Advertisement

சரி தண்ணீர் குடிக்கலாம் என டேபிளை பார்த்தாள். சிறு மண் குவளையில்  தண்ணீர், அதன் அருகே ஒரு சிறு குதிரை வண்டி பொம்மை. 
அதை பார்த்ததும் ஒரு உற்சாகம். பார்த்தும் அதை வைத்து டேபில் மேலே முன்னே பின்னே விட்டு விளையாடி பார்த்தாள். 
எங்கே உட்கார்ந்திருக்கிறோம் என்று இருக்கையை பார்த்தாள், அது இருக்கையே அல்ல.
அது ஊஞ்சல்.
அந்த அறையில் பாதி இருக்கைகள் என்றால், மீதி எல்லாம் ஊஞ்சல். மர ஊஞ்சல். குழந்தைகள் முதல் முதியவர் வரை உட்காரலாம். அப்படி வடிவமைத்திருந்தது. 
ஸ்ரீ கொஞ்சம் உந்தி தள்ளி ஆடி பார்த்தாள். குதூகலமாக இருந்தது.
எங்கும் எதிலும் பரம்பரியம் மிக்க பசுமை சூழல் என கட்டமைத்திருந்தான்  இருந்தான் வாசு.  
அங்கே பாதி இருக்கைகள் நிரம்பி இருந்தன. குடுபத்துடன் ஊஞ்சலில் உட்கார்ந்து உணவுண்டு கொண்டிருதனர். அதில் ஒரு குழந்தை,  ஓவியத்தில் உள்ள மாட்டின் மேல் ஓட்ட பட்டிருந்த வாலை தொட்டு பார்த்துக்கொண்டிருந்தது.
பார்க்கவே எழில் கோலமாக இருந்தது.
மெல்லியே கரோக்கி ம்யூசிக் வேறு இசைத்து கொண்டிருந்தது.
கண்கள், மனம், செவி என எல்லாவற்றையும் நிறைக்கும் இடமாக இருந்தது. 
அதற்குள் மணியும் கிருபாவும் வந்திருந்தினர் .
மணி, “அக்கா இவன் பேரு கிருபா. நீங்க எது வேணும்னாலும் இவன கூப்பிடுங்க.”
“கார்த்தி அண்ணா சிஸ்டெர் தானா நீங்க. உங்கல அண்ணே மேரேஜ் அப்போ பார்திருக்கேன்க்கா.” என  கிருபா சொல்ல 
“ஆமாங்க நான் கூட உங்கள பார்த்துருக்கேன். நீங்க தானா கேட்டரிங் பண்ணிட்டு இருந்திங்க.”
மணி வாயை பொத்தி கமுக்கமாய் சிரிக்க, அவனை சைட் வியூவில் முறைத்த கிருபா, ஸ்ரீயை பார்க்க 
“ஆமா இவங்க தான் சர்வ் பண்ணங்க. எனக்கு கூட ஒரு வடை தான் வச்சாங்க. அதுக்கு தான் கம்ப்ளைண்ட் பண்ணலாம்னு வந்துருக்கேன்.” என ஸ்ரீ புன்னகையுடன் சொன்னாள்
“பண்ணுங்க அக்கா. தாராளமா பண்ணுங்க…அதனால தான் உங்களுக்கு ஸ்பெஷல்ல ஒண்ணு எடுத்துட்டு வந்திருக்கேன். 
இவர்களை பார்த்தாலே புதிதாக பார்ப்பது போல் தெரியவில்லை, இலகுவாக பழகினார்.
கிருபாவின் கையில் பெரிய பாக்குமர தட்டு இருந்தது.
 அதில் வராகரிசி தக்காளிச்சோறு, நெய் பிரண்டை துவையல்,  ராகி தோசையும், மல்லி சட்னி, பிடி கொல்லுக்கட்டை, வாழை பூ வடை, வெண்பூசனி அல்வா, சிறுதானிய பாயாசம்.
