“அப்புறம் எதுக்கு உன்னை அவனுக்கு கட்டி வச்சிருக்கேன், ஒழுங்கா இதை அவனை சாப்பிட வைக்கிற, இல்லைனா உனக்கு நாலு அடி”
“அடிக்கிற பழக்கம்லாம் உங்கள்ட்டருந்துதான் மாமாக்கு வந்திருக்கணும். அன்னிக்கு என்னா அடி வச்சீங்க?” எனக் கேட்டவளை முறைத்தவர் பன்னீரை வறுதெடுத்து வைத்தார்.
“இனிமே அப்படிலாம் அடி வைக்காதீங்க அத்தை, எனக்கு பார்க்க கஷ்டமா இருக்கு” என தயங்கிக் கொண்டே சொன்னாள்.
“அப்ப கண்ணை மூடிக்க” என அலட்சியமாக அவர் சொல்ல, முகத்தை உர் என வைத்துக்கொண்டாள்.
பாட்டியிடம் பேசி முடித்த தர்மா, தங்கையிடமும் பேசினான். அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி படுத்திக் கொண்ட தர்மா, “கனியை பாரேன் நீ ஏதோ சொல்லணும்னு பொய் சொல்லி உள்ள அழைச்சிட்டு வந்திட்டா” எனறான்.
உன்னை உள்ளே வரவழைக்கவென அப்படி சொல்லியிருப்பாள் என்ற நிதிலா, அப்படியே அஜய் பற்றியும் சொல்லிக் கொடுத்து விட்டாள்.
“டாக்டருக்கு படிக்கிறவனுக்கு கொஞ்சமும் மரியாதை தெரியலை” என பாட்டி அங்கலாய்க்க, கோவமாக உள்ளே சென்றான் தர்மா.
தம்பியை ஹாலுக்கு இழுத்து வந்த தர்மா, கனியிடம் எப்படி அப்படி பேசினாய் என சத்தம் போட்டான்.
அனைவரும் வந்து விட்டனர். தான் ஏற்கனவே கண்டித்து விட்டேன் என்றார் தாமரை.
“அதுக்கப்புறமும் முறைச்சிட்டே போயிருக்கான். அண்ணன் வைஃப்னு கூடவா மரியாதை இல்லை இவனுக்கு?” என்றான் தர்மா.
“எங்கப்பா இறக்க காரணமா இருந்த அந்தாளு எனக்கு மாமாவே இல்லை, அப்புறம் நீ என்ன எனக்கு மாமா பொண்ணு?” எனக் கேட்டான் அஜய்.
தம்பியின் தோளில் வலிக்க ஒரு அடி வைத்த தர்மா, “யாரு உங்கம்மா போதனையா? மாமா பத்தி ஏதாவது பேசின பல்ல தட்டி கைல கொடுத்திடுவேன் பார்த்துக்க” என கோவப் பட்டான்.
“அடிக்கிறது தவிர உனக்கு வேறென்ன தெரியும்?” என அஜய் கோவமாக கேட்க, அடிக்க கை ஓங்கிய தர்மா அடித்து விடாமல் கோவமாக பார்த்தான்.
கணவனின் ஓங்கியிருந்த கையை பிடித்து இறக்கி விட்டாள் கனி.
“எப்போலேருந்து அஜய் உனக்கு இவ்ளோ வாய் ஆச்சு?” என சின்ன மகனை கடிந்தார் தாமரை.
“ம்ம்… ரௌடியோட தம்பீல்ல? கை பேசாட்டியும் வாயாவது பேசலாமேன்னு” என்றான் அஜய்.
“உள்ள போடா முதல்ல” என அதட்டினார் தாமரை.
“ஏம்மா அவனை போக சொல்ற, நீ பேசாததையா அவன் பேசுறான்? என்ன ரௌடித்தனம் பண்ணினேன் நான்? அப்பா என்ன பச்ச குழந்தையா… மாமா சொன்ன படி கேட்டு நடந்துதான் அவர் இல்லையா இப்போ? எல்லாத்துக்குமே மாமாதான் காரணமா? கேஸ் போட்டியாமே ம்மா? யாருக்காவது தண்டனை வாங்கி தர முடிஞ்சுதா உன்னால. எதையும் புரிஞ்சுக்காம நீ பேசி பேசிதான் இவன் இப்படி என்கிட்ட முறைச்சுகிட்டு நிக்கிறான்” என அம்மாவிடம் கோவமாக பேசினான் தர்மா.
தாமரையால் பதிலுக்கு பதில் வாதாட முடியாமல் இல்லை. நான்கு நாட்கள் முன்புதான் அவனுடன் சண்டையாகியிருக்க, இன்று வீடு தேடி வந்திருப்பவனை மனம் நோக செய்ய வேண்டாமே என இந்த பேச்சை வளர்க்காமல் முடிக்க நினைத்து, சின்ன மகனை அப்புற படுத்த பார்த்தார்.
அம்மாவின் கையை உதறி விட்ட அஜய், “இவர் ரௌடி இல்லாம வேற என்னவாம்மா? எனக்கு காலேஜ்ல ஒரு பிராப்லம், நானே சால்வ் பண்ணியிருபேன், தேவையில்லாம இவர் இடைல வந்திட்டார், ஒரு பையன் வீட்டுக்கு போய் அவன் பேரெண்ட்ஸை மிரட்டியிருக்கார். ரௌடியோட தம்பின்னு என் பின்னால பேசுறாங்க. இவரை நினைச்சு எவ்ளோ அழற நீ? உன்னை நினைச்சிருந்தா எல்லாத்தையும் விட்டுட்டு வந்திருப்பார்தானே?” என பொரிந்து தள்ளினான்.
