Advertisement

அத்தியாயம் – 1
“ஆத்தா… மகமாயி….. எல்லாரும் நல்லாருக்கோணும் தாயி…..” பூஜையறையில் விளக்கேத்தி பிரார்த்தித்துக் கொண்டிருந்தார் ராசாத்தி.
“ஏலே…. ராசாத்தி….. கோவிலுக்கு போகோணும்னு சொல்லிப்புட்டு இன்னும் இங்கயே நிக்குதிய…… எங்க அந்தப் புள்ள கயல காணோம்……” என்றார் அவரது மாமியார் பேச்சியம்மா.
“அவ கோவிலுக்குக் கொண்டு போக பூ பறிக்குதேன்னு சொல்லிட்டுப் போனா அத்த….. எங்கேன்னு பாக்கேன்…..” என்றவர் பின்பக்கம் இருந்த தோட்டத்திற்கு சென்றார்.
அங்கே தோட்டத்தில் ஏதோ செய்து கொண்டிருந்த மருதுவை அழைத்தார்.
“ஏலே….. மருது…… இந்தக் கயலு எங்கடே இன்னும் காணும்…. பூ பறிக்கப் போனவ எங்கனாச்சும் வெட்டியா பராக்கு பார்த்திட்டு நிக்கப் போறா….. கழுதை…. இவ்ளோ பெருசாயும் இன்னும் விளையாட்டுப் புத்தி விடல…..”
“ஆத்தா…. கயலு, வந்து…..” என்று தலையை சொறிந்தான் மருது.
அவர்கள் வீட்டில் வேலை செய்து வந்த மருதுவின் அன்னை அன்னம் அவனது சின்ன வயசிலேயே அவனை அனாதையாக்கி சென்று விட அந்தக் குடும்பம் தான் அவனைத் தாங்கிக் கொண்டது.
வீட்டு வேலை எல்லாவற்றையும் அவன் தான் கவனித்துக் கொள்வான். ஆண் பிள்ளை இல்லாத ராசாத்தி, தாயில்லாத அவனிடம் சற்று கரிசனத்தோடு தான் பழகுவார். அத்தை பேச்சியம்மாவிற்கு ஒரு வேலைக்காரியின் பையனை அதிகம் வீட்டுக்குள் புழங்க விட விருப்பம் இல்லாததால் அவனை சற்று விலக்கி நிறுத்தியே பேசுவார்.
“கோவிலுக்குப் போகணும்னு சொல்லியும் இந்தப் புள்ளை எங்க போயி கிடக்குறவ…. அவங்க அப்பாரு வேற இப்போ கார எடுத்திட்டு வந்திருவாகல்ல….”
“ஆத்தா…. கயலு நம்ம ரோஜாப் பாறைல ஏதோ சூட்டிங்கு நடக்குதுன்னு பார்க்கப் போயிருச்சு….. செத்த நேரத்துல வந்திடறேன்னு தான் சொல்லிட்டுப் போச்சு…. இப்ப வந்திரும் ஆத்தா….” என்றான் சமாதானமாக.
“என்னது….. ஷூட்டிங் பார்க்கப் போனாளா…. என்னலே விளையாடுதியா…. அவளை எதுக்குலே நீ போக விட்டே…. அவதான் நம்ம ஊருல எங்க ஷூட்டிங் நடந்தாலும் இளிச்சுக்கிட்டு பார்த்துட்டு நிப்பாளே….. நீ போயி மொதல்ல அவள கூட்டிட்டு வாலே…. இந்த மலரு வேற புறப்பட்டு வந்துட்டான்னா, அத்தை வேற ஏசிக்கிட்டு கிடப்பாங்க……” அவர் புலம்பிக் கொண்டிருக்க,
“சரி விடு ஆத்தா…. நான் போயி இப்பவே கயல கூட்டிட்டு வந்திடுதேன்…..” என்ற மருது அவனது சைக்கிளை எடுத்துக் கொண்டு ரோஜாப்பாறையை நோக்கிப் பெடலை அமர்த்தினான்.
எப்போதும் போல கண்ணை நிறைத்து நின்ற பசுமையை ரசித்துக் கொண்டே அவன் செல்ல அவனோடு நாமும் அந்த அழகிய கிராமத்தை ரசிப்போம்.
