Advertisement

“என்ன சொல்லுதிய…… அது வெளைச்சல் குடுக்குற பூமியாச்சே…. அத எதுக்குங்க நாம குடுக்கணும்…..”
“எனக்கும் குடுக்கறதுக்கு பெருசா விருப்பம் இல்லட்டி….. அவுக நிர்பந்தம் பண்ணி கேக்குதாக…. உங்கிட்ட கேட்டுட்டு சொல்லுதேன்னு சொல்லிட்டேன்…..” என்றார் அவர்.
“ம்ம்….. மதி கிட்ட இதப் பத்தி பேசற நெலமைலயா இருக்கோம்…… அதெல்லாம் சரியா வராது…. நமக்கு இப்பக் குடுக்கனும்னு தேவையும் இல்ல….. பின்ன எதுக்கு குடுக்கோணும்…. குடுக்க விருப்பம் இல்லன்னு சொல்லிருங்க…..”
“ம்ம்….. சரிலே…. சொல்லிடுதேன்…..” என்றவர் சாப்பிட்டு கை கழுகி வந்தார்.
“இந்த மழை வேற நிக்க மாட்டுதே….. இப்பவே ஏரி நெறஞ்சிருக்கும்…… நாளைக்கும் இப்படிப் பெய்தா விதைச்சதெல்லாம் வீணாப் போயிடுமே……”
“ம்ம்…. அதாங்க எனக்கும் பயமாருக்கு….. ராத்திரி மழை நின்னுட்டாப் பரவால்ல…..” என்றவர் பேசிக் கொண்டே வேலையை முடிக்க உறங்க சென்றனர்.
வெறுமனே சாத்தியிருந்த அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் மதியழகன். கட்டிலில் காலைக் குறுக்கிக் கொண்டு தலையணையை அணைத்துக் கொண்டு குழந்தை போலப் படுத்திருந்த கயலைக் கண்டதும் அவள் கூறிய வார்த்தைகள் நினைவில் வர அவனது இதழ்கள் புன்னகைத்தன.
தினமும் குடித்துவிட்டு உள்ளில் இருந்த அறைக்குள்ளேயே உறங்கிவிட்டு காலையில் வெகு நேரத்திற்குப் பிறகு கண் விழிப்பவன், இதுவரை கயல் உறங்குவதைப் பார்த்ததே இல்லை.
அவளுக்கு அருகில் வந்து அமர்ந்தவன் அவளது தலையை மெதுவாய் தடவிக் கொடுத்தான். அந்தத் தடவலில் அவளது உதடுகள் புன்னகையில் விரிய அவளது கள்ளமில்லாத முகத்தையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது சட்டென்று அவள் சரிந்து படுக்க இடுப்பில் புடவை விலகி பளீரென்று அவளது இடுப்பு தெரிந்தது. வழுவழுவென்று, வளைந்து சிறுத்திருந்த இடுப்பைக் கண்டதும் அவனது மனதுக்குள் இனம் புரியாத ஒரு பரவசம் தோன்ற இடுப்பைத் தொடுவதற்காய் நீண்ட கைகளை சட்டென்று கட்டுப் படுத்திக் கொண்டான் அவன்.
“ஏட்டி….. உன்னப் பார்த்தா மட்டும் என் உணர்வுகள் என் கட்டுப்பாட்டை இழந்து போவுதே….. அது எத்தனை வருசத்துக்குப் பொறவு ஆனாலும்….. வசியக்காரி….. உன் அருகில் எனை மறக்கிறேன் நான்…… உனக்குள் நானும், எனக்குள் நீயும் இருப்பது புரிந்தாலும் எதோ ஒன்று நம்மைத் தடுப்பது ஏன்…..” அவனது மனது கவிதையாய் வார்த்தைகளைக் கோர்க்க, அவள் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டவன், அவளுக்குப் போர்வையைப் போர்த்திவிட்டு எழுந்தான். 
நடுவில் அவள் அணைத்துப் பிடித்துக் கொண்டிருந்த தலையணையின் மறுபுறம் வந்து படுத்தவன் அவள் முகத்தையே வெகு நேரம் தனை மறந்து பார்த்துக் கொண்டிருக்க மனதோ அவனது சிறு வயதில் நடந்த நிகழ்வுக்கு சென்றது.
