Advertisement

மனம் நிறைந்தவளின் மனம் மயக்கும் வார்த்தையைக் கேட்டு மதி மயங்கி நின்றவன், “மீனுக்குட்டி….. உனக்குள்ள துடிக்குற என் இதயத் துடிப்பை நான் கேட்டுப் பார்க்கட்டுமா….” என்றான் காதலுடன். அவனது உருக்கும் பார்வையில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தவள், “ம்ம்….” என்றாள்.
அவளது நெஞ்சில் தன் செவியை வைத்துக் கேட்டவன் அவளது இதயத் துடிப்பில் அவனது பெயர் ஒலிக்கக் கேட்டான்.
அப்படியே இறுக்க அணைத்துக் கொண்டவனின் கரத்துக்குள் பாவையவள் பனியாய் உருகி நின்றாள். அவனது விரல்களின் மீட்டலில் காதல் ஸ்வரங்களை ரசிக்கத் தொடங்கினாள் அவள். புதுவித உணர்வுகளின் ஆக்கிரமிப்பில் மனம் நிறைந்த காதலுடன் இருவரும் சம்சார சங்கீதம் பாடிக் கொண்டிருந்தனர்.
“ஏட்டி….. நீ பார்த்திருக்கணுமே…. நம்ம புள்ள பேசுறத….. எம்புட்டுத் தெளிவா எல்லாருக்கும் எடுத்துச் சொல்லி புரியற போலப் பேசினான் தெரியுமா….. எல்லாப் பயலுவளும் ஒரு எதிர்க் கேள்வி கேக்காம வாயடைச்சுப் போயி, அதிர்ச்சியோட கேட்டுட்டு இருந்தாகள்ள….. எம்புள்ளைக்கு எம்புட்டு அறிவுன்னு நானும் மலைச்சுப் போயிட்டேன்…..” மகனைப் பத்தி பூரிப்புடன் லச்சுமியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் முத்துப் பாண்டி.
“ம்ம்…. அவனுக்கு அறிவில்லாமலா சென்னைல அம்புட்டுப் பெரிய கம்பெனில பெரிய அதிகாரியா இருந்தான்…. எல்லாம் நீங்க பண்ணுன கூத்துல இப்படி ஆகிப் போனவந்தானே….. இல்லன்னா இன்னும் இதவிடப் பெரிய ஆளாகிருப்பான்…..” என்றான் லச்சுமி.
அதைக் கேட்டதும் அவர் முகம் சுருங்கி விட்டது.
“ம்ம்… நானு எம்புட்டு பெரிய தப்பு பண்ணிட்டேன்…. என் புள்ள வாழ்க்கைய நானே கெடுக்கப் பார்த்தேனே…. எப்படியோ கடவுள் புண்ணியத்துல இப்படி மீண்டு வந்ததே பெரிய விஷயந்தேன்….. இனி அவன் மனசு கோணற போல நானு நடந்துக்கவே மாட்டேன்…..” என்றார் அவர்.
“ம்ம்… சரி விடுங்க…. இனி பழசப் பேசி என்னாகப் போவுது….. இப்படில்லாம் நடக்கணும்னு தலையில எழுதி இருந்திருக்கு….. எல்லாம் நம்ம மருமவ வந்த நேரம் சரியாகிருச்சு….. இனி அவன் உம்மோட பேசவும் செய்துட்டான்னா எமக்கு அதுவே போதும்…. ம்ம்… இனி அது எப்ப நடக்கப் போவுதோ…..” என்றார் லச்சுமி.
“எனக்கு நம்பிக்க இருக்கு… எம்மருமவ அதையும் நடத்திக் காட்டத்தேன் போறா….. சரிட்டி…. நான் தோப்புக்குப் போயிட்டு அப்படியே டவுனுக்குப் போயிட்டு வந்திடுதேன்…..” என்றவர் பைக்கில் கிளம்பினார்.
சற்று நேரத்தில் மதியும் கிளம்பி வர, அவனுக்குப் பின்னாலேயே கயலும் வந்தாள்.