இரு மருங்கிலும் நீண்டு வளர்ந்த தென்னை மரங்கள்… அதைக் கடந்து சிறிது தூரம் சென்றதும் இரு பக்கமும் பச்சைப் போர்வையைப் போர்த்துக் கொண்டது போல பரந்து விரிந்து கிடந்த வயல்வெளிகள்….. தலை நிறைய நெல்லைத் தாங்கி இருந்தாலும் கர்வம் கொள்ளாமல் தலை தாழ்ந்து நிற்கும் நெற்பயிர்கள்…..
சிலு சிலுவென்று வெயிலைத் தாண்டி வீசிய இதமான காற்று….. இயற்கை அழகை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்தது போல் இருந்தது அந்த கிராமம் சுந்தரபாண்டிபுரம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகிய கிராமங்களில் இதுவும் ஒன்று.
குளம், அருவி, ஏரி, வயல், வரப்பு என அங்கே பசுமையும் அழகும், அமைதியும்  நிறைந்து கிடந்ததால் எப்போதும் அந்த ஊரை நோக்கிப் படையெடுக்கும் சினிமா உலகம். எத்தனையோ சினிமா நட்சத்திரங்கள் அங்கே உள்ள பலருக்கும் நல்ல பரிச்சயமாக இருந்தனர்.
நமது கயல்விழிக்கு சினிமா ஷூட்டிங் பார்க்க மிகவும் பிடிக்கும்…. அவளது அக்கா மலர்விழி வீட்டை விட்டு எங்கேயும் போக மாட்டாள்… அதற்கும் சேர்த்து கயல்விழி அந்த கிராமத்தில் எது நடந்தாலும் அங்கே முன்னாடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள்.
மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த சுந்தரேசன், ராசாத்தி தம்பதியருக்கு மலர்விழி, கயல்விழி என இரண்டே பெண்கள்…. மூத்தவள் மலர்விழி, கயல்விழியை விட அழகும், அமைதியும் நிறைந்தவள். அவள் இருக்கும் இடமே தெரியாது….. தன் மகனைப் போலவே இருக்கும் முதல் பேத்தியை பேச்சியம்மாவிற்கு மிகவும் பிடிக்கும்….. எப்போதும் அவளையே தாங்குவார்….
இரண்டாவது பேரனை எதிர்பார்த்திருந்த பேச்சிப் பாட்டிக்கு அதும் பேத்தியே பிறக்க அதுவும் மருமகளை உரித்து வைத்துப் பிறக்க, கயல்விழியின் மீது அவருக்கு சிறு வெறுப்பு என்று கூட சொல்லலாம்…. அவளது அன்னையைப் போல அவள் சற்று மாநிறமாக இருந்தாலும் அழகில் குறை சொல்ல முடியாது…..
அவளது நிமிர்வான தோற்றமும், கலகலப்பான பேச்சும், சூழ்நிலைக்குத் தகுந்தது போல சரியாக முடிவெடுக்கும் திறமையும் சுந்தரேசனுக்கு இரண்டாவது மகளின் மீது பிரியத்தைக் கூட்டியிருந்தது. அவள் தந்தைக்கு மிகவும் செல்லம்… எப்போதும் தன்னைக் குற்றம் சொல்லிக் கொண்டே இருக்கும் ஆச்சியை அவளுக்கும் பிடிக்காது…
மலர்விழியை கல்லூரியில் படிப்பதற்கு மகனிடம் சிபாரிசு செய்து திருநெல்வேலி அனுப்பி வைத்த பேச்சியம்மா, கயல்விழியை பனிரெண்டாம் வகுப்புடன் போதும் என்று விட்டார்…. சுந்தரேசன் கல்லூரிக்கு அனுப்ப எத்தனையோ கேட்டும் பேச்சி சம்மதிக்கவில்லை.
சுந்தரேசனுக்கு சூரியகாந்தித் தோட்டம் ஒன்று இருந்தது. அதில் அவர்களே விவசாயம் செய்து அவர்களது ஆயில் மில்லில் ஆட்டி விற்பனைக்கு கொடுத்துக் கொண்டிருந்தனர். சுந்தரேசனின் உயிர் மூச்சே அந்தத் தோட்டத்தில் தான் இருந்தது. சிறிய அளவில் விவசாயத்தை தொடங்கி படிப்படியாக தனது உழைப்பால் முன்னேறி இந்த அளவுக்கு வந்திருந்தார்.
