Advertisement

அத்தியாயம் – 13
“மீனுக்குட்டி…….”
கட்டிலில் அமர்ந்து துணி மடக்கிக் கொண்டிருந்தவள் பின்னில் அமர்ந்து காதின் அருகில் கிசுகிசுத்த கணவனின் குரலில் உடல் ரோமங்கள் சிலிர்த்து நிற்க கூச்சத்துடன் நெளிந்தாள்.
“ம்ம்ம்…..” என்றவளின் குரல் வாய்க்குள்ளேயே அடங்கிவிட்டது.
அவளது பின் கழுத்தில் அவனது உதடுகள் ஊர்வலம் போக படபடப்பும் கூச்சமும் போட்டி போடத் தாங்க முடியாமல் முகம் சிவந்தவள், சட்டென்று எழுந்தாள்.
அவளது கையைப் பற்றி கூடவே எழுந்தவன், “எங்கலே ஓடுதே……” என்று அவளை இழுத்து தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
அந்த அணைப்பில் அவளது உணர்வுகளும் உருகத் தொடங்க தவித்துப் போனவள், “விடுங்க அத்தான்….. என்ன இது….. மத்தியான நேரத்துல…..” என்றாள்.
“ம்ம்… மத்தியான நேரம்தான் உனக்கு பிரச்சனையா….. நைட்டா இருந்தா பரவால்லியா……” என்றான் அவளது காதில் மெல்லக் கடித்துக் கொண்டே. அவனது கைகள் அவளது இடுப்பைத் தழுவிக் கொண்டிருக்க மனதுக்குள் பரவிய அந்தப் புதுவித அலைகளின் உணர்வுகளில் அவளும் மிதக்கத் தொடங்கினாள்.
அவனது கைகள் அவளது உடலில் முன்னேறிக் கொண்டிருக்க உதடுகள் முகத்தில் படம் வரைந்து கொண்டிருந்தன. சூடான அவனது மூச்சுக் காற்று அவளது கழுத்தில் வலம் வர, உணர்வுகளின் கொந்தளிப்பில் அவன் நெஞ்சில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் கயல்விழி.
அவளது முகத்தை இரண்டு கைகளிலும் பற்றியவன், அவள் மூக்கோடு தனது கூர்த்த மூக்கை உரசி, கண்களில் பார்வையைக் கலக்க விட்டான். அந்தக் கண்களில் வழிந்த காதலில் அவள் உருகிப் போனாள். அவனது உதடுகள் அவள் பெயரைக் காதலுடன் உச்சரித்துக் கொண்டே அதன் இணையைத் தேடி முன்னேறியது..
“மீனுக்குட்டி…… என் செல்ல மீனுக்குட்டி……”
அவனது கிறக்கமான அழைப்பில் கிறங்கிப் போனவளின் உதடுகளில் தனது முத்திரையைப் பதித்தவன், அவளிடம் கண்களால் சம்மதமா என வினவ, அவளது கிறங்கிய கண்கள் சொன்ன சம்மதத்தைப் புரிந்து கொண்டவன், அதற்கு மேல் தாமதிக்கவில்லை.
அவளை இரண்டு கைகளாலும் பூவைப் போல அள்ளிக் கொண்டவன், அலுங்காமல் கொண்டு போய் கட்டிலில் கிடத்தினான்.
அடுத்த முத்தத்தை அழுத்தமாய்க் கொடுத்தவனின் அசுரத்தனமான முன்னேற்றத்திற்கு இணையாய் அவளும் சந்தோஷத்துடன் ஈடு கொடுக்க எத்தனையோ காலமாய் அவர்களுக்குள் ஒருவர் மேல் ஒருவர் ஒளித்து வைத்திருந்த காதல் கவிதை கட்டிலில் அரங்கேறத் தொடங்கியது.
கட்டிலில் புரண்டு படுத்த கயல்விழி சட்டேன்று கீழே உருண்டு வீழ கண்ணைத் திறந்தாள்.
அவளது கைகளுக்குள் அடங்கியிருந்த மென்மையான தலையணை, நான் உன் முரட்டுக் கணவன் இல்லை….. என்பதை உணர்த்த, அறைக்குள் மதியைக் காணாமல் திகைத்தவள்,
“ச்ச்சீ….. இவ்ளோ நேரமும் கனவா கண்டுட்டு இருந்தேன்….” என்றவளின் முகம் கனவின் நினைவில் மருதாணியாய் சிவந்தது. உதடுகளில் சிறு புன்னகை தொற்றிக் கொள்ள மனதின் ஒரு ஓரத்தில் சிறு ஏமாற்றமும் எட்டிப் பார்த்ததை அவள் உணர்ந்தாள்.
