Advertisement

“ம்ம்….. அது சரி….. அத்தான்….. ஆனா நான் உங்களப் பிடிக்கும்னு சொன்னதே இல்லியே…..”
“ம்ம்…. நீ வார்த்தைல சொல்லலேன்னா என்ன…. உன்னோட கண்ணுல எத்தனையோ தடவை உன் விருப்பத்த சொல்லிட்டியே…. கண்ணாலமாகி அடுத்த நாள் விருந்துக்குப் போகும்போது நீனு பொட்டு வைக்க மறந்துட்டேன்னு, நான் வைச்சுட்டுப் போக சொன்னதும், உன் கண்ணுல தெரிஞ்ச வலியுல, நீ பழசு எதையும் மறக்கலன்னு எனக்குத் தோணுச்சு….. கோவில்ல அதே போல நான் பொட்டு வச்சிட்டு நீனு, இப்பவும் என் மீனுக்குட்டியானு கேட்டதும், உன் வாய்க்கு முன்னால உன் கண்கள், ஆமாம்……. நான் உங்க மீனுக்குட்டி தான்னு உறுதியா சொல்லுச்சு….”
“ம்ம்… அப்புறம் எதுக்கு அத்தான்….. அப்படி நடந்துகிட்டிய…. அன்னைக்கு நான் உங்ககிட்ட எல்லாத்தையும் மனசு விட்டுப் பேசணும்னு எத்தனை ஆசையாக் காத்திட்டு இருந்தேன் தெரியுமா…..”
“ம்ம்…. எனக்குன்னு ஒருத்தி இருக்கா…. அவளுக்காக நான் வாழணும்னு நினைச்சப்போ தான்…. உன் அக்கா புருஷன், உன்னை ஒரு தியாகி மாதிரி சொல்லி, நீ அவுங்க கண்ணாலம் நடக்கறதுக்கு, பணத்துக்கு வேண்டி என்னைக் கட்டிகிட்டதா சொன்னான்…… அதைதான் என்னால தாங்கிக்க முடியல…. சாரிமா…”
வருத்தத்துடன் மீண்டும் எதையோ சொல்லப் போனவனது வாயை மூடியவள்,
“போதும் அத்தான்….. இனி எதுவும் சொல்ல வேண்டாம்….. நமக்குள்ள இனி எந்த ஒளிவு மறைவும் கிடையாது….. உங்க மேல அன்பு இருந்தாலும் அதை ஒதுக்கி நீங்க ஒரு குடிகாரன்னு மனசுல சொல்லி சொல்லிப் பதிய வச்சு என்னை நம்ப வச்சிருந்தேன்….. உங்களைக் கண்ணாலம் பண்ண சந்தர்ப்பம் தானா அமைஞ்ச போது அதை சந்தோஷமா ஏத்துகிட்டேன்…… எனக்காக நீங்க மாறுவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு…..நம்ம மனசுல இருந்த காதல் உங்களை மாத்திருச்சு….” என்றவள் அவன் தோளில் சந்தோஷத்துடன் சாய்ந்து கொண்டாள்.
“மீனுக்குட்டி…… என் செல்லமே…. ஒரு முறை உன்னைத் தொலைத்து, நான் எதிர்பார்க்காம மீண்டும் நீ எனக்குக் கிடைச்சே…. உன் மனசுலயும் நான் இருக்கேன்னு தெரிஞ்ச பின்னால நான் எப்படி மாறாம இருப்பேன்…..” என்றவன் அவள் நெற்றியில் அன்புடன் முத்தமிட்டான்.
“அத்தான்….. எனக்காக நீங்க இன்னும் ஒரு விஷயத்தை செய்யணும்……”
“என்னட்டி செய்யோணும்….. சொல்லு….”
“மாமா கூட நீங்க பேசோணும்…..”
