Advertisement

லச்சுமி கஞ்சியுடன் வர கண்ணைத் துடைத்துக் கொண்டவள், மெல்ல எழுந்திருக்க முயல, அசைய முடியாமல் உடம்பெல்லாம் பயங்கரமாய் வலித்தது. வலியில் முகத்தை சுளித்துக் கொண்டவளை தலையணையை சரிவாய் வைத்து அதில் சாய்ந்தவாறு அவளை அமர்த்திவிட்டு சிறிது கஞ்சியைக் குடிக்க வைத்தவர், ராமு வாங்கி வந்த மாத்திரையை அவளுக்குக் கொடுத்தார்.
மௌனமாய் எல்லாவற்றையும் செய்தவள், “அத்த….. நீங்க சாப்பிட்டியளா…… அத்தான் வந்துட்டாகளா….” என்று விசாரித்தாள். அவளுக்கு ஏனோ மதியழகனை உடனே காண வேண்டுமென்று மனது ஏங்கியது.
“ராமுவைப் போயி பார்க்க சொல்லிருக்கேன்….. உம்புருஷன் எங்க இருந்தாலும் கூட்டியாந்திடுவான்…… நீ கொஞ்சம் உறங்கு தாயி……” என்றவர், அவளைப் படுக்க வைத்துவிட்டு கதவை வெறுமனே சாத்திவிட்டு வெளியேறினார்.
வெகுநேரம் உறங்காமல் கணவனைப் பற்றிய நினைவில் அவனுக்காய்  காத்திருந்தவள், மாத்திரையின் உதவியால் உறங்கிப் போனாள்.
தென்னந்தோப்புக்குள் இருந்த தேங்காய் குடோன் அறையில் கண்ணை மூடி சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தான் மதியழகன். ஒரு பக்கம் பறித்த தேங்காய்களை அடுக்கி குவித்து வைத்திருந்தனர். கதவை சாத்திவிட்டு தனிமை தேடி வந்தவன் கதவைத் தாளிட்டு அமர்ந்திருந்தான்.
அவனது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருக்க, “மீனுக்குட்டி…. என்ன மன்னிச்சிடும்மா…… உன்னை என் மனசுக்குள்ள தேவதையா கொண்டாடிட்டு இப்படி நானே உன்னை வேதனைப் படுத்திட்டேனே…… பூப் போல இருந்தவளை கசக்கிப் போட்ட பாவியாகிட்டேனே……”
“இனிமே குடிக்கக் கூடாது… உனக்குப் பிடிச்ச போல நடந்துக்கணும்னு கோவில்ல சாமி முன்னாடி முடிவு பண்ணிட்டு எவனோ ஒருத்தன், பணத்துக்காக தான் குடிகாரனா இருந்தாலும் பரவால்லன்னு நீனு என்னைக் கண்ணாலம் கட்டிகிட்டேன்னு சொன்னதும் என்னால தாங்க முடியல…. நீ உன் வாழ்க்கையைத் தியாகம் பண்ணி எனக்கு வாழ்க்கை குடுத்த போலப் பேசவும், அது உண்மையா இருக்குமோன்னு நினைச்சு கோபப் பட்டுட்டேன்……”
“குடிக்க கூடாதுன்னு நினைச்சவன் அளவுக்கு அதிகமா குடிச்சிட்டு வந்து நிதானம் இல்லாம உன்னை இப்படிப் பண்ணிட்டேனே….. இனி எப்படி உன் முகத்துல விழிப்பேன்…… இந்த மாதிரி ஒரு கேடு கேட்ட செயலை செய்த என்னை நீ கண்டிப்பா மன்னிக்கப் போறதில்லை….. யாருக்கும் பிடிக்காம, எல்லாரயும் வெறுப்பேத்திட்டு எதுக்காக நான் வாழணும்….. எனக்கு வாழவே பிடிக்கல…..”
