Advertisement

அத்தியாயம் – 14
கதவைத் தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்த லச்சுமி அதிர்ந்து போனார். கிழிந்து போன துணியாக, கசக்கிப் போட்ட காகிதமாக, வாடிப் போன மலராக அனத்திக் கொண்டு கிடந்த மருமகளைக் கண்டவருக்கு தூக்கி வாரிப் போட்டது. வேகமாய் அவளது நெற்றியில் கை வைத்துப் பார்த்தவர், உடல் அனலாய்த் தகித்ததில் கையை இழுத்துக் கொண்டார்.
“அச்சோ….. புள்ளைக்கு இப்படி அனலாக் கொதிக்குதே…. நேத்து ராத்திரி கூட நல்லா இருந்த புள்ள…. இப்படி நைஞ்சு போயிக் கெடக்காலே…..” என்று பதறியவர், போர்வையை கழுத்து வரை மூடிப் படுத்திருந்தவளைத் தட்டி எழுப்ப அவளிடம் அனத்தல் மட்டுமே வந்ததே ஒழிய எழுந்திருக்கவில்லை.
“அய்யையோ…. புள்ள காய்ச்சல் தாங்காம மயங்கிக் கெடக்குதே….. இந்தப் பய எங்க போனான்…..” என்று கட்டிலில் மதியைக் காணாமல் தேட, அவன் கட்டிலுக்குக் கீழே படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்.
“இவன் ஒருத்தன்…. குடிச்சுட்டு கட்டில்ல படுக்காம இங்கன விழுந்து கெடக்கான்….. டேய்…… மதி…. எழுந்திரு….. எழுந்திருலே……” என்று அவனைத் தட்டி எழுப்பி விட்டார்.
“என்னம்மா….. எதுக்கு இப்பவே என்ன எழுப்பி விடறிய…..” என்று கேட்டுக் கொண்டே எழுந்து அமர்ந்தான் மதியழகன்..
“தம்பி… கயலுக்கு உடம்பெல்லாம் அனலா கொதிக்குதுப்பா…. பாவம்… புள்ளைக்கு ரொம்ப முடியல போல…. கிழிஞ்சு போன நாறு கணக்கா கண்ணத் தொறக்காம மயங்கிக் கெடக்கு……. நீனு வெரசா போயி ஒரு டாக்ஸியக் கூட்டிட்டு வா….. டாக்டர்கிட்டப் போவோம்……” என்றார் பதட்டத்துடன்.
அதைக் கேட்டதும் சட்டென்று நெஞ்சுக்குள் ஒரு வலி பரவ, வேகமாய் எழுந்தவனின் மூளைக்குள் நிழலாய் நேற்று நடந்த நிஜங்கள் மின்னித் தெளிந்தது. 
“அச்சோ….. போதைல நிதானம் இல்லாம என் மீனுக்குட்டிய நான் என்னென்னவோ பண்ணிட்டேனே….. அதான் அவளுக்கு காய்ச்சல் வந்திருச்சோ… கடவுளே…. நான் அவ மூஞ்சில எப்படி விழிப்பேன்…..” என்று நினைத்தவன், வேகமாய் அவளிடம் சென்றான். பிழிந்து போட்ட கரும்பு சக்கையாய் கிடந்தவளைக் கண்டதும் அவன் மனதுக்குள் ரத்தக் கண்ணீர் வழிந்தது.
அவளைக் காண முடியாமல் குற்றவுணர்ச்சியோடு அங்கிருந்து நகர்ந்தவன், “அம்மா….. டாக்ஸி எல்லாம் வேண்டாம்…. நா……. நான் போயி டாக்டர வீட்டுக்குக் கூட்டியாறேன்…..” என்றவன், குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
ஐந்தே நிமிடத்தில் மதி பைக்கை எடுத்துக் கொண்டு டாக்டரை அழைக்க செல்ல, லச்சுமி அந்த அறையை ஒதுக்கிவிட்டு கயலை மீண்டும் எழுப்பிப் பார்த்தார்.
