Advertisement

            அன்று ஞாயிற்று கிழமை மாலை நான்கு மணி, வீட்டில் எல்லாரும் சாப்பிட்டு படுத்திருந்தனர். சுந்தரம் சிவகாமியும் முன்னே உள்ள அறையில் படுத்திருந்தனர். 
  வீட்டின் பிற்பகுதியில் கீழே புதிதாக இரண்டு கட்டியிருந்த அறைகளில் ஒன்றில் கார்த்தி அவன் வேலை சமந்தமான விஷயங்களை ஏதோ சரி பார்த்துக்கொண்டிருந்தான். இன்னொரு அறையில் தேனு படுத்து அரை உறக்கத்தில் இருந்தாள்.
அவளுக்கு இது நான்காம் மாதம் ஆரம்பம், அவள் வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிக்கு சென்று திரும்புவதால் இன்று தான் நிம்மதியாக தூங்க முடியும். 
சிறுபிள்ளையில் இருந்து ஒன்றாக ஸ்ரீயுடன் வளர்ந்ததாள், சிவகாமி தேனுவினிடம் மருமகள் என்ற கோடிட்டு தள்ளி நிற்க மாட்டார்.
நன்றாக உரிமையாக எல்லாம் செய்வார். திருமணமான புதிதில் தேனு காலையில் சமையலில் ஏதாவது உதுவுவாள், இரவு முழுமையாக சமைப்பாள்.
தேனு வளர்ந்து இவருக்கு மருமகளாக வந்து விட்டாள் என்பது கூட மனதில் சரியாக பதியவில்லை. இப்போது தினமும் சமையல் அவர் தான் மூன்று வேளையும், தேனு உதவுகிறேன் என்றால் கூட இவர் எங்கே அவள் கையை சுட்டு கொள்வாளோ என்று அவள் அருகிலேயே நிற்பார். இன்னும் சிறுபிள்ளையென, அதுவும் உண்டாகி இருக்கும் நேரத்தில் ஏதாவது சிரமம் வந்துவிட கூடாது என பார்த்து பார்த்து செய்வார். 
இவர் இப்படி என்றால், சுந்தரம் வெளியே சென்றால் இவளுக்கு பிடித்த அப்பம், பால் பன், பரோட்டா என ஏதாவது வாங்கி கொண்டு வந்துவிடுவார். சிவகாமி அவரை திட்டுவார் என்னென்றால் வெளி பண்டங்களே தேனுவை சாப்பிட விடுவதில்லை. சிவகாமியே சிரமம் எடுத்து இது எல்லாம் வீட்டிலே செய்வார்.
இங்கே இப்படி என்றால் சிவசு தாத்தா வீட்டிலிருந்து ஏதாவது வாரதிற்கு இருமுறையாவது இவள் வீட்டிற்கு ஏதாவது செய்து அனுப்பிடுவார் ஆச்சி. 
இத்தனை பேர் அவளை பார்த்திருந்தும், கார்த்தியின் அருகாமைக்கு ஏங்கி போயிருந்தாள். இத்தனை நாள் நன்றாக தான் பார்த்துக்கொண்டான்.
ஆனால் இந்த ஒருமாதமாக அவளை கண்டுகொள்ளாமல் வேலை வேலை  என சுற்றிகொண்டிருக்கிறான். அப்படி என்ன வேலை என இவளுக்கு கோபமாய் வரும்.
ஒரு சிரிப்பு இல்லை, ஒரு அரவணைப்பு இல்லை, ஏன் இவள் உணவு பரிமாற சென்றால் கூட சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பி விடுகிறான். 
இறுகிய அணைப்புக் கூட வேண்டாம், ஆறுதலாய் ஒரு அணைப்பு போதும் தேனுவிற்கு.
அவன் அறியாமல் இவளுடனான நேரம் அவனுக்கு மிகவும் குறைந்திருந்தது. அவன் அதை உணரவில்லை.
