Advertisement

     ஸ்ரீபத்மா திருச்சி வந்துவிட்டாள். தேனுவிற்கு இப்போது மூன்று மாதங்கள் ஆகியிருந்ததால், தேனுவிற்கு கொச்சினிலிருந்து அவளுக்கு நிறைய வாங்கி வந்திருந்தாள்.
    தேனுவிற்கு ஒரு ஆள் உயர டெடி பியர், கர்பகாலத்தில் உபயோகிக்கும் பெரிய அளவு தொள தொள லாங் ஃப்ராக் மூன்று, தேனு பள்ளிக்கு செல்வதால் ஹேண்ட் பேக், கால்களுக்கு மிருதுவாக இருக்கும் காலணிகள் என வாங்கி வந்திருந்தாள். எல்லாவற்றையும் கடை பிரப்பி கொண்டிருந்தாள்.
“ ஏன் கேர்ள் இப்படி பண்ற. இன்னும் கொஞ்சம் மாசம் போனதும் வாங்கிட்டு வந்திருக்கலாம்ல. “
“ ஏன் இப்போ இத போட்ட என்ன. வீட்ல இருக்க அப்போ போட்டுக்கோ. “
“ வீட்ல ஆளுங்க வர போக இருப்பாங்க. நான் இத போட்டுட்டு அவங்க முன்னாடி நிக்க முடியுமா. “
“ நீ இத அண்ணா கூட இருக்கப்போ போட்டுக்கோ. நைட் மட்டும் கூட போட்டுக்க. கொஞ்சம் ரிலாக்ஸ்ஸா இரு.
அப்றோம் இந்த கார்த்தி பையன் பாங்க், ஃபீல்ட் விசிட்னு அடிக்கடி ஊர் சுத்த போய்டுவான், அப்போ இந்த டெடி கட்டி பிடிச்சி படுத்துக்கோ, இந்த மாதிரி டைம்ல தனியா இருக்க மாதிரி பீல் பண்ண கூடாது. 
படுக்க பிடிக்கலையா கீழ அம்மாட்டா போய் பேசு, அவங்க என்ன உனக்கு புதுசா, 
உனக்கு கோபம் வந்தா கூட மனசுல வச்சிகாம அண்ணாட்டா கொட்டு, நல்லா ஓட ஓட நல்லா நாலு சாத்து சாத்து அவன. ஒன்னும் தப்பு இல்ல. “
என ஸ்ரீ தேனுவின் கட்டிலில் கடை பரப்பி கொண்டே தேனுவை பார்க்காமல் பேசிக்கொண்டிருந்தாள். 
நிமிர்ந்து பார்த்தாள், தேனுவின் கண்களில் ஆனந்தமாக மெல்லிதாக நீர் கோர்த்திருந்தது .
“ ஹேய் வர வர நீ அழு மூஞ்சியா ஆயிட்டு வர. “ என சொல்லி கொண்டே தேனுவை நெருங்க, ஸ்ரீயை இறுக்கி கட்டி கொண்டாள். 
“ அடியே நான் கார்த்தி இல்ல.“ என சொல்லிக்கொண்டு திரும்ப, இவர்கள் அறையில் இருந்து கார்த்தி எப்போவும் போல் அவுட் ஸ்டாண்டிங் ஹஸ்பண்டாய் நிற்க, அவனை எப்போவும் போல் இருவரும் ஒரே நேரத்தில் பார்க்க, 
“ நான் என் ஃபோன் மட்டும் எடுத்துக்குறேன். 
அவங்கவங்க வீட்ல நாத்தனார் சண்ட போட்டுகிட்டு எவ்ளோ குதூகலமா இருக்காங்க.
எனக்கும் தான் வந்து வாச்சிருக்கே ரெண்டும். இதுங்க பார்ட்னர்ஷிப்ல ஸ்கோர் ஏத்துனா, நம்பலாம் எப்போ வாழ்றதான். “
என அவன் பாட்டிற்கு புலம்பி கொண்டே மொபைலை எடுத்து கொண்டே வெளியே சென்று விட்டான். 
