Advertisement

அவளது அழுகைக் குரலைக் கேட்டு பக்கத்து ஆத்து மாமா ஓடிவர, பின்னாலேயே பத்து மாமியும் வேண்டா வெறுப்புடன் வந்தார்.
“என்ன சிந்து….. என்னாச்சு…..” என்று மாமா முன்னில் கேட்க,
“ஏன்னா…. நீங்க செத்த இந்தப் பக்கம் வாங்கோ…… பொம்மனாட்டி கிட்ட உங்களுக்கு என்ன பேச்சு…. நான் அவகிட்டப் பேசிக்கறேன்….” என்றார் பத்மா.
பத்மாவின் இந்தப் புதிய முகம் சிந்துவிற்கு வியப்பாய் இருந்தது. எப்போதும் மகளைப் போல சொந்தம் கொண்டாடிப் பேசுபவர், இப்போது அவளது கணவர் பேசுவதை கூட சந்தேகத்தோடு தடுப்பது போலக் கூசிற்று.
“மாமி….. அப்பாவை ரொம்ப நாழியா எழுப்பிண்டு இருக்கேன்…… அசையாமப் படுத்திண்டு இருக்கார்….. நீங்க செத்தப் பாருங்கோளேன்…..” என்றவளின் கண்ணீர் முகம் அவரையும் சற்று சீரியசாக்க மாமாவும் மாமியும் ஸ்ரீதரனை எழுப்ப முயற்சி செய்ய அவர் அசையவே இல்லை.
மூக்கில் விரல் வைத்துப் பார்த்த மாமா, “பெருமாளே…… இவரை உன்கிட்ட  அழைச்சுண்டியா…..” என்றார் அதிர்ச்சியுடன்.
அதைக் கேட்டதும் சிந்து, “அப்பா……” என்று கதறி அழத் தொடங்க, மேசையின் மீதிருந்த உறக்க குளிகையின் குப்பி திறந்து கிடப்பதைப் பார்த்த மாமா,
“இப்படி அநியாயமா தூக்க மாத்திரைய போட்டுண்டு உயிரப் போக்கிட்டியே ஸ்ரீதரா…..” எனக் கலங்க அதைக் கேட்டு திடுக்கிட்டவள்,
“என்ன சொல்லறேள் மாமா…….. அப்பா தற்கொலை பண்ணிண்டாரா…. எதுக்கு…..” என்றாள் அதிர்ச்சியுடன்.
“இத்தனை பெரிய அவமானத்துக்குப் பிறகு எந்தத் தோப்பனாரும் இதைத்தானே செய்வன்…. அநியாயமா நீயே உன் தோப்பனார் சாவுக்குக் காரணமாகிட்டியேடி……”
“என்ன சொல்லறேள் மாமி…. நேக்கு ஒண்ணும் விளங்கல…. கொஞ்சம் புரியுறா மாதிரி சொல்லுங்கோளேன்…..” என்றாள் கண்ணில் நிற்காமல் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.
பத்து மாமி நடந்ததை எல்லாம் சொல்லி முடிக்க, அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தவள், அப்படியே மூலையில் சென்று அமர்ந்தாள். கண்கள் மட்டும் கண்ணீரை நிறுத்தாமல் வெளியேற்றிக் கொண்டிருக்க சிலையென சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.
அவளது மனதுக்குள், “நானே என் அப்பாவைக் கொன்னுட்டேனா…. என்னோட காதல் என் அப்பாவையே அழிச்சிடுச்சா….. பணத்துக்காகவா நான் அவரைக் காதலித்தேன்….. எனக்கு பணம் இருக்கான்னு யோசிக்காம அவர் மேல காதல் வந்தது தப்புதானா……. அப்படின்னா நான் மோசமானவளா…. அப்பாவும் என்னை நம்பாம, என்கிட்டே இதைப் பத்தி கேக்காம இப்படி ஒரு முடிவுக்கு வந்துட்டாரே…..” என்று அவள் மனம் அவளையே குற்றப்படுத்தி, வேதனைப் படுத்திக் கொண்டிருந்தது.
அவருக்கு இறுதிச் சடங்குகள் எல்லாம் முடியும் வரை பத்து மாமியின் கணவர் உடன் இருந்து பார்த்துக் கொண்டார். வருபவர்கள் எல்லாம் சிந்துவைக் குற்றப் படுத்தும் பார்வை நோக்க அவள் அந்தப் பார்வையில் பொசுங்கிக் கொண்டிருந்தாள். அவள் காதுபடவே அசிங்கமாக சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.