இன்று எப்படியும் கணவனிடம் மனதில் உள்ளதை எல்லாம் சொல்லிவிட வேண்டும் எனக் காத்துக் காத்து கட்டிலில் அமர்ந்து இருந்தவள், அப்படியே உறங்கி விட்டிருந்தாள்.
அவளது தலைமாட்டில் இருந்த கடிகாரத்தின் முட்கள் ஒவ்வொரு நொடியையும் சத்தத்துடன் நகர்த்திக் கொண்டிருக்க, சமயம் இரவு பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்த்தியது.
“அத்தான எங்க இன்னும் காணல….. இன்னைக்கு கோவில்ல பேசினதில் இருந்தே நானும் அவரோட மனசுவிட்டுப் பேசணும்னு பாத்திட்டுக் கெடக்கேன்….. அதும்பொறவு ஆளே கண்ணுல தட்டுப்படலையே……” என்று நினைத்தவள், கோவிலில் அவன், “நீ இப்பவும் என்னோட மீனுக்குட்டி தான…..” என்று கேட்டதை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து மகிழ்ந்தாள்.
மதிய விருந்துக்குப் பின் மதியழகன் வந்ததைப் போலவே யாரிடமும் சொல்லாமல் காணாமல் போயிருந்தான். எல்லாரும் புறப்படவே அவனது வண்டியில் வந்தது போலப் போயிருப்பான் என்று யாரும் அதைப் பெரிதாக நினைக்கவும் இல்லை. லச்சுமிக்கும், மகன் விருந்தில் நல்லபடியாக நடந்து கொண்டதில் மிகவும் சந்தோசம்.
“கயலு…. நம்மகிட்டகூட சொல்லாம நமக்கு முன்னாடியே கோவிலுக்குப் போயி எல்லாரு முன்னாடியும் எம்புள்ள எத்தன பதவிசா நடந்துகிட்டான் பாத்தியா…… உம்மேல அவன் எம்புட்டு பிரியம் வச்சிருப்பான்னு இப்பவாச்சும் உனக்கு விளங்குதா…..” என்றார் மருமகளிடம்.
கோவிலுக்கு செல்லும் போது சுருங்கியிருந்த முகம், திரும்பி வரும்போது மலர்ந்திருப்பதே அவள் மனதை அவருக்கு உரைத்தது.
“ம்ம்……. இருந்தாலும் நம்மளோட வரதுக்கு என்னத்த…… வருவாகளோ…. மாட்டாகளோன்னு நாம வருத்தப் படாம இருந்திருப்பம்ல…… உம்ம புள்ள நமக்கு இன்ப அதிர்ச்சி குடுக்குறாராக்கும்….” என்றாள் அவள் சிரித்துக் கொண்டே.
“ஏட்டி…… அவனோட அப்பாரு நம்மளோட வரும்போது அவன் எப்படி வருவான்…… அதான் சொல்லாமக் கொள்ளாமப் போயிருக்கான்….. இருந்தாலும் எம்புள்ள மனசு தங்கமுள்ள…… அங்க ஒனக்கு ஒரு குறச்சலும் வராம நடந்துகிட்டான்ல….. எமக்கு இதுவே பெரிய சந்தோசம் தாயி…. கண்டிப்பா உனக்காக அவன் மாறிடுவான்….. அதும் சீக்கிரமே நடக்கும்னு எனக்குத் தோணுது…” என்றார் நம்பிக்கையுடன்.
அதைக் கேட்டதும் அவளது முகம் பிரகாசிக்க மனம் நிறைய சந்தோசத்துடனும், எதிர்பார்ப்புடனும் இரவு உணவை முடித்துவிட்டு மதியழகனுக்காய் காத்திருக்கத் தொடங்கியவள் தான் அப்படியே அசதியில் உறங்கிப் போய் கனவில் அவனோடு கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
“இன்னும் அத்தானைக் காணலையே…. எங்க தான் போயிருப்பாக….” என்று நினைத்தவளின் மனதுக்குள் அவன் குடித்துவிட்டு எங்கேனும் விழுந்து கிடப்பானோ….. என்று ஒரு கேள்வி வர, வயிற்றுக்குள் ஒரு பயப்பந்து உருண்டது.
