Advertisement

“அச்சச்சோ…. எல்லாரும் சிரிக்குற அளவுக்கு அம்புட்டு நேரமா நான் கண்ண மூடி சாமி கும்பிட்டேன்….” என்று கூச்சதுடனே சென்றாள் கயல்.
அனைவர்க்கும் சாமிக்கு வைத்த பொங்கலை எடுத்து பிரசாதமாகக் கொடுத்தனர்.
அடுத்து ஒரு சின்ன கடாவை அழைத்துவர, பூசாரி கையில் கொடுவாளுடன் சாமியாடத் தொடங்கினார். கடாவிற்கு மாலை அணிவித்து, அதன் மீது மஞ்சள் தண்ணீர் தெளித்ததும் அனைவரும் அமைதியாய் காத்திருக்க, அது தண்ணீரைக் குடைவதற்காய் தலையை ஆட்டவும் அதன் கழுத்தில் கொடுவாளால் ஒரு போடு போட்டார் பூசாரி.
அந்தக் கடாவின் இறுதி ஓசை அங்கிருந்த அமைதியைக் கலைக்க குருதியோடு மண்ணில் வீழ்ந்து துடித்தது அதன் தலை.
தனக்கு அருகில் நின்று கொண்டிருந்த கயலைக் கண்ட மதியழகன் திகைத்தான். கண்ணை இரண்டு கைகளாலும் இறுக மூடிக் கொண்டிருந்தாள் கயல். அவளுக்கு ரத்தத்தைப் பார்த்தால் பயம்…. இந்த மாதிரி கடா வெட்டைப் பார்க்க பயந்து எப்போதும் அன்னைக்குப் பின்னால் சென்று ஒளிந்து கொள்பவள், கணவனின் அருகில் ஒன்றும் செய்ய இயலாமல் கையால் கண்ணை மூடிக் கொண்டு நின்றாள்.
அவளுக்கு இருந்த பயத்தை அவளது நடுக்கத்திலேயே உணர்ந்தவன், “மீனுக்குட்டி….. கண்ணைத் திறந்து பாரு…… எல்லாம் முடிஞ்சிருச்சு…..” என்றான் கிசுகிசுப்பாக.
காதில் கேட்ட வார்த்தை கனவோ என்று எண்ணும் அளவுக்கு அவள் தயக்கத்துடன் மெதுவாகக் கண்ணைத் திறக்க, அவள் அருகில் இல்லாமல் காணாமல் போயிருந்தான் மதியழகன். அதற்குப் பிறகு மதிய உணவுக்காய் அந்தக் கடாவைக் கொண்டு சென்று சமையல் ஆட்கள் சமைக்கத் தொடங்க, எல்லாரும் அங்கங்கு அமர்ந்து ஊர்க்கதை பேசிக் கொண்டிருந்தனர்.
“அண்ணி… மணிமாறனை எங்க காங்கல…… வந்திருவான்னு சொன்னிய……” என்றார் ராசாத்தி பார்வதியிடம்.
“வந்திருவேன்னு சொல்லிட்டுதேன் வயக்காட்டுக்கு போனான்…… சோலிய முடிச்சிட்டு சாப்பிட வருவானாருக்கும்….”
“ம்ம்…. மவனுக்கு கண்ணாலத்துக்கு பாக்குதேன்னு சொன்னியே பார்வதி….. எதுன்னா சரியாச்சா…..” என்றார் லச்சுமி.
“ஹூக்கும்…. எம்மவன் கட்ட வேண்டிய பொண்ண உம்மவனுக்கு கட்டி வச்சுட்டு சும்மானாச்சுக்கும் விசாரிக்கறதப் பாரு…..” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் பேசினார் பார்வதி.
“பாத்திட்டுத்தான் இருக்கம்….. லச்சுமிக்கா…. இந்தப் பய இன்னும் கொஞ்ச நாள் போவட்டும்னே சொல்லிட்டுக் கெடக்கான்…..”
“ம்ம்… எங்க மாமன் பேத்திக்கு மாப்பிள பார்த்துட்டு இருக்கறதா சொன்னாக…. நல்ல பொண்ணு…. நல்லாப் படிச்சிருக்கு….. நம்ம மணிமாறன் ஜாதகத்தப் பேசிப் பாக்கலாமா……” என்றார் லச்சுமி அக்கறையுடன்.
“சரிக்கா……. நான் அவங்கிட்டப் பேசிட்டு சொல்லுதேன்….. ஜாதகம் ஒத்து வந்துச்சுன்னா பாக்கலாம்…..” என்றார் லச்சுமி.
