Advertisement

அத்தியாயம் – 11
ஹோவெனப் பெரும் இரைச்சலுடன் பெய்து கொண்டிருந்தது மழை. ஊர் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே இறங்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். முந்தின நாள் மாலையில் தொடங்கி அடுத்த நாள் மாலை ஆகியும் நிற்காமல் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது.
மதியழகனும் வெளியே எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்தான்.
முத்துப்பாண்டி அவரது அறையில் கணக்கு வழக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாலை நேர சிற்றுண்டிக்கு வடை செய்வதற்காய் மாவு தயார் செய்து கொண்டிருந்தார் லச்சுமி.
“என்ன அத்த….. நேத்துத் தொடங்கின மழை….. இன்னும் விட்ட பாடில்ல….. வானமே அழுது தீக்குறாப் போல இல்ல மழை வெளுத்து வாங்குது…….”
“ம்ம்….. என்னமோ ஒன்னும் வெளங்கல….. மழை பெய்ய வேண்டிய சமயத்துல பெய்யாம இப்பப் பெய்துச்சுன்னா பயிர் எல்லாம் வீணாப் போயிடுமே…. சென்னைல மழை பெய்து அந்த ஊரையே நாசம் பண்ணிட்டுப் போனதில் இருந்து மழைன்னாலே கொஞ்சம் பயமா தான் இருக்கு……”
“ம்ம்…. சரியா சொன்னிக அத்த…… மழை எப்படா நிக்கும்னுல இருக்கு…..” என்றாள் கயல் வெங்காயத்தை அறிந்து கொண்டே.
“ம்ம்…. மழையைக் காரணங்காட்டி இன்னைக்கு வேலைக்கும் யாரும் வரல….. எல்லாம் நாமளே செய்ய வேண்டில இருக்கு….. நீ போயி மதி எழுந்துட்டானான்னு பார்த்துட்டு வா தாயி…… இல்லேன்னா எழுப்பி விடு….. வடை செய்ய ஆரம்பிச்சுடுதேன்…. சூடா செய்து குடுத்தா அவன் விரும்பி சாப்பிடுவான்……”
“சரி அத்தை…..” என்ற கயல் கையைக் கழுகி விட்டு அவர்கள் அறைக்கு சென்றாள். மதியைப் பற்றி லச்சுமி சொன்ன விஷயங்களைக் கேட்டதில் இருந்து அவள் மனதில் அவன் மீதிருந்த வருத்தம் முழுவதும் மாறியிருந்தது. அவன் பார்வை காதலோடு தன்னைத் தழுவுகின்ற நாள் வராதா….. எனக் காத்துக் கிடந்தாள் அவள்.
ஒரு கையால் கண்ணை மறைத்து மறு கையால் தலையணையை அணைத்துக் கொண்டு ஒருக்களித்துப் படுத்திருந்தவனின் அருகில் வந்தவள், அவனையே ஒரு நிமிடம் பார்த்து நின்றாள்.
குனிந்து அவன் சிகையைக் காதலுடன் வருடியவள், “இன்னும் தூக்கமா அத்தான்….. பெய்யுற மழைக்கு அவனவன் பொண்டாட்டியைக் கட்டிப்புடிச்சுல்ல உறங்கிட்டு இருப்பாக….. நீங்க என்னடான்னா தலைகானிய கட்டிப்புடிச்சு தூங்குதிய….. ம்ம்……” என்று ஏக்கத்துடன் ஒரு பெருமூச்சை விட்டவள் வாய்க்குள் முனங்கிக் கொண்டே அவனை எழுப்பப் போக, வெறுமனே முகத்தில் வைத்திருந்த கையை விலக்கிவிட்டு அவனே எழுந்தான்.
அதை எதிர்பார்க்காதவள், “அச்சச்சோ….” என்று நாக்கைக் கடித்துக் கொள்ள அவளது முகமோ, அவன் தான் சொன்னதைக் கேட்டு விட்டானே…… என்று நாணத்திலும் தயக்கத்திலும் குங்குமமாய் சிவந்து விட்டது.