“என்னது….” என்று சட்டென்று குரலை உயர்த்தியவன், “மீனுமா…… அந்தாளு பண்ணின பாவத்துக்கு நான் அவரோட பேசாம இருக்கறது தான் சரியான தண்டனை…..”
“இல்ல அத்தான்…. பாவம் அத்த…. ஒரே ஒரு மகனப் பெத்துட்டு புருஷனுக்கும் புள்ளைக்கும் நடுவுல கெடந்து தவிக்குறாக……. மாமாவும் செய்த தப்பை எண்ணி வருந்திட்டு தான் இருக்காக….. மன்னிப்பை விடப் பெரிய தண்டன இருக்கா அத்தான்…..” என்றாள் பெரிய மனுஷியாக.
அவளையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
“என்ன அத்தான்….. அப்படிப் பாக்கறிய…..”
“நான் பார்த்த மீனுக்குட்டி எங்கிட்ட கேள்வியா கேட்டுட்டு இருப்பா… இந்த மீனுக்குட்டி எனக்கே ஆலோசனை சொல்லுதா…..”
“பின்ன…. அன்னைக்குப் நீங்க பார்த்த மாதிரி சின்னப் பொண்ணாட்டமா இருந்தா குழந்தையக் கண்ணாலம் பண்ணி வச்சுட்டாகன்னு இல்ல சொல்லிருப்பாக….. நாங்களும் வளர்ந்து கொமரி ஆகிட்டம்ல…..” என்றாள் சிரிப்புடன்.
“அப்படியா…..” என்றவன் அவளை மேலிருந்து கீழாகப் பார்க்க அவள் நெளிந்தாள்.
“என்ன அத்தான்… இப்படிப் பாக்குறிய……”
“இல்ல…. கொமரியாகிட்டேன்னு சொன்னயில்ல…. அது நெசந்தானான்னு பார்த்தேன்….. நீனு சொன்னது ரொம்ப சரித்தான்…..” என்றவனின் தோளில் செல்லமாய் அடித்தாள் அவள்.
“சரி…. அத்தான்…. வாங்க…. அத்தகிட்டப் போவோம்… உங்களப் பார்க்கணும்னு சொல்லிட்டு இருந்தாக…..”
“ம்ம்… நான் குளிச்சிட்டு வந்திடுதேன்…. அம்மாகிட்ட நெறையப் பேச வேண்டி இருக்கு…” என்றவன் குளியலறைக்குள் செல்ல, அவள் அடுக்களைக்கு நகர்ந்தாள்.
அடுத்த நாள் காலையில் கோவிலுக்கு செல்வதற்காய் மதி புறப்பட்டுக் கொண்டிருக்க அவனுக்கு முன்னே புறப்பட்டு வந்தாள் கயல்விழி.
சின்ன சரிகை வைத்த கிளிப் பச்சை நிற மைசூர் சில்க் சேலை அவளை பேரழகியாய் காட்டியது. மருமகளை ரசித்துக் கொண்டே அவளருகில் வந்தார் லச்சுமி.
“என்னட்டி… கோவிலுக்குக் கெளம்பிட்டியா…. மதி எங்க……. .”
“அத்தான் புறப்பட்டுகிட்டு இருக்காக….. அத்த….” என்றவள், மாமா சாப்பிட்டு கிளம்பிட்டாகளா…..” விசாரித்தாள்.
அப்போது முத்துப்பாண்டி சாப்பிட்டு முடித்து கையை டவலால் துடைத்துக் கொண்டே வெளியே வர, அவள் புறப்பட்டு நிப்பதைக் கண்டவர், “அட….. எங்க தாயி கெளம்பிட்டே…..” என்றார்.
“கோவிலுக்கு தான் மாமா……..”
“ம்ம்… பாத்து பத்திரமா போயிட்டு வாங்க….. ஏட்டி…. நான் அரிசி மண்டிக்கு கெளம்புதேன்….  உம்புள்ள கிட்ட அந்த எடத்தைப் பத்திக் காதுல போட்டு வை…..”
