Advertisement

அத்தியாயம் – 15
அடுத்த நாள் காலையில் அடுக்களையில் காப்பி கலந்து கொண்டிருந்த லச்சுமி, குளித்து புத்தம் புது மலராக அடுக்களைக்கு வந்த மருமகளை ஆச்சர்யத்துடன் பார்த்தார்.
“அடி ஆத்தி…. நேத்து எழுந்திருக்க மாட்டாம முறிச்சுப் போட்ட மரங்கணக்காப் படுத்துக் கெடந்தவ….. இன்னைக்கு, இப்பப் பறிச்ச ரோசாவாட்டம் தெம்பா வந்து நிக்கற…. இது என்னட்டி….. மரிமாயமா இருக்கு……” என்று வாயைத் திறந்தவரின் அருகில் வந்து அவர் தோளைப் பின்னிலிருந்து அணைத்துக் கொண்டாள் கயல்விழி.
“அதெல்லாம் அப்படித்தான் அத்த…… இதுக்கே இப்படி அசந்து போயிட்டியன்னா இன்னும் நான் சொல்லப் போறதக் கேட்டு என்ன பண்ணப் போறியளோ……”
“என்னட்டி சொல்லுதே….. உனக்கு காச்ச சரியாப் போச்சா…… குளிச்சிட்டு வந்து நிக்கவ……” என்றவர் அவள் கழுத்தில், நெற்றியில் கை வைத்துப் பார்க்க, காய்ச்சல் இல்லாமல் சாதாரணமாய் இருந்தது.
“அத்த….. மேலுக்கு தான் குளிச்சேன்…… பயப்படாதிய…. இப்படி வந்து உக்காருங்க…. உங்களுக்கு காப்பியவிட இனிப்பா ஒரு சேதிய சொல்லுதேன்…..” என்று அவரை அழைத்துச் சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்த்தினாள்.
அவளையே அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார் லச்சுமி. “நேற்று கண்ணைத் திறக்க முடியாமல் கிடந்தவளா… இப்போது இப்படி கண் நிறைக்கும் ஓவியமாய் முன்னாடி நின்று பேசுகிறாள்….. ஒரு ராத்திரிக்குள் அப்படி என்ன மாற்றம் வந்துவிட்டது……” என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தவரிடம் காப்பியை நீட்டினாள் கயல்விழி.
அதை வாங்கி மேசை மீது வைத்தவர், “காப்பி கெடக்குது….. அத வுடு… ஏட்டி….. ஏதோ சந்தோஷமான விஷயமுன்னு சொன்னியே…. அதை சொல்லு தாயி……”
“அத்த….. இம்புட்டு நாளா உங்க மனசுல பாரமா அழுத்திட்டுக் கெடந்த ஒரு விஷயம், நான் சொல்லறதைக் கேட்டா இல்லாமப் போகப் போவுது…..”
“ம்ம்…. எம்மனசுல ஆயிரம் விசயம் பாரமா அழுத்திட்டுக் கெடக்கு….. நீனு எந்த பாரத்த சரி பண்ணிட்டேன்னு சொல்லப் போவுத……”
“போங்கத்த….. இப்படில்லாம் சொன்னா நான் சொல்ல மாட்டேன்……” சிலுப்பிக் கொண்டவளைக் கண்டு சிரிப்பு வந்தது லச்சுமிக்கு.
“ம்ம்…. நேத்துக் கெடந்த கெடப்பென்ன….. இன்னைக்கு சிலுப்பிக்குற தினுசென்ன…… உன்ன இப்படி சந்தோஷமாக் காங்கையில எம்மனசுல இருக்குற பாரமெல்லாம் எறங்கிப் போனது போல மனசு லேசாத் தோணுது தாயி…….” அருகில் அமர்ந்தவளின் தலையை ஆதரவாய்த் தடவிக் கொடுத்தார் லச்சுமி.
அவரது வார்த்தையில் மனம் நெகிழ்ந்தாள் கயல்விழி.
“அத்த…… உங்களுக்கு எம்மேல இம்புட்டு பிரியமா…….”
