Advertisement

              சிவசு தாத்தா வீட்டின் உள்ளே நுழைந்த கோதண்டம் கடும் சிடுசிடுப்பில் இருந்தார். பிற்பகலில் கோதண்டம் அவர் தோப்பில் இருந்த போது அவரை தேடி வந்து இருவர் வாசுவை பற்றி சொல்லி இருந்தனர். உங்கள் மகன் கடையில் யாரையோ அடித்தார். கடையை சாற்றி ஏதோ உள்ளே பஞ்சாயத்து நடந்தது. ஏதோ வக்கீல் வந்தார். அதன் பிறகு யாரோ ஒரு தம்பதி மஞ்சள் பையுடன் வெளியே சென்றனர். என்னப்பா நீ சிரமப்பட்டு படிக்கவைத்து, வெளிநாட்டில் வேலை செய்த பிள்ளையை இப்படி ரோட்டில் அடிதடி செய்யும் நிலைமையில் விட்டுவிட்டாயே என்று அவர்கள் ஆதங்கத்தை சொல்லி சென்றனர்.
கோதண்டத்திடம் யாராவது இப்போது அவர் கையில் சிக்கினால் அவர்களை துவைத்து காயம்போடும் எண்ணத்தில் இருந்தார். வாசுவை பார்த்தால் நேரடியாக பேச்செல்லாம் இல்லை எல்லாம் சீதலக்ஷ்மி வழியாக தான் சாடை பேசுவார். 
இத்தனையும் மனதில் வைத்து வாசுவிற்காக காத்திருபது என முடிவு செய்து ஹாலில் அமர்திருந்தார் கோதண்டம். இது எதுவும் தெரியாது சிவசு தாத்தாவும் சுந்தரி அச்சியும் அங்கே இருந்த சோபாவில் அமர்ந்திருந்தனர். 
டிவியில் சிவாஜி தத்ரூபமாக உணர்ச்சி பொங்க
‘பொங்கி வரும் அழகு இருந்தும்
போன பக்கம் போக விட்டேன் பார்வையை 
அவன் பொறுத்திருந்து புரிந்துகொண்டான் வேலையை’
என தங்கபதுமை படத்தில் பாடிக்கொண்டிருந்தார். மல்லி பூ கட்டி கொண்டிருந்த சுந்தரி ஆச்சியும் பத்மினியின் அழுகையில் அப்படியே மல்லி பூச்சரத்தை தட்டில் வைத்துவிட்டு பாடலில் மூழ்கி விட்டார். 
  
சிவசு தாத்தா பார்வையை அங்கே இங்கே நகற்றவில்லை. தலையை லேசாக ஆட்டிக்கொண்டு பாட்டை வாயில் அதிக சத்தமில்லாமல் பாடிக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தார்.
இன்று தேனுவையும் கார்த்தியாயும் கொச்சின்க்கு வழியனுப்ப சென்று இருந்தான். 
சீதா ஏதோ சமையல் அறையில் வேலையாக இருந்தார். வாசுவிற்காக பொறுத்திருந்து பார்த்து மணி எட்டை கடந்ததும் சீதாவிடம் பேச சமையல் அறைக்கு வந்துவிட்டார். அவர் காத்திருந்தது என்னவோ பத்து நிமிடம் தான். அதற்குள் இந்த பொறுமையின்மை.
“உன் மவன் என்ன நினைச்சுக்கிட்டிருக்கான் அவன் மனசுல.”
“_______”
“பத்தாவது படிக்க வர நல்லா இருந்தான். எப்போ பத்தாப்பு முடிச்சானோ அப்போ இருந்து கிறுக்கு புடிச்சு அலையாரான். அத்தனையும் தலைக்கனம்.”
“_______”
“நீ ஒரு டீச்சர்னு எனக்கு அந்த காலத்துல எவ்வளவு பெருமை தெரியுமா. என்ன போல அல்லாடக்கூடாதுனு தானா அந்த பாடுபட்டு அவன இஞ்சீனியர் ஆக்குனோம். “
“________”
“இந்த காலத்துல படிச்சவன் நிலம என்ன. எவனாவது நல்ல சம்பளத்துல சிங்கப்பூர்ல இருந்த வேலைய விட்டுட்டு வருவானா. சரியான புழைக்க தெரியாத பையன். சரி வந்தான் என்னமோ விவசாயம் பன்றேன் சொல்லி பண்றான். விவசாயம் ஒண்ணும் சும்மா இல்லைனு இத்தன நாள்ல தெரிஞ்சிருக்கும்.”
