Advertisement

அத்தியாயம் – 16
“வாடி… என் சீமசிறுக்கி…. இப்பத்தான் பொறந்த வூட்டுக்கு வாரதுக்கு உமக்கு வழி தெரிஞ்சுதோ…..” முன்னில் திண்ணையில் அமர்ந்து வெற்றிலையை மடித்துக் கொண்டிருந்த பேச்சிப் பாட்டி, பைக்கில் இருந்து இறங்கி உள்ளே வந்த கயலைக் கண்டதும் வரவேற்றார்.
பின்னிலேயே வந்த மதியழகனைக் கண்டு மூக்கின் மீது விரல் வைத்தவர், “அடி ஆத்தி….. இது யாரு….. நம்ம வூட்டு மாப்பிள்ளையா…. இப்படி சினிமா நடிகரு கணக்கா வந்து நிக்குறது…..” என்றார் மதியழகனைக் கண்டு.
“அப்பத்தா….. ரொம்பத்தேன் பண்ணாதிய……… என்னை மட்டும் ஏசிட்டு, எம்புருஷனை மட்டும் சினிமா நடிகருன்னு சொல்லுறியளே…. இதெல்லாம் ரொம்ப அநியாயம்….” சிணுங்கினாள் கயல்விழி.
“அதுக்கென்ன பண்ணுறது… நீ கருவாச்சில்ல…. எம்பேராண்டியப் பாரு….. நல்லா கம்பீரமா, சிவாஜி கணக்கா இருக்காருல்ல….” என்றார் வேண்டுமென்றே அவரும்.
“யாரு இவுக…. சிவாஜி மாதிரி… வேண்டாம் அப்பத்தா….. உன்னோட நொள்ளக் கண்ண வச்சிட்டு இப்படில்லாம் சொல்லாதே….. கேக்குறவங்க அழுதிருவாக….” என்றாள் கயல்.
அவர்கள் பேசுவதைக் கேட்டு வாய் விட்டு சிரித்துக் கொண்டிருந்தான் மதியழகன். பேச்சுக் குரலைக் கேட்டு வாசலுக்கு வந்த ராசாத்தி, மகள் மருமகனைக் கண்டதும் ஓடி வந்தார்.
“வாங்க மாப்புள…. நல்லாருக்கியளா…… அண்ணன், அண்ணி எல்லாம் சுகமா இருக்காகளா…… இவுக பேசுறதக் கேட்டு நீங்க ஒண்ணும் தப்பா நினைச்சுக்காதிக…. இவுக ரெண்டு பேரும் எப்பவும் இப்படித்தேன்…. பார்க்கும் போது அடிச்சுக்குவாக….. அப்புறம் கயலு இல்லாம வீட்டுல பேச்சு சத்தமே இல்லன்னு அத்த புலம்பிட்டு இருப்பாக…. நீங்க உள்ள வாங்க…..” என்றதும் மதியழகன் வீட்டுக்குள் நுழைந்தான்.
“கயலு….. நல்லாருக்கியா புள்ள…..” என்றார் மகளின் கையைப் பிடித்துக் கொண்டு.
“ம்ம்…… எனக்கென்ன….. ராணியாட்டம் இருக்கேனாக்கும்….. அப்பத்தா…… என்னப் பாக்கணும்னு இருந்தா அம்மாவக் கூட்டிட்டு ஒரு எட்டு வூட்டுக்கு வர வேண்டியது தான….. இல்லன்னா மருது அண்ணங்கிட்ட சொல்லிவுட வேண்டியதுதான…… இதுக்கு எதுக்கு புலம்போணும்…..” என்றவளின் கையைப் பற்றிக் கொண்டவர்,
“நீ எப்புடி இருக்க புள்ள…. நான் சொன்ன மாதிரி உம்புருஷனை முந்தானைல முடிஞ்சு வச்சுகிட்ட போலிருக்கு….. மாப்புள முகத்துல உன்னப் பார்த்தாலே சூரியன் உதிக்குது….” என்றார் கிசுகிசுப்பாய் சிரித்துக் கொண்டே.
