Advertisement

அத்தியாயம் – 17
வெகு நாட்களாய் உபயோகிக்கப் படாமல் கிடந்த தனது லேப்டாப்பை தூசு தட்டி எடுத்து கட்டிலில் அமர்ந்து உபயோகித்துக் கொண்டிருந்த மதியழகன், அதில் மும்முரமாய் எதையோ இணையத்தில் தேடிக் கொண்டிருந்தான். பால் கிளாசுடன் அறைக்குள் நுழைந்த கயல்விழி, அதை அவனிடம் நீட்டினாள்.
“அத்தான்….. இந்தாங்க பால்…..”
“ம்ம்… அங்க வை… மீனுக்குட்டி……” 
“சூடாறிடும் அத்தான்….. குடிச்சிட்டு அதப் பாருங்க…..” என்றாள் விடாப்பிடியாக.
அவளை ஏறிட்டவன் தலையில் மல்லிகைப்பூ மணக்க, அழகாய் அருகில் புன்னகை முகமாய் நின்று கொண்டிருந்தவளைக் கண்டு முகம் மலர்ந்தான்.
“சூடாறிடும்னா சொல்லுதே….. சரி குடு….. மீனுக்குட்டி…. குடிக்கேன்….” என்றவன் கையை நீட்ட அதில் பால் கிளாசை கொடுத்தாள் அவள்.
“இப்படி வாலே…..” என்று அவளை அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டவன், “நீனு குடிச்சியாட்டி…..” என்றான்.
“நான் ராத்திரி பால் குடிக்க மாட்டேன்…. எனக்குப் பிடிக்காது அத்தான்…..” என்றாள் அவள்.
“எனக்குந்தேன் பிடிக்காது…. நீனு குடுத்ததால வாங்கிகிட்டேன்…..” என்றவன் பாதியைக் குடித்துவிட்டு மீதியை அவளிடம் நீட்டினான்.
“ம்ம்… குடி…….”
அவள் மறுக்காமல் வாங்கிக் குடித்துவிட்டு கிளாசை மேசையின் மீது வைத்தாள்.
“என்ன அத்தான்…. இதுல எதையோ மும்முரமா பார்த்துட்டு இருந்திக…..”  என்றாள் லாப்டாப்பை சுட்டிக் காட்டி.
“ம்ம்….. எல்லாம் அந்த கோலா கம்பெனி விவகாரம் தான்…..”
“ம்ம்…. இம்புட்டுப் பெரிய விவகாரமான பிரச்சனையைப் பத்தி யாரும் யோசனையே பண்ணலியே….. நல்ல வேளை….. உங்களுக்குத் தெரிஞ்சது…. இல்லன்னா நம்ம ஊரே என்னாகியிருக்கும்….. எல்லாரும் நிலத்த வித்துப்புட்டு தொழிற்சாலை வேலைக்குப் போகத் தொடங்கிருப்பாக……” என்றாள் அவன் தோளில் சாய்ந்து கொண்டு.
“விவசாயிங்க என்ன பண்ணுவாங்க மீனுக்குட்டி…. பாவம்….. எத்தன பாடு பட்டாலும் உழவு செஞ்ச கணக்கு பார்த்தா பெருசா அவங்களுக்கு எந்த லாபமும் இல்லியே…. அப்புறம் எதுக்கு இவ்ளோ பாடுபடணும்னு தோணுறது மனுஷ இயல்பு தானே….. நானே இங்கே விவசாயத்தப் பார்க்காம வெளியூருக்கு வேலைக்குப் போனவந்தானே…..” என்றான் குற்றவுணர்ச்சியுடன்.
“ம்ம்… அதுக்கு நீங்க எம்புட்டு படிப்பு படிச்சிருக்கீய…. அதுக்காக வேலைக்கு அங்க போனிய…….. அதும், மாமா இங்க எல்லாத்தையும் பார்த்துக்குவாகன்னு நம்பித் தானே போனிய… அதுக்கு எதுக்கு உங்களக் குத்தப் படுத்தறிய…. அதெல்லாம் ஒண்ணும் தப்பு இல்லை….” என்றாள் அவள்.
“ம்ம்… இருந்தாலும் நம்ம ஊருக்குனு ஏதாவது செய்யோணும் மீனும்மா…… பருவமழை பெய்யாம வெளைச்சல் குறஞ்சாலும், அதிகமா பெய்து நஷ்டம் வந்தாலும் நம்ம விவசாயிங்க வயித்துல தானே அடிக்குது…… அதும் இல்லாம, கஷ்டப்பட்டு விவசாயம் பண்ணி விளைச்சல கொண்டு வந்தாலும் வியாபாரிங்க சொல்லுற விலைக்கு தானே விக்க முடியுது…. விளைச்சலுக்கு நல்ல விலை கிடைச்சா விவசாயத்த சந்தோஷமா செய்துட்டுப் போவாகளே….. இதுக்கெல்லாம் விவசாயிங்க மனசு குளிர்ற மாதிரி ஏதாவது ஒரு வழி கண்டு பிடிக்கணும்…..” என்றான் அவன் யோசனையுடன்.