“அம்மா….. கலெக்டர் ஆபீசுல இருந்து நம்ம குடுத்த பெட்டிஷன் விஷயமாப் பேச வரச் சொல்லி போன் பண்ணாக…. நான் டவுனுக்குப் போயி என்னன்னு பார்த்துட்டு வந்திடுதேன்….. “
“அப்படியா தம்பி…. எதுக்காக இருக்கும்…. நம்ம கேட்ட போல தொழிற்சாலை தொடங்க வேணாம்னு சொல்லிடுவாகளா…” என்றார் லச்சுமி.
“ம்ம்…. இங்க வந்து பார்த்திட்டு தான் அதெல்லாம் முடிவு பண்ணுவாங்கம்மா… அதப் பத்தி பேசதேன் கூப்பிட்டிருப்பாகன்னு நினைக்குதேன்….”
“ம்ம்… சரி தம்பி… பார்த்துப் போயிட்டு வா…. கூட யாரையாவது கூப்பிட்டுப் போவலாம்ல……” என்றார் லச்சுமி.
“ம்ம்… மணிமாறனை வரச் சொல்லி இருக்கேன்…. போற வழியில அவனையும் கூட்டிட்டுப் போவுதேன்…. நான் வரேன் மா….” என்று அன்னையிடம் விடை பெற்றவன்,
“மீனுக்குட்டி…. நான் வரேன்….” என்று அவளிடம் கண்களால் விடைபெற்று, அன்னைக்குத் தெரியாமல் உதட்டை லேசாகக் குவித்து காற்றில் முத்தத்தைப் அவளுக்குப் பறக்க விட்டு பைக்கில் பறந்தான்.
கலெக்டர் அலுவலகம் முன்பு மனு கொடுப்பதற்கும் பலவித அலுவல்களுக்குமாய் முகத்தில் பல்வேறு யோசனைகளை சுமந்து கொண்டு நின்று கொண்டிருந்தனர் பொதுமக்கள்.
அவர்களைப் பார்த்துக் கொண்டே அலுவலகத்திற்குள் நுழைந்தனர் மதியழகனும், மணிமாறனும்.
முன்னில் இருந்த ஒரு அரசு ஊழியரிடம் கலெக்டரைக் காண வேண்டும் என்று கூறவும், முன்னில் காத்திருக்குமாறு கூறினார் அவர். முன்னமே வந்து கலெக்டரைக் காண்பதற்காய் காத்திருந்த பலரும் அங்கிருந்த பாலிமர் இருக்கைகளை நிறைந்திருக்க இடமில்லாமல் வெளியே இருந்த மரத்தடியில் வந்து இருவரும் காத்திருக்கத் தொடங்கினர்.
இருவரும் கலெக்டரிடம் என்ன பேச வேண்டும் என்பதைப் பற்றி பொதுவாய்ப் பேசிக் கொண்டிருந்தனர். ரோட்டைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த மதியழகனின் கண்ணில் எதிர்ப்பக்க ரோட்டில் இருந்த டீக்கடையின் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு மொபைலில் பேசிக் கொண்டிருந்த முத்துப் பாண்டி கண்ணில் பட்டார்.
அவரைக் கண்டதும் அவனது மனதில் வெறுப்பு தோன்றினாலும் அங்கே அவரை எதிர்பார்க்காததால் ஒரு கேள்வியும் கூடவே தோன்றியது.
“இந்தாளு எதுக்கு, இந்தப் பக்கம் சுத்திட்டு இருக்காரு…. இதுல வண்டிய ரோட்டுல நிறுத்தி போனு வேற…..” என்று அதற்கும் அவரை மனம் கடிந்து கொண்டிருக்க அவனது பார்வை மாறியதைக் கண்டு மணிமாறனும் திரும்பிப் பார்த்தான்.
“அட….. உங்க அப்பாவும் இங்க வருவாகன்னு நீனு சொல்லவே இல்ல……” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, மதியழகனின் சட்டைப் பையில் இருந்த அலைபேசி ஒலிக்கத் தொடங்கியது.