அதன் பிறகு நன்றாக தூங்கி எழுந்தவள், மதியம் போல் வாசுவின் உணவகதிற்கு சென்றாள். 
இன்றும் அதே ஊஞ்சல், ஆனால் அவள் எதிரில் இரு குழந்தைகள் அமர்ந்து ராகி கிச்சாடியை ருசித்து சாப்பிட்டு கொண்டே, அங்கே இருந்த சிறு மர குதிரை வண்டியை வைத்து விளையாட, அதை ஒரு போட்டோ எடுத்தாள். 
இவள் வந்ததை அறிந்து மணி, கிருபா இருவரும் விழுந்து விழுந்து உபசரித்தனர். இவளுக்கு வியாபாய் போய் விட்டது. 
அதுவும் கிருபா ஸ்ரீக்கு முன் ஐந்து வித விதமானா தட்டுகளை அடுக்கி, அவளை திக்கு முக்காட வைத்தான். போன முறை அக்கா என அழைத்த கிருபா இப்போது அண்ணி அண்ணி என உபசரிக்க, இவளுக்கு என்ன நினைப்பது என்ற தெரியவில்லை.  
இத்தனைக்கும் கிருபாவிற்கும், மணிக்கு கூட இன்னும் உறுதியாக வாசுவின் மனம் தெரியாது, ஆனால் ஒரு வழுவான யூகம் இருந்தது. 
அன்று ஊருக்கு போவதாக சொன்னவன் போகவில்லை என தெரிந்து இருவரும் வருந்தினர். அதனால் கிருபா அலையாய் அலைந்து ஸ்ரீபத்மா கொச்சினில் இருக்கிறாள் என்று தெரிந்து வைத்திருந்தான். 
அது மட்டும் இல்லாமல் வாசுவின் கொச்சின் ஃப்ளைட்டின்  இ – டிக்கெட்டின் பிரிண்ட் வாசுவின் பைக்கில் இருந்து கிருபாவின் கையில் எப்படியோ சிக்க, மணியும் கிருபாவும் துள்ளி குதித்திருந்தனர். 
அதன் பிறகு வாசுவை அப்படி இப்படி என சாடையாய் கேலி செய்ய, அவர்கள் இவ்வளவோ துல்லியமாய் கணிதிருப்பார்கள் என தெரியாத வாசு, எப்போதும் போல என அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அவன் சுதாரித்திருந்தால் அவர்களை வெளியே எதுவும் சொல்ல கூடாது என அடக்கி இருப்பான். 
ஆனால் இப்போது அவனை மீறி எல்லாம் நடக்க ஆரம்பித்து இருந்தது. ஸ்ரீபத்மாவிற்கு சிறு அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி, வெளியே காட்டிகிக்கொள்ளவில்லை. ஆனால் மனதில் குறித்து கொண்டாள். அரை மணி நேரம் ஆக வாசு வராததாலும் , அவ்வளவைவும் சாப்பிட முடியாத்ததாலும், பார்சல் செய்து கொண்டு கிளம்பி விட்டாள். 
வீட்டிற்கு வந்தவளால் மனதில் மகிழ்ச்சி, அவன் கூடவே சுற்றம் இருவரும் இப்படி அவளை அழைக்கவும் என்னமோ நடந்திருக்கிறது என நினைத்த ஸ்ரீ, எதுவாயினும் அவனிடம் கேட்டுக்கொள்ளலாம் என முடிவு செய்து அவன் வீட்டிற்கே சென்றாள்.
எப்போது வந்தாலும் தேனுவின் வீட்டிற்கு சென்று சுந்தரி அச்சியையும், சிவசு தாத்தாவையும் பார்த்துவிட்டுத் தான் வருவாள். அதனால் இது வித்தியாசமாக படவில்லை. உடனே கிளம்பி விட்டாள். 
‘ ஒரு மாசம் ஆயிடுச்சு இன்னுமா யோசிப்பான். யெஸ் ஆர் நோ எதுவா இருந்தாலும் சொல்லிட்டா பரவால. அவனுக்கும் நோ சொல்ல உரிம இருக்கு. ’ என யோசனையோடு அவன் வீட்டை அடைந்தாள். 
