“ஹ்ம்ம்… என்ன?” எனக் கேட்டுக் கொண்டே அவளின் பக்கம் திரும்பிப் படுத்தான்.

“இல்லை, மதியமே ஒரு மாதிரி ஆகிடுச்சு எனக்கு. நல்ல வேளை ரிசப்ப்ஷன்ல எப்படியோ நின்னுட்டேன். எதையும் என்ஜாய் பண்ணவே இல்லை நான், எப்படா வீட்டுக்கு போவோம்னு ஆகிடுச்சு” என்றாள்.

“ஒழுங்கா தூங்கலைனா இப்படித்தான், அப்படியென்ன நேத்து நைட் தூக்கம் வராம போச்சு உனக்கு? கல்யாணம் பண்ணியும் இதே வீட்லதான் இருக்க போற, தெரியாதவன் ஒன்னும் இல்லை நான், ஹ்ம்ம்… அப்புறம் என்ன?”

“நிஜமா தெரியலை மாமா” என்றவள் தொடர்ந்து, “தாடி ட்ரிம் பண்ணவும் ரொம்ப நல்லாருக்க மாமா நீ” என்றாள்.

லேசாக சிரித்தவன், “உன் மாமா உனக்குத்தான், பொறுமையா ரசிச்சு பார்க்கலாம். இப்ப நேரமாச்சு பாரு, தூங்குவியாம்” என்றான்.

“அசதியா இருக்கு மாமா, தூங்கினாதான் நல்லாருக்கும் மாமா, ஆனா தூக்கம் வர மாட்டேங்குதே”

“அதெப்படி வராம போகும்?” எனக் கேட்டவன் எழுந்து, படுக்கையின் தலைமாட்டில் சாய்ந்த வண்ணம் அமர்ந்து கொண்டான். அவளின் தலையை  தன் மடியில் வைத்துக் கொண்டான்.

விழிகளை விரித்துக் கொண்டு அவனை பார்த்தாள் கனி.

“இந்த இருட்டுல உன் கண்ணு ரெண்டும் தனியா ஜொலிக்குது, என்ன அதிசயத்தை கண்ட இப்போ?” எனக் கேட்டான்.

“நம்ம கல்யாணமே எனக்கு பெரிய அதிசயம்தான். ஆசைய மட்டும் வச்சுக்கிட்டு எப்படி நடக்குமோன்னு எவ்ளோ யோசிச்சிருப்பேன் தெரியுமா?” கழுத்தில் கிடந்த புது மஞ்சள் கயிறை தொட்டு தடவி பார்த்துக் கொண்டே சொன்னாள்.

அவனும் மஞ்சள் கயிறை ஒரு விரலால் சுற்றி, விடுவித்து என செய்ய ஆரம்பித்தான். அவனது கையில் அடி வைத்து, “விடு மாமா” என்றாள்.

“கட்டினவனே நான்தான், நானா இந்த கயிறா எது முக்கியம் உனக்கு?”

“இதை நீ கட்டினதாலதான் எனக்கு ஹஸ்பண்ட் ஆன மாமா, அப்ப இதான் முக்கியம்” என அவள் சொல்லவும் சின்னதாக சிரித்தான். விழிகளால் அவனை விழுங்கினாள்.

“அதான் உன் விருப்பப்படி கல்யாணம் நடந்திடுச்சே, தூங்கு கனி” என சொல்லிக் கொண்டே கொட்டாவி விட்டான்.

அவனது இடுப்பை சுற்றி வளைத்துக் கொண்டு கண்களை மூடினாள். சின்ன புன்னகையுடன் அவன் அவளது தோளை தட்டிக் கொடுக்க, விரைவில் உறங்கியும் விட்டாள். அவளின் தலையை தலையணைக்கு மாற்றி விட்டு அவனும் படுத்துக் கொண்டான்.

அவளின் பிடிவாதத்தால் நடந்த கல்யாணம் என்ற போதும் இந்த நிகழ்வு தர்மாவின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. தாய்மாமனுடன் தங்கியிருந்தாலும் சுதந்திரமாக திரிந்தவன், கனியுடன் ஏற்பட்டு விட்ட இந்த பந்தம் வாழ்க்கை மீதான பிடிப்பை வழங்கியிருந்தது.

சற்று முன்பு வரை கூட எதிர்கால வாழ்க்கை பற்றிய எந்த சிந்தனையும் அவனுள் இல்லை. இப்போது கனியின் பக்கத்தில் உரிமை கொண்டவனாக படுத்திருக்கும் போது குடும்ப வாழ்வு,  ஊடல், கூடல், குழந்தை என நிறைய தோன்றியது. தன்னை நினைத்து கிண்டலாக சிரித்துக்கொண்டான். ஆனால் அப்படி கற்பனை செய்வதை நிறுத்தாமல் தொடர்ந்தான். அவனுக்கு இனிமையான உணர்வுகளை அள்ளிக் கொடுத்தது அவனது கற்பனை.

