது. அதற்கான சிகிச்சை முடிந்து அவரை வார்டுக்கு மாற்றி இருந்தனர். கணவனுக்கு விபத்து ஏற்பட்டதை அறிந்து துடித்துப் போய் மருத்துவமனைக்கு வந்திருந்த லச்சுமி, அவரை நினைத்து அழுது கொண்டே இருந்தார்.
“இதுவரைக்கும் ஒரு காச்சலு வந்து கூடப் படுக்காத மனுஷன்…. இப்போ கையக் கூட அசைக்க முடியாம இப்படிக் கெடக்காகளே…… படுபாவி….. இப்படியா மனுஷன் நிக்கறது தெரியாம வண்டிய ஓட்டிட்டுப் போவான்….”
“அத்த…. நீங்களே இப்படிக் கலங்கினா எப்படி….. மாமா உங்களப் பாத்து கலங்கிப் போயிருவாரு….. கொஞ்சம் தைரியமா இருங்கத்த….. அதான்…. மாமாக்கு கொஞ்ச நாள்ல கையும் சரியாகிடும்னு டாக்டர் சொன்னாகள்ள……” என்றாள் கயல் அத்தையை சமாதானப் படுத்தும் விதமாக.
“ம்ம்…. கலப்பை பிடிச்சுப் பிடிச்சு தழும்பான கை…… இம்புட்டு நாள் வரைக்கும் ஒரு கைவலி, கால்வலின்னு கூட சொன்னது இல்ல…… அவுக இப்படிக் கெடக்கறதப் பார்த்தா நெஞ்சு பதறுது…. தாயி….” கண் கலங்க அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தவர், டாக்டர் முத்துப் பாண்டியின் பரிசோதனையை முடித்துவிட்டு அறையில் இருந்து வெளியே வருவதைக் கண்டு, முந்தானையால் கண்ணைத் துடைத்துக் கொண்டு அவரிடம் சென்றார். மதியும் எழுந்து டாக்டரிடம் வந்தான்.
“டாக்டர்…. என் வூட்டுக்காரருக்கு எப்படி இருக்கு…. பயப்படற போல ஒண்ணும் இல்லையே…..”
“பதட்டப்படாதீங்க…. கொஞ்ச நாள்ல சரியாகிடுவார்மா….. கைக்கு சின்னதா ஒரு ஆப்பரேஷன் பண்ணி இருக்கு…. கொஞ்ச நாள் கவனமா பார்த்துக்குங்க….. சீக்கிரமே சரியாகிடும்…. கவலைப்படாம தைரியமா இருங்க….. எந்த ஒரு நோயாளிக்கும் பெரிய மருந்தே கூட இருக்கவங்களோட நம்பிக்கையான முகம் தான்….. அவரைத் தொந்தரவு பண்ணாம பார்த்துக்கங்க…..” சொல்லிக் கொண்டே நகர்ந்தார்.
“ம்ம்… சரி டாக்டர்…..” என்று கதவைத் திறந்து அறைக்குள் நுழைந்தார் லச்சுமி.
மதியிடம் வந்த கயல், “அத்தான்….. என்ன இது…. மாமா இப்படி அடிபட்டுக் கெடக்காரு…. இப்பவும் நீங்க அத்தைக்கு ஒரு ஆறுதல் கூட சொல்லாம அமைதியாவே இருக்கீங்க….” என்றாள் கணவனிடம். அப்போதும் அவன் அமைதியாகவே தலையைக் குனிந்து கொண்டு இருக்க,
“என்ன அத்தான்….. மாமா செய்த எத்தனையோ நல்லதெல்லாம் உங்க மனசுல இல்லயா…. இப்பவும் அவர் செய்த தப்பு மட்டுந்தேன் உங்களுக்குப் பெருசாத் தெரியுதா….. உங்களுக்கு உசுரு குடுத்த மனுஷன் இப்படிக் கெடக்காரு…… இப்பவும் அவரோட பேசாம வீம்பா உக்கார்ந்துட்டு இருக்குறது நல்லாவா இருக்கு…. போயிப் பேசுங்க அத்தான்…. நீங்க பேசினாலே மாமாக்கு நடந்ததெல்லாம் சின்னதாப் போயிரும்…… தயவு செய்து பேசுங்க அத்தான்…..” என்று அவன் தலையை நிமிர்த்தியவள் அதிர்ந்து போனாள்.