அவனின் காதலில் அப்படி மூழ்கி திளைத்தவளால், ஒரு நேசமான முத்ததிற்கு கூட பஞ்சமாக இருப்பது அப்படி ஒரு ஏக்கத்தை கொடுத்திருந்தது.  இவள் திரும்ப திரும்ப மனதில் ஏக்கம் வந்து விட கூடாது என வேலையில் கவனத்தை திசை திருப்பி இருந்தாள். அவளை சுற்றிலும் பள்ளியில் குழந்தைகள், அதனால் அது பெரும் ஆறுதலாய் இருந்தது. ஏக்கம் எட்டிபார்க்காமல் இருந்தது. வீட்டிற்கு வந்தால் கூட சிவகாமியும், சுந்தரமும் இவளை தனியாக விடாமல் பார்த்துக்கொண்டனர்.
தேனு எதையும் மனதிலயே வைத்து கொள்வாள், ஸ்ரீ போல குறும்பு இல்லை, தேனு சிறு வயதில் இருந்தே அமைதியான பெண். 
தேனு மனம் விட்டு பேசி சிரித்து சுற்றிதிரியும் செய்யும் தோழி ஸ்ரீபத்மா தான். 
ஸ்ரீக்கு அடுத்தது தேனுவிற்கு கார்த்தி தான், ஒரு கணவனாய் தேனுவை கவனிக்காமல் விட்டிருந்தான். 
அவன் வங்கி சம்பந்தமாயும் வாசு சம்பந்தமாயும் அவனாய் எடுத்து கொண்ட ஒரு ஆதி முக்கிய வேலை, அது மிகவும் முக்கியமானதாய் அவனுக்கு இருந்தது. அது தான் இரண்டு வீட்டிலும் தேனுவை நன்றாக பார்த்துக்கொள்கிறார்களே, இன்னும் சிறிது நாட்கள் தானே, நாம் இந்த வேலை முடிந்த பிறகு தேனுவை பார்த்துக்கொள்ளலாம் என நினைத்திருந்தான்.
அதனால் அவன் முழு கவனம் அந்த வேலையில் இருந்தது. வீட்டிலும் அதை வைத்து தான் பார்த்துக்கொண்டிருக்கிறான். 
கார்த்திக்கு வேலை பளுவில் தேனுவின் மனதை அறிய தவறவிட்டிருந்தான். தேனுவும் அவனுக்கு உணர்த்த தவறி இருந்தாள். 
ஆனால் இன்று காரணமே தெரியாமல் அவனது ஸ்‌பரிசம் வேண்டும் என அடம் பிடிக்கும் மனதை என்ன செய்வது என அவளுக்கு தெரியவில்லை . 
அரை உறக்கத்தில் கூட கண்களில் கண்ணீர் இறங்கியது ஏதோ காதில் மெல்ல சத்தம் கேட்க, மெதுவாக எழுந்தாள், ஸ்ரீ வாங்கி வந்த உடையில் ஒன்றை தான் அணிந்திருந்தாள். கொஞ்சம் பெரிதாக இருந்தாலும் அது அவளுக்கு பொருத்தமாக இருந்தது.  அதை கார்த்தி கவனித்தான என்று கூட இவளுக்கு தெரியவில்லை. 
மெல்ல நடந்து வெளியே வந்தவள், கார்த்தியின் அறையை திறந்து உள்ளே சென்றாள், இவள் வருவதை உணர்ந்ததும் கண்களை இவள் புறம் திருபியவன், என்ன என்பது போல் பார்க்க, இவள் ஒன்றும் இல்லை என்பது போல் தலையை ஆட்டிவிட்டு நடந்து அவனை கடந்து சென்று அங்கே இருந்த தண்ணீர் பாட்டில் எடுத்து வெளியே சென்று விட்டாள். இவ்வளவோ தான என யோசித்தவன் மீண்டும் வேளையில் மூழ்கி விட்டான். 
வெளியே வந்த தேனுவால் கண்ணீரை கட்டுப் படுத்தவே முடியவில்லை, ஸ்ரீயையாவது பார்க்க வேண்டும் போல் ஒரு ஆவல். 
முதலில் இவளும் கார்த்தியும் மேலே தான் இருந்தனர், பிறகு தேனு பேறு  காலம் முடியும் வரைக்கும் இருவரையும் கீழே இருக்க சொல்லிவிட்டார் சிவகாமி.  
இப்போது மேல அவர்கள் உபயோகித்த இரண்டு அறையை தவிர மூன்றாம் அறையில் ஸ்ரீயின் வாசம்.
மேல இருந்து தான் ஏதோ மெலிதாக சத்தம் வந்துகொண்டிருந்தது. தேனு மெல்ல மேல் தளம் ஏறினாள். 