அவள் அசையாமல் அப்படியே கிடக்க கயலின் உடைகளை சரி செய்தவர் கண்ணில் அங்கங்கே அவளது உடலில் கன்னிப் போய் கிடந்த காயங்கள் பட்டதும் அதிர்ந்து போனார். 
“அய்யய்யோ….. இது என்ன… இப்படி உடம்பெல்லாம் கன்னிக் கெடக்கு….. ஒ… ஒருவேளை….. மதிதான் தண்ணியப் போட்டு வந்து அவளை இப்படிப் பண்ணிட்டானா…… அய்யோ…. கடவுளே….. எம்மவனா இப்படி வெறி புடிச்ச போல நடந்துகிட்டு இருப்பான்…… எ…. என்னால நம்பவே முடியலையே……” அதிர்ந்து போனவருக்கு அந்தக் கோணத்தில் நினைக்கவே முடியாமல் கண்ணிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.
“அச்சோ…. படுபாவி…… சின்னப் புள்ளய இப்படிப் பாடு படுத்தி இருக்கானே…. கயலு….. தாயி…..” என்று அவளை மீண்டும் அழைத்துப் பார்த்தவர், வெளியே சென்று அலமுவிடம், கயலுக்கு காய்ச்சல் என்று மட்டும் கூறி கொஞ்சம் வெந்நீர் வைத்து எடுத்து வருமாறு கூறினார்.
அவள் வெந்நீர் கொண்டு வரவும் போய் வாங்கிக் கொண்டவர், “அலமு….. மதி டாக்டரக் கூட்டியாரப் போயிருக்கான்….. வாசல் தொறந்து கெடக்கு…. நீ முன்னாடி இருலே….. நான் கயலைப் பார்த்துக்கறேன்…..” என்று அவளை வாசலுக்கு அனுப்ப அவள் எட்டிப் பார்த்துக் கொண்டே வாசலுக்கு சென்றாள். அவள் சென்றதும் வெந்நீருடன் அறைக்குள் சென்றார் லச்சுமி.
கயலின் ஆடைகளைத் தளர்த்தி சுடுதண்ணீரில் துணியை நனைத்து முகத்தைத் துடைத்து விட்டவர், கசங்கிக் கிடந்த உடைகளை சரி செய்து விட்டார். அவரது கண்கள் அவளைக் கண்டு மீண்டும் மீண்டும் கலங்க, இது வரை மகன் மீது எதற்குமே கோபப் படாதவருக்கு அவனைக் கொன்று போடும் அளவுக்குக் கோபம் வந்தது.
கயலின் வீங்கிய உதடுகள் மெல்ல அசைய, அவள் சொல்லுவது புரியாமல் அவள் கன்னத்தில் மென்மையாய்த் தட்டினார் அவர். வீங்கிக் கிடந்த அவளது உதடுகளும் கன்னிப் போய்க் கிடந்த கன்னங்களும் அவருக்கு சொல்லவொணா வேதனையைக் கொடுத்தன. ஒரு பெண்ணாய் அவருக்கு கயலின் நிலையைத் தாங்கிக் கொள்ளவே முடியாமல் மனம் வலித்தது.
சிறிது நேரத்தில் மதி டாக்டருடன் வந்துவிட்டான்.
கயலைப் பரிசோதித்த டாக்டரின் முகம் அதிர்ச்சியைக் காட்டியது. வீட்டுக்கு வந்ததுமே அன்னையின் முகத்தில் இருந்த கோபமும், வெறுப்பும் அவருக்கு விஷயம் புரிந்து விட்டதை உணர்த்த, அவரைப் பார்க்க முடியாமல் தலை குனிந்த மதியழகன் வெளியே நின்று கொண்டிருந்தான். 
டாக்டர் ஒரு ஊசியைப் போடவும் கண்ணைத் திறக்காமலே முகத்தை சுளித்தாள் கயல்விழி.