“ம்ம்… உண்மைதான் அத்தான்….. என்னதான் அரசாங்கத்துல இருந்து விவசாயிகள்க்கு மானியமும், வட்டியில்லா கடனும் கிடைச்சாலும் அவங்க பொழப்புக்குப் பத்தலயே…. எத்தன விவசாயக் குடும்பம் வறுமைல தற்கொலை முடிவுக்குப் போயிருக்கு…..” என்றாள் அவள் வருத்தத்துடன்.
“காலங்காலமா, பரம்பரையா யாருக்கும் அடிமையாகாம தன் நிலத்துல விவசாயம் பண்ணி முதலாளியா வாழ்ந்தவன்லாம் இன்னைக்கு நிலத்தை வித்துட்டு மகனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்குதான்…. இல்லன்னா நல்லா படிச்சுட்டு வெளியூருக்கு வேலைக்குப் போயிடுதான்…. அதுக்குக் காரணம் விவசாயம் மட்டுமே செய்யுறவங்களை மத்தவங்களோட ஒப்பிட்டுப் பார்க்கும்போது நம்ம வாழ்க்கைத் தரம் உயர மாட்டேன்னுது…. அதுனால விவசாயத்த விட்டுட்டு வேற வேலைக்குப்  போகவும் துணிஞ்சிடராக….” என்றான் வருத்தத்துடன் மதியழகன்.
“உண்மைதான் அத்தான்….. நம்ம விவசாயிகள்க்கும் பொருளாதாரம் உயரணும்… அப்போ மட்டும் தான் இந்த நிலை மாறும்….” என்று நிறுத்தியவள், “அத்தான்… இதுக்கு நான் ஒரு யோசனை சொல்லட்டுமா….. தப்பா இருந்தா வேண்டாம்….” என்றாள் தயக்கத்துடன்.
“என்ன மீனுக்குட்டி…. சொல்லுடா….. நல்ல யோசனையா இருந்தா கண்டிப்பா செய்வோம்……” என்றான் அவன்.
“அத்தான்….. நம்ம கிராமத்துல எல்லாரும் சேர்ந்து உழவர் சங்கம் மாதிரி அமைக்கணும்….. மாசாமாசம் ஒரு தொகை அங்க சேமிப்பா வைக்கணும்…. நமக்கு விளைச்சல் வர்ற காய்கறிகளை ஒண்ணா நாமளே நேரடியா சந்தைல விக்கணும்….. தானியங்களை சங்கம் மூலமா மொத்தமா நல்ல விலைக்கு நேரடியா கொடுக்கணும்….. விவசாயம் மட்டுமே தொழில்னு நம்பி இருக்காம அதோட சம்மந்தப்பட்ட வேற வேலைகளையும் செய்யணும்… காய்கறிகளை பாக்கெட் செய்து அனுப்பறது, ஊறுகாய், வடகம், மோர் மிளகாய், எண்ணெய் எடுக்குறது, கயிறு திரிக்கறதுன்னு எல்லாருக்கும் ஒரு மாற்றுத் தொழில் இருக்கணும்…… இதுக்கெல்லாம் வீட்டுப் பொம்பளைங்களை கூட அனுப்பலாம்…..” சற்று நிறுத்தியவள்,
“நம்ம கிராமத்துல நல்ல நீர்வளம் இருக்கு…. விவசாயத்துக்கான கடனையும் அரசாங்கத்து கிட்ட வாங்காம, நம்மளே அதுக்கான பணத்தை நம்ம சங்கம் மூலமா நம்ம விவசாயிகள்கு வட்டியில்லாம கடன் குடுக்கணும்…. குறைந்த விலைக்கு உரங்களைக் கொடுக்கணும்…….” என்று உணர்ச்சி வசப்பட்டு சொல்லிக் கொண்டிருந்தவளை அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான் மதியழகன்.
அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு பேசுவதை நிறுத்தியவள் முகத்தில் நாணம் சூழ, “என்ன அத்தான்…. எதுக்கு இப்படி என்ன அதிசயமா பாக்குறிய….” என்றாள் கூச்சத்துடன்.
“நீனு இவ்ளோ யோசிச்சிருக்கியா…… எத்தன தெளிவா இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வை சொல்லுற….. இதை கொஞ்சம் தெளிவா யோசிச்சா கண்டிப்பா நல்ல யோசனையா தான் தோணுது…..” என்றான் அவன்.
அதைக் கேட்டு வேதனையுடன் சிரித்தவள், “எத்தனை குடும்பத்தோட வருத்தத்தையும், வேதனையையும் பார்த்திருக்கேன் அத்தான்….. அப்போல்லாம் இப்படிப் பண்ணினா இவங்க வாழ்க்கையும் கஷ்டமில்லாம சந்தோஷமா இருக்குமேன்னு நானே யோசிச்சு இருக்கேன்….. ஆனா அதுக்கான வழிமுறையும், பணமும் எங்ககிட்ட இல்லியே…. இப்போ நீங்க எதாவது பண்ணனும்னு கேட்டதாலே சொல்லுதேன்……” என்றாள் அவள்.