கருப்பராயன் கோவில் திருவிழாவில் பொங்கல் வைப்பதற்காய் முத்துப்பாண்டி, சுந்தரேசன் குடும்பத்தினருடன் ராசாத்தியின் அண்ணன் முருகேசன் குடும்பமும் வந்திருந்தனர். ஆண்கள் சிரித்துக் கலகலவென்று நாட்டு நியாயம் பேசிக் கொண்டிருக்க, பெண்கள் பொங்கல் வைத்துக்கொண்டே வீட்டு நியாயத்தை பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். குழந்தைகள் எல்லாரும் சற்றுத் தள்ளி ஆற்றோரமாய் இருந்த பெரிய ஆலமரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
“மீனுக்குட்டி…… இங்க வாயேன்…….”
டிரவுசர் சட்டையில் இருந்த மதியழகன் ஒரு காலியான தீப்பெட்டியில் எதையோ எடுத்துக்கொண்டு, பட்டுப் பாவாடை சட்டையில் மரத்தடியில் இருந்த குட்டிப் பிள்ளையார் கோவிலில் கையில் எதையோ வைத்து விளையாடிக் கொண்டிருந்த குட்டிக் கயலிடம் வந்தான்.
“என்ன அத்தான்……. எதுக்கு கூப்பிட்டிய….”
“நீனு பொன் வண்டு பாத்திருக்கியாலே……”
“இல்லயே….. அது எப்படி இருக்கும்….. பொன்னு மாதிரி மின்னுமா….” என்றாள் கண்களை மலர்த்திக் கொண்டு அப்பாவிக் கயல்விழி.
“இல்லலே….. பச்சையும் தங்கமும் கலந்த போல பட்டு மாதிரி மின்னும்….. இங்க பாருலே…. ஒனக்காக நான் தீப்பெட்டியில் பிடிச்சிட்டு வந்தேன்…..” என்றவன் அதை சற்றுத் திறக்க பச்சை நிறப் பட்டுடுத்தது போல் மின்னிக் கொண்டு வெளியே வந்தது பொன் வண்டு.
“அய்….. இது ரொம்ப அழகா இருக்கு…..” என்று அதைக் கண்டு சந்தோஷித்தவள் அடுத்த நிமிடமே கவலையானாள். “அத்தான்…. நீனு எதுக்கு இதை தீப்பெட்டியில் அடைச்சு வச்சிருக்கிய…… பாவம் தானே….. அதைத் தொறந்து விடுங்க……”
அவள் கூறியதைக் கேட்டு சிரித்தவன், “விட்டுடலாம் மீனுக்குட்டி…… மலரும், மணிமாறனும் பூ பறிச்சிட்டு இருக்காக…. அவுக வந்ததும் காட்டிட்டு விட்டுடலாம்…..”
“ம்ம்… சரி அத்தான்……” என்றவள், “நீங்க மட்டும் எதுக்கு என்ன மீனுக்குட்டினு கூப்பிடுதிய…… எல்லாரும் கயலுன்னு தானே கூப்பிடுவாக…….”
“மீனுக்குட்டி….. எல்லாரும் ஒன்ன அப்படிக் கூப்பிட்டாலும் நீனு எனக்கு ஸ்பெஷல் தான்…..” என்று சிரித்தவன், “உனக்கு கயல்னா என்ன அர்த்தம் தெரியுமா……”
“தெரியாதே….. என்ன அர்த்தம்…….” அவன் அருகில் வந்து தலையை ஆட்டிக் கொண்டே கேட்டவளின் காதில் இருந்த ஜிமிக்கியும் ஆடிக் கொண்டிருக்க அதை ரசித்துக் கொண்டே, “கயல்னா மீன்னு ஒரு அர்த்தம் இருக்கு….. அதான் நானு உன்ன மீனுக்குட்டினு கூப்பிடுதேன்….. ஒனக்குப் பிடிக்கலையா…..”
“கயலுன்னா மீனுன்னா அர்த்தம்….. எனக்கு மீனுனா ரொம்பப் பிடிக்கும்….. அதுனால மீனுக்குட்டியும் ரொம்ப பிடிச்சிருக்கு…. அத்தான்….. உங்களுக்குப் பிடிச்ச  போலயே கூப்பிடுக…..” என்றவள் நெற்றியில் வியர்த்திருக்கவே முகத்தை அழுந்தத் துடைத்தாள். அதில் அவள் நெற்றியில் இருந்த சாந்துப் பொட்டு அழிந்து கையெல்லாம் சாந்தாகி விட்டது.
“அய்யய்யோ பொட்டு அழிஞ்சிருச்சே…….” வருத்தத்தில் சுளிந்தது அவளது முகம்.
“சரி… பரவால்ல மீனுக்குட்டி….. இந்தா கர்சீப்… நீ நல்லா துடைச்சுக்கோ….” என்று அவன் பாக்கெட்டில் இருந்த கர்சீபை கொடுக்க அதை வாங்கித் துடைத்துவிட்டு அவனிடம் திருப்பிக் கொடுத்தாள்.