“ம்ம்… சரிங்க…. கேட்டு வைக்கேன்…” என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்தான் மதியழகன்.
தந்தை நிற்பதைக் கண்டதும் சட்டென்று அவன் அங்கிருந்து சென்றுவிட, முத்துப் பாண்டியின் முகத்தில் ஒரு குற்றவுணர்ச்சி மின்னி மறைந்தது.
லச்சுமியின் மனம் அதைக் கண்டு வருந்த, மாமனை சகஜமாக்க எண்ணிய கயல், “மாமா….. உங்ககிட்ட நான் ஒண்ணு கேட்டா செய்வியளா…..” என்றாள்.
“என்ன தாயி…. கேக்கப் போவுத….. சின்னப் புள்ளையா இருக்கும்போது எங்கிட்ட சீனிப் புளியங்கா வாங்கித் தர சொல்லுவே….. அத வாங்கிட்டு வரச் சொல்லப் போவுதியா…..” என்றார் பழைய நினைவுகள் கண்ணில் மின்ன.
அதைக் கேட்டதும் கயலின் முகம் மலர, “உங்களுக்கு அதெல்லாம் நினைவிருக்கா மாமா……” என்றாள் வியப்புடன்.
“ம்ம்…. அந்தக் காலத்த மறக்க முடியுமா தாயி….. எம்புட்டு சந்தோஷமா இருந்துச்சு…. இந்தப் பணமும், சொத்தும் எப்ப எங்கிட்ட வந்துச்சோ….. அப்பவே என்னோட சந்தோசமும், நல்ல குணமும் எல்லாம் என்ன விட்டுப் போயிருச்சு…. ம்ம்…… இனி அதெல்லாம் யோசன பண்ணி என்ன பண்ண…..” என்றார் வருத்தத்துடன்.
“மாமா…… வருத்தப் படாதிய…… அத்தான் மனசு மாறி உங்களோட பேசத்தான் போறாக…. கொஞ்சம் பொறுமையா இருங்க…..” என்றவள், “மாமா…. எனக்கு சீனிப் புளியங்கா வாங்கிட்டு வருவியளா…….” என்றாள் சிரிப்புடன்.
அதைக் கேட்டு முத்துப் பாண்டியின் முகத்தில் சிரிப்பு ஒட்டிக் கொள்ள, அவளது தலையில் கைவைத்து அன்போடு தடவியவர், “ஹஹா….. வெளையாட்டுப் புள்ள….. சரி… தாயி….. வாங்கிட்டு வருதேன்….” என்றவர் கிளம்பினார்.
அவர் சென்றதும் வேஷ்டி சட்டையில் கம்பீரமாய் வெளியே வந்த மதியழகனைக் கண்டு அசந்து போனார் லச்சுமி.
“எம்புள்ள இம்புட்டு அழகனா…….” என்றவர், ரெண்டு பேரையும் ஒன்றாக நிறுத்தி, “எப்பவும் நீங்க சந்தோஷமா இருக்கணும்…. என் கண்ணே பட்டிருக்கும்….. கோவிலுக்குப் போயிட்டு வாங்க…. திருஷ்டி சுத்திப் போடுதேன்….” என்றார்.
“அம்மா….. நாங்க போயிட்டு வரோம்….” என்றவன், பைக்கை எடுத்தான்.
“ஏன் தம்பி….. இனியாவது ஒரு காரை வாங்கலாம்ல….. உங்க அப்பாருக்கு தான் காரோட்டத் தெரியாது….. உமக்கு தெரியும்ல…. பொண்டாட்டிய காருல உக்கார வச்சுக் கூட்டிட்டு போக வசதியா இருக்கும்ல….” என்றார் மகனிடம்.