“ம்ம்…. எம்மவன் மேல நான் எத்தன அன்பு வச்சிருக்கனோ….. அதே போல தான் தாயி…. உம்மேலயும் வச்சிருக்கேன்….. எம்புள்ள எம்மேல எம்புட்டு பாசமா, என்னைய சுத்தி சுத்தி வருவான் தெரியுமா….. அப்படி இருக்கவன் இப்போ, என்னன்னா…… என்னங்குற அளவுக்குப் பேசறதே இல்லாமப் போயிருச்சு….. இந்த வூட்டுல நீ வந்த பொறவுதான் பேச்சு சத்தமே கேக்குது…. உன்ன நேத்து அப்படிப் பார்த்ததும் கோபம் தாங்க முடியாம அவன நல்லா ஏசிப்புட்டேன்….. இப்போ உன்னை சந்தோஷமா பாக்கவும்தேன் மனசு நெறஞ்சிருக்கு…… நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கறதப் பாக்கணும்ங்கிறதத் தவிர வேற என்ன இந்த அத்தைக்கு வேணும்….” என்றவரின் அன்பில் உருகிப் போனாள் அவள்.
“அத்த….. வருத்தப் படாதிய…. உங்க மனசுப்படியே நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கத்தான் போவுதோம்…..”
“ம்ம்….. நீனு என்னட்டி சொல்லப் போவுதே…… சொல்லு தாயி……”
“அத்த….. அத்தான் இனிமே குடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாக….. எங்கிட்ட அப்படி நடந்துகிட்டதுக்கு ரொம்பவும் வருத்தப் பட்டாக….” என்றாள் அவள் கூச்சத்துடன் குனிந்து கொண்டே.
அதைக் கேட்டு முகம் மலர்ந்தவர், “கடவுளே… என்னோட வேண்டுதல் எதுவும் வீண் போவல….. எம்புள்ள குடிய மட்டும் நிறுத்திப்புட்டா உங்களப் பத்தி எனக்கு எந்த வெசனமும் இல்ல…. நீங்க சந்தோஷமா இருப்பிய…….” என்றவர், “கயலு…. நீனு நிசமாத்தான சொல்லுதே……” என்றார் மீண்டும் நம்ப முடியாமல்.
“ம்ம்… நெசந்தான் அத்த…. அத்தான் இனிமே பாட்டிலத் தொட மாட்டேன்னு சொல்லிட்டாக……” என்றாள் அவள் சிரிப்புடன்.
“அச்சோ…. என் செல்லம்…. எல்லாம் நீனு வந்த நேரம்…. ரொம்ப சந்தோசம் தாயி….. காலங்கார்த்தால நல்ல விசயமா சொல்லிருக்கே…. உனக்கு என்ன வேணும்னு சொல்லு தாயி…. அத்த வாங்கித் தரேன்….. ரெண்டு பேரும் எங்கனயாவது டூர் போவனும்னா போயி ஜாலியா இருந்துட்டு வாங்க….. மாமாகிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணட்டுமா….” என்று படபடவென்று சந்தோஷத்தைப் பொழிந்தவரைக் கண்டு அவளுக்கு சிரிப்பு வந்தது.
“அத்த இருங்க….. நீங்க நல்லவகன்னு தெரியும்….. ஆனாலும் இம்புட்டு நல்லவகன்னு எனக்குத் தெரியாமப் போயிருச்சே…..” என்று சிரித்தவள், “உங்க முகத்துல இப்ப இருக்குற சந்தோஷத்த விடப் பெருசா எனக்கு என்ன வேணும் அத்த…… என் அம்மா கூட என்னை இப்படித் தாங்கிருக்க மாட்டாக…. என் செல்ல அத்த….” என்றவள், அவரை அணைத்துக் கொண்டாள்.
அவளை அன்போடு தலையில் தடவிக் கொடுத்தவர், “ம்ம்….நாளைக்கு ரெண்டு பேரும் கோவிலுக்குப் போயி கருப்புசாமிக்கு ஒரு பூஜை பண்ணிட்டு வந்திருங்க… எல்லாம் அந்தக் கடவுளோட ஆசீர்வாதம்தேன்….. சரி…. உம்புருஷனுக்கு காப்பி எடுத்திட்டுப் போயி குடு தாயி…..” என்றார் சிரிப்புடன்.
“நான் மாமாக்கு குடுத்துட்டு அவருக்குக் கொண்டு போவுதேன் அத்த…..”
“எம்புருஷனுக்கு நான் கொண்டு போயிக் குடுக்கேன்….. நீனு உம்புருஷனுக்கு காப்பி எடுத்திட்டுப் போ…..” என்றவர், “என் தங்கம்….” என்று அவளது கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தார்.