“பரவால்ல…. நீயே வச்சுக்க புள்ள….” என்றவன்,
“இரு… பொட்டப் புள்ளைக நெத்தில பொட்டில்லாம இருக்கக் கூடாதுன்னு எங்க அம்மா சொல்லுவாக…..” என்று பிள்ளையாரின் நெற்றியில் இருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் பொட்டாய் வைத்துவிட்டான்.
அதைப் பார்த்துக் கொண்டே அங்கு வந்தனர் மணிமாறனும், மலரும்.
“டேய்…. என்னலே பண்ணுதே….. எதுக்குலே கயலுக்கு குங்குமம் வச்சு விட்ட….. அவ நான் கட்டிக்கப் போற பொண்ணு….. உனக்கு தான் மலருன்னு சொல்லிட்டு இருக்காகள்ள…. நான் கட்டிக்கப் போற பொண்ணுக்கு எதுக்குலே நீ குங்குமம் வச்சு விட்டே….” என்று அவனுடன் சண்டைக்கு செல்ல, மதியழகனுக்கும் கோபம் வந்து விட்டது.
“ஏய்…. என்ன நடந்துச்சுன்னு தெரியாம நீனு ஒம்பாட்டுக்கு பேசுதே…. என்னமோ இப்பவே அவளக் கண்ணாலம் கட்டிகிட்டவன் மாதிரி பேச வந்துட்டான்….. பொம்பளப் புள்ள நெத்தில பொட்டில்லாம இருக்கேன்னு பொட்டு வச்சு விட்டா என்கிட்ட சண்டைக்கா வருதே…..”
“ஆமாலே…. அப்படிதேன் வருவேன்…. அவ என்னோட அயித்த மக…. அவள நாந்தேன் கட்டிக்கிருவேன்……” என்றவன் கயலின் நெற்றியில் மதி வைத்த பொட்டை அழிக்கப் போக, மதி அவனை அடித்து விட்டான்.
“என்னலே… சின்ன விஷயத்தை பெருசு பண்ணி வச்ச பொட்ட அழிக்கப் போவுத… ஒனக்கு எம்புட்டு திமிரு இருக்கணும்… கோட்டிப் பயலே….” என்றவனை,
“யாரலே கோட்டிப் பயலேன்னு சொல்லுதே…..” என்று மணிமாறனும் திருப்பி அடிக்க கயலும், மலரும் என்ன செல்வதென்று தெரியாமல் இருவரையும் விலக்கப் பார்த்தனர். கயலின் விழிகள் கலக்கத்துடன் மதியை நோக்க அந்தப் பார்வை அவன் நெஞ்சில் ஒட்டிக் கொண்டது.
“அத்தான்…. என்ன இது… இந்த சின்ன விஷயத்துக்கு ரெண்டு பேரும் இப்படி சண்ட போடுதிய….. ரெண்டு பேரும் நிறுத்தப் போறியளா… இல்ல மாமாவக் கூட்டிட்டு வரவா….” என்று மலர் மிரட்டவும், அவர்கள் விலகினர். “மணி அத்தான்…. எதுக்கு மதி அத்தானை அடிச்சிய…. என் நெத்தில பொட்டு அழிஞ்சு போச்சுன்னு தானே வச்சு விட்டாக…..” என்றாள் கயல்.
“அத்தானாம்… அத்தான்…. அவன் என்ன நம்ம சொந்தமா…. உங்கப்பாவோட பிரண்டு பையன் தான…. அவன எதுக்கு அத்தான்னு கூப்பிடுதே…. இனி அவனை அப்படிக் கூப்பிடறதைப் பார்த்தேன்….. உம்பல்லை ஒடச்சிடுவேன்…..” என்று கோபத்தில் மிரட்டிவிட்டு அவர்களையும் அழைத்துக் கொண்டு போனான்.
அதற்குப் பிறகு எங்கு பார்த்தாலும் இருவரும் முறைத்துக் கொண்டனர். இருவரும் சண்டை போடுவார்களோ என்று பயந்து கயலும் மதியழகனோடு பேச பயந்தாள்.
மதியின் தாத்தாவின் சொத்து முழுதும் அவன் அன்னைக்கு வந்துவிட பணக்கார முத்துப்பாண்டியின் சுபாவமும் மாறி பெரியவர்கள் நட்புக்குள்ளும் விலகல் வந்து விட்டது. நாட்கள் செல்ல மதி பத்தாம் வகுப்பிற்குப் பிறகு டவுனில் உள்ள ஸ்கூலில் சேர்ந்தபின் ஹாஸ்டல் வாழ்க்கைக்கு மாறிவிட பிறகு அவள் கண்டது குடிகார மதியைத்தான்…..
