Advertisement

அத்தியாயம் – 12
நாட்கள் அதன் பாட்டில் யாருக்கும் காத்திராமல் நகரத் துவங்கியது. மதியின் மனது தெரிந்த பின்னால் கயல் அவனைக் கண்டும் காணாமல் விலகிச் செல்ல அவளது விலகலின் காரணம் தெரியாமல் மனதுக்குள் குமுறிக் கொண்டிருந்தான் மதியழகன். அவள் காணாத போது அவளைக் கண்டு ரசிப்பவன், அவளது பாரா முகத்தின் காரணம் தெரியாமல் தவித்தான்.
எப்போதும் அவனிடம் வலிய வந்து பேசுபவள் சில நாட்களாய் தேவையானது மட்டும் கூறிவிட்டு விலகி செல்வது அவன் மனதை நெருடத் தொடங்கியது. “அன்று அவளது மனம் நோகப் பேசியதை மனதில் வைத்துக் கொண்டு தான் இப்படிச் செய்கிறாளோ….. மீனுக்குட்டி….. என்னை வெறுத்து ஒதுக்கிவிட்டாயா…… என்னை விட்டுப் போய் விடுவாயா……” மனதுக்குள் கலங்கிக் கொண்டிருந்தாலும் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் எப்போதும் போல இருந்தான்.
அவனோடு எதையும் பேசாமல் அமைதியாய் இருந்தாலும் எதிர்பார்ப்போடு அவளைத் தொடரும் அவன் பார்வையை அவள் அறிந்தே இருந்தாள். அவளுக்குத் தெரியாமல் அவன் யோசனையோடு அவளைப் பார்ப்பதை அவனுக்குத் தெரியாமல் பார்த்து மனதுக்குள் ரசித்துக் கொண்டிருந்தாள் அவள்.
“மீனுக்குட்டியாம்ல…… மீனுக்குட்டி….. சின்ன வயசுல இருந்து மனசுக்குள்ள என்ன வச்சுட்டு இம்புட்டு நாளா ஒரு பார்வைல கூட வெளிப்படுதிக்காமயா இருக்கிய…. உம்மய எப்படி வழிக்குக் கொண்டு வரணும்னு எமக்குத் தெரியும்வே……” என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டாள் அவள்.
அன்று காலையில் கருப்பராயன் கோவிலில் கெடா வெட்டி பொங்கல் வைப்பதற்காய் குடும்பத்தோடு கிளம்பிக் கொண்டிருந்தனர்.
பட்டு சேலையை உடுத்து முடித்த லச்சுமி, மருமகளைக் காண்பதற்காய் அவள் அறைக்கு வந்தார்.
“என்ன தாயி….. இன்னும் புறப்படாம என்ன யோசிச்சுட்டு நிக்கவ……” பட்டு சேலை சரசரக்க நடந்து வந்தார்.
“இதோ புறப்படுதேன் அத்த…… எந்தப் புடவ உடுக்கன்னு பாத்திட்டு நிக்குதேன்…..” என்றாள் அவள்.
“உனக்கு எது கட்டுனாலும் நல்லாத்தான் இருக்கும் தாயி…. சட்டுன்னு கிளம்பப் பாரு….. மதி எங்க…. புறப்பட்டானா……”
“தெரியலத்த…… அவுகளை காணோம்……” என்றாள் வாடிய முகத்துடன்.
“ஏட்டி….. என்னாச்சு…… அவன் எதாவது சொல்லிட்டானா…… உம்முகமே சரியில்ல…..”
“அதெல்லாம் இல்லத்த…. மாமா வரதுனால அத்தான் வருவாகளான்னு தெரியல…… காலைலயே எங்கயோ கெளம்பிப் போயிட்டாக…. அதான் தண்ணி அடிச்சிட்டு வந்திருவாகளோன்னு கொஞ்சம் பயமாருக்கு…..” என்றாள் அவள்.