“என்னங்க இது. இப்டி கலர் டிஃபரெண்ட்டா இருக்கு. நான் தெரியாம சொல்லிட்டேன். உங்கள நான் கம்ப்ளைண்ட்லாம் பண்ண மாட்டேங்க. அதுக்குனு இப்படியெல்லாம் நீங்க பண்ண கூடாது.
எதுவா இருந்தாலும் வாய்ல பேசுங்க. இப்படி வெப்பன்ஸ்லாம் கொண்டு வரக்கூடாது ” என ஸ்ரீ சொல்ல, 
“அக்கா நீங்க ட்ரை பண்ணி பாருங்க. இது சாதரணமான வெப்பன்ஸ் இல்ல. ஸ்ட்ரைட்டா ஸ்டொமக் அட்டாக் பண்ணும். அப்றோம் ஹார்ட்ல நீங்களே எங்க ஹோட்டல்க்கு இடம் தருவிங்க பாருங்களேன் “ என கூறி  அவள் முன் வைத்தான்.
“பிளீஸ் தம்பி. நீங்க இங்க பெரிய வெப்பன் சப்லையர் தான், ஒத்துக்குறேன். நான் இப்போ தான் வீட்ல லஞ்ச் முடிச்சு வந்தேன். ஏதாவது லைட்டா தாங்க.”
“அக்கா இருங்க நான் இதுல பாதி எடுத்துடுறேன், மத்த எல்லாம் கொஞ்சம் டேஸ்ட் பண்ணி பாருங்க”
 என சொல்லி உள்ளே சென்று அதே போல் எல்லாம் குறைத்து எடுத்து வந்தான் கிருபா.
‘என்னடா இது ஒரே பாசக்கார பய புள்ளைங்களா இருக்கங்களே. இத இப்போ சாப்பிட முடியாதே. என்ன செய்யறது’ என யோசித்தவள், கிண்ணத்தில் இருந்த பாயாசத்தை மட்டும் எடுத்து வைத்தவள். 
“மத்ததெல்லாம் பேக் பண்ணி தரிங்களா. நான் வீட்டுக்கு எடுத்து போய்க்கிறேன். பிளீஸ்” 
கிருபா கொஞ்சம் முகத்தில் ஏமாற்றைத்தை காட்ட, ‘அட என்னடா இது இந்த பையன் இப்படி பீல் பண்றான்’ என் நினைத்தவள்.
“சரிபா தம்பி இப்படியெல்லாம் நீங்க பீல் பண்ண கூடாது. குடுங்க அக்கா சாப்பிட்றேன்” என சொன்னவுடன் கிருபா சிரித்து கொண்டே உணவை ஸ்ரீயின் முன் அடுக்க ஆரம்பித்துவிட்டான். 
ஸ்ரீ இப்படி தான் கொஞ்சம் பழகிவிட்டால் நன்றாக உரிமை எடுத்து பேசுவாள். அது முதல் சந்திப்பு அப்படியெல்லாம் எதுவும் இல்லை. ஒரு உடனடி நட்பு பரிமாற்றம் எப்போதும் அவளிடம் இருக்கும். 
மணி அடுத்து யாரோ கடையில் ஆள் வார கல்லாவிற்கு சென்றுவிட்டான். 
கிருபா கடையில் உள்ள வாடிகையாளர்கள் குறைய பெரிதாக வேலை முடிந்து, ஸ்ரீயை தான் அது வேண்டுமா இது வேண்டுமா என்று மீண்டும் மீண்டும் கவனித்தான். இந்த பேச்சிலே இருவரிடமும் நல்ல நட்பு உருவாகி இருந்தது. 
கிருபாவிற்காக சாப்பிட ஆரம்பித்தவள் உணவின் ருசி நாவை கட்டி ஆளா  வந்த வேலையே மறந்து போனாள்.
கடைசியாக பாயாசத்தை சாப்பிடும் போது தான் வாசு நியாபகத்திற்கு வந்தான். 
‘இப்படி மண்ட மேல இருக்க கொண்டயே மறந்துட்டேயே சூனா பாணா’ என நினைத்தவள், வாசுவை பற்றி எப்படி விசாரிப்பது என யோசித்து கொண்டிருந்தாள்.