“அத்த, உம்ம காப்பி குடிக்க கூப்பிடறாக அத்தான்….” என்று எங்கோ நோக்கி சொல்லிக் கொண்டே ஓடி விட்டாள்.
அவளது நாணமான முகம் மனதுக்குள் எங்கோ அவன் ஒளித்து வைத்த முகத்தை நினைவு படுத்த அவனையும் அறியாமல் உதடுகளில் சிறு புன்னகை நெளிந்தது. எழுந்து பிரெஷ் ஆகி வெளியே வந்து ஹோவென்று பலத்த ஓசையுடன் பெய்து கொண்டிருந்த மழையை நோக்கினான். எப்போதும் அவன் ரசிக்கும் மழையைப் போல் இல்லாமல் மனதை அச்சுறுத்துவதாய் இருந்தது.
அவன் வந்ததைக் கண்ட லச்சுமி ஒரு தட்டில் வடையை வைத்து கயலிடம் நீட்டினார்.
“ஏட்டி… இந்தா…. இந்த வடையைக் கொண்டு போயி உன் வீட்டுக்காரனுக்குக் குடு……”
“இ… இல்ல… அத்த…… நீங்களே குடுங்க…..” என்றவளைப் புரியாமல் பார்த்தவர்,
“நான் அடுப்பைப் பார்க்கணும்ல தாயி…. நீயே போயி குடு….. அவன் என்ன உன்ன கடிச்சு வச்சிடவா போவுதான்….. இப்படி விலகி நின்னா நீ சொன்ன போல அவன் எப்படி உன் வழிக்கு வருவான்….. சந்தர்ப்பம் வரும்போது கெட்டியாப் புடிச்சுக்கணும்ல……” என்றவரைக் குழப்பமாய்ப் பார்த்தாள் கயல்விழி.
“இங்க பாரு தாயி…… என்னடா அத்த இப்படில்லாம் பேசுறாகளேன்னு நெனைக்காத….. உம்மேல அவனுக்கும் சின்ன பிரியம் கூட இல்லாமலா யாரையும் கட்டிக்க மாட்டேன்னு சொன்னவன் உன்னக் கட்டிக்க சம்மதம் சொல்லிருப்பான்….. எல்லார்கிட்டயும் வெறுப்பை முகமூடியா காட்டுறவன் உன்ன எப்பவாவது நோகடிச்சுப் பேசிருப்பானா…..”
“ரெண்டு பெரும் சந்தோஷமா இருக்கணும்னுதேன் அத்த சொல்லுதேன்… அவனை நம்பி கழுத்தை நீட்டிட்டே….. உன் வாழ்க்கை பாழாக விடக்கூடாது….. அவன்கிட்ட நீயா தான் நெருங்கிப் போவனும்….. அந்தக் கோட்டிப் பய மனச நீ முந்தானைல முடிஞ்சுகிட்டா தான் அது நடக்கும்…….”
“அது என்ன அத்த… முந்தானைல முடிஞ்சுக்கறது….. எனக்கு வெளங்கல…..” என்று குழப்பத்தோடு நோக்கியவளைக் கண்டு சிரித்தவர்,
“அதெல்லாம் போகப் போக உமக்கே தெரியும்லே….. என்கிட்டப் போயி வெளக்கம் கேக்குதா பாரு….” என்றவர் சிரிப்புடன் தட்டை அவள் கையில் கொடுத்துவிட்டு,
“என்னலே… யோசிச்சுட்டு நிக்கறவ…… புருஷனைக் கைக்குள்ள போட்டுக்கறதைதேன் அப்படி சொல்லுவாக…. நீனு அவன்கிட்ட போயி பேசு….. மழை விடாமப் பெய்ததும் ஒரு கணக்குல நல்லதாத்தேன் போச்சு…. வெளிய எங்கயும் போகாம இங்கனயே இருக்கான்ல….” என்றவர் அடுப்பை கவனிக்க, தயக்கத்துடன் மதியழகனை நோக்கி நடந்தாள் அவள்.