“_______” 
“சரி போறான். அதாவது அவன் ஒழுங்கா பண்றானா, அதுவும் இல்லை. அவன் நாப்பது வயசுல வருமானம் வரமாதிரி விவசாயம் பண்றான். இப்போவே கழுதைக்கு 29 ஆச்சு, வர்ற வரன் எல்லாம் மாப்பிள்ளை என்ன வேலைனு கேக்குறாங்க. சரி விவசாயம்னு சொன்ன எத்தன பேரு பொண்ணு தராங்க சொல்லு ?
“_______”
“சரி கடையும் சேர்த்து வச்சிருக்கான் அதையாவது சொல்றமாதிரியா வச்சிருக்கான். அதப்பார்க்க வர பொண்ணு வீட்டுக்காரங்க இதெல்லாம் எப்படி தொழில்னு எடுதுக்கறதுனு கேக்குறாங்க.”
இத்தனை நேரம் இவ்வளவு சொல்லியும் பதில் பேசாமல் இருக்கும் சீதாவை என்ன சொல்வது. கோபத்தின் உச்சிக்கு சென்று விட்டார் கோதண்டம். 
“உன் புள்ள இப்போ ரௌடி அயிட்டனாம். இன்னைக்கு ரெண்டு பேரு கண்ணால பார்த்துட்டு வந்து சொல்றாங்க. எல்லாம் உன்ன சொல்லணும், எல்லாம் நீ குடுத்த எடம் தான் இப்படி அவனை ஆட்டம் போட வைக்குது. இத்தனை நாள் வெட்டி பையன்னு பொண்ணு குடுக்கல. ஆனா இனிமே ரௌடி பையன்னு எவனும் பொண்ணு குடுக்க மாட்டான்” என்று முழு கோபத்தையும் சீதாவின் மீது கொட்டிவிட்டு, இப்போதாவது சீதா ஏதாவது சொல்வரா என்று கோதண்டம் அவரின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தார்.
கோதண்டம் கடைசியாக பேசியது கொஞ்சம் சத்தமாக பேசியது வெளியே கேட்டுவிட்டது.
சுந்தரி ஆச்சி, ” சீதா என்னமா சத்தம்…”
அமைதியாக கைவேலையை முடித்து கை கழுவியவர், கோதண்டத்தை பார்த்து கொண்டே 
“ஒண்ணும் இல்ல அத்த, வாசு அப்பா இன்னைக்கு தான் 
காலைல மலரும் தாமரையும் 
மாலைல மலரும் மல்லியையும்
பார்த்துட்டு வந்தாங்கலாம். அத பத்தி சொல்லிக்கிட்டு இருக்காங்க.” என்று திருப்பி குடுத்தார்.
“அது என்ன அதிசையமா. இது தெரியாமையா இவ்வளவு நாளா இருந்த ராசா.”  சுந்தரி ஆச்சி அவர் பங்குக்கு கேலி செய்தார். அவருக்கு கடைசியாக பேரனை கோதண்டம் பேசியது பொருக்கவில்லை. 
கோபமாக வெளியே வந்த கோதண்டம் துண்டை உதறி தோளில் போட்டு மனைவி மற்றும் தாயார் இருவரையும் குற்றம் சாற்றும் பார்வை பார்த்து அருகில் இருந்த அறைக்கு சென்று கதவை சிறிது சத்தமாக சாற்றினார். அவர் பார்வைக்கெல்லாம் அலட்டி கொள்வார்களா இருவரும்.
அவர் சரியாக உள்ளே சென்று கதவை சாற்றிய சமயம், வீட்டின் உள்ளே நுழைந்தான் வாசு. ‘என்ன சத்தமெல்லாம் பலமா இருக்கு’ என்று நினைப்புடன் தான்.
அவன் எண்ணம் புரிந்தவர் போல் சுந்தரி ஆச்சி, “சின்ன ராசா இங்க வந்து உட்காரு வா. எல்லாம் சாப்பிடலாம் வா.” வாஞ்சையாக கூப்பிட்டார் 
“என்ன செஞ்சிருக்கீங்க இப்போ.”
“இட்லியும் கல்ல சட்னியும்.”
“எப்போ பாரு இதே தான் பன்றது. வேற செஞ்சா என்ன ?” முகத்தை சுருக்கி வினவினான்.“ அவனுக்கு சில சமயம் வக்கனையாக வேண்டும்.