“ கன்னுகுட்டி, வா வா வா…” என சிவசு தாத்தா அன்போடு ஆர்பாட்டமாய் அழைக்க, அவர் அமர்திருந்த அந்த கால மர சோபாவின் தடிமனான கையில் அமர்த்தவாள், அவரின் கழுத்தை சுற்றி கையை போட்டு சலுகையாக உட்கார்ந்து கொண்டாள். 
சுந்தரி அச்கியோ, “ ஏய் கழுத, எந்திரி இன்னும் சின்ன புள்ளனு நெனப்பா. வீட்டுக்கு யாராவது வந்து புள்ளையே இப்படியா வளக்கறதுனு எங்களத்தான் சொல்லுவாங்க. பக்கத்துல தான் சேர் இருக்குல்ல அதுல உட்காரு குட்டி“ என திட்ட, இவள் தாத்தாவை பார்த்து அழுவது போல் உதட்டை கீழ் இழுத்து வராத அழுகைக்காக தேம்பினாள்.
“ இந்தா புள்ளயே எதுக்கு திட்டுறவ. அதுவே மாசதுக்கு ரெண்டு நாள் தான் ஊருக்கே வருது. அத போய் திட்டுறியே, பேசாம இரு சொல்லிபுட்டேன். “ 
“ இப்படி நீங்க செல்லம் கொடுத்து தான், என்ன சொன்னாலும் இந்த புள்ள கேக்க மாட்டிங்குது. தாத்தாவும் பேத்தியும் அடக்கமா நடங்க, இல்லைனா கீர கட்டாப்புல ஆயிஞ்சிபுடுவேன். “
“ நீ ஆயிர வரைக்கும் எங்க கை சும்மா இருக்குமா. “
“ சும்மா தான் இருக்கணும். இல்லைனா இன்னைக்கு கருவாட்டு குழம்பு  கிடைக்காது.”  என ஆச்சி சரியாக தாத்தவை தாக்க, ஒரு நிமிடம் ஆடிவிட்டார் சிவசு தாத்தா. இருந்தாலும் பதில் கொடுக்க வேண்டுமே,  
“ ஏய் உன் குழம்புக்கு ஒன்னும் இங்க யாரும் ஏங்கி கிடக்கல. போ சுண்டலி  உன் வேலைய பார்த்துக்கிட்டு, இந்த சிலுப்பு சிலுபிக்கறவ. “ என பேப்பர் படிக்க போவது போல் வெளித்திண்ணைக்கு பேப்பர் எடுத்துச் சென்றார். 
“ சுண்டலி ஆச்சி என்ன எங்க தாத்தாவா இப்படி ஆஃப் பண்ணிடிங்க. “ என தாத்தாவிற்காக வக்காலத்து வாங்கி சிரித்து கொண்டே சுந்தரி அச்சியின் அருகில் அமர, 
அச்சியோ அவர்கள் வீட்டில் இருக்கும் ஒரு அழகான பூனைக்குட்டிகக்கு கொஞ்சம் கருவாடை தொட்டான்குச்சியில் வைத்து நகர்த்தி வைத்தார். 
இவளை பார்த்து, “ என்ன சுண்டலினு கூப்பிடேனா பார்த்துகோ. உன்ன கருவாடா ஆக்கி இந்த பூனைக்கு போட்டுடுவேன். “ என மிரட்ட,
“ ஹஸ்கு புஸ்ஸுக்கு…” என இவள் அவருக்கு பழிப்பு கட்டியவள், அவர் மடியிலே படுத்தாள்.
அந்த பூனை குட்டியோ, எப்போடா நமக்கு கிடைக்கும் என இவ்வளவோ நேரம் காத்திருக்க, தொட்டான்குச்சிகுள் அதன் சிறு தலையை நுழைத்து தன் வேலையை செவ்வென ஆரம்பித்தது. 