இறுதிக் காரியத்திற்காய் சிந்துவின் தந்தை உடலை எடுத்துச் சென்றதும் ஒவ்வொருத்தரும் அவரவர் வீட்டுக்கு செல்லத் தொடங்கினர். அதுவரை கண்ணீரிலேயே தனது தந்தையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தவள், அவரது உடலை வீட்டை விட்டு எடுத்துச் சென்றதும் சட்டென்று அடுக்களையில் இருந்த கெரசினை எடுத்து பின்னில் இருந்த புழக்கடைக்கு சென்று மேலே ஊற்றிக் கொண்டு தீக்குச்சியை உரசி விட்டாள்.
மனதோடு சேர்ந்து உடலும் தீயில் கொழுந்துவிட்டு எரிய அதைக் கண்டு மற்றவர்கள் அணைக்க ஓடி வருவதற்குள் அவளை அந்த நெருப்பு அன்போடு உள்வாங்கத் தொடங்கியிருந்தது. நெஞ்சம் நிறையக் காதலையும் கனவையும் சுமந்திருந்த அந்த உயிர் உடலை விட்டுப் பிரிந்து போனது.
————————————————————————————————————————
லச்சுமி கண்கள் கலங்க சொல்லிக் கொண்டிருந்ததை அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்த கயலின் கண்களும் கலங்கி இருந்தன. நெஞ்சம் கனக்க லச்சுமி சொல்வதை நிறுத்தியதும் அவஸ்தையோடு அங்கே ஒரு மௌனம் சூழ்ந்தது.
அதை உடைத்துக் கொண்டு பேசத் தொடங்கினாள் கயல்விழி.
“என்ன அத்த இது….. அநியாயமா ரெண்டு உசுரு போக மாமா காரணமா இருந்துட்டாகளே….. என்னதான் காதல்னா கொலைக்குத்தம் அளவுக்கு யோசிச்சாலும் இப்படி அவமானப்படுத்திப் பேசியே ரெண்டு உயிர் போகக் காரணம் ஆயிட்டாரே……”
“ம்ம்…..” என்று நீண்டவொரு பெருமூச்சை விட்டவர், “அவுங்க ரெண்டு பேரும் தற்கொலை பண்ணிக்கிட்டது தெரிஞ்சதும் இவுக மனசொடிஞ்சு போயிட்டாக….. பணம் காசுன்னா இவுக பெருசா நினைப்பாகதேன்…. அந்த சௌமியா பொண்ணு சிந்துவைப் பத்தி ரொம்ப மோசமா சொல்லிக் கொடுத்து இவர் போயி அங்க பேசி அவுங்க தற்கொலை செய்து…. எல்லாம் நினைக்க நினைக்க வேதனையா இருக்கு…… இதுல பெரிய கொடுமை என்னன்னு கேட்டா…. மதி அந்தப் பொண்ணைக் காதலிக்கவே இல்லை……”
அவர் சொன்னதில் இதுவரை கனத்துப் போயிருந்த மனது இறுதியில் அவர் சொன்ன வார்த்தையில் லேசானது போல இருந்தது கயலுக்கு. “என் அத்தான் மனசு எனக்கு மட்டும்தான் காத்திருக்கோ…..” என்று நினைத்தவள்,
“என்னத்தே சொல்லுதிய…. அத்தான் அந்தப் பொண்ண விரும்பலயா….. மாமா பேசினது அத்தானுக்கு எப்போ தெரிஞ்சது…… அவர் மாமாகிட்ட சண்டை போட்டாரா…..” என்றாள்.
“சண்டையா……. அவனுக்கு விஷயம் தெரிஞ்சதும் கொடுவாளை எடுத்திட்டு வெட்டவே வந்துட்டான்….. அநியாயமா அவன் காரணமா ரெண்டு உசுரு போயிருச்சேன்னு வேதனைல துடிச்சுப் போயிட்டான்….. அவனுக்கு இதுல எந்த சம்மந்தமும் இல்லேன்னாலும் அவன்கிட்ட எதையும் விசாரிக்காம எவளோ ஒருத்தி சொன்னதை நம்பி அந்த பொண்ணு வீட்டுல போயி எப்படி அவமானப் படுத்தலாம்னு அறுவாளை எடுத்து அவன் அப்பாவ வெட்டவே வந்துட்டான்……”
“அய்யய்யோ…. என்னத்தே சொல்லுதிய……”
“ம்ம்…. அப்புறம் அவனோட கால்ல விழுகாத குறையா நான் கெஞ்சிக் கூத்தாடிதேன் அருவாளைக் கீழவே போட்டான்….. எதோ கண் காணாத எடத்துக்குப் போயிருவேன்னு சொல்லி மெரட்டுனவன், பொறவு அப்படிப் போயிட்டா இவருக்கு அந்த வலி மறந்து போயிரும்னு போக மாட்டேன்னு சொல்லிட்டான்…..”