“இனி உன் முகத்தைப் பார்த்து நான் எப்படி மீனுக்குட்டினு கூப்பிடுவேன்…… அழகா ரசிச்சுப் பார்த்து கொண்டாட வேண்டியவள, தண்ணில இருந்து மீனைத் தூக்கி நிலத்துல போட்ட கணக்கா துடிக்க வச்சுட்டேனே….. மீனும்மா….. ரொம்ப வலிச்சுதா…..  இ… இந்தப் பாவிக்கு எந்த விதத்துலயும், மன்னிப்பே கிடையாதா……” என்றவன் தலையில் அடித்துக் கொண்டு கதறினான்.
“மீனுக்குட்டி…. என் மீனுக்குட்டி…. இத்தனை நாளா பொக்கிஷமா உன் நினைப்ப எம்மனசுல பூட்டி வச்சிருந்தேனே…. அதை நானே இப்போ கேவலப் படுத்திட்டேனே…. என்னோட காதல் உண்மை இல்லையோ….. அதான் உன்னை கஷ்டப் படுத்திட்டேனோ….” என்றவன் அவளிடம் பேசுவதாய் நினைத்து தனக்குள் பேசி அழுது கொண்டிருந்தான்.
காலையில் இருந்து அவளையே மீண்டும் மீண்டும் நினைத்து கலங்கிக் கொண்டிருந்தவன் மனதில் கயல் மட்டுமே நிறைந்திருந்தாள். அவளைக் காணக் கண்கள் துடித்தாலும், அவளது முகத்தை நேரிடும் துணிவை இழந்து கொண்டிருந்தது அவனது மனம். அப்படியே மனதுக்குள் புலம்பிக் கொண்டு தன்னை குற்றப் படுத்திக் கொண்டு வெகுநேரமாய் கண்ணை மூடி அமர்ந்திருந்தவன், கதவு தட்டப்படும் ஓசை கேட்டு கண்ணைத் திறந்தான்.
எழுந்திருக்க மனமில்லாமல் அப்படியே இருந்தவனை மீண்டும் அழைத்தது கதவு தட்டும் ஓசை. முகத்தை துடைத்துக் கொண்டவன், எழுந்து சென்று கதவைத் திறந்தான்.  வெளியே ராமு, நின்றிருந்தான்.
“என்ன ராமு……” என்றவனின் சோர்வான முகத்தைக் கண்ட ராமு,
“சின்னையா….. அம்மா உங்கள வீட்டுக்கு வரச் சொன்னாக……” என்றான்.
“ம்ம்… எதுக்கு…. சின்னம்மாவுக்கு இப்போ எப்படி இருக்கு…. ஒண்ணும் பிரச்சன இல்லையே….” என்றான் பதட்டத்துடன் மதியழகன்.
“இல்லீங்கையா… சின்னம்மா கண்ணு முழிச்சிட்டாங்க…… அதான் அம்மா உங்களக் கூட்டியாற சொன்னாக…. நானும் மதியத்துல இருந்து உங்கள எல்லா எடத்துலயும் தேடிப் பார்த்தேனுங்க…… இப்பதான் நீங்க தோப்புல இருக்கிங்கனு தெரிஞ்சுது……” என்றான் அவன்.
“ம்ம்…. சரி நீ கெளம்பு…. நான் வூட்டுக்குப் போயிக்கறேன்…..” என்றதும் அவன் தலையாட்டிவிட்டு நகர்ந்தான்.
“அம்மா என்னைக் கோபத்துடன் திட்டி அனுப்பிட்டு, இப்ப எதுக்குப் பாக்கனும்னு வர சொல்லி இருப்பாக…. என் மீனுக்குட்டிக்கு ஏதும் முடியலையா….. அச்சோ….. வீட்டுல வேற யாரும் இல்லையே….. அந்தாளும் டவுனுக்குப் போயிருந்தாரே…. பொம்பளைங்களை தனியா விட்டுட்டு நான் பாட்டுக்கு அம்மா திட்டினதை நினைச்சுட்டு இங்க வந்து கெடக்கேனே…..” என்று அதற்கும் தன்னையே குற்றப் படுத்திக் கொண்டவன், வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினான்.