“டா… டாக்டர்…… எம்மருமவளுக்கு எப்படி இருக்கு…. ஒண்ணும் பிரச்சனை இல்லையே….” என்றார் லச்சுமி கவலையுடன்.
“பயப்படாதிங்க மா…. ஊசி போட்டிருக்கேன்…. நல்லா தூங்கட்டும்…. எழுந்ததும் உடம்பு வலிக்கு இந்த மாத்திரையைக் கொடுங்க…. ரெண்டு நாள் ஓய்வா இருந்தா சரியாப் போயிடும்….. கவனமாப் பார்த்துக்குங்கோ… உதட்டுக்கு இந்த மருந்தை தடவ சொல்லுங்க…..” என்று அவரது மருந்து சீட்டை நீட்டினார்.
வெளியே வந்த டாக்டரின் குற்றப் படுத்தும் பார்வையும், தாயின் கோபமான பார்வையும் தாங்கிக் கொள்ளாமல் தானாகவே தலை தாழ்ந்தது மதியழகனுக்கு.
“டாக்டர்….. அவளுக்கு எழுந்ததும் சாப்பிட என்ன கொடுக்கணும்…..” என்றார் லச்சுமி.
“கொஞ்சம் கஞ்சி மட்டும் ஜூஸ் போலக் குடுங்க…. உதட்டுல புண் இருக்கு…. அதுனால வேற ஏதும் குடுக்க வேண்டாம்……” என்றவர், “தம்பி…. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்….. நீங்க கொஞ்சம் உள்ள வாங்க….” என்றார் மதியழகனிடம்.
மதியழகன், தயக்கத்துடன் உள்ளே சென்றான்.
கயல் நல்ல உறக்கத்தில் இருக்க, அவளைக் கண்டவனின் கண்கள் தானாகக் கலங்கியது.
“இங்க பாருங்க தம்பி….. நான் அதிகம் ஏதும் சொல்ல விரும்பலை….. என்னதான் உங்க பொண்டாட்டினாலும்…. பொண்டாட்டியை யாரும் ரேப் பண்ண மாட்டாக…… பாத்து மென்மையா நடந்துக்குங்க……” என்றவர் கிளம்பி விட்டார்.
அவர் சொன்ன வார்த்தையைக் கேட்டு மனம் வெறுத்து அவமானத்தில் குறுகிப் போய் நின்ற மதியழகன் கயலின் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தான்.
அவனிடம் வந்த லச்சுமி, “உன்ன என் வயித்துல சுமந்து, பெத்தெடுத்ததுக்கு முதன் முறையா வருத்தப் படுதேன்….. முதல்ல வெளில போ….. மயக்கமா கெடக்குற புள்ள மேல மறுபடியும் ஆம்பளத்தனத்த காட்ட வந்திடாதே……” என்றார் முகத்தை வெறுப்புடன் வைத்துக் கொண்டு.
“அ…. அம்மா…… அ… அதுவந்து…. நேத்து போதைல…..” என்றவனின் வார்த்தைகள் தடுமாற, அவனை கை காட்டி நிறுத்துமாறு கூறிய லச்சுமி, “நீனு எதுவும் சொல்லத் தேவையில்ல….. இந்த ரூம்ல இருந்து முதல்ல வெளில போலே…..” என்றார் கோபமாக.
அந்த நிமிடமே இதயம் நின்று விடாதா…. என்பது போல இருந்தது மதியழகனுக்கு. கயலைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே வெளியேறியவன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
வெளியே வேலை செய்து கொண்டிருந்த அலமுவிடம் வந்தார் லச்சுமி.
“ஏட்டி அலமு….. இங்க வா….. தோப்புல ராமு இருப்பான்…. அவன நான் இங்க வரச் சொன்னேன்னு போயி சொல்லுலே….” என்றார்.
“சரிம்மா….. சின்னம்மாவுக்கு இப்ப எப்படி இருக்கு….. டாக்டர் என்ன சொன்னாரு….” என்றாள் அவள்.