அதைக் கேட்டதும் கயலின் முகம் தாமரையாய் மலர, அதை ரசித்துக் கொண்டே, “உன் அப்பத்தாக்கு எப்போ, எதப் பேசணும்னு வெவஸ்தையே இல்ல….. உள்ளார வாலே…” என்று அவளை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் ராசாத்தி.
சிறிது நேரம் எல்லாரும் பேசிக் கொண்டிருந்துவிட்டு, ராசாத்தி விருந்துக்கு ஏற்பாடு செய்ய பாட்டியுடனும், அன்னையுடனும் பேசிக் கொண்டே கயலுக்கு நேரம், சந்தோஷமாகக் கழிந்தது.
மகளும் மாப்பிள்ளையும் வந்தவுடனேயே ராசாத்தி, கணவருக்கு தெரிவித்திருந்ததால் அவரும் மதிய உணவுக்கு வீட்டுக்கு வருவதாகக் கூறிவிட்டார்.
அவர்கள் மூவரும் அடுக்களையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, ஹாலில்  காப்பியைக் குடித்து முடித்தும், கொட்டாவி விட்டுக் கொண்டு பாவமாய் அமர்ந்திருந்த மதியழகனைக் கண்டு பேச்சிப் பாட்டிக்கு சிரிப்பு வந்தது,
“ஏலே….. கயலு….. எள்ளுதான் எண்ணைக்கு காயுது…. எலிப்புழுக்க என்னத்துக்குலே காயுது…. உன் வூட்டுக்காரர உம்ம ரூமுக்குக் கூட்டிட்டுப் போயி கொஞ்சம் ஓவ்வெடுக்க சொல்லுலே…..” என்றார் பேச்சிப் பாட்டி.
“இருந்தாலும் உமக்கு ரொம்பதான் லொள்ளு அப்பத்தா….. எம்புருஷன எலிப்புழுக்கன்னா சொல்லுதே….. உன்ன வந்து வச்சுக்குதேன்….” என்று சிலுப்பிக் கொண்டே எழுந்து சென்றவளைக் கண்டு அவர் சிரித்தார்.
“அத்தான்…… வாங்க மாடிக்கு போவோம்……. நீங்க கொஞ்சம் ஓய்வெடுங்க….”
“ம்ம்….” என்றவன், கொட்டாவியை அடக்கிக் கொண்டே அவள் பின்னால் சென்றான். மாடியில் அவளது அறைக்கு அவனை அழைத்துச் சென்றவள் கதவைத் திறந்து விட்டாள்.
“நீங்க வேணும்னா கொஞ்சம் உறங்குங்க அத்தான்….. அலுப்பா இருக்கும்ல…. அப்பா வந்த பொறவு பேசிட்டு இருக்கலாம்…. அது வரைக்கும் ஓய்வெடுங்க……”
“மீனுக்குட்டி…. நீனுகூட ரொம்பக் களைப்பாதேன் தெரியுதே….. நீயும் கொஞ்சம் என்னோட சேர்ந்து ஓய்வெடுக்கறியாலே…….”
“ஹூக்கும்…. என் அத்தானுக்கு ஆசையப் பாரு…..” என்றவள் அவனது முதுகில் கை வைத்து செல்லமாய்த் தள்ளிக் கொண்டே அறைக்குள் நுழைந்தாள்.
உள்ளே நுழைந்ததும் சுவரில் புகைப்படமாய் தொங்கிக் கொண்டிருந்த கயலின் சிறுவயது போட்டோ அவனது கண்ணில் பட, அதை ஆசையோடு கையில் எடுத்தான்.
அதைத் தடவிக் கொண்டிருந்தவனை சிரித்துக் கொண்டே நோக்கியவள், “ஏன் அத்தான்….. போட்டோவ எதுக்கு இந்தத் தடவு தடவறிய……” என்றாள் குறும்புடன்.
“அதுவா….. நீ அப்பவே எம்புட்டு அழகா இருக்கேன்னு பாக்கேன்……. என் மீனுக்குட்டி…..” என்று அந்த போட்டோவை அவன் முத்தமிட, அவளது கன்னங்களில் ரோஜாப்போ பூத்தது. அதை ரசித்துக் கொண்டே அவளை தன்னருகே இழுத்தவன், அவளது முகத்தில் விரலால் கோலம் போட்டுக்கொண்டே அந்தப் பாடலை முணுமுணுத்தான்.