அதை எடுத்துப் பார்த்தவன், டிஸ்ப்ளேவில் ஒளிர்ந்த UNKNOWN நம்பரைக் கண்டு யோசனையுடன் நெற்றியை சுளித்தான்.
“என்ன மதி…. எதுக்கு யோசிக்குற…. யாரு போன்ல…. எடுத்துப் பேசு….” என்றான் மணிமாறன்.
“ம்ம்…..” என்றவன், அதை எடுத்து காதுக்குக் கொடுத்து ஹலோவினான்.
“ஹலோ…… பேசறது மதியழகன் தானே….” என்றது எதிர்முனையில் இருந்து ஒலித்த கரகரப்பான குரல்.
“ஆமாம்….. மதியழகன்தான் பேசுதேன்….. நீங்க யாரு…..”
“அது உனக்குத் தேவையில்லாத விஷயம்…… நான் சொல்லப்போறதை மட்டும் கேட்டா போதும்……”
“என்ன சொல்லறிய…… யார் நீங்க….. உங்களுக்கு யார் வேணும்…..” என்றான் மதியழகன் சற்று உயர்த்த குரலில்.
“இங்க பாரு….. சும்மா வளவளன்னு கேள்வி எல்லாம் கேட்டுட்டு இருக்காதே….. நான் சொல்லறதைக் கவனமாக் கேளு…….” என்று அதிகாரத்துடன் ஒலித்த குரலைக் கேட்டு மதிக்கும் கோபம் வரத் தொடங்கியது. அவனது முக மாறுதலைக் கண்டு மணிமாறன் என்னவென்று கேட்க, தலையசைத்துக் கொண்டே பேசினான் மதி.
“ஏய்…. யார் நீ….. எங்கிட்ட எதுக்கு இப்படி அதிகாரம் பண்ணறே…. நீ சொல்லுறதை நான் எதுக்கு கேக்கணும்…..” என்றான் அவனும் கோபத்துடன்.
“கேட்டுத்தான் ஆவணும் தம்பி… உங்கிட்ட எதிர்க்கேள்வி கேக்காதன்னு சொன்னேன்ல….. நீ இப்ப என்ன பண்ணனும்னா கோலா கம்பெனிக்கு எதிரா கலெக்டர்கிட்ட ஒரு பெட்டிஷன் கொடுத்தியே…. அதைப் போயி வாபஸ் வாங்கறே……” என்று அழுத்தமாய் வந்தது அந்தக் குரல்.
“என்ன விளையாடறியா…. நான் எதுக்கு வாபஸ் வாங்கணும்….. அதெல்லாம் முடியாது….. முதல்ல நீ யாருன்னு சொல்லு….” என்று கோபத்துடன் அவன் பேசுவதைக் கேட்டு மணிமாறனுக்கு எதோ பட்டும் படாமலும் புரியத் தொடங்கியது.
“தம்பி…… நீ இறங்கி இருக்கிறது நெருப்பு வட்டத்துக்குள்ள……… நாங்க சொல்லறதுக்கு நீ அனுசரிச்சா உனக்கு நல்லது…. இல்லன்னா விபரீதம் உனக்கு தான்…. ஒழுங்கு மரியாதையா வாபஸ் வாங்கிட்டு வீடு போயி சேருங்க……”
“யோவ்…. என்ன பயமுறுத்தறியா…… அதெல்லாம் ஒண்ணும் வாங்க முடியாது… உன்னால முடிஞ்சதப் பார்த்துக்கோ….” என்றவன் கோபத்துடன் அலைபேசியை அணைத்துவிட்டான்.
“என்ன மதி…… யாரு போன்ல… நீ ரொம்ப கோபமாப் பேசுதே….” என்றான் மணிமாறன்.
“ம்ம்…. எவனோ ஒருத்தன் நாம் குடுத்த பெட்டிஷனை வாபஸ் வாங்க சொல்லி மிரட்டறான்…..” என்றவனின் குரல் கோபத்தில் தடுமாறியது. அவர்கள் அங்கே பேசிக் கொண்டிருப்பதற்குள் எதிர்ப்புறம் ஏதோ ஓசை கேட்க, சட்டென்று இருவரும் திரும்பினர்.
