Advertisement

“ம்ம்…. சரி… நான் வாரேன்…..”
“ஏன் கயலு…… உன் அக்காக்கு கண்ணாலம் நிச்சயம் ஆயிடுச்சு…. அடுத்து உன் ரூட்டு கிளியரு தானே…… இந்த அத்தானுக்கு ஏதாவது சான்ஸ் இருக்கா……”
“ஹூக்கும்… நெனப்பு தான் பொழப்பக் கெடுக்குமாம்….. சும்மா எதையும் மனசுல நினைச்சுக்காம சோலியப் பாருங்க….. என்ன, ஆள விடுங்க…. நான் கிளம்புதேன்….”
“ம்ம்… எப்பவும் இப்படி சிக்காமலே பதில் சொல்லுலே…. கோவிலுக்குப் போறேன்னு சொன்னியே… எந்தக் கோவிலுக்கு போறீய….”
“எல்லாம் நம்ம தென்காசி விஸ்வநாதர் கோவிலுக்குத்தேன்….. சரி….. பொத்தான்….. நான் கிளம்புதேன்…. அந்தக் கிழவி இப்பவே என்ன வறுத்துக் கொட்டியிருக்கும்….” என்றவள் பூவுடன் வேகமாய் வீட்டை நோக்கி நடந்தாள்.
“அம்மா….. நான் கிளம்பிட்டேன்….. கயலு வந்துட்டாளா………” கட்டியிருந்த புடவையை சரி செய்து கொண்டே வெளியே வந்தாள் மலர்விழி.
அப்போது அறைக்குள் இருந்து வெளியே வந்த பேச்சியம்மா, “அட… அட…. என் பேத்தியப் பார்க்க ரெண்டு கண்ணு போதாது…. என் கண்ணு…. தங்கச் சிலையாட்டமா இருக்கலே…..” என்றவர் அவள் கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தார்.
“தலையில பூ வச்சுக்கோ கண்ணு…” என்றவர், “இங்க வாலே…. கழுத்துல இப்படிதான் ஒத்த செயினோட வெளிய போறவளா….. கண்ணாலம் முடிவான பொண்ணு…. நாலு பேர் பார்க்கும்போது நகை நட்டுன்னு இருந்தாத்தானே மருவாத…..” என்றவர், அவளை அழைத்துக் கொண்டு அவரது அறைக்கு கூட்டிச் சென்றார்.
அதைக் கேட்டு மலர்விழி சிரிக்க, ராசாத்தியின் மனது பொருமியது.
“இந்த கயலை வேற இன்னும் காணலயே….” என்று நினைக்கும் போதே மருது வருவது தெரிந்தது.
வேகமாய் முன் வாசலுக்கு விரைந்தவர், “என்னலே…. அந்தக் கழுத எங்கே…. கோவிலுக்குப் போகும்போதும் ஏச்சு வாங்காமப் போக விட மாட்டா போலியே…..” என்று தவிப்போடு கேட்டார்.
“ஆத்தா…. எதுக்கு நீங்க இப்படி கோவப் படுறிய…. கயலு பின்னாடி வந்திட்டு இருக்கு…. அய்யா இன்னும் வரலியா…..” என்று கேட்டு முடிப்பதற்குள் சுந்தரேசன் டாக்சியுடன் வந்திருந்தார்.
டாக்ஸி வந்த சத்தத்தைக் கேட்டு வெளியே வந்தார் பேச்சி.
“ஏய்யா…. சுந்தரு…… வண்டியக் கூட்டிட்டு வர இம்புட்டு நேரமாய்யா……”
“ம்ம்…. ஒரு சின்ன சோலி இருந்துச்சு ஆத்தா….. முடிச்சிட்டு வர கொஞ்சம் லேட் ஆயிருச்சு……”
“ஏங்க…. இந்தாங்க….. மோரு…..” கணவனைக் கண்டதும் வேகமாய் மோரைக் கொண்டு வந்து கொடுத்தார் ராசாத்தி.
அதை வாங்கிக் குடித்தவர், “என்னட்டி….. கிளம்ப வேண்டியது தானே…. கயலு எங்கே…..” என்றார் அங்கே மூத்தவள் மட்டும் நிற்பதைக் கண்டு.