“அம்மாடி உன் அழகு செம தூளு……
உன்னக் கண்டா பொழுதும் திருநாளு…..
உன்னப் பார்த்துதான் தடுமாறுதேன்….
புயல் காத்துல பொரியாவுதேன்……”
“ஹஹஹா…… அத்தான்….. என்ன இது…. சினிமாப் பாட்டெல்லாம் கலக்குறிய…… நான் அம்புட்டு ஒண்ணும் அழகு இல்ல…..” என்றவள், அவன் நெஞ்சில் செல்லமாய் குத்தினாள்.
“யாருலே சொன்னது…. எம்மீனுக்குட்டியோட கண்ணுல தெரியுற சிரிப்பு ஒண்ணு போதும்லே….. உன்னப் பேரழகியாக் காட்டுறதுக்கு…… மீனு மாதிரி, அங்கிட்டும் இங்கிட்டும் ஓடுற கண்ணு, எடுத்து வச்ச போல அளவான மூக்கு, சின்னதா அப்படியே கடிச்சுத் தின்னனும் போலத் தோணுற உதடு…. நீ கோபப்பட்டு பார்க்கும்போது கூட, என்னக் காதலாப் பாக்குற போலதேன் எனக்குத் தோணும்….. உன்ன விட அழகா எனக்கு வேற யாரயும் தோணலடி… எம்மீனுக்குட்டி…..” என்றவன் அவள் மூக்கில் உரச, கணவனின் பேச்சில் மனம் ரக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்தவள், அவனது விரலின் ஸ்பரிசத்தில் உருகி நின்றாள்.
அவளைக் காதலோடு அணைத்துக் கொண்டவன், அவளது உதட்டை நெருங்க, படபடவென்று அடித்த நெஞ்சத்தின் ஓசையை வெளியே உணர்ந்தாள் அவள்.
கண்ணை இறுக மூடிக் கொண்டவளை ஒன்றும் செய்யாமல் விலகினான் அவன்.
அவனது இதழ் தீண்டலுக்காய் காத்திருந்தவள் சிறு ஏமாற்றத்துடன் கண்ணைத் திறக்க, அவள் விழிகளைக் கண்டவன் சட்டென்று அவளை இழுத்து அழுத்தமாய் முத்தமிட்டான். அந்த முத்தத் தீண்டலில் மொத்தமாய்க் கரைந்தாள் அவள்.
தனை மறந்து அவன் கைக்குள் பொம்மையாக நின்றவளை மெல்ல விலக்கியவன், “மீனுக்குட்டி….. இப்ப இது போதும்…… பாக்கி வீட்டுல போயிப் பார்த்துக்கலாம்….” என்று அவள் காதில் கிசுகிசுத்தான்.
அதைக் கேட்டு செவ்வானமாய் சிவந்தவள், “ச்சீ…. போங்க அத்தான்……” என்று சிணுங்கிக் கொண்டே அவனிடமிருந்து விலகி,
“நான் கீழ போவுதேன்….. நீங்க கொஞ்சம் படுத்து ஓய்வெடுங்க…..” என்று கூறிக் கொண்டு சென்றவளை மனம் நிறையப் பார்த்துக் கொண்டிருந்தான் மதியழகன்.
அவனது நெஞ்சம் முழுதும் அவளோடு உள்ள காதலில் நிறைந்து கிடந்தது.
அவளது சிறுவயது போட்டோவை மீண்டும் ரசித்துவிட்டு சுவரில் மாட்டியவன், மனதுக்குள்,
“என் மீனுக்குட்டியை எப்பவும் இப்படியே சந்தோஷமா வச்சுக்கணும்…..” என்று தோன்ற, அவனது மனது ஏதேதோ யோசித்து கணக்குகளைப் போடத் தொடங்கியது.
மதிய உணவுக்கு சுந்தரேசனும் வந்து சேர அனைவரும் சாப்பிட்டு முடித்துப் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
“மாப்புள….. இப்படி அப்பப்போ நீங்கள்ளாம் வந்துட்டுப் போனாதான் வீடே கலகலன்னு இருக்குது…..” என்றார் சுந்தரேசன் சந்தோஷத்துடன்.
