அதற்குள் வேறு சிலரும் வந்திருந்தனர். குழந்தையின் அழுகை நிற்கவும் நகர போன தர்மா, மஹாவின் கன்னத்தில் விரல் தடத்தை காணவும் திகைத்து நின்று விட்டான். அவனது பார்வை தன் முகத்தின் மீது படிவதை கவனித்த மஹாவும் வேகமாக வெளியேறி விட்டாள்.
சட்டென அவனது மனதை கனமான உணர்வுகள் அழுத்த ஆரம்பித்து விட்டன.
தர்மா விட்டுச் சென்ற இடத்திலேயே நின்றிருந்தாள் கனி. அவன் வரவும், “குழந்தையை சுத்தி எல்லாரும் கூட்டம் போட்டா அது ரொம்ப மிரண்டு போயிடும்ல மாமா, அதான் நான் வரலை, பெரிய அடி இல்லியே?” எனக் கேட்டாள்.
“பாப்பா சமாதானம் ஆகிடுச்சு…” என ஏதோ போல சொன்னவன், “நீ நட, நமக்கு லேட் ஆகுது” என்றான்.
“என்னாச்சு மாமா?” என அவள் கேட்கவும்தான் மஹாவின் கன்னத்தில் அடி விழுந்த தடயம் இருந்ததை சொன்னான்.
“ஒரு மாதிரி டிஸ்டர்ப் ஆகிடுச்சு கனி. அவ வீட்ல உள்ள ஆம்பள எவனுமே மனுஷ பிறவில சேர்த்தி கிடையாது போல” என வருத்தமாக சொன்னான்.
ஒரு பெண்ணை அது யாராக இருந்தாலும் அடிப்பதை கனியால் ஏற்றுக்கொள்ள முடியாதுதான். இருப்பினும் இப்போது என்ன சொல்லவென அவளுக்கு தெரியவில்லை. அந்தப் பேச்சை மாற்றினால் மாமா தவறாக எடுப்பானோ என்ற நினைப்பில் அமைதியாகவே வந்தாள்.
கனியின் முகம் கண்டே அவளின் மனவோட்டத்தை கிரகித்துக் கொண்டான். மஹாவின் பேச்சை எடுக்காமல், தன் எண்ணத்திலிருந்தும் கூட அவளை ஒதுக்கி வைத்த தர்மா, “அப்பத்தாக்கு இந்த கோயில்னா ஸ்பெஷல், எங்கப்பா இந்த சாமிக்கு வேண்டிதான் பொறந்தாராம்” என பேச்சை மாற்றினான்.
கனியும் பதிலுக்கு ஏதோ பேசிக் கொண்டே நடந்தாள். ஆயினும் அவளிடம் உற்சாகம் குறைந்து விட்டதை உணர்ந்தான்.
வழிபாடு முடித்து விட்டு, வீடு வந்த பிறகு என்னவானது என அவளிடம் விசாரித்தான். மழுப்பாமல் மஹா தனக்குள் உறுத்தலாக இருப்பதாக உண்மையையே சொன்னாள்.
தங்களின் திருமணம் உறுதியான பின்புதான் மஹா அவளது விவாகரத்து முடிவில் உறுதியாக இருப்பது தர்மாவுக்கு தெரியும். ஒரு வேளை அவளின் உறுதி முன்னரே தெரிந்திருந்தால் இந்த திருமணம் நடந்திருக்குமா என அவளுள் ஏற்பட்டிருந்த சந்தேகத்தை பட்டென கேட்டு விட்டாள்.
“கனி!” என அதிர்ந்து போனான் தர்மா.
“உண்மையை சொல்லு மாமா, எதுவா இருந்தாலும் சண்டை போட மாட்டேன், உன்னை பத்தி தெரிஞ்சு நான்தானே கல்யாணம் பண்ணிக்க கேட்டேன். இந்த விஷயத்துல உன் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்” என்றாள்.
“இப்படி நீ நினைப்பேன்னு கொஞ்சமும் நான் யோசிக்கல கனி. உன்னை வச்சு, உன் விருப்பத்தை வச்சுதான் இந்த கல்யாணம்ங்கிறதுல சந்தேகமே வேணாம். அதுக்காக கடமைக்கு உனக்கு தாலி கட்டல, என் மனம் ஒப்பி நடந்த மேரேஜ் இது. ஒரு வேளை உனக்கு இந்த ஆசை இல்லாம போயிருந்தா எனக்கு எப்பவுமே கல்யாணம் ஆகிருக்காது. புரிஞ்சுதா? கண்டதையும் யோசிக்காத” என்றான் தர்மா.
அவனது பதிலில் அவளுக்கு பெரிய நிம்மதி. தயக்கமாக நெருங்கியவள் லேசாக அவனை அணைத்துக் கொண்டாள்.
“இது போதும் மாமா” என்றாள்.