ராசாத்தி என்ன சொல்லுவது எனத் தயக்கத்தோடு பார்க்க, நீட்டி முழக்கி பேச்சியம்மா பேசத் தொடங்கி விட்டார்.
“கடகட்ட மத்தாளம் கண்ணாலத்துக்குப் போச்சாம்….. கொட்டத் தெரியாமப் போய் ஒட்டுத் திண்ணையில ஏறிக்கிச்சாம்ங்கற கதையால்ல இருக்கு…… பூவப் பறிக்கப் போனாளா… இல்ல செடிய வளர்த்தி பூ பூக்குற வரைக்கும் காத்திருந்து பறிச்சிட்டு வரப் போனாளா…… அய்யா… சுந்தரு… நீ அந்த கருவாச்சிய ரொம்பதேன் செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கே….. கோவிலுக்குப் போவணும்னு சொல்லியும் இன்னும் அவள ஆளக் காணம் பாரு……”
“ஏய் கிழவி…. அதுக்குள்ளே உன் திருவாயத் தொறந்துட்டியா…… நான் ஒண்ணும் உம்பட வீட்டுக்காரரு மாதிரி கட்டக் கருப்பு இல்ல…. உன் பேத்திய விடக் கொஞ்சம் கலரு கம்மி….. அதுக்கு என்னய கருவாச்சின்னு சொல்லுதே…..” என்று எகிறினாள் கயல்விழி வீட்டுக்குள் வந்ததும் வராததுமாக.
“ஏய்…. என்னலே பேசுதே….. அந்த வாரியல எடுத்தேன்…. பிச்சிடுவம்ல…. என் ராசா கருப்பா இருந்தாலும் களையா வாட்டசாட்டமா இருப்பாக….. உன்னப்போல குச்சிக்கு தாவணி கட்டிவுட்ட போலயா இருப்பாக…..” என்று அவரும் பதில் பேச இடையில் புகுந்தார் சுந்தரேசன்.
“ரெண்டு பேரும் செத்த சும்மா இருக்கியளா….. கோவிலுக்குப் போறதா… வேண்டாமா….. எப்பப் பார்த்தாலும் ஒண்ணுக்கொண்ணு எசிலி போட்டுப் பேசிக்கிட்டு…… கயலு…. நீனு கிளம்பி வரப் போவுதியா இல்லியா…….”
“அப்பா… நான் இதோ இப்ப வந்திடுதேன்….” என்ற கயல் அறைக்குள் சென்றவள் நிமிஷத்தில் தாவணியை மட்டும் மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள்.
“மலரு…. கண்ணாலப் பத்திரிகை எல்லாம் எடுத்து பையில வச்சிட்டியாலே…. கிளம்பலாமா……”
“ம்ம்… வச்சிட்டேன்பா…..” என்ற மலரின் முகத்தில் சிறு நாணம் எட்டிப் பார்த்தது.
“அதெல்லாம் என் பேத்தி சரியாதேன் செஞ்சிருப்பா…… மலரு…. முதல் பத்திரிகைய சாமிக்குப் வக்கப் போறிய…… நல்லா கடவுள வேண்டிக்க தாயி…..” என்றார் பேச்சி.
“சரி…. அப்பத்தா….” என்றவள் அவரிடம் விடைபெற்று காரை நோக்கி நகர்ந்தாள்.
“அத்த….. நான் வாரேன்….” என்று ராசாத்தியும் அவரிடம் சொல்லி விட்டு நகர,
“நானும் வாரேன்….. பாத்து பத்திரமா இரு…. கிழவி….” என்று சின்னவள் சொன்னதும், அவரையும் அறியாமல் சிறு புன்னகை அவர் முகத்தில் படர்ந்தது.
“பாத்து, பத்திரமா போயிட்டு வாங்கலே…..” என்று அவர் விடை கொடுத்ததும் சுந்தரேசன் முன்னில் அமர்ந்து கொள்ள பெண்கள் மூவரும் பின்னில் அமர்ந்தனர்.