கயல்விழி பனிரெண்டாம் வகுப்பை முடித்த சமயத்தில் சுந்தரேசனின் எண்ணெய் வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் அவளும் கல்லூரிக்கனவை மூட்டை கட்டி வைத்துவிட்டு தந்தைக்கு உதவியாக அவர்களின் ஆயில் மில்லுக்கு சென்று வந்தாள். அப்போது கல்லூரி இறுதி ஆண்டில் இருந்த கயல்விழி மட்டும் படிப்பை முடித்தாள். 
தான் எது சொன்னாலும் எதிர்த்துப் பேசும் சின்னப் பேத்தியை விட மறு பேச்சுப் பேசாமல் மௌனமாய் சம்மதிக்கும் பெரியவளைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார் பேச்சியம்மா… இதைக் காணும் போதெல்லாம் பொங்குகின்ற சின்ன மகளை தந்தையின் சிறு கண்ணசைவே கட்டிப் போட்டுவிடும்.
மூத்தவள் ஆனதால் அவள் உபயோகித்து இரண்டாவதாகவே எல்லாம் கயலுக்குக் கிடைக்கும். ஆனாலும் அதை எல்லாம் பெரிய விஷயமாக கயல்விழி எடுத்துக் கொள்ள மாட்டாள். பாட்டி அக்காவைக் கொண்டாடுவது பிடிக்காவிட்டாலும் அக்காவை அவளுக்கு மிகவும் பிடிக்கும்.
ஒரு வழியாய் சைக்கிளை மிதித்து ரோஜாப் பாறையில் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தான் மருது. அந்தப் பாறை முழுதும் விதவிதமாய் வண்ணம் அடிக்கப்பட்டு ஷூட்டிங்கிற்காய் ஜெகஜோதியாய் காட்சி அளித்தது.
ஷூட்டிங்கைக் காண்பதற்கும், ஏதாவது காட்சியில் நடிப்பதற்கு அழைத்தால் பெரிய திரையில் தன் தலையும் தெரியுமே என்பதற்குமாய் அங்கே கூட்டம் காத்து நின்றது.
கூட்டத்திற்குள் கண்ணை சுழலவிட்ட மருது சற்றுத் தள்ளி ஓரமாய் கண்ணை விரித்து நின்று படப்பதிவைப் பார்த்துக் கொண்டிருந்த கயல்விழியைக் கண்டு விட்டான்.
அவள் அருகில் சென்று அழைத்தான்.
“கயலு…… என்ன தாயி…. இங்க வந்து நிக்குதிய….. அங்கே உன்னோட அப்பத்தா சாமியாடும்னு தெரியாதா…. வெரசா கிளம்பி வா பொண்ணு…..”
மருதுவை நோக்கி சிநேகமாய் சிரித்தவள், “மருதுண்ணே…. இன்னும் கொஞ்ச நேரம் பாத்துட்டு வாரேன்….. அடுத்தது டூயட்டு சீனு எடுக்கப் போறாகளாம்….. ஹீரோ யாரு தெரியுமா…. நம்ம சிவகார்திகேயன்ல….. ப்ளீஸ் மருதுண்ணே…..” என்று சிறுபிள்ளையாய்க் கெஞ்சியவளைக் கண்டு மென்மையாய் சிரித்தவன்,
“இங்க பாரு கயலு….. நீ இங்கே வந்தது தெரிஞ்சாலே அப்பத்தா ஏசும்….. கோவிலுக்குப் போவணும்னு சொன்னாகளே…. மறந்து போயிட்டியா….. அய்யா இப்போ கார எடுத்துட்டு வந்திடுவாக….. வெரசா வா தாயி…..” என்றான் அன்போடு.
“அய்யய்யோ…. ஆமால…. நான் கோவிலுக்குக் கொண்டு போக பூவப் பறிக்கையில வள்ளி ஷூட்டிங் நடக்கறதா சொன்னுச்சு…. நானும் அப்படியே ஓடியாந்துட்டேன்…..” என்றவள்,
“சரி…. நீ இம்புட்டு சொல்லறதாலே தான் நான் வாரேன்….. அந்தக் கிழவிய நினைச்சு பயந்துட்டு எல்லாம் இல்ல….. பாவம்…. என் அம்மாவையும் சேர்த்தில்ல அந்தக் கிழவி ஏசி வைக்கும்…… அதுக்கு வேண்டி வாரேன்…..” என்றவள், அவனோடு சேர்ந்து நடந்தாள்.