அவனது கண்கள் கலங்கி இப்போதே விழுந்துவிடுவேன் என்பது போல் உருண்டு விழத் தயாராய் நின்று கொண்டிருந்தன கண்ணீர்த்துளிகள்.
“அத்…தான்….. என்ன இது…. உங்க கண்ணுல தண்ணியா…..” வியப்புடன் கேட்டவள்,
“அப்படின்னா…. மனசுல மாமா மேல அவ்ளோ அன்பு வச்சிட்டு தான் வெளிய இம்புட்டு வீறாப்பா பேசாம இருக்கிகளா……” என்றவள், அவன் கண்ணீரை புன்னகையுடன் துடைத்துவிட்டாள்.
“வாங்க அத்தான்…. மாமாவப் பார்த்திட்டு வருவோம்…..” என்று அவனை இழுத்துக் கொண்டு கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.
மருமகளைக் கண்டதும் மலர்ந்த முத்துப் பாண்டியின் விழிகள் பின்னில் வந்த மகனைக் கண்டதும் ஆச்சர்யத்தைக் காட்டின.
“மாமா…. இப்போ எப்படி இருக்கிங்க….. பயப்படறதுக்கு ஒண்ணும் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டார்…. ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வீட்டுக்குப் போயிடலாமாம்….. கையும் கொஞ்ச நாள்ல சரியாகிடும்னு சொல்லிட்டார்….” என்று அவரிடம் கலகலவென்று சொல்லிக் கொண்டிருந்தவள், அவரது பார்வை மதியைத் தயக்கத்துடன் தழுவுவதைக் கண்டு கணவனிடம் திரும்பினாள்.
“ம…தி….. உனக்கு ஒண்ணும் ஆக…லியே….. தம்பி…..” சன்னமாய் ஒலித்த முத்துப் பாண்டியின் குரல் அவனது உடலெங்கும் பார்வையை ஓட்ட அவனுக்குள் ஒருவித உணர்ச்சியலை ஓடியது.
மனதுக்குள், “என்னை பயமுறுத்துவதற்காக என் அப்பாவைப் படுக்க வச்சுட்டானுங்களே…. படுபாவிங்க….” என்று மனம் அரற்றிக் கொண்டிருந்தது.
முத்துபாண்டி சொன்னதைக் கேட்ட கயல், “என்ன மாமா….. என்ன சொல்லுறிய…. அவருக்கு என்ன ஆகப் போவுது…. உங்களுக்கு தான விபத்து நடந்துச்சு….” என்றாள் புரியாமல்.
தலையிலும் கையிலும் வெள்ளைக் கட்டுடன் சோர்வாய்ப் படுத்திருந்தாலும் தன்னைப் பற்றி அவர் கேட்டதில் அவன் மனது கலங்கியது. அப்போது உள்ளே நுழைந்த நர்ஸ் ஒருத்தி, “அவருக்கு ஜூஸ் ஏதாவது குடிக்கக் கொடுங்க…. மாத்திரை கொடுக்கணும்…..” என்றுவிட்டு வெளியே சென்றாள்.
லச்சுமியும், கயலும் முத்துப்பாண்டியிடம் அவரது உடல்நிலையை விசாரித்துவிட்டு எப்படி விபத்து நடந்தது என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.
“கவனமா இருந்திருக்கலாமே மாமா…… இப்படிதான் வண்டிய ரோட்டுல நிறுத்திட்டுப் போன் பேசுவாகளா….” என்றாள் கயல்.
“ஆமா…. நீங்க டவுனுக்கு அரிசி மண்டிக்கு தானே போவறேன்னு சொன்னிய….. அப்புறம் எப்படி மதி, கலெக்டர் ஆபீசுகிட்ட உம்மப் பார்த்தான்……” என்றார் லச்சுமி.
“ம்ம்…. நான் மண்டிக்குப் போயிட்டு இருக்கும்போது யாரோ ஒருத்தன் போன் பண்ணி உங்க பையன் கலெக்டர் ஆபீசு முன்னாடி ரோடுல, ஏதோ வண்டில அடிபட்டு மயங்கிக் கிடக்கான்….. உடனே வாங்கன்னு கூப்பிட்டான்…… நானும் அடிச்சுப் புடிச்சு வந்தா அங்க அப்படியொண்ணும் காணோம்…… சரின்னு அங்க பக்கத்துல கடைல விசாரிச்சிட்டு மறுபடியும் அந்த நம்பருக்கே போன் பண்ணிப் பார்த்தேன்….. போனே போகலை….. நான் மறுபடியும் முயற்சி பண்ணிட்டு இருந்தப்ப தான் என்னை வண்டி இடிச்சிட்டுப் போயிருச்சு…..” என்று கஷ்டப்பட்டு சொல்லி முடித்தார் அவர்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த மதியின் உள்ளம் கலங்கியது. 