அவர்களிடம் வந்து அமர்ந்தார் மலரின் அத்தை தமிழரசி.
“ஏன் சம்மந்திம்மா….. மலருக்கு நாள் தள்ளிப் போயிருக்கே….. உங்ககிட்ட எதுனா சொன்னாளா…….”
“அப்படியா……” என்று சந்தோஷத்தில் முகம் மலர்ந்த ராசாத்தி, “இந்தப் புள்ள எங்கிட்ட ஒண்ணும் சொல்லலியே…….” என்றார் அங்கலாய்ப்புடன்.
“இன்னும் டாக்டரப் பாக்கல….. அதேன்…. உறுதி பண்ணிட்டு சொல்லிக்கலாம்னு இருப்பாளாருக்கும்….. சரி…. சின்னவளுக்கு எதுனா விசேஷம் இருக்கா…..” என்றார் லச்சுமியிடம் கேள்வியாக.
“இ…….. இல்ல….. இப்பத்தான கண்ணாலம் முடிஞ்சிருக்கு…. என்ன அவசரம்….. சின்னஞ்சிறுசுக…… கொஞ்ச நாள் சந்தோஷமா இருக்கட்டுமே……” என்று கூறிக் கொண்டிருக்கும் போது அன்னையிடம் ஏதோ கேட்பதற்காய் அங்கு வந்தான் மதியழகன்.
“இதோ…. உம்ம மவனே வந்துட்டாப்புல….. அவரு கிட்டயே கேப்பம்…..” என்ற தமிழரசி, “ஏன் தம்பி…… எம்மருமவ என்னைப் பாட்டியாக்குன போல, நீங்க எப்ப உம்ம அம்மாவப் பாட்டியாக்கப் போவுதிய……” என்றார்.
அந்தக் கேள்வியில் திகைத்து நின்றவனை, “என்ன தம்பி…. என்னமோ… கேக்கக் கூடாதத கேட்ட போல திகைச்சுப் போயி நிக்கறிய…… அதது காலாகாலத்துல நடந்தாத்தான நல்லது……” என்றவர், “என்ன நாஞ்சொல்லறது…. சரிதானுங்களே…..” என்றார் லச்சுமியிடம்.
அதற்கு தலையாட்டிய லச்சுமி, “நீங்க கேட்டது சரிதேன்….. எல்லாத்துக்கும் நேரங்காலம் இருக்குல்ல….. எல்லாம் நடக்கும்போது நடக்கும்….” என்றவர்,
“எங்க… இந்தக் கயலு, மலரு யாரையும் காணல…..” என்றார் பேச்சை மாற்றிக் கொண்டே.
“ஆத்துல கொஞ்ச நேரம் வெளையாடிட்டு வரோம்னு போயிருக்காளுங்க மதனி….” என்றார் ராசாத்தி.
“மதி….. நீ கயலத் தேடி தான வந்த…… அவ ஆத்தங்கரைல இருப்பா…. போயிப் பாருலே….” என்று மகனை அனுப்பி வைத்தார் லச்சுமி. எதையோ கேட்க வந்தவன், கேட்காமலே மடங்கினான்.
மலரும், கயலும் ஆத்தங்கரையில் இருந்த மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மலரின் கணவன் ராஜன் அங்கு வரவே அவசரமாய் கண்ணைத் துடைத்துக் கொண்டாள் மலர்விழி.
“என்ன மலரு…. இப்பவும் கயலுகிட்ட நன்றி சொல்லி அழுதுட்டு இருக்கியா…..” என்றவன் மலரின் அருகில் அமர்ந்தான்.
“ம்ம்…. எந்தங்கச்சி மட்டும் அன்னைக்கு அப்படி ஒரு முடிவெடுக்கலன்னா நம்ம வாழ்க்கை என்னவாயிருக்கும்…. எல்லாத்துக்கும் தெரிஞ்சு மானம் மரியாதைலாம் போயிருக்கும்ல…. யாருக்குமே தெரியாம போனதுக்கு அவ புடிவாதமா அந்தக் கண்ணாலத்துக்கு சம்மதிச்சது தான காரணம்….” என்றவள் மூக்கை உறிஞ்சிக் கொள்ள, கயல் அவள் முதுகில் மென்மையாய் அடித்தாள்.