“தாயி…. மதிகிட்ட சொல்லி அப்படியே அவங்க அப்பாவையும் மன்னிச்சு அவரோடப் பேசச் சொல்லு தாயி……” என்றார் பாவமாக.
“அத்த….. இதையே பண்ணிட்டோம்…. அதப் பண்ண மாட்டோமா….. அடுத்தது அது தான்…. வருத்தப் படாதிய….” என்று கூறிக் கொண்டே காப்பியைக் கலந்து இரு கப்பில் ஊற்றினாள் கயல்விழி.
“அத்த… இந்தாங்க…. நீங்க உங்க அத்தானுக்குக் குடுங்க…. இத நான் என் அத்தானுக்குக் குடுக்கேன்….” என்றவளைக் கண்டு அவருக்கு சிரிப்பு வர,
“என் அத்தானா…. ஹஹா….” என்று சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டு கணவருக்கு காப்பியுடன் சென்றார்.
மதிக்கு காப்பியை எடுத்துக் கொண்டு அவர்களின் அறைக்கு வந்தவள் அதை அங்கிருந்த மேசை மீது வைத்துவிட்டு அவனை எழுப்பினாள்.
“அத்தான்…… எழுந்திருங்க…. அத்தான்…..”போர்வையை இழுத்து மூடிப் படுத்திருந்தவனின் காதுக்குள் ஒலித்த குரல் கனவில் டூயட் பாடிக் கொண்டிருந்தவனைத் தட்டி எழுப்ப, மெதுவாய்க் கண்ணைத் திறந்தான் மதியழகன்.
“அட…. டூயட் இன்னும் முடியல….. அதுக்குள்ள காப்பியோட வந்துட்டியா மீனுக்குட்டி…..” என்றவன், “வா…… வா….” என்று அவளையும் போர்வைக்குள் இழுத்தான்.
“அய்யோ அத்தான்….. என்ன இது…..” சிணுங்கினாலும் அவனது இழுப்புக்கு விருப்பத்துடனே அவன் நெஞ்சில் விழுந்தாள்.
“மீனுக்குட்டி……”
“ம்ம்….. எழுந்திருங்க அத்தான்…. காப்பி ஆறிடப் போவுது……”
“இவ்ளோ நாள் நானே ஆறித்தான் கெடந்தேன்…. அதான் என்னை சூடாக்க இப்போ நீ வந்துட்டியே மீனுக்குட்டி…..” என்றவன் அவளைத் தனது கை வளைவுக்குள் கொண்டு வந்து அணைத்துக் கொள்ள, அவள் அப்படியே கண்ணை மூடி சில நிமிடம் படுத்திருந்தாள்.
உலகத்தில் உள்ள பாதுகாப்பு முழுவதையும் அந்த ஒற்றை அணைப்பு அவளுக்கு உணர்த்தியது. இத்தனை நாள் மனதுக்குள் இருந்த தவிப்பு முழுதும் அவனது அருகாமையில் அவளை விட்டு விலகுவதை உணர்ந்தாள் அவள்.
“அத்தான்……. எழுந்திருங்க….” எழுந்திருக்க மனமில்லா விட்டாலும் அவனது கையை விலக்கிவிட்டு மெல்ல எழுந்தவளை மீண்டும் இழுத்து அணைத்துக் கொண்டான் அவன்.
“மீனுக்குட்டி……”
“ம்ம்…..” பின்னிருந்து அணைத்தவனின் அணைப்புக்குள் அப்படியே தொலைந்துவிடத் துடித்த இதயத்தைக் கஷ்டப் படுத்திக் கட்டுப் படுத்திக் கொண்டாள் அவள்.
“ஐ லவ் யூ மீனுக்குட்டி….”
கழுத்தில் உரசிய அவனது மூச்சுக் காற்றுடன் கலந்து வந்தது காதல் தோய்ந்த கிசுகிசுப்பான குரல். ஜிவ்வென்று மனதுக்குள் எழுந்த புதுவித உணர்ச்சி அலையை கண்ணை மூடி ரசித்தவள், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு எழுந்தாள்.
“அத்தான்….. போதும் எழுந்திருங்க….. காப்பி ஆறிடும்…..” என்று எழுந்தவளுடன் அவனும் எழுந்தான்.