முத்துப்பாண்டி அமர்ந்து அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த பைக் கீழே விழுந்து கிடக்க, சற்றுத் தள்ளி விழுந்து கிடந்தவரின் தலை ரோட்டில் இடித்ததில்  சட்டென்று எங்கோ உற்பத்தியான ரத்த ஊற்று ஒன்று வேகமாய் ரத்தத்தை வெளியேற்றிக் கொண்டிருந்தது.
தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பதை அப்போது தான் உணர்ந்தான் மதியழகன். அதுவரை நன்றாகப் பேசிக் கொண்டிருந்த தந்தை ரத்த வெள்ளத்தில் கீழே கிடப்பதைக் கண்டதும் பதறிப் போனவன், “அப்பா…..” என்று அலறிக் கொண்டே ரோட்டைக் கடந்து ஓடினான்.
அவனது பின்னிலேயே ஓடிய மணிமாறனும் சட்டென்று கண் முன்னால் நடந்த விபத்தில் அதிர்ந்து போனான்.
முத்துப் பாண்டியின் பைக்கைத் தட்டிவிட்டு வேகமாய் சென்று கொண்டிருந்த காரின் எண்ணை நோக்க முயல்வதற்குள் அங்கிருந்த வளைவில் நுழைந்து விட்டது வண்டி. அதிர்ச்சியில் மயக்கமாகி விட்ட முத்துப் பாண்டியை அங்கிருந்த ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு இருவரும் ஹாஸ்பிடலுக்கு விரைந்தனர். தலையில் இருந்து ரத்தம் ஒழுகிக் கொண்டிருக்க கண்ணை மூடி அசையாமல் படுத்திருந்த தந்தையைக் கண்டு மதியழகனின் மனம் கலங்கியது.
அவர் யோசிக்காமல் செய்த அந்த ஒரு பெரிய தவறைத் தவிர, அவனுக்கு எல்லாவிதத்திலும் நல்லவொரு தந்தையாகவே இருந்தார் அவர். சிறு வயது முதல் அவனது தேவைகள் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து நிறைவேற்றி தோளிலும் நெஞ்சிலும் சந்தோஷமாய் சுமந்து திரிந்தவர், இப்போது பேச்சு மூச்சில்லாமல் கிடப்பதைக் காணக் காண அவனது கண்களில் நீர் பெருகியது.
அப்போது மீண்டும் அவனது அலைபேசியில் அதே எண் ஒளிர, அவன் ஆன் செய்ததும் “என்ன தம்பி……. சும்மா ஒரு சாம்பிளைப் பார்த்தே அதிர்ந்து போயிட்டா எப்படி….. இப்போ பெட்டிஷன வாபஸ் வாங்கறியா…..” என்றது.
————————————————————————————————————————
நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு
சேத்து வச்ச நேசமெல்லாம் 
கண்ணுக்குள்ள ஒளிஞ்சுகிட்டு 
கஞ்சத்தனம் செய்யுதடா…… 
உன்னோடு கொஞ்சிப் பேச
கோர்த்து வச்ச வார்த்தயெல்லாம்
தொண்டைக்குள்ள சிக்கிக்கிட்டு
சண்டித்தனம் பண்ணுதடா…..
கையோட கைசேர்த்து நடக்க 
நானும் நெனச்சாலும்
முன்னால வெக்கம் வந்து 
வஞ்சத்தனம் பண்ணுதடா…..
ஊசியில நூலப் போல 
எனக்குள்ள நுழைஞ்சுபுட்ட….
உன்னோட நெனப்பால 
எம்மனசத் தச்சுபுட்ட…..
என்னோட மனசிப்போ
உன்னோட சட்டைக்குள்ள….
துடிக்கின்ற ஓசை கேக்கும்
என்னோட நெஞ்சுக்குள்ள….
சேத்துவச்ச காதலெல்லாம்
கண்ணுக்குள்ள தேக்கிவச்சு
நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு
காத்திருக்கேன் கண்ணாளா……

Advertisement