“ஹூம்…. அப்புறம் எங்க போனாலும் காருல உம்மையும் சேர்த்துல்ல கூட்டிப் போவணும்…… எங்களுக்கு பைக்கே போதும்மா…..” என்றவனை, “அடத் திருட்டுப் பயலே…..” என்று சிரித்துக் கொண்டே செல்லமாய் முதுகில் அடித்தார் லச்சுமி.
அவன் கூறியதைக் கேட்டு சிரித்துக் கொண்டே அவன் பின்னில் பைக்கில் முதன் முதலாய் ஏறி அமர்ந்தாள் கயல்விழி.
அவரிடம் விடைபெற்றதும் கோவிலை நோக்கி வண்டியை செலுத்தத் தொடங்கினான் மதியழகன். ஒன்றும் பேசாமல் அமைதியாய் எதையோ யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளைக் கண்ணாடியில் நோக்கியவன், அவளை அழைத்தான்.
“மீனுக்குட்டி…….”
“ம்ம்…. சொல்லுங்க அத்தான்……”
“நமக்குள்ள தான் எல்லாம் பேசி தெளிவாகிட்டோம்ல…. இனியும் இந்த இடைவெளி தேவைதானா……” என்றான்.
புரியாமல் குழம்பியவள், “என்ன சொல்லுறிய அத்தான்……” என்றாள்.
“பின்ன இம்புட்டு தள்ளி உக்கார்ந்திருக்க…… பக்கத்துல வந்து அத்தான கெட்டியாப் பிடிச்சிட்டு உக்காருவியா….. அத வுட்டுட்டு……” என்று அவன் சிரிக்க,
“அத்தான்….. நாம போறது கோவிலுக்கு…. அது நினைவில இருக்கட்டும்….” என்று சிரித்தாள் அவள்.
“அதுக்கு நீ எம் பொஞ்சாதி இல்லன்னு ஆயிருமா…..” என்றவன், வேண்டுமென்றே வழியில் ஒரு குழியில் வண்டியை இறக்கி ஏத்த, அவனை நெருங்கி தோளில் கை வைத்து அமர்ந்திருந்தாள் அவள்.
“ம்ம்… இது ஓகே….” என்றவனை முதுகில் செல்லமாய்க் குத்தினாள் கயல்விழி.
“என்னட்டி…. கொஞ்சம் கூட மரியாதை இல்லாம புருஷன அடிக்கறவ…..”
“எம்புருஷன்…. நான் அடிக்கேன்… உமக்கென்ன….. வழியைப் பார்த்து வண்டிய ஓட்டும்….” என்றாள் அவள்.
எதிரில் மருது சைக்கிளில் வந்து கொண்டிருக்க அதைக் கண்டவள், “அத்தான்….. மருது அண்ண வராக…. கொஞ்சம் வண்டிய நிறுத்துங்க……” என்றாள்.
கயலைக் கண்டதும் மருதுவின் முகம் மலர்ந்தது.
“கயலு….. எப்படி தாயி இருக்க…… மாப்புள….. நல்லாருக்கியளா….. மாமா, அத்த எல்லாம் நல்லாருக்காகளா…… எங்கயோ புறப்பட்டிய போலருக்கு…..” என்று சந்தோஷத்துடன் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான் அவன்.
“கோவிலுக்குப் போவுதோம் மருதண்ணே….. வூட்டுல அம்மா, அப்பா, ஆத்தால்லாம் எப்படி இருக்காக….” ஆவலுடன் விசாரித்தாள் கயல்.
“ம்ம்… எல்லாரும் சுகமா இருக்காக….. வூட்டுக்கு ஒரு எட்டு வந்துட்டுப் போகலாமுல்ல…. ஆத்தா எப்பவும் உன்னத்தான் சொல்லிட்டு இருக்கும்…..” என்றான் மருது.
“ம்ம்…. கோவிலுக்குப் போயிட்டு வீட்டுக்கு வரேண்ணே…..” என்று அவனிடம் விடைபெற்று வண்டியை எடுத்தான் மதியழகன்.