மேல வந்தால் , ஸ்ரீயின் அறை பால்கனியை ஒட்டி இருந்தது. இவள் மேல வர வரவே சத்தம் அதிகமாக கேட்டுகொண்டிருந்தது.
கண்களில் ஏனிந்த
கண்ணீர் அது யாராலே 
எனும் பாடல் ஸ்ரீயின் அறையில் இருந்து ஒலித்து கொண்டிருந்தது.
ஒரு நிமிடம் தேனு வெளியே நின்று விட்டாள். நிற்காமல் வழிந்தது கண்ணீர், உள்ளே போகாமல் அப்படியே போய் விடலாமா என திரும்ப, மனது கேட்கவில்லை, அப்படியே அங்கு உள்ள சமையல் அறைக்கு சென்று சிங்கில் நன்றாக முகத்தில் தண்ணீர் அடித்து கண்ணீரின் தடம் தெரியாமல் கழுவி வந்தாள்.
மெல்ல நடந்து ஸ்ரீயின் அறையை அடைந்து விட்டாள். உள்ளே திறந்து பார்த்தாள். 
டாடான் டாடான்…
ஹா…ஹா…ஹா…அப்படி ஒரு சிரிப்பு தேனுவிற்கு…
“ என்ன கேர்ள் பண்ற ஹா…ஹா…ஹா…”
ஸ்ரீயோ ஒரு ரெட் டி-ஷர்ட் அணிந்து, க்ரே நிற முட்டி கீழ் வரை உள்ள ஷார்ட்ஸ் அணிந்து, தலையில் துண்டை ராஜா போல் ஒரு பக்கம் முடிச்சிட்டு கட்டி, அதற்கு கீழ் நெற்றியில் ஒரு பக்கம் மட்டும் முடியின் பிரின்ஜஸ் விழ, உதட்டின் மேல் காஜலால் மீசை வரைந்து, அவள் தனியாக வைத்திருக்கும் ஆள் உயர டெடி பியர்க்கு சேலை கட்டி, அதனின் காலை இவள் கால் மேல் வைத்து, அதனின் ஒரு கையை இவளை சுற்றி போட்டு மறுக்கையின் விரல்கள் பிடித்து ஆடி கொண்டிருந்தாள்.  ஏதோ லவ்வர்ஸ் போல் ஆடி கொண்டிருந்தாள்.
அதிலும் ஸ்ரீயின் முகத்தில் என்ன ஒரு ரொமான்ஸ்.
இதனை பார்த்து தான் தேனு கெக்க புக்கே என சிரித்து கொண்டிருக்கிறாள்.
“ ஹேய் கேர்ள்…வா நீயும் வா…உன்கூடவும் டான்ஸ் பண்றேன். “ என சொல்லி தேனு வேண்டாம் என எவ்வளவோ மறுக்க, அவளை பிடித்து வம்படியாய் மெல்லியே ஆட்டம் போட்டு கொண்டிருந்தாள். 
“ ஹா..கேர்ள் போதும் விடு…”
“ என்ன கேர்ள் இப்படி சொல்ற, நீ தான் என் ஃபர்ஸ்ட் லவ், அப்றோம் தான் உங்க அண்ணனே. “ என உளறி கொட்டியிருந்தாள் ஸ்ரீ.
ஒரு நிமிடம் ஆட்டத்தை நிறுத்தியிருந்த தேனு இவளை பெக்க பெக்க என பார்க்க, அப்போது தான் ஸ்ரீக்கு விஷயம் பிடிபட்டது.
‘ அய்யய்யோ……உளரிட்டோமோ… சமாளிப்போம், சமாளிப்போம்.‘ என மைண்ட் வாய்ஸ்ஸில் நினைத்தவள்,
“ ஏன் கேர்ள் நின்‌னுட்டா. “ என ஒன்றும் தெரியாதவள் போல் ஆடி கொண்டே கேட்டாள்.
“ நீ இப்போ என்ன சொன்ன “
“ நீ என்ன தான் ஃபர்ஸ்ட் லவ் பண்ண, அப்றோம் தான் எங்க அண்ணன உனக்குனு சொன்னேன். ஏன் கேர்ள். “ என ஆடி கொண்டே அண்ட புழுகாய் ஆகாச புழுகாய் பூசி மொழுகி விட்டாள் ஸ்ரீ.