அவனும் மறுத்தலிப்பாக அவளை அணைத்து, தோளில் தட்டிக் கொடுத்து விலகினான். ஓய்வெடு என சொல்லி அறையை விட்டு சென்று விட்டான். அதன் பின் மதிய உணவின் போது கூட அவனை அவளால் பார்க்க முடியவில்லை. இவள் உறங்கிக் கொண்டிருந்த போது ஏதோ முக்கியான வேலை என சொல்லி கிளம்பிச் சென்று விட்டானாம்.
எந்த வேலையாக இருந்தாலும் இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்து, பின்னர் பார்க்க செல்லக்கூடாதா? என மற்றவர்கள் நினைத்தனர். தாமரை தன் அம்மாவிடம் இதை சொல்லி அண்ணன் மற்றும் தன் மகன் மீதான கோவத்தை வெளிப் படுத்தினார். வேலம்மாள் பாட்டி மகனிடம் முணு முணுப்பாக கேட்டே விட்டார்.
தர்மாவை எந்த வேலையாகவும் நம்பி வெளியில் அனுப்பியிருக்கவில்லை. அவனை யார் கட்டுபடுத்துவது? ஆனாலும் மருமகனை விட்டுக் கொடுக்காமல் முக்கியமான வேலையாக இருக்க போயிதான் சென்றிருக்கிறான், வந்து விடுவான் என மட்டும் சொன்னார்.
தாமரை நச்சரித்ததில் தர்மாவுக்கு அழைத்த பாட்டி, எங்கிருக்கிறாய் எப்போது வருவாய் எனக் கேட்டார். வருகிறேன் என மட்டும் சொன்னவன் இரவு ஒன்பது மணி போலதான் வந்து சேர்ந்தான்.
தர்மாவின் வரவுக்காக வீட்டின் வெளியிலேயே காத்திருந்த நம்பி, இன்று வெளியில் சென்றதற்காக அவனை கடிந்து கொண்டார். அவன் ஏதும் விளக்கம் சொல்லவெல்லாம் இல்லை, அவரும் வேறேதும் கேட்டுக் கொள்ளாமல் “உள்ளே போ” என கூறி உறங்க சென்று விட்டார்.
சாப்பிட அமர்ந்த தர்மா, கனி சாப்பிட்டாளா என விசாரித்தான். பாட்டி ஏதும் சொல்வதற்குள் தாமரை வந்தார்.
“உன் பேரனுக்கு இன்னிக்கு என்ன ஏதுன்னு தெரியாதா? அலங்காரம் பண்ணிக்கிட்டு போய் இவனோட ரூம்ல காத்திருக்கா அவ” என அம்மாவிடம் கோவமாக சொன்னார் தாமரை.
“நேரத்துக்கு வந்திட்டேன்ல அம்மாச்சி?” எனக் கேட்டான் தர்மா.
“சரி சரி, நீ சாப்பிடு” என பேரனிடம் சமாதானமாக சொன்ன பாட்டி, தன் மகளை இழுத்துக் கொண்டு போய் உள் அறையில் விட்டார்.
“தம்பியை சமாதானம் பண்ணி மேல அனுப்பி வைங்க” என்றார் கனியின் பெரியம்மா.
“எல்லாரும் சமாதானம் பண்ண, போக மாட்டேன்னு சண்டை போட்டுக்கிட்டா இருக்கான் அண்ணி அவன்? எல்லாம் போவான்” என்ற தாமரை, தான் தங்கிக் கொண்டிருக்கும் அம்மாவின் அறைக்கு சென்று விட்டார்.
கனியின் பெரியம்மா மற்றும் மாமியையும் உறங்க போகுமாறு சொல்லி விட்டு பேரனிடம் சென்றார் பாட்டி.
சாப்பிட்டு முடித்திருந்த தர்மா, “உனக்கு தூங்க டைம் ஆகலையா அம்மாச்சி?” எனக் கேட்டுக் கொண்டே எழுந்தான்.
“நீ வெளில என்ன எப்படின்னு எனக்கு தேவையில்லை. கனி நான் தூக்கி வளர்த்த பொண்ணு, எத்தனை பேரன் பேத்தி இருந்தாலும் அவதான் எனக்கு உசுரு. அவளை நல்லா வச்சு வாழணும் சொல்லிட்டேன்” என்ற பாட்டிக்கு உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் பெருகியது.
“கனியை கொடுமை செய்ய கல்யாணம் பண்ணினதா எல்லாரும் நினைச்சிட்டு இருக்கீங்களா?” என முதலில் அதட்டினான். பின் சமாதானம் செய்து அவரை அனுப்பி விட்டு தனதறைக்கு சென்றான்.
மலர்களால் அலங்கரிக்கப் பட்ட அறையில் கைப்பேசி பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் கனி. அவன் உள்ளே நுழையவுமே இருவருக்கும் சற்றே சங்கடம். அவனை காண்பதை தவிர்க்க, மீண்டும் கைப்பேசி பார்க்க ஆரம்பித்தாள்.