“அட….. இம்புட்டுதானா…. உங்க வூட்டு ஆளுக முன்னாடி உன்னத் தல குனியுற போல அவன் செய்ய மாட்டான் கண்ணு….. அது நிச்சயம்…. எங்கனயாவது வெளிய போயிருப்பான்…… வந்திருவான்……” என்றவர் அவள் அமைதியாய் இருப்பதைப் பார்த்து,
“இதப்பத்தி நீ ஒண்ணும் யோசிச்சு வெசனப்படாம புறப்படு தாயி….. நான் போயி பூவு எடுத்தாறேன்…..” என்றவர் வெளியே செல்ல, அவர் சொன்ன வார்த்தையில் சமாதானமானவள் ரோஜா வண்ணப் புடவையை எடுத்து உடை மாற்றத் தொடங்கினாள். மலரின் கல்யாண சமயத்தில் ஆசையோடு செய்ய சொல்லி வாங்கிய குண்டு மணி நெக்லசை மட்டும் கழுத்தில் அணிந்து கொண்டாள்.
கண்ணில் லேசாய் கண்மை வரைந்து கொண்டு முடியை தளர்வாய்ப் பின்னியவள், கண்ணாடியில் தன்னைப் பார்த்து திருப்தியுடன் சிரித்துக் கொண்டாள்.
“மீனுக்குட்டி…… நீனு ரொம்ப அழகுடி…..” என்று உதட்டைச் சுளித்துச் சிரித்துக் கொண்டிருக்க பூவுடன் வந்த லச்சுமி,
“ஹஹா…. மகாலச்சுமியாட்டம் இருக்க கண்ணு…. நீயே உம்ம அழகை ரசிச்சுகிட்டு இருக்கியாக்கும்….. திரும்பு….” என்றதும் அவள் முகம் நாணத்தில் சிவக்க, அதை ரசித்துக் கொண்டே தலையில் பூ வைத்து விட்டார்.
“ம்ம்… உன்னோட அழகையும், வெக்கத்தையும் ரசிக்க வேண்டியவன இன்னும் காங்கல……. அந்த கருப்பராய சாமி தான் மனசு வச்சு உம்புருஷன் மனச மாத்தோணும்….. எடுக்க வேண்டியத எடுத்துட்டு கெளம்பு தாயி…… வண்டி வந்திடப் போவுது……” என்று பெருமூச்சுடன் கூறிவிட்டு வெளியே சென்றார்.
அவளுக்குத் தேவையான பொருட்களை ஒரு பாகில் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் கயல்விழி.
பார்த்துப் பார்த்துப் புறப்பட்டும் பார்க்க வேண்டியவன் வராமல் அவள் முகம் வாடியது. வாசலில் வந்து நின்று கொண்டு மதியழகன் வருகிறானா… எனப் பார்த்துக் கொண்டே இருந்தாள் அவள்.
சற்று நேரத்தில் கார் வந்துவிடவே வாடிய முகத்துடன் பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள். எப்படியும் கணவன் வந்துவிடுவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த மனது ஏமாற்றத்தில் சுருங்கியது.  முத்துப்பாண்டி முன்னில் ஏறிக் கொள்ள லச்சுமி கயலின் அருகில் அமர்ந்தார். கார் கருப்பராயன் கோவிலை நோக்கிச் செல்லத் தொடங்கியது.
எதையும் பேசாமல் மௌனமாய் வெளியே பார்வையைப் பதித்திருந்தவளின் மனநிலை லச்சுமிக்கும் புரிய அவரும் அமைதியாய் இருந்தார். கயலின் வீட்டில் கல்யாணம் நல்லபடியாக நடந்ததற்கு நேர்த்திக் கடன் செலுத்த அவர்கள் குலதெய்வம் கோவிலில் கெடா வெட்டிப் பொங்கல் வைப்பதற்கு இரு சம்மந்தி வீட்டினரையும், உறவினரையும் அழைத்திருந்தனர்.
கல்யாணம் முடித்த கண்ணாளனோ வேண்டுதல் நிறைவேற்றக் கூட வராமல் தன்னை ஒற்றைப் படுத்தியதை எண்ணி கயலின் மனம் சுய கழிவிரக்கத்தில் துவண்டு போனது.