எப்போதும் ஆயிரம் முறை அத்தான் என்று அழைப்பவள், அப்போது ஏனோ வாய் வராமல் தொண்டையைக் கனைத்தாள்.
மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டே நாற்காலியில் அமர்ந்திருந்தவன் அவளைத் திரும்பி நோக்க தயக்கத்துடன் குனிந்து கொண்டு நின்றிருந்தவளின் இந்தப் புதிய முகம் அவனை ரசிக்க வைத்தது.
அவள் டீப்பாயில் தட்டை வைத்து விட்டு நிமிர, “ஏன்… கையில குடுக்க மாட்டியளோ…..” என்றான் அவன்.
அதைக் கேட்டவள் அவசரமாய் தட்டைக் கையில் எடுத்துக் கொடுக்க அவளை ஊடுருவும் தீர்க்கமான பார்வை ஒன்றைப் பார்த்துக் கொண்டே வாங்கிக் கொண்டான் அவன். ஊசியாய்த் துளைத்த அவன் பார்வையைத் தாங்க முடியாமல் தலையைத் தாழ்த்தியவள்,
“காப்பி எடுத்தாறேன்…..” என்று அடுக்களைக்குள் ஓடிவிட்டாள்.
அவனது அந்தப் பார்வை அவளது இதயத் துடிப்பை அதிகமாக்க மனதுக்குள் வெகுநாளாய் பாதுகாத்து வைத்திருந்த அந்தப் பழைய உணர்வு அவள் உடலெங்கும் ஓடியது.
“இது…. இந்தப் பார்வை…. இதுக்கு தான்…. அன்னைக்கும் நான் மயங்கி நின்னேன்….. இப்பவும் என் மனசு இப்படிப் படபடக்குதே…. இவனோட பார்வைக்கு இப்படி இரு சக்தியா…. ஹப்பா….. என்னவொரு பார்வை……” அவள் மனது அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.
மௌனமாய் காப்பி கலப்பவளை வியப்புடன் பார்த்த லச்சுமி, “கயலு….. மாமா ரூம்ல இருப்பாக…. அவருக்கும் இந்த வடையக் கொண்டு போயி குடுத்துட்டு வந்திரு தாயி….” என்று ஒரு தட்டில் வடையை வைத்து நீட்டினார்.
அதை வாங்கிக் கொண்டவள் முத்துப் பாண்டியின் அறைக்கு சென்று அதைக் காப்பியுடன் கொடுத்துவிட்டு மதியழகனுக்கான காப்பியுடன் அவனை நோக்கி நடந்தாள். ஏனோ கால்கள் நகருவேனா… என்று மெதுவாக செல்வது போலத் தோன்றிற்று.
அவனது அந்தப் பார்வையை மீண்டும் சந்திக்க ஒரு மனது காத்திருக்க, இன்னொரு மனதோ அந்தப் பார்வையின் வீரியம் தாங்க முடியாமல் தயங்கியது.
“அ…. அத்தான்……” கண்ணை மூடி அமர்ந்திருந்தவன் கயல்விழியின் அழைப்பில் கண்ணைத் திறந்தான்.
“கா…. காப்பி….” என்றவள் நீட்டிய காப்பியை வாங்கிக் கொண்டவன் எழுந்து நின்று மழையை வெறித்துக் கொண்டே அதைக் குடித்தான். தட்டில் வடை அப்படியே இருக்க, “ஏன் அத்தான்…. வடை சாப்பிடலையா….” என்றாள் பரிவுடன்.
“ப்ச்… வேண்டாம்…..” சலிப்புடன் கூறியவனின் முகத்தில் தெரிந்த வெறுமை அவள் மனதை வருத்த அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் அவள்.
அவளது பார்வையை உணர்ந்தவன், “எதுக்கு இங்க மழைக் காத்துல நிக்குதே…. உள்ள போ….” என்றான் கடினமான குரலில்.
“எனக்கு மட்டுந்தேன் மழைக்காத்து சேராதா அத்தான்…. உங்களுக்கு சேர்ந்துக்குமா…..” என்றவளை ஏறிட்டவன் ஒன்றும் கூறாமல் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்த மழையையே மீண்டும் வெறித்துக் கொண்டிருந்தான்.