இப்பொழுது தான் டிவியில் இருந்து வெளி வந்த சிவசு தாத்தா அருகில் பார்த்தார். இவ்வளவு நேரம் நடந்த பேச்சுகள் எதுவும் அவர் கவனிக்கவில்லை. இவனை பார்த்ததும்,
“எப்போ வந்த ராசா” 
இவன் முகத்தை சுருக்கி, “இப்போ தான் வந்தேன் தாத்தா.”
“ஏன் ராசா முகத்தை தூக்கி வச்சிருக்க.” குரலில் அவன் கவலையை முடிந்தால் உடனே தீர்த்து விடும் கனிவு.
“எப்போ பாரு கல்ல சட்னி போட்டு பாடபடுத்துறாங்க தாத்தா.” ஏகத்திற்கும் புகார் வாசித்தான் வாசு. 
“அவ்வளவு தான. இந்தா புள்ள சுண்டெலி போய் வேற சட்னி ஆட்டு.” என்று சிபாரிசுக்கு வந்தார் சிவசு தாத்தா. 
சுண்டலி என்றவுடன் அச்சிக்கு கோபம் வந்து விட்டது “என் அப்பா எனக்கு அழகா சுந்தரினு பேரு வச்சிருக்காங்க. இந்தா பாருங்க மாமா என்ன சுண்டெலினு கூப்பிட்டிங்கனா அப்றோம் எங்க அப்பா வீட்டுக்கே போய்டுவேன். இவ்வளவு பரிஞ்சு கிட்டு வரிங்களே சட்னிக்கு போட வெங்காயம் கொண்டாரே ரெண்டு உரிச்சு தாங்க பார்போம்”
“போயேன் யாரு வேண்ணானா…நா வந்து பஸ் புடிச்சு தரேன் வா. ” 
“இந்தா கெளம்புறேன் நானு.” என்று மெல்ல எழுந்தார் ஆச்சி.
“நீ கெளம்புன எனக்கு வேற பொண்ணு கிடைக்காத. நா நல்ல கார சட்னியா ஆட்டுறா பொண்ணா பார்த்து கட்டிக்கபோறேன்.” வம்பிழுத்தார் சிவசு தாத்தா.
ஆச்சி தாத்தாவை மேலும் கீழும் பார்த்து பேரனிடம் திரும்பினார் ஆச்சி, 
“கொடிகிழங்கு பறிக்கசொன்னா கோவிசிக்குவாராம் பண்டாரம் 
அவிச்சு உரிச்சு முன்னால வச்சா அமுது கொள்வாராம் பண்டாரம்.
ரெண்டு வெங்காயம் உரிக்கறேன் சொல்ல வாய் வரல. ஆனா நாக்குக்கு உணத்தியா சாப்பிட இன்னொரு கல்யாணம் கேக்குது உன் தாத்தனுக்கு.”
என்று தாத்தாவுக்கு ஒரு பன்ச் குடுத்து நடந்து ஆடுபடிக்குள் நுழைய பார்க்க, 
சிவசு தாத்தா மெல்லமாக வாசுவின் காதருகே வந்து கிசுகிசு என்ற குரலில் , “இப்போ பாறேன் உன் ஆச்சி என்ன பாசமா ஒரு பார்வபார்ப்பா.” என்று சொல்லி, ஆடுபடிக்குள் மெதுவாக போகும் சுந்தரி அச்சியை பார்த்து,
“ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும் 
முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
வண்ண சிங்காரம் குலைந்துவிடும் 
ஓ…ஓ…ஓ…ஓஹோ…ஓஹோ…” என்று பாடினார்.
திரும்பி முறைப்பாக சிவசு தாத்தாவை பார்த்த சுந்தரி ஆச்சி, ஒன்றும்  சொல்லாமல் ஆடுபடிக்குள் சென்று விட்டார்.
சின்ன குழந்தை போல் வாசுவிடம் திரும்பி சிவசு தாத்தா,” பார்த்திய பாத்தியா, நான் சொன்னேன்ல என்ன பாசமா பார்பானு” என்று காதில் மெதுவாக சொல்லி வாய்விட்டு சிரித்து கொண்டிருந்தார். 
வாசுவிற்க்கு இவர்களை பார்ப்பதே அலாதியானது. சின்ன வயதில் இருந்தே சீதாவின் மடியை விட சுந்தரி அச்சியின் மடியில் தான் அதிகம் வளர்ந்திருந்தான். அதுவும் இவர்களிடம் வந்து விட்டால் வாசுவிற்கு ஒரு அசுவாசம், ஒரு இளைப்பாறல்.