ஒரு நிமிடம் தேனு குழம்பி விட்டாள். நாம் முதலில் சரியாக தான் கேட்டோமா. 
‘ இவள யோசிக்க விட கூடாதே ’ என தேனுவை கட்டி பிடித்து லேசாக சாய்ந்து சாய்ந்து ஆடினாள்.    
தேனுவின் முதுகில் தல வடிவேலுவின் மாட்டி கொண்ட முழியாய் ஸ்ரீபத்மா முழித்து கொண்டிருந்தாள். ஆனால் ஸ்ரீயின் கழுத்தில் ஒரு கண்ணீர் சொட்டு விழுந்தது.
அப்படியே ஸ்ரீயின் முகம் மாறியது.
தேனுவை தன்னிடம் இருந்து பிரிக்க முயற்ச்சி செய்தாள் ஆனால் முடியவில்லை. அவ்வளவு இறுக்கி ஸ்ரீயை பிடித்திருந்தாள். நிற்பேனா என்றது கண்ணீர்.
ஸ்ரீ ஒன்றும் செய்யவில்லை, இவளும் தேனுவை இறுக்கி அணைத்தாள். ஒரு ஆறுதலாய், ஒரு அரவணைப்பாய். 
ஒரு சில நிமிடங்கள் கரைய…
“ அண்ணி இங்க பாறேன்…”
“ போ நீ என்ன அண்ணினு கூப்பிடேன நான் இப்போவே கீழ போறேன். “ என கிளம்பி வெளியே வந்து விட்டாள். 
ஒரு நிமிடம் அதிர்ந்த ஸ்ரீ வெளியே வந்துவிட்டாள். குடு குடு வென ஓடி தேனுவின் முன் சென்று ஒற்றை காலில் மண்டியிட்டவள், அவசரமாய் கையில் துடைப்பக்கட்டையை எடுத்தாள்,
“ கேர்ள் போகாத… நீ எங்க அண்ணன வேணா இதலயே அடிச்சிக்கோ …பட் என்ன விட்டுடாத. “‌   என துடைப்பத்தை வைத்து ப்ரபோஸ் செய்தாள்.
“ எந்திரி கேர்ள் முதல. “ என சிரிப்புடன் தேனு சொன்னவுடன் எழுந்த ஸ்ரீ, தலையில் இருந்த துண்டை அவிழ்த்து உதறி நெற்றியில் வராத வேர்வையை துடைத்தவள், 
“ அப்பா எவ்ளோ பெர்பார்ம் பண்ண வேண்டியதா இருக்கே. என்ன சூடு…என்ன சூடு…ஹேய் புள்ள தேனு இப்போ நீ என்ன பண்ற, டயெட்டா இருக்க எனக்கு ஒரு ஜூஸ் போடுவியான். ஓகே வா போலாம் “ என தேனுவின் தோளில் சுற்றி கையை போட்டு அங்கே உள்ள சமையல் அறைக்கு வம்படியாய் அழைத்து சென்றாள்.
“ விடு என்ன…நான்லாம் ஜூஸ் போட மாட்டேன். போட்டு தந்த குடிப்பேன் அவ்ளோ தான். “ என தேனு முறுக்கி நிற்க,
“ ஓகே “ என தோளை குழுக்கி எளிதாக ஒத்துக்கொண்டாள் ஸ்ரீ.
ஸ்ரீயை முடிந்த மட்டும் முறைத்தாள் தேனு. ஸ்ரீக்கு இது தானே வேண்டும். இதே ஸ்ரீ சாதாரணமாக கேட்டாள் வேண்டாம் போ என்று விடுவாள், எதாவது இப்படி இவளை கேட்டாள் மட்டுமே இப்படி பதில் வரும் என தெரிந்தே விளையாடினாள்.
ஸ்ரீயை முறைத்த தேனு, பிறகு பால்கனி நோக்கி சென்று விட்டாள் தேனு. செல்லும் அவளை தான் பார்த்தாள் ஸ்ரீ. ‘என்னனு தெரிலயே’ ஒரு பேரு மூச்சு தான் வந்தது.
அங்கே ஃபிரிஜ்ஜில் இருந்த எழுமிட்சையை எடுத்து ஜூஸ் போட்டவள் தேனுவிற்கும் அவளுக்குமாய் இரண்டு கிலாஸில் விட்டு எடுத்து பால்கனிக்கு வந்தாள் ஸ்ரீ.