“ம்ம்… காய்ச்சலுக்கு ஊசி போட்டிருக்காக….. சரியாகிடும்னு சொல்லிட்டுப் போனாக….. நீ போயி ராமுவ வரச் சொல்லு….” என்றார்.
அவள் சென்றதும் கயலிடம் வந்தவர், சோர்வாய் உறங்குகின்ற அவளைக் கண் கலங்கப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“கடவுளே…. எப்படி ஓடியாடி நடந்துட்டு இருந்த புள்ள….. இப்படி சாஞ்சு போன மரங்கணக்கா கெடக்குதே…… என்ன மன்னிச்சிடு தாயி…… உன்ன எங்குடிகாரப் புள்ளைக்கு வம்படியா கண்ணாலம் பண்ணி வச்சது தப்போன்னு இப்ப எனக்குத் தோணுது….. உனக்கு ஏதாவது ஒண்ணு ஆயிருந்தா நான் என்னன்னு உன் வீட்டுல சொல்லிருப்பேன்….. நா… நான் தப்புப் பண்ணிட்டேன் தாயி….” என்றவர் அவளை நினைத்து கண் கலங்கிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு ராமு வாசலில் குரல் கொடுக்கவே கண்ணைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தவர், டாக்டரின் சீட்டையும் பணத்தையும் அவனிடம் கொடுத்து மருந்தை வாங்கி வருமாறு சொல்லி அனுப்பி விட்டார்.
கயலுக்கு கஞ்சியை வைத்துவிட்டு அவள் கண் விழிப்பதற்காய் காத்திருந்தார். வெகு நேரம் உறங்கிக் கொண்டிருந்தவளுக்கு மதியமே விழிப்பு வந்தது. மெல்லக் கண் விழித்தவளின் பார்வை தவிப்புடன் அந்த அறை முழுவதும் ஓடியது.
“கயலு…. கண்ணு முழிச்சுட்டியா தாயி….” என்று ஆறுதலாய் அவளது தலையைக் கோதிக் கொடுத்த மாமியாரை நோக்கி சோகையாய் சிரித்தாள் அவள்.
“கண்ணு… இப்ப எப்படி தாயி இருக்கு…. படுபாவி… பூவப் போல இருந்தவள  இப்படிப் பிச்சுப் போட்டுட்டானே….. இரு…. நான் போயி உனக்குக் குடிக்க கொஞ்சம் கஞ்சி எடுத்தாறேன்…. மாத்திர போட்டாத்தேன் உடம்பு வலி எல்லாம் சரியாப் போவும்…..” என்றவர் எழுந்து செல்லப் போக, அவரது கையை சோர்வுடன் பற்றினாள் கயல்விழி.
“அ… அத்த….. அத்தான்…. எங்க…..” என்றாள் அவரிடம்.
“அந்தக் கேடு கெட்டவனப் பத்தி நீனு எதுக்குக் கேக்குதே…. அவன் எங்கே போனானோ யாருக்குத் தெரியும்…. அவனைக் கண்டபடி திட்டில்ல அனுப்பிருக்கேன்….. எங்காவது போயி குடிச்சுட்டு விழுந்து கெடப்பான்…. படுபாவி….. இப்படி ஒரு புள்ளையப் பெத்ததுக்கு நான் ரொம்ப வெசனப்படுதேன்….. இந்தப் பொறுக்கிப் பயலுக்கு உன்னக் கண்ணாலம் பண்ணிக் கொடுத்தமேன்னு இப்ப நான் கவலைப் படுதேன்….. இந்த அத்தைய மன்னிச்சுக்க தாயி….” என்றார் அவர் கையைப் பிடித்து.
அவர் கையைத் தாழ்த்தியவள், “அத்த…. அத்தான வர சொல்லுங்க…… எனக்கு அவரப் பாக்கணும்……” என்றாள்.
