“என் சொல் பேச்சு கேட்காம கட்டிக்கிட்டீல்லடி இவனை? ஆள் கடத்தல் செய்றான் உன் புருஷன். அந்த பையனோட பெத்தவங்க எனக்கு கால் பண்ணி கதறி அழுவுறாங்க” என்ற தாமரை உணர்ச்சிப் பெருக்கில் நிற்க முடியாமல் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து தலையை பிடித்துக்கொண்டார்.
“என்னடா ஆச்சு?” என பாட்டி கேட்க, கனியும் “என்ன மாமா, அந்த பையனை நீயா பிடிச்சு வச்சிருக்க?” என்றாள்.
“நீங்க ரெண்டு பேரும் உள்ள போங்க” என அதட்டினார் நம்பி.
“அவளை எதுக்கு போக சொல்ற? உன் ஃப்ரெண்ட் உன்னாலதான் இல்லாம போனார். மூனு புள்ளைங்களோட கஷ்ட பட்டது நான்தான். நாளைக்கு உன் பொண்ணையும் கஷ்ட படுத்தலாம்னு திட்டம் போடுறியா நீ?” என அண்ணனிடம் சீறினார் தாமரை.
அத்தை சொல்ல வரும் விஷயம் கனிக்கு உவப்பாக இல்லை. ஆகவே, “இப்படிலாம் பேசாதீங்க அத்தை” என்றாள்.
“உனக்காகத்தான் பேசுறேன்டி” என அவளிடமும் கோவப்பட்டார் தாமரை.
முதல் நாளிரவு காதலனுடன் சென்று விட்ட பெண்ணை மீட்டு அழைத்து வந்திருந்தானில்லையா தர்மா. அந்த பையனின் உண்மையான நடத்தை தெரிந்த பிறகு பெற்றோருடன் வர ஒத்துக் கொண்டாள் அந்த பெண்.
கோவம் கொண்ட அந்தப் பையன் காதலிக்கும் போது சேர்ந்து எடுத்துக் கொண்ட நெருக்கமான புகைப்படங்களை பற்றி சொல்லி, அனைத்தையும் ஊரறிய செய்து விடுவேன் என அனைவரின் முன்பும் மிரட்டியிருக்கிறான்.
‘அப்படி ஏதும் ஆகாது, பயப்படாமல் செல்’ என தைரியம் சொல்லித்தான் அந்தப் பெண்ணை அவளின் பெற்றோரிடம் ஒப்படைத்தான் தர்மா.
அதன் பின் அந்தப் பையனிடமிருந்த புகைப்படங்களையும் அழித்தாகி விட்டது. பின்னரும் அவனை வெளியில் விடாமல் தன் பிடியில் வைத்திருக்கிறான் தர்மா. பழகிய பெண்ணுக்கு கெடுதல் செய்ய நினைத்தவனை எளிதில் விடக்கூடாதாம், ஆகாரம் இல்லாமல் அடைத்து வைத்திருக்கிறான்.
அந்தப் பையனின் பெற்றோர் போலீசை நாடி சென்றும் பிரயோஜனம் இல்லை. தர்மாதான் அவனை அடைத்து வைத்திருக்கிறான் என்பதற்கான ஆதாரமே இல்லையே. அதையும் விட நம்பியின் மருமகனை அந்தப் பகுதி போலீசாலும் ஏதும் செய்ய முடியாது.
அந்தப் பையனின் சகோதரன் தாமரை பணி புரியும் கல்லூரியில் படிக்கும் மாணவன். அவன் சொல்லித்தான் அவனது பெற்றோர் தாமரைக்கு அழைத்து பேசியிருந்தனர்.
அனைத்தையும் கோவமாக சொன்னார் தாமரை.
“ஏன் மாமா இப்படி, அவன் பண்ணினதை போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணலாம். அவனை விட்ரு மாமா” என்றாள் கனி.