“ம்ம்… இதை நம்ம ஊர்ப் பெரியவங்ககிட்ட சொல்லுவோம்…. எல்லோரோட ஒத்துழைப்பும் இருந்தா தான் எதையுமே செய்ய முடியும்…. அவங்க ஒத்துகிட்டா இதுக்கான முழுப் பொறுப்பையும் நானே ஏத்துகிட்டு இதுக்கான வழிமுறையை செய்யறேன்….. அதுக்கு முன்னாடி நாம கலெக்டர் கிட்ட இன்னைக்கு மனு கொடுத்துட்டு வந்ததுக்கு என்ன பதில் வருதுன்னு பாப்போம்….. அந்தப் பிரச்னையை முடிச்சிட்டு இந்த யோசனையை சொல்லுவோம்….” என்றான் அவன்.
“ம்ம்… சரி அத்தான்……”
“சரி… நீனு படுத்து தூங்குலே….. எனக்கு இன்னும் கொஞ்ச விவரம் இணையத்துல தேட வேண்டியிருக்கு….. நான் பொறவு படுக்கேன்…..” என்றான் அவன்.
“ம்ம்… நீங்க பாருங்க….. நானும் பாக்கறேன்….” என்றாள் அவள் புன்னகையுடன்.
“நீனு என்னலே பாக்கப் போவுதே…..” என்றான் அவன் திகைப்பாய்.
“அது வந்து…. நீங்க அதையப் பாருங்க…. நானு உங்களப் பாக்கேன்னு சொல்லுதேன்…. இம்புட்டு நாளா திருட்டுத் தனமால்ல என் அத்தான ரசிக்க வேண்டி இருந்துச்சு….. இப்போ தான தைரியமாப் பார்க்க முடியுது…. நீங்க போயி சோலியப் பாருங்க…. நானு எம்ம சோலியப் பாக்கேன்….” என்றவளை இழுத்து அணைத்துக் கொண்டான் அவன்.
“அப்போ இம்புட்டு நாளா எனக்குத் தெரியாம என்னை சைட் அடிச்சேன்னு சொல்லு…..” என்றவனின் கைகள் அவள் இடுப்பில் ஊர்ந்து கொண்டிருக்க, அதில் நெளிந்தாலும் அவனுக்கு பதில் கொடுப்பதை நிறுத்தவில்லை அவள்.
“ம்ம்…. அதானே நெசம்…. நேருக்கு நேராப் பாத்து சைட் அடிக்கற போலவா இருந்திய…. என்னவோ சினிமா வில்லங்கனக்கா எப்பப் பார்த்தாலும் என்ன மொறச்சிட்டு, சேர்ந்து தண்ணி அடிக்க வரியான்னு வம்பு பேசிட்டுள்ள இருந்திய…… உம்ம நேராப் பார்த்து சைட் அடிக்க எப்புடி தைரியம் வரும்…..” என்றாள் அவள் குறும்புடன்.
“இப்ப மட்டும் உமக்கு எப்படி தைரியம் வந்துச்சு….” என்றான் அவள் முன் நெற்றியில் தன் தலையை முட்டிக் கொண்டே.
“இப்ப… எப்படி வந்துச்சுன்னு கேட்டா…. உம்ம தான், நானு என் முந்தானைல முடிஞ்சு வச்சுட்டேன்ல…. அந்தத் தைரியம்தேன்….” என்று சிரித்தாள் அவள்.
“அடிப்பாவி…. புருஷன் கிட்டயே முந்தானைல முடிஞ்சு வச்சுகிட்டேன்னு நா கூசாம சொல்லுதே…. உனக்கு எம்புட்டு தைரியம்……” என்றான் அவன் அவளது கன்னத்தில் கடித்துக் கொண்டே.
“ஆஆ….” என்று சிணுங்கியவள், “எம்புருஷன நான் என் முந்தானைல முடிஞ்சு வச்சிருக்கேன்….. இதுல உமக்கு என்ன வருத்தம்….” என்றாள் அவள்.
“ஓஹோ…. அப்போ நான் யாரு….” என்றவன் அவள் காதைத் திருக, “ஆ…. அத்தான்……” என்று அவன் கையை தட்டி விட்டாள்.
“ம்ம்… சொல்லு…… நான் யாரு….” என்றான் அவன் அவள் முகத்தை நிமிர்த்தி.
அவன் விழிகளில் தன் விழிகளைக் கலக்க விட்டவள், “நீ…. நீங்க என் உசுரு அத்தான்…….. என்னோட மனசுக்குள்ள துடிக்கிறது உங்க இதயம்…..” என்றாள் அவள் காதலுடன்.

Advertisement