“அதுக்கென்ன மாமா…. இப்ப இதே ஊருல தானே இருக்கோம்…. அப்பப்போ வந்துட்டுப் போனாப் போவுது……. சென்னைக்குப் போனா தான் எப்பவாவது வர மாதிரி இருக்கும்…..” என்றான் மதியழகன்.
“என்ன மாப்புள்ள சொல்லறிய…… நீங்க மறுபடியும் சென்னைக்குப் போவப் போறியளா….. அப்ப இங்கிருக்குற வயலு, தோட்டமெல்லாம்….” என்று இழுத்தார் சுந்தரேசன்.
“அதெல்லாம் எப்பவும் போல அப்பாவே பாக்கட்டும் மாமா….. எப்படில்லாமோ தடுமாறிப் போன என் வாழ்க்கைய உங்க பொண்ணு வந்து தான் மீட்டுக் குடுத்திருக்கா….. அவளை சந்தோஷமா வச்சுக்கணும்னு ஆசப்படுதேன்….. அதுக்கு இங்கிருந்து கொஞ்சம் மாறி இருந்தா நல்லாருக்கும்னு எம்மனசுக்கு தோணுது……” என்றான் அவன்.
“ம்ம்… நீங்க இவ்ளோ சீக்கிரம் இப்படி மாறுவீங்கன்னு நாங்க யாருமே நினைச்சுக் கூடப் பார்க்கல மாப்புள….. உண்மைய சொல்லோணும்னா இந்தக் கண்ணாலத்துல எங்க யாருக்குமே முழு திருப்தி இல்லாம தான் உங்களுக்கு கட்டிக் குடுத்தோம்….. அப்பவும் கயலுதேன் சொன்னா….. என்னோட வாழ்க்க சந்தோஷமா இருக்கும்…. அவர் மாறுவார்னு எனக்கு நம்பிக்க இருக்குன்னு….. அவ நம்பிக்கைய நீங்க காப்பாத்திட்டீங்க மாப்புள…… கரும்புக்கு கணு குத்தம்னு சொல்லுற போல உங்க நல்ல குணத்துக்கு அந்தப் பழக்கம் மட்டுந்தேன் குறையா இருந்துச்சு….. இப்ப அதையும் விட்டுட்டு நீங்க இப்படிப் பேசுறதக் கேக்கும்போது எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு….. ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமா இருக்கணும்….” என்றார் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு.
“வருத்தப் படாதிய மாமா…. இனி அந்தத் தப்பை நான் பண்ண மாட்டேன்….. அதுக்கு தான் இங்கிருந்து சென்னைக்கு போகலாம்னு இருக்கேன்…. ஒரு மாத்தம் நல்லது தான….. இப்பவும் என்னோட பழைய கம்பெனி ஓனர் புதுசா ஒரு பிரான்ச் தொடங்கி, என்னய அங்க வந்து சேரச் சொல்லி கூப்பிட்டு தான் இருக்காக….. அதான்… கயலையும் கூட்டிட்டு அங்கே போவலாமானு ஒரு யோசனை தோணுது……” என்றான் அவன்.
“ஓ….. வூட்டுல சொல்லிட்டியளா….. மாப்புள……”
“அதெல்லாம் அவுக சம்மதிச்சிருவாக மாமா…… ஒண்ணும் பிரச்சன இல்ல….. எதுக்கும் அம்மாகிட்ட ஒரு வார்த்த கேட்டுட்டு நான் ஓனர் கிட்ட சொல்லுதேன்….” என்றான் அவன்.
“ம்ம்…… சரி மாப்புள….. உங்களுக்கு எது சரின்னு தோணுதோ செய்யுங்க….. எங்கிருந்தாலும் ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா சரி……” என்றார் அவர்.
அவன் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த கயலின் மனதில், “நம்ம ரூம்ல போயி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க சொல்லி அனுப்பினா, போதி மரத்தடி போல அத்தானுக்கு ஏதோ யோசனையெல்லாம் தோணியிருக்கே…. இதெல்லாம் சரிப்பட்டு வருமா…..” என்று யோசித்துக் கொண்டிருந்தாள் அவள்..