தானாக வந்து சிக்கினான் கிருபா “அக்கா இன்னும் பத்து நிமிஷம், வாசுண்ணா வந்துடுவாங்க, உங்கள பார்த்த ஹாப்பியா பீல் பண்ணுவாங்க. நீங்க இருக்கீங்களா. 
நம்ப ஃபேமிலில இருந்து தான் யாரும் அடிக்கடி கடைக்கு வர்றது இல்லையே. கார்த்தி அண்ணனும் தேனு அண்ணியும் தான் அடிக்கடி வருவாங்க. இன்னைக்கு தான் நீங்க வந்திருக்கிங்க, கொஞ்சம் வைட் பண்றிங்களா ? “
‘கண்ணா லட்டு திங்க தான் டா வந்துருக்கேன். இப்படி வாண்டெட்டா  வந்து சப்ளை பண்றிங்களே டா. எனக்கு வாய்த்த அடிமை மிகவும் திறமை’ என நினைத்தவள், சந்தோஷமாகவே மண்டையை ஆட்டி வைத்தாள் .
கர்மசிர்தையாக அவள் எடுத்த வைத்த பொடிகள் இருந்த கூடையை மணி வந்து இவளிடம் குடுத்தான்.
“உங்க நேர்மைமைக்கு ஒரு அளவில்லையாங்க “ என ஸ்ரீ மணியை பார்த்து கேட்க. புன்னகைத்து வைத்தான் மணி.
“சரி ரெண்டுக்கும் பில் குடுங்க.” என கேட்க, மணியும் கிருபாவும் அதிர்ந்தனர்.
“நல்லா கேட்டிங்க போங்க. ஏன் அக்கா நீங்களும் இப்படி பண்றிங்க.” என இருவரும் முறைத்தனர்.
“நான் என்ன பா செஞ்சேன் ?” அப்பாவியாய் ஸ்ரீ கேட்க, கிருபா பதில் கேள்வி கேட்டான்.
“வாசு அண்ணே வீட்லயும் சரி உங்க வீட்லையும் சரி யாரும் பெருசா வரதில்லை. இன்னைக்கு தான் நீங்களே வந்திருக்கிங்க, நீங்களும் இப்படி வெளி ஆளு மாதிரி பில் தரேன் சொன்னா எப்டிக்கா ?”  
“எப்பா சாமி என்னால முடில தம்பிகளா…நான் காச குடுக்கல…ஆனா ஊனா கிளம்பிறிங்க… ஆள உடுங்க பா…” என ஸ்ரீ கையெடுத்து கெஞ்ச, மணி கிளம்பினான். கிருபா பக்கத்திலே வேறு ஒரு டேபிளை சுத்தம் செய்ய, கிட்ட தட்ட நான்கு மணி ஆக பத்து நிமிடம். 
இப்போது கிருபாவை தவிர ஆட்களே இல்லை. கிருபா எல்லா டேபிளையும் சுத்தம் செய்ய, கரோக்கி மட்டும் இசைத்து கொண்டு இருந்தது. மணியை ஆளை காணவில்லை. எப்போது கடையை மூடுவார்கள் என எண்ண, 
ஸ்ரீ, “கிருபா எப்போ ஹோட்டல் க்ளோஸிங் டைம் ?” 
“இன்னும் கால்மணி நேரத்துலக்கா.” என சொல்ல இன்னும் பீதியாகி போனாள்.
இவள் காரணம் கேட்டதற்கு, அங்கே காலை மதியம் என இரு வேளை மட்டும் தான் உணவு  என்றும், வேறு எதாவது வெளி ஆர்டர் கிடைத்தால் மட்டும் மாலை கடை திறந்திருக்கும் என கிருபா தகவல் சொன்னான்.
இவ்வளவு நேரம் ஆகி விட்டதா என யோசித்தவள். கடையில் ஆட்கள் சுத்தமாக இல்லை. என்ன டா இது தனியாக வந்து மாட்டிக்கொண்டோமா என ஒரு நிமிடம் நினைத்தாள். 