“நான் ஜூஸ் வாங்கிட்டு வந்திடறேன் மா….” என்று வெளியேறினான் அவன்.
சிறிது நேரம் கழித்து கயலின் பெற்றோர் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தனர்.
“என்ன பாண்டி…. என்னலே ஆச்சு…… இப்படி வந்து படுத்துக் கெடக்கே…… எவன்யா உம்ம, வண்டில தட்டிட்டுப் போனவன்….” என்று பழைய நண்பரிடம் வருத்தம் நிறைந்த குரலில் விசாரித்துக் கொண்டிருந்தார் சுந்தரேசன்.
இந்நாள் சம்மந்தியாக அல்லாமல் பழைய நண்பனின் உரிமையான பேச்சைக் கேட்டதும் அவர் மனம் நெகிழ்ந்தது.
“பெருசா ஒண்ணும் இல்ல சுந்தரு….. சின்னதா கையில ஒரு அடி…. தலைல கொஞ்சம் அடி…. இதுக்குப் போயி உந்தங்கச்சி தான் ஓவரா புலம்பிட்டு கிடக்கா….. இதுக்கு எதுக்கு நீனு வேலைய விட்டுட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடியாந்தே…..” என்றார் அவர்.
“அது சரி….. உமக்கு இப்படி ஆயிருச்சுன்னு மணி மாப்பிள வந்து சொன்னதும் கலங்கிப் போயிட்டேன்யா…… அதான் எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டு ஒன்னப் பார்க்க ஓடியாந்துட்டேன்…..” என்றார் சுந்தரேசன்.
அவர் கூறியதைக் கேட்டதும் லச்சுமி மீண்டும் கண்கலங்கத் தொடங்கினார்.
“என்ன அண்ணி…. நீங்களே இப்படிக் கலங்கினா எப்படி…. ஏதோ இப்படில்லாம் நடக்கணும்னு இருந்திருக்கும் போலிருக்கு….. தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிருச்சுன்னு நெனைச்சு சமாதானப் பட்டுக்க வேண்டியதுதேன்…. நீங்க அழுது அண்ணனயும் சேர்த்து  வெசனப்படுத்தாதிய……” என்றார் ராசாத்தி.
“ம்ம்… நானும் இதேதான் வந்ததுல இருந்து சொல்லிட்டிருக்கேன்மா….. அத்த கேட்டாத்தானே……. சும்மா அழுது புலம்பிட்டே இருக்காக…..” என்றாள் கயல்விழி.
“ம்…. அழுவாதிங்க அண்ணி…. அதான் சீக்கிரமே சரியாகிடும்னு டாக்டர் சொல்லி இருக்காருல்ல….. சரி…. கயலு…. மாப்புள எங்கே…..”
“மாமாக்கு ஜூஸ் வாங்கப் போயிருக்காகம்மா…….” என்று சொல்லும்போதே ஒரு கையில் பழச்சாறுடனும், மறு கையில் டீயுடனும் உள்ளே நுழைந்தான் மதியழகன்.
“வாங்க மாமா…. வாங்கத்தை…… டீ சாப்பிடுங்க…..” என்றவன், பிளாஸ்கில் உள்ள டீயை காகிதக் கோப்பையில் ஊற்றி அவர்களிடம் கொடுக்க,
“அட…. எங்களுக்கு எதுக்கு….. நீங்க குடிங்க மாப்புள…..” என்று மறுத்தார் ராசாத்தி.
“ஜூஸ் வாங்கப் போவும்போது நீங்க வரதப் பார்த்தேன் அத்த…. உங்களுக்கும் சேர்த்து தான் வாங்கிட்டு வந்தேன்…. குடிங்க…..” என்றவன் டீயைக் கொடுத்துவிட்டு ஜூஸை ஒரு பெரிய கோப்பையில் ஊற்றி தாயிடம் கொடுத்தான்.
அதை வாங்கியவர் கணவனின் வாயில் சிறிது சிறிதாய் கொடுக்க, அவர் சரியாகக் குடிக்க முடியாமல் திணறினார்.