தேனுவிடம் நீட்ட, அவள் முகத்தை திருப்பினாள், அப்போது தான் ரோட்டில் பக்கத்து வீட்டு சிறுவன் நடந்து வந்துகொண்டிருந்தான். அவர்கள் வீட்டு ஆட்கள் நல்ல பழக்கம் இவர்களுக்கு.
ஸ்ரீ அவனிடம், “ தம்பி உங்க அம்மா இங்க வர சொல்ரியா. அவங்க கேட்டது ரெடியா இருக்குனு சொல்லு.  நீ போய் உங்க அம்மாட்ட சொல்லி கூட்டிட்டு வா ”  என சொல்ல அச்சிறுவனும் சரி சரி யென தலையாட்டிவிட்டு சென்றான்.
“ என்ன கேர்ள் ரெடியா இருக்கு. என்ன கேட்டாங்க அவங்க, என்கிட்ட சொல்லவே இல்ல. “
“ நான் குடுத்த லெமன் ஜூஸ் குடிக்காதவங்க கிட்டலாம் சொல்ல முடியாது.” என இப்போது ஸ்ரீ முகத்தை திருபினாள்.
“ சொல்லாத போ “ என தேனுவும் திரும்பி நின்றாள்.
கீழே பெல் அடிக்கும் சத்தம் கேட்டதும், கார்த்தி வெளியே வந்தான் . பக்கத்து வீட்டு அக்கா தான் அந்த சிறுவனோடு வெளியே நின்றிருந்தார்.
“ வாங்க வாங்கக்கா. “ என வீட்டு மனிதனாய் புன்னகையுடன் அழைக்க, 
“ பத்து தான் வர சொல்லிச்சு, மேல இருக்கு போல, இவன் கிட்ட தான் சொல்லிவிட்டுச்சு. “ என மகனை காட்ட, முதல் தளத்திற்கு வழி சொன்னான். அந்த சிறுவன் அவன் வீட்டிற்கே ஓடி விட்டான்.
இவர் மேலே வந்துவிட்டார். அவர் வரும் வரை தேனுவும் ஸ்ரீயும் பேசவில்லை. அங்கே வீசியே இளம் காற்று இருவரையும் தழுவ, அப்படியே தான் அதை அனுபவித்தபடி நின்றிருந்தனர். அப்படி ஒரு இதம் இருந்தது அந்த காற்றில், தேனுவிற்கு மனம் சற்று சமன் பட்டது.
இவர் வரும் சத்தம் கேட்டதும், இருவரும் திரும்பி வரவேற்றனர். 
“  வாங்கக்கா. “
“  என்ன பத்து எப்படி இருக்க. கொச்சின் எல்லாம் எப்படி இருக்கு.
நல்லா பூசுனாப்புல ஆயிட்ட. 
உண்டாயிருக்கறது தேனு, அதுவே குண்டாக ஆக மாட்டிங்குது. நீ அதுக்கும் சேர்த்து ஆயிடுவா போல இருக்கே “
என வந்ததும் வராததுமாய் சிரித்து கொண்டே ஸ்ரீயை உரிமையாய் வம்பிழுத்தார்.
“ நாங்கெல்லாம் இப்படி இருக்கறது நாலா தான் நீங்க எல்லாம் ஒல்லியா தெரியரிங்க. 
ஆக்சுவலி ஸ்பீக்கிங், அதுக்கு நீங்களும் தேனும் தான் எனக்கு தாங்க்ஸ் சொல்லணும். “ என ஸ்ரீ சிலுப்ப,
தேனுவின் முகத்தில் புன்னகை மீண்டிருந்தது .
“ ஆத்தாடி ரொம்பத்தான், இப்படியே சிலுப்பினா கழுத்து என்னதுக்கு ஆகும். நீ வேணா பாரு நான் சமச்சு போட்டு தேனுவ குண்டாக்குறேன். “ என அவர் கோதவில் குதிக்க, இப்போது தேனு வாய் விட்டே சிரித்திருந்தாள்.  
“ அப்படியா, நான் வேணா ஒரு சேலஞ் பண்றேன். நீங்க அவ்ளோ தூரம்லாம் போ வேண்டாம். இந்தா இருக்கே இம்புட்டுண்டு ஜூஸ், அத அவள குடிக்க வைங்க பார்ப்போம். 