வாசுவின் சிறுவயதில் சீதா அந்த ஊரின் பள்ளி ஆசிரியை.  பள்ளி வேளைகள் முடித்து மாலை வீடு திரும்பி வாசுவிற்கு தேவையானதை செய்து விட்டு வெளியே சென்று விடுவார். அப்போது அது சின்ன கிராமம். அரசு மருத்துவமனை சென்று நல்லபடியாக பிரசவம் பார்க்கலாம் என்று ஊர்வாசிகளுக்கு விழிபுணர்வு செய்யும் ஆறப்பணியை செய்துவந்தார். அது அவரது தனிப்பட்ட முயற்சி, அவருக்கு கோதண்டம், சுந்தரி ஆச்சி, சிவசு தாத்தா எல்லாரும் துணை நின்றனர். 
சீதாவின் முயற்சியால் மட்டும் அந்த ஊரில் கிட்ட தட்ட மூண்ணூறு குழந்தைகள் அரசு மருத்துவமனையில் நலமாக பிறந்தன. கடந்த பத்தாண்டுகளாகவே அம்மக்களே நன்றாக புரிந்துகொண்டனர், அதனால் சீதாவிற்க்கு இப்போது விழிப்புணர்வு வேலை இல்லை. 
சுந்தரி ஆச்சி, வாசுவிற்கும் தாதாவிற்கும் உணவு குடுத்து, சாப்பிட்ட உடன் தாத்தாவை கொஞ்சம் வெளியே அமர அழைத்து சென்று விட்டார். ஹாலில்  சீதாவும் வாசுவும் அமர்ந்து டி‌வி பார்த்துக்கொண்டிருந்தனர்.
“அம்மா…இனைக்கு கடையிலே கொஞ்சம் பிரச்சனை ஆயிடுச்சு.”
“சரி பா. நீ எதுவா இருந்தாலும் காலைல சொல்லு. நைட் தூங்கறப்போ இத பத்தி பேச வேண்டாம். காலைல பார்த்துக்கலாம். அடுப்படில பால் கிளஸ்ல வச்சிருக்கேன் மறக்காம குடுச்சிடு.” என்று சொல்லிவிடு வாசுவின் தலைமுடியை லேசாக கலைத்துவிட்டு அருகில் இருந்து அறைக்கு சென்று விட்டார்.  
அவர் சொன்னது போலவே செய்தவன். வெளியே சென்று பார்த்தான். இன்னும் அரட்டையில் ஈடுபட்டிருதனார் சுந்தரி ஆச்சியும் சிவசு தாத்தாவும். அப்போது விட்ட மல்லிபூ சரத்தை கட்டிமுடித்திருந்தார் சுந்தரி ஆச்சி. 
எப்படியும் அவர்கள் சிறிது நேரத்தில் உள் திண்ணையில் வந்து படித்துவிடுவர். 
பின்கட்டில் போய் படுத்தான் வாசு. என்னதான் கயிற்று கட்டிலில் புரண்டாலும் தூக்கம் வரவில்லை. எப்படி ஸ்ரீதர்க்கு இப்படி செய்தார்கள் என்ற எண்ணம் மனதில் அரித்துக்கொண்டிருந்தது.
அன்று மதியம்,
ரமேஷுடன் மோதலில் இருந்த போது, அச்சமயம் உணவகத்தில் இரண்டு பேர் தான் இருந்தனர் . அவர்களும் வெளியே வந்து எட்டி பார்க்க. மணி வாசுவின் அருகில் சென்று,
“அண்ணே இங்கே எதுவும் வேண்டாம். ஸ்டோர் ஹவுஸ்ல வச்சு பார்த்துக்கலாம். நான் அவனை அங்கே இழுத்துட்டு வரேன்.” என்று சொல்லி கொஞ்சம் வாசுவை தனிய வைத்து ஸ்ரீதரின் மாமன் ரமேஷை தூக்கி நிறுத்தி, 
“இங்க பாருங்க நீங்க அவன் மேல கை வச்சப்போவே உங்கள உண்டு இல்லைனு அக்கிருபேன். எங்க அண்ணன் இத டீல் பண்ண, ஏதோ பேசி முடிப்பாரு. இல்லை நாங்க இப்படி தான் பண்ணுவோம்னு சொன்னா போலீஸ்க்கு போலாம். ஒண்ணும் பிரச்சனை இல்லை.”  என்று ரமேஷிற்க்கு கேக்க மட்டும் அமைதியாக பேசினான். 