“ஏட்டி… அவன் உன்ன இப்படிப் பண்ணிட்டுப் போயிருக்கான்…. அவன் மேல கோபப்படாமப் பாக்கணும்னு சொல்லுதே…… நீ அவன்கிட்ட இப்படித் தொங்கிட்டு நிக்கப் போயி தான், கொஞ்சம் கூட மனுஷத்தன்ம இல்லாம இந்தக் கொடுமையப் பண்ணி இருக்கான்….. எல்லாம் ஆம்பளைங்கிற திமிரு….. கொஞ்சம் கண்டுக்காம விடு தாயி…. அப்பத்தேன் இவன மாதிரி ஆளுங்களுக்கு புத்தி வரும்…..” என்றார் அவர்.
“அ… அத்த… அத்தானத் திட்டாதிய…… அவரு மேல எந்தத் தப்பும் இல்ல…. அவர வெறுத்திடாதிய… அவருக்குள்ள இருந்த வேதனையும், குற்றவுணர்ச்சியும், நானும் அவுகள பணத்துக்காக ஏமாத்திப் பொய் சொல்லுதேனோங்கிற நெனப்பும் தான் அவர் எங்கிட்ட மொரட்டுத் தனமா நடந்துக்கக் காரணம்…… மனசுல இருந்த கோபத்தை எல்லாம் இந்த வழியில வெளிப்படுத்தி இருக்காக….” அவள் சொல்ல சொல்ல, அவளையே அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்தார் லச்சுமி.
“எனக்கு அவுக மேல எந்தக் கோபமும் இல்லத்த….. அவரு என்னப் புரிஞ்சுகிட்டாப் போதும்…. அத்தான் எங்கிருக்காகனு பார்த்து கூட்டிட்டு வரச் சொல்லுங்கத்தே…..” என்றாள் கெஞ்சலுடன்.
“ம்ம்…. உன்ன மாதிரி ஒரு பொண்ணு பொஞ்சாதியாக் கெடைக்க அவன் என்ன புண்ணியம் பண்ணினானோ…… அழகா, அன்பா ஒரு பொண்டாட்டி கெடச்சும், அவள வச்சு ஒழுங்கா குடித்தனம் பண்ணாம குடிச்சு நாசமாத் திரியுதான்….. நீனு ஒண்ணும் யோசிக்காம அமைதியாப் படு தாயி….. அவன எங்கிருக்கான்னு பார்த்து கூட்டியாரச் சொல்லுதேன்…. நீங்க ஒருத்தர ஒருத்தரு புரிஞ்சுகிட்டு சந்தோஷமா இருந்தா சரிதேன்…. நான் போயி கஞ்சி எடுத்திட்டு வருதேன்….. மாத்திர போடணுமில்ல…..” என்றவர் அடுக்களைக்கு சென்றார்.
கயல் கண்ணை மூடிக் கொண்டாலும் கண்ணுக்குள் வந்து நின்றது மதியழகனின் கோபமான முகம்.
“அத்தான்…. உங்ககிட்ட மனசு விட்டுப் பேசணும்…. என்னோட காதலை உங்ககிட்ட சொல்லணும்… நீங்க சந்தோஷமா, என்னை மீனுக்குட்டின்னு கொஞ்சறதைப் பார்க்கணும்னு ஆசையோட காத்திருந்தேன்….. அதுக்குள்ள என்னவெல்லாமோ ஆகிப் போச்சு….. நீங்க எங்கிட்ட நடந்துகிட்டதை மத்தவங்க தப்பா நினைக்கலாம்…. ஆனா……. அது எம்மேல நீங்க வச்சிருக்குற அன்புல வந்த உரிமையோட வெளிப்பாடுன்னு தான் நான் நெனைக்குதேன்….. நீங்க சொன்னபோல நான் செய்துட்டேன்….. இப்பவாவது என்ன உங்க மீனுக்குட்டின்னு சொல்ல மாட்டியளா….” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தவளின் கண்ணிலிருந்து கரகரவென கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

Advertisement