அதை அப்படியே போட்டோ எடுத்தவள், அச்சியிடம் காண்பிக்க, அவர் ‘ என்னையெல்லாம் எடுக்க மாட்டேன்குர’ என குறை பட, சும்மா இருந்தவளுக்கு சலங்கையை கட்டியது போல்,  அவரை பாடாய்படுத்தி ஒரு முப்பது போட்டோஸ் எடுத்து அவருக்கு காமிக்க. ‘ நீ நல்லா எடுக்குற டா கன்னு ‘ என அவர் இவள் தாடையை பிடித்து முத்தம் வைக்க.
‘ தேங்க் யு சுண்டலி. ‘ என்றவள் அவர் மடியிலே படுத்து கொண்டு, எடுத்த போட்டோவை பார்த்துக்கொண்டிருந்தாள், வந்த வேலையே மறந்திருந்தாள் .
பிறகு ஆச்சி கருவாட்டு குழம்பு செய்ய கிளம்பிவிட்டார். 
அவர் குழம்பை செய்து முடித்து அமர்ந்தவர் டி‌வியை பார்த்து கொண்டே துவையலுக்கு அரைக்க தேங்காய்யை பெயர்த்து கொண்டிருந்தார். 
வாசுவின் வீட்டிலும் சரி, ஸ்ரீயின் வீட்டிலும் சரி எல்லாரும் அசைவப்பிரியர்களாக இருக்க, ஸ்ரீ மட்டும் சைவப் பட்சியாய் திரிந்து கொண்டிருந்தாள். சிறு வயதில் நன்றாக கட்டு கட்டியவள் தான், பின் உடம்பை குறைக்க அப்படி இப்படி என நடுவில் விட்டவள், அப்படியே தொடர்ந்து விட்டாள். 
அவளுக்காக தான் இந்த துவையல். வாசுவும் அவன் அம்மாவும் உள்ளூரில் ஏதோ இரங்கல் வீட்டிற்கு சென்றிருந்தனர். 
அதனால் அவர்கள் வந்தால் குளிக்க பின்கட்டில் பெரியே அடுப்பில் சூடுதண்ணி வைத்து இறக்கி இருந்தார் சுந்தரி ஆச்சி.
இது தெரியாமல் டி‌வியில் குத்து பாடலை போட்டு நடு வீட்டில் துப்பட்டாவை கையில் சுற்றிய படி அதகளப் படுத்திக் கொண்டிருந்தாள்.
சிறு வயதில் இருந்து தேனுவுடன் சேர்ந்து இப்படியே தான் ஆட்டம் போடுவாள். என்ன கொஞ்சம் வளர்ந்து பிறகு தேனு வெட்கம் வந்து நகர்ந்து கொள்ள, ஸ்ரீயெல்லாம் ரவுண்ட் கட்டி ஆடிவிடுவாள்.
“ அடியே என் வீட்ட இடுச்சிடாத புள்ள. “ என டிவின் டெசிபலுக்கு மேலே ஆச்சி டெசிபல் விட, அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. சரக்கு போட்ட ரௌடியாக இவள் ஆட்டம் போட, சரியாக வாசுவும் சீதாவும் பின்கட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
டி‌வி இவ்வளவு சத்தமாக வைக்க, அவள் அதெயெல்லாம் கவனிக்கவே இல்லை. ஆனால் சுந்தரி ஆச்சி பின்கட்டு தெரியும் படி அமர்த்து இருந்தார், அவர்கள் வந்துவிட்டதை பார்த்தும் எழுந்து டி‌வியின் சத்ததை குறைக்க, ஸ்ரீ அவரை முறைக்க, ஆச்சி இவள் தலையில் கொட்டி துண்டை அவள் கையில் கொடுத்து சீதாவிடம் கொடுக்க சொல்லி பின்கட்டிற்கு அனுப்பினார்.
ஸ்ரீக்கு இவர்கள் யார் யார் சென்றார்கள் என தெரியாமல், ஆச்சி துண்டை கொடுத்ததும் எங்கே சென்றிருபார்கள் என்பதை மட்டும் புரிந்து கொண்டு பின்கட்டிற்கு ஓடினாள். 