வலியில் முகம் கசங்க நின்றிருந்த ரமேஷ் அவன் மனைவியை பார்க்க, அவர் சரி என்று தலையாட்ட, இருவரும் மணியுடன் ஸ்டோர் ஹவுஸ்ஸிற்கு சென்றனர். அருகே இருந்த கடையின் பின்னே தான் ஸ்டோர் ஹவுஸ்.
உணவகத்தை மட்டும் அப்படியே விட்டு அருகில் இருந்த கடையை மூடிவிட்டனர். 
ஸ்டோர் ஹவுஸில் சி‌சி‌டி‌வி காமிரா இருக்கிறது. உள்ளே நுழையம் போதே அது இயங்குகிறதா என ஒரு பார்வை பார்த்தே சென்றான் மணி. ரமேஷிர்க்கும் அவர் மனைவிக்கும் அது தெரியாது.
சிறிது நேரத்தில் சட்டையை அணிந்து உள்ளே வந்தான் வாசு. வரும் போதே யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டே வந்தான். அவர்களை பார்த்ததும் அவர்கள் எதிரே அமர்ந்து அலைபேசியை அழைப்பை முடித்தான். 
ரமேஷ் வாசுவை முறைப்பாக பார்த்து வேறு புறம் திரும்பி கொண்டார்.
“சொல்லுங்க உங்களுக்கும் ஸ்ரீதருக்கும் என்ன பிரச்சனை.” ரமேஷின் மனைவியிடம் கேட்டான்.
“அவன் எங்களுக்கு எழுபதாயிரம் பணம் தரணும். ஏமாத்திட்டு ஓடி வந்துட்டான்.”
“அவன் எதுக்காக உங்க கிட்ட பணம் தரணும். அவன் உங்க கிட்ட வாங்குனானா.”  
“இல்ல அவன் அப்பா இவரு கிட்ட வாங்குனாரு.” என்று ரமேஷை கைகாட்ட,
“அத்தாட்சி இருக்குங்க. அவன் அப்பா அவரு நிலத்த அடமானம் வச்சு என்கிட்ட இருபதாயிரம் வாங்குனாரு ” நேராக வாசுவிடமே முறையிட்டான் ரமேஷ்.
“எதுக்கு”
“அப்போ ஸ்ரீதருக்கு பதினாலு வயசு. அவனுக்கு ஏதோ செலவுக்குனு அவங்க அப்பா வாங்குனாரு.” 
“இருபதாயிரம் குடுதிங்க சரி. அப்றோம் எப்படி ஐம்பதாயிரம் எக்ஸ்ட்ரா வந்துச்சு.”
“அது இந்த ஆறு வருஷத்து வட்டிங்க.”
நக்கலாக ரமேஷை பார்த்தான் வாசு “அப்றோம் ஸ்ரீதர் அப்பா உங்களுக்கு கொஞ்சம் கூட திருப்பி குடுக்கலையா ?”
“இல்லைங்க ஆறு மாசத்துல ஸ்ரீதர் தனி அள் ஆயிட்டான். அவனுக்கும் அப்பா மட்டும் தான், அவரு எங்கேனு தெரில.”
“எங்கயாவது கிளம்பிட்டாருனா எங்கனு தேடலையா நீங்க ?”
“நான் ஏங்கே தேடனும்.”
“நீங்க தான் ஸ்ரீதர் மாமனு சொன்னாங்க.”
“நான் ஒண்ணும் சொந்த மாமா இல்லைங்க. அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சவன். சின்ன வயசுல பார்த்ததால என்ன அப்டி கூப்பிட ஆரம்பிச்சுட்டான்.”
“சரி அதுக்கு அப்றோம் என்ன செஞ்சிங்க. ஸ்ரீதர் சொந்தகாரங்க யார்க்கிட்டையாவது கேட்டு இருக்கலாம்ல.”
“இல்லைங்க அவன் அப்பா அம்மா ஊருவிட்டு வந்து கல்யாணம் பண்ணவங்க. அதனால யாரும் தெரிலைங்க.”
“அப்றோம் என்ன செஞ்சிங்க.”