“ஓ… அப்படியா…..”
“ம்ம்…. அவருக்கு வேதனையை கொடுக்கணும்….. அவரை காயப்படுத்தி பழி வாங்கணுமின்னுட்டு அவரு கண்ணு முன்னாடியே நெதம் குடிச்சு சீரழியறான்…… பணம் இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணுவாரா…… இப்ப நிம்மதி கெடைக்குதான்னு பாப்பம்னு வேணும்ணே இப்படிப் பண்ணிட்டுத் திரியுறான்….”
“ம்ம்….. அவரும் மறைமுகமா இந்தப் பாவத்துக்கு காரணமாயிட்டாரே….. அதான் அத்தை…… சீக்கிரமே சரியாகிடுவாரு….” என்றாள் நம்பிக்கையுடன்.
“ம்ம்…. எத்தனையோ பொண்ணு பார்த்தும் யாரையும் கண்ணாலம் கட்டிக்க மாட்டேன்னு சொன்னவன், உன் அக்கா கண்ணாலம் நின்னு போயிரும்….. அதுக்காக கயலைக் கட்டிக்கணும்னு நான் எந்தலையில சத்தியம் பண்ணின பொறவுதான் உன்னக் கட்டிக்கவே சம்மதிச்சான்……”
“ம்ம்………”
“எம்பையன் தங்கம்மா….. அவனுக்கு மத்தவங்க வேதனையைத் தாங்கிக்க முடியாது…. அப்படிப்பட்டவன் ரெண்டு உசுரு போகத் தானும் ஒரு காரணமா ஆயிட்டோமேன்னு மனசொடிஞ்சு போயி தான் இப்படிப் பண்ணிட்டு திரியுறான்…. அவனை நீதான் மாத்திப் பழைய மதியா கொண்டு வரணும்….. பண்ணுவியில்ல தாயி……” என்றார் மருமகளின் கையை அன்போடு பற்றிக் கொண்டு.
“நிச்சயமாப் பண்ணுவேன் அத்த…… உங்க பழைய புள்ளையா என் அத்தானை மாத்திக் காட்டுவேன்……” என்றாள் அவள்.
“ம்ம்… ஒங்கிட்ட எல்லாம் சொன்னபின்னால மனசுல ஒரு பாரம் கொறைஞ்ச போல இருக்கு தாயி…… எல்லாம் சரியாவணும்னுதேன் நெதம் இந்த மனசு கெடந்து துடிச்சிட்டு இருக்கு….. இந்த வீட்டுலயும் பேரன், பேத்திகள் எல்லாம் ஓடி வெளையாடனும்…… சந்தோஷம் நெறஞ்சிருக்கணும்….. இதத் தவிர இனி எம்மனசுல என்ன ஆசை இருக்கப் போவுது…. சொல்லு….”
“ம்ம்…. எல்லாம் சரியாவும் அத்த….. நீங்க வெசனப்படாம இருங்க…… என்றாள் அவள் சமாதானமாக.
“சரி தாயி…. ரொம்ப நேரம் ஆச்சு…… சீக்கிரம் சமையலை முடிச்சிடுவோம்…. காலைலயே ரெண்டு பேரும் சாப்பிடல….. நீ அந்தக் காயெல்லாம் அறிஞ்சு கொண்டா…. நான் சாப்பாட்டுக்கு அரிசி எடுத்திட்டு வந்திடறேன்….” என்றவர் எழுந்து போக அவளது மனதில் அத்தனை வேதனையிலும் எங்கோ சிறு சந்தோசம் துளிர் விட குழப்பத்துடனேயே காய்கறிகளை அறியத் தொடங்கினாள்.
————————————————————————————————————————நாட்கள் அதன் பாட்டில் நகரத் தொடங்கியது. காலை நீவிக் கொண்டே முன்னில் இருந்த திண்ணையில் அமர்ந்திருந்தார் பேச்சிப்பாட்டி.
“ஏலே… மருது…… ஒங்கிட்ட டவுனுல இருந்து எனக்கு காலுக்கு தேய்க்க எண்ண வாங்கிட்டு வரச் சொன்னனே….. வாங்கிட்டு வந்தியாலே……” சைக்கிளை நிறுத்திவிட்டு வந்த மருதுவிடம் விசாரித்தார் பேச்சிப் பாட்டி.