சீதா வெளியே நிற்க அதற்குள் காத்திருக்க முடியாமல் சுடுதண்ணியை எடுத்து கொண்டு குளியல் அறைக்குள் சென்றிருந்தான் வாசு. அவனுக்கு ஸ்ரீ வந்தது தெரியவில்லை. இரங்கல் வீடு என்பதால் ஃபோனை சைலன்ட் மோட்டில் போட்டு வைத்திருந்ததால் கிருபா அழைத்தது தெரியவில்லை.
அதனால் வெளியே வாட்ச், மொபைல் இரண்டையும் வைத்து விட்டு குளிக்க சென்றிருந்தான். மஞ்சள் கலந்த தண்ணி அருகே இருக்க, அதை இரண்டின் மேலும் தெளித்து வைத்திருந்தான்.
சீதாவை பார்த்ததும் துண்டை கொடுத்தவள், அவர் சுட்டி காட்டியே வாட்ச், மொபைல் இரண்டையும் எடுத்து உள்ளே வந்து வைத்தாள், அது வாசுவினது என்பது கூட அவளுக்கு தெரியவில்லை, பெரிய மாமாவினதாய் இருக்கும் என நினைத்து கொண்டாள் .
இதற்குள் திருட்டு பூனையாக , சுந்தரி அச்சியின் கருவாட்டு குழம்பை ருசி பார்த்து அச்சியிடம் மாட்டிக்கொண்டார் சிவசு தாத்தா, இருந்தாலும் கெத்து குறையாமல் சமையல் அறையில் இருந்து வெளிய வந்தவரை பார்த்து,
“ வெளியில சொன்னாராம் விரதமுன்னு 
கையில மணந்துச்சாம் கருவாடு “
என தாத்தாவின் குட்டை இழுத்து அவரை பங்கமாக கலாய்த்து கொண்டிருந்தார் சுந்தரி ஆச்சி.
அதை பார்த்து கெக்க புக்கே என சிரித்துக்கொண்டிருந்த ஸ்ரீயைப் பார்த்து தானும் வாய் விட்டு சிரித்தார் சுந்தரி ஆச்சி. சிவசு தாத்தா தன் மீசையில் மண் ஒட்டவில்லை எனும் விதமாய் அவர் டிவியில் ஐக்கியமாகி விட்டார். 
அதற்குள் ஆச்சி துவையல் போட செல்ல, “ குட்டி இதுல யாராவது பேசுனாகனா. என்ன கூப்பிடு, இல்லைனா ராசா என்ன கோவிசிக்கும் “ என வாசுவின் மொபிலை சுட்டி காட்டி ஆடுபடிக்குள் நுழைந்துவிட்டார். 
சமையல் அறையில் வேலையாய் இருக்கும் போது அங்கே மொபைலை ஆச்சி எடுத்து செல்ல கூடாது என வாசுவின் கட்டளை.
எப்போதும் வாசு மொபைலுக்கு ஸ்கிரீன் லாக் எதுவும் வைத்துக்கொள்ளமாட்டான் . வீட்டில் இவன் குளித்து கொண்டு இருந்தால், சுந்தரி ஆச்சி தான் இவனுக்கு வரும் மொபைல் அழைப்பை ஏற்பார். அதனால் அவர் வசதி கருதி, பெரிதாக செக்யூரிட்டி லாக் எல்லாம் வைத்து கொள்வதில்லை. வீட்டில் மட்டுமே அப்படி இருப்பான்.
இப்போது தான் ஸ்ரீயின் தலையில் பாராசூட் பறந்தது. இது அவனது மொபைலா என அதை தொடாமல் பார்த்து கொண்டிருக்க, 
‘ நம்ப நம்பரே எப்டி சேவ் பண்ணிருபான்’ என எண்ணம் வர, உடனே குடு குடு வென இவள் மொபிலை தேடினாள். அது கிடைப்பேனா என ஆட்டம் காட்ட, எப்படியோ கீழே மேல என உருண்டு கண்டுபிடித்து விட்டாள்.
பட படக்கும் மனதுடன் அவன் எண்ணிற்கு அழுத்த,  1…2…3…4…5…என நொடிகள் கடக்க…
  
 
      
  
        
            
     
  
    

Advertisement