“போதும் புள்ள…. சும்மா இதையே எம்புட்டு காலந்தான் சொல்லிட்டு இருக்கப் போறவ….. கூடப் பொறந்தவளோட பேரு கெடாம பாத்துக்குறது தான ஒடம்பொறந்தவளோட கடம….. இதப் போயி இம்புட்டு பெருசா சொல்லிட்டு  இருக்க…. இந்தப் பேச்ச இத்தோட நிறுத்திக்க… சொல்லிட்டேன்……” என்றவளை கண்ணீரோடு அணைத்துக் கொண்டாள் மலர்.
“சரி….. டாக்டரப் பாத்துட்டியா…… மாசமா இருக்கன்னு உறுதி பண்ணி சொல்லிட்டாகளா….. அம்மாட்டயும் அப்பத்தாகிட்டயும் ஏம்லே இன்னும் சொல்லாம இருக்கவ….” என்றாள் பெரிய மனுஷியாக.
“அதில்ல கயலு….. இந்த விஷயத்த மொதல்ல உங்கிட்டதேன் சொல்லனும்னு ஆசப்பட்டேன்…. அத்த எங்கிட்ட குளிச்சுட்டனான்னு கேட்டதால சொல்ல வேண்டியதாப் போயிருச்சு….. இனிதேன் டாக்டரப் பார்த்து முடிவு பண்ணிட்டு அம்மா, அப்பத்தா கிட்டயெல்லாம் சொல்லணும்…..” என்றாள் அவள்.
“ம்ம்….. நானெல்லாம் ஒரு ஆளுன்னு என்னப் போயி கணக்குல வச்சிட்டு…. அம்மாவும் அப்பத்தாவும் கேட்டா ரொம்ப சந்தோஷப் படுவாக….. அப்பத்தா உன் நாடியப் புடிச்சுப் பார்த்தே முடிவு சொல்லிடும்… போயி மொதல்ல அவுக கிட்ட சொல்லுலே….” என்றாள் கயல்விழி.
“ம்ம்… சரி கயலு…. என்று முகத்தைத் துடைத்தவளை, “முதல்ல முகம் கழுவலாம் வாலே….. நீ அழுதேன்னு உம்முகமே சொல்லுது…..” என்று அவளுடன் கயலும் சென்று பளிங்கு போல ஓடிக் கொண்டிருந்த ஆற்று நீரில் முகம் கழுகி டவலால் துடைத்துவிட்டு வந்தாள்.
“சரி…. நாங்க அம்மாகிட்டப் போவுதோம்…..” என்று ராஜனிடம் கூறிய மலர்விழியிடம்,
“சரி மலரு….. நான் ஆத்துத் தண்ணில ஒரு குளியலப் போட்டு வாரேன்…… அப்புறம்… கயலு… சகலையப் பார்த்தா நான் இங்க வர சொன்னேன்னு சொல்லு…… அவருகிட்டக் கொஞ்சம் பேசணும்….” என்றான்.
“சரி மாமா…. சொல்லுதேன்…..” என்று அவர்கள் நகரவும், ராஜன் டவலுடன் ஆற்றை நோக்கி நடந்தான்.
மதியழகனைக் கண்ணில் அகப்படுகிறானா….. எனத் தேடிக் கொண்டே கண்ணைச் சுழற்றிய கயலின் கண்ணில் பிள்ளையார் கோவிலில் கண்ணை மூடி அமர்ந்திருந்தவன் கண்ணில் பட்டான்.
“மலரு…… நீ அம்மாகிட்டப் போ….. நான் அவுக கிட்ட மாமா வரச் சொன்னாகன்னு சொல்லிட்டு வந்திடுதேன்….” என்று மலரை அனுப்பி விட்டு மதியிடம் சென்றாள் அவள்.
அவனுக்கு முன்னால் சென்று நின்றவள் தொண்டையைக் கனைத்தாள். அவன் ஏதோ உறக்கத்தில் இருப்பவனைப் போல கண்ணை மூடியே அமர்ந்திருக்க, “அத்தான்…..” என்றாள் மெதுவாக.
அப்போதும் அவன் கண்ணைத் திறக்காமலே அமர்ந்திருக்க, “அத்தான்….. கண்ணத் தொறந்து பாருங்க….. கண்ண மூடி எந்தக் கோட்டையப் புடிக்க யோசனை பண்ணிட்டு இருக்கிய…..” என்றாள் சற்று உரக்க.