“அவன் எப்படி எப்படி ஃபோட்டோஸ் வச்சிருந்தான்னு தெரியுமா உனக்கு? விஷயம் வெளில தெரிஞ்சா அந்த பொண்ணோட குடும்பம் எப்படி நிம்மதியா வாழும்? உன் அத்தை சொல்றாங்கன்னு இன்னிக்கு அவனை வெளில விட்டா அவனுக்கு பயம் விட்டு போயிடும். என்ன செய்யன்னு எனக்கு தெரியும்” என கோவமாக சொன்ன தர்மா வீட்டை விட்டு வெளியேறப் போனான்.
கணவனின் பின்னால் ஓடிச் சென்று அவனது கையை பிடித்துக்கொண்ட கனி, “வெறும் வயிரோட இருக்க மாமா, முதல்ல சாப்பிடு” என கெஞ்சினாள்.
“அங்க ஒருத்தனுக்கு பச்சை தண்ணி கூட கொடுக்காம அடைச்சு வச்சிருக்கான் உன் புருஷன், இவனுக்கு மட்டும் தட்டு நிறைய சோத்த போடு, நல்லா கொட்டிகிட்டு காளை மாடு கணக்கா உடம்ப வளர்த்து வச்சாதான் அடுத்தவனை அடிச்சு அராஜகம் பண்ண முடியும்” இரைந்தார் தாமரை.
அம்மாவின் சுடு சொற்களில் தாடை இறுகிப் போக, மனமும் கனத்துப் போக, கனியின் கையை விலக்கி விட்ட தர்மா யாரையும் திரும்பி பாராமல் வெளியேறி விட்டான்.
கல்யாணம் முடிந்திருக்கும் நேரத்தில் நீ ஏன் இவ்விஷயத்தில் நேரடியாக தலையிட்டுக் கொள்கிறாய் எனதான் நம்பியும் அவனை கண்டித்திருந்தார். ஆனால் தங்கையின் முன் அவனை விட்டுத் தராமல், “அவன் எது செஞ்சாலும் சரியா இருக்கும், நீ போ” என்றார்.
அவனுக்கு நல்லது செய்வதாக நினைத்து உன்னிடம் அனுப்பி வைத்தேன், என் மகனை எனக்கில்லாமல் செய்தாய், அது கூட பரவாயில்லை, கனிக்கும் அவனை இல்லாமல் செய்து விடாதே என கடுமையாக பேசிய தாமரையும் அப்போதே தன் வீடு செல்ல தயாரானார்.
“எவங்கிட்டேயிருந்தோ எவ வாழ்க்கையையோ காப்பாத்தி கொடுத்திட்டதா பெருமையா நினைச்சிட்டிருக்கான் தர்மா. அவன்கிட்டருந்து உன்னை காப்பாத்த தவறிட்டேன் நான். அவன் பண்ற அநியாயத்துக்கு வட்டியும் முதலுமா திரும்ப கிடைக்கும், அவனோட சேர்ந்து நீயும் கண்ணீர் விடணும், அவனுக்குத்தான் புரியலை, உனக்குமா கனி?”
“நான் என்ன அத்தை செய்ய முடியும்?”
“அவன் இப்படியே இருந்தா கூட வாழ மாட்டேன்னு பொட்டிய கட்டு, நீ வேணும்னு நினைச்சா தானா திருந்துவான். இல்லைனாலும் அவன் நிழல் படாம நிம்மதியா வாழ்ந்திட்டு போ. அடுத்தவங்க கண்ணீர் காலை சுத்தின பாம்பு மாதிரி கனி, அவனையும் அவனை சுத்தி உள்ளவங்களையும் நிம்மதியா வாழ விடாது கனி” என தன் அண்ணன் காதிலும் விழும் படி சத்தமாக சொல்லி சென்று விட்டார் தாமரை.