காப்பியைக் குடித்துவிட்டு கிளாசை அங்கு வைத்துவிட்டு அறைக்கு சென்றவனின் பின்னாலேயே சென்றாள் கயல்விழி. அறைக்கு வந்து ஜன்னலின் அருகில் நின்று கொண்டிருந்தவனின் அருகில் வந்தவள்,
“அத்தான்….. உங்க மனசுல உள்ள வேதனைய என்னால புரிஞ்சுக்க முடியுது…. நடக்கறது எதுவுமே நம்ம கையில இல்ல…. நடந்ததையே நினைச்சுட்டு இருந்தா வாழ்க்கையே இல்ல…..”
“ஓ…. அம்மா எல்லாம் சொல்லிட்டாகளா….. அறிவுரை சொல்லறது எல்லார்க்கும் ஈஸிதேன்……. ஆனா அதை அனுபவிக்கறவங்களுக்கு இல்ல வலி தெரியும்……”
“நெசந்தேன்…. ஆனா……. உயிரோட இல்லாதவங்களுக்காக வருந்திட்டு உயிரோட உள்ளவுகளை நீங்க தண்டிச்சுகிட்டு இருக்கீங்க…… குத்தம் செய்தவரை தண்டிக்கறதா நினைச்சுட்டு செய்யாதவங்களையும் சேர்த்து தண்டிக்கறது எந்த விதத்துல நியாயம்…..”
“என்னலே உளருதே…… நான் என்னை தான தண்டிச்சேன்…..”
“நீங்க தனி ஆளு கிடையாது அத்தான்….. உமக்கு நீங்க குடுத்த தண்டன அத்தையையும், என்னையும் பாதிக்காதா….. யோசிச்சுப் பாருங்க…….” என்றாள் அவள்.
“இதப்பாரு கயலு…. எல்லாந் தெரிஞ்சுதான என்ன கட்டிகிட்ட….. உன்கிட்ட எந்த ஆலோசனையும் கேக்க நான் தயாராயில்ல…… நான் இப்படிதேன்….. சகிக்க முடியும்னா இரு….. இல்லன்னா….” என்று இழுத்தவன் மேலே ஏதும் சொல்லாமல், “அப்புறம் உன்னிஷ்டம்….” என்று நறுக்கென்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றுவிட அதிர்ச்சியுடன் நின்றிருந்தாள் அவள்.
இரவு உணவு உண்பதற்காய் லச்சுமி எத்தனயோ அழைத்தும் வராமல், “தலை வலிக்கிறது…. உணவு வேண்டாம்….” என்று மறுத்துவிட்டாள் கயல்விழி. அவளது கலங்கிய முகத்தைக் கண்டவர், அருகில் வந்து அமர்ந்தார்.
“என்னாச்சு தாயி…. திடீர்னு தல வலிக்குதுன்னு சொல்லுறவ….. மழைல கீது  நனஞ்சுட்டியா….” என்று அவள் அருகில் அமர்ந்து விசாரித்தவரின் அன்பில் நெகிழ்ந்து போனவள்,
“அத்த…… எ… எனக்கு அம்மாவப் பாக்கணும் போல இருக்கு….. தலை வலிச்சா அவுங்க மடில படுக்க வச்சு தைலம் தேச்சு விடுவாக…..” என்றாள் கயல்விழி.
“என்ன கண்ணு சொல்லுதே….. அம்மா மடிலதேன் படுப்பியா….. அத்த மடியிலயும் படுக்கலாந்தாயி…… இரு…. உனக்கு குடிக்க சூடா பால் எடுத்தாறேன்…… குடிச்சுட்டு அப்படியே உறங்கிக்க….” என்றவர் பாலைக் கொண்டு வந்து கொடுக்க குடித்துவிட்டு அவர் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள் அவள். அவர் சுகமாய் நெற்றியில் தைலம் தேய்த்து விட அப்படியே உறங்கிப் போனாள்.