“அம்மா…. கொஞ்சம் தள்ளுங்க….” என்றவன், தந்தையின் தோளில் கைகொடுத்து அவரது வலது கையை அசைக்காமல் மெல்ல எழுப்பி, சாய்வாய் கட்டிலில் ஒரு தலையணையை வைத்து அவர் சாய்ந்து கொள்ளுமாறு அமர்த்தினான்.
“ம்ம்… இப்பக் குடுங்க…..” என்றவனின் செயலை அனைவரும் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, அவன் தேநீர் கோப்பையுடன் வெளியே சென்றான். அங்குள்ள அனைவருக்கும் அதைக் கண்டு நிறைவாய் இருந்தது.
சற்று நேரம் இருந்துவிட்டு சுந்தரேசனும் ராசாத்தியும் வீட்டுக்குப் புறப்பட்டதும் மாலையாகி விட்டதால், கயலையும் பெற்றோர்களுடன் வீட்டுக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தான் மதியழகன். லச்சுமியும் மதியழகனும் மட்டும் ஆசுபத்திரியில் முத்துப்பாண்டியுடன் இருந்தனர்.
————————————————————————————————————————
ராசாத்தி இரவு உணவைத் தயார் செய்து கொண்டிருக்க பேச்சிப் பாட்டியுடன் முன்னாடி திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள் கயல்விழி. சுந்தரேசன் சற்று நடந்து விட்டு வருவதாகக் கூறி வெளியே சென்றிருந்தார்.
அப்போது தொலைபேசி அடிக்கவே ராசாத்தி அடுக்களையில் இருந்து குரல் கொடுத்தார். “ஏட்டி கயலு…… அந்த போனை எடுலே…… நான் கைவேலயா இருக்கேன்……”
“ம்ம்…. சரிம்மா…. யாரு இந்த நேரத்துல கூப்பிடுதாக……” என்று கூறிக் கொண்டே எழுந்து சென்று தொலைபேசியை எடுத்தாள்.
“ஹலோ….. யாரு பேசறிய……”
“ஹலோ… இது சுந்தரேசன் வீடா….” என்றது எதிரிலிருந்து வந்த கரகரப்பான குரல்.
“ஆமா….. அப்பா வெளிய போயிருக்காக…… நீங்க யாரு…..” என்றாள் அவள்.
“நீ மதியழகன் சம்சாரமா……” அடுத்தும் எதிர்முனையில் இருந்து கேள்வியே வந்தது.
“ஆமாம்….. நான் அவுக சம்சாரந்தேன்…. அத்தான் இங்க இல்லயே…. நீங்க யாருன்னு சொல்லுங்க…..” என்றாள் அவள்.
“இங்க பாரு….. நான் யாருங்கிறது உமக்கு முக்கியம் இல்ல….. நான் சொல்லப்போற விஷயத்த மட்டும் உம்புருஷன்கிட்ட சொன்னாப் போதும்……”
“என்ன சொல்லோணும்…. அவுக மொபைலுக்கு கூப்பிட்டு கெடைக்கலையா …. சரி சொல்லுங்க…. நான் சொல்லிடறேன்….”
“உம்புருஷன் இப்போ ஒரு வேண்டாத வேலைல இறங்கிருக்கான்…… அவன அதை விட்டுட்டுப் போயி, பொழப்பைப் பார்க்க சொல்லு…… இல்லன்னா ஆஸ்பத்திரில  உன் மாமனார் படுக்கைக்குப் பக்கத்துல உன் வீட்டு ஆளுங்க ஒவ்வொருத்தருக்கும் படுக்கை தயார் செய்ய வேண்டி வரும்…..”
“என்னது….. என்ன சொல்லறிய…. எனக்கு ஒண்ணும் விளங்கலையே…..”
“உன் மாமனார்க்கு விபத்து நடந்த போல ஒவ்வொருத்தருக்கும் ஆபத்து காத்திட்டிருக்குன்னு சொல்லறேன்……”
“என்னது….. ஆபத்தா…..” அதுவரை ஏனோ தானோவென்று பேசிக் கொண்டிருந்தவள் சட்டென்று கவனமானாள்.
“நீங்க என்ன சொல்லுறிய…. உங்களுக்கு யார் வேணும்…… எதுக்கு இப்படி மிரட்டுற போலப் பேசுதிய….” என்றவளின் குரலில் ஒரு நடுக்கம் வந்திருந்தது.