வாசலில் பைக் சத்தத்தைக் கேட்டு வெளிய வந்தார் லச்சுமி.
“எங்கலே போனே….. வீட்டுல ஒருத்திய இந்த நிலைக்கு ஆளாக்கிப் படுக்க வச்சிட்டு ஊரு சுத்தப் போயிட்டியளோ….” காரமாய் வந்தது அவரது வார்த்தைகள்.
“அ… அம்மா….. கயலுக்கு இப்ப….. எப்படி இருக்கு….” தயக்கமாய் வந்தது அவனது வார்த்தைகள்.
“ம்ம்… உயிரோடதான் இருக்கா….. போதுமா…. உள்ள வாலே…. உங்கிட்டக் கொஞ்சம் பேசோணும்…..” என்றவர், அவரது அறைக்கு செல்ல, அவரைத் தவிப்புடன் தொடர்ந்தான் மதியழகன்.
அவனது குற்றவுணர்வில் தவித்த முகத்தைக் கண்ட லச்சுமி அமைதியாய்ப் பேசினார்.
“தம்பி….. என்னலே இப்படிப் பண்ணிட்ட….. நம்மளை நம்பி வந்த பொண்ணு….. அதை இப்படிப் பண்ணி வச்சிருக்க….. இப்பக் கூட அவ நீ செய்தது தப்புன்னு சொல்லல…… உம்மப் பாக்கோணும்…. பேசோணும்…. வர சொல்லுங்கன்னு சொல்லுதா….. உம்மேல அவ இத்தனை அன்பு வச்சிருப்பான்னு நான் கூட எதிர்பார்க்கலை…. அந்தப் புள்ள மேல உன்னோட வெறியெல்லாம் காட்டிருக்கியே…… சின்னப் புள்ள….. தாங்குவாளா…… இப்ப முடியாமப் படுத்திருக்கும்போதும் நீனு வந்துட்டியானு நொடிக்கொரு தரம் கேட்டுட்டுக் கெடக்கா….. இந்தப் புள்ளையா உன்னப் பணத்துக்கு கட்டிகிட்டானு நினைக்குதே…..” என்றவரின் கண்கள் கலங்கி இருந்தது.
“அ…. அம்மா…. என்ன மன்னிச்சிருங்க….. உங்க வாயால என்னை வெறுத்துப் பேசிடாதிங்க….. குடி போதைல என்ன பண்ணுறோம்னு நிதானம் இல்லாமப் பண்ணிட்டேன்….. அவ… அவ… என் உசுரு மா….. அவளுக்கு எதுனா ஆயிருந்தா நான் உசுரோடவே இருந்திருக்க மாட்டேன்….. அவள எம்மனசுல கோவில் கட்டி குடி வச்சிருக்கேன்…. அப்படிப்பட்டவ கிட்ட இப்படி நான் நடந்துகிட்டதுக்கு காரணம் என் போதை….. கண்டிப்பா இனி நான் அதைத் தொட மாட்டேன்….. நான் குடிகாரனா இருக்குறதால தான அவ வாழ்க்கையைத் தியாகம் பண்ணின போல பேசுறாக….. அவுக முன்னாடி மகாராணி போல அவளை வாழ வைப்பேன்….. ஆனா என்னை வெறுத்திட வேண்டாம்னு மட்டும் அவகிட்ட சொல்லுங்கம்மா….” என்றான் கண்ணீருடன்.
அவன் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யத்துடன் பார்த்த லச்சுமி, “கெட்டதுலயும் ஒரு நல்லது நடந்திருக்கே…. அதுவரைக்கும் சந்தோசந்தேன்…. தம்பி…. நீனு கயலை முதல்லயே விரும்பினியா…..” என்றார் வியப்புடன்.