“அவுகளுக்கு, மீனுக்குட்டின்னு தூக்கத்தில் கொஞ்ச மட்டுந்தேன் தெரியுமோ….. அவுக வராம நான் மட்டும் கோவிலுக்குப் போனா எத்தன பேருக்கு நான் பதில் சொல்ல வேண்டி வரும்….. என்னப் பத்தி யோசிக்காம இப்படி பண்ணுதியளே அத்தான்…..” மனதுக்குள் கலங்கியவள்,
“கருப்பராய சாமி…… உன்ன நம்பிதேன் இருக்கேன்…. யாரும் ஏதும் எடக்கு மடக்கா கேள்வி கேக்காம நீதான் பாத்துக்கணும்……” என்று கடவுளை வேண்டிக் கொண்டாள்.
முத்துப்பாண்டிக்கும் மகன் வராமல் இருந்தது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாய் இருந்தார். கோவிலை அடைந்ததும் காரை சற்றுத் தள்ளி நிறுத்த மூவரும் இறங்கிக் கொண்டனர்.
குளுகுளுவென வீசிக் கொண்டிருந்த காற்றும் பசுமையாய் அடர்ந்து வளர்ந்த மரங்களும், சலசலவென்று பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆறின் ஓசையும் அந்த இடத்தை மிகவும் ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது.
அமைதியான அந்த இடத்தில் கம்பீரமாய் அமர்ந்திருந்தார் கருப்பராயன்.
கோவிலை நோக்கி கால்கள் நடந்தாலும் மனது வெறுமையில் தவித்தது கயலுக்கு. இதே கோவிலில் தான் மதியழகன், கடைசியாக அவளை “மீனுக்குட்டி…….” என்று அழைத்து மணிமாறனுடன் சண்டை போட்டுவிட்டு போனான்.
அவனது அந்த அழைப்பை மீண்டும் கேட்கத் துடித்த மனதை அடக்கிக் கொண்டு அமைதியாய் நடந்தாள் கயல்விழி. எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாய் நடந்து வரும் மருமகளைக் கண்டு மனம் வருந்தியது லச்சுமிக்கு.
கணவன் ராஜனுடன் நின்று பேசிக் கொண்டிருந்த மலர், கயலைக் கண்டதும் ஓடி வந்தாள். “கயலு….. எப்படிலே இருக்கே…… அத்த நல்லாருக்கியளா….. வாங்க மாமா…..” என்று அவர்களை விசாரிக்க, அவர்களும் அவளை நலம் விசாரித்தனர்.
முத்துப்பாண்டியைக் கண்டதும் ஓடி வந்தனர் சுந்தரேசனும் ராசாத்தியும்.
“வாங்க சம்மந்தி…. வாங்கம்மா….. கயலு….” என்று வாஞ்சையுடன் மகளின் கையைப் பற்றிக் கொண்டார் சுந்தரேசன்.
அனைவரும் அங்கு வந்து சேர்ந்திருக்க எல்லாரும் கயலை நலம் விசாரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
“என்னட்டி….. எங்களை எல்லாம் மறந்து போயிட்டியாட்டி…… அத்தைய பாக்க நீ வூட்டுப் பக்கம் வரவே இல்லையே….” என்று அங்கலாய்த்த பார்வதியை அவள் சமாதானப் படுத்தினாள்.
எல்லோரிடமும் சிரித்துப் பேசினாலும் மதி வராததைப் பற்றி யாரேனும் கேட்டு விடுவார்களோ என பயந்து கொண்டே இருந்தாள் கயல்விழி. ஆனால் யாருமே அவனைப் பற்றி கேக்காததில் அவளுக்கு சற்று ஏமாற்றம் கூட வந்து விட்டது. கயலின் வீட்டினர் கூட மாப்பிள்ளையைப் பற்றி விசாரிக்காததில் அவள் மனது முரண்டு பிடித்தது.
“மூத்தவ மாப்பிள்ளையோட சோடியா வந்து நிக்காளே….. சின்னவ புருஷன் இல்லாம தனியா வந்திருக்காளேன்னு ஏதாவது கேக்கத் தோணுதா…. இந்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கூட எம்புருஷன் மேல அக்கறையே இல்லையே……” என்று அவள் மனம் சிணுங்கிக் கொண்டிருந்தது.