இரவு உணவருந்த அமர்ந்த மதியழகனுக்கு எப்போதும் பரிமாறும் கயலைக் காணாமல் அன்னை பரிமாறியதால் அவரிடம் விசாரித்தான்.
“அம்மா…… எங்க உம்மருவ…. புருஷனுக்கு சாப்பாடு பரிமார்றது பொண்டாட்டியோட உரிமைன்னு பேசிட்டு இருப்பா…. ஆளக் காங்கல…..”
“பாவந்தம்பி….. சின்னப் புள்ள….. தல வலிக்குதுன்னு சாப்பிடாமக் கூட படுத்திருச்சு….. சூட்டிகையா, குறும்புத்தனத்தோட வீட்டுக்குள்ள வளர்ந்தவ…. இங்க என்னத் தவிர அவளோட பேசக் கூட யாரிருக்கா….. மனசுக்குள்ள எத்தன வெசனமா இருந்தாலும், சரி பண்ணிக்கலாம்னு நம்பிக்கையா பேசுற புள்ள…. என்ன தோணுச்சோ…….. அம்மா நெனப்பு வருதுன்னு சொல்லிட்டு அழுதுச்சு….. தைலம் தேச்சு விட்டேன்…. இப்ப உறங்கிட்டு இருக்கா……” என்றார் லச்சுமி.
அதைக் கேட்டதும் அவன் மனது கலங்க, சந்தோஷத்தைக் கொடுக்காவிட்டாலும் அவளை சங்கடப்படுத்தி பேசாமல் இருந்திருக்கலாமோ……. நான் சொன்னதிற்காக தான் வருத்தப் படுகிறாளோ…. என்று வேதனைப்பட்டான் அவன்.
இரண்டு இட்லியுடன் முடித்துக் கொண்டவன், அறைக்கு செல்ல அங்கே வந்து அமர்ந்தார் முத்துப் பாண்டி.
“என்னட்டி….. என்னாச்சு….. கயலு எங்க….. இந்த கோட்டிப்பய அவள ஏதாவது ஏசிப் புட்டானா……” என்றார்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல….. கயலு தல வலிக்குன்னு படுத்திருச்சு…. அதத்தேன் சொல்லிட்டு இருந்தன்….” என்றவர் அவருக்குப் பரிமாறினார்.
“ம்ம்…… எம்மருமக அவனை மாத்துவா… எம்மவன் பழைய போல என்னோட பேசுவான்னு தான் நானும் காத்துக் கெடக்கேன்….. செஞ்ச பாவத்தோட இவ வாழ்க்கைய கெடுத்த பாவமும் சேர்ந்துடக் கூடாது பாரு……” என்று வருத்தத்துடன் பேசியவரின் மனது லச்சுமிக்கும் புரிந்தது.
“வெசனப் படாதிய….. கயலு எல்லாத்தையும் சரி பண்ணுவா…… நம்ம புள்ள பழைய போல மாறுவான்…..” என்று ஆறுதல் கூறினார் லச்சுமி.
“ம்ம்…. நானும் அந்த நம்பிக்கைலதேன் இருக்கேன்……” என்றவர் சாப்பிடத் தொடங்கினார்.
சட்டென்று எதோ நினைவு வந்தவர், “ஏட்டி….. ஒங்கிட்ட ஒண்ணு சொல்லனும்னு இருந்தேன்….. நம்ம சோளம் போட்டிருக்குற வயல டவுணுல ஒருத்தக விலைக்கு கேட்டாக….. ஏதோ கூல் டிரிங்க்ஸ் பாக்டரி தொடங்கப் போறாகளாம்……. நமக்கு ரெண்டு பக்கத்துல உள்ள எடத்தையும் வாங்கிட்டாகளாம்….. நடுவுல இந்த பத்து ஏக்கரும் கெடச்சா நல்லாருக்கும்னு நெனைக்குதாவ…… சொத்துக்கு சொந்தக்காரி நீதான…. பாட்டன் சொத்த விக்கறதுக்கு பேரன் வேற சம்மதிக்கணுமே….. ஒங்கிட்ட கேக்காம நான் என்ன சொல்ல முடியும்……”

Advertisement