“இல்ல…. அப்படில்லாம் இருக்காது….. இன்னைக்கு அத்தான் என்னோட அன்பாப் பேசினாகளே…… கண்டிப்பா பழைய மாதிரி நடந்துக்க மாட்டாக…..” என்று அவளையே அவள் சமாதானம் செய்ய, “அப்புறம் ஏன் இன்னும் வீட்டுக்கு வரல……” என யோசித்துக் கொண்டே இரவு விளக்கின் ஒளியில் அறைக்குள் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள்.
“கருப்பசாமி…… நீதான் அத்தான நல்லபடியா வீட்டுக்கு கொண்டு வந்து சேக்கோணும்…..” என்று வேண்டிக் கொண்டே கட்டிலில் சென்று வெறுமனே படுத்தாள். உறக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்தவள் சிறிது நேரத்திற்குப் பிறகு அறைக் கதவு திறக்கப் படவே எழுந்திருக்காமல் கண்ணை மட்டும் திறந்து பார்த்தாள்.
நிழலாய் தள்ளாட்டத்துடன் உள்ளே நுழைந்த மதியழகனைக் கண்டதும் அதிர்ந்தாள். அதுவரை அவனுக்காய் மனதுக்குள் தேக்கி வைத்துக் காத்திருந்த அன்பும், எதிர்பார்ப்பும் வடிந்து போக, அதிர்ச்சியுடன் எழுந்தவள் சுவிட்சைத் தட்டினாள். இருட்டில் நின்று கொண்டிருந்தவன், சட்டென்று அறையில் நிறைந்த வெளிச்சத்தில் கண்கள் கூச கண்ணை மூடிக் கொண்டான்.
“அத்தான்…… என்ன இது….”
“ஏன்…. என்னாச்..சு….” என்றான் குழறலாய்.
“எதுக்கு வெளிய போயி இப்படிக் குடிச்சிட்டு வந்திருக்கிய……” என்றாள் சற்றுக் கோபத்துடன்.
“ஓ…. நீங்க சொல்லுறபடி தான் செய்யணுமோ….. ஆம்….மால்ல….. உனக்கு தான் பணத்த குடுத்து என்ன, எங்கப்பன் வித்துட்டானே….. அப்ப உங்க உத்தரவுப் படி தான் நான் நடக்கணும்….. ம… மன்னிச்சுக்கங்க  மே…டம்….. மன்…னிச்சுக்குங்க…… அடுத்த தடவ நீங்க சொல்லுற எடத்துலயே குடிச்சு நாசமாப் போவுதேன்….” என்றான் அவள் முன்னில் கை கூப்பிக் கொண்டு.
அதைக் கண்டு அவளது கண்கள் கலங்க, “அ…. அத்தான்….. எதுக்கு இப்படில்லாம் பேசுதிய……” என்றாள் கண்ணில் நீர் வழிய.
“பின்ன….. உண்மைய தான சொல்லுதேன்….. பணத்த வாங்கிட்டு தான என்னைக் கட்டிகிட்ட….. எம்மேல ஆசைப்பட்டா கட்டிகிட்ட….. என்னமோ…. இல்லாதத சொன்ன போலப் பதறுதே……” என்றவன் கட்டிலில் தொப்பென்று அமர்ந்தான்.
“அ… அத்தான்…. அப்படில்லாம் சொல்லாதிய…. எனக்கு உங்களப் புடிச்சதாலதேன் இந்தக் கண்ணாலத்துக்கு நான் சம்மதிச்சேன்….. என்ன நம்புங்க…. அத்தான்…… இன்னைக்கு கோவில்ல கூட சொன்னேன்ல….” என்றவள் அவன் அருகில் அமர்ந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டு கூற அவன் அவளது கையை உதறினான்.
“ச்சீ….. கைய எடுலே….. நானும் அப்படித்தான் நெனச்சுட்டேன்…… என்னதான் பணத்துக்குத் தேவைன்னு இந்த வூட்டுல வந்து நின்னாலும், எம்மேல எப்பவோ உனக்கிருந்த அன்புதான், என்னக் கண்ணாலம் கட்டிக்க உன்ன சம்மதிக்க வச்சிருக்குன்னு…… ஆனா…. நீனு…… எங்கிட்ட நடிச்சிருக்க…… நான் நேத்துக் கேட்டப்பக் கூட பொய்ய தான சொல்லிருக்க…..” என்றான் அவன் கோபத்துடன்.