“சரி….. எல்லாரும் வாங்க…. சாமி கும்பிட்டு வந்து பொங்கல் வச்சிருவம்…..” என்று மாணிக்கம் கூறவே, கோவிலுக்குள் நுழைந்தனர்.
பூசாரி கருப்பராய சாமிக்கு தீபாராதனை காட்டி விட்டு ஒரு தட்டில் இரண்டு மாலைகளை வைத்து எடுத்துக் கொண்டு வந்தார்.
“மாப்பிள்ளையும் பொண்ணும் இப்படி வாங்க…. இந்த மாலையை பொண்ணுக்குப் போட்டு விடுங்க…… சாமி கும்பிட்டுப் போயி பொங்கல் வைக்கலாம்….” என்றார்.
ராஜனும் மலரும் முன்னில் வந்து நிற்க, கயல்விழி அமைதியாகத் தலை குனிந்து நின்று கொண்டிருந்தாள்.
“கயலு….. போ கண்ணு….. நீயும் மாப்பிள்ள பக்கத்துல போயி நில்லு…..” என்று ராசாத்தி கூறவே தலையை உயர்த்தியவள் திகைப்பில் கண்கள் விரிய அங்கே வேட்டி சட்டையில் அழகாய் நின்று கொண்டிருந்த மதியழகனை நோக்கி அப்படியே நின்றாள்.
அவளது திகைப்பைக் கண்டு மதியழகனின் உதடுகள் புன்னகையில் விரிய, அவனே வந்து அவள் கை பிடித்து அழைத்துச் சென்று அருகில் நிறுத்தினான்.
அவனையே வியப்புடன் அவள் பார்த்துக் கொண்டிருக்க மகனைக் கண்ட லச்சுமி, முத்துப் பாண்டியின் முகமும் மலர்ந்தது.
பூசாரி சொன்னது போல மாப்பிள்ளைகள் இருவரும், அவர்களின் துணைவியருக்கு மாலை அணிவிக்க அவனையே நோக்கிக் கொண்டிருந்த கயலின் கையில் மெல்லக் கிள்ளினான் மதியழகன்.
அதில் சட்டென்று மீண்டவள் நாணத்துடன் தலையைக் குனிந்து கொண்டாள். “புருஷனப் பார்த்தது போதலைன்னா வீட்டுல போயி பார்த்துக்க…. இப்பப் போயி பொங்கல் வைக்கப் பாருலே…..” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
அதைக் கேட்டதும் அவள் உடுத்தியிருந்த ரோஜா வண்ணப் புடவைக்குப் போட்டியாக சிவந்தது அவளது முகம். அதை ரசித்துக் கொண்டே அவளுடன் நடந்தான் மதியழகன்.
மலர்விழியும், கயல்விழியும் பொங்கல் வைக்க ஆனந்தத்தில் பொங்கியது கயலின் மனது. பொங்கல் வைத்து முடித்து சாமிக்குப் படைத்து கும்பிட்டனர்.
“கருப்பராய சாமி…. என் வேண்டுதல் வீண் போகலை…. உன்னோட கருணையே கருணை…..” என்று மனமுருகத் தன்னை மறந்து  நீண்ட நேரம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள் கயல்.
வெகுநேரமாய் கண்ணை மூடி கடவுளிடம் பேசிக் கொண்டிருந்தவளின் விலாவில் மெல்ல இடித்த மதியழகன், “ஏட்டி…. உன்ன அத்த கூப்பிடுதாக… பாரு…..” என்றான். அவள் கண்விழிக்க, எல்லாரும் அவளையே நோக்கி சிரித்துக் கொண்டிருந்தனர்.
“ஏம்புள்ள…. எம்புட்டு நேரந்தேன் கண்ண மூடி நின்னு சாமிய கும்பிடுவ….. அந்தப் பொங்கலே ஆறிப் போச்சு….. சீக்கிரம் எல்லாருக்கும் குடுக்கப் பாருலே…..” என்றார் பேச்சியம்மா.

Advertisement