“அப்புறம் மாப்புள…… உங்க சோளக்காட்ட டவுனு ஆளுகளுக்குக் குடுக்கப் போறதா கேள்விப்பட்டேன்….. அப்படியா…” என்றார் சுந்தரேசன். 
“ம்ம்… ஆமாம் மாமா….. அம்மா சொல்லிட்டு இருந்தாக….. யாரோ வெலைக்கு கேக்குறதா….. நான் அவுங்களையே பார்த்து முடிவு பண்ணிக்க சொல்லிட்டேன்…..”
“ம்ம்…. அந்த டவுனுக்கார ஆளுக நம்ம ஊருல வாங்குன எடம் பத்தாதுன்னு நம்ம எண்ண மில்லையும், சூரியகாந்தித் தோட்டத்தையும் கூடத் தர முடியுமான்னு கேட்டாக…… எங்களுக்குன்னு இருக்குறது அது மட்டுந்தேன்…. அதையும் குடுத்துட்டு இங்க என்ன பண்ண….. நான் முடியாதுன்னு சொல்லிப் புட்டேன்…..”
அவர் சொன்னதைக் கேட்டதும் அவன் மனதில் ஏதோ உறுத்தியது.
“ம்ம்…. எதுக்கு இப்படி நம்ம எல்லார் விளைச்சல் நெலத்தயும் கேக்குறாக…. எதுக்கு இத்தன இடம்….. இதுல என்ன பண்ணப் போறாங்களாம்……” என்றான் அவனுக்கு அதைப் பற்றி ஒன்று தெரியாததால்.
“உங்களுக்கு விஷயமே தெரியாதா மாப்ள….. எல்லார் எடத்தையும் வாங்கி, இங்க எதோ குளிர்பான தொழிற்சாலை கட்டப் போறாகளாம்…. அந்த கோலா கம்பெனி இருக்குல்ல…… அதோட  ஆளுங்க தான் இதையும் வாங்கிட்டு இருக்காக…..” என்று விளக்கினார் அவனது மாமனார்.
அதைக் கேட்டு நெற்றியை சுளித்தான் அவன்.
“என்னது விளைச்சல் நெலத்துல தொழிற்சாலையா…… என்ன சொல்லுறிய மாமா….. அப்போ நம்ம கிராமத்துல தொழிற்சாலை வரப் போவுதா………” என்றான் அதிர்ச்சியுடன்.
“ம்ம்…. என்ன மாப்புள…… இப்படி அதிர்ச்சியாவுறிய…… நம்ம ஊருல ஏரி, குளம், வாய்க்கால்னு நல்லா பசுமையா இருக்குல்ல…. அதான்….. நல்லா நீர்வளம் இருக்கும்னு நினைச்சு இங்க வாங்கத் திட்டம் போடுறாக போலிருக்கு…… என்னோட தோட்டத்து வழியாப் போவுற வாய்க்கால் வழியா தான் எல்லா வயலுக்கும் தண்ணி போவுது….. அதுக்கு தான் நம்ம தோட்டத்தையும் கேட்டிருப்பாகளோன்னு எனக்குத் தோணுது……” என்றார் அவர்.
அவர் சொன்னதைக் கேட்டதும் அவன் மனதுக்குள் இருந்த உறுத்தல் பெரிதானது.
மௌனமாய் யோசித்துக் கொண்டிருந்தவனைக் கண்ட கயல், “என்ன அத்தான்….. ஏதாவது பிரச்சனையா……. இங்கே தொழிற்சாலை வந்தா நிறையப் பேருக்கு வேல கிடைக்கும்னு எல்லாரும் காத்திட்டிருக்காக…… நம்ம ஊரும் டவுனு மாதிரி பெரிய ஊரா ஆயிரும்னு வள்ளி கூட சொல்லிட்டு இருந்தா….. எனக்கென்னவோ இது சரின்னு தோணல…… இருக்குற விவசாய நிலத்துல எல்லாம் தொழிற்சாலை கட்டிப்புட்டா அப்புறம் வருங்காலத்துல சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாக……” என்று ஆதங்கத்துடன் கூறினாள் கயல்விழி.

Advertisement