இங்கு சந்திக்க முடிவெடுத்தது தவறோ என முதன் முதலாக நினைத்தாள். இன்னொரு முறை சந்தித்தால் பொது இடமாக சந்திக்க வேண்டுமோ என நினைத்து கொண்டாள். 
வெளியே பார்தத்தாள்  நல்ல வெயில், அகலமான நுழைவாயில், கதவு  என்ற ஒன்று அங்கு காணவில்லை. அறை முற்றிலுமாக திறந்து தான் இருந்தது. பஸ் நிறுத்துமிடம் அருகே தானே அதனால் ஜனம் வந்து போய்க்கொண்டு தான் இருந்தது. வெளியே இருந்து பார்த்தால் உள்ளே நன்றாக தெரியும் இடதில் தான் அமர்ந்திருந்தாள். அதனால் இப்போது தனியாக இருக்கிறோம் என்ற எண்ணம் இல்லை.
கதவை பற்றி கிருபாவிடம் கேட்டாள், அவன் ஷட்டர் தான் இருக்கிறது என்றும், வாசு வந்து தான் மூடுவான் என்று சொன்னான். 
நிதானமாக யோசித்து பார்த்தாள். இது போல் தனியாக சந்திக்கும் போது, பாதுகாப்பு அம்சங்களை பற்றி ஒரு பெண் எவ்வளவு யோசிக்க வேண்டும். ஆனால் இப்படி இவள் தட புடா என முடிவெடுத்தது இவளுக்கே சரியாக படவில்லை. இதே வேறு ஹோட்டலாக இருந்தால், அதுவும் இது போல ஒரு நேரத்தில் என்றால் அடி முட்டாள் தனம் தான். 
ஆனால் இது வாசுவின் ஹோட்டல். சுற்றி நிறைய ஜன்னல்கள். அனைத்தும் திறந்திருந்தது. 
நுழைவாயிலில் இருந்து உள்ளே வந்த வெளிச்சம் அறை முழுவதும் படர்ந்திருந்தது. 
போதாக்குறைக்கு உள்ளே எல்லா லைட்டும் போட்டிருந்தது. சுவரில் மாட்டும் விசிறி கூட எல்லா இடத்திலும் இயங்கி கொண்டு தான் இருந்தது. இவள் ஒருத்தி தான் இருக்கிறாள் என்று கிருபா எதையும் அமர்த்தவில்லை.
தைரியம் வரபெற்றவள் நன்றாக ஆசுவாசமானாள். 
கொஞ்சம் மனம் சமன் செய்ய ஓவியங்களை பார்த்தாள். நன்றாக பார்த்தாள், அதில் இருந்த பாட்டி உருவம் அப்படியே சுந்தரி ஆச்சி சாயலில் இருந்தது. மீண்டும் மற்றவற்றை பார்த்தாள் கொஞ்சம் இளகுவானாள். 
சிவசு தாத்தா வீடு போல் ஏதோ ஒரு எண்ணம் உள்ளே வியாபித்தது. ஒரு பாதுகாப்புணர்வு. கொஞ்சம் ஊஞ்சலை தள்ளி ஆடி பார்த்தாள். புன்னகை கூட கொஞ்சம் எட்டி பார்த்தது.  
ஐந்து நிமிடம் கடந்திருக்கும், வெளியே பைக் சத்தம்.
ஆவலுடன் வாசலை திரும்பி பார்த்தாள் ஸ்ரீ. . இன்னும் மனதில் இருந்த தைரியம் கூடியது. முழு பாதுகாப்புணர்வு,
வந்துவிட்டான், வந்தே விட்டான் வாசுதேவன். அவனை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள். 
அப்போது அங்கே இன்னும் இனிமையாக கரோக்கி ஒலித்தது. அதனுடன் சேர்ந்து இவள் மனமும் பாடியது,
பொல்லாத என் இதயம் ஏதோ சொல்லுதே 
நில்லாத என் உயிரோ எங்கோ செல்லுதே 
நானே வருகிறேன் 
கேளாமல் தருகிறேன்…
 
    
 
 
     
    
  
 

Advertisement