வண்டி கேட்டுக்கு வெளியே சென்றதும் கேட்டை சாத்திவிட்டு வந்தான் மருது.
“ஏலேய் மருது… இன்னைக்கு தோட்டத்துல எத்தன பேரு வந்திருக்காகன்னு பார்த்தியா……”
“பாத்துட்டேன் ஆத்தா…… அய்யாகிட்டே கணக்கு சொல்லிட்டேன்…. செத்த நேரம் கழிச்சு செடிக்கெல்லாம் உரம் போடணும்னு அய்யா சொல்லிட்டுப் போனாரு….. இங்க ஏதும் சோலி இருக்கா ஆத்தா…..” என்றான் மரியாதையோடு.
“இங்க ஒண்ணும் இல்லலே…. நான் செத்த படுக்கப் போவுதேன்….. நீனு தோட்டத்துக்கு கிளம்பறதுன்னா கெளம்புலே…….” என்றார்.
“சரி… ஆத்தா….” என்றவன் கேட்டை சாத்திவிட்டு தோட்டத்திற்கு கிளம்பினான். முன் கதவைத் தாழிட்டுவிட்டு உள்ளே சென்றார் பேச்சியம்மா.
காரில் தொண தொணவென்று கயல்விழி அன்னையிடம் பேசிக் கொண்டே இருக்க, மலர்விழியோ அவளது மணாளன் ராஜனை எண்ணிக் கனவு கண்டு கொண்டிருந்தாள். சிறிது தூரம் சென்றதும் வயல் வரப்பின் சகதியில் யாரோ விழுந்து கிடக்கவே  டிரைவரிடம் வண்டியை நிறுத்த சொன்னார் சுந்தரேசன்.
“ஏம்லே…. அங்கன வரப்புல யாரோ விழுந்து கிடக்காய்ங்க…. கொஞ்சம் நிறுத்து…. யாருன்னு பாப்பம்……” என்று கூறிக் கொண்டே அவர் வண்டியை விட்டு இறங்க, அதற்குள் கயல்விழி பின்னில் இறங்கி இருந்தாள்.
அங்கே குப்புற விழுந்து கிடந்தவனின் அருகே சென்றார் சுந்தரேசன்.
“ஏலே….. யாருலே… இந்நேரத்துல இங்கே விழுந்து கிடக்கவ…. எந்திரிலே…..” என்று கூறிக் கொண்டே அவனைத் திருப்பியவர் முகம் யோசனையாய் சுருங்க, அவனிடம் இருந்து வீசிய மதுவின் நெடியில் அவரது மூக்கு அவஸ்தையாய் சுவாசித்தது.
“இவனா……” என்று அவருக்குப் பின்னில் இருந்து கயல்விழி முகத்தை சுளிக்க,
“இவன் நம்ம முத்துப்பாண்டி மவன் தானே…. கயலு…..” என்றார் மகளிடம் கேள்வியாக.
அதற்குள் காரிலிருந்து இறங்கி வந்த ராசாத்தி, அவனை எழுப்ப முயன்று கொண்டிருந்த கணவனைக் கண்டு, “யாருலே…. எவனாவது தண்ணியடிச்சிட்டுக் கெடக்கானா…..” என்றார் மகளிடம்.
“அம்மா…. அந்த முத்துப் பாண்டி மவன் மதியழகன் தான்…… மூக்கு முட்டக் குடிச்சிட்டு கிடக்கான்…… காலங்கார்த்தால… ச்ச்சே….. என்ன ஜென்மமோ….. அந்த ஆயி, அப்பன் மனசு என்ன பாடுபடும்னு கொஞ்சம் கூட யோசிக்காம இப்படில்லாம் பண்ணிட்டுத் திரியறானே…..” பொருமினாள் கயல்விழி.
அதற்குள் அங்கே வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஆட்கள் சிலர் ஓடிவர, அவர்களிடம் பொறுப்பை விட்டுவிட்டு கனத்த மனதுடன் காரில் ஏறி அமர்ந்தார் சுந்தரேசன். ராசாத்தியும், கயல்விழியும் காரில் ஏற, காரைக் கிளப்பினார் டிரைவர்.