அவனை அந்த மாதிரி ஒருவனாக ஏற்றுக் கொள்ள மனது மறுக்க, அதிகமாய் கோபப்பட்டு அவனை வெறுக்க முயன்றாள். “அவன் ஒரு குடிகாரன்….. பெற்றோர்களை மதிக்காதவன்….” என்று அவள் மனதில் பதிய வைக்க முயற்சி செய்தாள். ஆனாலும் அவள் மனதுக்குள் மதியின் மீது எங்கோ ஒளிந்து தான் கிடந்தது அவளது நேசம்.
மதிக்கும் அப்படித்தான்…… வேறு எந்தப் பெண்களோடு பழகினாலும் அவனது மீனுக்குட்டியின் முகமே முன்னில் வந்து நிற்க அவளை விட்டுப் பிரிந்தாலும் நெஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் அவளது நினைவுகள் அழியாமல் கிடந்தன….. அதனால் தான் எத்தனையோ பெண்களைக் கல்யாணம் செய்ய மறுத்தவனால் கயலை மறுக்கத் தோன்றவில்லை. கயலுக்கும் அவன் மீது ஒளிந்து கிடந்த அன்புதான் நம்பிக்கையோடு கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்தது.
வெகுநேரம் அவளைப் பற்றிய பழைய நினைவுகளில் மூழ்கிக் கிடந்தவன், விடியும் நேரத்தில் உறங்கிப் போனான். வெகு நாளைக்குப் பிறகு போதையின் உதவியில்லாமல் நிம்மதியாய் உறங்கினான் அவன்.
காலையில் எப்போதும் போலக் கயலுக்கு விழிப்பு வர, கண்ணை மூடிக் கொண்டே எழப் போனவள், அவளது உடலில் ஏதோ எழ முடியாமல் அழுத்துவது போலத் தோன்றவே கண்ணைத் திறந்து பார்த்தாள். ஆச்சர்யத்தில் கண்கள் விரிய நோக்கியவள் அவள் அருகில் உறங்கிக் கொண்டிருந்த மதியழகனை அதிசயமாய் பார்த்தாள்.
சட்டென்று அவள் மனதில் இருந்த சஞ்சலங்கள் எல்லாம் அகல சிவந்து போன முகத்துடன் புன்னகையோடு எழ முயன்றவளை, அழுத்தியது அவனது கரங்கள்.
“மீனுக் குட்டி…. இன்னும் கொஞ்ச நேரம் உறங்குலே…. என்ன அவசரம்……” அவனது உதடுகள் உச்சரித்த வார்த்தைகளைக் கேட்டவள் கண்கள் கலங்க, அவனை அணைத்துக் கொண்டு அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
“அத்தான்….. நான் இப்பவும் உங்க நெஞ்சுல இருக்கேன்னு தெரிஞ்சிடுச்சு….. எனக்கு இது போதும்……” என்றவள் அவன் கையை விலக்கிவிட்டு சந்தோஷத்துடன் எழுந்து சென்றாள்.
எனக்குள் நீயும் உனக்குள் நானும்
உயிர்க்கூட்டில் உறைந்து கிடக்க
முகமூடியாய் தொடரும் – இந்தப்
பனி மூட்டம் விலகிடும் நாள் என்றோ……
காதலோடு உனை நோக்கியதில்லை…..
கவிதைகள் பேசிப் பழகியதில்லை…..
கனவுகளில் கதை பேசியதில்லை…..
இருந்தும் என்னுள் நீ உறைந்தது ஏனோ….
உனது சிறு பார்வை எனை இழுக்கும்
பெரும் சூறாவளியான மாயமென்ன…..
உனது சிறு புன்னகை சந்தோஷங்களை
நெஞ்சில் மலர செய்வதன் காரணம் என்ன…..
காரணம் தெரியா கேள்விகளை
சுமந்து கொண்டிருந்தாலும் அவை
அனைத்துக்கும் பதிலாகிறது – உனது
புன்னகை கண்டு மலரும் என் விழிகள்…..
எனது கேள்விக்கு நீ பதிலாக….
எனது வாழ்க்கைக்கு நீ வழியாக….
எனக்கும் உனக்கும் நடுவில் இருக்கும்
இந்த மாயத்திரை மறைவதும் எப்போதோ…..

Advertisement