“இ… இல்ல…. அத்தான்….. நீங்க என்ன நெனச்சுட்டு இப்படிப் பேசுதியன்னு எனக்கு வெளங்கல…… எம்மனசுல நீங்க தான் இருக்கிய…… தயவு செய்து என்ன நம்புங்க…..” என்றவளின் முகத்தை கையால் நிமிர்த்திப் பார்த்தவன்,
“உன்னோட அக்கா கண்ணாலத்துக்கு முன்னயே தப்புப் பண்ணிட்டா….. எங்க அவ வயித்துல கொழந்த வந்திருமோ…… குடும்ப மானம் போயிருமோன்னு பயந்துட்டு தான என்னக் கட்டிக்க சம்மதிச்ச…… இன்னொரு தடவ என்ன ஆசப்பட்டுதேன் கண்ணாலம் கட்டுன போல சொல்லாத….. உம்மேல நான் வச்சிருந்த அன்பையே அசிங்கப் படுத்துற போல இருக்கு….” என்றவன் அவள் கன்னத்தை அழுத்திப் பிடித்தான்.
வலியில் அவள் முகத்தை சுளிக்க, “ச்ச்சீ….. எம்மனசுல இத்தன வருஷமா உன்ன நான் சொமந்ததுக்கு அர்த்தமே இல்லாமப் போச்சே….” என்றவனின் கண்கள், கலங்கியிருக்க, “என்ன நீயும் ஏமாத்திட்டில்ல…..” என்றான் குளறிக் கொண்டே.
“இ… இல்ல…. அத்தான்…. நான் உங்கள ஏமாத்தல….. அப்படி சொல்லாதிய….. நான் எப்பவும் உங்க மீனுக்குட்டிதேன்….. நம்புங்க…..” என்றாள் அவள் கண்ணீருடன் அவன் கைகளைப் பற்றிக் கொண்டு.
“நம்பறதா……. என்னோட மீனுக்குட்டினு தான் நானும் நம்பினேன்….. நீனு அந்த மணிமாறன கண்ணாலம் கட்டிக்குறதா தான் இருந்துதாம்ல……. பணத்துக்கு வேண்டியும், உன்னோட அக்கா கண்ணாலத்துக்கு வேண்டியும் தானலே என்னக் கட்டிகிட்ட…… உன்னை என்னமோ தியாகிங்குற அளவுக்கு உம்ம மாமன் மெச்சுதலா சொல்லுதான்…… அப்பப் பணத்துக்காகதான குடிகாரனா இருந்தாலும் பரவால்லன்னு என்னக் கட்டியிருக்கே…. உன்ன நான் எப்படி நம்புவேன்……” என்றவனின் கண்கள் கோபத்தை உமிழ, பேச்சிழந்து நின்றாள் கயல்விழி.
“அ… அத்தான்…. அப்படி இல்லை….. எம்மனசுல நீங்க இல்லாம இருந்திருந்தா நிச்சயமா இந்தக் கண்ணாலத்துக்கு நான் சம்மதிச்சிருக்க மாட்டேன்…. உங்க மேல சின்ன வயசுல இருந்து நான் வச்சிருந்த அந்த அன்புதான் இப்பவும் என்னை சம்மதம்னு தலையாட்ட வச்சுது…..” என்றாள் அவள் கண்ணீருடன்.
“ஆஹா….. என்னவொரு நடிப்பு…. இத என்ன நம்ப சொல்லறியா….. ஒருத்தி என்னோட பணத்துக்காக ஆசைப்பட்டு எங்கப்பன் கிட்ட தப்பு தப்பா சொல்லிக்குடுத்து இன்னொரு பொண்ணு குடும்பத்தக் கெடுத்தா…… எங்கப்பனும் பணத்திமிர்ல எதையும் விசாரிக்காம ரெண்டு பேர் உசுரப் போக வச்சு அந்தப் பாவத்த எந்தலையில சுமத்தினான்……. ஒருத்தி என்ன உசுருக்கு உசுரா நேசிக்குறது தெரிஞ்சும், என்னோட மனசுக்குள்ள உன்ன மட்டுமே நினைச்சுட்டு அவ அன்பை நான் கண்டுக்காம விட்டுட்டேன்….. ஆனா நீ…..” என்று நிறுத்தியவன், அவள் முன்னில் வந்து நின்றான்.

Advertisement