கண்ணைத் திறந்தவனுக்கு, ரோஜாப் பூவொன்று கை, கால் முளைத்து அவன் முன்னில் வந்து நின்றதோ என்று தோன்றியது. ரோஜா வண்ணப் புடவையில் முகத்தை சுளித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தவளை அருகாமையில்  கண்டவன், “என்ன…..” என்றான் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு.
“மாமா, உங்கள ஆத்துல குளிக்க கூப்பிட்டாக….. உங்களோட எதோ பேசணுமாம்…..” என்றாள் அவள்.
“உம்மாமனுக்கு எங்கிட்ட என்ன பேசோணுமாம்…..” என்றான் அவன் கொட்டாவி விட்டுக் கொண்டே.
“அத அவருகிட்டயே போயி கேட்டுக்கங்க….. வீட்டுல இருக்கவக செய்யறதே எனக்கு ஒண்ணும் புரிய மாட்டுது……. இதுல அவர் என்ன பேசப் போறார்னு எனக்கென்ன தெரியும்….” என்றாள் அவள் சற்றுக் கோபத்துடன்.
அவளது சிவந்த முகத்தை ரசித்துக் கொண்டே முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டவன், “ம்ம்…. முடிஞ்சா போகப் பாக்குதேன்……” என்று மீண்டும் கண்ணை மூடிக் கொள்ள, அவள் இறங்கி வந்தாள்.
“அத்தான்…….. மாமா என்ன நினைப்பாக…….. போயிப் பேசுங்க….” என்றாள் அவள் கண்ணில் கெஞ்சலுடன்.
“ம்ம்….. சரி நீ போ…… நான் போவுதேன்….” என்று எழுந்தான் அவன்.
“ம்ம்…. சரி அத்தான்…..” என்று புன்னகையுடன் நகர்ந்தவளை, “ஒரு நிமிஷம்…. நில்லுலே….” என்றதும் அவள் நிற்க, அவள் முகத்தையே பார்த்தவன்,
“பொட்டப் புள்ளைக நெத்தில பொட்டில்லாம இருக்கக் கூடாதுன்னு எத்தன தடவ சொல்லி இருக்கேன்….. இங்க வா…..” என்றவன், பிள்ளையார் நெற்றியில் இருந்து குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் அவனே வைத்து விட்டான்.
“அ…. அத்தான்……” என்று அவன் கையைப் பிடித்துக் கண் கலங்கியவளை கூர்ந்து நோக்கியவன், “நீ இப்பவும் என்னோட மீனுக்குட்டி தான….” என்றான் கேள்வியுடன்.
“நான் எப்பவுமே உங்க மீனுக்குட்டி தான் அத்தான்……” என்றவளின் கண்ணில் தேங்கி நின்ற கண்ணீர் கன்னத்தில் வழிய, அதைத் தன் டவலால் துடைத்துவிட்டவன், மீண்டும் அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்தப் பார்வையின் கூர்மை தாங்க முடியாமல் சிவந்த முகத்துடன் அவள் தலை குனிந்து கொள்ள, “ம்ம்… நீ போ…..” என்றுவிட்டு ஆற்றை நோக்கி நடக்கத் தொடங்கினான். ஒன்றும் புரியாமல் அவன் முதுகையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் கயல்விழி.
————————————————————————————————————————
உன் பார்வைத் தீண்டல் ஒவ்வொன்றிலும்
உள்ளத்தில் பூ பூப்பதை உணர்கிறேன் நான்……
உனது மூச்சுக் காற்று எனையும் உரசுகையில்
சுவாசக் காற்றாய் சுவாசிக்கிறேன் நான்…….
கற்பனையில் நீ என்னைத் தீண்டினாலும்
கரைந்து போகும் கற்பூரமாகிறேன் நான்…..
கனவுகள் கலைந்து நிஜத்தில் உந்தன்
தோள் சேரும் நாளுக்காய் காத்திருக்கிறேன்…..
வெறும் வெள்ளைத்தாளாய் இருந்த நெஞ்சில்
உன் வண்ணப் படத்தை வரைந்தாயோ……
கண்ணாடி முன் நான் நின்றால்
காட்டுகிறது அதில் உன் பிம்பத்தை……
உன்னிடம் சொல்லத் துடித்து வார்த்தைகள்
தொண்டைக்குள் சிக்கிக் கொள்ள
புதிய வார்த்தைகளைத் தேடிப்
பஞ்சத்தில் வாடுகிறேன் நான்……..
கனவுகளை நிஜமாக்க வந்துவிடு கண்ணாளா…….

Advertisement