“ம்ம்… வாங்கியாந்தேன்…. இந்தா ஆத்தா…” என்று ஒரு எண்ணை குப்பியை எடுத்துக் கொடுத்தவன், கயல் வருவதைக் கண்டதும் முகம் மலர்ந்தான்.
“கயலு…… வா தாயி…. நல்லார்க்கியா….. மாப்பிள்ள நல்லாருக்காரா…..” என விசாரிக்க, பேச்சியம்மாவின் முகமும் கயலைக் கண்டதும் மலர்ந்தது.
“என்னலே….. பொறந்த வூடு எங்கிருக்குன்னு ஏதாவது நெனப்பிருக்கா…. நாங்கல்லாம் யாருன்னாவது தெரியுதா….” என்று கிண்டலாய்க் கேட்டார்.
“ம்ம்…. நானொண்ணும் பழசெல்லாம் மறந்து போறவ கெடையாது…. அதான் எல்லாரையும் பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்னு சொல்லு மருதுண்ணே……” என்றாள் அவளும் கிண்டலாக.
“ஹூக்கும்…. கண்ணாலம் ஆகிப் போனாலும் உம்ம எகத்தாளத்துக்கு ஒரு குறைச்சலும் இல்லட்டி…. உம்மாமியார் சரியில்ல….. நல்லா வாயிலேயே நங்கு நங்குன்னு நாலு குத்து குத்தியிருந்தா இந்தப் பேச்சு உனக்கு வராதுல்ல…..”
“ஏய் கெழவி…. எல்லா மாமியாரும் உன்ன மாதிரி வில்லியாவே இருப்பாகன்னு நெனச்சியா….. எம்மாமியார் தங்கம்….. அதுல உமக்கென்ன வயித்தெரிச்சலு…..” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டவள்,
“சரி…. மருதண்ணன காலு வலிக்கு எண்ணை வாங்கிட்டு வரச் சொல்லிருக்கிய…… நான் வாங்கிக் குடுத்த எண்ணை என்னாச்சு….” என்றாள் அக்கறையுடன்.
“அத ஏலே கேக்குத…… முந்தாநாள் கால்ல எண்ண தேய்க்கும்போது கையில இருந்து வழுக்கி கீழ விழுந்து எல்லாம் கொட்டிப் போயிருச்சு…… அதான் மருது கிட்ட வாங்கியார சொன்னேன்…. சரி நீ போயி உன் அம்மைய பாரு….” என்றார்.
“ம்ம்… சரி ஆத்தா….” என்றவள் அடுக்களையில் அன்னையைக் காணாமல் மாடிக்கு சென்றாள். அங்கே அவர மொட்டை மாடியில் துணி காயப்போட்டுக் கொண்டிருக்க, மெல்ல அடிவைத்துச் சென்றவள் பின்னிலிருந்து அவர் கண்ணைப் பொத்தினாள்.
“ஏய்…. யாருலே இது….. கண்ணப் பொத்தி வெளையாடுத…. விடுலே….” என்று கையைப் பிடித்தவர்,
“கயலு……” என்று அன்புடன் அழைக்க, அவர் முன்னால் வந்து நின்றவள்,
“ஏய்… ராசாத்தி…. எப்படிலே இருக்கவ…. சௌக்கியமா….” என்றாள்.
“அடிக்கழுத… அம்மைய பேர் சொல்லியா கூப்பிடுத,…..” என்று சிரித்தார் ராசாத்தி.
“ஆமா…. இப்ப நானும் பெரிய மனுஷி தாம்லே… பேர் சொல்லிக் கூப்பிடுவம்ல….” என்றாள் சின்னவள்.
“ஓஹோ…. நீ பெரியவளா… இது எப்பத்துல இருந்து…..” என்றார் ராசாத்தி.
“எனக்குக் கண்ணாலம் கட்டி வச்சியளே…… அப்பல இருந்துதேன்…..”
“ஓ….. அப்படியா…… சரிங்க பெரிய மனுஷி…. ஒங்க வீட்டுல எல்லாரும் சொகமுங்களா…. மாப்பிள்ள எப்படி இருக்காருங்க….” என்று விசாரிக்க அவள் வந்ததும் சிறிது நேரத்தில் வீடே கலகலத்தது. 
மதியம் வரை பேசிக் கொண்டிருந்தவள், அன்னை செய்து கொடுத்த மதிய உணவை ஒரு தூக்கில் எடுத்துக் கொண்டு தந்தையைக் காணக் கிளம்பினாள்.
“ஏட்டி…. இம்புட்டு சொல்லியும் ஒரு வாயி உங்காமப் போவுத…… சாப்பிட்டுப் போ புள்ள….” என்றார் ராசாத்தி பரிவுடன்.