“ம்ம்….. நான் இந்த ஊருல இல்லன்னாலும் சின்ன வயசுல இருந்தே அவ மனசை பத்திரமா வச்சிருக்கேன்….. அது போல அவ இல்லையோன்னு நினைச்சு, குழம்பி ஏதெல்லாமோ பண்ணிட்டேன்….. இனி இது போல நடக்காதும்மா…… என்னை மன்னிச்சிடுங்க….. நீங்களும் என்னைத் தப்பா நினைச்சு வெறுத்திடாதிங்கம்மா…..” என்றான் அவன்.
“ம்ம்… தப்பா நினைக்க வேண்டிய அவளே, நீனு செய்தது தப்புன்னு சொல்லாம உன்னைப் பார்க்கோணும்னு காத்திட்டிருக்கா….. இதுல நான் என்னலே உன்ன வெறுக்கறது….. நீ போயி அவளைப் பாரு…..” என்றவர், “நீனு கயலப் பார்த்துட்டு வா….. நான் உனக்கு சாப்பிட எடுத்து வைக்குதேன்….” என்றார்.
“ம்ம்… சரிம்மா….” என்றவனின் மனது சற்றுத் தெளிந்திருந்தது. கயல் தன்னை வெறுக்கவில்லை….. தன்னைக் காணத் துடிக்கிறாள் என்பதே அவனுக்கு பெரும் தெம்பைத் தந்தது. மனம் அவளைக் காணத் துடித்தாலும் அவளது முகத்தை நேரட முடியாமல் தயக்கத்தில் பின்னிக் கொண்டன கால்கள்.
தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டவன் அறையை நோக்கி நடந்தான்.
கதவை தயக்கத்துடன் திறந்தவன் மெதுவாய் கட்டிலை நோக்கி நகர்ந்தான்.
முதுகுக்கு ஒரு தலையணையை வைத்து சாய்ந்து அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் கயல்விழி. சோர்ந்த அவளது முகத்தைக் கண்டதும் அவனது கண்கள் கலங்கின. ஒன்றும் பேசாமல் அவள் அருகில் அமர்ந்தவன் அவளது குழந்தைத்தனமான முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“மீனுக்குட்டி….. என்னை மன்னிச்சிடுமா……” என்று மனதுக்குள் கூறிக் கொண்டே அவளது முகத்தில் பறந்து கொண்டிருந்த முடிக் கற்றையை மெல்ல விரலால் ஒதுக்கியவன், குற்றவுணர்வுடன் தலையைக் குனிந்து கொண்டான். அந்த சிறு தீண்டலில் உறங்கிக் கொண்டிருந்தவளின் அவளது மனது விழித்துக் கொள்ள, மெல்லக் கண்ணைத் திறந்தாள் கயல்விழி. அருகில் கண்ணீருடன் தலை குனிந்து அமர்ந்திருந்த கணவனைக் கண்டதும் அவள் முகம் மலர்ந்தது.
“அ…. அத்தான்…….”
அவளது குரலைக் கேட்டதும் சட்டென்று நிமிர்ந்தவன் கண்ணில் இருந்து கண்ணீர் உருண்டோட, அதைக் கண்டதும் அவளது உள்ளம் பதறியது.
“அ…. அத்தான்…. வந்துட்டியளா……. சாப்டிங்களா….. என் மேல இப்பவும் கோபமா இருக்கியளா……” என்று மென்மையாய் ஒலித்த அவளது குரலில் துடித்துப் போனான் அவன். அவளது முகத்தைப் பார்க்க முடியாமல் தலை குனிந்து இருந்தவன் அவள் கையைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டான்.
“என்ன அத்தான்…. சின்னப் புள்ள போல அழுதுகிட்டு…. நான் உங்க சொத்து அத்தான்….. இப்பவாச்சும் என்னை உங்க மீனுக்குட்டின்னு ஏத்துக்க மாட்டியளா…..” என்றாள் அவள் அவன் முகத்தையே ஆர்வத்துடன் நோக்கிக் கொண்டு.