கோவிலுக்கு சென்று பூஜையை முடித்துவிட்டு அவர்களுக்குப் பிடித்தமான பிள்ளையார் கோவிலில் சிறிது நேரம் இருந்துவிட்டு பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருந்தனர். கயலின் மனதில் இருந்த கலக்கங்கள் எல்லாம் மறைந்து சந்தோசம் மட்டுமே நிறைந்திருந்தது. மதியின் மனதிலோ அவனது மீனுக்குட்டி மட்டுமே நிறைந்திருந்தாள்.
அங்கே கோவிலில் இருந்து கிளம்பும்போது கோவிலுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள் காயத்ரி. அவளைக் கண்டதும் சந்தோஷத்துடன் அவளிடம் சென்றாள் கயல்.
“கயலு…. நன்னா இருக்கியா….. நன்னாருக்கேளா……” என்று இருவரிடமும் காயத்ரி நலம் விசாரிக்க அவளை விசாரித்தாள் கயல்.
“உங்க வியாபாரம் எல்லாம் எப்படிப் போவுது காயத்ரி அக்கா……”
“பரவால்லை கயலு…… கொஞ்சம் பொம்மனாட்டியளை வச்சு, கொஞ்சம் பெரிய லெவல்ல ஊறுகாய், வடாம், எல்லாம் செய்து கடைகளுக்கு சப்ளை பண்ணினா நன்னாப் போகும்னு தோணறது…. என்னைப் போல ஆதரவு இல்லாதவாளுக்கும் ஒரு உபகாரமாவும் இருக்கும் பாரு….. அதுக்கு தான் ஒரு லோனுக்கு அலஞ்சிண்டு இருக்கேன்……. சரியாக மாட்டேங்கறது……” என்றாள் காயத்ரி.
“ஓ…. அப்படியா அக்கா….” என்றவளின் மனதுக்குள் சட்டென்று எதோ ஒரு யோசனை தோன்ற, “சரிக்கா….. நீங்க போயி சாமி கும்புட்டு வாங்க….. நான் உங்க வீட்டுக்கு அப்புறம் வந்து இதப் பத்தி பேசுதேன்….. நாங்க கிளம்பட்டுமா….” என்று விடை பெற்றாள்.
“அத்தான்…..” வண்டியில் செல்கையில் முதுகில் சுரண்டியவளைக் கண்டு திரும்பினான்.
“சொல்லு மீனுக்குட்டி…..”
“அப்படியே அம்மாவ ஒரு எட்டுப் பார்த்திட்டு போவோமா……”
“அது என்ன…. ஒரு எட்டு….. இன்னைக்கு மதியம் எம்ம அத்த கையால சாப்பிட்டுதேன் போவுதோம் சரியாட்டி….” என்றவன், வண்டியை கயலின் வீட்டை நோக்கி விட்டான்.
————————————————————————————————————————
எனக்கும் உனக்குமான
மௌனத்தை நமக்கான
நினைவுகளால் நிரப்பி மீண்டும்
உயிர்க்கிறது காதல்…..
இல்லாதது போல் இருந்து
தொலைந்தது போல் ஒளிந்து
காணாதது போல் மறைந்து
ஒரு நொடியில் மீண்டும்
உயிர்க்கிறது காதல் பூ…..
மறந்து போக காதல் நினைவல்ல
மறைந்து போக காதல் வலியல்ல
மலர்ந்து வாடக் காதல் பூவல்ல
மனசுக்குள் மலர்ந்து
மனமெங்கும் மணத்து
மனதோடு கலந்து விடுகிறது காதல்…..
தேடலில் தொடங்கி,
தேடலில் தொலைந்து
தேடலிலேயே முடிந்தும் போகிறது
தேடிக் கொண்டிருக்கும் நமது காதல்…..

Advertisement