தர்மாவின் கைப்பேசிக்கு இரண்டு முறை அழைத்துப் பார்த்த கனி, அவன் ஏற்காமல் போகவும் வருத்தத்தோடு அறைக்கு சென்று விட்டாள்.
அந்தப் பையனை எங்கு வைத்திருப்பான் தர்மா என நம்பிக்கு தெரியும். அங்கே சென்று விட்டார் அவர். அடிகள் விழுந்த அடையாளங்களோடும் அழுக்காகி கிழிந்து போன ஆடையுமாக பார்க்க அலங்கோலமாக இருந்தான் அவன்.
நம்பிக்கு அவன் மீது சிறிதும் பரிதாபம் இல்லை, ஒரு பெண்ணை பெற்றவருக்கு இன்னும் நான்கு வைக்கலாமா எனதான் ஆத்திரம் மிகுந்தது. நடைமுறையை சிந்தித்து தன்னை கட்டுப் படுத்திக் கொண்டார். இனி அந்தப் பெண்ணுக்கு எவ்வித தொல்லையும் கொடுக்க கூடாது என கண்டித்து விட்டு அவனை வெளியே அனுப்பி விட்டார்.
விஷயம் தெரிந்து அங்கு வந்த தர்மா மாமனிடம் கோவப்பட்டான்.
“புரியாம நடக்காத தர்மா. எப்ப எதுல சிக்க வைக்கலாம்னு அவனவன் தவிச்சுக்கிட்டு கிடக்கான். அவன் வீடு போய் சேருற வரைக்கும் பின்னால போயிருக்கானுங்க நம்ம பசங்க, வேற எவனாலேயும் கூட அவனுக்கு ஏதும்னாலும் நீதான் காரணம்னு சொல்வாங்க. உனக்கெதுக்கு இந்த வம்பு? அந்த பொண்ணை கொண்டு வந்தாச்சு, போட்டோவையும் அழிச்சாச்சு, அத்தோடு விட்ருக்கணும் நீ” என்றார் நம்பி.
“இதே மாதிரி வேறொரு பொண்ணுகிட்ட நடப்பான் மாமா அவன்”
“அதுக்கு நம்ம என்னடா பண்ண முடியும்? அப்படி நடக்கும் போது பார்த்துக்கலாம். முன்னாடி மாதிரி இல்லை நீ, கனியை கட்டியிருக்க, ஒழுங்கா அவ கூட குடும்பம் பண்ற வழியை பாரு. உன் அம்மாகிட்ட செருப்படி வாங்காதது ஒன்னுதான்டா குறை எனக்கு, அதையும் வாங்க வச்சிடாத” என கடுமையான தொனியில் கூறினார் நம்பி.
மற்ற ஆட்கள் முன்னிலையில் தன்னை மாமன் இப்படி பேசியதில் தர்மாவுக்கு ஆத்திரம். அவரை முறைத்தவன் எதுவும் சொல்லாமல் சென்று விட்டான்.
மாலையில் வீடு வந்த நம்பி, இன்னும் தர்மா வரவில்லை என்பதை அறிந்து அவனுக்கு அழைத்தார். அழைப்பு துண்டிக்க படவும் இன்னும் கோவமாக இருக்கிறான், வரட்டும் நேரில் பேசிக் கொள்ளலாம் என நினைத்து காத்திருந்தார்.
பாட்டி வற்புறுத்தியதால் மதிய உணவு கொஞ்சமாக சாப்பிட்டிருந்தாள் கனி. அவனது வரவுக்காக காத்திருந்து மனம் சோர்ந்து போனதுதான் மிச்சம். அப்பாவும் தனியாகவே வீடு திரும்பியதில் மிகுந்த ஏமாற்றம்.
மகளின் முகத்தை கவனித்த நம்பி, “நீ ஒரு முறை அவனுக்கு கூப்பிட்டு பாரு” என்றார். அவளும் அழைத்தாள்.