“மருதுண்ணே….. நான் சைக்கிள்ள உக்கார்ந்துக்கட்டுமா….. என்னை பின்னாடி வச்சு ஓட்டிட்டுப் போறியா…..” என்றாள் ஆசையுடன்.
“வேணாம் தாயி….. என்னதான், அண்ணந்தங்கச்சியா பழகினாலும் ஊருக்கு நாம வேற தாயி வயித்துப் புள்ளைக தானே…. அதும் இல்லாம அப்பத்தாக்கு இதெல்லாம் பிடிக்காது…. அதுக்கும் சேர்த்து உன்னை ஏசிபிடும்…..”
“சரி…. நீ சைக்கிள்ள முன்னாடி போ….. நான் பூவ எடுத்துக்கிட்டு பொறவால வாரேன்….”
“சரி… தாயி…. வெரசா வந்திடு…..” என்றவன் சைக்கிளை வேகமாய் அழுத்தி அவளது பார்வையில் இருந்து மறைந்தான்.
சற்று தூரம் நடந்தவள் அங்கிருந்த சாமந்தித் தோட்டத்துக்குள் நுழைந்தாள். கும்மென்று வீசிய பூக்களின் மனம் மனதை நிறைக்க மலர்ச்சியுடன் பூக்களைப் பறிக்கத் தொடங்கியவளின் உதடுகள் சினிமாப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருக்க கைகள் அதன் பாட்டில் வேலையை செய்து கொண்டிருந்தது.
“ஏபிள்ள… யாரு பிள்ள….. அது…. கேக்காமப் பூவப் பறிச்சுகிட்டு இருக்கவ…..” என்று பின்னாடி இருந்து ஒரு குரல் கேட்க சாவதானமாய் திரும்பினாள் கயல்விழி.
“ஏன்…. நான் தான்….. பறிச்சா என்ன பண்ணுவிய…..” என்று திரும்பியவளைக் கண்டு சிரித்தான் மணிமாறன்.
“என்னடே…. நம்ம தோட்டத்துக்குள்ளே புதுசா ஒரு  பெரிய பூவு பூத்திருக்கேன்னு எட்டிப் பார்த்தேன்…. நீதானாட்டி அது…” என்றவனின் பார்வை அவளை ரசனையாய் நோக்கியது.
“ஹூக்கும்….. பூக்கும்… பூக்கும்….. ஏன் சொல்ல மாட்டிய…. நல்ல கண்ணு டாக்டரப் போயி பாருங்க….. இல்லன்னா பூவுக்கும் பொண்ணுக்கும் வித்தியாசம் தெரியாமப் போயிறப் போவுது…..” என்றவள் தாடையை கன்னத்தில் இடித்துக் கொண்டாள்.
“அதெல்லாம் நாங்க பாத்துக்கிடுதோம்…. நீனு என்ன புள்ள இந்நேரத்துல இங்க நிக்கறவ….. எதுக்கு பூவு……”
“கோவிலுக்குக் கொண்டு போகப் பூ வேணும்…. அதேன் பறிக்க வந்தேன்…. பறிச்சா கையக் கால உடச்சிடுவியளோ…” என்று வாய் சவடாலாய்க் கேட்டாலும் கைகள் பூவைப் பறிப்பதை நிறுத்தவில்லை.
“ம்ம்ம்ம்… என் அயித்த மவளுக்கு பேச்சுக்கு மட்டும் குறைச்சல் இல்ல…….” என்று சிரித்தான் மணிமாறன்.
“ம்ம்…… கொஞ்சம் பூவப் பறிச்சதுல இவுக சொத்து குறைஞ்சு போச்சு பாரு…. கேள்வி கேக்க வந்துட்டாரு…..” என்று நொடித்துக் கொண்டாள் அவள்.
“கோவிலுக்குப் போறேன்…. கொஞ்சம் பூவப் பரிச்சுக்கறேன் அத்தான்னு சொன்னா குறஞ்சு போயிருவியளோ….”
“அத்தானாம் அத்தான்…. பிஞ்சு போன பொத்தான்…. பெருசா அத்தான்னு பீத்திக்கிட்டு வந்துட்டாக…..”
“ஏய் கயலு… என்ன பிள்ள… இப்படிச் சொல்லிப்பிட்ட…. நீ கூப்பிட்டாலும், இல்லன்னாலும் உன் அத்தான் நான் தாம்லே……” என்றவனின் கண்கள் அவளை ஆசையோடு நோக்கியது.

Advertisement