நெஞ்சு கரிக்குதும்பா, வாய் புளிக்குதுனும்பா, எவ்ளோ காரணம் சொல்லுவா பாருங்களேன். “  அவர் ஆரம்பித்த கோதவில் தேனுவை அசால்ட்டாய் சிக்க வைத்தாள் ஸ்ரீ.
‘ அடிப்பாவி ‘ என தேனு அப்படமாய் ஸ்ரீயை முறைக்க, ஸ்ரீ இவளுக்கு மட்டும் தெரியுமாறு கண்ணடித்தாள்.
வந்தவரோ, “ தேனு நீ இந்த ஜூஸ் குடிம்மா, பத்துவ நம்ப ரேஸ்ல பின்னாடி தள்ளுறோம் என இவர் களத்தில் இறங்கி விட்டார். 
தேனு, “ இல்லக்கா பரவால. நான் இப்போ தான் சாப்பிட்டேன். “
ஸ்ரீ, “ பார்த்திங்களா நான் சொன்ன இல்ல அவ குடிக்க மாட்டனு. 
உங்க தோல்விய ஒத்துக்கோங்க அமைச்சரே.”  என அந்த அக்காவை ஏத்தி விட,
அவர்  இன்னும் தேனுவை பெரிதாக முழித்து பார்த்து உரிமையாய் அதட்ட, தேனு எப்படியோ ஜூஸ்ஸய் குடித்து முடித்தாள்.   
பார்த்தியா என்பது போல் அவர் ஸ்ரீயை பார்க்க, தேனு ஸ்ரீயை முறையோ முறையென முறைக்க,
“ ஓகே, நீங்க எங்க அண்ணிய ஜூஸ் குடிக்க வைத்ததால் உங்களுக்கு ஒரு கேக் பரிசாக வழங்கப் படுகிறது. “ என அறிவித்தவள், உள்ளே சமையல் அறை சென்று ஃபிரிஜ்ஜில் இருந்து ஒரு கிலோ ஸ்பான்ஜ் கேக்கை எடுத்து வந்தாள். 
தேனுவிற்கு புரிந்து விட்டது.
” தாங்க்ஸ் பத்து ” என சொல்லி அவர் வாங்கி கொண்டார்.
” சாப்பிட்டு டேஸ்ட் எப்படி இருக்குனு சொல்லுங்க அக்கா. இங்க பாருங்க ஒரு ஜீவன் கேக்க எப்படி பாக்குதுன்னு ” என தேனுவை சுட்டி காட்ட, 
தேனு, ” அக்கா நான் ஒன்னும் பாக்கல க்கா, சும்மா வாசம் பிடிச்சேன். ” என உளறி கொட்ட, அங்கே ஒரு மென் சிரிப்பலை. 
” தேனு மாசமா இருக்கப்போ, ஸ்வீட் நிறையா சாப்பிடகூடாது பாப்பா. ஏங்கவும் கூடாது சாமி.” என அக்கறையாய் சொல்ல,
” underline…underline…” என ஸ்ரீ விளயாட்டு போல் சொல்ல,
 தேனுவும் ஸ்ரீ எதை சொல்கிறாள் என புரிந்து சிறு புன்னகையுடன் தலையை ஆடி வைத்தாள்.    
” ஏ கண்ணு, நல்ல வாசமா இருக்கு , பையன் பர்த்டேக்கு வேணும்னு காலையில சொன்னதும், மதியமே செஞ்சு குடுத்துட்ட. தாங்க்ஸ் கண்ணு. ” என ஸ்ரீக்கு நன்றி உரைக்க,
ஸ்ரீ, ” அட பரவால க்கா. இதுல என்ன இருக்கு. என்னோட கேக்கையும் சாப்பிடுறிங்க. அதுக்கே மனசுல தைரியமா வேணும். உங்க தைரியத்த நான் பாராட்டுறேன். ” என பெரிய மனித தோரணயில் சொல்ல. 
” வாலு பொண்ணு ” என ஸ்ரீக்கு கையில் ஒரு அடி வைத்தார். பிறகு இருவரிடமும் பேசிவிட்டு அவர் வீட்டிற்கு சென்று விட்டார்.