“மீனும்மா…… அஞ்சே நிமிஷம்……” என்றவன், குளியலறைக்குள் நுழைந்து கொண்டான். பல் தேய்த்து வந்து கட்டிலில் அமர்ந்தவனிடம் காப்பியை நீட்டினாள் அவள். அதைக் குடித்து முடிக்கும் வரை அவனையே அடிக்கண்ணால் பார்த்துக் கொண்டு எதையோ பேசத் துடித்தவளை கவனித்தவன், இரு கையையும் நீட்டி அவளைத் தலையசைத்து அருகில் வருமாறு அழைத்தான்.
அவனது கைகளில் தஞ்சம் புகுந்தவளின் நெற்றியில் தொட்டுப் பார்த்தவன், “மீனுக்குட்டிக்கு காய்ச்சல் எல்லாம் போயிடுச்சு போலிருக்கே…..” என்றான்.
“ம்ம்…. நீங்கதான் என் காச்சல எல்லாம் பார்சல் பண்ணி அனுப்பிட்டியளே….” என்றாள் அவள் தலையைக் குனிந்து கொண்டே.
அவள் கூறியதைக் கேட்டு சிரித்தவன் அவளைத் தன் அருகில் அமர்த்தி, அவள் முகத்தில் விழுந்த முடிக்கற்றையை ஒதுக்கி விட்டான்.
“மீனுக்குட்டி….. நீனு என்னமோ எங்கிட்டே கேக்கத் தயங்குற போலத் தோணுது….. என்னம்மா….. நான் இனிமே குடிக்க மாட்டேன்னு சொன்னதுல உனக்கு நம்பிக்க இல்லியா….”
“அ… அது வந்து…..” என்று அவள் எதையோ சொல்லத் தயங்கினாள்.
“மீனும்மா…. நான் ஒண்ணும் குடிக்கு அடிம இல்ல…. ஏதோ நினைச்சு தொடங்கினேன்…. ஆனா அதுவே எப்போ என் மீனுக்குட்டிக்கு ஒரு கஷ்டத்தைக் கொடுத்துச்சோ….. இனி அதை நான் தொட மாட்டேன்….. எனக்கு என் மீனுக்குட்டி தான் எல்லாத்தையும் விட முக்கியம்… என்னை நம்பும்மா…..” என்றான்.
“அச்சோ….. அதில்லை அத்தான்….. நான் என்ன கேக்க வந்தேன்னா…..” என்று அவள் தயங்க அவள் கையை எடுத்துத் தன் கைக்குள் வைத்துக் கொண்டவன்,
“என்ன கேக்கணுமோ… தயங்காம கேளு…. மீனுக்குட்டி…” என்றான்.
“அது… வந்து…. அத்தான்…. சின்ன வயசிலயே நம்ம ரெண்டு குடும்பமும் பிரிஞ்சிருச்சு….. உங்க மனசுல நான் இருக்கேன்னு எனக்கும் தெரியாது…. எனக்கு உங்களைப் பிடிக்கும்னு உங்களுக்கும் தெரியாது…. அப்புறம் எப்படி, நான் உங்களப் பணத்துக்காக தான் கண்ணாலம் பண்ணேன்னு நினைச்சு அவ்ளோ கோபப்பட்டிய….” என்றாள் தயக்கத்துடன்.
அதைக் கேட்டு மெல்ல புன்னகைத்தவன், “சின்ன வயசுல இருந்தே மீனுக்குட்டிய  எனக்கு ரொம்பப் பிடிக்கும்….. மாறனுக்கும் எனக்கும் சண்டை வந்திடக் கூடாதுன்னு நீ விலகிப் போனாலும் ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கும் போதும் உங்கண்ணுல என்னை விட்டுப் போற வேதனை தெரியும்….. அதுக்கப்புறம் பெருசானதும் சூழ்நிலை என்னை குடிகாரனாக்கிடுச்சு….. நீயும் மாறி இருப்பேன்னு தான் நான் நெனச்சேன்….. உன்னை எனக்கு கண்ணாலம் பேசுறாங்க… அதுக்கு நீனு சம்மதிச்சுட்டேன்னு தெரிஞ்சதும் நான் ஒதுக்கி வச்சிருந்த உன் நினைப்பு மறுபடியும் மனசுல வந்திருச்சு…….”

Advertisement