முதல் முறையாக கனிஹாவை மாமன் மகள் எனும் உறவை தாண்டி தனக்கான பெண் என்னும் கண்ணோட்டத்தில் பார்த்தான். ஏசியின் குளிரில் குறுகிப் படுத்தவளுக்கு கம்பளி போர்த்தி விட்டவன், அவளின் முகத்தை பார்த்த படியே உறங்கி விட்டான்.

காலையில் இருவரும் சேர்ந்துதான் எழுந்தார்கள். குளித்து விட்டு வருகிறேன் என சொல்லி அவனது அறைக்கு சென்று விட்டான் தர்மா.

சுடிதார் அணிந்து தயாராகி வந்த கனியை புடவைக்கு மாறும் படி சொல்லிக் கொண்டிருந்தார் அவளது பெரியம்மா. தர்மாவும் தயாராகி வந்தவன், “இப்படியே இருக்கட்டும் விடுங்க அத்தை” என்றான்.

“அதில்லப்பா…” என அவர் ஏதோ சொல்ல வந்தார். தர்மா என்னவோ ‘என்ன சொல்ல போகிறார்’ என சாதாரணமாகத்தான் பார்த்தான்.

கனியின் பெரியம்மாவுக்கு அவன் கோவப்படுவது போல தெரியவும், “நீ சுடிதாரே போட்டுக்க கனி” என சொல்லி அங்கிருந்து நழுவிச் சென்று விட்டார்.

“பெரியம்மா பயந்திட்டாங்க மாமா” என்றாள் கனி.

“ஏன் நான் என்ன புலியா கரடியா?” எனக் கேட்டுக் கொண்டே சாப்பிட அமர்ந்தான்.

“அதுக்கெல்லாம் பெரியம்மா பயப்பட மாட்டாங்க மாமா, உனக்குதான் இவ்ளோ பயம். நீ முறைச்சுகிட்டே இருக்கியாம், உம்மேல எப்படி எனக்கு ஆசை வந்துச்சுன்னு அவங்ளுக்கு சந்தேகம் வேற” என சொல்லிக் கொண்டே அவனது பக்கத்தில் அமர்ந்தாள் கனி.

“ம்ம்… நீ என்ன சொன்ன?”

“எதுக்கு?”

“என்னை எப்படி பிடிச்சதுங்கிற அவங்க கேள்விக்கு?”

“சிரிச்சேன் மாமா, எதுவும் சொல்லலை”

“அப்படி சிரிச்சு மழுப்பாம அந்த பதிலை எனக்கு சொல்லு” என்றான்.

அவன் காதுக்கு பக்கமாக நெருங்கியவள், “என்னை பத்தி இன் அண்ட் அவுட் எல்லாம் உனக்கு தெரியும், எனக்கு அவ்ளோவா உன்னை தெரியாது. தெரிஞ்சுக்க ஆசை, அதான் கல்யாணமும் பண்ணிகிட்டேன்” என்றாள்.

ஏதோ சொல்ல வந்தவன் பரிமாற ஆட்கள் வரவும் அமைதியாகி விட்டான்.

காலை உணவுக்கு பின் பெரியவர்கள் சொன்ன படி புதுக்கோட்டையிலிருந்த கோயிலுக்கு புறப்பட்டனர். ஆசைத்தம்பிதான் காரோட்டினான்.

மஹா அடிக்கடி வரும் கோயில் அது, அன்றும் குழந்தையுடன் அவள் வந்திருந்தாள்.

திருமணத்துக்கு அவள் வந்திருக்கவில்லை. தர்மா எதிர்பார்த்ததுதான், அவளது வீட்டில் விட்டிருக்க மாட்டார்கள் என நினைத்திருந்தான். அவர்களை நேரில் கண்டும் பேச தயக்கம் கொண்டு, தவிர்த்து விட்டு விலகிச் சென்றாள் மஹா.

கனியுடன் சென்று அவளிடம் பேசி விடலாமா என யோசித்த தர்மா, அடுத்த நொடியே தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.

அது மஹாதானே என கணவனிடம் கேட்டாள் கனி. ஆமாம் என தலையசைத்தான்.

மஹா திருமணத்துக்கு வந்தது போலவே தெரியவில்லையே, ஏன் வரவில்லை,  இப்போதும் ஏன் தவிர்க்கிறாள் என்றெல்லாம் கனிக்கு யோசனை. ஆனால் தர்மாவிடம் இது குறித்து பேச பிடிக்கவில்லை. இப்படியே அவள் விலகி நின்றால் நல்லதுதானே? என இருந்து விட்டாள்.

அம்மாவின் கை பிடித்து நடந்து சென்ற ரியா கால் தடுக்கி விழுந்து விட்டாள். சத்தமாக அழவும் திரும்பிப் பார்த்தான் தர்மா. குழந்தை அழுவதை நிறுத்தாமல் போகவும், கனியிடம் சொல்லி விட்டு அங்கு சென்றான்.