“வேண்டாம்மா….. நானும் அத்தையும் ஒண்ணாதேன் சாப்பிடுவம்….. அவுக எனக்காகக் காத்திட்டிருப்பாக…… நான் போற வழியில ஆயில் மில்லுல அப்பாவப் பாத்து சாப்பாட்டக் குடுத்துட்டு வீட்டுக்குப் போவுதேன்……” என்று பிடிவாதமாய் கிளம்பிய மகளின் புகுந்த வீட்டு அன்பை மனதுக்குள் மெச்சிக் கொண்டார் ராசாத்தி.
“இங்க பாருலே….. நீ உம்மாமியாரக் கைக்குள்ள போட்டுகிட்டா மட்டும் போதாது…. உம்புருஷனையும் மயக்கி கைக்குள்ள போட்டுக்கணும்ல…. அப்பத்தான் வாழ்க்க இனிக்கும்….. புருஷனை முந்தானைல முடிஞ்சு வக்குறதுல தான் வாழ்க்கையோட சந்தோஷமே அடங்கி இருக்கு….” என்றார் பேச்சியம்மா.
அதை மனதில் பதித்துக் கொண்டவள், “முந்தானைல முடிஞ்சு வக்குறதுன்னா என்னவாருக்கும்…. வெளங்கலையே….. கெழவி சொல்லுதுன்னா எப்படியும் வில்லங்கமாதேன் இருக்கும்….. சரிப் பாத்துக்குவம்……” என்று யோசித்துக் கொண்டே நடந்தாள். அவர்கள் தோட்டத்துக்கு முன்னில் இருந்த வயலை சிலர் அளந்து கொண்டிருக்க அதை வியப்புடன் பார்த்தவள் எதிரில் வந்த வள்ளியிடம் என்னவென்று கேட்டாள்.
“அட உனக்கு விஷயமே தெரியாதா….. நம்ம ஊருல பெரிய ஜூஸ் கம்பெனி கட்டப் போறாகளாம்….. அதுக்கு தான் நம்ம பழனிசாமி அண்ணன் நிலத்தை எல்லாம் விலைக்கு வாங்கிட்டு அளந்துட்டு இருக்குறாங்க….”
“என்னலே சொல்லுதே….. அதுக்கு நல்லா வெளைச்சல் கொடுக்குற நெலத்தையா விப்பாக…… நீ தெரிஞ்சு தான் பேசுதியா……”
“அட ஆமான்னா….. நம்ம ஊர் வீடியோவை எதோ டிவியில காட்டினப்போ அவுகளுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சாம்….. இங்கே ஜூஸ் பாக்டரி தொடங்கினா நெறையப் பேருக்கு வேலை கொடுக்கலாம்னு இங்க தொடங்கப் போறதா சொன்னாக……”
“ஓ… அப்படியா….. சரி… நீ எப்படி இருக்க வள்ளி…… உன் கண்ணாலம் சரியாகிடுச்சா…..” என்று அவளுடன் பொதுவாய் விசாரித்துக் கொண்டே ஆயில் மில்லை நோக்கி நடக்கத் தொடங்கினாள். அவர்கள் கிராமத்தில் எல்லாமே விவசாயமாக இருக்க, புதியதாய் ஒரு குளிர்பானக் கம்பெனி தொடங்கப் போவதாக வள்ளி சொன்ன விஷயம் அவள் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.
என் முதலும் முடிவுமாய்….
என் கனவும் நிஜமுமாய்……
கற்பனைகளின் வடிவமாய்…
எல்லாமும் ஆகிறாய் நீ…..
எழுத வந்த வார்த்தைகள்
எல்லாம் உன்னை சொல்ல…..
எண்ணுகின்ற நினைவுகள்
எல்லாம் நீயே நிறைகிறாய்…..
சொல்லிய வார்த்தை எல்லாம்
கொஞ்சம் என்றால் –
சொல்லாமல் நெஞ்சில் – அமுத
சுரபியாய் நிறைகிறது காதல்……
என்னை உன்னில் தொலைத்துவிட்டு
உன்னில் என்னை தேடுகிறேன்…..
எத்தனை தேடியும் என் பார்வை மட்டும்
உன் நெஞ்சை வந்து அடையவேயில்லை…..
உன்னைத் தழுவிப் பிரியும் பார்வை
எல்லாம் என்னுள் பூந்தோட்டமாய் மலர
மணம் மட்டும் ஏனோ உன்
மனதை அடையவே இல்லையோ….

Advertisement