“என்னங்க….. இந்தப் புள்ள இப்படிக் குடிச்சி அழிஞ்சு போறான்…… பாவங்க லச்சுமிக்கா….. ஒரே ஒரு பையனப் பெத்துட்டு அவனும் இப்படி இருக்கறதப் பாத்து அவங்க மனசு எப்படித் துடிக்கும்…. என்னதான் இவங்க குடும்பம் ஊருலயே பெரிய பணக்காரங்க, பண்ணக்காரங்கன்னு இருந்தாலும் மனசுல நிம்மதி இருக்குமா….” என்றவரின் வேதனை சுந்தரேசனுக்கும் புரிந்தது.
“என்ன பண்ணறது ராசாத்தி….. எல்லாம் அவங்க அப்பன் முத்துப்பாண்டி செய்த பாவம்….. இந்தப் புள்ளயோட வாழ்க்கையையும் சேர்ந்துல்ல அழியுது…..”
“என்னப்பா சொல்லுதிய….. அப்பன் தப்பு பண்ணினா, மகனை பாதிக்கும்னு….. மகன் மட்டும் பத்திரமாத்துத் தங்கமாக்கும்….. பாத்தியள்ள….. காலங்கார்த்தால இப்படித் தண்ணியப் போட்டு மட்டையாகிக் கெடக்கான்…. அவனுக்குப் போயி வக்காலத்து வாங்கிப் பேசிட்டு இருக்கிய….. குடிக்கறவனுக்கெல்லாம் மத்தவங்கள சாக்கு சொல்லிட்டு அவன் தப்பிக்கறதே பொழப்பாப் போச்சுது…… நாலு நாளைக்கு சோறு தண்ணி கொடுக்காம, கையில நயாப்பைசா கொடுக்காம வீட்டுக்குள்ளாற அடச்சு வச்சாத் தெரியும்….. தன்னால வழிக்கு வந்திர மாட்டான்….” அவள் பொங்கிக் கொண்டிருக்க, “சரி…. நீனு எதுக்கு கயலு….. இம்புட்டு சிலிர்த்துக்கறே…… விடு….. எல்லாம் தலையில் என்ன எழுதிருக்கோ…. அதும்படி தான நடக்கும்…..” என்றாள் அத்தனை நேரம் அமைதியாக இருந்த மலர்விழி.
“ம்ம்…. என்ன……. ஒனக்கு கனவு காணறதுக்கு எம்ம சத்தம் எடஞ்சலா இருக்குதாக்கும்…..” என்றாள் அக்காவின் காதில் கிசுகிசுப்பாய். அதைக் கேட்டு மலர், அப்பா, அம்மாவைக் கண்ணுருட்டிக் காட்டி கயலின் கையில் மெல்லக் கிள்ளினாள்.
“சரி…. சரி…. நீ நடத்து புள்ள….” என்ற கயல்விழி, வெளியே பார்வையைப் பதித்து இயற்கையோடு பேசத் தொடங்கினாள்.
படர்ந்திருக்கும் வயல்வெளியாம்….
பசுமையான புல்வெளியாம்…..
மனம் கவரும் தோட்டத்துக்குள்
மணம் பரப்பும் பூக்கள் கூட்டம்…..
குயில் பாடும் பாட்டே தான்
குழந்தைக்குத் தாலாட்டாம்….
மனம் மகிழ்ந்து மயிலாட
மலர்ந்திருக்கும் மேகக் கூட்டம்….
கருப்பான தோலுக்குள்ளே
கள்ளமில்லா மனசிருக்காம்…..
கரும்பான பேச்சுக்குள்ளே
கலந்திருக்கும் மனித நேயம்….
ஊருக்குள்ளே ஊருணியாம்….
உவகை தரும் பேரணியாம்….
உணவளிக்கும் உழவர் கூட்டம்…..
உலகத்துக்கே முதற் கடவுள்…..
எங்கு நோக்கினும் பசுமைக் காட்சி
இங்கு நடப்பது இயற்கை ஆட்சி…..
எங்க ஊரும் சுவர்க்கம் தான்…..
இங்கு வாழ்வது புண்ணியம் தான்…

Advertisement