அதற்கு மேல் தாங்க முடியாதவன், சாய்ந்து அமர்ந்திருந்தவளை அப்படியே நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
“மீனுக்குட்டி…. என்னோட மீனுக்குட்டி…. என் செல்லமே…. உன்னை நான் எத்தனை வேதனைப் படுத்திட்டேன்….. எல்லாத்தையும் தாங்கிட்டு என்னை இப்பவும் வெறுக்காம, எனக்காக யோசிக்கறியே….. என் மீனுக்குட்டி….. நீனு என்னோட மீனுக்குட்டி மட்டும் தான்…..” என்றவன் அவளது நெற்றி, முகம் உதடு எல்லா இடத்திலும் மென்மையாய் முத்தமிட்டான்.
“அந்த முத்தத்தில் காமம் இல்லை…..” அவள் மீது அவன் வைத்திருந்த காதலின் வெளிப்பாடாய் மட்டுமே அவளுக்குத் தோன்றியது.
“மீனுக்குட்டி….. என்னை மன்னிச்சிடு செல்லம்…… இனி உனக்குப் பிடிக்காத எதையும் நான் செய்ய மாட்டேன்….. என் மீனுக்குட்டியை வேதனைப் படுத்த காரணமா இருந்த குடியை இனி நான் தொடவே மாட்டேன்…. என்னை நம்பும்மா…. நான் வேணும்னு ஏதும் செய்யலை…. போதைல சுய நினைவு இல்லாம ரொம்பக் கேவலமா நடந்துகிட்டேன்….. என்னை நாலு அடி வேணும்னாலும் அடிச்சுக்கோ….. என்னை மன்னிச்சிடு செல்லம்…..” கண் கலங்க கை கூப்பிய கணவனை நெஞ்சோடு இழுத்து அணைத்துக் கொண்டாள் அவள்.
“அ….. அத்தான்…. என்கிட்டே எதுக்கு மன்னிப்பு கேட்டுட்டு….. நான் உங்க மீனுக்குட்டி தான்னு நீங்க நம்புனா எனக்கு அது போதும்….” என்றாள் அவள்.
“ம்ம்… நீனு என் மீனுக்குட்டி தான்…. இனி எப்பவும் என் மீனுக்குட்டி தான்…..” என்றவன் அவள் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டு, “சாரி மா….. என்னால உனக்கு ரொம்பக் கஷ்டம்….. ரொம்ப வலிக்குதா……” என்றான் மென்மையாய் அவளை அணைத்துக் கொண்டு.
“ம்ம்…. இத்தன நேரம் வலிக்குற மாதிரி தான் இருந்துச்சு….. ஆனா என்ன மாயமோ மந்திரமோ தெரியல… இப்ப வலிக்கவே இல்ல…. அது எப்படி அத்தான்…..” என்று சிரித்தவளின் புன்னகை அவன் முகத்திலும் மலர்ச்சியைக் கொண்டு வந்தது. அவளைக் காதலுடன் அணைத்துக் கொண்டவன் அவனது அணைப்பையே அவளுக்கு வலி தீர்க்கும் மருந்தாக்கினான்.
தீராத வலிகள் எல்லாம்
நீயே தந்தாய்…..
அதைத் தீர்க்கும் மருந்தாக
நீயே வந்தாய்….
வலி தந்து போனவனே
வரமான வழி என்ன……
கண்ணைக் குத்திப் போனவனே
கண் துடைத்த மாயம் என்ன….
அன்பாலே அடித்தாயோ
உணர்ந்த பின்பு துடித்தாயோ…..
உனக்குள்ளே நானிருக்க
எனை எங்கு தேடினாயோ…..
நெஞ்சமெல்லாம் காதல் கொண்டு
மஞ்சம் வரக் காத்திருந்தேன்…..
அறியாமை தனைக் கொண்டு
புரியாமல் போனாயோ…..
தண்ணீரில் மீனைப் போல்
உன் கண்ணீரில் நீந்தினேனே…..
மௌனமென்னும் சிறையில்
நீ இல்லாமல் துடிக்கிறேனே….
கரம் பற்றிய கண்ணாளா
என் மனக் குறையைத் தீர்ப்பாயா….

Advertisement