கல்லூரியில் உனக்கென்ன பிரச்சனை என கேள்வி கேட்டார் தாமரை. அம்மாவிடம் என்ன சொல்வதென அஜய் விழிக்க, கைகளை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தான் தர்மா.
“அம்மா அது வந்து…” என்ற அஜய்யின் பார்வை தர்மாவிடத்தில் நிலை பெற்றது.
“அவனை போக சொல்லு கனி, படிக்க நிறைய இருக்கும்” என தர்மா சொல்ல, விட்டால் போதும் என அறைக்கு சென்று விட்டான் அஜய்.
“என்னவாம்டி அஜய்க்கு பிரச்சனை?” என கனியிடம் கேட்டார் தாமரை.
“என்னை கேட்டா எனக்கென்ன தெரியும் அத்தை? இந்த வீட்டுக்கு வாக்கப் பட்டு எனக்கு நல்லா மண்டை காயுது” என்றாள் கனி.
யாரும் பயப்படாத படி மேலோட்டமாக விஷயத்தை சொன்ன தர்மா, “அந்த பையனோட அப்பாம்மாகிட்ட நார்மலா பேசி கண்டிச்சு வைக்கத்தான் சொன்னேன். இவன் அடிச்சி விடுறான்” என்றான்.
“அஜய் பைக்லேருந்து ஸ்கிட் ஆகலையா, அடிதடியா அண்ணா?” என சரியாக கணித்து கேட்டாள் நிதிலா.
“அதெல்லாம் இல்லை, விழுந்திட்டான்தான்” என சமாளித்த தர்மா, கனியை கிளம்ப சொன்னான்.
சமையல் முடிந்து விடும் சாப்பிட்டு செல்லுங்கள் என மருமகளிடம் சொல்லி விட்டு சமையலறை விரைந்தார் தாமரை.
கனியை மட்டும் சாப்பிட்டு வர சொன்ன தர்மா, பாட்டியிடமும் தங்கையிடமும் சொல்லிக் கொண்டு வெளியே சென்று விட்டான்.
தாமரை வருத்தப்பட, அவர் செய்த உணவை பேக் செய்து எடுத்துக் கொண்ட கனி, “இன்னிக்கு நைட் உங்க மகனுக்கு இதான் சாப்பாடு, ஓகேவா?” என்றாள்.
“நீயாவது இங்கே சாப்பிட்டு போயேன் டி” என்றார் தாமரை.
“பசியில்ல த்தை, எனக்கென்ன எப்ப வேணா இங்க வந்து சாப்பிட்டுக்குவேன். அடுத்த வீக் எண்ட்ல உங்க கையாலதான் எனக்கு விருந்து. நிதிக்கும் எக்ஸாம்ஸ் முடிஞ்சிடும், நாம பார்ட்டி பண்ணலாம்” என்றாள் கனி.
மருமகளின் கன்னத்தை வாஞ்சையாக பிடித்துக் கொண்ட தாமரை, “அவனை மாத்தி வைடி கனி” என்றார்.
அடிக்கடி அத்தை இதையே சொல்வதில் கனிக்கு சலிப்பாக இருந்தது. எப்படி மாற்றுவது அவனை? வாயால் சொன்னால் கேட்டு விடுவானா? வீடு, தொழில் எல்லாமே இங்கேயே சுற்றி இருக்க, அவன் ஒதுங்கினாலும் எதிரிகள் சும்மா இருப்பார்களா? தர்மாவுடன் அமைதியான வாழ்க்கை ஒன்றைத்தான் விரும்புகிறாள் கனி, ஆனால் அதை எப்படி செயல்படுத்துவது என சத்தியமாக அவளுக்கு தெரியவில்லை.
அத்தையிடம் சரியென சொல்லி விடை பெற்றுக் கொண்டு கிளம்பினாள் கனி.
வீடு வந்த பிறகு தாமரை செய்த உணவை அவள் தர்மாவுக்கு பரிமாற, அவனோ முறைத்தான்.
நம்பியும் பாட்டியும் முன்னரே சாப்பிட்டிருந்தனர்.
“கோவமா சொல்ற வார்த்தையை போய் பெருசு பண்ணுவியா மாமா?” எனக் கேட்டாள்.
“என்ன வேணா சொல்லலாமா? தின்னு கொழுத்து போயிருக்கேன்னு சொன்னவங்க சாப்பாடு எனக்கு வேணாம். அதை நீயே சாப்பிடு, மல்லுக்கட்டினா எந்திரிச்சு போயிடுவேன்” என்றான்.
“அப்படிலாம் அத்தை சொல்லலை”
“அன்னிக்கு அம்மா பேசினதுக்கு வேற என்ன அர்த்தம்?”
“ப்ச்… எனக்கென்ன நீ சாப்பிட்டேன்னு சொன்னாதான் அங்க அத்தை சாப்பிடுவாங்க”
“கதை வுடாத, எங்கம்மா பத்தி எனக்கு தெரியும், யாருக்காகவும் பட்டினி கிடக்காது அம்மா”
“எல்லாரும் சேர்ந்துகிட்டு என் உயிரை வாங்காதீங்க. எவ்ளோ சொல்றேன் ரொம்ப முறுக்குற?” என கோவப் பட்டவள் கட்டாயப் படுத்தி அவனுக்கு ஊட்டி விட்டாள்.
வாயில் உணவு இருக்க அவளை கோவமாக பார்த்தான். அவள் கெஞ்சலாக பார்க்க, உணவை விழுங்கினான்.