தேனு ஸ்ரீயிடம் திரும்பியவள், அவள் தோளின் மேல் சாய்ந்து கொண்டாள். தேனுவின் தோளை சுற்றி கையை போட்ட ஸ்ரீ,   
” இங்க பாரு தேனு,  அந்த அக்கா சொன்னது தான். ஸ்வீட்க்குனு மட்டும் இல்ல, வேற எதுக்கும் ஏங்க கூடாது. 
சரி செய்ய முடியாத பிரசன்னையா உனக்கும் அண்ணாக்கும் இருக்க மாதிரி தெரில. 
நீங்க ரெண்டு பேரும் ஒரே லவ்வி டவ்வி கப்புள்ளா சுத்திக்கிட்டு இருந்திங்க. 
எதுவா இருந்தாலும் அண்ணாவ புடுச்சு உட்காத்தி வச்சு நீ பேசு. 
அப்படி எங்க அண்ணாட்ட பேச ஃபுல் ரைட்ஸ் இருக்க பொண்ணு நீ தான்.    
இந்த மாதிரி டைம்ல நீ உன்னோட மைண்ட்டா நல்லா வச்சிக்கிட்டா தான் உள்ள பேபியும் நல்லா இருக்கும். என்ன சரியா ” ‌என ஸ்ரீ கேட்க, அவளது தோளிலே தலையை அசைத்திருந்தாள் தேனு.
அந்த பால்கனியில் ஒரு அழகான நட்போவியம் எழிலாய் காட்சியளித்து.
” ஓவர் பீலிங்க்ஸ்ஸா போயிட்டு இருக்கு, இதெல்லாம் நமக்கு செட் ஆகாது. சீதா அத்த மருதாண அரச்சு வச்சிருபாங்க, நான் போய் வாங்கிட்டு வரேன். நம்ப வச்சிக்காலம். நீ போய் ஃபிரெஷ் ஆயிட்டு ரெடியா இரு. 
நான் போயிட்டு வந்தரேன் பேத்தக்குட்டி.
ஒரு நாள் உங்க அண்ணா கடைக்கு போனேன் சொன்னேன்ல, அப்போ அங்க மெனுலாம் பார்த்தேன். நல்லா இருந்துச்சு, இப்போ கடை திறந்து இருந்தா அப்படியே அங்கே ஏதாவது வாங்கிட்டு வரேன். ஓகே. 
அதுக்குள்ள எங்க அண்ணா ஏதாவது சேட்ட பண்ணா , அப்படியே அவன சேர்ரோட கட்டி வை, நான் வந்ததும் ஒரு ஃபைட் ஸீன் வச்சிக்கலாம் ” என சொல்ல, தேனு புன்னகையோட தலையை ஆடினாள்.
ஸ்ரீ தேனுவை பொறுப்பாக கீழே விட்டு வந்து, வாசுவின் வீட்டிற்கு செல்ல  தயாரானாள். 
தயாராகி கீழே வந்தாள், தேனுவிடம் சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள். மனதில் என்னமோ ப்ளான் செய்தவள், கையில் மொபைலுடன் முதலில் வாசுவின் கடையை நோக்கி கிளம்பிவிட்டாள். 
அவளுக்கு வாசுவை பற்றி சில தகவல்கள் வேண்டி இருந்தது.
‘ கட பஸ் ஸ்டாப் பக்கம் தான் இருக்கு. சோ அங்க ஆளுங்க வர போக இருப்பாங்க. சோ ஒன்னும் தனியா இருக்க மாதிரி இருக்காது. 
சேஃப்டி முக்கியம் மன்னா. ‘ என தனக்குள்ளே யோசித்தாள்.
‘இப்போ கட திறந்திருக்குமானு தெரிலையே. இந்த டைம்கெல்லாம் மூடி இருக்கும்னு அன்னைக்கு சொனங்களே.  
வெளியே இருந்தே கடையை பார்ப்போம். உள்ள ஆளுங்க இருந்த போலாம், இல்ல திரும்பிடலாம். வெளி ஆர்டர்ஸ் வந்தா திறந்திருக்கும்னு சொன்னாங்களே. பார்ப்போம். ‘ என முடிவு செய்தவள், கடையை பதினைந்து நிமிடத்தில் அடைந்திருந்தாள்.
 
      
 
 
 
   
   

Advertisement