“இங்க பாரு….. உனக்கு விளங்கனும்னு எந்த அவசியமும் இல்லை….. நான் சொன்னதை மட்டும் உம்புருஷன் கிட்ட சொல்லிரு போதும்…..” என்றுவிட்டு எதிர்ப்புறம் தொடர்பைத் துண்டித்து அமைதியாகிவிட்டது.
“சரியாகப் புரியாவிட்டாலும் எதோ ஒரு நெருடல் கயலின் மனதை உறுத்திக் கொண்டிருக்க அங்கே வந்த ராசாத்தி, “யாரு கயலு… போன்ல…… மலரு பேசினாளா……” என்றார் மகளிடம்.
மகளது சற்று பயந்த யோசனையான முகத்தைக் கண்டவர், “என்னாச்சுலே….. எதுக்கு உன் முகம் எல்லாம் வேர்த்திருக்கு….. யாரு போன்ல…..” என்றார் மீண்டும்.
“தெரியலம்மா…… யாருன்னு தெரியல…… யாரோ மிரட்டுற போலப் பேசினாக….”
“எ…. என்னலே சொல்லுதே…. மிரட்டினாகளா…….”
“ம்ம்…. ஆமாம்மா….. மாமாவை மாதிரியே வீட்டு ஆளுகளை எல்லாம் ஏதாவது பண்ணிருவோம்னு மிரட்டுராக…… அப்போ அவுங்க தான் மாமாவை எதோ பண்ணி இருக்காகளா…..” என்றாள் அவள் யோசனையுடன்.
“ஆமாம் கயலு….  உனக்கு விஷயமே தெரியாதா….. முத்துப் பாண்டி அண்ணனை யாரோ வேணும்னே தான் வண்டில இடிச்சுப் போட்டு போயிருக்காக…… நம்ம மாப்புள கோலா கம்பெனிக்கு எதிரா கொடுத்த பெட்டிஷனை திருப்பி வாங்கனும்னு யாரோ மிரட்டி இருப்பாக போல….. அவுக தான் இப்படிப் பண்ணிட்டாகன்னு மணி மாப்பிள எங்ககிட்ட சொல்லிச்சே……”
“அய்யய்யோ….. நீங்க என்னம்மா சொல்லறிய……” என்றாள் கயல் அதிர்ச்சியுடன்.
“ம்ம்…. ஆமாம் புள்ள….. நீங்க பயப்படுவிகன்னு மாப்புள சொல்லல போலருக்கு……”
“ஓ….. அப்ப இங்க போன் பண்ணதும் அவுக தானா…..” என்றவளின் முகத்தில் பயம் அதிகமாகி இருந்தது. வயிற்றுக்குள் ஒருவித பயப்பந்து அவஸ்தையாய் சுழன்று நெற்றியில் வியர்வைத் துளிகளை உற்பத்தி செய்தது.
“என்னலே சொன்னாங்க…… அவுகளுக்கு நம்ம வூட்டு போன் நம்பரு எப்படித் தெரியும்…..” என்றார் ராசாத்தி.
“தெரியலையே மா…… அத்தான் அதான் எப்பவும் ஏதோ யோசனையாவே இருக்காரா….. எ… எனக்கு பயமா இருக்குமா…..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே உள்ளே நுழைந்தார் சுந்தரேசன்.
என்னவென்று விசாரித்தவரிடம் விஷயத்தைக் கூற, அவர் உடனே மதியழகனை அழைத்து விஷயத்தைக் கூறினார்.
அவர் சொன்னதைக் கேட்டதும் வெளியே காட்டிக்கொள்ளாமல் மனதுக்குள் அவன் ஒதுக்கி வைத்திருந்த அவனது பயம் மெல்ல எட்டிப் பார்த்தது.
தன் பெற்றோரிடமும் இதைக் கூறிவிடலாமா என நினைத்துக் கொண்டிருந்தவனின் அலைபேசி மீண்டும் ஒலித்தது.
அதில் ஒளிர்ந்து கொண்டிருந்த UNKNOWN நம்பர் அவனது பயத்தைக் கூட்டியது.
“என்ன தம்பி…… அப்பா சௌக்கியமா இருக்காரா…… அடுத்து உங்க வீட்டுல யாரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பலாம்…. உன் சம்சாரம் உன் பக்கத்துலயே அங்கயே இருந்தா சந்தோசப்படுவியா….. ஏற்பாடு பண்ணட்டுமா…..” என்று கூறி ராட்சசத்தனமாய் ஒரு சிரிப்பையும் சிதறவிட்டது.

Advertisement