“ஸ்ரீதர ஒரு டீ கடையிலே வேலைக்கு சேர்த்தி விட்டேன். ஒரு வருஷம் நல்லாத்தான் வேலை பார்த்தான். சம்பளம் எல்லாம் சரியா எங்கையிலே குடுத்துடுவரு ஒனரு. அப்றோம் திடீர்னு ஒரு நாள் காணாம போய்ட்டான் ”
“அவன் சம்பளத்துல எவளோ அவனுக்கு குடுபிங்க.”
“ஸ்ரீதர் சம்பளம் அந்த கடன் வட்டிக்கே சரியா வந்துடுமே. அப்றோம் எங்க அவனுக்கு தனியா குடுக்குறது. அவனுக்கு சாப்பாடு தங்க இடம் எல்லாம் அந்த டீ கட ஒனர் குடுத்துட்டாரு.”
“சரி இப்போ எழுபதாயிரம் குடுத்தா அந்த பத்திரம் குடுத்துடுவிங்களா.”
கொஞ்சம் யோசித்த ரமேஷ், “குடுத்திரலாம்ங்க”  
“கையிலே கொண்டு வந்திருக்கிங்களா.”
“இல்லங்க ஊரில இருக்கு.” அவர்கள் இருக்கும் ஊர் இங்கிருந்து நான்கு மணி நேர பயணம்.
இவர்கள் பேசிக்கொண்டே இருக்கும் போதே, வாசுவின் அலைபேசியில் ஏதோ குறுஞ்செய்தி வந்தது. அதை ஒரு இரண்டு நிமிடம் பார்த்தவன்.
ரமேஷையும் அவர் மனைவியையும் பார்த்தான். பிறகு
“என்னமோ பத்திரம் இப்போ உங்க பைல தான் வச்சிருக்கிங்கலாம்.” 
“யாருங்க சொன்னது. அதெல்லாம் இல்லை” கோபமாக பேசினான் ரமேஷ். 
ஸ்ரீதர் எங்காவது இருப்பான். அவனை பார்த்தால் பத்திரதில் வாங்கின கடனுக்கு அந்த நிலத்தை இவர் பெயரில் மாற்ற வேண்டும் என்று எப்போதுமே எண்ணம் உண்டு. அவனை பார்க்க வருவதால் மூல பத்திரம் முதற்கொண்டு எல்லா பாத்திரங்களும் அவர் கையோடு எடுத்து வந்திருந்தார். வாசுவை பார்த்ததால் பத்திரம் மாற்றுவது எளிதல்ல என்று புரிந்தது. கொஞ்சம் இழுத்தடித்து இவனிடம் நன்றாக பெரிய தொகையாக வாங்கலாம் என்று கணக்கு வைத்திருந்தார். அதனால் வெளியே சொல்லவில்லை. 
ஆனால் வாசு இவர்களளை ஸ்டோர் ஹவுஸ்ஸில் சந்திக்க வரும் முன்னே விமலிடம் எல்லாம் விசாரிக்க சொன்னான், அப்படியே இங்கே சில பத்திரங்களை தயாராக்கி கொண்டு வர சொன்னான். விமலும் அஜயும் வேலை சம்பந்தமாக தான் சென்னை சென்றனர். விமல் வக்கீல், அஜய்யுடன் சேர்ந்து திருச்சி அருகே அரிசி ஆலை வைத்திருக்கிறான். 
 “சரிங்க பையன அனுப்ப முடியாது. ஒரு பைசா குடுக்க முடியாது.  நீங்க ஒண்ணும் பத்திரம் தர வேண்ணாம். நீங்க வேணும்னா கேஸ் போடுங்க பார்த்துக்கலாம். என் வக்கீல் இப்போ வந்திட்டு இருக்காரு. நாங்க இப்போ கேஸ் ஃபைல் பண்ண போறோம். எதுவா இருந்தாலும்  கோர்ட்ல பார்த்துக்கலாம்.” என்று எழுந்திருந்தான். வாசு. 
ரமேஷும் இருக்கையில் இருந்து எழுந்து விட்டார், “என்னங்க இப்படி சொல்றீங்க.”
சரியாக விமல் உள்ளே நுழைந்தான். அவன் அப்படியே கோர்ட் உடையில் வந்திருந்தான். அவனை பார்த்ததும், ரமேஷிர்க்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது தான் வாசு உண்மையாக சொல்கிறான் என்று அவரால் புரிந்துகொள்ள முடிந்தது.
விமல்,  ரமேஷ் ஊரில் உள்ள தெரிந்த நண்பர்களை வைத்து எல்லாம் விசாரித்திருந்தான். 

Advertisement